4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

இலங்கையின் முதல் சுதந்திரக் கிளர்ச்சி – 1818 - திரு. எஸ்.கே.சிவகணேசன்

 

இலங்கையின் முதல் சுதந்திரக் கிளர்ச்சி – 1818

திரு. எஸ்.கே.சிவகணேசன்  

B.A Hons (UOJ),PGDE (OUSL), M.Phil (UOJ)

Justice of Pease (Whole Island)

தலைவர் / முதுநிரைவிரிவுரையாளர்

வரலாற்றுத்துறை

கலை/கலாசாரபீடம்

கிழக்குபல்கலைக்கழகம், இலங்கை

shivahaneshank@esn.ac.lk

+94771740685 (WhatsApp)

 

ஆய்வுச்சுருக்கம் (Abstract)

இலங்கைத்தீவு  இந்தியாவிற்கு அண்மையில், இந்து சமூத்திரத்தின் நடுவன்   அமைந்துள்ளது. இத்தீவு தனித்துவமான, தொன்மையான நீண்ட கால வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது. புரதான காலம் முதல் இந்தியாவோடு இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் கலாசார ரீதியிலான வரலாற்றுத்தொடர்புகளை கொண்டிருக்கின்றது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பல நூற்றாண்டு காலம், ஐரோப்பிய இனத்தவர்கள் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தனர். அவ்வகையில் இலங்கையில் 1796 முதல் அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது (1818). அன்னிய ஆட்சியாளர்களுக்கெதிராக இலங்கையில் 1796, 1848, 1915 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆயினும் 1818 ஆம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சி முதன் முதலில் மக்களால்  அன்னியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு என்ற வகையில் முக்கியத்துவமுடைதாக காணப்படுகின்றது .

 

கலை சொற்கள் (Keywords): இந்து சமூத்திரம், காலனித்துவம், கிளர்ச்சி, இலங்கைத்தீவு.

 

அறிமுகம் :

இலங்கை வரலாற்றில் பல வரலாற்றுச்சம்பவங்கள் இருப்புக் கொண்டுள்ளன.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 1818, 1848 ஆம் ஆண்டுக்கிளர்ச்சிகள் அவற்றில் முக்கியத்துவம் உடையன. இதேபோன்று 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரமும் முக்கியத்துவமுடையது. இது இலங்கையில் இடம்பெற்ற முதல் இனக்கலவரம் என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். இக்கட்டுரையில் 1818 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்டிக்கலகத்திற்கான காரணங்கள், கலகத்தின் போக்கு, விளைவுகள், அதன் முக்கியத்துவம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். இக்கிளர்ச்சி முன்னைய கண்டி இராச்சியத்தின் ஊவா மற்றும் வெல்லச பிரதேசங்களில் 1817 இன் கடைசி பகுதி முதல் 1818 இன் முற்பகுதி வரை நடைபெற்றது. இதனால் ஊவா வெல்லச கிளர்ச்சிஎனவும் அழைக்கப்படுகின்றது. மேலும் கண்டிக் கிளர்ச்சிமற்றும் இலங்கையின் முதல் விடுதலைப்போர்எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கண்டி இராச்சியம் 1469 இல் சேனாசம்பத விக்கிரமபாகு எனும் மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது. கண்டி இராச்சியத்தின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் வாரிசுகள் இல்லாமல் 1739 இல் இறந்த போது, அங்கு சிம்மாசனத்துக்கான இடைவெளி ஒன்று பெரும் சவாலாயிற்று. இது அவ்விராச்சியத்தின் சிம்மாசனத்துக்கு புதிய அரச வம்சத்தை கொண்டு வர வழி வழிவகுத்தது. இதன் விளைவாக  1739 முதல் 1815 வரையுள்ள 76 வருடகாலம் தென்னிந்திய நாயக்க வம்சத்து மன்னர்கள் அதிகாரம் செலுத்த முடிந்துத. இவ்வம்ச ஆட்சி, கண்டி பிரதானிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திற்று.  இதனால் மன்னனுக்கும் பிரதானிகளுக்கும்  இடையிலான முரன்பாடுகள் அதிகரித்துக்கொண்டன. இது கண்டி இராச்சியத்தின் பலவீனத்தை வலுப்படுத்தி அன்னியர் கைகளில் வீழ்வதற்கு வழிவகுத்தது (Dewaraja, 1985).

