4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

சிலப்பதிகாரத்தில் வெளிப்படுத்தப்படும் சமூகவழமைகள் - செல்வி சிவோகா சிவலிங்கம்

 

சிலப்பதிகாரத்தில் வெளிப்படுத்தப்படும் சமூகவழமைகள்

                                                                                                                                செல்வி சிவோகா சிவலிங்கம்

                                                                                                                                இளங்கலை மாணி

                                                                                                                                ஆசிரியை

                                                                                                                                மட்டக்களப்பு, இலங்கை.

முன்னுரை

   ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக இளங்கோ அடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம்  விளங்குகின்றது. இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டமைந்துள்ளதுடன் அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும், உரைசால் பத்தினினை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் ஆகிய மூன்று உண்மைகளையும் வலியுறுத்துகின்றது.  இளங்கோ அடிகள் துறவியாக இருந்த போதிலும் சமுதாய வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் சிலப்பதிகாரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வாழ்வின் அடிப்படைக் கூறுகள் அனைத்தையும் தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் சமூகத்தில் நிலவிய பண்பாடு, வர்ணப் பாகுபாடுகள், அவற்றுக்குரிய கடமைகள், பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பல்வேறு கலைகளின் வளர்ச்சி, சமயங்களின் நிலை, மற்றும் ஏனைய சமூக வழமைகளை தனது காப்பியத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவர் தனது கருத்துக்களை பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சிலப்பதிகாரத்தினை “நாடககாப்பியம்” என்று சிறப்பித்துக் கூறுவர். அந்த வகையில் சமூகத்தில் பாத்திரங்களாக விளங்குகின்ற சமூக அங்கத்தினரின்  சமூக வழமைகள் பலவற்றை இளங்கோ அடிகள் எடுத்துக் காட்டுகிறார்.

வர்ணப்பிரிவுகள்

சிலப்பதிகாரத்தில் காட்டப்படுகின்ற சமூகத்தில் நான்கு வகையான வர்ணக் கொள்கைகள் காணப்படுகின்றன. இவ்வாறான பாகுபாடுகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவதற்கு அன்றி, ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை கிரமமாக நிறைவேற்றுவதற்காகவே கட்டமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் நால்வகை வர்ணத்தாருக்கும் நான்கு தெருக்கள் அமைந்திருந்தன.

இவற்றை “நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை…..” (கடலாடுகாதை 165) என்ற பாடல் வரி புலப்படுத்துகின்றது.

பார்ப்பனர், அரசர்,வணிகர், வேளாளர் போன்ற வர்ணப்பாகுபாடுகளே அக்கால சமூகத்திலே காணப்பட்டன. பார்ப்பனர்கள் தீ ஓம்புதலைத் தொழிலாகக் கொண்டிருந்ததுடன் வைதீக ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தனர், இவர்கள் வேதம் ஓதுவதிலும் வேள்வி செய்வதிலும் ஈடுபட்டனர். இதனை

“உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றைமொ                                                                 

மழைக்கரு  உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்                                                                   

மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை” (நாடுகாண் காதை 142-145)                                                       

போன்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

  பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தானங்கள் என்பன வழங்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் வார்த்திகனுக்கு பிரமதேயமும், மாடலனுக்கு துலாபார தானமும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தணர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

சமூகத்துக்கு தலைவன் அவசியம் என்பதன் அடிப்படையில் உருவானவனே அரசன். அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களாக அரசர்கள் காணப்படுகின்றனர். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் “வார்த்திகன்”; என்னும் அந்தணனின் காலில் வீழ்ந்து வணங்குவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கீழ்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

       “……வார்த்திகன் முன்னர்    

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்                                                                                                          

தணியாவேட்கையும் சிறிது தணித்தனே” (கட்டுரை காதை 120-125)

சிலப்பதிகாரம் கூறும் சமூகத்தில், அரசன் தனது சுற்றத்தோடு நீராடுவதற்கு தேவையான நீரை வழங்கவும் வடிகட்டவும் நீர்ப்பொறியமைந்த குளம் அமைந்திருந்தமையை கீழ்வரும் பாடல்வரி குறிப்பிடுகின்றது.

           “இலவந்திகையின் எயிற்புறம் போகி                                                                                                     

உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்” ( நாடு காண் காதை 45-46)

 அரசர்கள் தங்களது பிறந்த நாள் கொண்டாட்ட வெள்ளணி விழாவின் போது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவிக்கும் வழக்கம் காணப்பட்டுள்ளதை “அடித்தளை நீக்கும் வெள்ளணியாம்” ( நீர்ப்படைக் காதை 230) என்ற பாடல் வரி மூலமும்  நீதி தவறாத அரசாட்சி இருந்தமையை  “பழியொடு படராப்  பஞ்சவ வாழி…”(வழக்குரை காதை 34) என்ற பாடல் வரி மூலமும்  அறியலாம்.

