4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

தமிழகக் கோயில்களில் அரிய வகை மீன் குறியீடுகள் - முனைவர் சித்ரா, ஹாங்காங்

 

தமிழகக் கோயில்களில் அரிய வகை மீன் குறியீடுகள்

(Rare fish symbols on Tamil Nadu Temples)

முனைவர் சித்ரா, ஹாங்காங்

அறிமுகம்

குறியீடு என்பது வீடுகள், செல்லும் பாதை ஓரங்கள், வேலை செய்யும் இடங்கள், பொருள் வாங்கச் செல்லும் இடங்கள், சுற்றுலாச் தலங்கள் என்று அனைத்து இடங்களிலும் ஒரு பொருளை உணர்த்த அல்லது குறிக்க பயன்படுத்தப்படும் வடிவங்கள். 

குறியீடுகள் பண்டைய நாகரிக காலங்களிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் அனைத்து நாகரிகங்களிலும் மீன் குறியீடு முக்கிய இடம் வகிக்கின்றது.

மெசபடோமியா, மற்றும் சுமேரியா, நாகரிங்களில், கடவுளர்களை மீன்னோடு இணைத்தே உருவகப்படுத்துவதிலிருந்து அந்த இனத்தவர்கள் மீன்களுக்குத் தரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. சிந்து வெளி நாகரிகத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முத்திரைகளில், மூன்று வகை மீன் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். கீழடி நாகரிக அகழ்வாய்வு நிலத்திலிருந்தும் மீன் குறியிட்ட மண் ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.


அப்கலு, மெசபடோமியா

(பொ.ஆ.மு 3500-500)

அனுநாக்கி, சுமேரியா

(பொ.ஆ.மு 5000-1750)

சிந்து வெளி

(பொ.ஆ.மு 1500-500)

கீழடி

(பொ.ஆ.மு 600)

 

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. களப்பணி ஆய்வின் போது, பல்வேறு புடைப்புச் சிற்பங்களை சுவர்களிலும், மூலக் கருவறை உட்கூரைகளிலும், மண்டப உட்கூரைகளிலும், மண்டபத் தூண்களிலும் எண்ணிறந்த வடிவங்களை50க்கும் மேற்பட்ட கோயில்களில்காண முடிந்தது. இந்தக் கட்டுரை அப்படிக் காணப்பட்ட வடிவங்களில் மீன்களை குறித்த செய்திகளை மட்டும் தர உள்ளது.

குறியீட்டுக் கோட்பாடு

மூலக் கருவறைகளில் இருக்கும் தெய்வங்களுக்கு மேலதிகமாக வடிக்கப்பட்ட சிற்பங்கள் அலங்காரத்திற்கு மட்டுமே இருக்கின்றன என்ற நோக்கத்தோடு மட்டுமல்லாமல், அவை அன்றைய சமூதாயத்தினரின் நம்பிக்கைகளை எடுத்துக் காட்டும் குறியீடுகளாகக் கொண்டு நோக்கினால், பல்வேறு ஊகங்களையும் செய்திகளையும் அறியும் வாய்ப்பு கிட்டும்.

ஓர் ஆய்வில், கருப்பொருளைப் பற்றிய பல்வேறு கோணத்திலான பின்புலச் சிந்தனைகளை முன் கூட்டியே ஆய்வாளரிடத்திலே ஏற்படுத்தும் ஆற்றல் கோட்பாட்டிற்கு உண்டு. (Lawrence Neuman, 2007, 24).

இரண்டையும் இணைத்து குறியீடு கொண்ட கோட்பாடுகளை வெளிக்கொணர்வதே குறியீட்டுக் கோட்பாடு எனப்படுகிறது. குறியீட்டு கோட்பாடு, பல துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மொழி, மொழியியல், பண்பாடு, சமூகவியல் போன்ற துறைகளில் சிறப்பான இடம்பெறுகிறது என்றே சொல்லலாம்.  தன்னிலைப்பாடும் செயல்பாடும் கொண்ட எந்த ஒன்றும் குறியீடாகச் செயல்படும் என்பதே குறியீட்டுக் கோட்பாடு. (Albert Sebeok, 1994,3).

