4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2022

நாயக்கர் காலத்தில் தோன்றிய தூது இலக்கியம் - செ. இராஜேஸ்வரி

 

நாயக்கர் காலத்தில் தோன்றிய தூது இலக்கியம்

செ. இராஜேஸ்வரி

உதவிப் பேராசிரியர்,

ஜென்னிஸ் கல்வியியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி.

முன்னுரை

நாயக்க மன்னர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பெருவளர்ச்சி பெற்றன. எனவே, நாயக்கர்கள் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிக்கின்றனர். இவர்கள் காலத்தில் தோன்றிய தூது இலக்கியங்களில் தலைசிறந்த நூலாகக் கருதப்படுவது தமிழ்விடுதூதுஆகும். தூது இலக்கியங்களில் பழமையானது வளபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடுதூதுஆகும். பலபட்டை சொக்கநாதப்புலவரின் அழகர் கிள்ளைவிடுதூதுசிறந்த நூலாகக் கருதப்படுகின்றது. சுப்பிர தீபக் கவிராயனின் கூளப்ப நாயக்கன் காதல்என்ற விறலி விடுதூது கற்பனை வளத்தோடு காதற் சுவையினை அள்ளித் தருகின்றது. அன்னம், மயில், கிள்ளை, மேகம், பூவை, குயில், தென்றல், வண்டு, நாரை, காக்கை, நெல், பணம், புகையிலை, வாடி, துகில், சவ்வாது, கழுதை, செருப்பு, விறலி, கோழி, புலவா,; நெஞ்சு, தமிழ் போன்றவைகளைத் தூதுப் பொருட்களாக குறிப்பிடுவர். இத்தகைய தூது இலக்கியம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

நாயக்கர் காலம்

மூவேந்தர்களின் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. இஸ்லாமியப் படையெடுப்பையும், ஆட்சியையும் தடுத்து நிறுத்த விசயநகரப் பேரரசு தோன்றியது. அவர்களின் பிரதிநிதிகளாக மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. முதல் சுதந்திர நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கர் 1538 முதல் 1563 வரை திருச்சிராப்பள்ளியை ஆண்டார். நாயக்கர்களின் காலத்தில் திருச்சிராப்பள்ளி ஐந்து பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை, உடையார்பாளையம், அரியலூர், மருங்காபுரி, துறையூர், கடலூர். இவர்கள் திருச்சியை சுற்றியுள்ள பல கோவில்களில் மண்டபங்களைக் கட்டினர்.

தூது

ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கோ ஒரு பொருளைப் பெற்று வருவதற்கோ ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது ஆகும். இது தொல்காப்பியர் காலந்தொட்டே ஓர் இலக்கிய பிரிவாக இருந்து வருகிறது. இது அகப்பொருள் பற்றியது புறப்பொருள் பற்றியது என இருவகையில் அடங்கும். மன்னர்கள் அனுப்புகின்ற தூது புறத்திணையுள் அடங்கும்.

தூது இலக்கியம்

ஒரு தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி தன் காதல் நோயின் துயரத்தை காதலனுக்கு எடுத்துக் கூற தூது சொல்லி வா” “மாலை வாங்கி வாஎன்று உயர்திணைப் பொருள்களையேனும் அஃறிணைப் பொருள்களையேனும் தூது விடுத்ததாகப் பாடப்பெறும் இலக்கிய வகை ஆகும். இதனை காமம் மிக்க களிபடர் கிளவிஎன்பர். இதன் இலக்கணத்தை,

சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்

செய்யா மரபில் தொழில் படுத் தடக்கியும்

எனத் தொல்காப்பியம் பேசும்.

காதலனும் காதலிக்கு தூது விடுப்பது உண்டு. விறலிவிடுதூது ஆடவன் விடுத்த தூது நூல். எனினும் அது காதற்பொருள் கூறவில்லை. மாறாகத் தலைவன் தான் பரத்தையிடம் கூறி கேடடைந்த செய்தியை விறலியிடம் கூறி மனைவியின் ஊடலை நீக்குமாறு விறலியை அனுப்பியதாகப் பொருள் அமைத்துப் பாடப்பெற்றுள்ளது. இதுபோல ஆடவன் விடுத்த தூதுநூல் காண்பது அரிது.

