4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

செவ்வேள் -முனைவர் மு.துர்க்கா

 

செவ்வேள்

 

முனைவர் மு.துர்க்கா

உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை

  சோனா கலை அறிவியல் கல்லூரி

சேலம் - 636 005

 பாட்டும் தொகையும்என்பது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகையுள் அகப்பொருளையும் புறப்பொருளையும் சேர்த்துக் கூறும் ஓரே நூல் பரிபாடல்.

பாட்டு வகையால் பெயர் பெற்ற நூல்களில் ஒன்றாக இந்நூல் திகழ்கின்றது. இந்நூலைஓங்கு பரிபாடல்என்று பழம்பாடல் ஒன்று சுட்டுவதிலிருந்து, இதனின் உயர்வை உணரமுடிகிறது. பரியின் பாய்ச்சல் போலச் செல்லும் நடையினை உடையதால் இன்ன பெயர் பெற்றது என்பர் புலவர்.

பரிபாடல் அமைப்பு

பரிபாடல் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது. இன்று 22 பாடல்களே கிடைத்துள்ளன. இதனுள் 5,8,9,14,17,18,19,21 ஆகிய எட்டுப்பாடல்களில் அமைந்துள்ள செவ்வேளாகிய முருகனைப் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

பரியும் பண்ணும்

ஒவ்வொரு பாடலின் கீழும் இசை வகுத்தவர் பற்றிய குறிப்பும் இன்ன பண் என்ற குறிப்பும் உள்ளது. ‘இன்னியல் மான்தேர்ச்சி இசைபரிபாடல்’ (பரிபாடல். 11:137) என்று நல்லந்துவனாரும் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருந்துமொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும் துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம்என்கிறது உரைச் சிறப்புப்பாயிரம். செவ்வேளைப் பற்றி கடுவன் இளவெயினனார், நல்லந்துவனார், குன்றம்பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பிண்ணையார்;, நல்லச்சுதனார் ஆகியோர் பாடியுள்ளனர்.

தெய்வ நம்பிக்கை என்பது மக்கள் சமுதாயத்தை நேரிய வழிமுறையில் கொண்டு செல்வதாகும். தெய்வ வழிபாடு அச்ச உணர்வின் காரணமாகவே பின்பற்றப்பட்டு வருவதை அறியலாம். தொல்காப்பியர் காலத்தில் குறிஞ்சிநிலத் தெய்வமாக இருந்த சேயோன் சங்க காலத்தில் நிலம் கடந்த பெருங்கடவுளாக அனைவராலும் போற்றப்பெற்றார்.

செவ்வேளின் பிறப்பு

நொசிப்பின், ஏழ்உறுமுனிவர் நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்

மனைவியர், நிறையின் வசிதடி சமைப்பின்

சாலார் தாகே தரிசிக்க என அவர்அளி

உடன் பெய்தோரே, அழல்வேட்டு அச்சுளித்

தடவு நிமிரி முத்தீப் பேணிய மன் எச்சில்

வடவயின் விளங்குஆல் உறைஏழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய

அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்

மறுஅறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழாஅது நிற் சூலினரே

நிவந்து ஓங்கு, இமயத்து நீலுப் பைஞ்சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்

பெரும் பெயர் முருக! நிற்பயந்த ஞான்றே

அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன்

எரிஉமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்தென

ஆறு வேறு துணியும் அறுவர் ஆகி

ஒருவனை வாழி  (பரிபாடல் 5:37-54)

என்னும் அடிகளால் செவ்வேளின் பிறப்பு உணர்த்தப்படுகிறது. இந்திரன் சிவனிடம் வரம் கேட்க, சிவன் தனது கருவின் உருவினைச் சிதைத்துப் பல துண்டுகளாக்கி இந்திரன் கையில் கொடுத்தான். இந்திரனிடமிருந்து சிதைந்த கருவினை ஏழு முனிவர்கள் பெற்றுக் கொண்டனர். அவர்களின் தவ வலிமையினால் வேள்வித்தீயில் இட்டனர். அவிப்பாகத்துடன் சேர்ந்த எச்சிலாகிய அவற்றை வானின் வடதிசையில் உறையும் ஏழுமகளிருள் அருந்ததி தவிர அனைவரும் அப்பொழுதே உண்டு ஆறுகுழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இதனையறிந்த இந்திரன் தனது வச்சிரப்படையால் குழந்தைகளை வெட்ட ஆறும் ஒரே உருவமாகத் (செவ்வேளாக) தோன்றியது.

