4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

அக்கரையும் இக்கரையும்-ஒப்பியல் நோக்கில்



பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சர்சல் (பிரான்சு) 

அவன்ஆங்கில இலக்கியத்தின் பெரும்புலவன்; அகிலம் அனைத்தும் அவனை அறியும்; அந்தமொழிக்குப் பத்தாயிரம் புதுச்சொற்களைச் செதுக்கித் தந்த சிற்பி; ஊமையாய் ஆமையாய் குத்துயிருமாய் ஒடுங்கிக்கிடந்த ஆங்கிலமொழி அவன்வரவால் புத்துயிர் பெற்றதுமனிதமனங்களைப் படம்பிடித்தவன்; அவற்றை நாடகங்களாக வடித்தவன்"He was not of an age, but for all time![1]" என்ற புகழ் பெற்றவன். அவன் தான் ''Shakespeare'.

எளியேன் ஆங்கிலவழிக் கல்வி பயின்ற போது ('matriculation'பள்ளியில் 3rd standard வகுப்பில் 'Tales from Shakespeare' (Shakespeare's stories retold) by Charles Lamb & Mary Lamb) பாடப் புத்தகமாக இருந்தது. அப்போதுதான் ''Shakespeare'. என்ற கவிஞன்  அடியேனுக்கு அறிமுகம் ஆனான். படிக்க படிக்க மலைத்துப் போனேன். பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்கும். இருந்தும் ''Shakespeare”. மீது ஏனோ இனம் புரியாத ஈர்ப்பு! இந்த ஈர்ப்பு, ஆங்கில இலக்கியத்துள் அடியேனை மூழ்கவைத்தது; சாசர், மில்டன், வொர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, போப், டென்னிசன், லாங்க்ஃபெல்லொஅறிமுகம் ஆயினர். என் இலக்கிய வானில் ஆங்கிலப் புலவர்கள் மின்னத் தொடங்கினர்! ஆங்கில இலக்கிய மோகம் தலைக்கு ஏறியது; தாகம் எல்லையை மீறியது. ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும் பழக்கமாகி இருந்தாலும் ஆங்கிலக் கவிதைகள் போலத் தமிழ்ப் பாடல்கள் (எனக்கு) ஆழமும் அகலமும் இல்லாமல் தோன்றின! இச் சூழலில் மெல்ல மெல்லப் பழந் தமிழ்ப்பாடல்கள் பழக்கம் ஆயின! சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த ஆங்கிலக் கவிதைகளின் பல கருத்துகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மலர்ந்து மணம் வீசிய திறம் உணர்ந்து வியந்தேன்; தமிழ்ப் பாடல்களில் அவை ஒளிந்து (ஒளிர்ந்து) மிளிர்ந்த மகத்துவத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். பல நூறு ஆண்டு இடைவெளிக்கு  இடையில் எப்படி இப்படி ஒரு ஒற்றுமை முகிழ்த்தது? சிந்தித்தேன், சிந்தித்தேன்சிந்தித்துக்கொண்டே இருகிக்றேன்விடைதான் கிடைக்கவில்லை! ஆனலும் இதோஇருவேறு கடல்களில் மூழ்கி எடுத்த முத்துகள் பலவற்றுள் சில உங்கள் பார்வைக்கு

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் உடைய கோல மொழி[2] தமிழ்; தொன்மையும் பன்முகத் தன்மையும் வேறு எம்மொழியும் இம்மாழிக்கு ஈடு இன்மையும் இச்செம்மொழியின் சிறப்புகள். இத்தமிழ் மொழி ஒரு புறம்.சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்து இன்று வானளாவ வளர்ந்து அகிலம் எங்கும் பரந்து நிற்கும் ஆங்கிலம் மறுபுறம்; அந்த ஆங்கிலக் கவிஞர்களுள்ளும் ''Shakespeare” என்னும் மாக் கவிஞனின் கவிதைகள் சிலவற்றில் பழந்தமிழ்ப் பாடல்கள் சிலவற்றின் கருத்துகள், சிந்தனைகள் எப்படி ஒளிந்திருக்கின்றன என்பதை அறியும் போது மேலிடுவதுவியப்பே!