மேற்கத்திய ஆய்வாளர்கள் குறியீட்டுக் கோட்பாடு பிளாட்டோ (பொ.ஆ.மு. 427-347), அரிஸ்டாடில் (பொ.ஆ.மு 384-322) காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். (Umberto, 1979, 78). ஆயினும் அங்கே 17ஆம் நூற்றாண்டில் தான் அக்கோட்பாடு பிரபலப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு முன்பே, ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில், பல ஆயிரம் ஆண்டுகளாக குறியீடுகள் இருந்திருக்கின்றன.

மேலும் குறியீடு பல்வேறு கோணங்களில் காணப்படும் போது பல விதமான விளக்கங்களையும் உருவாக்கம் செய்கிறது. சில வேளைகளில், ஒரு குறியீடு குறித்த விளக்கமானது இக்குறியீட்டுப் பொருளைப் பற்றிய உண்மை விளக்கத்தையும் கடந்து, புதிய பல விளக்கங்களையும் முன் வைக்க ஆய்வாளருக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுக்கின்றது (Albert Sebeok, 1994, 34). ஒரு ஆய்வில் ஆய்வுக் பொருளின் விளக்கங்களை எளிதில் கொணர உறுதுணை புரிவதே குறியீட்டுக் கோட்பாடின் செயல்பாடாகும் என்பர். (Parera, 2004, 9). மேலும் குறியீட்டுக் கோட்பாட்டில் முன் வைக்கப்படும் விளக்கங்கள் யாவும் பிற குறிப்புகளால் ஆதாரப்படுத்தப்படுதல் மிக முக்கியமாகும்.  அவ்வாறு இல்லையெனில் குறியீட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பொருளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் யாவும் பொருளற்றதாகக் கருதப்படும். (Peirce, 1985, 18).

பண்பாட்டுக் குறியீடு பண்பாட்டுவியல் கூறுகளை எடுத்துக் காட்டும் (Hodge, 1998, 132). பண்பாட்டுக் குறியீட்டுக் கோட்பாடு, இதன் அடிப்படையில் ஒரு இனத்தில் நிகழும் செயல்பாடுகள், பயன்படுத்தப்படும் பொருள்கள், குறியீடுகள் ஆகியன எவ்வாறு அந்த இனத்தின் பண்பாட்டுக் கூறுகளாக மாறுகின்றன என்பதனை அறிய குறியீட்டுக் கோட்பாடு பெரும் துணை புரிவதாக அமைகிறது.” (Rajantheran, Sillalee, 2015, 12-25). இதன் வழி, பண்பாட்டுக் குறியீடு ஓர் இனத்தின் பண்பாட்டை அடையாளம் காண்பதில் எத்துணை முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை அறிய முடிகின்றது. இந்தக் கோட்பாட்டினைக் கொண்டு சமூகத்தில் நிகழும் செயல்பாடுகளைக் குறியீடாகக் காணும் போது, அதில் உள்ள தெரிநிலை விளக்கங்களோடு, புதைநிலை விளக்கங்களையும் கண்டறியலாம். (Albert Sebeok, 1994, 3).

தமிழகப் பண்பாட்டில் பரவலாக இடம் பெற்றிருக்கும் மீன் குறியீடுகளில் இருக்கும் அத்தகைய தெரிநிலை விளக்கங்களையும் புதைநிலை விளக்கங்களையும் இந்தக் கட்டுரை ஆய்வு சார்ந்து விளக்க உள்ளது.