இலக்கியங்களில் தூது

தூது செல்பவர்களின் இலக்கணத்தை திருக்குறள் பேசுகின்றது. எனினும் சத்திமுற்றப் புலவரின் நாராய் நாராய் செங்கால் நாராய்எனத் தொடங்கும் பாடலைத் தூது பற்றிய முதல் பாடலாகக் கொள்ளலாம். எனினும் அதற்கு முன்பே கோப்பெருஞ்சோழனுக்கு பிசிராந்தையார் அன்னத்தை தூது விட்ட செய்தி புறநானூற்றில் காணப்பெறுகின்றது. மாதவி கோவலனிடம் கடிதம் மூலம் தூது அனுப்பியதைச் சிலப்பதிகாரத்திலும், குணமாலை சீவகனிடம் கிளியை தூதாக அனுப்பியதைச் சீவகசிந்தாமணியிலும், உதயணன் வாசவதத்தையிடம் மானை அனுப்பியதைப் பெருங்கதையிலும், நளன் தமயந்தியிடம் அன்னத்தை அனுப்பியதை நளவெண்பாவிலும், இராமன் இராவணனிடம் அனுமனையும் அங்கதனையும் அனுப்பியதை இராமாயணத்திலும், பாண்டவர்கள் துரியோதனனிடம் கிருஷ்ணனை அனுப்பியதைப் பாரதத்திலும் காண்கின்றோம். வடமொழியில் காளிதாசன் எழுதிய மேகசந்தேகம் என்ற தூது நூலும், நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய மாரிவாயில்என்ற தூது நூலும் காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் தூது

நற்றிணை காட்டும் தூது

பகலிலும் இரவிலும் வந்து தலைவியைச் சந்தித்துச் சென்ற தலைவன் வராமல் நின்றான் அதனை அறிந்த தலைவி வரைதல் வேட்கை கொண்டு வெண்மையான நாரையிடம் தூது செல்வதை வெள்ளிவீதியார் பாடலில் காணலாம்.

                சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!

                துறைபோகு அறுவைத் தூமடி அன்ன

நிறம்கிளர் தூவிச் சிறு வெள்ளாங் குருகே!

உம்ஊர் வந்து எம் உண்துறை நுழைஇ

சினக்கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப்பெய்தி

அனைய அன்பினையோ, பெருமறவினையோ

ஆங்கன் தீம்புனல் ஈங்கன் பரங்கும்

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்

இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே                  (நற் : 70)

சிறு வெண்மையான குருகுப் பறவையே எம்முடைய ஊருக்கு வந்து இங்குள்ள நீருண்ணுகின்ற துறைகளில் உள்ள கெளிற்று மீனைத் தின்றுகிறாய் பின்பு எமது தலைவன் நாட்டிற்குச் செல்கின்றாய். அவர் நாட்டிலுள்ள இனிய நீரானது நம்மூர் வந்து பாய்கின்றது. அப்படிப்பட்ட நல்ல ஊரையுடைய எம் தலைவனிடம் நான் என்னுடைய அணிகலன்கள் கழன்று ஓடும்படி அடையும் துன்பத்தைக் கூறுவாயாக. எம் ஊர் வந்து இரையுண்ட நன்றிக்காவது நீ தூது செல்ல வேண்டும். மறந்து விடாதே என்கிறாள் தோழி.

