4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

சங்கதி - ப. சின்னச்சாமி

 

சங்கதி

. சின்னச்சாமி

chinnatamil8833@gmail.com

                அடியே அருக்காணி! என்னடி பண்ற, அப்ப வூட்டுக்கு போயிட்டுதான வந்த, என்னமோ அமெரிக்காவுக்குப் போயிட்டு வந்த மாதிரி வூட்டுக்குள்ளயே இருக்குற. கறுத்தர மாட்ட வெளிய வாடி.”

                மாரியக்கா! இருக்கா! சோத்தப் போட்டுட்டிருக்குற

                சீக்கிரமா வாடி! ஏதோ புண்ணியமா காட்டு வேலைக்கெல்லா போயிக்கலாமுன்னு சொல்லிருக்காங்க! வந்து தொலடி! லேட்டாச்சுன்னா அவ கத்து கத்துனு கத்துவா

                வாக்கா போலா, யாருக்கா அவ

                காட்டுக் காரிச்சிதா! ஒன்ற சானுதா இருப்பா, ஆனா வாயி ஏழு மைலுக்கு அப்பால போகு.”

                அப்படியா! கொரனாவுல காசுகீசு கௌவுருமெண்டுல இருந்து போட்டாங்கலாக்கா?”

                ஏண்டி.. அந்த காச வாங்கித்தா தாயம் வெளையாண்ட. நீ வேற, விசுக்கு விசுக்குனு வா. சனங்க போயி ரொம்ப நேரமாச்சு

                மெதுவாக்கா. சோறு தண்ணியில்லாமக் கெடந்து காலு கையெல்லா பலமில்லாம போச்சு!”

                ஆமாண்டி எனக்கு ரேசன்ல பலகாரம், பிரியாணி சோறெல்லா தந்தாங்க பாரு. ரேசனரிசிக்கே அம்புட்டு சண்ட, ஊரு சனமே கூடி நின்னுச்சுனா பாத்துக்க. ரேசனரிசி பல்லுல படாதவங்கெல்லா லைன்கட்டி நின்னாங்க பாரு, ஒரே கூத்துடி. இதுல ஏதோ சமூக இடைவெளி விட்டு நிக்கலைன்னு, மாஸ்க் போட்டுட்டு வர்லீன்னு பைன்னு வேற போட்டாங்க, இருந்த 100 அதுல போயிருச்சு.”

                ஒஓ... நம்ம வழவாளுக மட்டுந்தானா?”

                ஊரேனு சொன்னனல்ல, தோட்டந்தொரவு வச்சுருக்குரவ கூட எத்தன நாளைக்கு இப்படியே போகுமோன்னு தெரிலீன்னு அரிசி வாங்குனாக, இங்க பக்கத்துல வா, அதுல சில பெரிய மனுஷனுகளு இருந்தானுக.”

                அடப்பாவிகளா காசு பணொ இல்லாமயா இருக்கு

                என்ன பண்றது கொரனா இப்படி பண்ணியுட்டுடுச்சு

                விடுகா நம்ம கறிக்கட தொறக்கட்டு, பெரிய எலும்ப வாங்கிட்டு வந்து வாய்க்கு ருசியா செஞ்சு தின்னுரவேண்டிதா.”

                ஆமாண்டி, நம்ம கறி திங்காம நாக்கே செத்து கெடக்கு. கைகாலெல்லா பலமிழந்து போச்சு.”

                                                                                .................................................

                ஏன்டி இப்படி தளுக்கி குளிக்கி நடந்து வர்றீங்க. எட்டு வச்சு வாங்கடி, நேரமா காலமா வந்து வேலய ஆரம்பிக்கலாமுனு இல்ல, எல்லா வீட்டிலயே உக்காந்துட்டு கிடந்து ஒன்னு அசையமாட்டிங்குதா?”

                சொல்லுல வாயி போகுது பாரு.”

                ஆமாக்கா....”

                வா இந்த பாத்திய நீ புடி. இந்த பாத்திய நா புடுச்சுக்குற.”

                அப்புறோ... உங்கப்பனூட்டுல எப்படி வசதி

                அத ஏக்கா கேக்குற. தாயம் வெளையாண்டே நேரத்த கழிச்சொ. கொரனா வந்தது ஒருபக்க நல்லதாவு போச்சுக்கா. என்ற வூட்டுக்காற குடிக்காம, என்ன அடிக்காம இருந்தாங்கா. அதனால ரெண்டு பேருக்குள்ள நல்ல ராசியாவு போயிருச்சுக்கா.”

                வீட்டுக் கழுதயு அப்படித்தாண்டி, குடிக்காம இருந்துபோட்டா. பிளக்குல எங்கயோ கெடைக்குதுனு போயி போலீஸூகிட்ட அடிய வாங்கிட்டு வந்து ரெண்டு நாளு படுத்துட்டா. இப்ப மனுஷ குடிக்கிறத விட்டுடறேனு முடிவு பண்ணிட்டா.”

