4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

பதினோராம் திருமுறையில் அந்தாதி இலக்கியங்கள் - முனைவர் வேல்.கார்த்திகேயன்

 

பதினோராம் திருமுறையில் அந்தாதி இலக்கியங்கள்

                                         முனைவர் வேல்.கார்த்திகேயன்

            இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை

               காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும்

                                         ஆராய்ச்சி நிறுவனம்

     புதுச்சேரி- 605 008.

      சிற்றிலக்கிய வகைகளுள் சிறப்பானது அந்தாதி ஆகும். ஒரு பாடலின் முடிகின்ற எழுத்து அல்லது முடிகின்ற சொல்லை வைத்து அடுத்த பாடல் தொடங்குதல் என்ற முறையில் பாடல்களைத் தொடர்ச்சியாகப் பாடுதல் அந்தாதி ஆகின்றது. பதினொன்றாம் திருமுறையில் எட்டு அந்தாதிகள் உள்ளன.  சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்தில் நான்காம்பத்து அந்தாதிமுறையில் பாடப் பெற்றுள்ளது. மேலும் திருவாசகம்,திருமந்திரம் போன்றவற்றில் அந்தாதி முறை  பயன்படுத்தப் பெற்றுள்ளது. இவ்வந்தாதி சிற்றிலக்கியமாக வளர்ந்தது பதினோராந் திருமுறை காலத்தில்தான் என்பது குறிக்கத்தக்கது. காரைக்கால் அம்மையாரின் அற்புதத்திருவந்தாதி என்பதே முதல் அந்தாதி நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது.

      காரைக்கால் அம்மையார் பாடியருளிய அற்புதத்திருவந்தாதி, சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்தந்தாதி, நக்கீரர் பாடிய கயிலை பாதி காளத்தி பாதி, கபிலதேவநாயனார் பாடிய சிவபெருமான் அந்தாதி, பரணதேவர் பாடிய சிவபெருமான் அந்தாதி,பட்டினத்தார் பாடிய திருவேகம்பமுடையார் அந்தாதி, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி மற்றும் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆகிய எட்டு அந்தாதிகளாம்.  அவை பின்வருமாறு:

1.     அற்புதத் திருவந்தாதி

      காரைக்கால் அம்மையார் அனைத்து நாயன்மார்களுக்கும் மூத்தவர் என்றாலும் அவரின் பாடல்கள் தொகுக்கப்படாத நிலையில் அவற்றைப் பதினோராந்திருமுறைக்குள் கொண்டு வந்து அமைத்துள்ளனர். இவர் பாடிய அற்புதத்திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்தின் தொடக்க கால நூலாகும்.

      இவ்வந்தாதி நூற்றியோரு பாடல்களை உடையது. இதன் முதற்பாடல் பிறந்து என்று தொடங்குகிறது. இடர் என்று முடிகின்றது. இதன் இரண்டாம் பாடல் இடர் எனத்தொடங்கி அந்தாதி வகையினதாக இதுஅமைகின்றது. இவ்வந்தாதியின் நிறைவுப் பாடல் உரையினால் எனத்தொடங்கிப் பிறந்து என முடிகின்றது.இந்த நிறைவுச்சொல் அந்தாதியின் முதற்சொல்லாக அமைந்து அதுவும் அந்தாதியாக அமைவது குறிக்கத்தக்கது. இவ்வகையில் அந்தாதி முறை அற்புதத்திருவந்தாதியில் அமைந்துள்ளது.       இவர் பாடிய அந்தாதிச் சிற்றிலக்கியத்தைச் சேக்கிழார் தன் திருத்தொண்டர் புராணத்தில்

            “ஆய்ந்த சீர் இரட்டைமாலை அந்தாதி எடுத்துப்பாடி

            ஏய்ந்த பேருணர்வு பொங்க, எயில் ஒரு மூன்றும் முன்நாள்

            காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலைமால் வரையை நண்ண

            வாய்ந்தபேர் அருள்முறை கூர வழிபடும் வழியால் வந்தார்"

இதனுள் குறிக்கப்படும் அந்தாதி அற்புதத் திருவந்தாதி ஆகும். இரட்டை மாலை, அந்தாதி ஆகியன பாடியவர் காரைக்கால் அம்மையார் என்ற இப்பாடலின் கருத்து அம்மையாரின் சிற்றிலக்கியப் படைப்பாற்றலைக் காட்டுவதாக உள்ளது.       இவ்வந்தாதியின் நிறைவுப் பாடல் திருமுறைகள் முடியுந்தன்மைப்படி திருக்கடைக்காப்புடன் முடிகின்றது.