 ஆங்கிலேயருக்கு முன்னர், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில்  அதிகாரத்தில் இருந்த அன்னியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரினால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அவை கண்டி இராச்சியத்தின் புவியியல் அமைப்பும் கெரில்லா தாக்குதலுக்கான வாய்புகள், ஆட்சியாளர்களின் ஐக்கியம், மக்களின் பூரண ஆதரவு என்பனவாகும் (Queyroz and Perera, 1992). 1796 “கியூ ஒப்பந்தம்மூலம் ஒல்லாந்தர்களிடமிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேச ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆங்கிலேயர் கூட ஏறத்தாழ 20 வருடங்களுக்கு பிறகே கண்டி இராச்சியத்தை கைப்பற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு அந்த இராச்சியம் பலமும் பாதுகாப்பும் கொண்டதாகக்  காணப்பட்டது (சிவசுந்தரம்,2007).   

சுமார் 345 வருடங்கள்  புகழ்பூத்திருந்த கண்டி இராச்சியம் , 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி ஆங்கிலேயர் பிரதானிகளோடு செய்துகொண்ட கண்டி ஒப்பந்தம்மூலம் அவர்கள் வயமாயிற்று (Vimalananda, 1970).   சுமார் மூன்று வருடங்களின் பின்னர் ஆங்கிலேயருடைய நிருவாக, சட்ட நடவடிக்கைகளில் அதிருப்பி கொண்ட கண்டி பிரதேசவாதிகள் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியை மேற்கொண்டனர் (1817/18).

1803 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தில் தமது மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ளும் நோக்கில், ஆளுனர் பிரட்ரிக் நோத் தலமையில் படையெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இப்படையெடுப்பு ஆங்கிலேயருக்கு படுதோல்வியைக் கொடுத்திருந்தது. இருந்தாலும் பின்னர் முன்னைய தோல்வியை படிப்பினையாக்கிக்கொண்டு  நன்கு திட்டமிட்டு ஆளுனர் பிறவுன்றிக் (1812 -1820) மேற்கொண்ட படையெடுப்பபில் கண்டி இராச்சியத்தை அவர்களால் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது (Tennakoon,2021).

கண்டி ஒப்பந்தத்தின்படி ஆங்கிலேயர் மலையக இராச்சியத்தை நிருவகிக்கத்தவறினர். ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின்படி பௌத்தசமயம் மற்றும் பௌத்த பண்பாட்டைப்பேண இனங்கியிருந்தனர் ((Vimalananda, 1970). ஆனால் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஆங்கிலேய ஆணையாளரினால் பௌத்த சமயத்தை பேணிக்கொள்ள முடியவில்லை. அது குறித்து கவனம் செலுத்தப்படவுமில்லை. அதுமட்டுமல்ல பௌத்த சமயக்கிரியைகள் விழாக்களின் போது மன்னன் நேரில் கலந்து கொள்வதனை மக்கள் பெரிதும்  விரும்பினர். ஆனால் மன்னனின் இடத்தில்  பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியை வைத்து பார்க்க  மக்கள் விரும்பவில்லை. இதனை கண்டி மக்கள் வெறுத்துவந்தனர். ஆங்கிலேயர் கண்டி மக்களை மதிக்கத்தவறினர். கண்டி மக்களைப் பொறுத்தவரையில் மன்னன் மதிப்பு மிக்க ஒருவனாகக் காணப்பட்டான். மன்னனிடம் நேரில் கண்டு நீதி மற்றும் ஆசிபெறவும் விரும்பினர். இதனை நிறைவேற்றக் கூடியவகையில் ஆங்கிலேயருடைய நிருவாகம் அமைந்திருக்கவில்லை. இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக  மக்கள் கிளர்ச்சியை முன்னெடுத்திருந்தனர். 

