4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

உப்புக்காரன் மகள்


முனைவர் கிட்டு.முருகேசன்

உதவிப்பேராசிரியர்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி.(தன்.)

காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர்

அலைபேசி : 9751809470, 8072794623

மின்னஞ்சல் : muruganthirukkural@gmail.com

 

என்னாச்சுடா! அந்த வேலையைச் சொன்னேனே சரியா செஞ்சியா? இல்ல; இதையும் பழையபடி விட்டுத்தொலைச்சிட்டியா? யென்று கத்தியபடி லொக்கு லொக்குன்னு இருமிக்கொண்டே வீட்டை  விட்டு வெளியே வந்தார் சுப்பையா.

வயசான மனுஷன். ஆனா! பக்குவம்னா பக்குவம் அப்புடியொரு பக்குவம். எதைச் செஞ்சாலும் அதுல நேர்மையும் அதனால வர்ற பலனையும் அனுபவிக்கிறது அவரோட வழக்கம்.

இதுக்கு நேர் எதிராக, எதைச் செஞ்சாலும் அதுல கோட்டைவிடுறது, செய்யிற வேலையில அக்கறையில்லாம வெகுளித்தனமா திரியுறது, யார்க்கிட்டையும் உண்மையைப் பேசுறதே இல்லை.

எப்பப் பாத்தாலும் அந்தக் கீழத்தெருவுள இருக்குற டீக்கடையில ஒக்காந்துக்கிட்டு வடை, பஜ்ஜின்னு எதையாவது அசை போட்டுக்கிட்டே இருக்குறது.

அழுக்குப் படிஞ்ச லுங்கி, அரைக் கை சட்டையில ஏகப்பட்ட தையல் வேற; மொகம் புள்ளா தாடியும், நாட்டுக்கு நிக்கும் தலைமுடியும், கால சவட்டிச் சவட்டி நடக்குற நடையுமாக அவனைப் பாக்குரத்துக்கே கொமட்டிக்கிட்டு வரும் தோற்றம்.

எதையாவது தப்பு செஞ்சுப்புட்டு சுப்பையாக்கிட்ட திட்டு வாங்குறதே சந்திரனுக்குப் பழகிப் போச்சு. அப்படி அவரு திட்டுனவுடனேயே கோவச்சிக்கிட்டு, அந்த டீக்கடைக்கு வந்து உக்காந்திருவன்.

சுப்பையாவும் பொண்டாட்டிப் போனதுக்கப்புறம், மறு கல்யாணம் பண்ணிக்கல; எங்கே! மறு கல்யாணம் பண்ணுனா இந்தப் பய ரோட்டுக்குப் போயிடுவானோங்கிற பயத்துல அவரு கல்யாணம் பண்ணிக்கல.

ஆனா! இப்ப இவன் நிலைமையை நெனச்சு ரொம்பவே வருத்தப்பட ஆரம்பிச்சிட்டார்.

இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடலாமுன்னு யோசிச்சார். அதே நேரத்துல ஊருக்குள்ள இந்தப் பயலுக்குப் பொண்ணு குடுப்பாங்களா? யென்ற கேள்வியும் சுப்பையா மனசுக்குள்ள ஒரு நெருடலா இருந்துச்சு. சந்திரனை நல்லாத் தெரிஞ்சவுங்க பொண்ணு குடுக்க யோசிப்பாங்க. அதனால வெளியூர்ல ஏதாவது பொண்ணு கெடச்சா நல்லாயிருக்குமுன்னு,  வெளியுர்கள்ள ரெண்டு மூனு பேருக்கிட்ட  சொல்லி வச்சாரு.

சந்திரனுக்கு யோகம் வந்துருச்சுன்னு டவுன்ல மளிகைக்கடை வச்சுருக்குற கருப்பையா சொன்னவுடனே; மனசெல்லாம் மத்தாப்பு வெடிச்சதுமாதிரியான பேரானந்தத்துடன் அவருடைய மொகத்தப் பார்த்து, என்ன செய்தி செட்டியாரே சொல்லுங்க யென்று சுப்பையா கேட்டார்.

