4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

பரிபாடலில் முருகவழிபாடு - செல்வி.பிரமியா.பஞ்சலிங்கம்

 

பரிபாடலில் முருகவழிபாடு

செல்வி.பிரமியா.பஞ்சலிங்கம்

Pramiya22prami@gmail.com

+94779892763

 

எமது பண்டைத் தமிழரின் தொன்மையினையும் வரலாற்றினையும் பற்றி அறிவதற்கு நமக்கு பல சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தொல்பொருட்சின்னங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், பிறநாட்டார் குறிப்புக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். அந்தவகையில் எமது பண்டைய வரலாற்றினை அறிய உதவுவதில் இலக்கியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இவற்றின் மூலம் அக்காலத்தில் காணப்பட்ட அரசியல், சமூக, சமய, பிற விடயங்கள் பற்றி எமக்கு விளக்கி நிற்கின்றன. இதனால்தான் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள்எனப்படுகின்றன. அதாவது இக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை இக்காலத்தில் நடைபெறுவது போல எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்;தவகையில் எமது பழந்தமிழரின் நூல்கள் இதற்குச் சான்றாகும். இந்நூல்களை எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், காப்பியங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்கள் காணப்படும். இலக்கியங்கள் சில அகத்திணை இலக்கியங்களாகவும்  சில புறத்திணை இலக்கியங்களாகவும் காணப்படுகின்ற போது அகத்திணை இலக்கியங்கள் அகஒழுக்கம் சார்ந்ததாகவும் புறத்திணை இலக்கியங்கள் போர் சார்ந்தனவாகவும் காணப்படும். அந்தவகையில் எட்டுத்தொகை நூல்களில் சில அகத்திணை சார்ந்ததாகவும் சில புறத்திணை சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. எனினும்  இவ் இலக்கியங்களில் அக்காலத்தில் காணப்பட்ட சமயம், சமூக நடவடிக்கைகள், அக்காலத்தில்  இடம்பெற்ற வழிபாடுகளை போன்ற பலவற்றை இனங்காண முடிகின்றது.

 அந்தவகையில் இவ்விலக்கியங்கள் வாயிலாக அக்காலத்தில் பல வழிபாட்டு முறைகள் அக் கால மக்கள் பின்பற்றினார்கள் என்பதனை அறியமுடிகின்றது. குறிப்பாக ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முறையே ஐவகைத் தெய்வங்களானமுருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை  போன்ற தெய்வங்களை வழிபட்டனர். இதற்கான சான்றாதாரங்கள் பல பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. குறிப்பாக தொல்காப்பியத்தில், “சேயோன் மேய மைவரையுலகமும்…”  (அம்பிகை. ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை, 2003, பக்.20-21 )  

இவ்வழிபாடுகளில் முருக வழிபாடு மிகத் தொன்மையான காலம் தொட்டே இருந்து வந்துள்ளமையைக் காணமுடிகின்றது.இதனை பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் பல முருகப்பெருமானது தோற்றம், சிறப்பு, அருட்திறம் முதலியவற்றைப் போற்றுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களிலும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் முருகன் தொடர்பான செய்திகள் அதிகளவு இடம்பெற்றுள்ளன. எட்டுத்தொகை நூல்களில் பரிபாடலும், திருமுருகாற்றுப்படையும் பிரதானமானவை. இவை இரண்டுமே வழிபாடு பற்றிய நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பவற்றை விடக் காலத்தால் மிக முற்பட்டவை. அவற்றில் ஊர்கள், சமுதாயங்கள் பற்றிய வர்ணனைகளிலே முருக வழிபாடு பற்றிய செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ் மக்களிடையே நிலவிய முருகவழிபாட்டின் சிறப்பியல்புகளை அக்கால சமூக பிண்னணியில் நோக்கலாம்.

தொல்காப்பியத்தில்,“சேயோன் மேய மைவரையுலகமும்என்னுங் குறிப்புக் காணப்படுகின்றது. இதில் சேயோன்என்பது முருகனைக் குறித்து நிற்கின்றது. எனவே, முருகன் மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்துக்குரிய சிறப்பான தெய்வமாகப் பழந்தமிழரிடையே போற்றப்பட்டுள்ளான். குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்என்பது நம்பிக்கை இதனாலேயே முருகனுக்கு குன்றக்கிழவன்என்னும் பெயரும் வழங்கப்படுகின்றது. குன்றக் கிழவன் என்றால் குன்றங்களுக்கு உரிமையானவன் என்று பொருள்படும். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குன்றுதோறாடல்என்ற பகுதியில் குன்றுகள் தோறும் ஆடற்கோலங் கொண்டு நிற்பதாகப் பாடுகின்றார் (வரி 198-217) (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.20-21 )

குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்பான தெய்வமாக முருகன் விளங்கிய போதிலும் பழந்தமிழ் மக்கள் நில வேறுபாடின்றி முருகனைத் துதித்தமைத் திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. முருகன் உறையும் பிற இடங்களாக வேலன் வெறியாடும் இடம், காடு, சோலை, ஆற்றிடைத்திடல், ஆறு, குளம் என்பவற்றைக் நக்கீரக் குறிப்பிடுகின்றார். அதனைப் போல குநற்தொகையிலும் கடவுள் வாழ்த்துப் பாடலில் முருகன் இவ்வுலகம் முழுமைக்கும் வர்ணிக்கப்பட்டுள்ளான். முருகப்பெருமானின் பாதுகாப்பின் கீழ் இவ்வுலகம் உள்ளது என்று அப்பாடல் முடிவடைகின்றது. கடற்கரையில் குழல், யாழ், முழவு, முரசு முதலிய வாத்தியங்கள் இசைக்க மலைநிலக் கடவுளான முருகன் வெறியாடு மகளிரோடு கடற்கரையிலமர்ந்து விழாக் கொண்டாடிய காட்சியை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. ஆகையால் பழந்தமிழ் மக்கள் நில வேறுபாடின்றி முருகனை வழிபட்டுள்ளனர் (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.21 ).

முருகனுக்கு பழந்தமிழ் இலக்கியங்கள் பல பெயர்களைச் சுட்டுகின்றன. குறிப்பாக செவ்வேள், சேயோன், கொற்றவை மைந்தன்  எனப் பலவாறு அழைக்கப்பட்டார். பழந்தமிழ் இலக்கியத்தில் முருகவழிபாட்டுடன் தொடர்புடையதாக வேலன் வெறியாட்டம், குரவைக்கூத்து என்பன மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன. குறிஞ்சி நில மக்களின் தொழிலாக வேட்டையாடுதல் காணப்பட்டது. இதனால் அவர்கள் வேலை முக்கிய கருவியாக பயன்படுத்தினார்கள். தமது உயிர் காக்கும் வேலை முருகன் கையில் வைத்திருந்தமையால் வேலேந்திய முருகனை வேலன்என அழைத்தனர். அதன் பின் முருகனுக்கு பூசை புரியும் பூசாரியும் வேலன் என அழைக்கப்பட்டான். மக்கள் தங்களுக்கு குறைகள் ஏற்படும் போது அவை முருகனால் ஏற்படுவதாக கருதி பூசாரியாகிய வேலனைக் கொண்டு அருள்வாக்கு பெற்றனர். அதன் போது முருகப் பெருமான் வேலன் மேல் வந்து எழுந்தருவாள் தன்னை மறந்து கூத்தாடுவான். அதனையே வேலன் வெறியாட்டயர்தல்என்பர்.

இதுபற்றிய செய்திகளை குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை முதலிய இலக்கியங்களில் காணலாம். வெறியாடும் களம் நன்கு அமைக்கப்பட்டு அதிலே வேலினைக் குற்றி அதற்கு கண்ணி சூட்டி, வளம் பொருந்திய கோயிலிலே ஆரவாரம் உண்டாகுமாறு வேலின் புகழ் பாடி, வேலனுக்கு பலிக்கொடையிட்டு சிவந்த குருதியைக் கலந்து தூவி வழிபட் செய்தியை அகநானூறும், வேலன் வெறியாடிய இடம் தோறும் செந்நெல்லில் வெண்ணிறப் பொரிகள் சிதறிக் கிடக்குமென்று குறுந்தொகை குறிப்பிடுகின்றது. கார்காலத்தில் மலர்கின்ற கடம்ப மலரை மாலையாக சூடிக் கொண்டு முருகனை வேண்டி நிற்க, வெறியாட்டு களத்தில் கொடுக்கின்ற பலியைப் பெறுவதற்காக முருகன் வருவதாக நற்றிணை குறிப்பிடுகின்றது (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.22-23 ).

திருமுருகாற்றுப்படையில் குறமகள் ஒருத்தி வெறியாட்டயர்ந்த செய்தி கூறப்படுகின்றது. வழிபாடு இயற்றும் குறமகள் கோழிக் கொடியை நட்டு அதன் மீது நெய்யோடு வெண்கடுகை அப்பி, மலர், பொரி என்பவற்றை தூவி ஆட்டுக்கடாயின் குருதி கலந்த வெள்ளரிசிச் சாதத்தை பிரம்புக் கூடைகளில் இட்டு படைத்து மஞ்சளும் சந்தனமும் தெளித்து அலரி மாலையைத் தொங்க விடுவாள். பின்பு அவள் ஊர்களை வாழ்த்தி, நறும் புகை காட்டி குறிஞ்சிப் பண்பாடுவாள். இதன் போது இசைக்கருவிகள் முழங்கும் பின்னர் குறமகள் முருகக் கடவுளை வந்தருளும்படி வேண்டுவாள். இவ்வாறு குறவர்கள் முருகளை வழிபட அவர்தம் வழிபாட்டை மகிழ்ந்து ஏற்று அவர்கள் விரும்பும் வரங்களை முருகன் வழங்கியருளுவான்என்று திருமுருகாற்றுப்படை வெறியாட்டை சிறப்பிக்கின்றது (வரி-227-249) (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.23 ).

அதனைப் போல் சிலப்பதிகாரத்தின் குன்றக் குரவையிலும் வெறியாடல் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. முருகன் வந்து அணங்கினான்என்று கூறப்படுகின்றது. அத்துடன் குரவைக்கூத்தும் முருகவழிபாட்டுடன் தொடர்புடைய வழிபாடாக காணப்படுகின்றது. குரவைக்கூத்தில் 7பேர் அல்லது 8 பேர் அல்லது 9 பேர் கைகோத்தாடும் கூத்தாகும். இது பற்றிய செய்திகள் மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை போன்றவற்றில் காணப்படுகின்றது. திருமுருகாற்றுப்படையில் குன்றுதோறாடல் என்ற பகுதியில் குரவைக் கூத்து பற்றிய செய்தியை நக்கீரர் தருகிறார். வேடுவர் தெண்டகம், பறை என்பவற்றை முழக்கி குரவைக் கூத்தாடுவார். வெறியாடும் வேலன் தக்கோலக்காயையும், மல்லிகையையும், வெண்டாளியையும் பச்சிலைக் கொடியாற் கட்டித் தலையில் அணிந்து விளங்குவான். குரவையாடும் பெண்கள் மணமுள்ள மலர்களால் ஆன மாலையைக் கூந்தலில் முடிந்து கொள்வார். குளிர்ந்த தழை உடையை இடையில் உடுத்திக் கொள்வார். இம்மகளிரோடு வேலனும் ஆடிப்பாடுவான்”. என்று (வரி 190-217) திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,24 ).

சிலப்பதிகாரத்தில் இருபத்தினான்காவது காதையாக விளங்கும் குன்றக்குரவையில் முருகவழிபாடு பலவாறு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அந்தவகையில் வேலன் வெறியாடல், குன்றக்குரவை என்பன மூலமாக நாட்டுப்புற மக்களிடையே முருக வழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது. அதனைப் போல துணங்கைக் கூத்தும் முருகவழிபாட்டுடன் தொடர்புடையது. திருமுருகாற்றுப்படையில் முருகன் அசூர கணங்களையும் சூரனையும் அழித்த வரலாற்றோடு துணங்கைக் கூத்து இணைத்துப் பேசப்படுகின்றது.

இவ்விலக்கியங்களில் முருகன் போர்த் தெய்வமாகவும், வெற்றித் தெய்வமான கொற்றவையின் மகன் எனவும் திருமுருகாற்றுப்படை (வரி258) சிறப்பிக்கின்றது. அத்துடன் மலைபடுகடாம், புறுநானூறு, அகநானூறு முதலிய இலக்கியங்களிலும் முருகன் போர் வல்லமை மிக்கவனாகவும் போரையே விரும்புபவன் என்பதையும் புலப்படுத்தப்படுகின்றது. இவ்விலக்கியங்கள் பலவற்றிலும் போருக்கு புறப்படும் அரசனுடைய கோபம் முருகனுடைய சீற்றத்திற்கு ஒப்பாக கூறப்படுகின்றது (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.25-26 )

இவ்வாறு பழந்தமிழகத்துடன் தொடப்பு கொண்ட முருகன் இக்காலத்திற்கு பின்னர்  வட இந்தியாவில் கார்த்திகேயனோடு தொடர்புடைய தெய்வமாக கருதப்படுகின்றான் இதற்கான சான்றுகள் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் பகர்கின்றன. திருமுருகாற்றுப்படையில்,“திருச்சீரலைவாய்என்னும் பகுதி முருகனின் ஆறுமுகங்கள் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு முகத்தினுடைய செயற்பாடுகளையும் நக்கீரர் முருகனின் ஆறுமுகங்களில் ஒருமுகம் இருள் சூழ்ந்த உலகில் ஒளியைப் பரப்பும், ஒருமுகம் பக்தர்களை விரும்பிச் சென்று அவர்கள் வேண்டும் வரங்களை கொடுக்கும்.என ஆறுமுகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்அத்துடன் சிலப்பதிகாரம், பரிபாடலிலும் இத்தகைய குறிப்பு இடம்பெற்றுள்ளது (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,பக்.26-27 ).

