4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

அணுத்திமிர் அழகு - மைத்திரி அன்பு

 

அணுத்திமிர் அழகு

 


                               
ற்காலத் தமிழ் இலக்கியம் வடிவத்தாலும், பொருளாலும் மரபிலிருந்து மாறுபட்டு பலவகையினூடே உருமாறி வளர்ந்து வருகிறது. அதன்கீழ் தன் படைப்பாளுமை திறத்தால், புதிய கருத்தியல்களையும் புதிய உத்திமுறைகளையும், தனகேயுரிய உணர்ச்சிப் பெருக்குடன், உத்வேகத்துடன் எழுதிவரும் கவிஞர்களுள் அறிவுமதி குறிப்பிடத்தக்கவர். மொழிப்பற்றும், கவியார்வமும் கொண்ட இவர்தம் கவிதைகளிலும் திரைஇசைப் பாடல்களிலும் பிறமொழிச் சொற்கள் கையாளப்படுவதில்லை. மேலும் இவர் பெரியார் கொள்ளைகையில் பற்றுண்டு தமிழுக்காக.. தமிழர்களுக்காக.. தன் எண்ணத்தையும் எழுத்தையும் உரித்தாக்கித் தருகிறார்.

 

        மகிழ்ச்சிச் சார்ந்து அமையும் மனநிறைவைப் பாடும்பொழுதும்; மாற்ற முடியாத உலகத்திற்காகப் பாடும்போழுதும் இவர்தம் கவிதைகள் உரிய உணர்ச்சிக் குவியலினூடான புதிய கருத்தியலை இழைந்தோடச் செய்கின்றன. ‘அணுத்திமிர் அடக்கு’ உட்பட இக்கருத்தியல் அவர் கவிதைகள் அனைத்திற்கும் பொதுவானதே.

 

 

[1]

-    சூட்சமமான கருத்துதனைப் புலனுணர்வுப் படிமங்களில் வெளிப்படுத்துவது கவிதையின் ஆகச் சிறந்த அழகியல்,

“வானத்தைத்

தின்னு

கிரகங்களைக்

கொறி

காற்றைக்

குடி” 

 

“காற்று வியர்வை

தின்ன

களத்து மேட்டில்

குவி குவி குவி

கேட்காதே

கொடு” 

-    மனிதநேயக் கருத்தை அல்லது சிந்தனையை முன்னிலைப்படுத்தி, கருத்து முதல்வாத அழகியல் என்ற உருவவியல் அமைப்பை இக்கவிதை தோற்றுவிக்கிறது.

-    கவிதை என்பது ஒரு வார்த்தைக் கலை, சொற்கலை, கவிதையியல் என்பது கவிதையைக் கலைப்பொருளாகக் கருதிப் பயிலும் விஞ்ஞானம்.

-    கவிதையின் குறைந்தப்பச்ச அலகுகள் சொற்களே. சொற்களின் சேர்க்கைகளையும், கட்டமைப்பையும் பயில்வதே அழகியலானதொரு கவிதையியல் (புலப்பாட்டு திறம்), இதனை  இச்சொற்கட்டமைப்பு வலிறுத்துகிறது.

 

[2]

-    சொல்லுக்கு உருவம் உண்டு என்பார் ‘ஷக்லோவ்ஸ்கி’ ஒவ்வொரு சொல்லுக்கும் வரலாறுமுண்டு. சொல்லின் நீளம், அகலம், ஆழம், கனஅளவு என அதுதன் வரலாற்றுக்கேற்ப, பல அர்த்தப் பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. அதுவே சொல்லின் உருவம் என்பதாகும். இவ்வாறு ‘உரு’ கொண்ட சொல்லிலிருந்தே கவிதை செதுக்கப்பட வேண்டும்.

“வசப்படும்

தரையில் வாழ்க்கை

தேடி அள்ளு

கை நிறைய”

 

“சடங்குகள்

மிரள மிரள

புதிதாகு”

 

”கூச்சம் எதற்கு

புணரும் நிழலைக்

காறித்துப்பு.”

 

-    கவிஞரின் கவிதாயெண்ணம் சொற்களைத் தேர்வுச்செய்யும் நிலைக்கு ஒருபடிமேலேச் சென்று, அச்சொற்கள் மனித உணர்வின் உச்சங்களையும் நுணிகளையும் சுட்டிக்காட்டி, சமூகத்திற்கான ஆக்கக் கூறினை, விவரிக்கும் வகையில் இக்கவிதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இச்சொற்கட்டின் மீதான ஊடாட்டு நிலை, பாரதியின் வசன கவிதையில் குத்திட்டு நிற்கும் கவிதா உணர்வு நிலையினை நினைவுருத்துவது தனிநிலை.

 

[3]

-    ‘புதினப்படுதல்’ இலக்கிய அடிப்படைத் திட்டங்களுள் ஒன்று. இதற்கு “சாதாரணமான விஷயங்களை அசாதாரனப்படுத்துவது. இயல்பான சங்கதிகளை இயல்பிலிருந்து வேறுபட்டவையாகக் காட்டுவது. வித்தியாசமாக்கிக் காட்டுவது. புதிதாக்குவது. இருப்பதைப் புனைவிற்குள்ளாக்குவது” (இலக்கிய இஸங்கள்., ப70) என்று விளக்கங்கள் தரப்பட்டாலும், இவர் கவிதைகளின் புதினப்படுதல் தேடலோடு, தானியங்கித் தனமானப் பார்வையிலிருந்து விடுபட்ட ஒரு புதிய பார்வையை நோக்குகிறது.

“மௌனம்

செய்

சந்திப்பில்

 

பிரிவில்

பேசு! பேசு! பேசு!

 

நினைவே நல்லது

நிழற்படம்

கிழி.”

 

“அரசுகள் அற்ற

அரசினை செய்!”

 

“எதார்த்தங்களை இடறு”

 

சலுகை வெறு

திணித்தலை எதிர்

மிரட்டலைச் சந்தி

அடங்க மறு

 

வணங்காதே

மதி.

-    இவ்வரிகளில் சொற்கள் செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, பின் உபயோகிக்கப் பட்டுள்ளன. இது ‘புதினப்படுதல்’ என்னும் வெறும் இலக்கிய திட்டம், என்றல்லாது உலகை இன்னொரு விதமாகப் பார்ப்பதும், பார்க்கத் தூண்டுவதுமாக நீள்கிறது. ஏற்கனவே இருக்கும் உலகைப் பற்றியப் பார்வையில் அதிருப்திக்கொண்டு, வேறொருவிதமான உலகை மனதில் கட்டமைப்பது என்றவாறு விரிவாக்கிக் காட்டும் இக்காட்சி. கவிஞரின் புதிய உலக நோக்கிற்கான தேடலாகிறது.

 

[4]

-    புதுக்கவிதைகள் - கவிதையால் தீர்வாகின்றன.

இயற்கையை

மகிழ்ச்சி செய்


இளமையை

அழகு செய்

 

அணுத்திமிர் அடக்கு.

-    உணர்வுநிலை மீதான கவணெறிதலையும் - ஆக்கமுறைக்கான சிகரங்களை தொடமுயல்வதற்கான கருத்தியலையும் இவ்வரிகளில் காணலாம். ’ஆத்திசூடி – கொன்றைவேந்தன்’ வரிகளுக்கான உத்திமுறை இக்கருத்துநிலையினூடே சமூக ஆவேசங்களையும் உள அழகியலையும் சாத்தியமாக்குகிறது.

 

மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்