4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

உயர்ந்த உள்ளம் - இரா. விஜயலெட்சுமி,

 

                                                இரா. விஜயலெட்சுமி,

பட்டதாரி தமிழாசிரியை,

                                                        தி.சுக்காம்பட்டி 621 310

  மணப்பறை கல்வி மாவட்டம்.

திருச்சி மாவட்டம்.

                                                                                                                                                63829 93075

 

கதிரவன் தன் ஒளிக்கதிர்களைப் பிரகாசமாகக் காட்டிக் கொண்டிருந்த ஞாயிறு காலைப் பொழுது வித்யா தன் தாயிடம் கோவிலுக்குக் கிளம்புவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு முகக் கவசமணிந்து புடவை சலசலக்கக் கிளம்பினாள். மனதிற்குத் தோன்றும் போதெல்லாம் பவழமெனச் சிவந்த அழகொழுகும் அமைதியான முகம் கருணை தவழும் கண்கள் அருள்பாலிக்கும் கரங்களுடன் திகழும் அந்த மாரியம்மன் திருக் கோவிலுக்குச் சென்று அம்மன் முன் சற்றுநேரம்  நின்று கண்ணாரக் கண்டு மனதார வணங்கிக் கோவில் பிரகாரத்தில் அமர்ந்துவிட்டு வருவதில் அலாதி இன்பம் அவளுக்கு. அந்த இன்பத்தைக் கடந்த பல மாதங்களாகக் கொரோனா காரணமாக வித்யா தவறவிட்டிருந்தாள்.

கொரோனா தாக்கம் குறைந்துபேருந்து சகஜமாக இயங்கத் தொடங்கியதும் தேஜசான அழகொளிரும் முகத்தில் தவழும் அமைதியை அனுபவிக்கக் கிளம்பி பேருந்து நிலையத்தை அடைந்து பேருந்தில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். காவிரியின் குளுமை காற்றில் கலந்து நாசியைத் துளைத்து மெல்ல மெல்ல மனதில் இறங்கியது. மனதின் அமைதியும் காற்றின் குளுமையும் கலந்ததால் சற்று கண்ணயர்ந்தாள். கண் முடி கண்திறப்பதற்குள் பேருந்து சமயபுரம் பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. நடத்துனரின் குரல் கேட்டுக் கண்விழித்தாள் வித்யா .

எப்போதும் கடைவீதி நிறுத்தத்தில் கோவில் முன்பு நிற்கும் பேருந்து புதிதாகப் பேருந்து நிலைய நிறுத்தத்தில் நின்றது. பயணிகள் எல்லோரும் கோவில் நிறுத்தம் செல்லாதா எனக் கேட்டுவிட்டு வேகமாக இறங்கினர் கூட்டம் இறங்கியதும் கடைசியாக இறங்கினாள். இறங்கியதுமே ஒரு ஆள் அம்மா எதாவது கொடுங்கள் எனப் பிச்சைக் கேட்டு வந்தான். வித்யா அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கண்டும் காணாது நடந்தாள். உடம்பில் எந்த ஊனமும் இல்லாம பிச்சை எடுப்பவரைக் கண்டாள் வித்யாவுக்கு முகத்தில் வெறுப்பு கவ்விக் கொள்ளும். சிலநேரம்கை காலெல்லாம் நல்லாதான இருக்கு அப்புறம் ஏன இந்தப் பொழப்புனு ’ கோபமாகப் பேசியும் விடுவாள். பல மாதங்கள் கடந்து அமைதியின் சொரூபமாக திகழும் அம்மனைத் தரிசிக்க வந்ததாலோ என்னவோ அவளும் வெறுப்பைக் காட்டாது அமைதியாகவே நகர்ந்து விறுவிறுவெனக் கோவிலை நோக்கி நடந்தாள்.

ஜே ஜேனு கும்பலாகக் காட்சியளிக்கும் சமயபுரத்தில் அன்று அவ்வளவாகக் கும்பல் இல்லை. பூ விற்போர் உருவாரம் விற்போர் உப்புவிற்போர் எனப் பல ஸ்பீடு பிரேக்குகளைத் தாண்டி வரிசையில் நிற்கும் கவுன்டருக்கு வந்தாள். அங்கும் வரிசையில் நிற்போர் யாரும் இல்லாதிருக்கவே விறுவிறுவென நடந்து சன்னதியை அடைந்தாள். அவள் எதிர்பார்த்தது போல அமைதியாகத் தான் அம்பாள் சன்னதி காட்சியளித்தது. ஓரிருவரே நின்றிருந்தனர். இவளுக்குப் பின் நின்றிருந்த ஓரிருவருக்கும் முன்னாள் செல்ல வழிவிட்டாள் சற்று நேரம் நின்று அம்பிகையின் திரு முகத்தை உள்வாங்கி. பாதாதி கேசமாய்ப் பார்க்கும் ஆவலில்.

