4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

பழந்தமிழ் இலக்கியங்களில் தாய்தெய்வ வழிபாடு - திருமதி.ருஜானி நிமலேஸ்வரன்

 

பழந்தமிழ் இலக்கியங்களில் தாய்தெய்வ வழிபாடு

திருமதி.ருஜானி நிமலேஸ்வரன்

B.A (Hons), MLS

ஆசிரியை

மட்டக்களப்பு, இலங்கை

மானிடவியலாளர்கள் தாய்வழி சமூதாய அமைப்பே ஆதியானதென்றும், பின்னரே தந்தைவழி சமூதாய அமைப்புத் தோன்றியதென்றும் கூறுவர். தாய்வழி உரிமை தான் பண்டைய சமூக வழக்காறாக காணப்பட்டது. தாய்வழி சமூதாய அமைப்பிலே குடிவழி, உறைவிடமுறை, சொத்துரிமை, நிர்வாகத்தில் அதிகாரமும் தலைமையும் ஆகிய நான்கு முதன்மையான கூறுகள் அதன் அமைப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றன என்கிறார் பக்தவக்சலபாரதி. இக்கூறுகளின் தன்மைகளை பழந்தமிழகத்தில் அவதானிக்க முடிகிறது.

ஆங்கிலேய மானிடவியலாளர் எட்வர்ட் பர்னட் டைலர் பேறுகாலத்தனிமை, சேய்வழி அழைத்தல் ஆகிய இரண்டு கூறுகளின் வழி தாய்வழிச் சமூகமே முதலில் தோன்றிய சமூகம் என்பதை நிறுவுகிறார். சேய்வழிஅழைத்தல் முறையானது தாய்த்தலைமைக் குடும்பமுறையின் எஞ்சி நிலைத்தவையாக இன்றும் பல சமூகங்களில் காணப்படுகின்றது. சங்க காலத்தில் கணசமூகத்திற்கு தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே வம்சாவழி குறிக்கப்பட்டது. இத்தகைய கணசமூகத்தில் தாயே அவளுடைய வம்சத்திற்கு தலைமை ஏற்றிருந்தமையினை பின்வரும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே”(புறம்)

வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்” (புறம்)

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” (புறம்)

என்மகள் ஒருத்தியும் பிறள்மகள் ஒருவனும்மேற்குறித்த பாடல்களில் இன்னாளது மகன் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் பேரிற்பெண்டு, செம்முதுபெண்டு, இற்பொலி மகடுஉ ஆகிய சொற்கள் தாய் கண சமூகத்தில் கொண்டிருந்த உன்னத நிலையையும் உயர்மதிப்பையும் சுட்டிக் காட்டும் தொடர்களாகும்.

இத்தகைய சமூதாய அமைப்பிலிருந்தே தாய்த்தெய்வ வழிபாடு சிறப்புற்றது. பெண்களின் உடலமைப்பு கருவளம், உளவியல் ரீதியாக பெண்களிடம் சார்ந்து நிற்கும் ஆண்களின் மனோநிலை ஆகியவற்றின் காரணமாக பெண்கள் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். மீள்படைப்பாற்றல் பெண்களால் மட்டுமே சாத்தியமானது. எவ்வாறு சந்ததி தொடர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் தாயிலே தங்கியிருக்க வேண்டியிருக்கிறதோ அவ்வாறே உள்ளவை அனைத்திற்கும் அதன் தொடர்ச்சிக்கும் தாய்மை எது என்று ஒப்பிட்டு பிரமாணத்தின் அடிப்படையில் தெய்வங்களும் பெண்களாகவே உருவகிக்கப்பட்டன.

பழந்தமிழகத்தில் பல தெய்வ வழிபாடு இருந்ததாகவும் அவற்றின் மொத்த உருவமே தாய்த்தெய்வ வழிபாடு என்றும் கூறுவர். தாய் உரிமை என்ற பொருளில் ஆய்வு செய்த எ.எம்.எச்.ஏரன்பல்ஸ் என்பவர் பழந்தமிழகத்தில் தாய்த்தாய முறை இருந்திருக்க வேண்டுமெனவும், இதன் காரணமாக தாய்தெய்வ வழிபாடு பழந்தமிழக மக்களிடையே பெருவழக்காயிருந்தது என்று கூறுகின்றார். இயற்கையின் எல்லாவகையான மீள் படைப்பும் தாய்த்தெய்வமாக உருவகிக்கப்பட்டு வணங்கப்பட்டதாக பிறேசர் குறிப்பிடுகின்றார்.