ஆங்கிலேயரினால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்ட பின்னர் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த பல மக்கள் பிரிவினர் அங்கு நுழைந்து கொண்டனர். கீழ் நாட்டு சிங்களவர் (கரையோரச் சிங்களவர்) கண்டி பிரதேசத்தினுள் வந்து கூடிக்கொண்டனர். இதனால் கண்டி இராச்சியத்தின் தனித்துவமான பண்பாடு சீரழிந்து போயிற்று. இதனை கண்டியர்கள் வெறுத்தனர். (Vimalananda,1970).

கண்டி இராச்சியமானது பிரித்தானிய வதி விடப்பிரதிநிதியைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றினால் நிருவகிக்கப்பட்டது. நிதி, வருமானம் தொடர்பிலான கடமைகளுக்காக தனித்தனி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் இக்குழுவில் சமகாலத்தில் காணப்பட்ட இராணுவத்தளபதியும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார். கண்டி இராச்சியத்தின் முதல் ஆங்கில வதிவிடப்பிரதி நிதியாக ஜோன் ஒய்லி (John D’oyly) நியமிக்கப்பட்டார் (Lanka Library Forum,2014 ).

இப்புதிய நிருவாக அமைப்பின் அணுகுமுறையில் கண்டி மக்கள் அதிருப்பி கொள்ள நீண்டகாலம் செல்லவில்லை. மிக முக்கியமாக நீண்ட காலமாக இருந்து வந்த முடியாட்சி முறமை இல்லாதொழிக்கப்பட்டது. மன்னனை மாற்றவே ஆங்கிலேயரின் உதவியை பிரதானிகள் நாடியிருந்தனர். ஆனால் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. மன்னன் அன்னிய நாட்டிலிருந்து கொண்டு, அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியால் ஆளுகின்ற முறமையினை கண்டி மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பபட்டுக்கொண்டது. இதனால் பிரதானிகள் உள்ளிட்டவர் மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் ( Lanka Library Forum, 2014).

தான் கண்டி மன்னனாகும் நோக்கிலேயே கிளர்ச்சியாளர்கள் பக்கம் மகா அதிகாரம் எகலபொல இணைந்திருந்தான். கிளர்ச்சி தோல்வி கண்டதனால்  கண்டி இராச்சியத்தின் நிருவாகப்பொறுப்பை ஆங்கிலேயர் நேரடியாக ஏற்றுக்கொண்டனர். அதனால் அவனது எண்ணம் தவிடுபொடியாயிற்று.

விக்கிரம இராசசிங்கனின் கொடுங்கோண்மை ஆட்சி காரணமாக ஆங்கிலேயர் படையெடுத்த போது அவர்களுக்கு கண்டி மக்கள் ஆதரவாக செயற்பட்டிருந்தனர். ஆனால் அந்த ஆதரவு  நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆங்கிலேயரினால் கண்டி ஒப்பந்தம் சரியாக நடமுறைப்படுத்தப்படாமை மற்றும் ஆங்கிலேயர் செயற்பட்டுக் கொண்ட விதம் என்பனவற்றினால் மக்கள் அவர்கள் மீது வெறுப்புக்கொண்டனர். மன்னர் ஆட்சி நிலவியபோது பிரதானிகள் மன்னனுக்கு அடுத்ததாக இருந்தனர். இப்போது பிரதானிகள் மதிக்கப்படவில்லை. பிரதானிகளை விட உயர்பதவிகளில் ஆங்கிலேயர்கள் அமர்த்தப்பட்டனர். இவைபோன்ற காரணங்களினால் ஆங்கிலேயர் ஆட்சியையும் அவர்களின் நிருவாகத்தையும் பிரதானிகளும் மக்களும்  வெறுக்கத்தொடங்கினர்.

