4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

புதையலைத்தேடப்போய் பூதம் புறப்பட்டக் கதையாச்சே (நூல் விமர்சனம்) - மைத்திரி அன்பு

‘புதையலைத் தேடப்போய் பூதம் புறப்பட்டக் கதையாச்சே

சமகாலத் தமிழ்க்கவிதைகள் புதையலும் பூதமும்அன்பாதவன்

(உதயக்கண்ணன் வெளியீடு., டிசம்பர்.2012 – ரூ.70/-)

-            நூல் விமர்சனம்.

மைத்திரிஅன்பு,

தலைவர்தமிழ் மாடம் அறக்கட்டளை

செய்யாறு – 604 407

mythreanbu@gmail.com

கைபேசி : 90035 98016

  தமிழ்க் கவிதைக்கான வேர்கள் சங்ககாலத்திற்கும் முன்னமே தோன்றியவைகளாக இருக்கின்றன. கவிதை என்னும் ஒரு மரபின் வேறுசில வடிவங்களாகத்தான் நாம், இலக்கண-நூற்பாக்களையும், யாப்பியல் நூல்கள், நிகண்டுகள், பிரபந்தங்கள் ஆகியவற்றைப் பார்க்கிறோம். அதன்கீழ் இன்று வளர்ந்திருக்கும் புதுக்கவிதை மரபு என்பது, சமகாலத்தைப் பதிவு செய்யும் தன்மையில்தான் நிலைத்து நிற்கிறது.

         பொதுவாகவே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அம்சபிரியா குறிப்பிட்டிருப்பதைப் போல… “கவிதைத் தொகுப்புகளும் கவிதைகளும் இன்று முக்கிய கவனம் பெறுவதில்லை. அதற்குக் காரணம், அதிகமாகக் கவிதைத் தொகுப்புகள் வெளியாவதுதான்” 2004-இல் வெளிவந்த காலச்சுவடு இதழ், சுமார் ஒர் ஆண்டுக்கு எழுபதாயிரம் கவிதைத்தொகுப்புகள் வெளிவருவதாக ஒரு கணக்கெடுப்பைத் தருகிறது. இப்படி ஏராளமான கவிதைத்தொகுப்புகள் வெளிவருவதால் – அதன் மீதானப் பார்வை குறைந்துவிட்டது என்ற கருத்து ஒருவகையில் ஏற்றக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

         வெவ்வேறு காலச்சூழலில், வெவ்வேறு ஊர்களிலிருந்து பலப் புதிய படைப்பாளிகளும், பலப் புதிய கவிதை முறைமைகளும் உருவாக உருவாக அதன் மீதான ஆராய்ச்சி ஒருவகையில் பூரணத்துவம் எய்த முடியாத நிலையை அடைகிறது. அதன்கீழ், இங்கு நம் கையில் இருக்கும் அன்பாதவனின் சமகாலத் தமிழ்க்கவிதைகள் என்னும் நூல் குறிப்பிடத்தக்க ஒன்று.   இந்நூல் தற்காலத்தில் இயங்கி வரும் புதுக்கவிதைகளை மட்டும் குறிப்பிட்டுக் காட்டாமல் - அதன் மீதான ஒரு அறிமுகத்தையும், விமர்சனத்தையும் முன்வைக்கும் நூலாக இருப்பது பாராட்டுக்குரியது.

இருந்தும் ஒரு கேள்வி?

         கவிதைகள் மீது, தீராத ஆர்வமும், எதிர்ப்பார்ப்பும் கொண்ட அன்பாதவன் மட்டுமே இன்றளவில் சமகாலக் கவிதைகள் குறித்த ஒரு பார்வையை - நூலாகப் படைத்துவிட முடியுமா…?

முடியாதுதான்.

         அதன்கீழ் இப்புத்தகம் ஒரு சிறுமுயற்சியாக சமகாலத் தமிழ்க் கவிதைகள் பற்றிப்பேசுகிறது. இன்று தமிழ் இலக்கியங்களில் மற்ற புனைவிலக்கியங்களுக்கு மத்தியில் கவிதை நூலுக்கு வாசகர்கள் கொடுக்கும் மதிப்பு என்பது மிகமிக குறைவு. அதிலும் இன்று பலர் எழுதும் கவிதைகள் பல வாசகர்களை வெறுப்படையச் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக என் நண்பர் ஒருவர் அடிக்கடிச் சொல்லுவார்… எனக்கு ஒரு  பக்கத்தில் ஒரு கவிஞனையும், மற்றொருப் பக்கத்தில் ஒரு வெறிநாயையும் நிறுத்திவிட்டு என்னை எந்தப் பக்கமாக ஓடுவீர்கள் என்று கேட்டால்… நான் வெறிநாய் இருக்கின்ற பக்கமாகவே ஓடுவேன். ஏனெனில் அவன் கடித்தால் கூட மருந்திருக்கிறது. இவன் கவிதை என்ற பெயரில் கடிக்கும் கடிக்கு மருந்தே கிடையாது என்பார்.