இவ்வாறு பல முருகன் பற்றி செய்திகளை பழந்தமிழ் இலக்கியங்கள் எமக்கு வெளிப்படுதினாலும் இப் பழந்தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக விளங்கும் பரிபாடலில் முருகன் பற்றிய குறிப்புக்கள் அதிகளவில் விரவிக் காணப்படுகின்றன. அந்தவகையில் பரிபாடல் பற்றியும் அதில் இடம்பெற்றுள்ள முருகன் மற்றும் முருகவழிபாடு பற்றி செய்திகளை ஆராய்வோம்.

இந்தவகையில் எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் பற்றி தனித்தனியே ஏனைய இலக்கியங்கள் புலப்படுத்த பரிபாடல் மட்டும் அகமும் புறமும் கலந்த இலக்கியமாகக் காணப்படுகின்றது. பரிபாடல் என்னும் செய்யுள் வகையிலே பாடப்பட்டமையால் இந்நூல் பரிபாடல் எனப்படுகின்றது. சங்க இலக்கியங்கள் அனைத்திலும் பரிபாடல் மட்டுமே இப்போது கிடைக்கின்ற மிகத் தொன்மையான இசை நூலாகும். இப்பாடல்கள் அனைத்தும் இசைக் பாடல்களே என திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகர் தெரிவிக்கின்றார். அத்துடன் பரிபாடலுக்கு இவரும் உரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறையனார் அகப்பொருள் உரையில் காணப்படும் குறிப்பில்,

எண்ணிறந்த பரிபாடலும்…” (சிறிகந்தராசா.சு, 2009,சங்க காலமம் சங்க இலக்கியமும், ப.71)

என்று குறிப்பிடப்படுகிறது. எனவே மிகத்தொகையான பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரிய வருகின்றது. ஆனால் அற்றுள் ஒரு காலத்தில் எழுந்த 70 பாடல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்

தொருபாட்டு காடுகாட்கு ஒன்று- மருவினிய…” (சிறிகந்தராசா.சு, 2009,சங்க காலமம் சங்க இலக்கியமும், ப.71)

என்கிற வெண்பாவில் மூலம் திருமாலுக்கு எட்டுப்பாடல்களும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், காளியைப் பற்றி ஒரு பாடலும், வைகை நதியைப் பற்றி ஒரு பாடலும், மதுரையைப் பற்றி ஒரு பாடளுமாக மொத்தமாக எழுபது பாடல்கள் பரிபாடல் தொகுப்பில் காணப்பட்டன. எனினும் தற்போது 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளமை மனம் வருந்தத் தக்கது. எனினும் சில அறிஞர்களின் கருத்தப் படி சில பாடல்களின் எண்ணிக்கையில் வேறுபாடும் காணப்படுவதுடன் ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு தெய்வத்திற்க வேறுபட்ட  எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியுள்ளனர். குறிப்பாக பரிபாடலில் திருமால், வையை, செவ்வேள் (முருகன்) ஆகியோருக்குப் பாடல்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. எனினும் குறிப்பாக செவ்வேள் எனப் போற்றப்படும் முருகனுக்கே 31 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க பரிபாடல் பழந்தமிழரின் தொன்மையை பிரதிபலித்துக் காட்டுவதுடன் முருக வழிபாடு பற்றியும் அதன் சிறப்பு மற்றும் தொன்மை பற்றியும் அதிகளவில் எடுத்துரைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களில் முக்கியமானதொரு இலக்கியமாகவும் மிளிர்கின்றது.

அந்தவகையில் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன முருகன் பற்றிய செய்திகளை ஆராய்வோம். பரிபாடலில் முருகன் பற்றிய பாடல்களை பாடிய புலவர்களாக கடுவனிளவெயினனார், நல்லத்துவனார், குன்றம்பூதனார், கேசவனார், நல்லழிசிரியார், நப்பண்ணனார்., நல்லச்சுதனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.3).

 பழந்தமிழ் மக்கள் காலையிலும் மாலையிலும் படரும் இளங்கதிரவனின்  செந்நிற ஒளியைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தனர். அக்காட்சியினூடாக மயில் மீது அமர்ந்து வரும் முருகப் பெருமானைக் கண்டனர். எனவேதான் அவரை செவ்வேள்என அழைத்தனர் இது பற்றிய குறிப்பு திருமுருகாற்றுப்படையிலும் காணப்படுகின்றது. எனினும் இது பற்றிய குறிப்பு பரிபாடலிலும் இடம்பெற்றுள்ளது. பரிபாடல் செவ்வேளின் மேனி கதிரவனின் ஒளி போன்றது என்பதை,

ஞாயிற்றேர் நிறந்தகை…” எனவும் (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,ப.22 ).

செவ்வேளின் மேனியைத் தீயின் நிறத்திற்கு ஒப்பிட்டு,

உருவும் உருவத்தீயொத்தி…”(அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003, ப.22 ).

அத்துடன் பரிபாடலில் கதிரவனின் ஒளிமண்டலத்தை முருகப்பெருமானின் ஆறு தலைகளுக்கு உவமையாகவும் குறிப்பிட்டுள்ளனர் (அம்பிகை.ஆனந்தகுமார்., தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை,2003,ப.22).

மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை

மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்

ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை…”(நாராயண வேலுப்பிள்ளை.எம், 2008,சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை,38).

இவ்வாறு முருகனின் பெயரின் சிறப்புப் பற்றி கூறப்பட்டிருந்தாலும், பரிபாடல் கடுவனிளவெயினார் பாடியருளிய ஐந்தாவது பாட்டின் பெரும் பகுதியிலேயே முருகப் பெருமானின் பிறப்பினையே விரித்துக் கூறுகின்றது. இப்பரிபாடற் பகுதியில் குறிப்பிடும் புராணக்கதையை திருமுருகாற்றுப்படை,“அறுவேறுவகையின் அஞ்சுவர மண்டி..என்று குறிப்பிடுகின்றது (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.5).இதனை பரிபாடல்,

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படபடப்புக்குச்

சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கிக்…”(நாராயண வேலுப்பிள்ளை.எம், 2008,சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை,38)என்கிறது.

அதாவது முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றி சரவணப்பொய்கையில் உதித்த சூரபத்மனை அழித்த வரலாற்றினை பறை சாற்றி இப்பாடலடிகள் நிற்கின்றன. செவ்வேளைப் பற்றிய இப்புராணக்கதை 38 அடிகளில் நீண்ட வருணனையாகக் பரிபாடலில் இடம்பெற்றுள்ளது. வேறு எந்தப் பாடலிலும் இப்புராணக் கதை இவ்வளவு விரிவாகக் எடுத்துச் சொல்லப்படவில்லை. ஒரு சில அடிகளிலே திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளன இதுமட்டுமன்றி செவ்வேளின் பிறப்பினை வெவ்வேறு புராணங்களில் சொல்லப்பட்டது போன்று வெவ்வேறு விதமாகவும் கூறுவார் (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,பக்.5-6).

முருகப் பெருமானுடைய பிறப்பினைப் பற்றிய இப்புராணக் கதையும் திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் முருகனின் அவதாரம் பற்றிய வருணனைகள் ஆரியக்கடவுளைக் குறிப்பிடுவனவாகும். பரிபாடலில் வருகின்ற,“வென்றுயர்ந்த கொடி விறல் சான்றவை”,“பிணிமுகம் ஊர்ந்த வெல்பேர் இறைவ”,“செருவேற் றானைச் செல்வ”,“கா அய் கடவுள் சேஎய் செய்வேள்”,“மாறமர் அட்டவை மறவேல் பெயர்பவை”,“உடையும் ஒலியலுஞ் செய்யை மற்றாங்கே, படையும் பவழக் கொடி நிறங் கொள்ளும்போன்ற தொடர்கள் திராவிடப் போர்த்தெய்வத்தைக் குறிப்பிடுவன (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.6).

பரிபாடல் செவ்வேளிலின் பிறப்பு, போர்த்தெய்வம் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டது போல செவ்வேளின் தோற்றத்தையும் வர்ணிக்கின்றது. அதாவது தீக்கடவுள் தனது உடம்பிலிருந்து ஒரு கூற்றைப் பிரித்தெடுத்து அதனைச் சேவல் கொடியாக மாற்றிக் கொடுத்தான். இந்திரன் தன் உடம்பில் ஒரு கூற்றைப் பிரித்தெடுத்து அதனை அழகிய மயிலாக மாற்றி ஊர்தியாக வழங்கினார். எமன் தனது உடம்பில் ஒரு கூற்றைப் பிரித்தெடுத்து அதனை வெள்ளாட்டுக்குட்டியாக மாற்றிக் கொடுத்தான்.என்று செவ்வேளை கடுnனிளவெயினனார் வர்ணிக்கின்றார்.

அல்லலி லனவன் நன்மெய்யிற் பிரித்துச்

செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து…”(கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.6).

அதனைப் போல முருகனுக்கு செவ்வேள் என்ற பெயருக்கு ஏற்ப பரிபாடல் புலவர்கள்  பல இடங்களில் சேய்”, செய்யோன்,“சேயோன்என்று வர்ணிப்பதை நாம் அவதானிக்கலாம். இதனை நப்பண்ணனார் என்ற புலவர்,

உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே

படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்…” (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.6).

என்று முருகனை ஞாயிறுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார். மற்றொரு இடத்தில் நல்லச்சுதனார் முருகனின் தோற்றத்தினை சொல்லோவியமாகப் பாடியுள்ளார்.