ஆரம்ப காலம் முதல் செழிப்பின் அடையாளமாகவும், வீரத்தின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதனால் பெண் வணக்கத்திற்குரியவளாக கருதப்பட்டாள். வளமை தொடர்பான சடங்குகள் பெண்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதனால் பிற்காலத்தில் பெண்களை வளமையின் குறியீடாக கருதி வழிபட்டனர். இதுவே இந்துமதத்தில் தாய்தெய்வ வழிபாடு தோன்றி வளர்வதற்கு காரணமாக அமைந்தது. தாய்தெய்வ வழிபாடு ஆரம்பிக்கும் சமூதாயத்தின் முதல்நிலைச் சிந்தனைகளை சங்ககால மக்களால் அறியப்பெற்ற கொற்றவை, உமையின் வரவு, சிலப்பதிகாரம் காட்டும் பெண் வழிபாட்டுச்சிந்தனைகள், அன்னையர் எழுவரின் அறிமுகம் என்று தமிழ்ச்சமூதாயத்தால் போற்றப்பட்ட பெண் தெய்வங்களையும் அவற்றின் வழிபாட்டுக் கூறுகளையும் இலக்கியங்களின் துணை கொண்டு காணலாம்.

அந்தவகையில் பழந்தமிழர் இயற்கை ஆற்றலை வணங்கினர். இவ்வாற்றலைப் பின்னாளில் கடவுளராக மாற்றினர். தொடக்கத்தில் மழையாகிய மாரியை வழிபட்டனர். பின்னாளில் தாய்தெய்வங்களின் ஆளுமை விரிந்த போது, வெப்பம், நோய், வளமை இவற்றை மிகுதியாக்குபவளும் குறைப்பவளும் என்ற இரட்டை நிலைத்தன்மையில் மழையாகிய மாரி மாரியம்மன் ஆனது.

பழந்தமிழர் இயற்கையை கண்டு அஞ்சிய மன நிலையிலிருந்து கொஞ்சம் மாறி இயற்கைப் பொருட்களான காடும் மலையும் மரங்களும் நீர்நிலைகளும் அச்சம் தரத்தக்கன அல்ல என்றும் இயங்கும் இயக்கும் ஏதோ ஒன்று அதில் உறைகின்றது அதுவே நாம் அஞ்சத்தக்கது என்றும் கருதினர். அச்சம் தரும் அந்த இயற்கை ஆற்றலை சூர் என்றும் அணங்கு என்றும் குறிப்பிட்டனர். உருவம் இனங்காண இயலாத நிலையில் சூரும் அணங்கும் காலப்போக்கில் பெண்தெய்வங்களாகக் கருதப்பட்டன. சூர் என்பது சூர்மகள் என்றும் அணங்கு என்பது அரமகளிர், ஆரரமகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது.

மலைகளில் தெய்வங்கள் உறைவதாக மக்கள் நம்பினர். அணங்குடை நெடுவரை’, ‘அணங்குடைக் கவா அன்’, ‘கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங்குன்றம்’, ‘அணங்குடை வரைப்புமுதலான சொல்லாட்சிகள் இதற்கு சான்றாக அமைகின்றன. அருந்தெறல் மரபின் கடவுள் காப்ப….அணங்குடை வரைப்பு’, ‘அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்பெருங்கல் நாடன்”, என வரும் பாடல் அடிகளால் இத்தெய்வங்கள் மலைகளின் காவல் தெய்வங்கள் என்பது புலனாகின்றது. மலையிலுள்ள இத்தெய்வங்களுக்கு மக்கள் பலியிட்டு வழிபட்டதை சங்கப்பாடல்களினூடாக அறியலாம்.

அணங்கும் சூரும் பிற்காலத்தில் கானமர்செல்வி, காடுடைகடவுள் என்றழைக்கப்பட்டு பின்னர் பெருங்காட்டு கொற்றி ஆகிப் பின்னர் கொற்றவையாகவும் மாற்றம் பெற்றது.பழந்தமிழ் இலக்கியங்கள் பல கொற்றவை வழிபாடு பற்றி கூறுகின்றன. கொற்றவை பாலை நிலத்தெய்வமாக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்டுகிறாள். கொற்றவை எனும் சொல் வெற்றித் தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகும். இதனால் வெற்றி வெல்போர்க் கொற்றவைஎனப் புகழப்படுகிறாள்.

பாலைநிலத்து எயினர் ஆநிரை கவர்தல் போரில் வெற்றியைப் பெற கொற்றவையை வழிபட்டதாக அக்கால இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையமாகும். எயினர் வணங்கும் தெய்வம் என சிலப்பதிகார வேட்டுவவரி கூறுகின்றது.

கொற்றவையே காளி என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளி வழிபாடு பற்றி கலிங்கத்துப்பரணியில் காடு பாடியது, தேவி பாடியது என்னும் பகுதிகளில் கூறப்படுகின்றது. பழந்தமிழக இலக்கியங்கள் கொற்றவையின் சிறுவனென முருகனை குறிப்பிடுவது அங்கு தாய்த்தெய்வ வழிபாடும், தாய்வழி உரிமைச் சமூதாய முறையும் நிலவியதென உறுதிபடக் கூறுகின்றது.

கொற்றவை வழிபாடு சிலப்பதிகாரத்திலும் சொல்லப்படுகின்றது. கொற்றவை கோயில் ஐயைக்கோட்டம் என அழைக்கப்படுகிறது. கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, திங்கள் வாழ்சடையாள் முதலான பெயர்களில் கொற்றவையை குறிப்பிடும் இளங்கோவடிகள் சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவைஎன்கிறார்.

