4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பெண்ணியக் கோட்பாட்டு வகைமையில் ‘பெண்ணிலை’ - மைத்திரிஅன்பு

 

பெண்ணியக் கோட்பாட்டு வகைமையில் ‘பெண்ணிலை’

மைத்திரி அன்பு

தலைவர்

தமிழ்மாடம் அறக்கட்டளை

செய்யாறு – 604 407.

அறிமுகம் 

          பொதுவாக கலை இலக்கியங்கள் ஒவ்வொரு காலத்திலும் வடிவம், உள்ளடக்க நிலைபாடுகள் என, தன்னை மாற்றியமைத்துக் கொள்வது இயல்பே. அம்மாற்றத்தை அந்தந்த காலச் சமூகமும் பொருளாதாரமும், அரசியலும் தோற்றுவிக்கின்றன. அவ்வகையில் தற்காலச் சூழலில் வெளியாகும் கலைப் படைப்புகளில் பெண்ணியம் குறித்த வெளிப்பாடுகளில் அதிக கவனம் பெறுகின்றன. அதன்கீழ் மேலை நாட்டுப் பெண்ணிய இயக்கத்தின் தாக்கம், இந்திய பெண்ணியத்தின் மீதும் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்திய பெண் விடுதலை இயக்கங்கள் புத்துணர்ச்சி பெற்று, பெண்ணியக் கோட்பாடுகளின் வழியே பெண்ணியக் கருத்தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில், (1) பெண்ணிலை (2) அதிகாரமும் அதற்கான தாக்கமும் (3) தன்னாட்சித் தன்மை எனும் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளில் வழியே பெண்ணியக் கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பபெறுகின்றன. அவற்றில் ‘பெண்ணிலை’ குறித்த பதிவுகளை மட்டும் இக்கட்டுரை விவரிக்க விழைவதாக அமைகிறது.

பெண்ணிலை 

இந்திய சமூக அமைப்பில் பெண்களின் நிலை, தொடக்க காலம் முதலே தாழ்ந்திருக்கிறது. இதனால் பெண்கள் கீழ்ப்படியும் எண்ணம் கொண்டவர்களாக மாற்றப்பெற்றுள்ளனர். ஆணாதிக்கச் சமூகத்தால் பெண்கள் அடக்கி வைக்கப்பெற்றுள்ளனர். தொடர்ந்து அடக்கு முறைகளையும் அநீதிகளையும் இச்சமூகம் பெண்கள் மீதே பலவந்தமாகத் திணித்திருக்கிறது. இன்னுமும் திணிக்கிறது. அதற்கேற்ப பெண்களை உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வலிமையற்றவர்களாக இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இதற்கான உதாரணங்களை நாடகங்கள் உடல்மொழியினூடாகவே பலவாறு வெளிப்படுத்துகின்றன. அதிலொன்று கே.ஏ. குணசேகரனின் ‘பேயோட்டம்’ என்னும் நாடகம். 

இந்திய கிராமக் கோயில்களில் இன்றும் ஒருவர் மேல் சாமிவந்து விட்டது என்றும்; பேய் பிடித்திருக்கிறது என்றும் கூறும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு சாமியோ பேயோ வந்தவர்கள் அசாதாரணமாக ஆடுவார்கள், இன்னும் சிலர் வேறுசில செயல்களைச் செய்வார்கள். இப்பழக்கம் காலம் காலமாக நம் தமிழ் பண்பாடுகளில் நம்பிக்கை முறையாக இருந்திருக்கிறது. இப்பழக்கம் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் தென்மாநிலங்களான கேரளா போன்ற இடங்களில் வலுவான நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு பேய் பிடிக்கப்படும் நபர் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பெண்களாகவே இருக்கின்றனர். பேய் பிடித்த நபரை ஒரு மனநோயாளியாகப் பார்த்தல், அவர்களை வெறுத்து ஒதுக்குதல் முதலான பழக்கங்களும் இன்னும் வழக்கத்திருந்து வருகிறது. ஆனால் உளவியல் மற்றும் மனநோய்க் குறித்த விளக்க நூல்கள் இதனையும் ஒருவகையான நோயாகவே கருதுகின்றன.