இது ஒரு புறமிருக்க கலகத்திற்கு வேறுகாரணங்களும் இருந்தன.  மன்னராட்சிக்காலத்தில் பிரதானிகள் பெற்று வந்த சலுகைகள் மற்றும் உரிமைகள் இல்லாது ஒழிக்கப்பட்டன. பிரதானிகளின் பிரதான வருமான மார்க்கங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இச்செயற்பாடுகள் பிரதானிகள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது    ( Lanka Library Forum, 2014).

கண்டி இராச்சியத்தின் நிருவாகம்   ஆங்கிலேய வதிவிடப்பிரதிநிதியைக் கொண்ட ஒருகுழுவால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆங்கிலேய உத்தியோகத்தர்களின் தொகை கண்டி நிருவாகத்தினுள் அதிகரித்துக் கொண்டது. தமது அதிகாரங்களும் அனுபவித்து வந்த சலுகைகளும் பறிக்கப்பட்டுவிட்டதை பிரதானிகள் உணர்ந்தனர். எனவே அவற்றினைப் பாதுகாக்கவேண்டுமாயின் ஆங்கிலேயர் ஆட்சி இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்கு சரியான வழியாக கிளர்ச்சியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

வெல்லச பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கென தனியான முகாந்திரம் (நிருவாக பிரிவு) ஒன்றை ஆங்கிலேயர் ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆங்கில வதிவிட பிரதிநிதி ஜோன் பெய்லி என்பவரின் சிபார்சுக்கு அமைய இப்புதிய நிருவாக நியமனம் வழங்கப்பட்டது. இதன் படி ஹச்சி மரைக்கார் என்பவர் மெடிக்கே பிரதேசத்தின் முகாந்திரமாக (தலமை நிருவாகி) நியமிக்கப்பட்டான் (Vimalananda.T,1970) இதன் மூலம் சிங்கள நிருவாக தலைவர் திசாவையின் அதிகாரம் அலட்சியம் செய்யப்பட்டது. நீண்டகாலமாக தனித்துவமான பண்பாட்டு அம்சங்களுடன் கூடிவாழ்ந்து வந்த சிங்கள மக்கள் மத்தியில் இவ்வேற்பாடு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் கிளர்ச்சியைத் தூண்டியதாக இரண்டு சம்பவங்கள் அமைந்திருந்தன. கண்டியிலிருந்த ஆங்கில வதிவிட பிரதிநிதி ஜோன் பெய்லிக்கு தெரியாமல், மதுகலே உடகபட நிலமே என்பவர் புனித சின்னங்கள் அடங்கிய பேழையை (தந்த தாதுக்கள்) கவர்ந்து கொண்டார் (செப்.1816). அதுமட்டுமல்லாது கண்டி இராச்சியத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் வீழ்ச்சிக்கும், தங்கள் இனம் சார்ந்த சுதேசி ஒருவரை மன்னனாக நியமிக்கவும் தெய்வ ஆசி வேண்டி கதிர்காமம் மற்றும் பின்தென்ன அமைய பெற்றுள்ள தெய்வங்களுக்கு அவர் வேள்வி பூஜைகளை நடாத்தியிருந்தார். இச்செயற்பாடுகளை ஆங்கில ஆட்சியாளர்கள் தேசத்துரோக குற்றமாக கருதினர். இதனால் மடுகல்லே அரச பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டார். அவரது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு, விற்பனை செய்யபப்பட்டு, அந்நிதி அரச கணக்கில் சேர்க்கப்பட்டது (Lanka Library Forum, 2014).

