6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

நிறைவான வீடு - அக்ரி.கோ.ஜெயகுமார்

 

 

நிறைவான வீடு

அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலை பேசி எண்: 94869 38900.

 

 

             வெளிநாட்டில் வாழும் பெரியவர் ஒருவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் இரண்டு மகன்களுக்கும்  திருமணம் செய்து விட்டார். மூன்றாவது மகனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வீடு எப்போதும் கல கலப்பாக மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இரண்டு மருமகள்களும் பிறந்த வீட்டிற்குச் சென்றால் விரைவில் திரும்பி வர மாட்டார்கள். மாமனார், மாமியார் சொன்னாலும் அவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து தான் வருவார்கள்.

 

                    அன்றும் இரண்டு மருமகள்களும் பிறந்த வீட்டிற்குச் செல்ல மாமனாரிடம் அனுமதி கேட்டனர். பெரியவரும் போய் வாருங்கள், ஆனால் திரும்பி வரும்போது எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் பிறந்தகத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றார். 

 

            சரிங்க மாமா! என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றனர் இரு மருமகள்களும். ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வர வேண்டும் என முதல் மருமகளிடம் சொன்னார். இரண்டாவது மருமகளிடம் காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார். மாமனார் சொன்னதைக் கேட்டதும் இருவரும் திகைத்தாலும், சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சந்தோஷமாக கிளம்பி விட்டார்கள். தங்களின் பிறந்த வீட்டில் சில நாட்கள் சந்தோஷமாக இருந்தார்கள். புகுந்த வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும் தான் மாமனார் கேட்ட விஷயம் நினைவிற்கு வந்து பயமும் அதிகரித்தது. இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக் கொண்டே நடந்தார்கள். 

 

                   அப்போது வழியில் எருமை மீது சவாரி செய்து கொண்டு வந்த ஒரு பெண் இவர்களின் புலம்பலைப் பார்த்து உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டாள். இருவரும் தங்கள் மாமனார் கேட்டதைக் கூறினார்கள். உடனே அந்த இளம்பெண் இவ்வளவு தானா? கவலைப்படாதீர்கள் என கூறி சிரித்தாள். முதல் மருமகளிடம் ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு என்றாள். இரண்டாவது மருமகளிடம் நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ என்றாள். மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி அடைந்து அந்த பெண்ணிற்கு நன்றி சொல்லி விட்டு அவசர அவசரமாக புறப்பட்டு வீட்டிற்கு சென்று மாமனாரிடம் விசிறியையும், சிம்னி விளக்கையும் கொடுத்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டு விஷயத்தை கேட்டவுடன் இருவரும் வழியில் சந்தித்த இளம் பெண் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

 

              ஆஹா! இவ்வளவு புத்திசாலியான இந்த பெண்ணை என் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சொல்லி அந்த பெண்ணின் பெற்றோரை தேடிக் கண்டு பிடிக்க ஆட்களை அனுப்பி வைத்தார். கண்டு பிடித்து சொன்னதும் சம்பந்தம் பேசி திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார். வீட்டில் அனைத்தையும் மிக்க பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள். பெரியவர் மிக்க மகிழ்ச்சி

அடைந்தார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டிற்கு வெளி வாசலில் இது நிறைவான வீடு என்று ஒரு பலகையில் எழுதி மாட்டி வைத்தார்.

 

                   சில காலம் கழித்து அந்த வழியாக சென்ற ஒரு துறவி இந்தப் பலகையில் எழுதியதைப் படித்தார். யார் இது? இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன் என்று முடிவு செய்தார். வீட்டில் நுழைந்த அந்த துறவியை கடைசி மருமகள் தான் வரவேற்றார். துறவி அவளிடம் இது நிறைவான வீடாமே? அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை சபித்து விடுவேன் என்றார். கண்டிப்பாக நெய்கிறேன் சுவாமி! தாங்கள் சாலையின் இரு முனைகளையும் கண்டு பிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கின்றேன் என்று கூறினாள். அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லை வரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் எவருக்கும் தெரியாது என்பதால் துறவியால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது.

 

                 சரி, வேண்டாம்! கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக்கொண்டு வா என்றார் துறவி. தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்து விடுகிறேன் என்று பணிவோடு கூறினாள் மூன்றாவது மருமகள்.

பாவம்! துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். புத்திசாலியான இந்தப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவை சட்டென்று பிடித்தார். நீ மிகவும் புத்திசாலிப் பெண்ணாக இருந்தாலும், இப்போது இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா அல்லது கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம் என்றார் துறவி.

 

            புத்திசாலியான மருமகள் துறவியை வணங்கி, சுவாமி தாங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. தற்போது வாசலில் நின்று கொண்டிருக்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா? அல்லது தெருவில் இறங்கி நடக்கப் போகிறேனா? என்று சொல்லுங்கள், நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன் என்றாள். துறவி அமைதியாக இருந்தார். துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாத போது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்? என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினாள் மூன்றாவது மருமகள். நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடு தான் என்று வாழ்த்தி விட்டு துறவி தனது பயணத்தை தொடர்ந்தார்.

 

               பொறுமையை விட மேலான தவமுமில்லை.

               திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

              இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

              மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமுமில்லை.

 

           தோல்விகள் சூழ்ந்தாலும், இருளை அகற்றும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் எடுத்து வைப்போம். முடியும் வரை அல்ல! நாம் நம் இலக்கினை அடையும் வரை.

வாழ்த்துக்கள்.

 

 

கருத்துகள் இல்லை: