4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

தற்காலத் தமிழில் புதிய இலக்கணத்தின் தேவை - வ.கஸ்தூரி

 

தற்காலத் தமிழில் புதிய  இலக்கணத்தின் தேவை

வ.கஸ்தூரி

தமிழ்மொழிச் சிறப்புக் கற்கை,

நான்காம் வருடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை.

warankasthuri1284@gmail.com

Tel.no – 0758185090


    இலக்கியம் பலவாய்ப் பல்கிப் பெருகி வளரத் தொடங்கிய காலத்தில் மொழியினை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவானதே பழைய இலக்கணமாகும். அதாவது இலக்கணம் ஒரு மொழியினுடைய அமைப்பினைப் புரிந்து கொள்வதற்கும், மொழியினைப் பயன்படுத்தும் போது ஐயம் ஏற்படின், அவ் ஐயத்திலிருந்து தெளிவு பெறுவதற்கும் சிறந்த கருவியாக அமைகின்றது. இலக்கணம் இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. மாறாக செந்தமிழின் இயற்கையோடு பொருந்திய பிற நிலத்து வழக்குகளையும் உள்ளடக்கியது. இதனை,

    'வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்

     எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி'

எனவரும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு இலக்கணம் என்ற சொல்லை முதன் முதலில் வழங்கியவர் தொல்காப்பியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இலக்கணம் மரபிலக்கணம், வரலாற்றிலக்கணம், ஒப்பீட்டிலக்கணம், அமைப்பிலக்கணம், படைப்பிலக்கணம், மாற்றிலக்கணம், தொடரிலக்கணம், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்ற வகைப்பாட்டிற்கு உட்பட்டு நோக்கப்படுகின்றன. இவை தமது இலக்குகளினாலும், நெறிமுறைகளினாலும், அமைப்பினாலும் வேறுபட்டவையே ஆகும். அந்தவகையில் இம்மேற்கண்ட வகைப்பாட்டினுள் தொல்காப்பியர் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் ஆகிய மூன்றினையும் தனது தொல்காப்பிய நூலில் முதன்மைப்படுத்தி அவற்றை விளக்கிச் சென்றுள்ளார். தொல்காப்பியர் மட்டுமன்றி பழைய இலக்கண ஆசிரியர்களும் இம்மூன்றினையே சிறப்பித்துக் கூறியுள்ளனர். இவ்வாறு பழைய இலக்கண ஆசிரியர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட இம்மூன்றினுள் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமுமே  இன்றைய இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

வாழ்வில் நாம் பயன்படுத்தப்படுத்துகின்ற பொருள்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் காலந்தோறும் மாறி வருவதைப் போல மொழியிலும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றது. அந்தவகையில் தற்காலத்தில் மொழியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை விளங்கிக் கொள்வதற்கும், பூரண தெளிவு பெறுவதற்கும் புதிய இலக்கணத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. வரையறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டது மொழியாகும். இந்த வரையறைகளும், விதிமுறைகளும் இல்லாமல் போகும் போது புதிய முறைகளுக்கேற்ப புதிய இலக்கணத்தை வகுக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

எல்லா மொழிகளுக்கும் இலக்கண வரையறையும், நெறிமுறையும் உண்டு. இவை பேச்சுமொழி, எழுத்து மொழி ஆகிய இரண்டு வழக்குகளுக்கும் பொதுவானதே. தற்காலத்தில் தமிழிலே இலக்கியத்தில் பரவலாகப் பேச்சுமொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே இதற்கேற்ப புதிய இலக்கணத்தை வகுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்காலத் தமிழில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களின் விளைவாக புதிய இலக்கணமொன்றை வகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அவை பற்றி நோக்குவோமானால், தமிழிலே எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்பதை மரபிலக்கணங்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளன. தொல்காப்பியர் உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய சார்பெழுத்துக்கள் மூன்று என்று எழுத்துக்களை வரிசைப்படுத்தி தமிழில் முப்பத்துமூன்று எழுத்துக்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார். இதனை,

      'எழுத்தெனப்படுவ

       அகர முதல்

       னகர இறுவாய் முப்பஃது என்ப

       சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே'  (தொல்.எஃஅ.நூ-01)

எனவரும் சூத்திரத்தின் வாயிலாக தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.