                சரிக்கா! நம்ம ஊருல என்னென்ன சங்கதி நடந்துச்சு. ஏதாவுதிருந்தா சொல்லுக்கா. அலுப்பு தெரியாமயிருக்கும்.”

                என்னத்த சொல்றது அருக்காணி

                ஏக்கா உனக்கு தெரியாத சங்கதியா உனக்குதா மோப்ப சக்தி அதிகமாச்சே

                அடி இவள...”

                அட சொல்லுக்கா...”

                நம்ம ரோஸி இருக்காளே! அவள மேட்டு வழவு ஜாக்கி பேழப்போனப்பொ கையப்புடுச்சு இழுத்துட்டானாமா, அவளு பயத்துலமியாவ் மியாவ்னு கத்திப்போட்டாலாமா. ஊரக் கூப்டுருவனு கத்தருக்கு ஆரம்பிச்சுட்டா. நம்ம ஜாக்கி மான மருவாதைக்கு பயந்துட்டு ஒன்னுக்குபோயி காலுலையே விழுந்துட்டானாமா....”

                நம்ம ரோஸிக்கு அம்புட்டு தைரியம் இருந்துச்சா....”

                இருக்காதா பின்ன, ஜாக்கி கொரனா இந்தியாவுக்குள்ள பரவறதுக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திருக்கானாமா. கௌருமண்டுக்கு சொல்லாம அமுக்கிபுட்டாங்க. அதனால கொரனாவ ஒட்டவைச்சுப்புட்டானா என்ன பண்றதுனு கத்திபுட்டாலாமா.... பாவம் ஜாக்கி,  நெஞ்ச நிமித்தி தாவித்தாவி திரிஞ்சவ, அதுக்கப்புறம் நம்ம வழவ தாண்டும்போதெல்லா சத்தமில்லா போயிவற்ரா....”

                ஒஓ.........”

                சரிக்கா மத்தியான சோத்துக்கு என்ன கொண்டாந்த

                கஞ்சியு, செல்லுப்பூச்சியுளுந்த சுண்டல நல்லா சுடுதண்ணீல போட்டு நாலஞ்சுதடவ கழுவி தாளுச்சு கொண்டாந்திருக்க, அங்க...”

                இங்கயு அதே கஞ்சிதாக்கா, தொட்டுக்கரதுக்கு, கடுச்சுக்கறதுக்கு ஒன்னுமில்ல. வெங்காய வெலயக் கேட்டா தல சுத்துது. பாரு இங்க வெங்காய காட்ட கள எடுத்துட்டிருக்கோ. என்ன வெங்காயமோ போ.”

                அதெல்லா பேசாதடி, கௌவுருமெண்ட எகத்தாளொ பண்றீன்னு புடுச்சுட்டு போயிரப் போறாங்க.”

                ஆமாக்கா நமக்கெதுக்கு அந்த பொல்லாப்பு

                லே அருக்காணி! அங்க போறாபாரு செவப்பி

                ஆமாக்கா, பின்னால நம்ம வெள்ளைய வாலட்டிட்டே போறானே

                ஆமாண்டி அது பெரிய சேதி, கருப்ப லாக்டவுனு போடறதுக்கு முன்னால ஊருக்குபோயி அங்க சிக்கீட்டு வரமுடியாம போச்சு, இவ ஒத்தைல கெடந்து காட்டக் காத்துட்டு கெடந்துருக்குறா, நம்ம வழவ காவக் காத்துட்டிருந்த வெள்ளைய அப்பப்ப அங்க ஒத்தாசைக்கு போயி வந்திட்டிருந்திருக்குறா. செவப்பிய தூங்க சொல்லீட்டு  ராத்திரி பூராலொள் லொள்ளுனு கத்திட்டு காட்ட காவக் காத்துட்டு நல்லா விசுவாசமா இருந்துருக்குறா. ஒருநா வாழத்தோப்புக்குள்ள பாம்பப் பாத்துட்டு நம்ம வெள்ளைய மேல பாஞ்சுட்டா. அப்புறொ செவலைய வரவரைக்கு காட்டுலயே தங்கிட்டா. நம்ம வழவுக்குள்ள வந்து சிநேகிதனுகள பாத்துட்டு ஓடிருவா

                செவப்பி புருஷ வந்துட்டானா

                , வந்து ஒருமாசம் ஆச்சு, அந்த சந்து இந்து சந்துனு பூந்து எப்படியோ வந்துட்டானாமா, இப்ப செவப்பி முழுகாம இருக்காலாமா...”

                அப்படிபோடு

                சத்தமா சொல்லாதடி! அவ காதுல விழந்தறப் போகுது. வெங்காயத்த விட எரிச்சலானவ.”

                சரிக்கா...”

