4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

சோழர்கால பெண்களின் நிலை - Miss.P.Sutharshini

 

Miss.P.Sutharshini

Temporary Assistant Lecturer

Department of Hindu Civilization

Eastern University, Sri Lanka

sutharshiniperinpam@gmail.com

சோழர்கால பெண்களின் நிலை

அறிமுகம்

பெண்கள் உலகத்தின் கண்கள் என்னும் நிலையில் வைத்துப் போற்றப்படும் உன்னதமான படைப்பாகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை ஏதொரு துறையில் தங்கள் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றமையை எம்மால் அறியமுடிகின்றது. இன்றைய கால சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு இணையாகச் சிறப்பிடம் பெற்றுக்காணப்படுவதை அவதானிக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் தனது திறமையை வெளிக்காட்டத் தவறியதில்லை.

இன்றைய சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமாகக் காணப்படும் பெண்கள் இதிகாச புராண காலங்களிலும் சிறப்பான இடத்தை வகித்துள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்துசமயத்தில் பெண்கள் உன்னதமான நிலையில் போற்றப்பட்டு வருகின்றமை சனாதன சமயமான இந்துசமயம் சிறப்பு வாய்ந்த சமயம் என்பதை எமக்கு எடுத்தியம்புவதை அறியலாம். இவ்வாறான சிறப்புக்களைப் பெற்றுக்காணப்படும் பெண்கள் இந்துசமயம் பெரு வளர்ச்சி கண்ட காலமாகப் போற்றப்படும் சோழர்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு காணப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையினூடாக அறிந்து கொள்வோம்.

சோழர்காலம் இந்துசமயத்தின் பொற்காலமாகப் போற்றப்படுகின்ற சிறப்பு வாய்ந்த காலமாகும். இற்றைக்குச் சோழர் ஆட்சியானது ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக நடைபெற்றுள்ளது. கி.பி 850-1250வரையான காலப்பகுதியில் சோழ சாம்ராஜ்ஜியம் நிலைபெற்றிருந்தது. சமயம், கலை, இலக்கியம், பண்பாடு, போர் மற்றும் மருத்துவம். பொருளாதாரம் முதலான துறைகள் வளர்ச்சி பெற்ற காலமாகப் போற்றப்படுகின்றது.

சோழர்காலப் பெண்களை அவர்களின் நிலைகளை அடிப்படையாக வைத்து எட்டு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர் வரலாற்றாசிரியர்கள். லெஸ்லி சி.ஆர். எனும் நூலாசிரியர் தனது நூலான தமிழகக் கல்வெட்டுக்களில் பெண்கள்எனும் நூலில் வகைப்படுத்தியுள்ளமையை அவதானிக்கலாம். அரசிகள்,தேவிகள்(சிற்றரசிகள்), பிராமணப்பெண்கள், கோயிற்பெண்கள், அடிமைகள், சமணசமயப்பெண்கள்(சமயபோதிகள்), அடிமைகள், பிறபெண்கள் என்போராவர்.

அரசிகள்

அரசிகள் இக்காலத்தில் சிறப்பான இடத்தை வகித்துள்ளமையைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். அரசிகள் சிறப்பான இடத்தைப் அதிகாரம் பெற்றிருந்தார்களே தவிர ஆட்சியாளர்களாக இருக்கவில்லை என்பதே திண்ணம். இவர்கள் குடும்ப ரீதியில் பரம்பரை பரம்பரையாகச் சொத்துடையவர்களாக இருந்தமையினால் அரச குடும்பங்களிலும் சமூகத்திலும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள்.

இவர்களின் சொத்துடைமை குறித்து லெஸ்லி பின்வருமாறு கூறுகிறார்.

