4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பியம்-நன்னூல் வினைமுற்று விகுதிகள் - அ.அருணா தேவி

 

ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பியம்-நன்னூல் வினைமுற்று விகுதிகள்

.அருணா தேவி

முதுகலை இரண்டாமாண்டு

இலக்கியத்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

முன்னுரை

            தமிழ் இலக்கணங்கள் சொற்களை முதன்மையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றன. அவை பெயர்ச்சொல், வினைச்சொல் என்று வழங்கப்படுகின்றன. அவற்றைச் சார்ந்து இடைச்சொற்களும் உரிச்சொற்களும் அமையும் என்றும் விளக்குகின்றன.

            சொல்லெனப் படுப பெயரே வினையென்று

            ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே                                       (தொல்.சொல்.158)

என்றும்

            இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்

            அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப                            (தொல்.சொல்.159)

என்றும் தொல்காப்பியம் இவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே, சொற்கள் நான்கு வகைப்படும் என்றும் அவற்றுள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் முதன்மையானவையாக விளங்குகின்றன என்றும் இலக்கணங்கள் சுட்டுகின்றன. பெயர்ச்சொல் பொருளைக் குறிப்பது. வினைச்சொல் என்பது முக்காலங்களாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றுள் ஒன்றனைப் பெற்றுச் செயலினைக் குறித்து வரும். அத்துடன், திணை, பால், எண், இட விகுதிகளையும் பெற்றுவரும். இக்கட்டுரை தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடும் வினைமுற்று விகுதிகளைப் பற்றி ஒப்பிட்டு விளக்குகிறது.

வினைச்சொல் விளக்கம்

            வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

            நினையுங் காலைக் காலமொடு தோன்றும்                                    (தொல்.சொல்.198)

என்று தொல்காப்பியம் வினையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. வினை, பெயர் முதல் விளி வரையிலான எட்டு வேற்றுமைகளையும் ஏற்காது. வினையில் காலம் மட்டுமே தோன்றும். வினை ஒரு செயலைக் குறிப்பதால் அது காலத்தை மட்டுமே காட்டுகிறது.

            வினைச்சொல் காட்டும் காலம் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இருக்கும் என்று தமிழ் இலக்கணங்கள் குறிப்பிடுகின்றன. காலத்தை வெளிப்படையாகக் காட்டுபவை தெரிநிலை வினைகள் என்றும் குறிப்பாகக் காட்டுபவை குறிப்பு வினைகள் என்றும் சுட்டப்படுகின்றன. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறன் விளக்கத்தையும் தருவது தெரிநிலை வினையாகும். பொருள், இடம், சினை, காலம், பண்பு, தொழில் ஆகிய ஆறனுள் ஏதேனும் ஒன்றை மட்டும் பெற்று வருவது குறிப்பு வினையாகும்.

வினைச்சொல் பகுப்பு

            வினைச்சொற்கள் உயர்திணை வினை, அஃறிணை வினை மற்றும் விரவு வினை என மூவகைப்படும் என்று தொல்காப்பியம் பகுத்துள்ளது. இதனை,

            குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்

            காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்

            உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்

            ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

            அம்மூ உருபின தோன்ற லாறே                                              (தொல்.சொல்.201)

என்னும் நூற்பாவின் வழிக் குறிப்பிடுகிறது. விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உயர்திணை, அஃறிணை, அவை இரண்டிற்கும் பொதுவாகிய விரவுவினை என்று பிரித்து அவற்றுள் தெரிநிலை மற்றும் குறிப்பு ஆகிய இரண்டையும் அடக்கியுள்ளது. தொல்காப்பியம் விரவுவினை என்று பகுத்துள்ளதை நன்னூல் பொதுவினை என்று குறிப்பிடுகிறது.

மூவிடமும் வினைப்பகுப்பும்

            மொழியில் மூவிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை அடியொற்றியும் வினைமுற்றுகள் பகுக்கப்பட்டுள்ளன. அவை,

1.      தன்மை வினைமுற்றுகள்

2.      முன்னிலை வினைமுற்றுகள்

3.      படர்க்கை வினைமுற்றுகள்

என்பவனவாகும்.

வினைமுற்று விகுதிகள் ஒப்பீடு

            வினைச்சொல்லில் கருத்து முற்றுப் பெற்றிருப்பின் அதனை முற்றுவினை என்று அழைப்பர். இது வினைமுற்று என்றும் வழங்கப்படும். அவற்றுள் தன்மை வினைகளைத் தொல்காப்பியம் உயர்திணை வினையிலும் நன்னூல் பொதுவினையிலும் அடக்கியுள்ளன. இரண்டும் தன்மை வினைமுற்று விகுதிகளைப் பன்மை, ஒருமை என்று இரண்டாகப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளன.