மீன் குறியீடுகள்

வடக்கிலிருந்து தெற்காக சென்னை முதல் கும்பகோணம் வரை, கிழக்கிலிருந்து மேற்காக சென்னை முதல் பெங்களுரு வரை உள்ள, களப்பணி ஆற்றிய 50க்கும் அதிகமான கோயில்களில், 30க்;கும் மேற்பட்ட கோயில்களில் மீன் குறியீடுகளை உட்கூரைகளில் காண முடித்தது. அதிலும் சிறிதும் பெரிதுமாக அங்கு காணப்பட்ட மீன்கள் பலதரப்பட்டவை.


இந்த மீன்கள் இன்று நாம் அன்றாடம் காணும் மீன்கள் என்று கண்டறியப்பட்டது. இவற்றில் மிகவும் அரிய அருகி வரும் மீன் இனம் கோயேலகான்த் (coelacanth) என்னும் வகை. இது இந்தியப் பெருங்கடலின் இந்தோனேசிய தீவுகள் அருகே காணப்படுவதாக கூறுவர். அந்த மீன் வடிவும் கோயில்களில் காணப்படுகின்றன.

மேலும், சில மீன் குறியீடுகள் கற்பனையில் வரையப்பட்டவை என்று தோன்றும் அளவிற்கு வடிக்கப்பட்டு இருந்தன.  அவை நீர்வாழ் உயிரினங்களா என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு நம்ப முடியாத உருவத்துடன் இருந்தன.

இந்த நீளமான துதிக்கையைக் கொண்ட மீன்கள் இருந்திருக்கின்றனவா? ஆய்வின் போது அத்தகைய மீன்கள் இருந்ததற்கான சான்றுகள் வேற்று நாட்டவர் ஆய்வுகளிலிருந்து காணக் கிடைக்கின்றன.


யானை தும்பிக்கை சுறா (
Elephant Trunk Shark) ஆஸ்திராலியா, நியூசிலாந்து நாட்டு கடலில் 200-300அடி ஆழத்தில் வாழக் கூடியவை என்று சொல்லப்படுகிறது. இவை இன்றும் கடலுக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சில மீன்கள் அழிந்து பட்ட நிலையில் புதைப் படிவங்களாக மட்டும் கிடைக்கப் பெறுபவையும் உண்டு.

ஹேலிகாப்பிரியான் (Helicoprion) என்ற மீன் வகை வாழ்ந்தாகவும் அதன் தாடைகள் புதைப்படிவங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு மீன் வகை, யானை மீன் என்று சொல்லும் அளவிற்கு முகம் யானை முகத்துடனும், உடல் மீன் உடலும் கொண்டது. இணையத்தில் இத்தகைய படம் காணக் கிடைக்கிறது. ஆனால் அது புனைவு உருவமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நம் கோயிலில் அத்தகைய நீர்வாழ் இனத்தின் உருவம் வடிக்கப்பட்டு இருப்பதைக் காணும் போது, இந்த மீன் வகை முழுதும் அழிந்து பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

ஆக, இத்தகைய அரிய வகை மீன்கள் இப்போது அழிந்து விட்டிருந்தாலும், தமிழகக் கோயில்களில் இவை வடிக்கப்பட்டு இருப்பதைக் காணும் போது, தமிழன் வாழ்ந்த காலத்தில், இந்தக் கோயில்கள் கட்டப்பட்ட காலத்தில் இவை இருந்திருக்கின்றன என்பது மெய்ப்படுகிறது.

கலந்தாய்வு

மீன் குறியீடுகள் உலகெங்கிலும் உள்ள மத நம்பிக்கைகளில் இடம் பெற்றுள்ளதை பரவலாகக் காண முடிகிறது. மக்கள் பிரார்த்தனைக்கு கூடும் இடங்களில் இவை காணப்படுவது, அந்த இனத்தவரின் நம்பிக்கையை காட்டும் விதமாக தெரிநிலை விளக்கமாக அமைகிறது. இந்த மீன் குறியீடு பல இடங்களில் காணப்படுவதற்கு, மிகுதி, இனப்பெருக்கம், பாதுகாவல், கண்காணித்தல் என்ற புதைநிலை விளக்கம் தரப்படுகின்றன. குறியீட்டு கோட்பாட்டின் படி இது ஒரு பண்பாட்டுக் குறியீடாகவே கொள்ளலாம்.

