4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

மடாதிபதியும் மகுடாதிபதியும்


                

 முனைவர் வாசு. அறிவழகன்  

இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை

                முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி-632002

  arivazhagandde@gmail.comசெல்பேசி : 9445376274 

 

கதிரவன் எழுமுன்.......குயில்கள் கூவிட, தென்றல் வீசிட,மான்கள் உலவிட, மயில்கள் ஆடிட, மந்திர ஒலிகள் கேட்டிட ஒவ்வொரு நாளும் இவ்வாறு இனிதே காலைப் பொழுது துவங்கும் அழகிய மடமொன்று சோழநாட்டுக் கடற்கரையில் அமைந்திருந்தது.

ஆழிப் பேரலையால் இயற்கையே இம்மண்ணைப் புறக்கணித்திருந்த போதும்  இன்றுவரை வரலாற்றால்புறக்கணிக்கப்படாத பண்பாட்டு நகரமான பூம்புகார்பட்டினத்தில் தான் இந்த எழில் கொஞ்சும் மடம் அமைந்திருந்தது.

அழகிய சோலைகள் சூழ அமைந்திருந்த இந்த ஆனந்தா மடத்தில் தான் ஆன்மாவிற்குப் பயிற்சி தருகின்ற சாமியார் ஒருவர் இருந்தார். நாள் தோறும் குறிசொல்லி பக்தர்களை இவர் பரவசப் படுத்தி வந்தார். இதனால் இவரைப் பரமானந்தா என்றே எல்லோரும் அழைத்துவந்தனர்

மடாதிபதியின் மீது பக்தர்களுக்கு நம்பிக்கையும் நாள்தோறும் வளர்ந்துவந்ததால் இம்மடத்திற்கு வருகை தரும் பக்தர்களின்  எண்ணிக்கையும் நாள்தோறும் கூடியது. இம்மடத்தின் வளர்ச்சி உள்நாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டிலும் பரவத் தொடங்கியது.  

இந்த மடத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று இந்தியா அரசாங்கத்தின் புலனாய்வுத் துறைக்கே புரியாமல் இருந்தது. வைரமும் வைடூரியமும் கோமேதாகமும் குவிந்துகிடக்கின்ற கூடாரமாக இந்த மடம் மாறியது.

எளியவர்களின் குறைதீர்க்கும் கூடாரமாக இருந்த இந்த மடம் ஏகோபித்த அதிகார மையமாகக் குறைந்த காலத்திலேயே மாறியது.

பொன்னும் பொருளும் எல்லையில்லாமல் இங்குக் குவிந்த பின்னால் பரமானந்தாவின் எண்ணமெல்லாம் அரசியல் பக்கம் திரும்பியது.

மூத்த தலைவர்களில் இருந்து இந்த நாட்டின் கடை நிலை ஊழியர்கள் வரைக்கும் இவர் பாதம் தொட்டு வணங்கவே அத்தனைபேரும் பரமானந்தம் கொண்டிருந்தனர்.

இந்த நிலை வளர வளர இந்த மடாதிபதியின் உள்ளமும் உடலும்  சொல்லி மாளாத அளவிற்குப் பூரித்துப் போயிருந்தன.

 எங்கிருந்து கற்றார் என்று தெரியவில்லை இந்த மடாதிபதி எல்லா மொழிகளையும் பேசும் வல்லமையையும் பெற்றிருந்தார்.மடம் சார்ந்து பல கல்வி நிறுவனங்களும் இங்குப் பெருகின. இம்மடம் சார்ந்த இந்நிறுவனங்கள் நூல் வெளியிடுகின்ற பணியையும் செய்துவந்தன.

இக்கல்வி நிறுவனங்களைச் சார்ந்து மருத்துவமனைகளும் திருமண மண்டபங்களும் ஓய்வறைக்கூடாரங்களும் கட்டப்பட்டு இருந்தன. அங்காடிகள் நிறைந்த தெருக்களும் போக்குவரத்து வசதிகளும் நிறைந்த இடமாகஇந்த மடாலையம் உருமாறியது.

ஆண்களும் பெண்களும் அயல்நாடுகளில் இருந்து வந்தும் குவியத் தொடங்கினர். இவர்கள் தங்குவதற்கென்று தனித்தனி அறைகளும் கட்டப்பட்டிருந்தன.  இவ்வளவு வசதிகள் வந்த பின்பும் மடாதிபதி தன்னுடையத் தொடக்க காலத் தொழிலான குறி சொல்லுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இரவு ஒன்பது மணி ஆனால் இவர் வழக்கமான தன்னுடைய அருள்பாலிக்கும் பணியைத் தொடங்கிவிடுவார். இரவா பகலா என்று அறிய முடியாத வண்ணம் இம்மடத்தின் ஒளிவெள்ளம் காட்சிதரும்.                             அருள் வந்து விட்டால் இவர் தன்னை மறந்து பேசத்தொடங்கிவிடுவார். ஆங்கிலமும் தமிழும் இவர் நாக்கில் சொந்தம் கொண்டாடும். அயல்நாடுகளில் கூட இவர் குறி சொல்லும் திறமையைக் கண்டு வியந்து பேசினர்.