அந்த அளவிற்கு இன்று கவிதை என்ற பெயரில் சிலர் எதையெதையோ எழுதி புத்தகமாக வெளியிடும் ஒரு சூழலும் இருந்துவருகிறது.     இதன்னைக்கும் இடையில்தான் இன்று நாம் அன்பாதவனின் “சமகாலத் தமிழ்க்கவிதைகள்” நூல் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

இந்தப் புத்தகத்திலேயே கூட ஒரு இடத்தில்….

கொட்டாவி விட்டதெல்லாம்

கூறுத்தமிழ் பாட்டாச்சே

முட்டாளே இன்னுமாப் பாட்டு

என்று புதுமைப்பித்தனின் வரிகள் எடுத்துக்காட்டப்பட்டு இருப்பதை நினைவுக்கூற விரும்புகிறேன்.

         இப்புத்தத்தில் நிறைய பேச ஒன்னுமில்லை. ஆறு தலைப்பு. அவற்றிப் பற்றி கொஞ்சம் பேச விரும்புகிறேன்.

முதலில் - சமகாலக் கவிதைகள் அகம் – புறம்

         அகம் சார்ந்தக்கவிதைகள் தற்காலத்தில் எப்படி வெளிவந்திருக்கின என்பதைப் பற்றி நிறைய உதாரணங்களுடன் அன்பாதன் பேசியிருக்கிறார். அதை அதிகமாப் பேசத்தேவையில்லை. அடுத்து புறம்.

          புதுக்கவிதைகளில் புறம் என்பது எதிர்ப்பிலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது மட்டுமின்றி, சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்திய புறஇலக்கியங்களில் கூட – அன்றைய காலத்தில் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த மன்னர்களை அன்றைக்கு இருந்த புலவர்கள் எதிர்த்த செய்திகளை பார்க்க முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் - பத்திற்றுப்பத்துக்கு 2010-இல் மறைந்த  கே.ஏ.குணசேகரன் அவர்கள் ஒரு உரைஎழுதி – உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாரால் அப்புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் மொத்தமாவே பதிற்றுப்பத்து என்ற நூலில் வரும் பாடல்கள் அத்தனைக்கும், புலவர்களுடைய கருத்துக்களுக்கு அன்றைய காலத்தில் வாழ்ந்த பாணர்கள், விறலியர்கள் என்று சொல்லக்கூடிய கலைஞர்களை முதன்மைப்படுத்தி எழுதியிருந்தார். அதை வாசித்தப் பொழுது - உண்மையிலேயே நம் சங்க இலக்கியத்தில் கூட அகம் - சார்ந்தப் பாடல்களைத் தவிர - மற்ற பாடல்கள் ஒரு வகையான எதிர்ப்புப் பாடல்களாக அன்றைக்கு இருந்திருக்கின்றன என்பதை அதன்வழி நான் உணர்ந்துகொண்டேன். இதில் என்ன ஒரு கவலை என்றால், இவருக்கு முன்பாக உரை எழுதிய பலரின் உரைப்பொருளில் இவ்வுண்மை இடம்பெறவில்லை என்பதுதான்.

சரி அதைவிடுத்து, அன்பாதவனின் புத்தகத்திற்கு வருகிறேன். இப்புத்தகத்தில் இருக்கும் புறம் சார்ந்த கவிதைகளைப் பற்றி பேசும்பொழுது, கவிஞர்களுக்கு,“ மனதிடம் வேண்டும், தைரியம் வேண்டும், துணிவு வேண்டும், எல்லாவற்றிர்க்கும் மேலாக சமூக சங்கதிகள் குறித்த கவனம் வேண்டும், சமூக மாற்றம் குறித்த அக்கறை வேண்டும்” என்றெல்லாம் அன்பாதவன் குறிப்பிடுவது மிகவும் சரியானதாகிறது.