செவ்வேளின் புனைவு

மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை

மூவிறு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள்

ஞாயிற்றேர் நிறத்தகை  (பரிபாடல் 5:10-12)

கடுவனிளவெயினனார், ஆறு மெல்லிய தலைகளையும் பன்னிரெண்டு மத்தளம் போன்ற தோள்களையும் இளங்கதிரவன் போன்ற நிற அழகையும் உடையவன்செவ்வேள்என புனைந்துள்ளார்.

செவ்வேளின் உருவம்

“ஊர்ந்ததை எரிபுரை ஓடைஇடை இமைக்கும் சென்னிப்

பொருசமம் கடந்த புகழ்சால் வேழம் சருமத்தின்

தொட்டதை, தைப்பமை தாள் இயை தாமரை

துப்பமை துவர்நீர்த் துறைமறை அழுத்திய

வெரி நத்தோலெடு முழுமயிர் மிடைந்த

வரிமலி அரவுரி வன்பு கண்டன்ன

புரிமென் பிலிப் பொழ்வுடினை அடையல்

கையதை கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து

புள்ளோடு சுருளுடை வள்ளி கிடையிடுபு இழைத்த

உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ்தார்” (பரிபாடல். 21:1-11)

மேற்காணும் பாடல்வழிவிளக்கத்தால் தீப்போல ஒளிரும் முகபடாம் மத்தகத்திடையே பொலியப் போர்க்களத்தில் பகைவரை வென்ற புகழ்மிக்க பிணிமுகம் என்னும் யானையை ஊர்தியாகக் கொண்டுள்ளாய். பவழம் போன்ற துவர் நீர்த்துறையில் நன்றாக ஊறவைத்த தாமரைத் தோலால் தைக்கப்பெற்ற செருப்பைத் திருவடிகளின் நிறத்திற்கேற்ப அணிந்துள்ளாய். அவுணர்களின் அரணான மாமரத்தை அழித்து, கிரௌஞ்ச மலையைப் பிளந்து, கடப்பமாலைத் தரித்த வேலைக் கையில் தாங்கியுள்ளாய் என்று நல்லந்துவனார் எடுத்தோதியுள்ளார்.

முனிவர்களும் தேவர்களும் தொழும் முருகன்

                நல்லந்துவனார் பாடிய எட்டாம் பாடலை மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழில் பண்ணிசைத்துள்ளார்.  இப்பாடல் புறப்பாடலுக்குள் அகக் காட்சியைப் பொருத்தித் திறம்பட பாடியிருப்பது தனிச்சிறப்பாகும்.  திருப்பரங்குன்றத்து முருகனை 35 அடிகளில் சிறப்பாக வருணிக்கின்றார்.  பல முனிவர்களும் தேவர்களும் பரங்குன்றத்தில் முருகனைத் தொழக் கூடுவதால் இது இமயக்குன்றத்தினை ஒத்திருக்கிறது.  இங்குள்ள பொய்கை இமயத்திலுள்ள சரவணப் பொய்கையை நிகர்த்தது.  புல உயிரினங்களின் முழக்கமும் சப்தமும், பல்வகை மலர்களின் மணமும் தென்றலும் கொண்டது திருப்பரங்குன்றம்.  மதுரையில் எழுகின்ற ஓசை பரங்குன்றத்தில் எதிரொலிக்கும்.என்பதாக இப்பாடல் புனையப்பட்டுள்ளது.

வேல்

                பரிபாடலில் வேல் பற்றிய குறிப்பு எட்டு இடங்களில் இடம்பெறுகிறது.  வேலையும் இறைவனையும் இணைத்துக்கூறும் போக்கு பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.

                வேலாய்  பரி ( 8:29 மற்றும் 19-36 )

                வேல் வேள் (பரி; 18:26 )

                வேலாற்கு  (பரி: 9: 68)

                குன்றம் தொலைத்தமையை ஓரிடத்தில் குருக எறி வேலோய. (பரி 19:36)

   சூரனைவென்றமையை மூன்று இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

                சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் ( பரி:9:70 )

                மா தபுத்த வேலோய் ( பரி18:4)

                சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே ( பரி: 14:18 )

 மேற்காணும் பாடலடிகளில் சூரனை வென்றமையைக் கூறுமிடத்தும் வேல் பேசப்படுகிறது.  இரண்டு இடங்களில் சூரனையும் குன்றையும் தொலைத்தமையையும் ஒருங்கே கூறி வேலின் சிறப்பினைச் சுட்டும் போக்கும் உள்ளது.

