4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

இளங்கோவடிகளின் சமயப் பொறை - முனைவர் வேல்.கார்த்திகேயன்

 

 

இளங்கோவடிகளின் சமயப் பொறை

 

முனைவர் வேல்.கார்த்திகேயன்  

இணைப் பேராசிரியர்-தமிழ்த்துறை

காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி -- .605 008.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரும், தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தரும் சிலப்பதிகாரம் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் பாராட்டிய சிறப்பினையுடைய நூல் சிலப்பதிகாரம் ஆகும். இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். இவர் தம் நூலில் எல்லாச் சமயக் கடவுளர்களையும் ஒரே தன்மையராய்ப் புகழ்ந்து பாராட்டுவதால் சமய சமரச நோக்குடையவர் என்பதனை அறியலாம்.  சிலப்பதிகாரத்தில் அறுவகைச் சமயங்கள் பற்றிய செய்திகள் விரிவாக எடு;த்துக் காட்டப்பட்டுள்ளன.  அவற்றுள் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் , கௌமாரம், சாக்தம் ஆகிய சமயங்கள் பூம்புகாரில் வாழ்ந்த மக்களால் பின்பற்றப்பட்டன என்று அறிய முடிகிறது.  சமயங்களின் அறநெறிகளையும் அவற்றைப் பின்பற்றுவதால் பெறுகின்ற நன்மைகளையும் விரிவாகக் கூறுவதால் இளங்கோ வடிகளின் பல சமயஅறிவும் சமயப்பொறை கொண்டவர் என்பதும் அறிய முடிகிறது.. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியத்தின் வழி  சமயப்பொறை கொண்ட தன்மையினை விரிவாக ஆய்ந்துரைப்பதே நோக்கம்..

சமயம்

சமயம் என்பது மனிதன் தன்னுடைய ஆழ்ந்த அனுபவங்களால் அடைந்த மிக உயர்ந்த நிலை. பல்வேறுபட்ட நிலைகளை எதிரொலிக்கும் மிக ஆழமான ஒரு பிரிவு என்பதும்.  கோடிக்கணக்கான மனங்களின் எண்ணங்களும் கனவுகளும் மிளிரும் ஓர் இடம் என்பதும் மட்டும் உண்மை.  இத்தகைய சமயங்களால் சமுதாயத்திற்கு நன்மை விளையும்.  சைவம்,

 

 

வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம், பௌத்தம் முதலான பல சமயங்கள் உள்ளன. இச்சமயங்கள் சிலம்பில் இடம்பெற்றுள்ள தன்மையினைக் கீழே காணலாம்.

1.            கௌமாரம் -முருகன்

கௌமார சமயத்தின் கடவுளாக முருகன் விளங்குகின்றான். முருகன் தமிழ்க்கடவுள் என்றும், முருக வணக்கம் மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழரிடம் இருந்து வருகிறது என்று தம் நூலில் பேராசிரியர் நீல கண்ட சாஸ்திரியார் கூறுகிறார்.

குறிஞ்சிநிலக் கடவுளாகிய முருகனின் கோவில்களை இளங்கோவடிகள் அறுமுகச்செவ்வேள் அணிதிகழ் கோவில், வேற்கோட்டம், கோழிச் சேவற் கொடியோன் கோட்டம் நெடுவேள் குன்றம் முதலான பல கோயில்கள் இருந்தன என்பதனைச் சுட்டிப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார். முருகனைச் செவ்வேள்  மலைமகள் மகன், ஆலமர் செல்வன் புதல்வன் , கடம்பன் , கயிலை நன்மலை யறை மகன் முதலிய பெயர்களால் இளங்கோவடிகள் அழைக்கிறார்.

  அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் (சிலப்பதி.5. -170 ) இந்திரவிழவூர்- காதை

   உச்சிக் கிழான் தோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் (சிலப்பதி.9-11 ) கனாத்திறம்..