“பேய் பிடித்தல், சாமி வருதல் போன்றவை தன்னிலை இழந்தலின் பிறிதொரு  வடிவமாகக் கருதப்படுகிறது. இவை மனக்கோளாறுகள் அல்ல”1

என்று டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா குறிப்பிடுவதை இதற்கான சான்றாகக் கூறலாம்.  அதேபோல,

“பேய் பித்தல் என்பது ஹிஸ்டிரிபா என்று தற்பொழுது  கண்டுபிடித்திருப்பதாகவும், இந்நோய் மனதில் அழுந்திக் கிடக்கும் நிறைவேறாத இச்சைகளாலும், அதிர்ச்சியாலும் திடீரென்று உணடாகும் பயம், காதலில் ஏமாற்றம், நட்பினர் அல்லது நெருங்கிய உறவினரின் மரணம், பெருநஷ்டம் முதலான காரணங்களால் ஏற்படுவதாகவும்”2

‘அடிமனம்’ குறித்த உளவியல் நூல்கள் விளக்கம் தருகின்றன. இந்நிலையில்,

“நமது கிராமத்துப் பேய்கள் கிராமத்தில் வாழும் படித்த பெண்களை, அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் பெண்களை அண்டாமல் போய்விடுவதும், நகரத்திற்குச் சென்று அங்குள்ள மணமான பெண்களையோ, மணமாகாப் பெண்களையோ பிடிப்பதற்குச் சக்தியின்றி, கிராமத்தில் படிப்பறிவு அற்று மணமான இளவயது பெண்களையும், மணமாகாத இளவயதுப் பெண்களையும் மட்டுமே பிடிக்கும் நடைமுறை வேடிக்கையாகக் காணக்கிடைக்கிறது”3

என்று நாடக ஆசிரியர் கே.ஏ.குணசேகரன் குறிப்பிடுவது உளவியல் கருத்துரைக்குப் பொருந்துவதாகவே உள்ளது. அப்பொழுது கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள், கல்வியறிவற்றவர்களாக இருப்பது, இளம் வயதில் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவது, சிறுவயதிலேயே குழந்தைப்பேறு முதலான உடல்ரீதியான பெரும் வலிகளை அனுபவிப்பது முதலான செயலாக்கங்களுக்கு ஆணாதிக்கத்தின் கீழான சமுகத்தால் தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் அப்பெண்களுக்கு மட்டும் உளவியல் அறிஞர்கள் குறிப்பிடும் படியான மனஅழுத்த நோய் (ஹிஸ்டிரிபா) ஏற்படுகிறது. ஆனால் இதையும் இச்சமூகம் தனக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ளும் முறைமையை கீழ்க்காணும் நாடக காட்சிகளும், வசனங்களும் விளக்குகின்றன.

“மீனா  :        ம்…ம்… சுந்தரி, பொழுது சாயுற நேரத்திலே இந்த ஆலமரத்தடியிலே 

                நம்ம மாதிரி கொமரிப்பொண்ணுக நிக்கக் கூடாது, தெரியுமில்லே…

    சுந்தரி :        ஏன்.?

மீனா :        இந்த ஆலமரத்தைப் பேய் பிடிச்சு நம்மூருக்குள்ளே எத்தனை

பொண்ணுக அவதிப்பதுக்கன்னு ஒனக்குத் தெரியாதா..? ம்… பொறப்படு வேகமா…

சுந்தரி :        ஒன்னைய மாதிரிப் படிக்காத பொண்ணுகளைத்தான்  ஆலமரத்துப்

பேய், ஒத்த மரத்துப் பேய் இப்படியான பேய்கள்லாம் படக், படக்கினு புடிக்கும். என்னைய மாதிரிப் படிச்ச பொண்ணுகளப் பேய்களுக்குப் பிடிக்காது”4 