குறுந்தொகையில் சூலி என்ற தெய்வம் மலைக் குகைகளில் வசிப்பதாகவும் ரௌத்திர இயல்புடையதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விடர்முகை அடுக்கத்து விறள்கொள் சூலிக்கும் கடனும் பூணாம் கைநூல் யாவாம்என்று வர்ணிக்கின்றது.

கொல்லி, கொல்லிப்பாவை ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் பெண் தெய்வ வழிபாடும் சங்ககால வழக்கில் காணப்பட்டது என்பதை அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றிலிருந்து அறியலாம்.

பெரும் பூண் பொறையின் பேஎம் முதிர்கொல்லிக்கு

கருங்கட் தெய்வம் குடவரை எழுதியதல் இயல்பாவை” (குறுந்தொகை)

செவ்வேர்ப் பலவின் பயம் கொழு கொள்ளித்தெய்வம்

காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு (நற்றிணை)

ஆகிய வர்ணனைகளிலிருந்து இத் தெய்வம் மலைகளை வசிப்பிடமாகக் கொண்டதும் கருமையான கண்களையுடயதுமான காவல் தெய்வமாக கருதப்பட்டிருக்க வேண்டும.; பழந்தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்தில் அயிரை என்ற தெய்வம் பற்றி குறிப்பிடப்படுகின்றது. நிறம்படு குருதி புறம்படின் மடை எதிர்கொள்ளா அச்சுவரின் மரபின் கடவுள் அயிரையின் நிலைஇ

பழந்தமிழகத்தில் தாய்த்தெய்வங்கள் வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டன பகைவர்கள் வட திசையிலிருந்து வருவார்கள் என்பதால் தெய்வங்கள் வடக்கு நோக்கி இருந்தன. இத்தாய் தெய்வங்களை காடு, மலை, நீர் நிலகளிலும் வைத்து வழிபட்டனர். பழங்காலத்தில் தாய்த்தெய்வ வழிபாடு வெறியாட்டு மூலம் நடந்துள்ளது. அகநானூற்று பாடலொன்றில் கட்ல கெழு செல்விக்கு ஆடு மகள் ஒருத்தி வெறியாட்டு நிகழ்த்தியதை விபரிக்கின்றது.

வெறிகொள்பாவையிற் பொலிந்த வென்

அணிதுறந்து ஆடுமகன் சோலப்பெயர்தல்

தாய்த்தெய்வங்களுக்கு பூப்பலி செய்தல் பழந்தமிழரிடையே காணப்பட்டது. இதனை ஆர்கலி விழவுக் களம் கடுப்ப நாளும் விரவுப் பூம்பலியொடு விரைஇ அடனனை கயுடைஎன்ற தொடர்களால் அறியலாம்.

பொங்கலிடுதல் தாய்த்தெய்வ வழிபாட்டின் முக்கிய அம்சமாகும். அணங்கு சூர் முதலிய தெய்வங்களுக்கு பலியிட்டு வழிபாடு இயற்றியுள்ளனர். இதனை தெய்வம் சேர்ந்த பராரை வேம்பிற் கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்ப புலவும் புழுக்குண்ட வான்கண் அகலிறைஎன்பதால் அறியலாம்.

பழந்தமிழகத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்துள்ளதோடு அவற்றின் மொத்த உருவமே தாய்த்தெய்வ வழிபாடாகும். இயற்கையின் எல்லாவகையான மீள் படைப்பும் தாய்த்தெய்வமாக உருவகிக்கப்பட்டு வணங்கப்பட்டதனை பழந்தமிழ் இலக்கியங்களின் ஊடாக அறிய முடிகின்றது. தாய்த்தெய்வ வழிபாடு ஆரம்பிக்கும் சமுதாயத்தின் முதல்நிலைச்சிந்தனைகள், சங்ககால மக்களால் அறியப்பெற்ற கொற்றவை, உமையின் வரவு, சிலப்பதிகாரம் காட்டும் பெண் வழிபாட்டுச் சிந்தனைகள், அன்னையர் எழுவரின் அறிமுகம் என்று தமிழ்ச் சமுதாயத்தால் போற்றப்பட்ட பெண் தெய்வங்களையும் அவற்றின் வழிபாட்டுக் கூறுகளையும் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு காண முடிகின்றது.

உசாத்துணை நூல்கள்

1.       கைலாசபதி,க., பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், (1999), குமரன் புத்தக இல்லம், கொழும்பு

2.       தேவநேயப்பாவாணர், ஞா., பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், (2017), நாம் தமிழர் பதிப்பகம், சென்னை

3.       பசாம், ஏ. எல், வியத்தகு இந்தியா, (2005), விடியல் பதிப்பகம், கோவை.

4.       புறநானூற்றுச் சொற்பொழிவுகள், (1944), தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிவுக்கழகம், திருநெல்வேலி

5.       மீனாட்சி சோமசுந்தரம், மெ., சங்க இலக்கியக் கட்டுரைகள், (2007), மெய்யப்பன் பதிப்பகம், சென்னை

6.       மௌனகுரு,சி., பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும், (2005), அலைகள் வெளியீட்டகம்.