வெல்லச பிரதேசத்தில் வில்பாவே என்பவன் தான் நாயக்க வம்சத்து இராஜகுமாரன் எனக்குறிப்பிட்டு, கதிர்காமக் கடவுள் கண்டி மன்னனாக தன்னை நியமித்ததாகவும் பிரகடனப்படுத்தினான்.  துரைச்சாமிஎன்ற இயற்பெயரைக் கொண்ட இவன், நாயக்க வம்சத்தவர் சூடும்   கீர்த்தி ‘” எனும் விருதுப்பெயரையும் சூடிக்கொண்டான்.

கண்டி இராச்சியத்தின் உரிமை கோரும் வில்பாவே, ஊவா வெலசல பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்யும் நோக்கில் அங்கு சென்ற பதுளை உதவி அரசாங்க அதிபர் சில்வெஸ்ரர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் முகாந்திரம் ஹச்சி மரைக்கால் அகியோர் அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து அங்கு பதட்ட நிலையேற்ப்பட்டுக்கொண்டது. கிளாச்சியும் தொடக்கி வைக்கப்பட்டது (Tennakoon,2021).

1817 செப்ரம்பர் 11 ஆந் திகதி, வில்பாவே, அம்பு வில்ல தரித்த 200 வேடர்களையும் அழைத்துக்கொண்டு ஊவா வெல்லச-விந்தன ஆகிய இடங்களுக்கு ஊடாக உடறுத்து சென்றான். அப்போது அன்னியர் நிருவாகத்தில் அதிருப்தியடைந்திருந்த ஒரு தொகைப்பிக்குகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். மேலும் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு தொகை பிக்குகளும் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டனர். இப்பிரதேசங்களின் பிரதானிகளும் வில்பாவேக்கு ஆதரவு வழங்கினர். இதனால் கிளர்ச்சி வேகமாக விரிவுபடுத்தப்பட்டது (Lanka Library Forum, 2014).

உதவி அரசாங்க அதிபர், முஸ்லிம் முகாந்திரம் ஆகியோரின் கொலையைத் தொடர்ந்து எழுந்த கலகச் சூழ்நிலையை சமாளிக்க ஆங்கிலேயரினால் அனுப்பி வைக்கப்பட்ட ஊவாவின் திசாவை கெப்பிற்றிபொல கலகக்காரர்களுடன் சேர்ந்து கொண்டான். அதுமட்டுமல்ல கலகத்திற்கு கெப்பிற்றிபொலவே தலமை தாங்கினான். வில்பாவேயைப் பயன்படுத்தி கண்டி இராச்சியத்தின் மன்னர் பதவியை கைப்பற்றுதே கெப்பிற்றிபொலவின் நோக்காகக் காணப்பட்டது (Vimalananda.T,1970).

இதனைத்தொடர்ந்து தும்பறை, வாகெட்ட மற்றும் மேல் சப்பிரகமுவ பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதானிகள் கிளர்ச்சியில் இறங்கிக்கொண்டனர். இதனால்  ஏறத்தாழ கண்டி பிராந்தியம் முழுவதிலும் கிளர்ச்சி பரவிக்கொண்டது. சப்பிரகமுவாவின் கீழ்பகுதி, மூன்று கோறளை, நான்கு கோறளை, உடுனுவர, யட்டினுவர ஆகிய பிரதேசங்கள் தவிர ஏனைய பிரதேசங்களில் கிளர்ச்சி கொண்டு நடாத்தப்பட்டது.