   கோழிச்சேவற் கொடியோன்  கோட்டமு;ம் ( சிலப்பதி. 14 -10 ) ஊர்காண் காதை

   நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை ( சிலப்பதி 24 -13 ) குன்றக்குரவை

  என்னும் வரிகள் புலப்படுத்தும்.

 செவ்வேள் என்று அழைக்கும் மரபைச் சங்க காலத்திலும் காணமுடிகிறது.1. தொல்காப்பியரும் முருகனைச் சேயோன் என்றே அழைக்கிறாh.2.  சேயோன் என்றால் சிவந்தவன் என்பதே பொருள்

 புகார் நகரில் முருகனின் வேல்கூடத் தனியாக வைத்துக் கோவிலாக வழிபட்டு வந்ததைக் கனாத்திறம் உரைத்த காதை 11 எடுத்துக் கூறும். வெண்குன்றம் என்பது இக்காலத்து வழக்கில் சுவாமிமலை எனச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார்.

2.            வைணவம் -திருமால்

   வைணவ சமயத்தின் தனிப்பெருங்கடவுளாகத் திகழ்பவர் திருமால். இத்தகைய திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபட்டு வந்த முறை தமிழ்மக்களது புராதனச் சமயங்களுள் ஒன்றாகும்.  தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே திருமால் வழிபாடு தமிழகத்தில் வேருன்றியிருந்தமையை அறிந்துணரலாம் .

                மாயோன் மேய காடுறை உலகமும்3          திருமாலை இளங்கோவடிகள் மாயவன் , மாயோன், கரியவன், கடல்வண்ணன் , மணிவண்ணன் என்று அவனுடைய நிறத்தைக் குறித்துள்ளார்.4 மேலும் ஆய்ச்சியர் குரவையில் கண்ணனின் சரிதங்கள் வெளிப்படையாகவே கூறுகின்றார். ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் அவதாரமான கண்ணன் புரிந்த பல அற்புதச் செயல்கள் , திருவிளையாடல்கள்  நாராயணன் என்னும் திருநாமத்தின் சிறப்பு முதலிய வற்றை விரித்துரைத்துள்ளார்.  விண்ணவன், நெடியோன், நெடுமுடி அண்ணல் முதலிய பெயர்களாலும் திருமால் அழைக்கப்படுகின்றார். (17-36  11-51  5-172 11-148 )சான்றாக பாடல் அடிகள்

      செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

      நீள்நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் ( 11-148)

                திருமால் நீல நிறத்தையுடையவன் . அவனுடைய நீலநிறத்திற்கு மேகமும்; கடலும், நீல மணியும்  மயிலின் புறக்கழுத்தும் உவமைகளாகக் கூறப்படுகின்றன.  அவன் தன்னுடைய ஒரு கையில் பகையை வருத்தும் ஆழிப்படையையும் மற்றொரு கையில் சங்கையும் தாங்கியிருக்கிறான். துழாய் மாலையை மார்பில் அணிந்துள்ளான். அவனுடைய  கொடியும் வாகனமும் கருடனே. ஆயிரம் தலைகளையுடைய அரவணையின்மீது துயில்கொள்கின்றான் .அவனுடைய மார்பில் திருமகள் உறைந்துள்ளாள். என்னும் கருத்தமைந்த செய்திகள் இடம் பெறுகின்றன.

                கோபாலன் என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் நேரடியாகத் திருமாலுக்குக் கூறப்படவில்லை.  மாடல மறையோன் கோவலனை. விருத்த கோபால என அழைக்கும்போதுதான் கோபால என்ற பெயரை விளிப்பதன் வழி அறிந்துணரலாம்.  கோவலனுடைய பெற்றோர்கள் திருமாலை வழிபட்டு வந்தவர்கள்  என்பதால் அவனை மாடல மறையோன்  அப்பெயரால் அழைத்திருக்க வேண்டும் என்பதனை அறிய முடிகிறது.. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்படும்பொழுது  மணிவண்ணன் கோயிலை வலம் வந்த செயல்  அவர்கள் திருமால் வழிபாட்டையும் வெறுத்தவர்கள் அல்லர் ( 10-10 )என்ற செய்தியைப் புலப்படுத்துகிறது. 

