4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

திணைக்குடிகளின் பெண்ணீர்மையும் பெண்தெய்வ வழிபாடும் - முனைவர்.ந.வெண்ணிலா

திணைக்குடிகளின் பெண்ணீர்மையும் பெண்தெய்வ வழிபாடும்

முனைவர்.ந.வெண்ணிலா

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை

கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும்

மேலாண்மையியல் கல்லூரி –கடலூர்

 

ஆய்வுச்சுருக்கம்

               திணைக்குடிகளின் பாலினப் பாகுபாட்டில் ஆண் பெண் இருவரும் உயர்நிலை பண்புகளோடு பண்டைக் காலத்தில் வாழ்ந்தனர். அறம், பொருள், இன்பம் என்னும் பொருண்மையைப் போற்றி வாழ்ந்திருந்தனர். அக வாழ்வியலை நோக்குங்கால்  களவு, கற்பு என்னும் இருநிலைக் கோட்பாட்டின் வழியே பயணித்திருக்கின்றனர். அறநோக்கோடு பொருள் தேடலும், அறத்தின் வழி பொருளீட்டலும்  உயர் நோக்காக கொண்ட பண்டைத் தமிழர்கள் ஒத்த அன்புடையவராகஇல்லற வாழ்க்கை யினை இயம்பினர். அன்பின் ஐந்திணை வழி தொன்மையுடைய வாழ்வியலை மேற்கொண்டவர்கள்.சமூக ஏற்றத்தாழ்வற்சமநிலைச் சமுதாயத்திற்கு வழி கோலியவர் களானவர். தொழில் வழி, தொழில் செய்பவர்களை வகைப்பிரித்தனர். இவ்வகைப்பிரிப்பு நிலத்திற்கேற்ற தொழிலும்,  தொழிலின் இயல்பு தன்மையும் கொண்டே பிரிக்கப்பட்டன. தொழில் சார்புடைய ஐந்திணை மாந்தர்கள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றும் வேறுபடுத்தியிருந்தனர் என்பதற்கானச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பாணன், பறையன், கூத்தர், விறலி, கணிதன், உழவன், உழத்தி, இடையன், இடைச்சி, குறவன், குறத்தி, வண்ணாத்தி, பரத்தையர் என்னும் வகையில் சமூக வேறுபாட்டு நிலையினை பண்டைய வாழ்வியல் நெறிகளாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.

 

முக்கிய சொற்கள்

                   பெண்மை – மக்கட்பேறு – பாலினப் பாகுபாடு – வாழ்வியல் முறை - பொருளாதாரநிலை – தினைக்காத்தல் - ஆயமகளிர் - உணங்கல் தொழில் - அணங்கு – கொற்றவை – வெறியாட்டு – சாமானிசம் - வேலன் -பூசாரி – கட்டுவிச்சி.

THE FEMININITY OF THINAIKUDIS IS ALSO FEMININE WORSHIP

Dr.N.VENNILA

Associate professor in Tamil

Krishnasamy college of science, Arts and

management for women, Cuddalore.

Phone:63822 93979

Mail id : kvbs1215vennilan@gmail.com

 

Abstract

            Both men and women lived in ancient times with high qualities. They lived in praise of virtue. Wealth and pleasure. Looking at inner life. They have travelled through the dualistic theory of purity and chastity. The ancient Tamils, who had a high aim of seeking material things with the aim of virtue and materializing through virtue, led a loving home life. Those who practiced the five way archetype way archetype way of love. They are the pioneers of a balanced society without social inequality. By profession, they classified the people doing the profession. This category is divided according to the occupation of the land and the nature of the occupation. There is evidence in the sang]a literature that the profession – oriented five mantras distinguished between the superior and the inferior the way of social literature can be known as panan, paraiyan, kuththar, virali, kaniyan, uzhavan, idaian, kuravan Association of difference status as ancient life norms kurathi, vanathi , parathayar.

