4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2022

ஹைக்கூ கவிதைகள் (விண்மீன்) - ஹேமலதா

 

ஹைக்கூ கவிதைகள் (விண்மீன்)


  அசைந்த நினைவுகளை

 இசைந்து நினைக்க வைக்கிறது

 பூங்கா.

 

சோலைகள் களவு போனது

 தார் சாலை கண்டுபிடிப்பு 

 நாட்டின் வளர்ச்சியில்.

 

 

 வெளிச்சம் தந்து

 சாம்பலாகும் தீக்குச்சி கள்

 உண்மைப் பத்திரம்.

 

ஊசிகளின் உணர்ச்சியில்

தாய்மையைக் காணும்

கறவை மாடுகள்.

 

பூர்வீக குடிகளின் 

  வாசலில்

 புலிகள் சரணாலயம்.

 

தொட்டில்களின் தோரோட்டம்

 வண்ணமயமாக

அரசமரத்தடியில்

 

 வாழ்வின் அனைத்தையும் பதிவிடாதே

பாரமாகிவிடும்

மனக் கணினி.

 

பலயுகங்களாக வாழ்கிறது

கண்ணுக்கு தெரியாமலே

தவழும் காற்று.

 

வடியாத நீர் வீடுகளில்

விளையாடுகிறது

குழந்தைகளுடன்.

 

 

மின்னலின் நடனம்

பெருவெளியில்

ஒரு நொடியில்.

 

இயற்கையின் விடியாத இருட்டு

இன்றும்

ஆழ்கடல் அமைதியில்.

 

வேளாண்மையை புரியாத மேலாண்மை

வீழும் போது புரியும்

பட்டினிப் போர்.

 

 

மழைநீர் கால்வாய் அமைப்பு

மரங்களின் வேர்களில்

புதிய சாகசம்.

 

 

தெருவோரக் குப்பைகளுக்கு

 நெகிழி தாள்கள்

குடைபிடிக்கிறது மட்காமலிருக்க.

 

உழைப்பை போதையாக்கியவன்

பெறுவது

 வெற்றிமாலை.

 

 ஓடும் நேரத்தில்

ஒதுங்கும் எண்ணங்கள்

படைப்பின் உச்சம்.

 

 

 குற்றங்கள் பிறப்பெடுப்பது

பசியின் நீட்சியில்

யதார்த்த வேதம்.

 

 

ஆழியில் எழுந்து ஆகாயத்தில் தவழ்ந்து

மண்ணில் மரிக்கிறது மழைநீர்

தியாகத்தின் எச்சம்.

 

 

காலத்தை கணிக்க மனிதனுக்கு

நேரத்தை பரிசளிக்கிறது

கடிகாரம்.

 

நீரைக் கிழித்து வந்த தாமரை

போராட்ட வாழ்வின்

அதீத அடையாளம்.

 

 

கண்ணில் விழுந்த உருவம்

உயிர்த்தெழுகிறது 

  காட்சிக் கவிதையில்.

 

 

பறவைகளின் விழிப்பில்

கூடுகளின் வெப்பம்

கருப்பு கருக்கலில்.

 

கயறு இல்லாமல் கட்டுகிறது

குயில் கீதம்

தோப்பு இருட்டில்.

 

கூன்விழுந்தே பிறந்த வானவில்

 என் வரைவுகளில் நிமிர்ந்தது

இன்னொரு அதிசயம்.

 

 

மழைநின்றாலும் நீரை விசிறுகிறது

சேமிக்கத் தெரியாத

இலைகள் .

 

இளமை குன்ற

 

தினம் பிறக்கும் சூரியன்

ஹேமலதா     

vannathupuchi1995@gmail.com