வெள்ளிக் கொடியை உயர்த்தி வேலவனே! நீ ஊர்தியாகக் கொண்டு எழுந்தருள்வது தீப்போன்று விளங்கும் முகபடாத்தையும் போர் வென்றியாலுண்டாய புகழினையும் உடைய பிணிமுகம் என்னுங் களிற்று யானை ஆகும். தாமரை மலர் போன்ற திருவடிகளிலே அணிந்துள்ளவை அடையற் செருப்புகளாகும். சூரனைத் தடித்து கிரௌஞ்ச மலையைத் துளைத்த வேற்படையை நீ கையில் ஏந்தியுள்ளாய். பெருமானே! நீ அணிந்த மாலை வள்ளிக் பூவை விரவித் தொடுத்த கடம்ப மலர் மாலை ஆகும்.என்று தருகின்றார். எனினும் சிலர் முகனை ஆரியக்கடவுளாகவும் சிலர் திராவிடக் கடவுளாகவும் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் பரிபாடலில் செவ்வேள் பற்றிய குறிப்புக்கள் விரவிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செவ்வேளைப் பற்றி பரிபாடல் குறிப்பிடும் செய்திகளில் முக்கியமான ஒரு செய்தியாக முருகன் வள்ளி தெய்வயானை சமேதரராய் தோன்றும் காட்சியாகும். இது பற்றிய வேறு பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. இத்தகைய சிறப்பினை குன்றம்பூதனார் குறிப்பிடுகையில்,

பெருமானே! நீ வள்ளியைக் களவின் கண் மணந்தாய். அவ்வாறு வள்ளியை மணந்த அன்று, முதுவேனிலானது கார்ப் பருவமாகும்படி முகில் மழையைப் பொழிந்தாற்போன்று திருப்பரங்குன்றிலே தேவயானையின் கண்கள் கண்ணீர் மழை பொழிந்தன.என்கிறார். இதில் புலவர் தெய்வயானை அழுதமையை மழை பொழிகின்றமைக்கு உவமையாக எடுத்துக் காட்டியுள்ளதுடன் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகத் திகழ்கின்ற திருப்பரங்குன்றம் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இதனை,

மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண் மணந்தஞான்

றையிருநூற்று மெய்ந்நயனத் தவமகண் மலருண்கண…” (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.7).

அதனைப் போல குறமகள் வள்ளிக்கும் தேவமகள் தெய்வயானைக்கும் நடுவே முருகனை நிறுத்தி விண்ணுலகையும், மண்ணுலகையும் இணைத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக முருகக்கடவுளை நப்பண்ணனார் வருணிக்கின்றார். முருகன் விண்ணுலகத் தெய்வமன்று மண்ணுலகத்தெய்வமும் ஆவான் என்கிறார். மக்கள் ஆன்ம ஈடேற்றத்திற்கு தேவ உலகத்தை நாடுவார். ஆனால் முருகன் மக்களை தேடி மண்ணுலகிற்கே வந்து வள்ளியை மணந்து மக்களின் தெய்வமாக திருப்பரங்குன்றத்தில் காட்சி தருகின்றார் என்கிறார். இதனை,

நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து

புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்

தகுமுனி மரபி னான்றவர் நுகர்ச்சிமன…”(கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.8).

பரிபாடலில் இடம்பெறும் காதற் காட்சிகளே பிற்பட்ட காலங்களில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கண்டு இவன் மேல் ஆராக் காதல் கொண்டு இறைக் காதலை இனிமையாக முறையே தேவாரத் திருமுறைகளாகவும் நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களாகவும் பாடுவதற்கு கால்கோலியுள்ளது எனலாம். பரிபாடலில் காணப்படும் செவ்வேள் பற்றிய பாடல்கள் தேவாரங்களில் ஒப்புவமை உடையவையாக காணப்படுகின்றன. சில வகையில் வேறுபட்டும் காணப்படுகின்றது.

செவ்வேள் மேல் பாடப்பட்டுள்ள பரிபாடற் செய்யுள்களில் கடம்ப மரம் பற்றிய வருணனைகள் இடம்பெறுகின்றன. காரணம் கடம்ப மரத்துடன் இணைத்து செவ்வேள் போற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வருணனைகள் திருமுருகாற்றுப்படையிலும் இடம்பெற்றுள்ளன. பரிபாடலில் வருகின்ற வருணனைகள் கடம்ப மரத்தின் புனிதத் தன்மையை இனிது புலப்படுத்துகின்றன.கடம்பமர் செல்வன்”,“கடம்பமர் அணிநிலை பகர்ந்தோம்”,“புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பமர்ந்து”,“உருளிணர்க் கடம்பின் நெடுவேட்குஎன்ற பரிபாடற் செய்யுட்களில் வருகின்ற கடம்ப மர வருணனைகள் கடம்ப மரத்தின் கீழ் செவ்வேள் குடிகொண்டிருந்தான் என்பதனை புலப்படுத்துகின்றன. அதனைப் போல் உருனிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே”,“உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ்தார்போன்ற பாடலடிகள் கடம்ப மலர் மாலையை செவ்வேள் அணிந்திருந்தான். என்பதனை அறியத்தருகின்றன(கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.15).