Key words

                   Feninity – maternity – gender Discrimination – Lifestyle – Economic status – thinaikkathal – Ayamakalir – Food industry – Anangu – Kotravai – veriyattu – unangal – samanisham – velan – poosari – kattuvichi.

 

முன்னுரை

       பெண்மைத் தன்மையின் இயல்பினை அழியாது காத்துக் கொள்ளுதலும், தன் கணவரைப் பேணி அவர் வழி ஒழுகுதலும், தம் இருவருக்கும் அமைவதாகிய நன்மை நிறைந்த புகழினை நீங்காமல் பாதுகாப்பதும் பெண்மைக்குரிய கடமைகளாகும். அன்பும் அறிவும் அமைந்த பண்புடைய பெண்மக்களைப் பெறுதலை விரும்பும் மக்கள், அத்தகைய நல்ல மக்கட்பேற்றினை அருளுதல் வேண்டும் என இறைவனை வணங்கினர். இதனை,

குன்றக் குறவன் கடவுட் பேணி

இரந்தனன் பெற்ற எவ்வனைக் குறுமகள்  (ஐங்கு. 257)

என்னும்  அடிகளால் உணரமுடிகிறது.

     மலையில் வாழும் மகளிர், தினைப்புனத்திலேயே தங்கி கிளிகள் முதலியவை தினையை உண்ணாதபடி ஓட்டும் வழக்கத்தை மேற்கொண்டனர். இரவு நேரங்களில் பரண்மீது அமர்ந்து புனம் காவல் செய்யும் கானவன், ஒருவன், கள்ளை உண்ட களிப்பால் மயங்கி உறங்குகிறான். அந்நிலையில் இளமையான களிறொன்று தினைப்புனத்தில் புகுந்தது. அதனையுணர்ந்த அவன் மனைவியாகிய கொடிச்சி தன் மணங்கமழும் கவர்தலைக் கோதி நின்று இரவிலே பாடுதற்கு ஏற்ற குறிஞ்சிப் பண்ணினை மிகவும் இனிமையாக செவி மடுத்தது. தான் விரும்பி வந்த தினைக் கதிரையும் உண்ணாமல், தினைப்புனத்தினை விட்டுத் திரும்பச் செல்லுதலையும் நினைக்காமல், எப்பொழுதும் எளிதில் மூடப்பெறாத தன் கண்கள் மூடுதலைப் பெற்று, நின்ற நிலையில் நின்றும் பெயராமல் உறங்கியது என்று அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது. பண்டைத் தமிழ் மகளிர் பாடிய இசை, விலங்குகளையும் அமைதியுறச் செய்யும் திறமுடையதென்பதை நன்கு அகநானூறு.   உணர்த்துகிறது      அமிழ்தினும் இனிய உணவினைச் சுவை மிகச் சமைத்துத் தம் கணவனுக்கு உணவளித்தல் அன்பு மிகு பெண்டிரின் இயல்பாகும். தலைமகள் ஒருத்தி சுவை மிக்க புளிக்குழம்பினைச் சமைத்துத் தன் கணவனுக்கு உணவளித்த  திறத்தினால் பண்டைத்திணைக்குடிகளின் பாடறிந்த ஒழுகும்பண்பு புலப்படுகிறது.

      மலைவாழ் மகளிர் தம் கணவரை தெய்வமென்று வணங்கி எழுதலைத் தமது பெருமையாகக்கொண்டமையால்; அவருடன் பிறந்த ஆடவர் தாம் தொடுத்த அம்புகளை இலக்குத் தப்பாமல் எய்யும் ஆற்றல் பெற்றனர் என்பதை குறிஞ்சிக் கலித்தொகை (39) கூறுகின்றது.