      “உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்

      கரைவினாற் காரைக்கால் பேய்ச்சொல் - பரவுவார்

      ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்று ஏத்துவார்

      பேராத காதல் பிறந்து"

என்ற பாடலில் இவ்வந்தாதியை எழுதியவர் காரைக்கால் பேய் என்பது குறிக்கப்பெறுகிறது. மேலும் இப்படைப்பு வெண்பா யாப்பினால் அந்தாதித் தொடையினால் பாடப்பெற்றுள்ளது என்றும் குறிக்கப்படுகிறது.

2.     பொன் வண்ணத்தந்தாதி

      பொன்வண்ணத்தந்தாதியை எழுதியவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார். இவ்வந்தாதி சிதம்பரத்தில் எம்பெருமானின் எழில் கண்டுப் பாடியதாகும். இவர் மலை சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்ற ஊரின் அருகில் உள்ள மாக்கோதை எனப்படும் கொங்ககோளுர்  என்னும் பகுதியின் மன்னராக விளங்கியவர் ஆவார். இவர் நெற்றி நிறைய நீறு பூசியவர்களைக் கண்டால் அவர்களை வழிபடும் மேன்மை கொண்டவர் .அவ்வகையில் உவர் மண் பரவலால் தன் உடலை வெண்மையாக்கிக்கொண்ட துணி வெளுப்பவரைக் கண்டு உடல் முழுவதும் நீறணிந்த நிலை எனக்கொண்டு இவர் அவரை வழிபட்டார். இவருக்கு ஆலவாய் அண்ணலே திருமுகம் எழுதியிருக்கிறார். மேலும் இவர் சுந்தரரின் தோழமை பூண்டவர். இவர் திருகயிலாயத்தின் இருப்பினை உலாவாகப் பாடியவர்.

      இவர் பாடிய பொன் வண்ணத்தந்தாதி  ‘பொன் வண்ணம்’  எனத் தொடக்கம் பெறுவதால் இவ்வந்தாதி பொன்வண்ணத்தந்தாதி எனப் பெயர் பெற்றது. மேலும் இவ்வந்தாதியின் நிறைவுச் சொல்லும் பொன் வண்ணம் என்றே அமைக்கப்பட்டுள்ள நிலையில் இது அந்தாதி அமைப்பில் இடம் பெறுகிறது. இடையில் உள்ள பாடல்களும் அந்தாதி நிலையில் உள்ளன.

      “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்

       மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ் சடை வெள்ளிக் குன்றம்

       தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடைதன்னைக்கண்ட

       என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே"

என்னும் பாடலில் ஈசனின் வண்ணம் பொன்வண்ணமாகப் பொலிவதையும், அவன் சடையில் இருந்துக் கொட்டும் கங்கை நீர் வெள்ளியை உருக்கியது போன்ற வண்ணத்தில் அமைவதையும், அவன் ஏறும் காளை வாகனம் மின்னல் வண்ணமாக வெள்ளி வண்ணமாகப் பொலிவதையும் அகநிலையில் தலைவி எடுத்துரைக்கிறாள்.      இவ்வந்தாதியின் நிறைவில் திருக்கடைக்காப்பு உள்ளது.

