4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

மகிழ்ச்சி என்றால் என்ன?


அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலைபேசி எண் :94869 38900. 

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை, யாவரும் விரும்பும் ஒரு மனநிலை. இன்பம் உடல் சார்ந்தது, மகிழ்ச்சி மனம் சார்ந்தது. 

யாவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகின்றார்கள். துன்பத்தை விரும்பும் மனிதர்கள் எவரும் இல்லை. ஆனால் மகிழ்ச்சிக்கான வழி தான் தெரிவதில்லை. மகிழ்ச்சி தானாகவே வருகிற ஒரு உணர்ச்சியா? அல்லது தாமாக அழைக்க வேண்டிய ஒன்றா? காரணமில்லாமல் காரியங்கள் எதுவும் நடப்பதில்லை. மழை மேகங்கள் இல்லாமல் மழை பொழிவதில்லை, சூரியோதயம் இல்லாமல் வெளிச்சம் வருவதில்லை. நாம் மகிழ்ச்சியுடன் இருக்க என்ன காரணம்? நம்மை சுற்றி நடப்பவற்றை கவனியுங்கள். விவரங்கள் தெரியும், பின் புரியும். ஆடி, ஓடி சிரித்து விளையாடும் சிறுவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார்களே, ஏன்?  

இன்னொருவனை தோல்வி அடையச் செய்துவிட்டு தான் வெற்றி பெற்றதால், தான் அவனை விட உயர்ந்தவன், சிறந்தவன் என்ற எண்ணம் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கிறது. 

அந்தி வேளையில் தனி வழி ஒன்றில் ஓய்ந்த நடையுடன் செல்லும் ஒரு பிச்சைக்காரன், யாரோ தவற விட்ட பர்ஸைக் கண்டெடுக்கின்றான், அடுக்கடுக்காக ரூபாய் நோட்டுகள், அவன் மகிழ்ச்சியில் திளைக்கின்றான். காரணம் எதிர் பாராத திடீர் செல்வம்.

திருமண வீட்டைப் பாருங்கள், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது, காரணம், உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்த மகிழ்ச்சி.

ஒரு தாய் பிரசவ வலியால் அலறுகின்றாள், துடிக்கின்றாள், ஆனால் பிரசவம் முடிந்து வெளிவந்த தனது குழந்தையைப் பார்த்தவுடன் அளவில்லா மகிழ்ச்சியில் அவள் முகம் அன்றலர்ந்த தாமரைப் பூ போல் மலர்கிறதே, ஏன்? தான் இந்த உலகத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்த கடன் இப்போது தான் நிறைவேறியது என்ற உள் மன எண்ணம்.

உல்லாச பயணம் செல்கின்றோம், பார்க்கும் காட்சிகள், தங்கும் விடுதிகள், உணவு வகைகள், குடும்பத்தாரின் கலகலப்பு இவையெல்லாம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன.

ஆக, ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சி அடைய பல நூறு காரணங்கள் உண்டு. அது போலவே, துக்கம் கொள்வதற்கும் பலப்பல காரணங்கள் உண்டு. 

மகிழ்வும் துக்கமும், பகலும் இரவும் போல, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாறி மாறி வருகின்றன. இவை இரண்டையும் அனுபவிக்காத மனிதனே இல்லை என்று கூறலாம். அது யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும், என்னவாகயிருந்தாலும் சரி!

இங்கு நாம் ஒரு முக்கிய உண்மையை, இவற்றிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலே தெரிவித்தவைகளிலெல்லாம், அவரவர் அடைந்த சந்தோஷங்கள், அவர்களுக்கு வெளியிலிருந்து கிடைத்தவைகளால் உண்டானவை.

ஆனால், இது போன்ற வெளி தூண்டுதல்கள் எதுவுமே இல்லாமல் எந்நேரமும் நித்திய மன அமைதியுடன் வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். எங்கே? எப்படி?  