ஒண்ணுமில்ல சுப்பையா, ஓம் மாவனுக்குப் பொண்ணு பாக்கச் சொல்லி கேட்டிருந்தியா இல்லையா?

ஆமாம்! ஆமாம்!  யென்று மகிழ்ச்சிப் பெருக்கில் தலையை எப்புடி ஆட்டுவதென்றே தெரியாமல் எல்லாப் பக்கமும் ஆட்டிக்கொண்டே ஆவலுடன் கேட்டார்.

அந்தப் பொண்ணு வீடு கொஞ்சம் தொலைவுதான். இருந்தாலும் ஓம் வீட்டுக்கு ஏத்தமாதிரியான பொண்ணு. வரதட்சணை அப்புடி இப்புடின்னு பெருசா எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏதோ அவங்களால முடிஞ்சத செய்வாங்க.

பொண்ணோட அப்பன் மாட்டுவண்டி ஒட்டுறான். தெனமும் காலையில பத்து மூட்டை உப்பத் தூக்கி வண்டியில போட்டுக்கிட்டு ஊர்பூரா சுத்தி வருவான். அதுல கெடைக்குற வருமானத்த வச்சுத்தான் அவன் குடும்பம் ஓடுது. ஏதோ! ஒரே பொண்ணாப் போச்சேன்னு வாயக்கட்டி, வயத்தக்கட்டி கொஞ்சம் சேத்து வச்சிருக்கான். அவ்வளவுதான், வேணும்னா சொல்லு நாளைக்கே போயிட்டுப் பொண்ணப் பேசி முடிச்சிட்டு வந்துரலாம்.

என்ன? சொல்லுற சுப்பையா!’

இல்லங்க!’ செட்டியாரே உங்களுக்கே நல்லாத் தெரியும் எம் மவன் கொஞ்சம் பொறுப்பில்லாம இருக்கான். அதான் கொஞ்சம் குடும்பத்தப் பொறுப்ப பாத்துக்கிற மாதிரி பொண்ணா இருந்தாப் போதும். நகை நாட்டுன்னு எதுவும் நான் கேக்கல.

அவ்வளவுதானே சுப்பு விடு மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். அந்தப் பொண்ணு குடுத்து வச்சவ! ஓம் குடும்பத்த எவ்வளவு கஷ்டம் வந்தாலும் புரிஞ்ச்சிக்கிட்டு நடந்துக்குவா; நல்ல பக்குவமான பொண்ணு.

சாந்தி மிகவும் இளகிய மனம் கொண்டவள். ஏதாவது பிரச்சினைன்னா! அதைக் கண்ட மாத்திரத்தில் மனம் நொந்து வருந்துபவள். அப்பன் வண்டியில உப்பு விக்கப் போரப்பவெல்லாம்;  வண்டிக்குப் பின்னால உப்பு.... உப்பு...உப்பே....உப்பு.. யென்று கத்திக்கொண்டே போவது வழக்கம்.

எடுப்பான மொகம், குடும்பப்பாங்கான அழகு, தன்னுடைய அம்மாவுக்கு கண்ணு தெரியலன்னாலும் கண்ணுக்குக் கண்ணா இருந்து எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு  செய்வாள். பேருக்கு ஏத்தமாதிரி எப்பவும் சாந்தமாக இருக்கும் மொகத்துல, கொஞ்சம் வருத்தமும் கூடி சில நேரம் கண்கலங்கும்.

இருக்காதா பின்ன; இவ எவ்வளவு கத்து கத்தியும் சிலநேரம் யாருமே உப்பு வாங்க வரமாட்டாங்க. அப்புடியே கொண்டுக்குப்போன உப்பு மூட்டை வீட்டுக்கு வரும்.

யாம்பா! வருத்தப்பட்டுரிங்க, விடுங்கப்பா நாளைக்குப் பாருங்க அஞ்சு இல்லன்னா ஆறு மூட்டை நான் வித்துக்காமிக்கிறேன் யென்று அப்பனுக்கே ஆறுதல் சொல்லுவா அந்தப் பக்குவக்காரி.