      “அன்று வெள்ளாணையின் மீதிமையோர்சுற்ற அணுகுறச் செல்

      வன்தொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்

      சென்றெழில் ஆதி உலா அரங்கேற்றிய சேரர் பிரான்

      மன்றிடை ஓது பொன்வண்ணத்தந்தாதி வழங்கிதுவே"

என்ற பாடலில் சேரமான்பெருமாள் நாயனார் கைலாய மலைக்குச் சுந்தரர் சென்ற பின்னர் குதிரையில் ஏறிச்சென்ற நிலையும், ஆதிஉலா அங்கு அரங்கேற்றிய நிலையும் சுட்டப்பெற்று இவர்பாடியது இவ்வந்தாதி என்று குறிக்கப்பெறுகிறது.இந்நிலையில் அந்தாதி இலக்கியங்கள் பெருவழக்காக பதினொன்றாம் திருமுறைக்குள் உள்ளன என்பதை உணர முடிகின்றது.

3.     கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி

      நக்கீரரால் பாடப்பெற்றது கயிலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதிப் பனுவல் ஆகும். இந்நக்கீரரை சங்க கால நக்கீரர் , மூவர் முதலிகளுக்குப் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) பின் வந்த நக்கீரர் என்று இருவராகக் கொள்ளுதல் மரபாக உள்ளது. இவ்வகையில் இப்பனுவல் சங்க கால நக்கீரருடன் தொடர்பு படுத்தப்படுகிறது.  நக்கீரர் தருமிக்குப் பொற்கிழி அளிப்பதில் ஏற்பட்ட முரண்பாடு களையப் பெற்று அவர் கயிலைக்குச் செல்ல முற்படுகிறார். அப்போது திருப்பரங்குன்றத்தில் ஒரு பூதத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள அதில் இருந்துத் தன்னைக் காக்க திருமுருகாற்றுப்படை பாடுகிறார். பூதத்திடமிருந்து விடுபட்டுத் திருப்பரங்குன்ற முருகனை வழிபட்டு இவர் கயிலைக்குச் செல்ல முனைகிறார். இடையில் காளத்திநாதரை வணங்குகிறார். காளத்தியிலேயே இவருக்குக் கயிலை காட்சி கிடைக்கிறது. இதன் காரணமாக கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி எழுகிறது.

      இந்நூல் வெண்பா யாப்பில், அந்தாதி தொடையில் அமைந்த நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். ஒற்றைப் படை எண்கள் கொண்டவை கயிலை பற்றியனவாகவும், இரட்டைப்படை எண்கள் கொண்டவை காளத்தி பற்றியனவாகவும் அமைகின்றன. இவ்வகையில் இவ்விரு தலத்திற்கும் ஐம்பது, ஐம்பது பாடல்கள் என்ற அமைப்பில் நூறு பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

      இவ்வந்தாதியின் முதற்பாடல் சொல்லும்  எனத் தொடங்குகிறது. இதன் நிறைவுப் பாடல் சொல்  என முடிகின்றது. இதில் திருக்கடைக்காப்பு காணப்படவில்லை. எனவே இது பக்தி இலக்கியச்சாயல் பெறவில்லை. சங்கமரபின் தொடர்ச்சியாக அமைவது என்று கொள்ளலாம்.

      சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா

      நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் சொல்லரிய

      வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த          

      பெண்பாகற்கு ஏற்றினேன் பெற்று (கயிலைபாதி.பா 1)

என்று சொல் விளக்கினைக் கயிலையை நோக்கி முதற்பாடலில் ஏற்றுகிறார் நக்கீரர்.

      இப்பாடலில் வெண்பா என்பது முழுவிளக்கின் இயல்பைக் குறிக்கிறது. எனவே யாப்பு என்பது ஒரு கட்டுப்பாடுடையது என்பதை உணரமுடிகின்றது. அந்த யாப்பினுள் சொல், பொருள் ஆகியன அடங்கி இருக்கும். அவற்றில் சொல்லைத் திரியாகவும், பொருளை நெய்யாகவும் கொள்கிறார் நக்கீரர். அகல் என்ற மண் கொண்டு செய்யப்பட்ட பாத்திரத்தைத் தன் நாக்காகக் கொள்கிறார் நக்கீரர். இவ்வாறு கயிலையில் விளக்கு ஏற்றப்படுகிறது. இவ்வந்தாதியின் நிறைவுப் பாடல் காளத்தியில் முடிகின்றது.