 

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள்

            அவைதாம்

            அம்ஆம் எம்ஏம் என்னும் கிளவியும்

            உம்மொடு வரூஉம் கடதற என்னும்

            அந்நாற் கிளவியோடு ஆயெண் கிளவியும்

            பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே                              (தொல்.சொல்.202)

என்று தொல்காப்பியம் தன்மைப் பன்மை விகுதிகளைப் பட்டியலிடுகிறது. அம், ஆம், எம், ஏம் என்னும் நான்கும் , , , ஆகிய நான்குடன் உம்மை சேர்ந்து வரும் நான்கு விகுதிகளும் என எட்டு விகுதிகள் தன்மைப் பன்மைக்கு உரியவை. இவற்றுக்குச் சான்றுகளாக, உரைப்பம், அஞ்சினாம், அஞ்சினெம், அஞ்சினேம், உண்கும், உண்டும், வருதும், சேறும் ஆகியவை அமைகின்றன. இதற்கு இணையாக நன்னூல்,

            அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்

            எம்ஏம் ஓம் இவை படர்க்கை யாரையும்

            உம்மூர் கடதற இருபா லாரையும்

            தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை                                (நன்.332)

என்று ஒன்பது விகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது. தன்னோடு சேர்த்துப் பிறரையும் குறிப்பது தன்மைப் பன்மை எனப்படும். நன்னூல் கூற்றுப்படி, அம், ஆம் ஆகிய இரண்டும் தன்னோடு சேர்த்து முன்னிலையில் உள்ளவரையும் எம், ஏம், ஓம் ஆகிய மூன்றும் தன்னோடு சேர்த்துப் படர்க்கையில் உள்ளவரையும் கும், டும், தும், றும் ஆகிய நான்கும் இருபாலாரையும் குறிக்கும்.

            இவற்றுள் ஓம் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் பட்டியிலில் இடம்பெறவில்லை. ஆனால், செய்யுளில் மட்டுமே பயின்று வரும் என்று ஓரிடத்தில் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நன்னூல், இதனை முதன்மை விகுதிகளில் ஒன்றாகவே கருதியுள்ளது. இவ்விகுதி தன்னோடு சேர்த்துப் படர்க்கையாரையும் உளப்படுத்துகிறது. அக்கால மொழி வழக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் நன்னூல் இந்த விகுதியை ஒன்றாகக் கருதியுள்ளது எனலாம். இதற்குச் சான்றாக, வந்தோம், சென்றோம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தன்மை ஒருமை வினைமுற்று

            தொல்காப்பியம் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளை

            கடதற என்னும்

            அந்நான்கு ஊர்ந்த குன்றிய லுகரமோடு

            என்ஏன் அல்லென வரூஉம் ஏழும்

            தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே                                   (தொல்.சொல்.203)

என்னும் நூற்பாவின் வழிக் குறிப்பிடுகிறது. இதன்படி, , , , என்னும் நான்கு எழுத்துகளுடன் உகரம் சேர்ந்து கு, டு, து, று என வரும் நான்கு ஈறுகளும் என், ஏன், அல் என வரும் மூன்று விகுதிகளும் தன்மை ஒருமையைக் குறிக்கும் வினைமுற்றுகளாகும். இவற்றுக்குச் சான்றாக, உண்கு, உண்டு, வருது, சேறு, உண்டனென், உண்டேன், உண்பல் ஆகிய சொற்கள் அமைகின்றன.

தன்மை ஒருமை பற்றி நன்னூல்,

            குடுதுறு என்னும் குன்றிய லுகரமோடு

            அல்அன் என்ஏன் ஆகிய ஈற்ற 

            இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை                         (நன்.331)

என்னும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளது. குற்றியலுகர ஈறுகளான கு, டு, து, று ஆகிய நான்கு விகுதிகளைக் கொண்ட வினைமுற்றுகளும் அல், அன், என், ஏன் ஆகிய நான்கு  விகுதிகளைக் கொண்ட வினைமுற்றுகளும் தன்மை ஒருமை வினைமுற்றுகளாகும். தொல்காப்பியத்தில் இடம்பெறாத அன் என்னும் வினைமுற்று விகுதி நன்னூலில் இடம்பெற்றுள்ளது. ஏனையவை யாவும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்குச் சான்றாக, வந்தனன் என்னும் சான்று அமைகிறது. இதுவும் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றத்தின் விளைவாக நன்னூலில் இடம்பெற்றுள்ளது.