இரண்டாவது தலைப்பு - பெண் படைப்புலகம்

         இப்பகுதியில் குறிப்பாக குடும்பம் சார்ந்த – கணவன் மனைவி உறவுக்குறித்தப் பதிவுகளை மட்டும் இவர் பேசியிருக்கிறார். அதில் பெண்களுகான சுதந்திரம் ஆண்களிடம் இருப்பதையும், அதை அவர்கள் குடும்பம் என்ற அமைப்புக்குள் மிகச்சரியாகப் பாதுக்காத்துக் கொண்டு இருப்பதையும் விளக்கும் வகையில் பல கவிஞர்களுடைய கவிதைகளை எடுத்துக்காட்டியுள்ளார். அதில் முக்கியமானவை…சில

“எனக்கான கேள்வி  உன்னிடத்திலும்

உனக்கான பதில் என்னிடத்திலும்

யாரிடமும் எதுவும் இல்லையென

பாவித்துக் கொண்டிருக்கிறோம்”                          (கவிஞர் : சுகிர்தராணி)

என்று தொடங்கிய கணவன் மனைவி உறவு குறித்த ஒரு கவிதை.

“உன் பசிக்கான உணவாய்

பலமுறை குழைந்திருக்கிறேன்

உன் செய்நேர்த்திக் கெல்லாம்

செயலூக்கியாய் இருந்திருக்கிறேன்

நான் இடறி விழும்போதெல்லாம்

எள்ளி நகைக்கும் நீ

எழுந்திருக்கையில் ஒரே ஒருமுறை

கடைக்கண்கலாலேனும்

கௌரவித்திருக்கிறாயா என்னை…?”                            (கவிஞர் : தமிழச்சி)

என்ற மனைவியின் கேள்வியாக மாறி…. ய ஒரு கவிதை. இறுதியாக….

“கோர்ட்டுக்கு காசியாத்திரைப் போனது

வாழ்க்கைக் கணக்கு

அசுபவேலையில் பிரிவு மந்திரம் ஓதினார்

கறுப்புச் சட்டைக்கணவன்

எதிரித் துருவப் பயணம் இவர்களுக்குச் சரி,

அம்மா அப்பாவுக்கென இதயத்தை எப்படி

பாகம் பிரிப்பார்கள் குழந்தைகள்.?”                    

                                                (கவிஞர் : ஆண்டாள் பிரியதர்ஷினி)

என்று குழந்தைகளுக்கான வாழ்க்கை, கேள்விக்குறியாக நிற்பதில்போய் முடிவதைச் சுட்டும் ஒரு கவிதை. அத்தனைக்கு தீர்வாய் அவரே, ”பெண்விடுதலை என்பது நாற்றமெடுத்த சமுதாயத்தில் சரிபாதி பங்கீட்டுக்கொள்வதல்ல; மாறாக அதைப் புணரமைப்பது” என்கின்ற எழுத்தாளர் சிவகாமி IAS -ன் சிந்தனையோடு முடிவு கூறுகிறார். ஒருவகையில் இந்தமுடிவுக்கு பெண்கள் வருவது தான் நியாமாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.

மூன்றாவதாக… தலித் பெண்ணியக் கவிதைகள்..

         இப்பகுதியை அவர் “ஒரு பறவைப்பார்வை” என்று சொல்லிவிட்டார். அதனால் இதில் வரும் கவிதைகளும் கருத்துக்களும் உதாரணங்களாக மட்டுமே இருக்க முடியும். ஆக இதுமட்டுமே போதாது இதுபோல இன்னும் இன்னும் நிறையப் பிரச்சனைகள், தலித் பெண்ணியக் கவிதைகளில் தற்காலச்சூழலில் இருக்கிறது என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