 திணைக்குடிகளின் பாலினப் பாகுபாடு

    ஆண் பெண் இருவரும் உயர்நிலை பண்புகளோடு பண்டைக் காலத்தில் வாழ்ந்தனர். அறம், பொருள், இன்பம் என்னும் பொருண்மையைப் போற்றி வாழ்ந்திருந்தனர். அக வாழ்வியலை நோக்குங்கால் களவு, கற்பு என்னும் இருநிலைக் கோட்பாட்டின் வழியே பயணித்திருக்கின்றனர். அறநோக்கோடு பொருள் தேடலும், அறத்தின் வழி பொருளீட்டலும் உயர் நோக்காக கொண்ட பண்டைத் தமிழர்கள் ஒத்த அன்புடையவராக இல்லற வாழ்க்கையினை இயம்பினர். அன்பின் ஐந்திணை வழி தொன்மையுடைய வாழ்வியலை மேற்கொண்டவர்கள். சமூக ஏற்றத்தாழ்வற்ற சமநிலைச் சமுதாயத்திற்கு வழிகோலியவர்களானவர். தொழில் வழி, தொழில் செய்பவர்களை வகைப்பிரித்தனர். இவ்வகைப்பிரிப்பு நிலத்திற்கேற்ற தொழிலும், தொழிலின் இயல்பு தன்மையும் கொண்டே பிரிக்கப்பட்டன. தொழில் சார்புடைய ஐந்திணை மாந்தர்கள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றும் வேறுபடுத்தியிருந்தனர் என்பதற்கானச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பாணன், பறையன், கூத்தர், விறலி, கணிதன், உழவன், உழத்தி, இடையன், இடைச்சி, குறவன், குறத்தி, வண்ணாத்தி, பரத்தையர் என்னும் வகையில் சமூக வேறுபாட்டு நிலையினை பண்டைய வாழ்வியல் நெறிகளாக சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.

கொற்றவை வழிபாடு

    வீரத்தின் அடையாளமாக, சங்ககாலத்தில் கொற்றவை வழிபடப்பட்டது. போர் மேற்செல்லும் மன்னர்கள் கொற்றவையை வழிபடுவதை முக்கிய தருணமாகக் கருதினர். பேய்க்கும், கொற்றவைக்கும் நெருங்கியத் தொடர்புடையதை இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன. கொற்றவை அகத்திணைப் பாடல்களில் அச்சமூட்டும் தெய்வமாகவும், புறத்திணையில் வெற்றியின் அடையாளமாகவும் சுட்டப்படுகிறது. தொல்காப்பியம் கொற்றவைக்கு தனித்துறையை வகுத்துள்ளது.சான்று

    மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவைநிலையும் அகத்திணைப்புறனே(தொல்.59)

                    போரின் போது போர்க்களத்தில் மறவர்களது மறத்தினைச் சேர்த்து ஒலிக்கும் துடிநிலை சிறக்கின்ற கொற்றவை நிலை என்பது பொருளாகும்.  மறத்தொழிலுக்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதல் என்று கூறுவார் நச்சினார்க்கினியர். (தொல்காப்பியம்-பொருளதிகாரம் மூலமும்உரையும் நச்சினார்க்கினியர்.1983)