தொல்காப்பியத்திற்கு பின்வந்த இலக்கண நூல்கள் எழுத்துக்களைப் பல்வேறு முறைகளில் குறிப்பிட்டிருந்தாலும் கூட இன்றுவரை வரிவடிவ எழுத்துக்கள் 247 என்ற அடிப்படைக் கணக்கிலிருந்து மாறவில்லை. மேலும் ,,,  முதலான எழுத்துக்கள் தமிழ்மொழியில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றுவரை இந்த இலக்கண நூல்கள் இந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு மொழியியலாளர்களும், பண்பாட்டாளர்களும் நெருங்கி உறவாடும் இக்காலத்தில் மக்களின் பெயர்களையும், நாட்டின் பெயர்களையும், மொழியின் பெயர்களையும் எழுதும் போது இந்த எழுத்துக்கள் தவிர்க்க இயலாத நிலையில் ஆளப்பெற்று வருகின்றன. இதனால் தற்காலத் தமிழுக்கு, குறிப்பாக எழுத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு புதிய இலக்கணம் தேவையானது.

சந்தி இலக்கணத்தைப் பொறுத்தவரையில் இன்றைய நிலையில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள்களிலும், மாத இதழ்களிலும், வார இதழ்களிலும் வருகின்ற கதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதும் எழுத்துக்களைப் பார்க்கும் போது சந்தி இலக்கணத்தில் குழப்பநிலை இருப்பதை அவதானிக்க முடியும். பழங்காலத் தமிழுக்குரிய சந்தி இலக்கணத்தை இன்றைய தமிழில் பயன்படுத்துவது என்பது பொருத்தமற்றதேயாகும். வழக்கிழந்து போன பழைய சந்தி விதிகளை விலக்கி விட்டு எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தி விதிகளை முறையாக அறிவுறுத்த வேண்டும். புதிய சந்தி விதிகள் அமையும் போது சந்தி இலக்கணத்தில் ஓர் ஒழுங்குமுறை நிலவ வாய்ப்புள்ளது. கஃறீது, முஃடீது, சிஃறாழிசை, பஃறாழிசை முதலான தொடர்களிலுள்ள சந்தி விதிகளை இக்காலத்தில் பயன்படுத்த முடியாது. தவிர்க்க இயலாதனவாகவும், தெளிவாக உணர்ந்து கொள்ளத்தக்கனவாகவும் அமைந்துள்ள புதுச் சந்தி விதிகளை முறைப்படுத்தி வழங்க வேண்டும். ஆகவே தற்காலத் தமிழ் மொழியியல் வளர்ச்சிக்கேற்ப புதிய இலக்கணம் தற்காலத் தமிழுக்குத் தேவையானதாகும்.

தொகைகளை எடுத்துக் கொண்டோமானால், தொகைக்குரிய புதிய பொதுவிதிகளை உருவாக்க முடியும் என்றாலும் இக்காலத்தில் தோன்றியுள்ள சில புதிய தொகைகள் அந்த விதிகளுக்கு இடந்தராமல் சிக்கல்களை உருவாக்குகின்றன. உதாரணமாக, 'மக்கள் தொகை' என்ற தொடர் இலக்கண விதிகளின்படி 'மக்கட்டொகை' என்று வர வேண்டும். ஆனால் இன்றைய தமிழில் இப்படிப்பட்ட சந்திவிதிகளைப் பயன்படுத்துவதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. இதனால் சிலர் 'மக்கள் தொகை' என்றும், வேறுசிலர் 'மக்கட் தொகை' என்றும் எழுதுகின்றனர். இவ்வாறு எழுதும் போது ''கர, ''கர மெய்ம்மயக்கத்திற்கு உட்படுகின்றது. ஆனால் இத்தகைய மெய்ம்மயக்கத்திற்கு தமிழ் மொழியில் இடமில்லை. 'மக்கள் தொகை' என்பதை எவ்வித சந்தியும் இல்லாமல் எழுத அனுமதிக்க வேண்டும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க வேண்டுமாயின் புதிய இலக்கணத்தின் தேவை தற்காலத் தமிழுக்கு அவசியமானது.