      “மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே

      கற்றைச் சடையண்ணல் காளத்தி- நெற்றிக்கண்

      ஆராஅமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்

      சேராமல் எப்பொழுதும் சொல்" (கயிலை பா.100 )

என்ற நிலையில் காளத்தியில் உள்ள இறைவனின் நாமமாகிய ஐந்தெழுத்தினைச் சொல்லச் சொல்கிறது இப்பாடல். இவ்வாறு கயிலை தொடங்கிக் காளத்தியில் முடியும் இந்நூல் அந்தாதி வயப்பட்டு நிற்கிறது.

சிவபெருமான் திருவந்தாதி (1)

      இத்தலைப்பில் இரு நூல்கள் விளங்குகின்றன. கபிலதேவ நாயனார், பரண தேவ நாயனார் என்ற இருவரும் சிவபெருமான் திருவந்தாதி என்ற பெயரில் தனித்தனியே இருவேறு நூல்களை எழுதியுள்ளனர்.

4.     கபிலதேவ நாயனார் எழுதிய சிவபெருமான் திருவந்தாதி

கபிலதேவ நாயனார் பாடியுள்ள சிவபெருமான் திருவந்தாதி,முதலாவதாக பதினொன்றாந் திருமுறையில் அமைகின்றது. இது ஒன்று எனத்தொடங்கி ஒன்று என்று முடிகின்றது. அந்தாதிக்கு நூறு பாடல்கள் ஏன் வைக்கப்பட்டன என்பதை மெய்ஞ்ஞான நிலையில் இப்படைப்பு காட்டுகிறது.

            ~~ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள் வாழ்ந்து

             ஒன்றும் மனிதர் உயிரையுண் - டென்றும்

             மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த

             மதியான்  இடப்பாகம் மால்"

ஒன்றாம் ஆண்டு தொடங்கி நூறாம் ஆண்டுவரை வாழும் திறமுடையவன் மனிதன். அவ்வாறு அவன் நூறு ஆண்டுகள் வாழும் நிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் இறைவனை எண்ணும் நிலையில் ஒவ்வொரு பாடல் என்ற அளவில் நூறு பாடல்களைப் பெற்று நிற்கிறது அந்தாதி இலக்கியம். நிறைவுப் பாடலில் நூறு என்ற எண்ணிக்கை சுட்டப்படுகிறது.

“நூறாள் பயன் ஆட்டி நூறுமலர் சொரிந்து

நூறா நொடி அதனின் மிக்கதே -நூறா

உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளேறு

உடையானைப் பாடலால் ஒன்று"

சிவபெருமானைப் பாடலினால் ஒன்றுவது, சென்றுசேர்வது சிறப்பு என்கிறார் கபிலதேவநாயனார். நூறுமலர்கள், நூறுஆவின் பால்பெருக்கம், நூறு மந்திரங்கள் ஆகியனவற்றைச் சிவபெருமானுக்கு அளிப்பதைக் காட்டிலும் அவனை ஒரு பாடலினால் ஏற்றினால் ஒன்றினால் போதும். அதுவே நூறு நன்மைகளைத் தரும் என்பது இப்பாடலின் கருத்தாக விளங்குகிறது. நூறு என்ற எண்ணிக்கையின் நிறைவினை இவ்வந்தாதி முழுவதும் காட்டி நிற்கிறது.

5.     பரணதேவ நாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதி

   பதினொன்றாம் திருமுறையில் 23 ஆவது சிற்றிலக்கியமாகத் திகழ்வது இவர் பாடிய சிவபெருமான் திருவந்தாதியாம்.