கல்வெட்டுக்களில் காணப்படும் பெண்களின் பெயர்கள் கணவன் அல்லது வேறு ஒரு ஆணின் பெயரால் அடையாளப்படுத்தப்படவில்லை. சாஸ்திரிய செல்வாக்கிற்குட்பட்ட பிராமணப் பெண்களின் பெயர்களும் மனைவிகளாகக் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவில்லை. சொத்துடையவர்களாகவும் சொத்தின் மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விபரிக்கப்பட்டிருக்கிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் சிலர் கொடையளித்தவர்களாகவோ கல்வெட்டில் மையமான நபராகவோ இருப்பது அவர்களது தற்சார்புத்தன்மையையும் அதிகாரத்தையும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

சொத்துரிமை பெற்ற அரசிகள் தங்களுக்குரிய சொத்துக்களைப் பெருமளவு கோயிற்பணிகளுக்காகவும் சமூகப்பணிகளுக்காகவும் செலவிட்டுள்ளனர். இதற்கு செம்பியன்மாதேவியும் குந்தவையும் உதாரணங்களாகும். அவ்வகையில் இராஜராஜனுடைய தமக்கையான குந்தவையின் அறக்கட்டளைகள் வெளிப்படுத்துகின்றன. அவை இராஜராஜ சோழனுடைய பணிகள் பற்றி விபரித்து செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டோடு பெரிய கோயிலில் குறித்து வைக்கப்பட்டுள்ளன.

அரசிகள் மன்னனுக்கு இணையாக ஆட்சியதிகாரத்தைக் பகிர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர். குறிப்பாக 3ம் இராஜராஜசோழனின் மனைவியும் வாணர் குல விளக்கு என்று அழைக்கப்படுபவளுமான புவன முழுதுமுடையாள் என்று சிறப்பிக்கப்படுபவளுமான  அரசி சோழ அரசனோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு ஆட்சி புரிந்துள்ளாள் எனக் கூறப்படுகின்றது. இதற்குச் சான்றாக மேல்வரும் மெய்க்கீர்த்தி வெளிப்படுத்துகின்றது.

உரை சிறந்த தனியனை

உடன் ஆணை பெற்றிடைவாள்

செம்பியன் மாதேவி எனப்பெயர் பெறும் உத்தமசோழ மன்னனின் மனைவி சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணக்குடியிருப்பு தஞ்சையில் ஏற்படுத்தப்பட்டமையும் ஒரு சான்றாகும். சோழனின் மகளான குந்தவையும் பல திருக்கோயில்களுக்குத் தானம் வழங்கியுள்ளாள். அத்துடன் திண்டிவனம் அருகே அமைந்துள்ள தாதாபுரம் எனுமிடத்தில் சிவன், விஷ்ணு முதலானோருக்கான கோயில்களை அமைத்ததோடு சமணக்கோயில்களையும் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சமூக சேவைகளையும் செய்துள்ளமையை அறியலாம். சுந்தரச்சோழ விண்ணகர் ஆதுலர் சாலைஎனும் பெயரில் மருத்துவமனை கட்டி மக்களுக்கான சேவையை வழங்கியுள்ளமையை அறியமுடிகின்றது.

பூதி ஆதிச்ச பிடாரி எனும் அரசி ஒருத்தி திருச்சிக்கு அருகிலுள்ள திருச்செந்துறை எனும் திருக்கோயிலைக் கட்டியதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அரசனுக்குச் செய்யும் மரியாதையை அரசிகளுக்கும் அக்கால சமூகம் வழங்கியுள்ளது. அக்கால மக்களால் அரசனுக்கு சமாதிக்கோயில்கள் அமைத்து வழிபடப்பட்ட மரபு காணப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட கோயில்களில் அரசனது சிலைகள் வைத்து வழிபடப்பட்டன. அச்சிலைகளோடு பட்டத்தரசிகளின் சிலைகளையும் வைத்து வழிபடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அரசனுக்குரிய மெய்க்கீர்த்திகள் எழுதப்பட்ட போது பட்டத்தரசிகளையும் இணைத்து சொல்லப்பட்டமை அக்காலத்தில் அரசிகளுக்கு இருந்த செல்வாக்கினை எடுத்துக்காட்டுகின்றன.