பரிபாடலின் பதினேழாம் செய்யுளில் வரும் வருணனை கடம்ப மரத்தினை கடி மரமாக காவல் மரமாக எடுத்துக் காட்டுகின்றது. திருப்பரங்குன்றத்திலேயுள்ள காவல் மரத்தின் கீழ் ஆட்டுக்கடா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனை நோக்கி கூட்டம் ஒன்று வருகின்றது. கோல் விளக்குகளைத் தாங்கியவர் சிலர், இசைக்கருவிகளை ஏந்தியவாறு வேறு சிலர், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களை ஏந்தியவாறு சிலர், கொடிகளைப் பிடித்தோர் சிலர், இன்னும் சிலர் இவர்களைப் பின்தொடர்ந்து மலர், தளிர், பூந்துகில், மணி, வேல் ஆகியவற்றை சுமந்து வந்தோர் ஆட்டுக்கடாவினை அடியில் கட்டிய முருகவேளின் பூசைக்குரிய கடம்ப மரத்தினை பாடிப் பரவினார்கள் என்ற செய்தியினை,

தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி…” (நாராயண வேலுப்பிள்ளை.எம், 2008,சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை,135).

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது. இது பற்றிய ஏராளமான செய்திகள், சிறப்புக்கள்  பரிபாடலில் இடம்பெற்றுள்ளன. நல்லந்துவனார், குன்றம்பூதனார், கேசவனார், நல்லழிசிரியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார் போன்ற புலவர்கள் பரங்குன்றத்தைப் பற்றி பரிபாடலில் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர். மதுரையிலிருந்து 8கல் தொலைவிலே திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இதனை குன்று”,“தண்பரங்குன்ற”,“பரங்குன்றுஎன பரிபாடற் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்குன்றின் புனிதம் காரணமாக பிற்காலத்தில் திருஎன்ற அடைமொழி வழங்கப்பட்டது. செவ்வேள் திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டுள்ளதாகவே புலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவருடைய ஏனைய வீடுகளான திருவேரகம், திருச்சீரலவாய், திருவான்குடி, பழமுதிச்சோலை, குன்றுதோறாடல் போன்றவை பற்றிய குறிப்புக்கள் பரிபாடலில் இடம்பெறவில்லை. ஆனால் திருமுருகாற்றுப்படை முருகன் ஆறுபடை வீகளில் குடி கொண்டுள்ளதாக கூறுகின்றது(கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.21).

திருப்பரங்குன்றத்தினை இமயமலைக்குப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அத்துடன் பரங்குன்றத்தில் குடி கொண்டுள்ள செவ்வேளை தரிசிக்க தேவர்களும், முனிவர்களும், ஏனையோரும் இம் மண்ணுலகம் வருவதாக,“பரங்குன்றிமயக் குன்றை நிகர்க்கும்என்று இதன் சிறப்பினைக் குறிப்பிடுகின்றார். இதனைப் போல் செவ்வேளை பெற்றெடுத்த இமயமலையைப் போல் திருப்பரங்குன்றமும் சிறப்பும், புகழுமுடையது என்ற குன்றம்பூதனார் போற்றுகின்றார்.

சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின்…” (கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.22).

இவ்வாறு திருப்பரங்குன்றம் பற்றிய வருணனைகள் பரிபாடல் புலவர்களால் பலவாறு புகழ்ந்த பாடப்பட்டுள்ளமையை பரிபாடல் முழுவதும் விரவிக் காணப்படுகின்றமை செவ்வேள் பரங்குன்றத்தில் குடிகொண்டு அருள் வழங்குவதனை நாம் அறியக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைப் போல் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்து மாமாரமாகத் தோன்றிய சூரபத்மனை இரு கூறாகப் பிளந்த செய்தியினை,“…போர்மலிந்து சூர்;மருங் கறுத்த சுடர்படை யோயே…”(கந்தையா.ஆ,1985,செவ்வேள்,ப.95).

தமிழர்கள் தமக்கு உண்டாகும் சிறு சிறு குடும்ப சர்ச்சைகளுக்கும் முருகன் மேல் ஆணையிடுவார்கள். என்பதனை பரிபாடலில் நல்லந்துவனாரின் 6ஆம், 8ஆம் பாடல்கள் என்பன பறை சாற்றி நிற்கின்றன. எட்டாம் பாடலில் தோழி தலைவனை நோக்கி,

என்னை யருளி அருண்முருகு சூள் சூளின்

நின்னை யருளி அணங்கான்மெய் வேறின்னும்…”(நாராயண வேலுப்பிள்ளை.எம், 2008,சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை,66).