இரண்டே பாத்திரங்கள்  ஆனால் பேசுவது என்னவோ ஒரே ஒரு பாத்திரம் - பெண்! அதுவும்  நாலே வரிகள். நாலு வரிகளுக்குள் நாலாவித உணர்ச்சிகள் மத்தாப்பாய்ச் சொரிகின்றன! சொற்களென்னும் உளி கொண்டு இந்தக் கவிதைச் சிற்பத்தை வடித்தவரும் பெண்பாற் புலவர்தாம்.. இப்பாடலில் வெளிப்படும் உணாச்சிக் குவியலை இக்காலச் சூழலில் வாழும் நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா என்பது ஐயமே! அப்பாடலின் கருத்து: ”கோழி குக்கு என்றது. அதைக் கேட்டு என் தூய நெஞ்சம் திடுக்கின்கிறது. தோளோடு தோள் சேர்ந்திருக்கும் காதலர்களைப் பிரிக்கும் வாள் போல விடியற் காலை வந்து விட்டதே!”[3]

காலை வருகைக்குக் கட்டியம் கூறிவிட்டது கோழி! இனி பொழுது விடிந்து விடும். விடிந்து விட்டால்? தன்னைத் தேடி யாரும் அறியாமல் காடு மலை கடந்து வந்த காதலன் பிரிந்து போய் விடுவானே! பிறகு அவனை மீண்டும் சந்திப்பது எங்கே? எப்போது? எப்படி? கேள்விகள், கேள்விகள், விடை தெரியாக் கேள்விகள்! இக்காலமாக இருந்தால் கவலை இல்லை, internet, SMS, whatsapp, FB…என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டே! அதனால்தான், அந்தக் காதலர்கள் கவலையை, உணர்ச்சிகளை இந்த வசதிகளோடு இருக்கும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இவ்வளவு நேரம் இன்பக் கடலில் குளித்துக்கொண்டிருந்தவள் தோய்ந்துகொண்டிருந்தவள் இப்போது கேள்விக் கடலில் மூழ்குகிறாள், கவலையில் ஆழ்கிறாள். அவள் உள்ளத்தில் ஆழிப் பேரலைகளாய் உணர்ச்சிஅலைகள் பொங்கிப் பெருகுகின்றன! அவளை அப்படியே அங்கேயே விட்டுவிட்டுக் புலவர்  மாயமாகிவிடுகிறார். நாமோ அவளுக்கு என்ன ஆகும்? காதலன் மறுபடி வருவானா? அவளை மணம் முடிப்பானா? அவர்கள் களவு, கற்பாகுமா?… இப்போது அவளை எண்ணி நாம் கேள்விக் கடலில் தோய்கிறோம். காதலர்களைப பிரிக்கக் காலை மலர்வதையும் அதற்குக் பறவை (கோழி) கட்டியம் கூறுவதையும் ஒத்துப் போகும் சேக்சுபியரின் வரிகளைத் தேடுவோம்.

மேனாட்டுக் காதலர்கள் என்ற உடன் நம் மனக்கண் முன் வந்து நிற்பவர்கள் ரோமியோவும் ஜுலியட்டும்தானே! கதைக் களம்: இத்தாலி நாட்டு வெரோனா நகரம். மோன்தேகு பிரபுவின் மகன் ரோமியோ. காப்யுலெட் பிரபுவின் மகள் ஜுலியட். இரு பிரபுகளுக்கும் இடையே பரம்பரை விரோதம், வெட்டுப் பகை, குத்துப் பகை! ஆனால், விதி சிரிக்கிறது, இருவருக்கும் இடையே காதல் வலை விரிக்கிறது! இரு குடும்பத்துக் குலவிளக்குகளும் சந்திக்கின்றன, கண்களால் சிந்திக்கின்றனமுளைத்த காதல் தளிர் விட்டு, இலைவிட்டு, வேர் விட்டுக் கிளைத்து வளர்கிறது. நடுவே, ஜுலியட்டின் உறவினனான திபால்டை (Tybalt) வாள் போரில் கொன்று விடுகிறான் ரோமியோ. விளைவாக நாடு கடத்தப்படுகிறான். பொழுது விடியும் முன் ஊரை விட்டு அவன் சென்றுவிடவேண்டும், அப்படிச் செல்லாவிடில் அவனைக் கொன்றொழிக்க வேண்டும் என்பது அரச கட்டளை. ஊர் விட்டுச் செல்வதற்கு முன், இரவில் திருட்டுத்தனமாக ஜுலியட்டைச் சந்திக்கிறான். தோள் தோய் காதலர்களாகிக் காமக் குளத்தில் களித்துக் குளித்திருக்கும் போது பறவை ஒன்று குரலெழுப்புகிறது. இருவரும் உரையாடுகின்றனர்.