மூன்றாம் வருணத்தினவராக வணிகர் காணப்படுகின்றனர். “அரசர் பின்னோர், மன்னர் பின்னோர்”; எனக் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவர்களுக்கென மணவினைகள் சில காணப்படுகின்றன. இவர்களது பிறப்புப் பற்றி நோக்கும் போது ஒருவர் உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டுமெனில் நல்வினைகள் செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக “ கண்ணகியின் தாயும் கோவலனின் தாயும் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களாகப் பிறந்தமை” கூறப்படுகிறது. இதனைக் கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.

 “ மறையோனுற்ற வான்துயர் நீங்க                                                                                                                 

உறைகவுள் வேழக் கையகம்புக்கு                                                                                                                        

வானோர்வடிவம் பெற்றவன் பெற்ற                                                                                                                                

காதலின்மேல் காதல ராதலின்                                                                                                                           

மேனிலை உலகத்தவருடன் போகும்” (வரந்தரு காதை 120)

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வணிககுலத்தவர்கள் வைதிக நெறியிலிருந்து மாறுபட்ட சைன சமயத்தைப் பின்பற்றியவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் உள்நாட்டு, வெளி நாட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கினர். வாணிபத்தில் மட்டுமன்றி வேறுபட்ட விடயங்களிலும் ஈடுபட்டனர். கோவலன் யானை அடக்குவதிலும் கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளான்.

நீர்வாணிபம் இடம்பெற்றமைக்கான குறிப்பினையும் சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. வழிதவறிச் செல்பவர்களுக்காக இலகுவில் அடையாளங்களைக் கண்டு கொள்ள ஒவ்வொரு துறைநகரிலும் வெளிச்ச வீடுகள் காணப்பட்டன. இதனைக் கீழ்வரும் பாடல் வரி மூலம் அறியலாம்.

                  இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்……” ( கடலாடு காதை 140-145)

ஆடல் பாடல்களில் வல்லவர்கள் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாட்டின் அரசு இத்தகைய வர்ணப்பாகுபாட்டை பேணும் திறனுடையதாகக் காணப்பட வேண்டும். வர்ணப்பாகுபாடு சீர்குலையும் போது ஆட்சி நிலையிலும்  ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்று இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார்.                                                                                                                                  

“கோமுறை பிழைத்த நாளில் இந்நகர்                                                                                                              

தீமுறை உண்பதோர் திறன் உண்டு என்பது                                                                                   

ஆம் முறையாக அறிந்தன ஆதலின்                                                                                                                  

யாம் முறை போவது இயல்பு அன்றோ என   

கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்                                                                                                           

நாம் பால் பூதமும் பாற்பாற்பெயர” ( அழற்படுகாதை 105)

 வழிபாடு மற்றும் நம்பிக்கை

சிலப்பதிகாரம் வெளிப்படுத்துகின்ற சமூகத்தின்  வழிபாடுகள் பற்றி நோக்கும் போது, வேங்கட மலையில் திருமாலுக்கு ஆலயம் இருந்தமையை “தொடியோள் பௌவமும்”, “ தமிழ் வரம்பு அறுத்த” போன்ற குறிப்புக்களில் இருந்து அறியலாம்.

தமிழ் நாட்டில் சமணப் பள்ளிகள் காணப்பட்டன.  இது சமணப் பெண் துறவிகளுக்காக கட்டப்பட்டிருந்தன. பெண் துறவியை கோவலனும் கண்ணகியும் சந்தித்த செய்திகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. இதனால் இக்காலச் சூழலில் சமயப் பொறை நிலவியுள்ளதை அறியலாம்.

பலியிடும் வழக்கம் இக்கால சமூகத்தில் காணப்பட்டுள்ளது. கொற்றவைக்கு பலியிடல் என்ற குறிப்பின் மூலம் இதனை அறியலாம். மதுரை நகர் கண்ணகியினால் எரியூட்டப்பட்டதனால் அங்கிருந்த மக்கள் வரட்சி, வறுமை, வெப்பு நோய் துயரங்களுக்கு உள்ளாகினர். இதனைத் தீர்க்க மன்னன், ஆயிரம் பொற்கொல்லரைப் பலிகொடுத்த செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. பலியிடுவதன் மூலம் தெய்வங்களுக்கு ஏற்பட்ட கோபத்;தை தணித்து, அத் தெய்வங்களைச் சாந்தப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை அக்கால சமூகத்தினர் கொண்டிருந்தனர்.  