என்று கூறுகின்றாள். இதனால் பொய் ஆணையிட்டால் பெருந் தீங்கு விளையும் என்னும் அச்சம் கலந்த நம்பிக்கை அக்கால மக்களிடையே இருந்துள்ளது. என்பது தெளிவாகின்றது. அதனைப் போல் நல்ல கணவன் வேண்டும் என்போரும், வெளியூருக்குச் சென்ற கணவன் இனிதே திரும்ப வேண்டும் என்போரும், தமக்கு கர்ப்பம் உண்டாக வேண்டும் என்போருமாகப் பல மகளிர் முருகப் பெருமானை வழிபடுகின்ற தன்மையை பரிபாடலிலுள்ள எட்டாம் பாடல் விளக்குகின்றது (அம்பிகை ஆனந்தகுமார்,தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம்  நூற்றாண்டுவரை,2003, ப.26).

கனவில் தொட்டது கைபிழை யாகாது

நுனவில் சேர்ப்ப நின் அளிபுனல் வையை …” (நாராயண வேலுப்பிள்ளை.எம், 2008,சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை,67).

பரிபாடல் சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களில் மிகவும் பெறுமதியானது. இந்நூலில் சமயப் பூசல்கள் எதுவுமன்றி திருமால், வையை, செவ்வேள் பற்றிய பாடல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அக்காலத்தில் சைவமும் வைணவமும் வேறுபாடின்றி அனைவராலும் வணங்கப்பட்டதனையும் குறிஞ்சி நிலக்கடவுளாகவும், கொற்றவையின் மைந்தனாகவும், போர்த் தெய்வமாகவும் முருகன் வழிபடப்பட்டுள்ளதையும் முருகனை ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு பெயர் சொல்லி குறிப்பிடுவதையும், முருகன் பற்றிய செய்திகள் ஏனைய பழந்தமிழ் இலக்கிங்களில் இடம் பெற்றிருந்தாலும் பரிபாடலிலே முருகனை செவ்வேள் எனக் குறிப்பிட்டு அவரின் தோற்றம், உடற்பொலிவு, அவர் உறையும் கடமப மரம் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் காணப்படுகின்றது.

அத்துடன் வள்ளி, தெய்வயானை சமேதரராய் காட்சியளிக்கும் செவ்வேள் பற்றியும், சூரபத்மனை அழித்த வரலாறு பற்றியும், அவர் உறையும் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இன்னும் பல செவ்வேள் பற்றிய செய்திகளை ஏனைய இலக்கியங்களை விட அதிகளவு கொண்டு விளங்குகின்ற இலக்கியமாக பரிபாடல் காணப்படுவதுடன் அக்கால மக்கள் முருகன் வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் அவர்கள் செவ்வேளுக்காற்றிய வழிபாட்டு முறைகளையும் அக் காலத்தில் முருக வழிபாடு பெற்றிருந்த உன்னத நிலையினையும் நாம் இன்று அறிந்து கொள்வதற்கும் பரிபாடல் ஏனைய இலக்கியங்களை விட விரிவாக அறிந்த கொள்வதற்கும் எமக்கு பெரிதும் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அழிவடைந்துள்ள ஏனைய பாடல்களிலும் செவ்வேள் பற்றி செய்திகள் இடம்பெற்றிருக்கலாம். எது எவ்வாறாயினும் பரிபாடல் முருகனுக்காக படைக்கப்பட்ட ஒரு இலக்கியமாகவே இன்னும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.  

உசாத்துணைகள்

1. அம்பிகை.ஆனந்தகுமாh.;,(2003),“தழிழகத்தில் முருக வழிபாடு ஆதிகாலம் முதல் கி.பி.பதின்மூன்றாம்  நூற்றாண்டுவரை”, வர்தா பதிப்பகம், முறுதகஹமுல, பக்.20-28).

2.  கந்தையா.ஆ,(1985),“செவ்வேள்”;,திறந்த பல்கலைக்கழகம், இலங்கை, பக்.1-29.

3. நாராயண வேலுப்பிள்ளை.எம், (2008),“சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் பரிமேலழகள் உரை”, நற்பவி ப்ரசுரம், சென்னை.

4.  பரிமணம்.அ.மா., பாலசுப்பிரமணியம்.கு.வெ., (2004),“பரிபாடல் மூலமும் உரையும்”, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை.

 

இணையவழித்தேடல்கள்

1.     http://old.thinnai.com/?p=61003055

Date 19.02.2019 Time7.00PM

2.     http://murugan.org/tamil/shanmugampillai.htm

Date 19.02.2019 Time7.08PM

 

3.     https://tamilandvedas.com/tag/பரிபாடலில்-அந்தணரும்-வேத

     Date 19.02.2019 Time7.30PM

 

4.     http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3107:2016-01-17-01-55-48&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

Date 20.02.2019 Time8.00PM

 

5.     http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3514:2016-08-24-02-28-28&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

     Date 20.02.2019 Time8.30PM