          பொதுவாகவே, தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படிப்பார்ப்பது, ஒருவகையில தவறும்கூட. ஏனெனில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருத்தல் என்பது, தலித்தியத்தின் மூலமாகத்தான் நமக்கு தெரியவந்த விஷயமாக இருக்கிறது. நான் சொல்லும் அடிமத்தனம் என்பது – ஒரு சக உயிரா பெண் மதிக்கப்படாத அளவுக்கு நடத்தப்படுகிற அடிமைத்தனம். அப்படி பாக்கும் பொழுது பெண்கள் எழுத ஆரம்பித்தப்பிறகு – தலித்தியத்துக்கான குரலும் பெண்ணியத்துக்கான குரலும் காத்திரமாக இருந்தது என்பதை இந்த தொகுப்பில் அன்பாதவன் ஆழமாகக் காட்டியுள்ளார். இதில், “எங்கோ ஒரு மராத்தி மாநிலத்துல நடந்த ஆதிக்கக் கொடுமையில் இருந்து – வெண்மணியள நடந்த கூலிய ஒசத்திக் கேட்டதுக்காக நடந்த கொடுமை வரைக்கும்” மொத்தமாக கவனித்து, அக்கவிதைகளை சரியான இடங்களில் எடுத்துக்காட்டி, தலித்பெண்ணியக் கவிதைகள் தற்காலச் சூழலில் எவ்வாறு வெளிப்படக்கூடியதாக இருக்கின்றன என்பதை இவர் விவரித்துள்ளார்.

அடுத்து நான்காவதாக - புதையலும் பூதமும்

         இப்பகுதியில் தற்காலப் புதுக்கவிதைகள் புதையலாகவும், பூதமாகவும் இருக்கின்ற விடையத்தை நூலாசிரியர் விளக்குகிறார். அதில் ஒரு இடங்களில், ”எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற  கேள்வியோடு கூட,  கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா.. என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டுக்குமே அடிப்படை ஒருவகையில் மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குத்தான்” என்று சொல்லும் லதாராமகிருஷ்ணனின் சிந்தனையைச் சுட்டிக்காட்டுகிறார். இப்பகுதியிலும் அன்பாதவன் பொருத்தமாக பல கவிஞர்களின் கவிதைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐந்தாவதாக - கிராமியப் புனைவுகளும் யதார்த்தமும்

         தற்காலக் கவிதைப் போக்கில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது பேச்சு வழக்கில் அமைந்திருக்கும் கிராமிய மணம் கமழும் கவிதைகள்.

         எங்க ஊரிலும் ஒரு கிராமிய நடையில் எழுதும் கவிஞர் இருக்கிறார். (த.வெ.விக்கிரமாதித்தன்) அவருக்கு இருக்கும் கோபம் எப்பொழுதுமே ஒரு தனி ரகமாக இருக்கும். உண்மையில் கவிதைக்கு உணர்ச்சி முக்கியமானது. அதிலேயே கிராமியக் கவிதைகள் வேறுவிதத்தில் அவ்வுணர்ச்சிகளை முரண்நிலையில் வெளிப்படுத்துபவைகளாக இருக்கின்றன. அவ்வகையில் அன்பாதவன் தொட்டுக்காட்டும் கிராமியக் கவிதைகளுக்கான கேள்விகளும், அதன் எதிர்பார்ர்புகளும் மிகவும் நியாயமாவைகளாக இருக்கின்றன. குறிப்பாக தலித்துக்களுக்கான விடுதலையை பேசும் இடங்களில் கிராமியதனமான கோபம் மிகவும் சரியானதாக கவிதைகளில் அமைந்திருப்பதை இத்தொகுப்பு பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளது.

இறுதியாக - கடவுளும் கந்தசாமி பிள்ளையும்

         இப்பகுதியை நூலாசிரியர் நவீன கவிதைக்குறித்த உரையாடலாகப் பதிவு செய்திருக்கிறார்.

         இதுவரை அன்பாதவன் நாடகங்கள் எழுதவில்லை. இனி அவர் அதையும் எழுதலாம் என்று சொல்லும் அளவிற்கு மிகச்சிறப்பாக கடவுளின் மீது ஏறி நின்று, தனக்கு இருக்கும் தற்கால நவீன கவிதைகளின் மீதான போதாமைகளையும், குறைகளையும் படிப்படியாகச் சுட்டிக்காட்டி – கடைசியில் நவீனகவிதை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முடிவுரைக்கிறார்.

         இப்பகுதியில் அவர் எடுத்துக்காட்டும் சில கவிதைகள் அதற்கு சாதகமானதாகவும், சில கவிதைகள் அதை நிறுபணம் செய்வதாகவும் இருப்பதை உணரமுடிகிறது. உதாரணமாக,

“வாய்யா வா

வரலாற்றறிஞரே வா

சரித்திரத்தின்

பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு

போர்க்களத்தில் வென்ற படை

தோற்ற தேசத்து மகளிரை

என்ன செய்தது..?                                                        (கவிஞர் : மகுடேஷ்வரன்)

என்பன போன்ற கவிதைகளைச் சாதகமான கவிதைகளாகவும்,

“அழகாயில்லாததால்

அவள் எனக்குத்

தங்கையானாள்”                             (கவிஞர் : கலாப்ரியா)

என்பது போன்ற கவிதைகளையும் (வா.மு.கோ.மு.கவிதையோடு சேர்த்து) நிறுபணக் கவிதைகளாகவும் குறிப்பிடலாம்.