கொடுங்குரற் குறைந்த செவ்வாய்ப் பைங்கிளி

                அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,

                நின்குறை முடித்த பின்றை என்குறை

                செய்தல் வேண்டுமால்: கைதொழுது இரப்பல்

                பல்கோட் பலவின் சாரல் அவர் நாட்டு

                நின் கிளை மருங்கின், சேறி ஆயின்

                அம்மலை கிழவோற்கு உரைமதி இம்மலைக்

                கானக் குறவர் மடமகள்

                ஏனல் காவல் ஆயினள் எனவே                                  நூற்பா (102)

பகற்குறியிடத்தும் இரவுக்குறியிடத்தும் களவொழுக்கத்தில் தலைவியைச் சந்தித்து ஒழுகும் தலைவன் வரவில்லை. உடனே தினைப்புனத்திற்கு வராத தலைவனிடம் கிளியை தூது அனுப்புகிறாள் தலைவி.கிளியே உன் உணவுக்காக தினைக் கதிர்களை நீ விரும்பிய மட்டும் எடுத்துக்கொள்வாயாக.  நான் உன்னை விரட்டமாட்டேன். உன் தேவை முடிந்த பிறகு நீ என் தேவையை நிறைவேற்ற வேண்டும். பலா மரங்கள் நிறைந்த சாரலையுடைய தலைவரது நாட்டிற்கு உன்னுடைய உறவினர்களைக் காணச் சென்றால், அங்கு என் தலவனைக் கண்டு, தினைப்புனத்திற்கு குறவர் மீண்டும் காவலுக்கு வந்து நிற்கிறார் என்பதை மட்டும் கூறுவாயாக! எனத் தோழி கிளியிடம் கூறுவதை செம்பியனார் என்னும் புலவர் கூறுவதைக் காணலாம்.

குறுந்தொகை காட்டும் தூது

தலைவன் களவு மனத்திலே இன்னும் பல நாட்களைக் கடத்த எண்ணினான். அவனுக்கு அறிவுரை கூற நினைத்த தோழி ஒரு வண்டை நோக்கி தூது சொல்வதைக் காணலாம்.

அம்ம வாழியோ அணிச்சிறைத்தும்பி

தன்மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடமை மிடைந்த துடவை அம்சிறுதினைத்

துளர் ஏறி நுண்துகள் களைஞர் தங்கை,

தமிரின் தீராள் எம்மோ! அரசர்

நிறைசெலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கும் மலை கிழவோர்கே                       (குறுந் : பா : 392)

அழகான சிறகுகளை உடைய வண்டே நல்ல சொற்களை கூற அச்சப்படக் கூடாது. வரிசை வரிசையாகச் செல்லும் அரசர்களுடைய கேடயங்களைப் போலத் தேன் அடைகள் வரிசையாகத் தொங்குகின்ற மலைநாட்டையுடைய தலைவன் ஊருக்கு நீ சென்றால் இச்செய்தியை நீ கூற வேண்டும். மான்கள் நிறைந்து இருக்கின்ற தோட்டத்தில் உள்ள தினைப்பயிருக்குக் களையெடுக்கும் பெண்களின் மேல் தூசிகள் படிகின்றன. இம்மகளிரின் தங்கையான தலைவி சுற்றத்தாரை விட்டு நீங்காமல்  வீட்டிலேயே தான் இருக்கின்றாள் என்பதை மட்டும் கூறுவாயாக என்கிறாள்.

                புல்வீழ் இற்றிக் கல்இவர்

                வரை இழி அருவியின் தோன்றும் நாடான்

                தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்

                வந்தன்று வாழி தோழி! நாமும்

                நெய்பெய் தீயின் எதிர்கொண்டு

                தான் மணத்தனையம் என விடுகம் தூதே”(குறுந் : பா : 106)

ஒரு தலைவன் தமது காதலி மீது கணக்கற்ற அன்பு உடையவன். ஒருசமயம் ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பரத்தையருடன் கூடிக் குலாவ நேர்ந்துவிட்டது. வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பதற்கு ஏற்ப, காசு பறிக்கும் பரத்தையரின் இயல்பை அறிந்து, தமது இல்லத்துக் காதலியை அடைய நினைத்தான். திடீரென்று சென்றால் காதலியின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என நினைத்து ஒரு தூதுவனை அனுப்பினான். இதைக்கண்ட தலைவி தோழியிடம் கூறுவதாக மேற்சொன்ன பாடல் அமைகின்றது.