சங்கப் பாடலில் நாலே வரிகள்! இங்கோ பல வரிகள்! அங்கே தலைவி மட்டும் பேசுகிறாள். அது கவிதையாகிப் போகும் தனிஉரை(monologue) இங்கே, இருவர் உரையாடல் (dialogue). ஏனெனில் இது  நாடகம் அல்லவா! கள்ளங் கபடு இல்லாத ஜுலியட் "பொழுது இன்னும் விடியவில்லையே, அதற்குள் புறப்படவேண்டுமா" என்று  தன் உள்ளத்து ஆதங்கத்தை  வெளிப்படுத்துகிறாள்[4] 

இந்தச் சங்கக் கவிதையிலும் சரி சேக்சுபையரின் 'ரோமியோ ஜுலியட்' நாடகப் பகுதியிலும  சரி  பிரிவு, பிரிவுத் துயர்  என்ற உணர்ச்சி அலைகளே ஓங்கி எழுகின்றன. பிரிந்தவர் மீண்டும் தம்முள் தொடர்பு கொள்வதும,; மீண்டும் சேர்வதும் உறுதி இல்லா நிலையில்  உணர்ச்சிகளின் வேகம் பெருகுவது இயல்பே! இந்த வேகத்தை, இப்பிரிவின் தாகத்தை இக்காலக் கட்டத்தில் வாழும் நாம் முழமையாக உணருவது இயலாத ஒன்று! ஆனால் சங்கப் பாடலில் வீசிய அதே அவல நிலையை, உணர்ச்சி அலையைச் சேக்சுபையரின் நாடகத்திலும் வீசுவதை ஓரளவு உணரலாம்! உணருகிறோம். ஏனென்றால் அவ்விரு காலக் கட்டங்களிலும் நிலவிய சூழ்நிலைகள் ஒரு தன்மையன. நம் காலச் சூழ்நிலையோ முற்றிலும் வேறாக அல்லவா உள்ளது.

நாலே வரிகளில் சங்கப் புலவர் சொன்ன கருத்தையும் வெளிப்படுத்திய உணர்ச்சியையும் சேக்சுபையர் பல வரிகளில் வடித்ததைக் கண்டோம். பழங்கால மன்னன் ஒருவன், ஐந்து வரிகளில் சொன்ன கருத்தைச் சேக்சுபையர் ஒரே வரியில் சொல்லிச் செல்வதைக் காண்போம்.

வீரமா மன்னன், சேர குலத் தோன்றல் செங்குட்டுவன்  மனைமாட்சி மிக்க தன் மனைவி இளங்கோ வேண்மாளுடன் மலை வளங் காணக் கருதிப் பேரியாற்றங் கரையிலே வந்து தங்கி இருக்கிறான். அவனைக் கண்டு அவன் தாள் பணியப் பலவகைப் பொருள்களைத் தலைமேல் தாங்கி வருகிறார்கள் அம்மலை வாழ் மக்கள். மன்னனைக் கண்டு மண்டியிட்டு வணங்கிய மக்கள், வேங்கை மரத்தின் கீழிருந்து பெண்ணொருத்தி வானகம் போன செய்தியைக் கூறினர்.அச்சமயம் அங்கே இருந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் கண்ணகி கதையைச் சொல்கிறார்.[5]வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர்  நிமிர்த்துச் செங்கோ லாக்கியதுஎனப் பாண்டிய மன்னனைப் பாராட்டிய சேரன் செங்குட்டுவன் அத்தோடு நிற்காமல் மாபெரும் உண்மை ஒன்றை, அரசு, அரசியல் வாழ்வு பற்றிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்துகிறான் :

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் 
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்[6]