3.சைவம்

சைவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாக சிவனைப் போற்றுவர்.  அத்தகைய சிவனை சிலப்பதிகாரத்தில் சிவகதி நாயகன் என்ற சொல்லால் இளங்கோவடிகள் சிறப்பிப்பதனைக் காணலாம்.   சிவபெருமானுக்குப்  பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் , நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயில், அருந்தெறல் கடவுள் அகன் பெருங்கோயில் என்ற பெயர்களில்  மதுரை புகார் ஆகிய இடங்களில் கோயில்கள்; இருந்தன என்று குறிப்பிடுகின்றார் .

செஞ்சடை வானவன் , செஞ்சடைக் கடவுள்  ஆனேறு ஊர்ந்தோன் என்ற பெயர்களில் வஞ்சிக் காண்டத்தில் சிவபெருமான் குறிக்கப்படுவதால் சேரநாட்டிலும் சிவவழிபாடு அக்காலத்தே பரவியிருந்தது என்பது வெளிப்படை.  ஆனால் சேர நாட்டிலிருந்த சிவன் கோயிலை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை.  ஆலமர் செல்வன் உமையொரு பாகன் என்பன போன்ற சிவனின் திருப்பெயர்களும் குறிக்கப்படுகின்றன. இறைவனின் நடனங்களில் ஒன்றான கொடுகொட்டி ஆடல் இன்றும் இந்திர விழாவின்போது நடைபெறும். இது ஒரு வகை நடனமாகும்.

   தெண்ணீர்க் காந்த கடவுள் செஞ்சடைக் கடவுள் ( கால்கோட் காதை -64)

   பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் (5 169 )

   நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் (14-7 )

   அருந்தெறல் கடவுள் அகன் பெருங்கோயில் ( 13- 137 )

   உமையவள் ஒரு திறனாக வோங்கிய

   இமையவனாடிய கொட்டிச் சேதம்  ( 28 - 67-75 )

என்னும் பாடலடிகள் இடம்பெறுவதனைக் கண்டு அறியலாம்.

4. கொற்றவை வழிபாடு

                சக்தியை வழிபடுவோர் சாக்த சமயத்தினராவார். கொற்றவை வழிபாடு புரிபவர் ;இந்தியாவில் தாய்த் தெய்வ வழிபாடு , சிந்துவெளி மக்;கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இருந்து வந்த மிகப் பழமையான வழிபாடாகும்.   தாய்த்தெய்வ வழிபாடு என்பது சக்தி வழிபாடாகும்.  இச்சக்தியை வழிபடுவோர்கள் சாக்தர்கள் என்று கூறுவர்.  சக்தியை வழிபடும் சமயம் சாக்தம் ஆகும். 

                குலையமர் செல்வி கடனுணின் அல்லது

                சிலையர் வென்றி கொடுப்போள் அல்லள்5

                இளங்கோவடிகள் வேட்டுவ வரியில் கொற்றவையைப் பாலை நிலத் தெய்வமாக விரித்துக் சுறுகிறார்.   கொற்றவையின் பெயர்களாக அமரி, குமரி, கவுரி, சூலி நீலி, சங்கரி, ஐயை , செய்யவள் பாய்கலைப் பாவை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாலை, அருங்கலப் பாவை, கலையமர் செல்வி, காளி, அந்தரி, தாருகன் பேருரம் கிழித்த பெண் விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை முதலிய பல பெயர்களால் குறிப்பிடுகிறார். 