நாகரீகம் வளந்துபோன நாட்டுலக் கூவிக் கூவி வண்டியில விக்கிற உப்ப வாங்குவாங்களா? ஆரோக்கியமாக வாழ்ர மக்கள்’!

சாந்திக்கும் வயசு ஆகிட்டேப் போகுது; யாரும் பொண்ணுகின்னுன்னு கேட்டு வரல!

வரதட்சணையிலயே வாழ்க்கை நடத்துரவங்க வாழ்ற ஊர் ஒலகத்துல உப்பு விக்கிறவன் மகளக் யார்தான் கேட்டு வருவாங்க!!

காலையில எழுந்திருச்சு வீட்டுக்கு வெளியே இருக்குற தொட்டியில தண்ணி எடுத்து மொகத்தக் கழுவிட்டு கொஞ்சமாச் சோத்தை எடுத்துத் தூக்குச்சட்டியிலப் போட்டுக்கிட்டு மாட்டை வண்டியிலப் பூட்டிக்கிட்டு உப்பு விக்கிறதுக்குத் தனியே கிளம்பினாள் சாந்தி. லொக்கு லொக்குன்னு இருமியபடி அவ அப்பன் வீட்டுக்குலேயிருந்து வெளியே வந்து சாந்தி .... சாந்தி ஏய் .. சாந்தி நில்லும்மா!  நானும் வந்துடுறேன் என்றவாறு பின் தொடர்ந்தார்.

அப்பா! ஒனக்குத்தான் முடியளல்ல; நீ வீட்டுலேயே ஒரு நாளைக்காவது படுத்துத் தூங்குங்கப்பா.... நான் பொயிட்டு வர்ரேன்னு வண்டியைப் பத்தி ஓட்ட ஆரம்பிச்சிட்டாள்.

வழக்கம் போல வியாபாரம் ஒன்றும் சரியில்ல; ஆரோக்கியத்தத் தொலைச்ச மக்கள் அயோடின் நைஸ் உப்பத் தவிர வேற எதைச் சப்புடுவாங்க?

உப்பு வித்த ஐம்பது ரூபாயைக் கையில் எண்ணியபடி வண்டியில உக்காந்துக்கிட்டே மாட்டை அதட்டியபடி வீட்டுக்குத் திரும்பிகிக்கொண்டிருந்தாள். செட்டியார் எதிர்ப்பாட்டு என்னம்மா! இன்னைக்கு நீ மட்டும் வந்திருக்கே? ஓம் அப்பனுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா?

ஆமாங்க செட்டியாரே! அப்பாவுக்கு சளி பிடிச்சு ஒரே இருமலா இருக்கு அதான் நான் மட்டும் வந்தேன்.

சரி.. சரி போ! நாளைக்கு நான் வீட்டுக்கு வர்ரேன்னு ஓம் அப்பங்கிட்ட சொல்லு. பத்திரமா வீட்டுக்குப் போம்மா.

மறுநாள் காலையில மொகத்துலப் புன்னகை ததும்ப சாந்தியின் வீட்டிற்கு வந்தார்.

வாங்க செட்டியாரே! யென்று வரவேற்று ஒரு முக்காளி ஒன்றை கொடுத்து உக்கார வச்சுட்டு; வீட்டுக்குள்ள ஓடினாள் சாந்தி.

செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவந்து குடுத்தாள். செட்டியாரே! இன்னைக்கு நீங்க சப்புட்டுதான் போகணும் என்றபடியே அரிசியைக் கலைந்து உளையில்போட ஆரம்பித்தாள். கொழம்பு வைக்க காய்கறிகள் ஏதும் இல்லை. அதனால், வீட்டின் பின்புறம் கெடந்த குப்பக் கீரையைக் கிள்ளி எடுத்து; அதை அவித்து அம்மியில் அரைத்து அதைச் சோற்றுடன் கிளறி சமையலை முடித்தாள்.

சுவைன்னா! அப்புடியொரு சுவை; கொஞ்சம் வயிறு முட்டவே செட்டியார் சாப்பிட்டுவிட்டார்.