ஒவ்வொருநாளும் இரவு நேரங்களில் பெண்களின் கூட்டமும் இந்த மடத்தை முற்றுகையிடத் தொடங்கியது. தேர்தல் களத்தில் இவர் சொன்னது நடந்ததால் அரசியல் தலைவர்களின் ஆதரவும் சிறுக சிறுக இவருக்குப் பெருகத் தொடங்கியது. நாத்திகம் பேசும் ஒரு சில தலைவர்கள் கூட இவரை நடுநிசியில் சந்திப்பதாக அடிக்கடி தகவல்கள் வந்ததுண்டு.

மடாதிபதி பரமானந்தம் உலகு புகழ் நிமித்தம் சொல்லும் வித்தகராக மாறினார். இதனால் அயல் நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் இவருக்கு வரத் தொடங்கியது.

ஓய்விலலாமல் உலகை வலம் வந்து கொண்டிருந்த பரமானந்தத்திற்காகப் பணக்காரப் பெண்கள் பலரும் காத்திருக்கத் தொடங்கினர். பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்த பின் பரமானந்தத்தின் எண்ணமும் தடம்புரளத் தொடங்கியது. எதையும் வணிக நோக்கிலேயே பார்க்கத் தொடங்கிய மடாதிபதியின் கண்களுக்குப் பெண்களும் அவ்வாறே தென்பட்டனர்.

அவரை நம்பி வந்த பெண்களை மயக்கி நிர்வாணப்படுத்தி அவர்களை படமெடுத்து அவருடைய அச்சகத்திலேயே அப்படங்களை அச்சிட்டும் ஒளிஒலி காட்சிகளாக மாற்றியும் அயல் நாடுகளுக்கு அவற்றை அனுப்பும் அளவிற்கு அவருடைய மனம் துணிவு பெற்று விட்டது.                          

மடத்திலே நடக்கின்ற நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரத் தொடங்கின. அவை பத்திரிக்கைகளின் கண்களில் பட்டும் பரபரப்பாயின.  நாள்தோறும் இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் பற்றி எரியத் தொடங்கியது. நாடே விவாதிக்கும் செய்தியாக இது மாறியது.

உலகமே உற்று நோக்கும் பொருளாக இம்மடம் மாறியிருந்த போதும், அரசு இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எல்லாத்தரப்புத் தலைவர்களும் மடாதிபதியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருந்ததனால் எந்தவொரு சட்டமும் இந்த மடத்தின் மீது பாய அஞ்சியது.

எதற்கும் அஞ்சாத சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அறக்கட்டளை  இதனைக் கையில் எடுத்தது;  நாடெங்கும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது; போராட்டதை வலுவாக்கியது.

நாள்தோறும் கொதித்துக் கிளம்பிய இப்போராட்டத்தைக் கண்டு     மடமும் அரசும் அஞ்சத் தொடங்கின. போராட்டக் காரர்களை அடக்குமாறு மடத்தில் இருந்து அரசுக்கு நெருக்கடிகள் வந்தன.

போராட்டக் காரர்களை நோக்கிக் காவல் துறை ஏவிவிடப்பட்டது. அரசின் அடக்குமுறையால் போராட்டக்களம் -இரத்தக் களமானது.

புலனாய்வுப் பத்திரிகைகளும் இப்போராட்டக் காரர்களுடன் கைகோர்த்தன. மடத்தில் நடக்கும் மகிமைகள் அத்தனையும் ஒவ்வொன்றாக வெளியில் வரத்தொடங்கின. மடாதிபதியின் வேடமும் கலையத் தொடங்கியது. 

சினங்கொண்ட மடாதிபதியும் சீறிப்பாயத் தொடங்கினார். இதனால் அடக்குமுறையின் வேகம் அதிகரித்ததே தவிர, போராட்டக் காரர்களின் வேகம் குறைந்தபாடில்லை.

மடத்தின் அக்கரமங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரத்தொடங்கியதால் இப்போராட்டம் மக்கள் போராட்டமாகவும் மாறியது.

மடாதிபதியின் கோபத்திற்கு ஆட்பட்ட மந்திரிமார்களும் செய்வதறியாது தவித்தனர். இதனால் இப்போராட்டக் களத்தை நோக்கி இராணுவம் ஏவப்பட்டது.         

மொழி தெரியாத இராணுவம் போராட்டக் காரர்களை நிலை தடுமாறச் செய்தது. கண்டதும் சுடுவதற்கு ஆணை பெற்று வந்த இராணுவத்தால் இப்போராட்டம் நிலைகுலைந்து போனது.     