            கொற்றவை பற்றி பேராசிரியர் பஞ்சாங்கம் கூறுகையில், ஆதி இனக்குழுச் சமூகக் கூறுகளும், அரசு, அதிகாரம் உருவாவதற்கான நிலவுடைமைச் சமூகக்கூறுகளும் பரவலாகப் பதிவாகியுள்ளன. இத்தொகுப்புப் பாடல்களின் மூலம் அகத்தில் பெண்ணின் உடம்பை ஒடுக்கி ஓர் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் புறத்தில் ஆணின் உடம்பைக் கொண்டாடி அதிகார அரசை உருவாக்கும் அரசியலாக அமைந்துள்ளது. இச்சூழலுக்கு நேர்மாறாகத் தாய்வழிச் சமூகத்தில் மேலாண்மை கொண்டிருந்த பெண் உடம்பின் குறியீடாகத்தான் ‘கொற்றவைஎன்கிற பெண் தெய்வம் உருவாக்கம் பெற்றிருக்க வேண்டும். அழித்தொழிக்கப்பட்ட தாய்வழிச் சமூகம் குறித்த ‘அச்சத்தின்குறியீட்டாக கொற்றவை, வழி பொருளுக்கும் மனித மனத்தின் அச்சத்திற்கும் நெருங்கிய உறவுண்டு, எனவே வருத்தும் தெய்வமாக அகத்திணைப் பாடல்களில் பெருவாரியாக ‘அணங்குஎன்ற சொல்லால் சுட்டப்படுகிறாள். மேலும் மனித உயிர்ப்பலி, குருதிப்பலி கொடுப்பதன் மூலமாக வெற்றி தேடித் தரும் தெய்வமாகப் புறத்திணையில் புனைந்து வழிபடுவதன் மூலம் ஒடுக்கப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நினைவை தந்தைவழிச் சமூக உருவாக்கத்திற்கான வரமாகத் தகவமைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இத்தகையது தகவமைக்கிற தந்திரங்களுள் ஒன்று தான் முருகன் என்கிற ஆண் கடவுளுக்குத் தாயாகக் கொற்றவையைப் புனைந்து கொள்வது. முருகனை ‘வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ (வரி.258) என்கிறது திருமுருகாற்றுப்படை. எனவே கொற்றவை வழிபாடு என்பது தாய்வழிச் சமூகத்தின் அழிவிலிருந்தும் தந்தைவழிச் சமூகத்தின் மிச்ச சொச்ச அடையாளமே என்று சங்க இலக்கியத்தில் காணப்படும் கொற்றவை  குறித்த  குறிப்புகள் ஆகும் என்கிறார்.      (பஞ்சாங்கம். பண்டை தமிழர் சமய மரபுகள்- 2011.196)

காடுடை கடவுள்

    கொற்றவை காடுகிழான் தெய்வம், காடுடை கடவுள், ஆயிரை மலைக்கடவுள் என்று இலக்கியங்கள் அடையாளப்படுத்துகின்றன. வனதுர்கை என்றழைக்கிறார் நச்சினார்க்கினியர்.

                   கான்அமர் செல்வி அருளலின்     (அகம். 345)

என்று அகநானூறு கூறுகின்றது. கொற்றவை தெய்வம் வாழும் பருத்த அடிமரத்தைக் கொண்ட வேப்பமரத்தடியில் கவர்ந்து கொண்டு வந்த கொழுத்தப் பசுவினை வாளால் வெட்டிப் பலி கொடுத்து பசுவின் குருதியை மரத்தின் மேல் தெளித்துப் பலியிடுவர்.

         சங்கப் பண்பாட்டின் வழிபடு தெய்வமாக இருந்த கொற்றவை சிலப்பதிகாரக் காலத்தில் பெரும் வளர்ச்சியுடன் மாற்றப்பட்டாள். நற்றிணைக் காலத்தில் பெரிய அளவில் நாட்டார் தெய்வமாகப் பார்வதியின் அம்சமாக மாற்றப்பட்டாள். இந்த மாற்றம் வேகமாக நடந்திருக்கிறது. இவள் கொற்றவை என்ற தனிப்பெயரை விடுத்துப் பல்வேறு பெயர்களைப் பெற ஆரம்பித்தாள்.   (அ.கா.பெருமாள்-2011. 8)

       கொற்றவையிடத்துப் பேய்கள் நொடி சொல்லுதல் உண்டு என்பதை கலித்தொகைக் கூறுகின்றது. சான்று,

          பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு  (கலி. 89)

என்று கூறப்பட்டுள்ளது.