அரச நிர்வாகத்தில் பெண்கள்(அதிகாரிச்சி)

சோழர்காலத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிருந்தனர். அரச அதிகாரிகளாகவும் பணியாற்றியுள்ளனர் என்பதை கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறியமுடிகின்றது. அத்துடன் அவர்களும் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்டதோடு கோயில்களுக்குத் தானம் அளிக்கின்ற தகுதியையும் உரிமையையும் பெற்றிருந்தனர். அதிகாரிகளாகக் கடமையாற்றியவர்களை அதிகாரிச்சிஎனும் பெயர்க்கொண்டு அழைத்துள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றது. திருவையாறு கல்வெட்டு இவர்கள் ஆற்றிய கடமைகள் பற்றி விபரிக்கின்றது. குறிப்பாக இராஜராஜசோழனின் மனைவியான லோகமகாதேவி இட்ட கட்டளையை எருதன் குஞ்சரமல்லி என்னும் அதிகாரிச்சி நிறைவேற்றியதாக இக்கல்வெட்டு விபரிக்கின்றது.

பட்டத்தரசிகளுக்கு அதிகாரிச்சியாக கடமை புரிந்திருக்கின்றார்கள் என அறியமுடிகின்றது. அவ்வகையில் முதலாம் ராஜேந்திரசோழனின் புதல்வனான ராஜாதிராஜன் காலத்தில் சோமயன் அமித்திரவல்லி எனும் பெயருடைய அதிகாரிச்சியும், 2ம் ராஜேந்திரனின் தேவி திரைலோக்கியமுடையாளுக்கு முத்தான பொன் நங்கை எனும் பெயரில் அதிகாரிச்சியும் பணி புரிந்துள்ளனர் என்பதை திருமழப்பாடி கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவற்றுடன் 1ம் குலோத்துங்கன் சோழனின் தேவிக்கு அதிகாரிச்சி பண் செய்துள்ளாள் என திருப்புகழூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

எனவே சோழர்காலத்தின் நிர்வாகமானது ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. பெண்கள் அதிகாரிச்சிகளாகப் பணிபுரிந்துள்ளமையினை நோக்குகின்ற போது சோழர்கால நிர்வாகம் சிறப்பு வாய்ந்ததாக காணப்பட்டுள்ளதை எமக்கு சான்று பகர்கின்றன.

தேவரடியார்

சோழர் காலத்தில் கோயில் திருப்பணிகளுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் தேவரடியார் ஆவர். கோயில் திருப்பணி செய்த தேவரடியார் பலவகையினராகக் கொள்ளப்படுகின்றனர். அரசர் குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் என்பவற்றைச் சார்ந்தவர்கள். இவர்கள் பெருஞ்சொத்துக்களுடன் கோயிற்திருப்பணிகளுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். சமூக நிலையில் சிறப்பான இடத்தினை வகித்திருந்தனர். இதற்கு அவர்களின் அதிகாரிகளின் பட்டப்பெயர்கள் இவர்களின் பெயர்களோடு இணைந்து காணப்பட்டமையே ஆகும்.

உதாரணம் :- நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம்.