 சிவபெருமானைப் புகழ்ந்துரைக்கும் பாடலாக விளங்குவது இந்நூல்.  முதற்பாடல்

ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே

ஒன்றுரைப்பீர் ஆயின், உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்

பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்

பேரரவம் பூணும் பிரான். (பா.1 )

6.     திருஏகம்பமுடையார் திருவந்தாதி:

பட்டினத்தாரை, பட்டினத்துப்பிள்ளையார் என்றும் சிறப்பித்து அழைப்பார்கள்.  இவர் பாடிய நூல்கள் ஐந்தாகும்.  1.கோயில் நான்மணிமாலை 2. திருக்கழுமல மும்மணிக்கோவை 3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 4. திருவேகம்பமுடையார் திருவந்தாதி 5. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது ஆகியவையாம்.

இவ்வந்தனுள் திருவேகம்பமுடையார் திருவந்தாதி என்பது, காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு ஏகாம்பர ஈஸ்வரரை நோக்கி அந்தாதித் தொடையில் அமைந்த நூறு பாடல்களைக்கொண்டதாம்.  இந்நூலில் உலகமக்களுக்கு அறவுரையாக அமைந்த பாடல்கள் பலவாம்.  அகப்பொருட்சுவை ததும்பும் பாடல்களும் பல உள்ளன.   ஊர்த்தொகையாகப் பல ஊர்களை அடுக்கிக் கூறி, அவ்விடங்களுக்கு சென்று வழிபடவேண்டும் எனும் குறிப்புடைய பாடல்களும் உள்ளன.

கச்சி ஏகம்பனை நோக்கி, மெய்த்தொண்டு புரிதலின் உயர்வையும் பொய்த்தொண்டு பேசி காலத்தைக்கழிக்கும் நிலையை வருந்தி, மெய்த்தொண்டு புரிதலின் உயர்வையும் அதனைப்போற்றுபவரின் சிறப்பையும் பெற்றிலனே எனப்பாடுகின்றார். அப்பாடல்,

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன் மிக நற்பணிசெய்

கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே

பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேயுன்னைப் போற்றுகின்ற

இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோ? கச்சி ஏகம்பனே. (பா.1 )

இந்நூலின் இறுதிப்பாடலான நூறாவது பாடலில் தான்பாடிய பிரபந்தத்தை அடியார்கள் ஏற்றருள வேண்டும் என்று அவையடக்கத்துடன் பாடியுள்ளார். இப்பாடலில் அடியார் ஏற்றபின் ஆண்டவன் ஏற்பான் ஆதலின் பாதம்பரவி என்று பாடி ஈற்றடியின் இறுதிச்சொல்லாக மெய்த்தொண்டரே என முடித்திருப்பார். 

பாதம் பரவியொர் பித்துப் பிதற்றினும் பல்பிணியும்

ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தெனவே

போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்

வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.(பா.100 )

இந்நூலின் முதல்பாடல் முதலடியிலும் நூறாவது பாடலின் ஈற்றடியின் முடிவிலும்  மெய்த்தொண்டரே என வந்திருப்பது அந்தாதி அமைந்து சிறந்துள்ளதனைப் பாடல்வழி அறிந்துணரலாம். 

7.     திருத்தொண்டர் திருவந்தாதி

பதினொன்றாம் திருமுறையில் பத்துப்பிரபந்தங்களைப் பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. இவர் இன்று நம்மிடையே பக்திக் கருவூலமாகத்திகழும் தேவாரத் திருமுறைகளைப் பொல்லாப் பிள்ளையார் துணைகொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவராவார்.

 சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகைக்கும் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர்புராணத்திற்கும் இடை நூலாக நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூல் விளங்குகிறது. 89 கட்டளைக்கலித்துறைப் பாக்களைக் கொண்டது. 

      63 நாயன்மார்களின் ஊர், நாடு, மரபு, செயல் ஆகியவற்றை இந்நூல் சுருங்க வகுத்துரைக்கின்றது.

நூலின் தொடக்கத்தில் தில்லைவாழ் அந்தணரைச் சிறப்பித்துப்பாடும் முதற்பாடல்

செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்

ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரி னூரெரித்த

அப்பர்க்கு அமுதத் திருநடர்க்கு அந்திப் பிறையணிந்த

துப்பர்க்கு உரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே (பா.1)

நூலின் 89 ஆவது பாடலாகவும் நிறைவுப்பாடலாகவும் விளங்குவது பின்வருவதாம்.