5. சமணம்

                உலகில் தோன்றிய சமயங்களுள் சமண சமயம் மிகப்பழமையானதாகும்.  இது இந்தியாவில் Nதூன்றிய சமயங்களுள் தனித்தியங்குவதும் மிகவும் தொன்மையானதும் ஆகும்.  சமண சமயத்தை முதன்மையாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கியம் சிலப்பதிகாரமாம்.

இந்நூலில் சமண சமயக்கருத்துகளையும் சமண சமயக் கொள்கைகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கிறார். 

                புகார் நகரில் இருந்ததாக நிக்கந்தக் கோட்டம், புறநிலைக் கோட்டம், அருகத்தானம் முதலான சைனக் கோயில்களும், உறையூரில் இருந்ததாக கந்தன்பள்ளி என்ற சைனக் கோயிலும்  கூறப்படுகின்றன. புகாரில் இருந்ததாக அறவோர் பள்ளி என்ற மற்றோர் அமைப்பும் இந்நூலில் கூறப்படுகிறது. 

                கவுந்தியடிகள் வாயிலாக அருக தேவனின் பெருமைகள் சிலவற்றை அறியலாம்.  மலர்மிசை  நடந்தவன், ஐம்புலன்களை வென்றவன் , காமத்தை வென்றவன், காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்றையும் அவித்தவன் ஆயிரத்தெட்டுத் திருப்பெயர்களையுடையவன்.  என்னும் பெயர்களால் குறிப்பிடுகிறார்.      மேலும் சமண சமயக்கொள்கைகளை ஆங்காங்கே எடுத்துரைக்கின்றார். 

7. பௌத்த சமயம்

                சிலப்பதிகார காலத்தில் பௌத்த சமயம் இருந்துள்ளதனை நூல்வழி அறி;ந்துணரலாம்.  புகாரில் இருந்த இந்திர விகாரம் என்னும் புத்த சைத்தியம் ஏழு அறைகளை உடையதாகத் திகழ்ந்தும்  மற்றும் பௌத்த சமயத்தைப் பற்றிய  செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனைக் காணலாம்.  சமண சமயக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியவர் பௌத்த சமயக்கருத்துக்களைக் குறைவாகவே கூறியுள்ளார்.

                அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி

                அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்

                இந்திர விகாரம் ஏழுடன் போகி6

பிற தெய்வ வழிபாடுகள்

   இந்நூலில் சூரியன், சந்திரன் வாலியோன் கோயில், பலராமன் கோயில், அக்னி கோயில்,  பூத வழிபாடு , முதலான வழிபாடுகள் இருந்ததனையும் அறியலாம்.

சமய ஒருமைப்பாடு

                அண்ணன் செங்குட்டுவன் சைவனாக இருந்திருக்கிறான்.  கண்ணகியின் தந்தை மாநாய்கன் சமணப்பள்ளியையும் கோவலனின் தந்தை பௌத்த மடத்தையும் சேர்வதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதிலிருந்து சமயம் தனிமனிதன் பின்பற்றிய நெறியாகவே கருதப்பட்டுள்ளது என்பதும், குடும்ப வாழ்;க்கையையோ உறவு முறையையோ. சமுதாயத் தினையோ அது பாதிக்கவில்லை. சமய வேறுபாட்டுணர்வு வளராமல் சமயப்பொறை மேற்கொண்ட பாங்கினை சிலப்பதிகார நூல் வழி நாம் உணர்ந்தறியலாம். இளங்கோவடிகள் பல சமயங்களை எடுத்துக்கூறி சமயப்பொறை கொண்டவர் என்பதனையும் சமரச நோக்குடையவர் என்பதனையும்  அறிந்துணரலாம்.

அடிக்குறிப்புகள்

1.            பட்டினப்பாலை அடி 154

2.            தொல். அகத்திணை. நூற்பா. 5;

3.            தொல். அகத்திணை. 5

4.            சிலப்பதி.17-அடி26 27 -அடி28

5.            சிலம்பு வேட்டுவ வரி 12: 67 -75

6.            சிலம்பு 10-  12-14