ஊழ்வினையையும் சமூகத்தினர் நம்பினர் கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் அவன் கண்ணகியை விட்டுப் பிரிந்து அவளைத் துன்பப்படுத்தியமையாகும். எனவே அக்கால மக்கள் ஊழ்வினையைப் பொறுத்தே பலன்கள் அமையும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

 கலைகள்

கோவலன் கலாரசிகனாகக் காட்டப்படுகின்றான். மாதவியின் ஆடலுக்கு மயங்கி அவளுடன் வாழ்கிறான். கானல் வரி, வேட்டுவரி, ஆயச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றில் கலை அம்சங்கள் வெளிப்படுவதைக் காணலாம். மீனவர் பாடல், வேடர் பாடல், இடையர் ஆடல், மலைப்பகுதி மக்களின் ஆடல் பாடல், நாட்டுப் பாடல், அம்மானைப் பாடல், கந்துவரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலானவையும் உழவுத் தொழிலோடு தொடர்புடைய பாடல்களும் அக்கால சமூகத்தில் பாடப்பட்டுள்ளன.

பலவகையான ஆடல்களும் இக்காலத்தில் ஆடப்பட்டுள்ளன.  அல்லியம், கொட்டி, குடை,குடம்,பாண்டரங்கம்,மல்,துடி,கடையம்,பேடு,மரக்கால்,பாவை முதலான பதினொரு வகையான ஆடல்களை ஆற்றக் கூடியவளாக திகழ்ந்தமையைக் கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.                                                                                                                                                                                

 “பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்                                                                                                            

 கஞ்சன் வஞ்சம் கடந்ததற்காக                                                                                                                         

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்                                                                                                                 

அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த                                                                                                          

 மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்…”(கடலாடு காதை 45- 65)            

அரங்க விதானத்தில் காணப்படுகின்ற அழகிய சித்திரங்களும் அக்கால கலை உணர்வை வெளிப்படுத்துவதனைக் கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.                               

                “தோற்றிய வரங்கிற் றொழுதன ரேத்துப்                                                                                         

பூ தரை எழுதி மேனிலை வைத்துப்                                                                                                                   

தூணிழற் புறப்பட்ட மாண்விளக் கெடுத்தாங்                                                                                                  கொருமுக வெழினியும் பொருமுக வெழினியுங்                                                                       

கரந்து வர லெழியும் புரிந்துடன் வருத்து” (அரங்கேற்று காதை 105-110)                                                                                 

மாதவி பதினொரு வகையான கூத்துக்களையும் ஆடக்கூடிய ஆற்றலுடையவளாக திகழ்ந்துள்ளாள்.

“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து                                                                                                     

பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்                                                                                            

பதினோராடலும் பாட்டும் கொட்டும்..” (அரங்கேற்று காதை 12-25)                                                   

என்ற பாடல் மூலம் கூத்துக்கலை வளர்ச்சி பெற்றிருந்தமையை அறியலாம்.

திருமணம் மற்றும் நீதி

 சமூக வழமைகளில் ஒன்றாகிய திருமணச் சடங்கு பற்றியும் சிலப்பதிகாரத்தில் காணலாம். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. கோவலனுக்கு பதினாறு வயது, கண்ணகிக்கு பதின் இரண்டு வயது. பெற்றோரின் ஆலோசனைப் படியே இவர்களுக்குத் திருமணம் நிகழ்கிறது. எனவே அக்கால சமூகத்தினர் சிறுவயதில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஓரு வர்ணத்;தாருக்கு இடையில் திருமணம் நடைபெறும் போது வைதிக முறையில் நடத்தினர். இதனைக் கீழ்வரும் பாடல் வரி மூலம் அறியலாம்.

“ இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர்”;.(புகார்க் காண்டம் 40)

இல்லறத்தவருக்கு உரிய கடமைகள் சில சமூகத்தில் காணப்பட்டன. கோவலனைப் பிரிந்தமையினால் கண்ணகி அக்கடமைகளைச் செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக வருந்துகின்றாள்.  இதனைக் கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.