ஓடிடும் பஞ்சேந்திரிய மொடுக்கியென் னூழ்வினைகள்

வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்

சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையினுள்ள

சேடர்தம் செல்வப் பெரும்பு கழந்தாதி செப்பிடவே (பா.89 )

மேலே காணலாகும் இப்பாட்டே இவ்வந்தாதியின் முதற்செய்யுள் முதற்சொல்லால் முடிந்தமையால் அந்தாதியாயிற்று.

8.     ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

திருஞானசம்பந்தரை ஆளுடைய பிள்ளையார் என்று சிறப்பித்து அழைப்பர்.  நம்பியாண்டார் நம்பி, திருஞானசம்பந்தரை வழிபடுதெய்வமாகக் கொண்டு பாடிய நூல்களுள் ஒன்றே ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியாம்.  இந்நூல் ஞானசம்பந்தரைத் தியானி;த்தால் அடையும் பலன், ஞானசம்பந்தரே திருமுருகனின் திருவவதாரம் என்று குறிப்பதுமான கருத்துக்கள் நிரம்பிய அருட்கருவூலமாகத் திகழ்கிறது. இலக்கியவகையில் அந்தாதி அமைப்பில் அமைந்த நூலாகத்திகழ்கிறது என்பது குறிக்கத்தக்கது.

பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற

நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த

கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற் தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தன்பதியே  (பா.1 )

இப்பாடல் “பார்” என்று தொடங்குகிறது. இப்பாடலின்கண் சீர்காழிக்குரிய பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட சீர்காழித் திருத்தலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தரின் பெருமைகளைக் கூறுவதாக அமைகின்றது.

      நூறாவது பாடலில் சீர்காழியின் 12 பெயர்களையும் விளக்கி, இத்தலத்து நாயகனாய் திருஞானசம்பந்தர் விளங்கியமையைச் சிறப்பித்துக் கூறும்பாடலாகும். 

பிரமா புரம்வெங் குரு, சண்பை,தோணி, புகலி,கொச்சை,

சிரமார் புரம்,நற் புறவந், தராய்,காழி வேணுபுரம்

வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்கு

பரமார் கழுமலம் பன்னிரு நாமமிப் பாரகத்தே  (பா.100 )

இந்நூலின்கண் முதற்பாடலின் முதல்சீரும் நூறாவது பாடலின்சீரும் “பார்” என்று மண்டலித்து வருவதால் அந்தாதியாயிற்று. 

நிறைவுரை

      இவ்வாறு அந்தாதி என்பது ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை,சிவபெருமானை எண்ணி அவன் திருவைந்தெழுத்தே உயர்நிலை தரும் என்பதை உள்ளடக்கி படைக்கப்பெற்றுள்ளது. அடிமுடி தேடிய வரலாற்றை ஞானசம்பந்தர் படைக்க, அதன்தொடர்வாய் அடியும்முடியுமாக விளங்கும் இறைவனை அந்தாதி வகையால் பாடிப் பரவியுள்ளனர் பதினொன்றாம் திருமுறைவாணர்கள்.

துணைநூற்பட்டியல்

1.     காரைக்காலம்மையார் ,அற்புதத் திருவந்தாதி

2.     நக்கீரர் கயிலைபாதி காளத்திபாதி

3.     சேரமான்பெருமாள் நாயனார், பொன்வண்ணத்தந்தாதி

4.     கபிலதேவநாயனார், சிவபெருமான் அந்தாதி

5.     பரணதேவநாயனார் சிவபெருமான் அந்தாதி

6.     பட்டினத்தார், திருவேகம்பமுடையார் அந்தாதி

7.     நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதி

8.     நம்பியாண்டார் நம்பி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

 

திருவாலவாயுடையார் முதலிய பன்னிருவர் அருளிய பதினொன்றாந்திருமுறை , தருமையாதீனப் பதிப்பு தருமபுரம் 1995.