 ம்ம் ஆகட்டும் வாங்க வாங்கனு விரட்டும் கோவில் குருக்களும் அன்று மௌனமாகவே நின்றனர். வித்யாவுக்குக் காட்சி தருவதற்காகவே சமயபுரத்தள் அன்று பச்சை சரிகைக் கரையோடு தங்க நிறப் பட்டுடுத்தி இரு பக்கமும் கதம்பப் பூ ஜடை பளபளக்க முகத்தில் புன்னகை பூத்திருக்கச் சிருங்காரமாய் ரம்மியமாய் கருணையும் அமைதியும் தவழ கொள்ளையழகுடன் அருட்பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். அத்திருக்கோலத்தைக் கண்டதும்ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை " என்ற பாடல் மனதுள் ஓடியது. அப்படியொரு திவ்யதரிசனம் பலமாதங் கழித்துக் கிட்டியது. தரிசனமான திருப்தியில் பிரகாரத்தைச் சுற்றி வந்து உற்சவரைத் தரிசித்து சற்று நேரம் அம்பிகை முன் கண்முடி அமர்ந்தாள். ஆயிரங் கண்ணுடையாளைத் தன்னிரு கண்களால் பருகிய களிப்பில் கோவிலை விட்டு வெளியேறியனாள் .

காலணியை மாட்டிக் கிளம்புகையில் இரண்டு கால்களையும் இழந்த ஒரு  ஆள் சக்கர இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவருக்கு ஏதாவது உதவலாம் என நினைத்துப் பர்சைத் திறந்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகள்தான் நான்கிருந்தன. வேறு பணம் காசில்லை. ஊனமுற்ற அவருக்கு ஏதாவது உதவ வேண்டுமென்ற எண்ணத்தில் நூறு ரூபாய்க்குச் சில்லறை மாற்ற நான்கைந்து கடைகள் ஏறியிறங்கிச் சில்லறை பெற்று அவர் இருப்பிடம் சென்று இருபது ரூபாயைக் கொடுத்தாள். அவரோ, ‘அம்மா நான் பிச்சைக்காரன் இல்லை. என் கால்கள்தான் ஊனமுற்றிருக்கிறதே ஒழிய மனது ஊனமுறவில்லை. உழைக்கும் தெம்பு உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறது . உதவவேண்டும் என்றால் பிச்சையிடாதீர்கள். என்னிடம் உள்ள படங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையைத் தந்தால் போதும் என்றார்.

கைகால் நன்றாக இருந்தும் உழைக்கத் தயங்கும் பலருக்கு மத்தியில் கொடுத்தும் பெறாத அந்த மாற்றுத் திறனாளியின் உயர்ந்த உள்ளமும் மாற்றி யோசிக்கும் திறனும் அவளைப் பிரமிக்க வைத்தது. அவள் மனதில் மீண்டும் ஒரு குரல் பாட்டாய் ஒலித்தது .

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்  

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்

கொள்ளேன் எனறல் அதனினும் உயர்ந்தன்று "

 

 பிரமிப்பில் நின்ற அவளை அம்மா என்ற குரலின் அழைப்பு விழிக்க வைத்தது. என்னம்மா படம் வாங்கிக்கிறீங்களா?  படம் 25 ரூபாய்தான் என்றார். இயலாத நிலையிலும் பிச்சை எடுக்காது உழைத்து வாழவேண்டும் என்ற அவரின் வைராக்கியத்தை நினைத்து வியந்தவளாய் இரண்டு அம்பாள் படங்களை வாங்கிக் கொண்டு 50 ரூபாய் தாளை அவரிடம் கொடுத்தாள் . அவர் நீட்டிய படம் வழியாக மீண்டும் சமயபுரத்தாள் கருணை நிறைந்த கண்களுடன் காட்சி தந்தாள்  நிம்மதி நிறைந்த மனத்துடன் நிமிர்ந்து அந்த மாற்றுத் திறனாளியைப் பார்த்து நன்றி கூறி கம்பீரமாய் நடந்தாள்.