எவ்வத்து ஒவ்வா மாமுதல் தடிந்து

தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி

அவ்வரை உடைத்தோய்….. (பரி19:101-103 )

கையதை கொள்ளாத் தெவ்வர் கொள்மா முதல் தடிந்து

புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல் (பரி.21:8-9)

                மெய்வேல்  (பரி8:66 )

                மறவேல்   (பரி21:66)

                வெண்சுடர்வேல் (பரி 18:26 )

என்பன வேல் பற்றிய குறிப்புகளாம்.

கடுவன் இளவெயினனார் இறைவன் கையகத்து இருப்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவர் (பரி :5: 57-68 ) இப்பட்டியலில் செவ்வேளது சிறப்புரிமைப் படையான வேல் குறிப்பிடப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது.

                வென்றிக்கொடி (பரி 21:17 )

                மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடி (பரி 17:48 ) எனக்குறிப்பிட்டு ஓரிடத்தும் கூறப்பட்டுள்ளது.  செவ்வேள் பரிபாடல்களில் மயில் கொடியேயன்றிப் பிற கொடி குறிப்பிடப்படவில்லை. 

திருமுருகாற்றுப்படையோ,

                பல்பெரி மஞ்ஞை வெல்கொடி அகவ (திருமுருகு.122 )

                புகரில் சேவலங் கொடியே (திருமுருகு.210-211)

ஏன மயிலையும் சேவலையும் கொடியாகக் காட்டும்.

சேவ்வேள் பரிபாடல்களில் இறைவனுக்குரிய ஊர்தியாகப் பிணிமுகம் பேசப்பட்டுள்ளது.  பிற ஊர்திபற்றிய குறிப்பில்லை.

                சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து (பரி:5-2)

படுமணி யானை நெடியாள் (பரி:5:19:28 )

ஊர்ந்ததைஎரி புரை ஓடை இடை இமைக்கும்

சென்னி பொரு சமம் கடந்த புகழசால், வேழம் பரி21 -1-2 )

என்று செவ்வேள் பரிபாடல்புலவர்கள் பகர்வர்.  திருமுருகாற்றுப்படையோ ஊர்தியாக மயிலையும்  பிணிமுகத்தையும் கூறும். 

                செவ்வேளுக்குரிய மாலை வள்ளிப்பூவினை இடை இடையே இட்டுத் தொடுத்த கடம்பினது பூவினால் இயன்ற மாலையாகும் என்பர் (பரி 21 -10-11 )

                செவ்வேளுக்குரிய மரமாகக் கடம்பம் சுட்டப்படுகிறது.

கடம்பமர் செல்வன்  --- பரி 8: 126 )

செவ்வேளின் வீரம்

செவ்வேளுடன் போரிட்டுத் தோற்ற இந்திரன் மயிலையும் அக்கினித்தேவன் சேவற்கொடியையும் திறைப்பெருளாக அளித்தனர். எமன் வெள்ளாட்டுக்குட்டியை வழங்கினான்.

ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய

போரால் வறுங்கைக்கும் புரந்தரன் உடைய

அல்லல் இல் அனலன் தன் மெய்யிற் பிரித்துச்

செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து

வளங்கெழு செல்வன் தன் மெய்யிற் பிரித்துத்

திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்

திருந்து கோல் ஒமன் தன் மெய்யிற் பிரிவித்து

இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்

ஆஅங்கு, அவரும் பிறரும் அமர்ந்து படையளித்த

மறியும் மஞ்சையும் வாரணச் சேவலும்

பொறிவரிச் சாபமும் மரனும் வாளும்

வெறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்

தெறுகதிர்க் கனலியும் மாலையும் கைக்கொண்டு

வேறுவேறு உருவின் இவ்வாறு இருகைக் கொண்டு(பரி. பா.5:55-68)

ஏன ஆட்டுக்குட்டி, மயில், ஈட்டி, கோடாரி, கணிச்சி, மழு, மாலை, மணி ஆகியன போன்ற படைக்கருவிகளைப் பன்னிரு கைகளில் தாங்கி, செவ்வேள் வீரத்துடன் காட்சியளிக்கிறான்.