ஏழைப்பெண்கள் - ஏழை சமூகத்தைச்சேர்ந்த பெண்களை குடும்பம் பஞ்சம், வெள்ளம் முதலான காரணங்களால் பெண்களை கோயிற்பணிகளுக்காக விற்றுவிடுவார்கள். இதற்குப் பதிலாக நிலங்களைப் பெற்றுக்கொள்வார்கள். சில நேரங்களில் கோயில்களில் பெண்களின் தொகை அதிகரிக்கின்ற போது கொடுக்கப்பட்ட நிலங்கள் பறிமுதலும் செய்யப்படும். இவ்வாறு நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய போராட்டம் ஒன்று சோழர்காலத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போராட்டத்தை ஆதரித்து ஏழைத் தேவரடியார் திருவீதிப்பணிசெய்வோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இச்சந்தர்ப்பத்தில் ஆதரவு கேட்டு சதுர்மாணிக்கம் என்ற பெண் கோபுரத்தின் மீது ஏறி உயிர் விட்டமையும் மக்களுக்கான நீதியும் பெற்றுக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தேவரடியார்களில் நடனமங்கையர்களும் ஒருவராவர். இவர்களில் அரண்மனைகளில் ஆடுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்னொரு சாரார் கோயிற்திருப்பணிகளில் ஈடுபட்டனர். கோயிற் திருப்பணிகளாக, திரு அலகிடுதல், சுத்தம் செய்தல், நெல் குற்றுதல், உணவு பரிமாறுதல் பதிகம் பாடுதல் முதலான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இங்கு பதிகம் பாடுவதற்காக(தேவார திருமுறைகள் ஓதுவதற்கு) மூன்று பெண்கள் ராஜராஜசோழனால் நியமிக்கப்பட்டிருந்தனர் எனத் திருச்சி அருகே உள்ள குமார வயலூர் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் காணப்படும் பராந்தகன் சோழன் காலக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜராஜசோழன் 400 ஆடல் மகளிரைத் தஞ்சைப்பெரிய கோயிலில் திருப்பணிகளுக்காக நியமித்திருந்தான் என அறியமுடிகின்றது. இவர்களைப் பல பெயர்கள் கொண்டு அழைத்துள்ளனர். தளிச்சேரிப்பெண்டுகள், தேவதாசி எனப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. அத்துடன் ஆடலில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய பெண்களுக்குத் தலைக்கோலி எனும் பட்டம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேவரடியார்களில் கணிகையர் எனும் ஒரு பிரிவினரும் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கோயில்களுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர் என்றும் அது நற்காரியங்களுக்குப் பயன்பட்டது என்றும் முகம்மதிய வரலாற்றாசிரியரான அபுசாயித் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.தேவரடியார்கள் வசிப்பதற்கென்று தனியான குடியிருப்புகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும். அவர்கள் குடியிருந்த குடியிருப்பைத் தளிச்சேரி குடியிருப்பு என அழைத்துள்ளனர். இவர்களில் சிலர் திருமணம் செய்தும் வாழ்ந்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

சமூகத்தில் சிறப்பான இடத்தைப் பெண்கள் பெற்றிருந்தாலும் அடிமைகள் என்னும் பிரிவிலும் பெண்கள் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக அடிமைகள் எனும் போது அவர்கள் செய்கின்ற வேலைகளை அடிப்படையாக வைத்து அடிமை என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. அடிமைகள் மூன்று வகையாகக் கொள்ளப்படுகின்றனர்.

·         அரண்மனை அடிமைகள்

·         கோயில் அடிமைகள்

·         வீட்டு அடிமைகள்

பிரிவுகளில் அடிமைகளாக காணப்பட்டுள்ளனர்.           

அரண்மனை அடிமைகள் சோழர்களால் வெற்றிபெறப்பட்ட நாடுகளில் இருந்து பிடித்து வரப்பட்ட பெண்களே அடிமைகளாக வேலை செய்தனர் என இராசேந்திரன் பற்றி விபரிக்கும் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. அரண்மனைகளில் நடனமாடுதல், சாமரம் வீசுதல், சமையல் செய்தல் முதலான பணிகளை ஆற்றினர். இவ்வடிமைகளைப் பெண்டாட்டி என்று அழைக்கின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. சோழர்கால அடிமைகள் பற்றி வரலாற்றாசிரியர்கள் தத்தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றில் சீன யாத்திரிகரான சா-ஜி-குஆ அடிமைகள் பற்றிப் பின்வருமாறு கூறுவதை அவதானிக்கலாம்.

