4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2022

மா தமிழ்நாடு - முனைவர் கோ. வ.பரத்வாஜ்,

 

மா தமிழ்நாடு

 

மூவேந்தர்கள்

முத்தமிழை வாழ வைத்த நாடு

இயற்கையின் கரத்தில்

ஐந்து ரேகை கண்டு

வாழ்ந்த நாடு

கடையேழு வள்ளல்கள்

வானவில்லாய் வளம் வந்த நாடு

வங்கக்கரையில்

அகம்புறம் இரு அலைகளாய்ப் பரந்த நாடு

வருவோர்க்கெல்லாம்

ஔவைப் பெற்ற நெல்லிக்கனியாய் திகழும் நாடு

இமயம்குமரி எங்கள் முதுகெழும்பு என்று

வள்ளுவனின் சிலை வைத்த நாடு

தஞ்சை கோபுரத்தில்

உழவனின் தானியத்தை சேமித்த நாடு

சலங்கை விதவையானதால்

பத்தினிப் பெண்டிர் என இராகம் பாடிய நாடு

.வே.சா.வால்

பனை ஓலையின் தமிழை உயிர்பித்த நாடு

பாரதியின் கவிதை மூச்சால்

இருள்பொசிந்து சுடர்விட்ட நாடு

பாரதம் தமிழ்த்தாயின்

தொப்புள்கொடியை வரைபடமாய் கொண்ட நாடு

அன்னத்தின் இறகால்

தொல்லை அகற்றிய கவிஞரின் நாடு

சாக்கடையில் புரட்டினாலும்

எழுந்து நின்று சட்டத்தை பேசும் நாடு

பெரியார் தீண்டாமையின் கழுத்தறுத்தார்

மா.பொ.சி எல்லைக் காத்தார்

காமராசர் மொழியால் கேட்டெழுந்த வீர நாடு

அண்ணா தமிழ்நாடு என்று சொல்லி

பிறப்புச் சான்று பெற்ற நாடு

மலைகளின் மடிப்பினிலே

கல்வெட்டுக்கள் புரட்டிப் பார்த்ததிலே

நீர் நுழைந்த துளைகளிலே

எங்கும் தமிழர்கள்

என்ற சான்று இந்நாடே.

அதுவே எமக்குரிய வீடே

 முனைவர்     கோ. .பரத்வாஜ்,

               உதவிப்பேராசிரியர்,