புத்தர் சிலையை, படத்தை பார்த்திருக்கின்றோம். அந்த முகத்தில் புன்சிரிப்போ, கோபமோ, பெருமையோ, வெறுப்போ இருக்காது. சாந்தம் ஒன்றே தெரியும். சிலை சாந்தமாக இருப்பதில் அதிசயமோ, அசாதரணமோ இல்லை. ஆனால் ஒரு மனிதன் உறையும் குளிரில் இமயமலை அடிவாரத்தில் திறந்த வெளியில் ஒரே ஒரு ஆடையை மட்டும் போர்த்திக்கொண்டு, இறைவனை நினைத்து சாந்தமுடன் பிரார்த்திக் கொண்டு நிரந்தர நிம்மதியுடன் இருப்பது எப்படி சாத்தியமாகிறது.

இது போல் ஒருவரல்ல, பலர் அங்கிருந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள், எப்படி

விடை எளிது. அந்த சாதுக்களின் உடல்கள் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ளது. மாறாக, நம் போன்ற பல கோடி மக்களின் உடல்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இல்லை. அது அவரவர் மனதின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இவர்கள் அவரவர் உடல் கேட்பது போலவோ அல்லது மனம் போன போக்கிலோ வாழ்ந்து வருகிறார்கள்.

உடல், மனம், ஆத்மா என்ற மூவரின் கூட்டு ஆட்சி தான் வாழ்க்கை. இந்த மூவரில் யார் ஆளுநர் என்பதைப் பொருத்தே வாழ்க்கை அமைகிறது. பெரும்பான்மை மக்களும் உடல் என்ன கேட்கிறதோ அதன் படியும், மனம் என்ன ஆணையிடுகிறதோ அதன் படியும் தாங்கள் தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் எல்லா விதமான நன்மை, தீமைகளை அனுபவித்து வருகிறார்கள். அத்தகைய வாழ்க்கையில் சஞ்சலங்களும், பிரச்சனைகளும், சிக்கல்களும் தலைதூக்கி அன்றாட வாழ்க்கையை நிம்மதியற்றதாக்கி விடுகிறது. அதிலும் நாகரீகம் வளர வளர இவை மிகவும் அதிகமாகி வருகின்றன. ஆனால் ஆத்மாவின் கட்டுப்பாட்டின் படி வாழ்கின்றவர்கள் என்றென்றும் புத்தர் சிலை போல எல்லா சூழ்நிலைகளிலும், வெளி தூண்டுதல்களைத் தவிர்த்து உள் மன அமைதியுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இனி மூத்த குடிமக்களைப் பற்றி பார்ப்போம்.

மூத்த குடிமக்கள் அதாவது அறுபது, எழுபது வயதைத் தாண்டிய வர்கள், தங்களின் வாழ்க்கைப் பாதையில் முக்கால் பங்கு யாத்திரையை ஏற்கெனவே முடித்து விட்டவர்கள். அவர்கள் இனி இருக்கும் குறுகிய காலத்தையும், சலனங்கள் இல்லாத மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் இல்லாத பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும். வாழ்க்கை இது வரை எப்படி இருந்தாலும் இனி மேலாவது இனிமையானதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இளைய தலைமுறையினராயினும், மூத்த குடிமக்களாக இருப்பினும் புறத்திலிருந்து வாழ்க்கைப் பிரச்சினைகள் நம்மை நோக்கி வரவே செய்யும். அவற்றை இல்லாமலாக்க முடியாது, அது தேவையுமில்லை. எந்த பிரச்சினை ஆனாலும் எல்லா பிரச்சனைகளிலும், முடிவெடுப்பது நம் ஆத்மாவாகவும், அதை செயல் படுத்துவது நம் மனமும், உடலுமாகவும் இருக்க வேண்டும்.

இதுவே இனி வரும் நாட்களை முழு பயனுடன் கடக்க வேண்டிய உசிதமான நல்வழி. உண்மையை சொல்வதாக இருந்தால், இது சொல்வது எளிது, செய்வது கடினமான செயலாகும். ஆயினும் செய்தே ஆக வேண்டும்.

அப்படி செய்தால் என்றென்றும், எப்போதும் மகிழ்ச்சி நம்முடன் வாழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.