உலகத்தைக் காக்கும் நல்ல குடியிலே  அதாவது அரச குடும்பத்தில் பிறத்தல் ஏதோ இன்பமானது எனப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அஃது அப்படி இல்லை! அப்படிப் பிறப்பது துன்பம் தானே தவிர எல்லாரும் நினைப்பது போல இன்பமானதோ வணங்கத் தக்கதோ அல்ல. ஏனென்றால், மழை பெய்யாமல் வானம் பொய்த்துவிட்டால் அரசனைத்தான் எல்லாரும் தூற்றுவர்! குடி மக்களுக் கொரு கெடுதி என்றால் அரசனைத்தான் மக்கள் பழிப்பர்! குடிகளைக் காப்பதற்காககப் பலவித தியாகங்களைச் செய்தும் கொடுங் கோலன் என்ற பெயர் வந்துவிடக் கூடாதே என்று அஞ்சியும் நடுங்கியும் வாழ வேண்டிய கட்டாயம் அரசர்களுக்கு உண்டு. ஆகவே மன்னர்களுக்கு மன நிம்மதி எந்நாளும் இல்லை…. இதுதான் மன்னவன் மொழிக்கு விளக்கம். அஞ்சா நெஞ்சினனாக விளங்க வேண்டிய மன்னன் கூட இவற்றுக்கு அஞ்சித்தான் தீர வேண்டும். இப்படி ஒரு கருத்தை எந்த அரசனும் சொன்னதாகத் தெரியவில்லை - சேக்சுபையர் குறிப்பிடும் அரசனைத் தவிர. அவன் கூட இந்தப் பொருளில்  சொல்லவில்லை! இவ்வளவு விளக்கமாகவும் கூற வில்லை! ஆனால் சேரன் செங்குட்டுவன் கருத்தின் விளக்கத்தைச் சேக்சுபியர் குறிப்பிடும் மன்னனின் கருத்துக்கும் பொருத்தலாம்.

சேக்சுபிரின் நாடகங்களை மூவகையாகப் பிரிப்பார்கள் : வரலாற்று நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், இன்பியல் நாடகங்கள் என்று. (historical plays, tragedies and comedies). 4-ஆம் என்றி, 5-ஆம் என்றி, 8-ஆம் என்றி, கிங் ஜான், 2-ஆம் ரிச்சர்ட், 3-ஆம் ரிச்சர்ட் இவை வரலாற்று நாடகங்கள். ஆண்டனியும் கிளியோபாத்ராவும், ஜுலியஸ் சீசர், ரோமியோவும் ஜுலியட்டும்போன்றவை துன்பியல் முடிவு கொண்டவை, ஆகலே துன்பியல் நாடகங்கள். வெனிஸ் வணிகன் (Merchant of Venice);, புயல் (the Tempest);, மாரிக்காதை (Winter's Tale) … முதலியன இன்பியல் முடிவு உள்ளவை, எனவே இவை இன்பியல் நாடகங்கள் ஆகின்றன.

        இம்மூவகை நாடகங்களில் 4 -ஆம் என்றி, பகுதி 2இல் தான் நாம் தேடும் ஒரு வரி வசனம் இடம் பெறுகிறது. இடம் : வெஸ்டமினிஸ்டர். காட்சி : அரண்மனை. அரசர் 4-ஆம் என்றி பணியாளர் ஒருவருடன் அரங்கினுள் நுழைகிறார். சில மடல்களைப் பணியாளரிடம் அளித்து அவற்றைச் சிற்றரசர்கள் சிலரிடம் கொடுத்துவருமாறு அவனை அனுப்பிவிடுகிறார். பிறகு உறக்கம் வராமல் உலவத்தொடங்கும் அரசர் உறக்கத்தைப் பற்றி நீண்டதொரு தனிவசனம் (soliloguy) பேசுவார்என் குடிமக்களில் இந்நேரம் எத்தனை ஆயிரம் ஏழை மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்! உறக்கமே! ஓ மென்மையான உறக்கமே! இயற்கை வழங்கிய தாதியே! உன்னை அச்சுறுத்திவிட்டேனோ? பிறகு ஏன் என் இமைகளை மூடி என்னை அணைக்க மறுக்கிறாய்புகை சூழ்ந்த குடில்களில் கூடத் தவழுகின்ற நீ, ஈ மொய்க்கும் இடங்களில் கூட உலா வரும நீ பெரிய மனிதர்களின் நறுமணங் கமழும் பஞ்சணைகளில்;, இனிய இசை தவழும்  படுக்கை அறைகளில் நுழைய மறுக்கிறாய்?.... 

இப்படித் தொடர்ந்து பேசிக்கொண்டே வரும் அரசர் இறுதியாக, ”அரசாளும் மன்னவனுக்கு மட்டும் உறக்கம் வர மறுப்பதேன்….மணிமுடி தரித்த மன்னவனுக்கு மன அமைதி ஏது! என்பதாலா.” என முடிப்பார்.[7]