இக்கிளர்ச்சியில் ஹப்பிட்டிபொல, மடுகல்ல, கிவுலுகெதற, எகலப்பொல முதலிய பிரதானிகள் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டனர். கண்டி இராச்சியத்தின் முதலாம் அதிகாரமான மொல்லிககொட மாத்திரமே பிரித்தானியருக்கு விசுவாசமாக செயற்பட்டான். அதுமட்டுமல்ல கண்டியில் வசித்த முஸ்லிம்கள், கிளர்ச்சியாளர்களுக்கு உதவாது தனித்திருந்தனர் (Tennakoon,2021).  ஊவா வெல்லசவில் கிளர்ச்சி கெப்பிட்டிபெல திசாவை தலமையில் தொடங்கிற்று. கெப்பிட்டிபொல திசாவ நோயுற்று, ஆங்கிலேயரினால் கைது செய்யபட்டு தலை துண்டிக்கப்படும் போது, கிளர்ச்சியாளர்கள் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். சாதாரண மனித மண்டை ஓட்டைவிட கெப்பிட்டிபொலவின் மண்டையோடு பெரிதாக இருந்தபடியால் பரிசோதனைக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அது இங்கு எடுத்து வரப்பட்டு, தற்போது கண்டி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது (Virtual Library SriLanka,2007).

கெரில்லா போர் முறையைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலப்படைகளைத் தாக்கினர். அதுமட்டுமல்ல கிளர்ச்சியானது அங்குமிங்குமாக நடத்தப்பட்டது. இதனால் கிளர்ச்சியை ஒரே நேரத்தில் ஆங்கிலேயரால்  அடக்க முடியவில்லை. இச்சூழ்நிலையில் 1818 மாசி 21 ஆம் நாள் கண்டிப்பிரதேசம் முழுவதும் இராணுவச்சட்டம் (Martial Law) பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு  எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை ஆளுனர் பிறவுன்றிக் (Brownrigg) எடுத்திருந்தார்.

கிளர்ச்சியாளர்கள் புத்தரின் புனித தந்ததாதுவை கைப்பற்றிக்கொண்டனர். இதனால் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் உற்சாகம் எற்பட்டுக்கொண்டது. புனித தந்ததாதுவைக் யார் வைத்திருக்கின்றாரோ அவர்களுக்கே ஆட்சியுரிமை உருத்துடையது என்பது சிங்கள மரபாகும். கலகத்தின் வலிமையும் போக்கும் கண்டிப்பிரதேசத்தை தாம் இழந்துவிடுவோமோ ? என்ற அச்சத்தை ஆங்கிலேயர் மத்தியில் ஏற்படுத்திற்று.

அதே சமயம் கலகத்தை அடக்கிக் கொள்ள ஆங்கிலேயருக்கு சாதகமான பல அம்சங்களும் காணப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கிடையில் கூட்டுப்பொறுப்பு, கட்டுக்கோப்பு காணப்படவில்லை. கிளர்ச்சி நடைபெற்ற பிரதேசங்களின் கிளர்ச்சி தலைவர்களுடன் நல்ல தொடர்புகளைக் அவர்களுக்கிடையில்  ஏற்படுத்த முடியவில்லை. கிளர்ச்சி நடைபெற்ற பிரதேசங்களில் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டு சுதந்திரக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் ஒன்று திரட்டிய தம் எதிர்ப்பை  கிளர்ச்சியாளர்களினால் வெளிக்காட்ட முடியவில்லை. பிரதேசம் பிரதேசமாக அல்லது தொட்டம் தொட்டமாக  கிளர்ச்சி நடாத்தப்பட்டது. கிளர்ச்சித்தலைவர்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறுபட்;ட நோக்கங்கள் காணப்பட்டன. இதுவே கிளர்ச்சி வலுவிழந்து கொண்டமைக்கு முக்கிய காரணங்களாயிற்று.

 அதுமட்டுமல்ல முதலாம் அதிகாரம் மொல்லிக்கொட ஆங்கிலேயர் பக்கம் சார்ந்திருந்தமை அவர்களுக்கு பெரும் சாதகமாக அமைந்திருந்தது. மொல்லிக்கொடவின் மூன்று கோறளைகள்(துன்கோறளைகள் ) நான்கு கோறளைகள் (சதகோறளைகள்) ஆகிய அதிகாரப்பிரதேசங்கள் ஊடாக படைகளை கண்டிக்குள் நகர்த்தி, கலகத்தை அவர்களால் அடக்க முடிந்தது.