தோழியே இற்றி மரம் சிறிய விழுதுகளுடன் வளர்ந்திருக்கிறது. அதனுடைய வெண்மையான வேர் கற்பாறையிலே படர்ந்து இருக்கிறது. எட்டி நின்று பார்க்கிறவர்களுக்கு மலையின் பக்கத்திலே அருவிநீர் வீழ்வது போலக் காணப்படுகிறது. இப்படிப்பட்ட மலைநாட்டை உடைய தலைவன் நெஞ்சத்தால் குற்றமற்றவன். காலக்கோளாறு காரணமாக கால் சறுக்கி விழுந்துவிட்டான். இப்பொழுது தான் செய்த குற்றத்தை உணர்ந்துவிட்டான். அவன் குற்றத்தை நாமும் மறந்திட வேண்டும். நாமும் பெய்யும் நெய்யை ஏற்றுக்கொள்ளும் தீயைப் போல, நீ எம்மை மணந்த காலத்தில் நாம் உன்னிடம் எத்தனைய அன்பு கொண்டிருந்தேனோ அத்தனைய அன்பு இன்றும் எம்மிடம் உண்டு. அந்த அன்பு எள்ளளவும் குறையவில்லை எனத் தூது வந்தவனிடம் கூறுகிறார்.

ஐங்குறுநூறு காட்டும் தூது

தலைவியை விடுத்து தலைவன் பரத்தையரை நாடிச் சென்றான். அதை அறிந்த தலைவி தலைவனை தமது வீட்டிற்கு வரும்படி பாணனிடம் தூது கூறுகிறார்.

காண்மதி பாண! நீ உரைத்தற்கு உரியை

துறைகெழு கொண்கன் பிரிந்தென

இறைகேழ் எல் வளை நீங்கிய நிலையே        (ஐங் : பா : 140)

பாணனே என் துன்பத்தைக் காண்பாயாக! நெய்தல் நிலத் தலைவனாகிய என் கணவன் என்னை விட்டுப் பிரிந்தபோதே, என் முன் கையில் அணிந்திருந்த வளையல்களும் கழன்று ஓடின. இந்த நிலையை அன்பால் உரைத்து அவனை என்பால் மீண்டு வரச் சொல்வாயாகஎன்கிறாள் தலைவி.

தலைவன் பொருளீட்டத் தலைவியை பிரிந்து சென்றான். பல நாட்கள் கடந்தும் அவன் வரவில்லை. உடனே ஆற்றாதத் தலைவி தன் நெஞ்சத்தைத் தூதுவிட்டாள். அந்நெஞ்சு தம்பால் வரத் தாழ்ந்ததாகத் தோழியிடம் கூறுவதைக் காணலாம்.

செல்வம் வம்மோ - தோழி

பைது அறவெந்த பாவை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சம் நீடிய பொருளே                                                                (ஐங்:பா:317)

தோழியே! பிரிந்து போன எமது தலைவன் குறித்துச் சென்ற காலம் கடந்த நிலை கண்டு, அவன் வருத்தமிகுதியால் என்நெஞ்சு காதலன் சென்ற இடத்தை நோக்கி விரைந்து தனது உயிர் தலைவன்பால் சென்றதால், இங்கு இருப்பது உடல் மட்டுமே என்று கூறினாள். நெஞ்சு இனித்த தலைவன் வரும்போதே தன்பால் மீளும் என்றாள். அதுவரை நெஞ்சு தம்மிடம் வராது என்கிறாள்.

உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும்

மறுத்துரைப்பது போலவும், நெஞ்சினைக் கூறுவது இலக்கிய மரபு

தொல் பொருள் 196

இராமாயணத்தில் அனுமனின் தூது

சடாயுவின் சகோதரன் சம்பாதி உளவு சொன்னதால் சீதையை விச்ரவஸ் என்ற முனிவரின் புதல்வன் இராவணன் லங்காபுரிக்கு தூக்கிச் சென்றதை அறிந்தனர். இராமனின் துயரத்தினை ஆற்றுப்படுத்திய சுக்ரீவன் அனுமன் ஜானகியைத் தேடித் தருவான் என்று நம்பிக்கை அளிக்கின்றான்.