மரபிலக்கணங்கள் பால் பகுப்பு முறையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்கள் பற்றிக் கூறுகின்றன. இந்தப் பால் பகுப்புக்குரிய அடிப்படைகளை விளங்கிக் கொண்டால் மட்டுமே காலப்போக்கில் பால் பகுப்பில் மாற்றம் ஏற்படும் போது அவற்றைச் செம்மைப்படுத்த முடியும். பழந்தமிழில் பால் பகுப்பானது 'எழுவாய்-பயனிலை இயைபுக் கொள்கை', 'பதிலிடு மாற்றுக் கொள்கை' என்ற இரு அடிப்படையில் பகுக்கப்பட்டது. இவற்றுள் பயனிலைகள் ஆன், ஆள், ஆர், அது, அன என்ற ஐந்து விதிகளைக் கொண்டமைந்துள்ளன. எடுத்துக்காட்டுகளாக,

     'அவன் வந்தான்'

     'மாலா வந்தாள்'

     'அவர் வந்தார்'

     'அது வந்தது'

     'அவை வந்தன'

என்பவற்றைக் கூறலாம். தன்மை, முன்னிலை தவிர்ந்த தமிழிலுள்ள எல்லாப் பெயர்களுக்கும் இந்த பயனிலை விகுதிகளையே பயன்படுத்துகின்றோம். ஆனால் தற்காலத்தில் 'கள்' என்ற விகுதியும் பயனிலைக்குரியதாகக் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக,

     'அவர்கள் வந்தார்கள்'

என்பதைக் குறிப்பிடலாம். தற்காலத் தமிழில் புதிதாக வந்துள்ள அவர்கள் என்ற சொல்லாட்சியில் வரும் 'அவர்' என்ற சொல் பழந்தமிழில் பன்மைப் பொருளைக் குறித்தது. ஆனால் தற்காலத் தமிழில் 'அவர்கள்' என்ற சொல் பன்மைப் பொருளினையும், 'அவர்' என்ற சொல் ஒருமைப்  பொருளினையும் குறித்து நிற்கின்றன.

தற்காலத் தமிழுக்கு ஏற்புடையவாறு பால் பகுப்பை அமைத்தால் அப் பால் பகுப்பு ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்றவாறு அமைய வேண்டும். ஆனால் தற்காலத் தமிழிலே 'அவர்', 'புலவர்', 'ஆசிரியர்', 'அமைச்சர்' முதலான சொற்கள் எல்லாம் தற்காலத்தில் உயர்பால் என்றே கொள்ளப்படுகின்றன. மாறாக பழந்தமிழில் வழக்கிலே 'அவர்' என்ற சொல் பலர்பாலுக்குரியதாகக் கருதப்படுவதோடு, உயர்வு கருதி சிலவேளைகளில் ஒருமைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும். திருக்குறளில் இப்படிப்பட்ட ஆட்சியை மிகுதியாகக் காணமுடியும். எடுத்துக்காட்டு,

      'அவர் நெஞ்சேவர்க் காதல் கண்டும்

       எவன்நெஞ்சே நீயெமக் காகாதது'

மேலும் இக்காலப் பேச்சுத் தமிழுக்கு இந்தப் பால்பகுப்பு பொருந்தாததொன்றாகும். இலக்கியத் தமிழிலுள்ள பால்களை விட பேச்சுத் தமிழிலே அதிகமான பால் உச்சரிப்புக்களை வழங்குகின்றோம். எடுத்துக்காட்டாக, ஆண்பிள்ளையை 'பெண்பால்' கொண்டு அழைக்கும் பாங்கும், அஃறிணைப் பொருளான செல்லப்பிராணிகளை மகன் என்ற உயர்திணைப் பொருளாகக் கூறும் மரபும் பேச்சு மொழியில் அதிகம் வழக்கிலுள்ளன. ஆகவே எக்காலத்திற்கும் பொருந்தும் மற்றும் மாற்றத்திற்குட்படாத பால்பகுப்பு முறையினைப் பெறுவதற்கு புதிய இலக்கணம் தேவை.

'அல்ல' என்ற சொல் இக்கால வழக்கில் ஐம்பால் மூவிடப் பொதுவினையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அல்ல என்பதை அல்லன், அல்லர், அன்று ஆகிய திரிபு வடிவங்களில் பெற வேண்டுமாயின் 'அவர்கள்' என்ற எழுவாய்க்கு ஏற்புடைய ஒரு வடிவத்தினை நாம் உருவாக்க வேண்டும். அதாவது அவர்கள் என்ற எழுவாய்க்குரிய பயனிலையை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது 'அவர்கள் அல்லர்கள்' என்றவாறு அமையும். அவன், அவள், அவர்கள், அது, அவை முதலானவை எழுவாயாகக் கொள்ளத்தக்கவை தானா? என்பதும் ஆராயத்தக்கது. ஆகவே இவை பற்றித்  தெளிவினைப் பெறுவதற்குப் புதிய இலக்கணம் தேவையாகவுள்ளது. 