                இராணுவச்சட்டத்தைப்பயன்படுத்தி கண்டி மக்கள் மீது மிகக் கடுமையான அடக்கு முறைகளை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். அவர்கள் சுடுகாட்டுக் கொள்கையை (scorched earth) பயன்படுத்தி, உணவுத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் நெற்பயிர்களை எரித்து நாசமாக்கியிருந்தனர். எல்லைப்புற வீடுகள், சொத்துகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டன.  நாயக்க வம்சத்தவன் எனக்காட்டி அரசுரிமை கோரியவன் வேடதாரிஎன்பது பகிரங்கப்படுத்தப்பட்டது. இது கிளர்ச்சியின் தளர்வுக்கு முக்கிய காரணமாயிற்று. அதுமட்டுமல்ல கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த புனித தந்ததாதுவை  ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து புரட்சி அடங்கிப் போயிற்று.

அன்னியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் சுதந்திரப்போராட்டம் மிகக்கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. புரட்சிக்கு தலமை தாங்கியவர்களில் மடுகல்ல, கெப்பிற்ரிபொல, எல்லாப்பொல, போன்றவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதுபோன்றதொரு  கிளர்ச்சியில்   எவரும் ஈடுபட அஞ்சி நடுங்கவேண்டும் என்ற நோக்கில் கொடுமையான  முறையில் கிளர்ச்சி அடக்கப்பட்டது. தண்டணைகளும் வழங்கப்பட்டன. இதனால் பொது மக்கள் கொடிய தண்டனைகளை அனுபவித்ததோடு  பஞ்சம், பசி, பிணியினாலும்  பாதிக்கப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் பதுளையின் பிரித்தானிய உதவி வதிவிட பிரதிநிதி ஹேபேர்ட் வைற் மேல் வருமாறு குறிப்பிட்டிருந்தார். “………. மக்கள் தங்கள் பெறுமதியான உயிர் மற்றும் உடமைகளை இழந்தனர். பேரழிவிலிருந்து ஊவா எப்போது மீண்டு வருமோ !..... (Karalliyadda,S.B. 2013).

ஆளுனர் பிறவுன்றிக் பிரித்தானியர் ஆட்சிக்கு எதிரான சதி என பிரகடனப்படுத்தினார். அப்பிரகடணத்தில் கெப்பிற்றிபொல, கொடகெதர, கெற்றகல, மஹா மெற்மிறல்ல, குடமெற்மிறல்ல, பலகொல்ல மொகட்டால என 17 கிளர்ச்சியாளர்கள் பெயர் குறித்துரைக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எகலப்பொல மொறிசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் அங்கேயே மரமணமடைந்தார். பிலிமதலாவ, நான்கு கோறளைகளின் திசாவை கியூஸ்கெதாதாகம பிக்கு போன்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

கிளர்ச்சி அடக்கப்பட்டதைத்தொடர்ந்து பரந்துபட்டவகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தங்களுக்கு விசுவாசகமாகச்செயற்பட்ட மொல்லிக்கொட அதிகாரத்திற்கு சாகும் வரை ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கள் வயம் இருந்த தந்ததாதுவை திருடிக்கொண்டு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்ட வெல்லசவைச்சேர்ந்த பத்து பிக்குகள் யாழ்ப்பாணத்தில் சிறை வைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட அல்லது ஆதரவாக இருந்தவாகளுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்களுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டது. விசுவாசமான பிரதானிகளுக்கு நெல் வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டது. கண்டியிலிருந்த சோனகர்கள் அனைவரும் பிரதானிகளின் அதிகாரத்திருந்து விலக்கப்பட்டனர்.