என்றவாறு ‘பேயோட்டம்’ நாடகத்தில் வரும் படிக்காத கிராமத்து பெண்ணான மீனாவும், படித்த பெண்ணான சுந்தரியும் பேசுக்கொள்ளும் உரையாடலின் வழியே, காலம் காலமாக பெண்களின் மனதில் அச்ச உணர்வை பரப்பி வைத்திருக்கும் சமூகச்சூழல் விவரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுவயதிலிருந்தே பெண்களை அடக்கி-ஒடுக்கி வளர்த்து, அவர்களின் உடலில் போதிய வளர்ச்சியற்றச் சூழலை உருவாக்கி, இளமையிலே திருமணம் செய்துவைத்து, குடும்ப அமைப்புக்குள் வாழவும் முடியாத, பிறந்த வீட்டுக்கு திரும்பவும் முடியாத - சமூக கட்டுப்பாடுகளை விதித்து, இச்சமூக அமைப்பு  பெண்களை தற்கொலைக்குத் தூண்டுவிக்கிறது. இந்நிலையில் பெண்கள் பலரும் அழுத்தமான மனப்போராட்டங்களை சந்திக்க நேர்கையில் மனநோயாளிகளாகவும், பித்துப் பிடித்தவர்களாகவும் மாறுகிறார்கள். இந்நிலை மாறவேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் வகையில் இந்நாடகத்தின் காட்சியமைப்புகள் உருவாக்கப்பெற்றுள்ளன. உதாரணமாக காளீஸ்வரனின் ’நடிப்பு சுதேசிகள்’ என்னும் நாடகத்தைக் குறிப்பிடலாம்.

இந்நாடகத்தில் இடம்பெறும் கதையாடல், புரட்சிகரமானச் சிந்தனையும், படிப்பறிவும் கொண்ட பெண்களுடன் பழகும் ஆண்களின் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நாடகத்தில் வரும் சுபாவின் அக்கா, தான் திருமணம் செய்துகொள்ள இருந்த ஆண்மகனையே கண்டந்துண்டமாக வெட்டிவிடுகிறாள். அவளையும் அவளுடனான தோழிகளையும், உடனிருந்த ஆண்கள், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபத்தி, அவர்களை ஆபாசப்படம் எடுத்துவைத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் அதைக்காட்டி, பயமுறுத்துகின்றனர். அதனால் சுபா பேய்வேடமிட்ட நிலையில் அந்த ஆண்களைக் கொன்று விடுவதாகக் கதை முடிவடைகிறது. இதில் இடம்பெறும்,

“மாப்புள பொண்ணுங்க பலவீனமானவுங்கடா, செண்டிமென்டா பேசுனா சாஞ்சுருவாங்க. பெண்களுக்காக புரட்சி பேசுனவனா நடிச்சா ஏமாந்துருவாங்க. அம்மாஞ்சி அதுதான், செத்து போனவ அக்கா மாப்புள 50 ஆயிரம்னு சொன்னவொடன, எப்படி வாயப் பொழந்தான் பாத்தியா. கூட 50 ஆயிரம் கொடுத்தா பொண்டாட்டியவும் சேர்த்து கொடுத்திருப்பான். அவுக அப்பேன் சாதி கௌரவம்னு பேசி காசிக்கு டிக்கட் எடுத்து கொடுத்தவுடனே கமுக்கமா வாங்கிட்டு போயிட்டான்”5

என்றவாறு ஆண்கள் பேசிக்கொள்ளும் உரையாடல்கள், தொடர்ந்து இச்சமூகம் ஆணாதிக்கத்தின் மனநிலையிலும், பெண்களுக்கு கட்டி எழுப்பியிருக்கும் புனிதக்கட்டுப்பாட்டு நிலையிலும் பெண்களை அடிமை நிலையில் வைத்திருக்கிறது என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது. இதற்கான முடிவை சுபா, தனக்கு இச்சமூகம் கொடுத்திருக்கும் “பேய்பிடித்தல்” என்னும் மனநோயின் வழியாகவே தீர்க்க நினைக்கிறாள். அதனால் அவள்,

“பேயாட்டம் ஆடி அங்கும், இங்கும் ஒடி அழுகிறாள். (பறை  அதிரடியாக முழங்குகிறது.) அவள் ஆணையும் நிர்வாணத்தையும் திரையின் இரு பகுதியில் இருந்து இழுத்து வந்து கொலை செய்கின்றாள். இரண்டு ஆண் சடலங்கள் கீழே கிடக்கின்றன.