                இந்த நூறுநாள் வேலைய திரும்பவும் செய்ய சொல்லீட்டாங்கனா பரவாயில்ல. சிவனேனு போயிட்டு வந்துட்டிருக்கலா

                ஆமாக்கா, அது இல்லாத காட்டிதா இவகிட்ட பேச்ச வாங்கிட்டு வேல செய்ய வேண்டியிருக்குது

                வந்தா, இவ காட்டுக்கு ஒருத்தி வந்து நிக்கமாட்டா

                ஆமாக்கா

                                                                                .............................................

                சோத்த தின்னுட்டு சீக்கரமா எந்துருச்சு வந்து தொலைங்கடி, 2.30 மணி பஸ்சு போகுதுன்னா வேலைய கைவிட்டு போவனும்னு நிப்பீங்க, சீக்கரம், சீக்கரம்

                ஏனுங்கோ, இப்ப எங்க பஸ் ஓடுது

                இதெல்லா கணக்கா பேசுங்கடி, வேலதா ஆகமாட்டீங்குது

                ஏக்கா அந்த எலிக்குஞ்சு கதய சொல்லுக்கா

                இந்த கொரனா காலத்துல கெடக்கிறத தின்னுட்டு அங்கயு இங்கயுமா ஓடிட்டிருந்துச்சு, அப்பப்ப காட்டுப் பக்கம் போயிட்டு வந்துட்டிருந்தத அங்கிருக்குற காட்டு எலியொன்று நோட்டமிட்டு கவுத்தி போட்டுருச்சு. ஆளு அதிலிருந்து எந்த பொறிக்கு சிக்காம சிட்டா பறந்துட்டிருந்தா. போன மாசந்தா காட்டெலி அவன காட்டுக்குள்ள இழுத்துட்டு ஓடிருச்சு. காட்டெலியோட எசமானுக்கு எப்படியோ தகவல் கெடச்சு, ‘நம்ம இனத்தோட மான மரியாதயக் கெடுத்துப்புட்டாஇனி அவ உயிரோட இருக்கக் கூடாதுன்னு அந்த காட்டெலிய தேடிப் போயி ஒருவழியா கண்டுபுடுச்சுட்டாங்களாமா, அரிசிய கொருச்சுட்டிருந்த நம்ம எலிக்குஞ்சப் பாத்து கோவத்துல, ‘சாக்கடையில திரியுற நீ எங்க இனத்துல கலந்துடலாமுனு நெனச்சியானு அடிக்க போனபோது, கொஞ்சந் தூரந்தள்ளிகீச் கீச்சத்தங் கேட்க, போயி பாத்தா அங்கொன்னு சோளத்த கொருச்சுட்டிருந்துதாமா. நேரம் கூட கூட எலிக்குஞ்சுக சத்தம் அங்கொன்னு இங்கொன்னுமா கேட்க ஆரம்பிச்சுதாமா

                நச நசன்னு பேசிக்கிட்டே இருக்காதீங்கடி வேலையப் பாருங்க

                இவ ஒருத்தி, நீ மேல சொல்லுக்கா

                அப்புறம் காட்டெலி நாட்டாம சுதாரிச்சுட்டு, நம்ம காட்டெலியவே கேட்டுருவோன்னு, அவள கூப்பாட்டானமா

                சொல்லுங்க, எதுக்கு இங்க வந்தீங்கனு மூஞ்சில அடிச்சமாதிரி கேட்டுச்சா

                என்ன இதெல்லா! நம்ம இனத்துல இருந்துட்டு எதுக்கு எலிக்குஞ்சுக கூட சவகாசம்நம்ம கூட்டத்துல யாரு உனக்கு கெடைக்கலாயா?னு கத்துனானாமா.

                அட போயா! எனக்கு எலிக்குஞ்ச பாத்ததிலிருந்து ஒரே பிரியமா போச்சு. மனுசனுக நோயு வந்து பயந்துட்டு கெடக்குறானுக, உனக்கு இனம், மசுருனு. புத்திய பாருனு நாட்டாமைய வெளுத்து வாங்கிருச்சு காட்டெலி.

                கோபமடஞ்ச நாட்டாம காட்டெலி எலிக்குஞ்சு மேல கைய வைக்க போச்சாமா. கூட்டத்துல நாட்டாம, நாட்டாமனு பெருஞ்சத்தம் கேட்க. நாட்டாமஎவன்டா அதுனு ஓங்குன கைய இறக்கி, என்னாச்சு, எதுக்கு இப்படி கத்தீட்டு ஒடியாறேனு  நாட்டாம எலி கேட்டுச்சு. நாட்டாமயாறேஉங்க பொஞ்சாதி யாரோவொறு எலிக்குஞ்ச கூட்டிட்டு ஓடிருச்சாமானு சொன்னது கூட்டம் கலைஞ்சு போச்சாமா

                அட அப்படியா சங்கதி

                சரிடி என்ற பாரு முடுஞ்சுது

                கொஞ்சம் பொறுக்கா என்னோடது முடியப்போகுது