மது அருந்தாத சோழ மன்னனும் நான்கு அவைக்கள அமைச்சர்களும் உணவருந்த மேசைக்கு வரும்போது நாட்டியம் கூறவும் நடனமாடவும் நாள்தோறும் 3000 நடனமாதரை சோழ மன்னர்கள் ஈடுபடுத்தி வைத்திருந்தனர். இவர்கள் தமக்குள் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்தி வேலை செய்தனர்.

தேவரடியார்களாக கோயிலில் பணிகளில் அமர்த்தப்பட்டவர்களில் ஒரு சிலர் அடிமைகளாக இருந்துள்ளனர். இவர்களும் கோயிலில் நெல் குற்றுதல், கோயில் வீதிகளைச் சுத்தம் செய்தல், நடனமாடுதல் முதலான இன்னோரன்ன பணிகளை ஆற்றினர். அவர்கள் பஞ்சம் காரணமாக வந்து சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தானமாக அளித்தல், பரம்பரையாக வந்தவர்கள் மற்றும் தானாக விரும்பி வந்தவர்கள் முதலான காரணங்களால் கோயில் அடிமைகள் என்ற நிலை உருவானது.

அரண்மனை அடிமைக்குள் வீட்டு அடிமைகள் அடங்குவர். அவலங்கள் பொறுக்க முடியாது அடிமைகள் தப்பி ஓடுவதும் பின்னர் அவர்களைத் தேடிப்பிடித்து மீண்டும் பணிகளில் அமர்த்தப்படுகின்ற நிலை அங்குக் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளைக் கல்வெட்டுக்கள் தெரியப்படுத்துகின்றன. திருவாலங்காட்டு கோயில் கல்வெட்டு ஒன்று ஓடிய அடிமைகள் சிலரை தேடிப்பிடித்து மீண்டும் வேலைக்கமர்த்தியமை பற்றிக் குறிப்பிடுகின்றது.

அடிமைகளுக்கு இரட்சினை இடுகின்ற முறைமையும் காணப்பட்டுள்ளது. இம்முறை முற்கால சோழர்காலத்தில் இருந்ததாக அறியமுடிகின்றது. அரச முத்திரை, மற்றும் கோயிலுக்குரிய குலச்சின்னம் முதலான இலட்சினைகள் பொறிக்கப்பட்டன. இவற்றில் அரண்மனை அடிமைகளுக்கு அரச முத்திரைகளும் தேவரடியார்களுக்குக் கோயில் குலச்சின்னங்களும் பொறிக்கப்பட்டன.

முடிவுரை

சோழர்காலத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிருந்தனர் எனக் கூறினாலும் சில இடங்களில் அடிமை வாழ்க்கையும் வாழ்ந்துள்ளனர் என்பதைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறியமுடிகின்றது. குறிப்பாக அசர குடும்ப பெண்கள் மாத்திரமே உரிமைகள் பெற்று வாழ்ந்துள்ளனர் எனலாம். எனினும் அக்காலப்பெண்கள் அரச நிர்வாகத்தில் இன்றைய காலம் போன்று பணியாற்றியுள்ளனர் என்பதை இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அக்காலம் தொட்டு பெண்கள் சற்று தாழ்வான நிலையில் இருந்தாலும் இன்றைய காலத்தை எடுத்துக்கொண்டால் பெண்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளமை பெண்மையின் சிறப்பை எம் அனைவர்க்கும் எடுத்துக்காட்டுகின்றது. 

உசாத்துணைகள்

1.     பத்மநாதன்.சி, “சோழப்பேரரசும் சமயப்பெருநெறிகளும்”, (2009), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

2.     https://roar.media/tamil/main/history/the-devadasis-and-devaradiyals-story

3.     https://www.dinamani.com/editorial-artical/special-srories//2018/oct/26/ அன்று-முதல்-இன்று-வரை-சமூகத்தில்-பெண்கள்-சம-உரிமையுடன்-வாழ்கிறார்களா -3027483.html.