                “ அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்புதலும்                                                         

துறவோர்க்கு கெதிர்த்தலும் தொல்லோர்சிறப்பின்                                                       

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” ( கொலைக்களக் காதை 70 - 75)

சமூகத்தில் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட்டுள்ளது. சோழ நாட்டில் வழங்கப்பட்ட சமநீதியை கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்                                                                                                         

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்                                                                                         

வாயிற் கடைமணி நடுநா நடுங்க…” (வழக்குரை காதை 51-55)

பெண்கள் நிலை

    சிலப்பதிகார கால பெண்கள் நிலை பற்றி நோக்கும் போது, அக்காலப் பெண்கள் தைரியம் படைத்த பெண்களாகக் காணப்படுகின்றனர். கண்ணகி தனது கணவனுக்காக அரசனிடம் சென்று நீதி கேட்கின்றாள். தவறான தீர்ப்பை வழங்கியமையை தகுந்த ஆதாரத்துடன் காட்டுகின்றாள்.

    தாயிடம் பிள்ளைகள் தங்கி வாழும் நிலை காணப்படுகிறது. பெண்கள் ஆண்களுக்கு இ;ன்பப் பொருளாகக் கொள்ளப்படுகின்றனர். இதனால் பெண்கள் பல துன்பங்களை எதிர்கொள்ளுகின்றனர். மாதவி தனது தாயின் பரத்தைமை ஆடலைப் பின்பற்றுகின்றாள். கோவலன் அவளது ஆடலைக் கண்டு மயங்கி கண்ணகியை விட்டுப் பிரிந்து அவளுடன் வாழ்கின்றான். பின்பு மாதவி மேல் சந்தேகப்பட்டு அவளையும் விட்டுப் பிரிந்து செல்கிறான். அதனால் மாதவி துன்பம் அடைகிறாள்.

ஆடை மற்றும் அணிகலன்கள்

சிலப்பதிகாரம் காட்டும் சமூகத்தில் அணிந்த உடை பற்றி நோக்கும் போது, அக் காலத்தில் பட்டு, பருத்திப் பஞ்சு, விலங்குகளின் உரோமம் போன்றவற்றைக் கொண்டு நெய்த ஆடைகளை அணிந்தனர்.

                                “ நூலினு மயிரினும் நுழைநூற் பட்டினும்                                                       

பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து                                                                           

 நறுமடி செறிந்த அறுவை வீதியும்..” ( ஊர்காண் காதை 205)     

இச்சமூகத்தில் அரசர்களுக்கும், அரசியல் அதிகாரிகளுக்கும், அரண்மனை அலுவலர்களுக்கும்  மட்டுமே சட்டை அணியும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

                 “நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர                                                                  

மெய்ப்பை புக்கு வியங்கு நடைச் செலவிற்                                                                     

கைக்கோற் கொல்லனை…” (கொலைக்களக் காதை 105)

அடுத்து சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் சமூக வழமைகளில் அணிகலன்கள் பற்றி நோக்கும் போது, பெண்கள் காது வளர்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். காது வளர்க்கும் போது குதம்பையையும் வளர்த்த குழையையும் கடிப்பினையையும் அணிந்தனர். இதனை

                    “கொடுங்குழை துறந்த வடிந்து வீழ்காதினால்…”       (அந்திமாலை சிறப்புச்செய் காதை 50-55)

என்ற பாடல் வரி மூலம் அறியலாம்.

சங்கு வளையல்களை அணிவதில் பெண்கள் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஏழைப் பெண்கள் மட்டுமன்றி அரச குலத்துப் பெண்களும் சங்கு வளையல்களை அணிந்திருந்தனர். சாதாரண குடும்பத்துப் பெண்கள் இடம்புரிச் சங்கு வளையல்களையும் அரச குடும்பத்துப் பெண்கள் வலம்புரிச் சங்கு வளையல்களையும் தொடிகளையும் அணிவர். பாண்டிமாதேவியார் பொன்தொடிகளையும் வலம்புரிச் சங்கு வளையல்களையும் அணிந்திருந்தாள்.

கணவனை இழந்த கைம்பெண்கள் கையில் அணிந்த வளையல்களை உடைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கோவலன் இறந்த போது கண்ணகி தனது வளையல்களை உடைத்துக் கொண்டாள். இதனை

                “ கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்து…..” ( கட்டுரை காதை 180)

என்ற பாடல் வரி மூலம் அறியலாம்.

திருமணம் ஆக முன்பு பெண்கள் காற்சிலம்புகளைக் கழிப்பதை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அவ்விழா சிலம்பு கழி நோன்பு என்ற பெயரில் அமைந்திருந்தது. அரசர்களும் செல்வர்களும் சிலம்பினுள் முத்துக்களையும் மாணிக்ககற்களையும் இட்டு வைப்பர். பாண்டிமாதேவியின் காற்சிலம்பினுள் முத்துக்களை இட்டிருந்தனர்.