இளைஞர்களும் பெண்களும் ஏன் குழந்தைகளும் கூட இந்த  இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டக்களுக்குத் தப்பவில்லை.                        

ஆகஸ்டு-15 இந்தியா விடுதலைத் திருநாளைக் கொண்டாடுவதற்கு தயாரானது. இதனால் இப்போராட்டம் இராணுவத்தின் கட்டுக்குள் வந்தது. மடாதிபதியும் ஒருவாறு சமாதானம் ஆனார். மடத்தில் இந்தியாவின் விடுதலை நாளை மந்திரியை அழைத்துக் கொண்டாட வேண்டும் என்று மடாதிபதி முடிவு செய்தார். அதற்கான அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மந்திரியின் மகள் கல்லூரிக்குப் போனவள் காணவில்லை என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.                                

போராட்டத்தை அடக்கிவிட்டோம் என்ற ஆனந்தத்தில் இருந்த மந்திரியின் மனத்தில் இந்தச் செய்தி இடி இறங்கியது போல் இருந்தது. இது போராட்டக் காரர்களின் சதி வேலையாகத்தான் இருக்கும் என்று அமைச்சர் கோபத்தோடு அறிக்கையும் விட்டார். ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க முடியாத அளவிற்குபயம் கலந்த மன இறுக்கம் அமைச்சருக்கு ஏற்படத் தொடங்கியது. இந்த விடயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அமைச்சர்  நிலைதடுமாறிப் போனார். அமைச்சரின் மகளைக் கண்டுபிடிக்க அத்தனை சக்திகளும் முடிக்கிவிடப்பட்டன; ஆனாலும் பலனில்லை.

அமைச்சரின் குடும்பமோ காட்டு வெள்ளத்தில் அகப்பட்ட கொம்பு போல் அலைக்கழிக்கப்பட்டது. இதனால் நேரம் நாள் கிழமை அத்தனையும் அமைச்சருக்கு மறந்து போனது. மடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்பு தான், மறுநாள் இந்திய விடுதலைத் திருநாள் என்பதே அவருக்குத் தெரிய வந்தது. மறுநாள் காலை அமைச்சர் மடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

வாத்தியம் முழங்க சிவப்புக் கம்பளமிட்டு மடத்திற்குள் அமைச்சர் வரவேற்கப்பட்டார். பள்ளிக் குழந்தைகளும் மடத்தின் பணியாளர்களும் பொறுப்பாளர்களும் அயல்நாட்டு விருந்தினர்களும் முறையாக விழா  அரங்கத்திலே அமர வைக்கப் பட்டிருந்தனர்.

மடத்தின் மையப் பகுதியில் தேசியக் கொடிக் கம்பம் அமைக்கப் பட்டிருந்தது. கொடியேற்றும் இடத்திற்கு அமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டார்.

 தேசியக் கொடியை ஏற்றியப் பின் அமைச்சர் மடாதிபதியின் பெருமைகளையும் மடத்தின் சிறப்புகளையும் எடுத்துப் பேசினார். தன் மகள் காணாமல் போனதைச் சுட்டிக் காட்டி போராட்டக் காரர்களையும் விமர்சனம் செய்தார்.  கூட்டம் முடிந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கிய பின் மடத்தின் விருந்து உபச்சாரத்திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

விருந்து நிகழ்வு முடிந்ததும் அமைச்சருக்கு ஆறுதல் கூறிய மடாதிபதி சில ஒளிஒலி நாடாக்களை அமைச்சரிடம் கொடுத்து வாழ்த்தியதோடு மகள் கண்டிப்பாகக் கிடைப்பாள் கலங்காதீர் என்றும் ஆற்றுப்படுத்தியும் வழி அனுப்பினார்.

மடாதிபதியின் சொற்கள் அமைச்சரின் கலங்கிய மனதிற்கு ஆறுதலாக இருந்ததால் வீடியோ கேசட்டை வாங்கிய அமைச்சர் மடாதிபதியின்  காலில்  விழுந்து வணங்கினார். வீட்டுக்கு வந்த அமைச்சர் மன ஆறுதலுக்காக மடாதிபதி கொடுத்த வீடியோ கேசட்டைப் போட்டுப் பார்த்தார். அதில் தன்னுடைய மகளின் படம் நிர்வாணப் படமாக ஒடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அயல்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய வீடியோ கேசட்டை மறந்து அமைச்சரிடம் கொடுத்துவிட்டோமே என்ற பதற்றத்தோடு அந்த வீடியோ கேசட்டை வாங்கிவர அமைச்சர் வீட்டுக்கு ஆள் அனுப்பும் போது மடாதிபதி கைது செய்யப்பட்டார்.