நீ உரைப்பாய் ஹனுமானே நான் சொன்னதாக

உன்னை யார் என வினவிடில் பதீராகவ தூதன் என்று

இராமன் அனுமனைப் பார்த்து சீதையை நீ கண்டாயானால் நான் கூற இருக்கின்ற இவற்றையெல்லாம் நீ சீதையிடம் சொல். சீதை உன்னை அறியாதவள். நீயும் அவளை அறியாததால் ஒருவேளை உன்னைக் கண்டு பயப்பட நேரிடலாம், இந்தக் கணையாழி மோதிரத்தைக் காட்டுவாயாக. உன்னை யார் எனக் கேட்டாள்

             ஸ்ரீராகவனுடைய தூதுவன்  எனச் சொல்

             நான் வாயு பகவானின் புதல்வன் என்றும் சொல்

             ஸ்ரீராமனின் பக்தன் என்றும் சொல்.

             வானரப் படைகளின் தலைவன் உன் நிலையை அறிந்து இராமனிடம் கூறவும், இவ்விடத்திலிருந்து உன்னைக் காக்கும் வழியை அறியவும் இலங்கையிலிருந்து நான் தூதுவனாக வந்துள்ளேன் என்று சொலஎன கூறினார்.

சீதை அனுப்பிய தூது

சீதையைக் கண்டு திரும்பிய அனுமனைக் கண்ட இராமன் அவனை ஆலிங்கனம் செய்தான். அவன் வாயிலிருந்து வர இருக்கும் வார்த்தைகளுக்காக ஏங்கி நிற்கிறான். தேவியைக் கண்டேன் மனம் ஒடுஙகிய போதிலும் மானம் இழக்காதிருக்கிறாள் என்று தெரிவிக்கிறார்.

லங்கையில் தவம் கிடக்கும் பெண்ணிடம் உயர்குலப் பிறப்பு, அளவிலாய் பொறுமை, கற்பு இம்மூன்றும் பாத்திரங்களாக உருவெடுத்து நடனம் ஆடுகின்றன. மேலும் உனது நினைவிலேயே தவத்திலிருக்கும் சீதை எனக்கு அடையாளம் கொடுத்தனுப்பினாள். இந்த சூடாமணியையும் கொடுத்தாள். ஒரு நாள் அவள் கன்னத்தில் பொட்டிட்டதையும் சொல்லச் சொன்னால். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் தரிக்க இயலாது என்றும் சொன்னாள். மான் விழியாள் இன்று துயரத்தால் வாடி நிற்கும் நேர் விழியாள். இராமன் சூடாமணியைப் பார்த்ததும் விவாகத்தின் போது என் தந்தை அவளுக்கு அளித்த பரிசு என்கின்றான். உயிர்போகும் தருவாயில் இருக்கிறவனுக்கு நீர் போல் இருக்கிறது உன் பேச்சு. இன்னொரு முறை சொல் என இராமன் அனுமனிடம் கேட்கிறார்.

இவ்வாறு அனுமன் அரக்கர்களால் எத்தனை இடர்கள் ஏற்படினும் தான் சூளுரைத்ததை முடித்தான். இராமன் சீதையிடையே சிறந்த தூதுவனாக செயல்பட்டு இருவரையும் இணைத்து தூதுவனுக்குரிய பணியினை சிறப்பாக செய்துள்ளதை இராமாயணக் காவியம் சுட்டிக்காட்டியுள்ளது.

முடிவுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். தூது நூல்களில் தூது விடு பொருளின் பெருமைகள் பல கூறப்படுகின்றன. நாயக்கர் காலத்தில் தோன்றிய தூது இலக்கியத்தின் சிறப்புகளை இக்கட்டுரையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.