முன்னிலை வினைமுற்று விகுதிகள்

தனக்கு முன்னிலையில் இருக்கும் ஒருவரைக் குறித்து வரும் வினைகள் முன்னிலை வினைகளாகும். முன்னிலை வினைமுற்று விகுதிகள் தொல்காப்பியத்தில் விரவு வினையிலும் நன்னூலில் பொது வினையிலும் இடம்பெறுகின்றன. இவையும் ஒருமை, பன்மை என்று இரு பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளன.

            தன்மை ஒருமை விகுதிகளைப் பற்றித் தொல்காப்பியம் கீழ்க்காணும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளது.

            அவற்றுள்

            முன்னிலைக் கிளவி

            இஐ ஆய்என வரூஉம் மூன்றும்

            ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்                                  (தொல்.சொல்.223)

 இகரம், ஐகாரம், ஆய் ஆகியவற்றை ஈறாக உடைய வினைமுற்றுச் சொற்கள் முன்னிலை ஒருமை வினைமுற்றுகளாகும்.

.கா.: உரைத்தி, உண்டனை, உண்டாய்

இது பற்றி நன்னூல் கீழ்க்காணும் நூற்பாவில் விளக்குகிறது.

            ஐஆய் இகர ஈற்ற மூன்றும்

            ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்

            முப்பால் ஒருமை முன்னிலை மொழியே                           (நன்.335)

என்னுமிடத்தில் தொல்காப்பியம் சுட்டும் ஈறுகளுடன் ஏவல் வடிவங்களும் முன்னிலை ஒருமை என்று குறிப்பிடுகிறது.

முன்னிலைப் பன்மை வினைமுற்று

            முன்னிலையில் வரும் பன்மையைக் குறிப்பிடும் விகுதிகள் இதனுள் அடங்கும். தொல்காப்பியம்,

            இர்ஈர் மின்னென வரூஉம் மூன்றும்

            பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்

            சொல்ஓர் அனைய என்மனார் புலவர்                                                (தொல்.சொல்.224)

என்னும் நூற்பாவில் விளக்குகிறது. இர், ஈர் என்னும் ஈறுகளை உடைய வினைமுற்றுகள் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாகும். மேலும், மின் ஈற்றினைப் பெற்று வரும் வினைமுற்றுகள் எதிர்காலத்தை உணர்த்தும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாகும்.

.கா.: உண்டனிர், உண்டீர், உண்மின்.

இவற்றுள் உண்மின் என்பது எதிர்காலம் குறித்து வந்தது. நன்னூலில்

            இர்ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப்

            பன்மை முன்னிலை மின்அவற்று ஏவல்                            (நன்.337)

என்று விளக்குகிறது. இர், ஈர் ஆகிய இரண்டு விகுதிகளை இறுதியில் உடைய சொற்கள் இருதிணை யாகிய உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிற்கும் பொதுவான முன்னிலைப் பன்மை வினைமுற்றாகும்.

            மின் என்பதைத் தொல்காப்பியம் பொதுவாகக் குறிப்பிட, நன்னூல் இதனைப் பன்மையில் வரும் ஏவல் என்று குறிப்பிடுகிறது.

படர்க்கை வினைமுற்று விகுதிகள்

படர்க்கை என்பது தன்மையையும் முன்னிலையையும் குறிக்காமல் படர்க்கையாரைக் குறிப்பிடுவதாகும். படர்க்கையில் உயர்திணையில் அடங்கும் ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் அஃறிணையில் அடங்கும் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் இடம்பெறும்.

            தொல்காப்பியம் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டன் விகுதிகளையும் ஒரே நூற்பாவில் சுட்டியுள்ளது.

            அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும்

            ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே                              (தொல்.சொல்.205)

            அன், ஆன், என்னும் விகுதிகளை ஈற்றில் உடைய படர்க்கையில் ஆண்பாலைக் குறிப்பனவாகும்.  அள், ஆள் என்னும் விகுதிகளை ஈற்றில் உடைய படர்க்கையில் பெண்பாலைக் குறிப்பனவாகும். 

.கா.: வந்தனன், வந்தான், வந்தனள், வந்தாள்

நன்னூல், இதனை இரண்டு நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளது.

            அன்ஆன் இறுதிமொழி ஆண்பால் படர்க்கை                                  (நன்.325)

அன், ஆன் ஆகிய இரண்டு ஈறுகளையும் கொண்ட வினைமுற்றுகள் ஆண்பால் படர்க்கையில் வரும்.

            அள்ஆள் இறுதிமொழி பெண்பால் படர்க்கை                                  (நன்.326)

அள், ஆள் ஆகிய இரண்டு ஈறுகளையும் கொண்ட வினைமுற்றுகள் பெண்பால் படர்க்கையில் வரும். படர்க்கை ஆண்பால் மற்றும் பெண்பால் விகுதிகளில் தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை.