மரபிலக்கணங்கள் தமிழிலுள்ள சொற்களை பெயர், வினை, இடை, உரி என நான்காக வகைப்படுத்தியுள்ளன. தமிழிலுள்ள எல்லாச் சொற்களையும் இந்நான்கு வகைப்பாட்டிற்;குள் உள்ளடக்கியுள்ளன. இன்றைய நிலையில் அந்நான்கு வகைப்படுத்தல்களுக்குள்ளே எல்லாச் சொற்களையும் அடக்கிவிட முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தற்காலத்திற்கு ஏற்றாற்போல புதிய முறையில் சொல் வகைப்பாட்டை அமைக்க வேண்டுமாயின் புதிய இலக்கணம் தற்காலத் தமிழுக்குத் தேவையாகவுள்ளது.

பழந்தமிழில் வினைச் சொற்கள் 'இறந்தகாலம்', 'இறப்பு அல்லாத காலம்' என்ற இரண்டு காலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. ஆனால் இடைக்காலத் தமிழிலும், பிற்காலத் தமிழிலும் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களுக்கும் தனித்தனி இடைநிலைகளைக் கொண்டமைந்துள்ளன. இக்காலத் தமிழில் இம்மூன்று காலங்களின் பயன்பாட்டினைக் காணக்கூடியதாக இருப்பினும் சில வினை திரிபுகளால் காலப் பாகுபாட்டில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதாவது துணை வினைகளின் பயன்பாடுகளைக் கொண்டே இக்காலத்தில் வினை திரிபுகள் பெரிதும் இடம்பெறுகின்றன. இரு, விடு, தொலை முதலான துணை வினைகள் 'செய்' என்ற வினையெச்சத்தோடு சேரும் போது,

        'வந்திருந்தான்'

        'வந்து விட்டான்'

        'வந்து தொலைந்தான்'

என்ற வினைத் திரிபுகளை உருவாக்குகின்றன. போ, பார், வேண்டு, கூடு முதலான துணை வினைகள் 'செயவென்' என்ற எச்சத்தோடு சேரும்போது,

        'வரப்போகிறது'

        'ஓடப் பார்த்தான்'

        'பாட வேண்டும்'

        'படிக்க முடியாது'

முதலான கிளவிகளை உருவாக்குகின்றன. குறிப்பிட்ட சில வினைகள் கூறுபாட்டு துணை வினைகளாகவும், வினை நோக்குத் துணை வினைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே தற்கால வினைத் திரிபியல் வளர்ச்சிக்கேற்ப மற்றும் இலக்கண மாற்றத்திற்கும் ஏற்ப புதிய இலக்கணம் தமிழ்மொழிக்குத் தேவையானதாகும்.

மரபிலக்கணங்களில் தொடரிலக்கணம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஆனால் அவை முழுமையான தொடரிலக்கணத்தைப் பற்றிக் கூறவில்லை. தொடரிலக்கணம் பற்றிய ஆராய்ச்சி அண்மைக் காலத்தில் மிக விரிவாக வளர்ந்து வருகின்றது. இவ்வாராய்ச்சியின் நோக்கம் 'தமிழ்மொழிக்கு விரிவான தொடரிலக்கணம் அமைய வேண்டும்' என்பதேயாகும்.

     'எனக்கு அவரைத் தெரியும்'

     'அவனுக்கு கால் வலிக்கிறது'

என்ற தொடர்களை இலக்கண நோக்கில் பார்க்கும் போது எழுவாய் அற்ற தொடர்களாகவே அமைந்துள்ளன. இலக்கணத்தில் எழுவாய் இல்லாத தொடர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மேற்கண்ட தொடர்கள் 'தோன்றா எழுவாய் கோட்பாட்டுக்கு' தொடர்புபட்டது போல் இருந்தாலும் இந்தத் தொடர்களைத் 'தோன்றா எழுவாய்க்குரிய' தொடர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

'கண்ணன் இங்கு வந்திருக்கிறார், உங்களைப் பார்த்துப் பேச விரும்புகிறார்'

ஆகிய தொடர்களில் 'உங்களைப் பார்த்துப் பேச விரும்புகிறார்' எனும் தொடருக்கு எழுவாய் இல்லை. அதற்கு முன்னுள்ள தொடரில் வரும் 'கண்ணன்' என்ற எழுவாயே இந்தத் தொடருக்கும் எழுவாயாக அமைகின்றது. ஆகவே தொடரிலக்கணத்தில் நிலவும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தற்காலத் தமிழில் புதிய இலக்கணம் தேவையாகின்றது.