        காவலன் சுமக்க வேண்டிய கடமைகளும் மன்னவன் மனத்தில் மண்டியிருக்கும் கவலைகளும் அவன் மன அமைதியைக் குலைத்துவிடுகின்றன. உறக்கத்தைக் கலைத்துவிடுகின்றன. இக்கருத்தை வெளியிடுகிற இருவருமே  மணிமுடி தரித்த மன்னவர்கள். அரசுக் கடமையின் பாரத்தை நன்கு உணர்ந்தவர்கள். இவ்வரசர்கள் அன்று உரைத்த இக்கருத்து இக்காலத்தே ஆள்வோர்க்கும் மாபெரும் தலைவர்களுக்கும்  பெரும் பதவிகளில் இருப்போர்க்கும் நன்கு பொருந்தும். இது அக்காலத்துக்கு மட்டுமல்ல இக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருத்தமான கருத்துதான். இக்கருத்தை முதன் முதலில் சொன்னவன் தமிழன். அந்தப் பெருமை தமிழுக்கும் சொந்தம், நமக்கும்தான்!

நிலத்துக்கும் நங்கையின் உளத்துக்கும் முடிச்சு போடுகின்ற அறிஞன் வள்ளுவனாகத்தான் இருக்க முடியும். நிலத்தைக் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்துச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டிய நேரத்தில் சரிவர செய்து வரவேண்டும். இல்லை என்றால், அந்த நிலம் ஊடல் கொண்டுவிடுமாம். எப்படி? மனைவியைப் போல ஊடிவிடுமாம். மனைவியைக் கவனிக்க வேண்டிய நேரத்தில், கவனிக்க வேண்டிய விதத்தில் கவனமாகக் கவனிக்க வேண்டும். தவறினால், மனைவி ஊடல் கொண்டுவிடுவாள். அவள் ஊடலைத் தீhப்பது அவ்வளவு எளிதில்லை. இந்த இடத்தில் வள்ளுவர் நிலமாகிய மண்ணையும் நங்கையாகிய பெண்ணையும் சம நிலையில் வைத்து விட்டு ஒதுங்கி விடுகிறார். பின்னாடி வந்த இன்னொரு தமிழ்ப் புலவன் - வெண்பாவிற்கோர் புகழேந்தி எனப் புகழ் பெற்றவன் - உழுதொழிலையும் உடலுறவுச் செயலையும் ஒன்றாக்கிக் காம ரசம் கலந்த சொற்களில் இலக்கியச் சுவை படைக்கிறான். அதே செயலை விரசம் தோன்றாமல் ஒரு வரியிலேயே சொல்லிப் போய்விடுவான் சேக்சுபியர். இருவர் சொல்ல வருவதும் ஒரு தன்மையான  ஒத்த கருத்தே அதாவது உழவுத் தொழில் போலத்தான் உடலுறவுச் செயலும் என்பதுதான் அது.இவ்விரு கவிஞர்களுக்கும் இடையில் முந்நூறு ஆண்டுக்கால இடைவெளி உள்ளது. இங்கே குறிப்பிடப் படும் தமிழ்ப் புலவன் இயற்பெயரே புகழேந்திதான். ஒரு சிலருக்கு இப்படித்தான் இயற்பெயரே சிறப்புப் பெயராகவும் பொருத்தமான புகழ்ப் பெயராகவும் அமைந்து விடுகிறது, ஆங்கிலக் கவிஞன் 'Wordsworth''  போல! புகழேந்தி வாழ்ந்த காலம் 13-ஆம் நூற்றுhண்டு என்பர். சேக்சுபியரின் காலமோ 16-ஆம் நூற்றாண்டாகும் (1564-1616). இருப்பினும் இடம், காலம், மொழிகளைக் கடந்து இருவரும் ஒரே கருத்தையே வெவ்வேறு விதங்களில்;, முறைகளில் சொல்லுகிறார்கள். 

மணமுடித்த மன்னவனின் மார்பினையே உழுகின்ற நிலமாக ஆக்குகிறாள்; மங்கை. உழுவதற்கு ஏர் பூட்ட வேண்டாமோ! தன்னிரு முலைகளையே ஏர் முனைகளாக மாற்றுகிறாள். மன்னவன் மார்பினைத் தன்னிரு முலைகளால் உழுகிறாள்! உழுத பின் நிலத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டுமே! இதோ, உடலில் பெருக்கெடுக்கும் வியர்வையையே நீராகப் பாய்ச்சிக் காதல் என்னும் பாத்தி கட்டிக் காமத்தைப் பயிராக்கினாளாம்அடா, அடா, என்ன கற்பனை, என்ன கற்பனை! படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் பருவம் என்ற காவியப் பாடல் அல்லவா இது! பார்க்கப் பார்க்க சுவைக்குமே இக் காதல் இன்ப ஓவியம்![8] 