படர்க்கைப் பன்மை வினைமுற்று

            படர்க்கைப் பன்மை வினைமுற்று விகுதிகளைத் தொல்காப்பியம் கீழ்க்காணும் நூற்பாவில் விளக்கியுள்ளது.

            அர்ஆர் பவென வரூஉம் மூன்றும்

            பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே                          (தொல்.சொல்.206)

அர், ஆர், ஆகிய ஈறுகளை உடைய வினைமுற்றுகள் பல்லோர் படர்க்கை வினைமுற்றுகளாகும்.

.கா.: உண்டனர், உண்பார், உன்ப

            மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

            காலக் கிளவியோடு முடியும் என்ப                                        (தொல்.சொல்.207)

            மார் என்னும் சொல்லை ஈறாக உடைய வினைமுற்று விகுதி பல்லோர் படர்க்கையைக் குறிக்கும். மார் ஈற்றுச் சொல் பெயரினை ஏற்காது வினையை மட்டும் ஏற்கும்.

.கா.: எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார்.

நன்னூல் இதனை,

            அர்ஆர் பவ்வூர் அகரம் மாரீற்ற

            பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே                (நன்.327)      

என்னும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் வினைமுற்று விகுதிகளையே நன்னூலும் குறிப்பிட்டுள்ளது.

            அஃறிணை படர்க்கையில் பலவின்பால் பற்றித் தொல்காப்பியம் கீழ்க்காணும் நூற்பாவில் விளக்குகிறது.

            அஆ வவென வரூஉம் இறுதி

            அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை                               (தொல்.சொல்.216)

            அகரம், ஆகாரம் மற்றும் வகரத்தை ஈறாக உடைய வினைமுற்றுகள் பலவின்பால் வினைமுற்றுகளாகும்.

.கா.: தொக்கன, உண்ணா, உண்குவ.

நன்னூல் இதனை

            அஆ ஈற்ற பலவின் படர்க்கை

            ஆவே எதிர்மறைக் கண்ணது ஆகும்                                      (நன்.329)

என்று சுட்டுகிறது.

            ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த

            குன்றிய லுகரத்து இயற்கை ஆகும்                                        (தொல்.சொல்.216)

            , , என்னும் எழுத்துகளுடன் உகரம் ஊர்ந்து து, று, டு என ஆகும். இவற்றை இறுதியாக உடைய வினைமுற்று விகுதிகளே ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது.

.கா.: வந்தது, உண்டன்று, குண்டுகட்டு

நன்னூல் இதனை

            துறுடுக் குற்றிய லுகர ஈற்ற

            ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பின் ஆகும்                              (நன்.328)

என்று குறிப்பிட்டுள்ளது. இது தொல்காப்பியத்துடன் பொருந்துகிறது. எனினும், து, று வினைமுற்று விகுதிகள் தெரிநிலைக்கும் டு ஈற்று வினைமுற்றுக் குறிப்பு வினைமுற்றுக்கும் வரும் என்று நன்னூல் பகுத்து விளக்குகிறது.

            தொல்காப்பியம் வினைமுற்றுகளை உயர்திணை, அஃறிணை, விரவுவினை என்று திணையின் அடிப்படையில் பிரித்து அவற்றுள் தெரிநிலை மற்றும் குறிப்பு வினைகளை விளக்கியுள்ளது.

            நன்னூல் வினைமுற்றுகளைத் தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்று பிரித்து அவற்றுள் உயர்திணை, அஃறிணை வினைகளை விளக்கியுள்ளது.

            இது தொல்காப்பியமும் நன்னூலும் வினைகளைப் பாகுபடுத்துவதில் காணப்படும் முதன்மை வேறுபாடாகும். மேலும், நன்னூலில் அக்கால வழக்கிற்கு ஏற்பச் சில விகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் ஒப்பீட்டின் வழி அறியமுடிகிறது.

முடிவுரை

            ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பியம்-நன்னூல் வினைமுற்று விகுதிகள் என்னும் தலைப்பில் இரண்டு நூல்களுக்கும் உள்ள வினைமுற்று விகுதிகள் தொடர்பான ஒற்றுமை, வேற்றுமைகள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. அவை, தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் தலைப்புகளில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.

கருவி நூல்கள்

1. தொல்காப்பியம்-சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, சாரதா பதிப்பகம், 2012.

2. நன்னூல்-சொல்லதிகாரம், திருஞான சம்பந்தம் உரை, கதிர் பதிப்பகம், 2009