பழைய இலக்கணங்கள் 'உறழ்ச்சி முடிபு' என்றதொரு முடிபு பற்றியும் கூறியுள்ளதை அவதானிக்க முடியும். உறழ்ச்சி முடிபு என்பது ஒரு கருத்துக்கு இருவேறு தொடர்களைக் காண்பதாகும். இங்கே இரண்டு தொடர்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவை பொருந்தாது. உதாரணமாக, 'பூஞ்சோலை', 'பூச்சோலை' இரண்டுமே இலக்கணத்தில் சரியென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட இருவேறு தொடர் அமைப்புக்களைப் பார்க்கின்றபோது தற்கால நிலைக்கேற்ப ஒன்றை நாம் தரப்படுத்த வேண்டியிருக்கும். மாறாக இரண்டையும் ஏற்றுக் கொண்டாலும் எழுதும் போது ஒரே நெறியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நடை, நயம் காரணமாகவும், யாப்பு நோக்கிலும் இருவேறு நடைகளை அவ்வப்போது ஒருவரே மேற்கொண்டாலும் கூட அதை நாம் குறையாகக் கருத முடியாது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தரப்படுத்துவதற்குப் புதிய இலக்கணம் அவசியமாகின்றது.

தமிழ் இலக்கண மரபென்பது பெரிதும் சொல்லிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட மரபேயாகும். சொற்களுக்கிடையேயுள்ள வாக்கிய உறவுகள் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கண நூல்களில் அரிதாகவே காணப்படுகின்றன. வாக்கிய அம்சங்களும் சொல்லிலக்கண அடிப்படையிலேயே விளக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் சொற்களுக்கிடையேயுள்ள வாக்கிய உறவுகள் பற்றித் தெளிவடைவதற்குப் புதிய இலக்கணம் தேவையானது.

தமிழில் சொல்லமைப்பு எவ்வாறு மாறி வந்துள்ளது?, எழுத்து வழக்குக்கும், பேச்சு வழக்குக்கும் இடையேயுள்ள உறவென்ன?, வேற்றுமை இலக்கணத்தை இக்காலத் தமிழுக்கு ஏற்ப எப்படி புரிந்து கொள்வது? என்பன போன்ற அரிய செய்திகளை தற்காலத்திற்கேற்ப விளக்குவதற்குப் புதிய இலக்கணம் அவசியமானதாகும்.

மொழிப் பயன்பாடு என்பது இலக்கணத்தில் இன்றியமையாத அம்சமாகும். அந்தவகையில் இம்மொழிப் பயன்பாடானது சரியானதாகவும், தெளிவானதாகவும் அமைதல் வேண்டும். இலக்கணத்தைப் புரிந்து கொண்டு இலக்கணப் பிழை இல்லாத தொடர்களை உருவாக்கத் தெரிந்திருந்தாலும் கூட அவற்றை உரிய முறையில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தினால் தான் தொடர்களால் குறிப்பிட்ட விடயங்களை முறைப்படி வழங்க முடியும். கருத்துப் பரிமாற்றமும் சிறப்பாக நிகழும். தொடர்களைச் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே மொழியைத் திறம்பட அமைக்க முடியும். ஒரே பொருளில் நான்கைந்து தொடர்களை அமைக்க முடியும் என்ற சூழலில் எத்தகைய தொடர் எத்தகைய சூழலில் பொருந்தும் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்தத் தொடரை தேர்ந்தெடுக்கவும், கட்டுக்கோப்பான செய்திகளை வழங்கும் போதும், இணைப்பிடைச் சொற்களைப் பயன்படுத்தும் போதும் சரியான மொழிப் பிரயோகத்தினை வழங்க முடியும். அப்படியானால் தனித்தனி தொடர்கள் இடம்பெறுமே தவிர முழுமையான கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்க சாத்தியப்பாடில்லை. இப்படிப்பட்ட செய்திகளைக் கற்பிக்கும் வகையிலான புதிய இலக்கண மரபொன்று தற்காலத் தமிழுக்கு தேவைப்படுகின்றது.