சுற்று முற்றும் பார்த்த செட்டியார். கண் பார்வை இல்லாத அம்மாவையும் ஒடம்பு முடியாம கெடக்குற அப்பனையும் நீ ரொம்ப நல்லா கவணுச்சுக்கிற சாந்தி. இன்னைக்கு இருக்குற புள்ளைங்க எல்லாம் தாய், தகப்பனை மதிக்கிறதுங்கிரதுக் குதிரக் கொம்பா இருக்குது. நீயும் ஒரு வீட்டுக்கு வாக்கப்பட்டுப் போற புல்லதானே!

என்ன? செட்டியாரே! என்னன்னமோ பேசுரியலே; வீட்டு நெலம ஒங்களுக்கு நல்லாவே தெரியும். சாப்பாட்டுக்கே வழியில்லாம கெடக்குறோம்; இதுல கல்யாணம் வேறயா;

என்னம்மா! இப்புடி சொல்லிட்ட! நாங்கெல்லாம் இல்லையா? சும்மா விட்டுருவோமா; ஒங்க அப்பன் எனக்கு இன்னைக்கு நேத்தா பழக்கம் இருபதைஞ்சு வருசமா என்னோடக் கடைக்கு உப்பு மூட்டை போடுறான். அவன் மகள; ஒரு நல்ல எடத்துலப் புடுச்சிக் கொடுக்க வேண்டியது ஏங் கடைமை இல்லையா?

அது சரி செட்டியாரே! யாரு இந்த காலத்துல நகை , நாட்டுன்னு கேக்காம கல்யாணம் பண்ணிக்குவாங்க? அப்புடி ஒரு மாப்புள்ளை இனிமே தான் பொறந்து வரணும்.

எம்பாடு எனக்குத்தான் தெரியும். நான் இப்புடியே வாழ்ந்துட்டுப் போயிர்றேன் செட்டியாரே;  அவள்,  இதனைச் சொல்லும்போது கண் கலங்கியது.

பின்னே! அவளும் பொண்ணுதானே ஊர் உலகத்துல நடக்குற நல்லகாரியத்தெல்லாம் பாக்காமயா இருப்பா...

அவள் மொகத்தப் பாக்கும்போது செட்டியாரும் கொஞ்சம் கண்கலங்கத்தான் செய்தார்.

நான்பாட்டுக்கு ஏதேதோ பேசுறேன் செட்டியாரே; நீங்க வந்த விஷயத்தைச் சொல்லுங்க யென்று பேசியவாறு  மிச்சமுள்ள வார்த்தைகளை மனசுக்குள்ளேயே புதைத்தவளாக கேள்வியைக் கேட்டாள்.

ஒன்றுமில்லை........ என்று துண்டை உதறித் தோள்ளப் போட்டுக்கிட்டு நான் வர்றேன்னு புறப்பட்டார்.

அவர் கண்களில் ஏதோ ஏக்கம் தெரிந்தது. சாந்தியின் வாழ்க்கை என்னவாகுமென்று. மறுபக்கம் ஒரு எண்ணம் இவள் கஷ்டம் இத்தோடு போகட்டும். மேலும் இவள கஷ்டத்துல தள்ள அவர் மனம் நொந்துகொண்டது.

செட்டியாரு தோள்ள கெடந்தத் துண்ட மட்டும் உதரல; கொண்டுவந்த மொத்த செய்தியையும் உதறிக் காத்துல பறக்கவிட்டுட்டு வந்தார்.

இந்தச் செட்டியாராலே இன்னைக்கு இம்புட்டு லேட்டக்கிப்போச்சுன்னு சொன்னபடியே சோத்தை எடுத்து தூக்குச்சட்டியிலப் போட்டு வண்டியில கட்டிக்கிட்டு கெளம்பினாள் சாந்தி.

சாந்தியின் அப்பா, அம்மா கண்களில் நீர் கசிந்தது. கசிந்த நீர் கன்னத்தில் வழிந்தோடி வாயில் விழுந்து கரித்தது.

அவளோ! உப்பு... உப்பு.. உப்பே.... என்று கத்தியபடியே சென்று கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரமும் சுழலத்தான் செய்தன.