தமிழகக் கோயில்களிலும் இவை வடிக்கப்பட்டிருப்பதற்கான காரணமும் ஒன்றென அறியலாம். மேலதிகமாக பல தரப்பட்ட மீன் வகைகளின் வடிவங்கள் இருப்பதால், அவை அன்று வாழ்ந்த மக்கள் கண்ட மீன் வகைகள் என்பதைத் தெளிவாக உணரலாம். பல மீன் வகைகள் இன்று வரையிலும் இருப்பது மீன் இனப் பெருக்கத்தை காட்டுகிறது. அருகிய இனங்கள், உலக சுற்றுப்புறச் சூழலுடன் போராடி முடியாமல் மடிந்திருக்கலாம்.

சென்னை மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் பார்த்தசாரதிக் கோயிலில் இந்தக் குறியீட்டு விவகாரத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்லலாம். அதன் வாயிற்புர கோபுரத்தின் உட்கூரையில் வரி வரியாக பல உயிரினங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில நீர் வாழ் உயிரினங்கள். கோயிலுக்குள் சென்றதும் இருக்கும் மண்டபத்தின் உட்கூரைகளிலும் எண்ணிறந்த மீன் குறியீடுகள். அன்று வாழ்ந்த இனத்தவர்கள், கடலை நம்பி வாழ்ந்தவர்கள் என்பதும், தங்கள் இனத்தை காக்க இந்தக் கோயிலைக் கட்டி, அதில் தங்களுக்கு வாழ்வு தரும் மீன் இனங்களுக்கு மதிப்புத் தரும் வகையில், இதை வடித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

முடிவுரை

தமிழகக் கோயில்களில் காணப்படும் மீன் குறியீடுகள் மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அத்துடன் இன்று அழிந்து வரும் மீன் இனங்கள் (Coelacanth, Helicoprion, elephant trunk shark) பற்றியும் அறிய உதவுகிறது. மீன்களை பற்றி ஆய்வு செய்வோர், இந்த மீன் வகைகளை இனங்கண்டு கொண்டு, அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்தால், நம் தமிழ் நாகரிகம் கடலுடன் கொண்டுள்ள தொடர்பை மேலும் சான்றுடன் விளக்கலாம்.

உசாத்துணை

Albert Sebeok, Thomas. (1994). Sign: An Introduction to Semiotics. London: Toronto Buffalo.

Hodge, Robert. (1998). Communication. In Paul Bouissac (Ed), Encyclopedia of Semiotics (pp. 132-135). New York: Oxford University Press.

Lawrance W., Newman. (2007). Basics of Social Research Qualitative and Quantitative Approaches. USA: Pearson

Perara J., D. (2004). Teori Semantik. Jakarta: Penerbit Erlangga.

Peirce, S. Charles. (1985). Logic as Semiotic: The Theory of Sign. In, E. InnisRobert (Ed,), Semiotics: An Introductory Anthology. (pp. vii-xvi). Bloomington: Indiana University Press.

Rajentheran, M., Silllalee, K. (2015). Semiotic Theory in studies of Classical Tamil Literature. Tamil Peraivu.

Umberto, ECO. (1979). ‘Proposal For A History of a Semiotics’. In, Tasso Borbe(Ed.), Semiotics Unfolding (Vol. 1. pp.75-90) New York: Mouton Publishers.

https://fishingboatsblog.blogspot.com/2019/07/elephant-fish-fish.html

https://www.nationalgeographic.com/science/phenomena/2013/02/26/buzzsaw-jaw-helicoprion-was-a-freaky-ratfish/