செவ்வேள் அன்பர்கள்

யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே’ (பரிபாடல் பா.5:78-81)

என வேண்டுகின்றனர்.

சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும்என்பது பழமொழி.

கருவயிறு உருக எனக் கடம்படுவோரும்

செய்பொருள் வாய்க்க எனச் செவி சார்ந்து வோரும்

அமர் அடுக என அருச்சிப்போரும்’ (பரிபாடல் 8:106-108)

என கர்ப்பம் வேண்டியும், நிறைய பொருள் வேண்டியும் செவ்வேளை வணங்குகின்றனர்.

செவ்வேளின் அருள்

நின்அடி உறை உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு

பிரியாது இருக்கஎம் சுற்றமொடு உடனே’ (பரிபாடல் 18:54-56)

உன்னை வணங்கும் எனக்கும் எனது சுற்றத்தாருக்கும் பிறவித்துன்பம் சாராதவாறு இன்பம் நிறைந்த நாளைப் பெற நீ அருளவேண்டும் என்று செவ்வேளை வழிபடுகின்றனர்.

திருப்பரங்குன்றின் இயற்கை வருணணை

                செவ்வேள் குறித்த எட்டுப்பாடல்களில் கேசவனார் இயற்றியது 14 ஆம் பாடல்.. இப்பாடல் பருவங்கண்டு அழிந்த தலைமகள் முருகவேளைப் போற்றுபவளாய், கார்ப்பருவத்தே தலைமகன் வருவான் என்னும் நிலையில் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்துள்ளது.  இப்பாடல் தோழி திருப்பரங்குன்றத்தையும் முருகவேளை முன்னிலைப்படுத்தியும் பாடுவதாக இடம்பெற்றுள்ளது.

                                                …….    …….. போர் மலிந்து

                சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே!

                குறையில் கார்மழை பொங்கி யன்ன

நறையி னறும்புகை நனியமர்ந் தோயே!

அறுமுகத் தாறிரு தோளால் வென்றி

நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே !

கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை

எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!

பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்

சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே!

இருபிறப் பிருபெயர் ஈரநெஞ்சத்து 

ஒருபெயர் அந்தணர் அறனமர்ந் தோயே.பா.14.(1-17 )

மேற்காணும் பாடல் திருப்பரங்குன்றத்தைப் பற்றிய இயற்கை வருணனை, இலக்கியச் சிறப்புடையது.

பரிபாடல் திருப்பரங்குன்றத்து முருகனைப் பற்றி மட்டும் பாடுகிறது. முருகனின் பிறப்பு செவ்வேள் தாமரையில் அவதரித்தல் (8), தமிழாராய்தல் (9) அழகு, வேற்படை, கொடி, ஊர்தி முதலான செய்திகளை எட்டுப்பாடல்களில் கூறுகிறது. முருகனுக்கு யார்? யார்? படைக்கருவிகளை வழங்கினார்கள் என்ற செய்தி பரிபாடலில் மட்டுமே காணப்படுகிறது. முருகனின் பக்தர்கள் அவர்கள் வேண்டும் வரங்கள், முருகனின் அருள், முக்தி ஆகிய செய்திகளும் இடம்பெறுகிறது.

துணைநூல்கள்

1.            பரிபாடல்   …(கழக வெளியீடு , சென்னை

2.            ஓங்கு பரிபாடல்   முனைவர் சிந்தா நிலாதேவி , சங்கீதம் பதிப்பகம்.  இலாஸ்பேட்டை புதுச்சேரி 605 008, பதிப்பு ஆகஸ்டு 2004.

3.            திருமுருகாற்றுப்படை  கழகவெளியீடு சென்னை

4.            புதிய தமிழ் இலக்கிய வரலாறு,  சிற்பி பாலசுப்பிரமணியம் (பதி.ஆசி.)

                சாகித்ய அகடமி, சென்னை 2013

5.            தமிழ் இலக்கியவரலாறு, சி.பாலசுப்பிரமணியன், சாரதா பதிப்பகம் சென்னை 14, இரண்டாம்பதிப்பு 2014.