மேலும் மரபுவழி இலக்கணக் கருத்துக்களோடு நவீன மொழியியல் கருத்துக்களையும் இணைக்க வேண்டிய தேவையுள்ளமையால் தற்காலத் தமிழில் புதிய இலக்கணத்தின் தோற்றம் அவசியமானது. இதனாலேயே 'பொற்கோ' எனும் அறிஞர் தனது 'இக்காலத் தமிழ் இலக்கணம்' என்ற நூலில் புதிய இலக்கணத்தின் தேவை பற்றி பின்வருமாறு கூறுகின்றார். 

     'இன்றைய இலக்கணத் தமிழுக்கு நன்னூலும், தொல்காப்பியமும் போதுமானவையாக அமையவில்லை. ஆகவே இன்றைய தமிழுக்கு ஓர் புதிய இலக்கணம் தேவை'

தமிழ் இலக்கணம் பெரிதும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகின்றது. இந்நன்னூல் பண்டைய கால மற்றும் இடைக்காலத் தமிழின் அமைப்பை விளக்குகின்றது. நன்னூலார் காலத்துத் தமிழிலிருந்து இக்காலத் தமிழ் பெருமளவு மாற்றமடைந்துள்ளது. தமிழிலக்கண மரபு பற்றியும், தமிழ்மொழியின் பண்டைக் கால, தற்கால இலக்கண அமைப்பு பற்றியும் பல கட்டுரைகளும், நூல்களும் மொழியியல் நோக்கில் ஆங்கிலத்திலும், தமிழ்மொழியிலும் வெளிவந்துள்ளன. இவை பெரும்பாலும் ஆசிரியர்களையோ, மாணவர்களையோ சென்றடைவதில்லை. கற்பித்தல் முறையும், பாடநூல்களும் இன்னும் பழைய இலக்கண மரபினையே முதன்மைப்படுத்துகின்றன. ஆகவே தற்கால மொழியியல் வளர்ச்சிக்கேற்பவும், இலக்கண மாற்றத்திற்கேற்பவும் புதிய இலக்கணம் தற்காலத் தமிழுக்கு தேவையானது.

முடிவுரை

    எனவே, தொகுத்து  நோக்குமிடத்து  இலக்கியத்தின் பல பரிமாண படைப்புகளுக்கு இலக்கணம் காலாய் அமைவதோடு, காலத்திற்கேற்ப மொழியினை மாற்றத்திற்குட்படுத்தி, அம்மாறுதல்களிலிருந்து தெளிவுபெறச் செய்யும் சிறந்த கருவியாகவும் செயற்பட்டும் வருகின்றது. இலக்குகளினாலும், நெறிமுறைகளினாலும், அமைப்பினாலும் வேறுபட்டதாக அமைகின்ற இலக்கணமானது, வரையறை, நெறிமுறைக்குள் உட்பட்டு தமது மாற்றங்களை நிகழ்த்திய வண்ணமே உள்ளன. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று மொழி நாதங்களின் அடிப்படையில் அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும் ஏற்றாற்போல புதிய மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது. காலத்திற்கு உட்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் பழைய இலக்கணம் மட்டும் போதாது. என்றும் மாற்றத்திற்குட்படாத வகையிலான புதிய இலக்கணம் தேவையாகின்றது. அதற்கேற்ப தற்காலத் தமிழில் புதிய இலக்கணத்தின் தேவைப்பாடும் நன்கு உணரப்படுகின்றது. அத்தோடு காலத்திற்கு ஏற்புடையவாறு புதிய இலக்கணம் அமைக்கப்படுவதால் அல்லது வகுக்கப்படுவதன் மூலம் தமிழிலக்கணத்தின் புதிய பரிமாணத்தினையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இவையனைத்தும் புதிய இலக்கணத்தின் தேவையினையே நன்கு  எடுத்துரைக்கின்றன.

 உசாத்துணை நூல்கள்

  1. பொற்கோ., (1998), 'இலக்கிய உலகில் புதிய பார்வை- தொகுதி 3', பூம்பொழில் வெளியீடு, சென்னை.
  2. சண்முகதாஸ்,., (1997), 'தமிழ்மொழி இலக்கண இயல்புகள்', பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு.
  3. சண்முகம்,செ., (1998), 'சாம்ஸ்கியின் புதுமாற்றிலக்கணம்', சென்னை, கவிதா பதிப்பகம்.
  4. பரமசிவம்,,கோ., (1990), 'இலக்கண சூடாமணி', சரமாஸ்சான டோரியம் அச்சகம், புதுக்கோட்டை.
  5. வேலுப்பிள்ளை,., (2007), 'தமிழ் வரலாற்றிலக்கணம்', குமரன் புத்தக இல்லம், கொழும்பு.