கண்ணகியின் பொற்சிலப்பு பொன்னால் செய்யப்பட்;டு, உள்ளே மாணிக்க கற்கள் இடப்பட்டு மேற்பகுதியில் மாணிக்க கற்களும் வைரக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. இதனைக் கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.

                “ மத்தக மணியோடு வயிரங்கட்டிய                                                                                                 

பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்                                                        

சித்திரச்சிலம்பின் செய்வினை யெல்லாம்….” ( கொலைக்களக் காதை 117-120)     

பல வகையான பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர்.  “ சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென                 ஓங்கிய கொள்கை” (ஊர்காண் காதை 201-204) இப் பாடலில் பல வகையான பொன்கள் கூறப்பட்டுள்ளன. பொன் ஆபரணங்கள் விலைமதிப்பு வாய்ந்தவையாகவும் வினைத்திறனான வேலைப்பாடுகளைக் கொண்டனவாகவும் காணப்பட்டன. இத்தகைய அணிகலன்களை மாதவி போன்ற ஆடல்பாடல்களில் அரங்கேறிய பெண்கள் அணிந்தனர். இதனை

 “ கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய                                                                                                                     நுண்வினைக் கொல்லர்…” (கொலைக் களக் காதை 105)                                                     

என்ற பாடல் குறிப்பிடுகின்றது.

கணவன் தொழில் நிமித்தம் வேறு இடத்துக்குச் செல்லும் போதும் அவன் வேறு பெண்களோடு சேர்ந்திருக்கும் போதும் கற்புடைய மனைவி அணிகலன்களை அணிவதில்லை. மங்கல அணிகலன்களை மட்டுமே அணிவர்.

                “ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய                                  

                   மென்துகல் அல்குல் மேகலை நீங்கக்     

                    கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் 

                    மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”             (அந்திமாலை சிறப்புச்செய் காதை 47-57) 

 நகர் மற்றும் வீடமைப்பு

நகர் எங்கும் பலவகையான கடைகள் காணப்பட்டன. கடைகளை அடையாளங் கண்டு கொள்ள ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு கொடி நடப்பட்டிருந்தன. இதனைக் கீழ் வரும் பாடல் மூலம் அறியலாம்.

                “ சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்                                                                                                         

சாம்பூ நதமென ஒங்கிய கொள்கையில்                                                                            

பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு                                                                                 இலங்குகொடி யெங்கும் நலங்கிளர் வீதியும்…( ஊர் காண் காதை 201-204)

  சிலப்பதிகாரம் வெளிப்படுத்துகின்ற சமூகத்தில் காணப்படுகின்ற வீடுகள் ஓடுகளால்   வேயப்பட்டிருந்தன. இதனைக் கீழ்வரும் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

                “ சுடுமண் ஏறா வடுநீக்கு சிறப்பின்                                                                                                                                                    முடியரசு ஒடுக்கும் கடிமனை வாழ்க்கை” ( ஊர்காண் காதை 146-147)

முடிவுரை

  இவ்வாறு சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறுபட்ட சமூக வழமைகளை பின்பற்றுபவர்களாக விளங்கியுள்ளனர். இவர்களது வர்ணப் பிரிவுகள், அரசியல், நீதி, சமயம் ,வழிபாடுகள், நம்பிக்கைகள், திருமணம், இல்லறக் கடமைகள், பெண்களின் நிலை, தொழில்கள்;, ஆடைகள், அணிகலன்கள், நகரமைப்பு, வீடமைப்பு  என்பவற்றினூடாக சமூக வழமைகள் வெளிப்படுவதைக் காணலாம்.           

உசாத்துணை நூல்கள்

1.     இரகுபரன்.க, 2003, சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள், இந்து சமய கலாசார    அலுவல்கள் திணைக்களம், இந்து சமய விவகார அலுவல்கள் திணைக்களம்.

2.     இரகுபரன்.க, 2010, அறநெறிக்காலமும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

3.     மீனாட்சி சுந்தரனார்.தெ.பொ, 2005, சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம், காவ்யா,16,இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடாம்பாக்கம், சென்னை 600024.

4.     சீனிவாசன்.ரா, 1997, சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம்5,செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை 600030.

5.     தேவநேயப்பாணர். ஞா, 2000, பண்டைத்தமிழர் நாகரிகமும் பண்பாடும், கீழையியல் ஆய்வு நிறுவகக் கல்வி அறக்கட்டளை சார்ந்த தமிழ்ப் பதிப்பகம்.