         நவீனகவிதைகள் உலகமயமாக்கலில் சிக்கிக்கொண்டது என்று சொல்லும் அன்பாதவனின் கருத்து சரியானதுதான். நம் நாட்டுக்குத் தேவையான கதைகள் இன்றைய திரைப்படங்களில் இல்லை என்று புலம்புவதைப் போலவே, இன்றைய நவீனகவிதைகள் நமக்கு எதையெதையோ கவிதையாக்கித்தந்து நம்மை புரியவிடாமல் – பொலம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான் அன்பாதவன்  ‘புதையலைத் தேட ஆசைப்பட்டு பூதம் புறப்பட்டக் கதையை’ நமக்கு கருத்தாக்கித் தந்திருக்கிறார்.

         இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டு கவிதைவளர்ச்சிக்குப் பின்னர், இங்கு அதிவேகமாக பல்வேறு தனிமனித உள்ளுணர்வுகளையும், பாலியல்வேட்கைகள், பெண்ணியம், தலித்தியம் – உடலியம் என்றவாறு; நவீன ‘இச’ வெளிப்பாடுகளுடன் எழுதப்பட்டு வரும் நவீன கவிதைகளை அன்பாதவன் சொல்லுவதற்கு ஏற்ப அத்தனை சாதாரணமாக புறந்தள்ளிவிட முடியாதும் கூட. ஏனெனில் நவீன கவிதைகளுக்குள் ஒருவித உளவியலும் – உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருத்தியல்களும் இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அதேநேரம் நவீன மொழி ஜோடனைகளுடன் சில கவிதைகள் பொருளற்ற ’புனைவுகளாகவும் – இருண்மைகளாகவும்’ இருப்பதை நிச்சயம் அன்பாதவன் குறிப்பிடும் ’நிறுபணக் கவிதைகளுடன் வைத்து’ இனம் காணவேண்டியதும் அவசியம் என்றே சொல்லவேண்டும்.

         இறுதியாக அவர் தன் நூலின் முடிவை,-----“ கவிதைகள் வெறும் சப்தங்கள் அல்ல. வெறும் விளையாட்டும் அல்ல. அவை எப்பொழுதும் ஒருமாற்று வேண்டி நிற்பவை” என்ற தி.சு.நடராசனின் கூற்றோடு முடித்துள்ளார்.

         இத்தொகுப்ப்பு இன்னும் நிரல்பட, சில தகவல்களைச் சொல்லவேண்டுமாயின், இதில் சில கவிதைகள் மீண்டும் மீண்டும் உதாரணம் காட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம். அதேபோல அன்பாதவன் சில இடங்களில் எடுத்தாண்டுள்ள குறிப்புகளுக்கு, குறிப்பெண் விளக்கங்கள் தந்துள்ளார். பல இடங்களில் அவ்விளக்கங்கள் தரப்படவில்லை. பொதுவாக இத்தொகுப்பு ஏராளமான கவிதைவரிகளை எடுத்துக்காட்டி இருக்கிறது. இது ஒருவகையில் இந்நூலை வாசிப்பதற்கு சற்றே சோர்வு ஏற்படுத்தவும் செய்வதாக நான் உணர்கிறேன்.

         இறுதியாக இந்நூலுக்கு அன்பாதன் ஒரு முன்னுரை எழுதவில்லை. பிரேமாவின் முன்னுரையைக் காட்டிலும் நூலாசிரியரின் முன்னுரை ஒரு நூலுக்கு மிக அவசியமான ஒன்றென எனக்குப்படுகிறது. இந்நிரல்கள் நூலாசிரியரையும் ஆய்வாளர்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் என்ற வகையில் அவசியம் பெறுகின்றன. மற்றபடி, ”சமகாலத் தமிழ்க்கவிதைகள் புதையலும் பூதமும்” என்னும் நூல் உண்மையில் பலநூறு கவிதைத்தொகுப்புகளை வாசித்து அறிய வேண்டிய அறியபல தகவல்களைச் சொல்லும் வகையில் அமைந்த ஒரே நூல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நன்றி !

Click to Download