இதே போல ஒரு காட்சியைச் சேக்சுப்பியர் 'ஆன்டனியும் கிளியோபாத்திராவும்' என்ற நாடகத்தில் இல் காட்டுகிறார். களம் : உரோமை நகரம். லெபிடஸ் என்பவனின் இல்லத்தில் மார்க் ஆன்டனியும் அக்டேவியஸ் சீசரும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் உறவைப் பலப்படுத்தவும் சீசரின் சகோதரி (விதவை) அக்டோவியாவை  ஆன்டனிக்கு மணமுடிக்க மார்குஸ் அக்ரிப்பா (இவன் சீசரின் நண்பனும் கடற்படைத் தலைவனுமானவன்) திட்டமிடுகிறான். அதன் பின் சீசர், ஆன்டனி முதலானோர் அங்கிருந்து அகலுகின்றனர். ஆன்டனியின் மெய்க்காப்பாளனும் தோழனுமாகிய இனோபார்பஸ், அக்ரிப்பா, மெக்கனாஸ. (இவன் சீசரின் நண்பன்) பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, கிளியோபாத்ராவைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. உடனே, அக்ரிப்பா கூறுகிறான் :

 அரசகுலச் சிறுக்கி! மாவீரன் சீசரின் வாளையே தன் படுக்கையில் மடக்கிப் போட்டவள்!அவன் அவளை உழுதான், அவள் விளைச்சலைத் தந்தாள்!”[9] உடலுறவு காட்சியை விவரிக்காமலேயே;, மண்ணுக்கும் மங்கைக்கும் உள்ள ஒப்புமையை ஒரு வரியில் கூறிச் சென்றுவிடுகிறார் சேக்சுப்பியர். புலவர் புகழேந்தி சொல்வதற்கும் சேக்சுப்பியர் சொல்வதற்கும் இடையே சிறிய வேறுபாடு உண்டு. நளவெண்பாவில் உழுபவள் பெண் (தமயந்தி), சேக்சுப்பியர் நாடகத்தில் உழுபவன் ஆண் (சீசர்). இருப்பினும், உழவுக்கும்உடலுறவுக்கும்  உள்ள ஒப்புமைகளை அவரவர் கோணத்திலிருந்து இருவரும் உரைப்பதை ரசித்துப் படிக்கலாம் அல்லது படித்து ரசிக்கலாம்.

        
        இப்படி நம் பைந்தமிழ் இலக்கியங்களுக்கும் ஆங்கில இலக்கியங்களுக்கும் இடையே எத்தனையோ ஒப்புமைகல் உண்டு. அவற்றை விரிக்கின் பெருகும்.வாய்ப்புக் கிடைப்பின் அவற்றை எழுதுவேன்.


[1]These are the words of Ben Johnson. They appeared in Johnson's introduction to the First Folio, the first collected edition of Shakespeare's play which were published in 1623.
https://www.enotes.com/homework-help/what-meaning-william-shakespeares-quote-not-an-age-504313

[2]"Age cannot wither her, nor custom stale
Her infinite variety"
vd;W   Nrf;RgpaH ('Antony and Cleopatra'–Act II Sc Vதமிழுக்கும் இது பொருந்தும்.

[3]குக்கு     என்றது   கோழி   அதன்எதிர்

துட்கு     என்றதுஎன் தூஉ    நெஞ்சம்

தோள்தோய் காதலர்ப்  பிரிக்கும்

வாள்போல்  வைகறை வந்தன்று  எனவே.” -அள்ளுர்நன்முல்லை ; குறு.157.

 

[4]Shakespeare : 'Romeo and Juliette' - Act III  Scene V lines 01 to 36).

 

 

[5]சிலப்பதிகாரம்காடசிக்காதைவரிகள் : 59 -100.

[6]சிலப்பதிகாரம்காடசிக்காதைவரிகள்: 100-106.

[7]Uneasy lies the head that wears a crown."  (William ShakespeareHenry IV, Part TwoAct 3 Sc 1).

 

8”அங்கைவேல்மன்னன்அகலமெனுஞ்செறுவில்

கொங்கையேர் பூட்டிக்குறுவியர்நீர - அங்கடைத்துக்

காதல்வரம்பொழுக்கிக்காமப்பயிர் விளைத்தாள்

கோதையரின்மேலானகொம்பு'

 
[9]"Royal wench!
She made great Caesar lay his sword to bed.
He ploughed her, and she cropped
(" William Shakespeare,) Anthony and Cleopatra, Act 2, Scene 2, Lines 232-4).