கிளர்ச்சி அடக்கப்பட்டபின்னர் 1818 நவம்பர் 21 ஆம் நாள் ஆங்கிலேயர் வெளியிட்ட பிரகடனம் பல முக்கிய அம்சங்களைக்கொண்டிருந்தது (Lennox A.Mills,1933) .சுதேச அலுவலர்களினால் அறவிடப்பட்டு வந்த அரசிறை மற்றும்  நன்கொடைகள் என்பனவற்றின் அறவீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மாறாக அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுதேச அதிகாரிகள் உள்ளுர்ப்பொறுப்புகளுக்கு தலைவர்களை நியமிக்கும் அதிகாரமும் இல்லாத ஒழிக்கப்பட்டது. அரச நிருவாக நியமனங்கள் இலங்கையின் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. இதுவரை பிரதானிகள் அனுபவித்து வந்த உரிமைகள் , சலுகைகள் இல்லாதொழிக்கப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன.

 நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அதிகரிக்ககப்பட்டன. அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. 1815 இன் கண்டி ஒப்பத்தின் 5 ஆம் வாசகத்தின்படி பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டிருந்த விசேட சலுகைகள் மாற்றப்பட்டன அதாவது ஆளுனரின் அனுதியுடன் பிறமதங்களை பரப்பவும் வழிபாட்டுத் தலங்களை அமைக்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

இருந்தாலும் 1832 கோல்புறூக் கமறன் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும்வரை கண்டி இராச்சியம் தனியாகவே நிருவகிக்கப்பட்டு வந்தது. 1818 இன் கிளர்ச்சியைத்தொடர்ந்து ஆங்கிலேய ஆளுனர் பிறவுன்றிக்  இரண்டு நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார். கண்டி இராச்சியம் தனியாக நிருவகிக்கப்படாமல் கரையோரப்பிரதேசங்களுடன் இணைத்து  நாடு தழுவிய ஆட்சியை ஏற்படுத்தல் மற்றும் கண்டி இராச்சியத்தின் புவியியல் மற்றும் அமைவிடநிலைகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமாயின் கொழும்பு கண்டி தரைமார்க்க்ப்பாதை ஒன்றினை அமைத்தல் என்பன அவையாகும். இந்நடவடிக்கைகள்   ஆளுனர் எட்வேட் லாண்ஸ் (1824 – 1831) ஆட்சிக் காலத்தில் செயலுருப்படுத்தப்பட்டன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

முடிவுரை

எனவே, அன்னியருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட, 1818 ஆம் ஆண்டு புரட்சி தோல்வியானது காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு படிப்பினையாக அமைந்ததோடு,இலங்கையில் தமது காலனித்துவ ஆட்சியை 1948 வரை  தக்க வைத்துக்கொள்ளவும் வழி சமைத்துக் கொடுத்திருந்தது.

ஊசாத்துணைகள் :

1.      Dewaraja, L., 1985. HE KANDYAN KINGDOM : THE SECRET OF ITS SURVIVAL. Journal of the Royal Asiatic Society Sri Lanka Branch, 30 (1985/86), 120 - 135.

2.      Queyroz, F. and Perera, S., 1992. The temporal and spiritual conquest of Ceylon. 2nd ed. New Delhi: Asian Educational Services.

3.      Vimalananda, T., 1970. The story of the First War of Independence and Betrayal of the Nation. 1st ed. Colombo: Gunasena.

4.      Tennakoon, Dr. Dharmadasa. "The brave attempt to regain the Kandyan Kingdom". Daily News. Retrieved 15 October 2021.

5.      SIVASUNDARAM, S., 2007. Tales of the Land: British Geography and Kandyan Resistance in Sri Lanka, c. 1803–1850. Modern Asian Studies.

6.      Lanka library Forum, 2014.10.26, ‘Uva Wellassa rebellion – 1817/1818’

7.      Karalliyadda.S.B. , 2013.11.0689, ‘The need for University of Uva’ , The Island.

8.      Keppetipola and the Uva The Great Liberation War, Virtual Library Sri Lanka, 2007.10.01.

9.      Lennox A.Mills.,1933,Ceyloan Under British Rule 1795 -1932,New York.