    பெண் :        (பெண்கள் கையில் பேப்பர்களை வைத்துக்கொண்டு) தன்  தோழியின்

                    சாவுக்கு காரணமானவர்களை பேயாட்டம்  ஆடிக் கொன்றனர்.

    ஆண்  :        கோர்ட்டுக்கு குற்றவாளிகளை கொண்டு செல்லும் வழியில் இது 

                    நடந்தது.

பெண் :        பெண்களை ஏமாற்றும் நடிப்பு சுதேசிகளுக்கு இது ஒரு பாடம் 

                என்கிறார் சமூக ஆர்வலர்.

ஆண்  :        கொடியவர்களை மாய்ந்த அந்த 8 பெண்களுக்கும் தண்டனை

தரக்கூடாது என்கிறது அனைத்திந்திய ஐனநாயக மாதர் சங்கம்”6 

என்று இந்நாடகத்தின் முடிவு அமைந்திருக்கிறது. இதன்வழியே பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள் இயற்கையாக ஏற்படுவன அல்ல. அவை ஆணாதிக்கச் சமூகத்தால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன என்பதை பெண்ணியலாளர்கள் உணர்த்துகின்றன.

நிறைவுரை 

பெண்ணியத்தின் தொடர் முயற்சியின் காரணமாகப் பெண்கள் தங்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை உணர்கின்றனர். அவ்வாறு உணர்ந்ததற்கான அடையாளமாகவே மேற்காணும் ‘நடிப்புச் சுதேசிகள்’ நாடகத்தில் இடம்பெற்ற சுபா ஆணாதிக்கச் சமூகத்தின் அடக்குமுறை எதிர்க்கும் மனஉறுதியைப் பெறுகிறாள். அடிப்படையில்

”பெண்ணடிமைத் தனம் என்பது உலக அரங்கில் பொதுத்தன்மை  வாய்ந்ததாகவே இருக்கிறது.”7 

எனவே அதனை மாற்றும் முயற்சியில் பெண்ணிய இயக்கங்கள் தொடர்ந்து போராடுகின்றன. பெண்களின் நிலை இப்பெண்ணிய இயக்கங்களின் போராட்டங்களால் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது. இருந்தும் பெருமளவில் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து விடவில்லை.

மனித வாழ்வியலின் ஒன்றாகக் கலந்துவிட்ட அம்சங்கள் ஐந்து. அவை இல்லறம், சமயம், பண்பாடு, அரசு, அரசியல் என்பதாகும். சமூகக் கட்டமைப்பில் உள்ள இந்த ஐம்பெரும் அம்சங்களை எந்த ஒரு மனிதனும் துறக்க முடியாது. ஆனால் இவையனைத்தும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவை களாகும். மேலும் இவையனைத்தும் பெண்களுக்கான எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இக்கட்டுப்பாடுகளிலிருந்து பெண்களால் எளிதில் வெளிவர முடியாது. இதில் பண்பாட்டும் சமத்துவமும் குறிப்பிடத்தக்கன.

 அடிக்குறிப்புகள் 

1.   எம்.எஸ்.தம்பிராஜா., மனநோய்களும் மனக்கோளாறுகளும்.,ப.53, காலச்சுவடு., டிசமபர் 2014.

2.   பெ.தூரன்., அடிமனம்., ப.12, அமுத நிலையம், சென்னை – 18., 1957

3.      கே.ஏ.குணசேகரன்., கே.ஏ.,குணசேகரனின் நாடகங்கள்., (பேயோட்டம்), (ஆ.கு.இ).,பக்.120-121 (NCBH – 2013)

4.   மேலது., (பேயோட்டம்)., பக்.129-130

5.   இரா.காளிஸ்வரன்., நாட்டுக்கு சேதி சொல்லி., (நடிப்பு சுதேசிகள்)., பக்.81-82

6.   மேலது., பக்.82-83

7.   இரா.ரங்கம்மாள் வாசுகி., பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும்., ப.14, (அறிவு பதிப்பகம்., சென்னை., 2005)