     மேலும் சங்க இலக்கியங்களில் அணங்கு என்று கூறப்படும் தெய்வமும் கொற்றவையின் செயல்பாடாகவே அமைகிறது. ‘அணங்குஎன்ற சொல் சங்க இலக்கியங்களில் தெய்வம், அழகு, நோய், பேய், துன்பம்,  அச்சம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. எனினும் தெய்வம் என்ற பொருளில் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

      அணங்கு என்பது தெய்வம் என்று பொதுவாக வழங்கப்படும். வருத்துதல் அல்லது துன்புறுத்துதல் என்ற பொருளிலும் பெருகி வருகிறது. தெய்வ மகளிர் தீண்டி வருத்தும் தெய்வம், முருகன், தேவி, பேய், மானிடப்பெண், அச்சம் என்ற பொருளில் அருகி வருகிறது. அணங்கென்பன பேயும், பூதமும், பாம்பும் ஈறாகிய பதினென்கண்ணும் நிரயபாலரும் பிறரும் காவற்பெண்டிர் முதலாயினருமாவர். அணங்கு என்பது ஊருணித்துறையில் உறைதல் என்பதாகும். தாக்கணங்கு என்பது தீண்டிவருத்தும் தெய்வம் என்பதாகும். நீராடும் துறையில் உறைதலும் அணங்காகும். (சங்க இலக்கிய தொன்மக் களஞ்சியம்.தொ.1.50)

         பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கே  (நற். 1550)

அணங்கு சொல் அடுக்கம் பொழியும்        (புறம். 151)

அணங்கு அறி கழங்கின் கோட்டம் சுட்டி    (நற். 47)

அணங்குடை ஆரிடை                 (கலி. 49)

       அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் (அகம். 22)

ஆடுகழை நரலும் அணங்குடை கவாஅன்    (அகம். 72)

அணங்குடைப் பனித்துறைத் தொண்டி      (ஐங்கு. 174)

என்னும் சங்கப்பாடல் அடிகளில் அணங்கு அச்சம் தரும் தெய்வம் என்பதைச் சுட்டுகின்றது. பழந்தமிழரீன் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம் கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண் தெய்வங்களில் கொற்றவை வழிபாடே மிக இன்றியமையாததாக இருந்துள்ளது.

       சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண் தெய்வங்கள், கன்னித்தெய்வங்கள், தாய்த்தெய்வங்கள்; என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே ஆகும். தாய்த்தெய்வத்தைத் தாயாகவும், கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங்காலத்திலிருந்துதே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா, எகிப்து, ஆசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரீகங்களில் காணப்படுகிறது. சங்கஇலக்கியங்களில் குறிப்பிடும் கடல்கெழு செல்வியும்இ கானமர் செல்வியும் தாய்த்தெய்வங்களே என்கிறார்;. பி.எல்.சாமி.(1975)

       இத்தெய்வங்கள் காட்டில் இருப்பவையாகவே கூறப்பட்டுள்ளன. கொற்றவை குறித்த நேரடிச் சான்றுகள் இல்லை. கொற்றவை வழிபாடு குறித்து சங்க இலக்கியங்களில் உரிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. கொற்றவை என்ற பெயருக்கு பெருங்காட்டுக் கொற்றி என்னும் அடையாளத்தை பரிபாடலும்இ கலித்தொகையும் தருகின்றன.

     கொற்றவை பற்றி சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை.  பெருங்காட்டுக்கொற்றிக்கப் பேய் நொடித்தாங்கு (கலி.89) எனவும், நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங்கொண்டு ஓர் பெண் (பரி-11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே கொற்றவை சிறுவன் (திரு.முருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. விறல் கெழு சூலி (குறுந்.218) எனவும், உருகெழு மரபின் அயிரை (பதிற்.79இ90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். அச்சம் தரத்தக்க இத்தெய்வம், வெற்றிக்குரியவள் என்பதும், அவள் முருகனது தாய் என்பதும், அவள் மலை காடு வாழ்தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவை தவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை   என்று சிலம்பு நா.செல்வராசு(2009:12) கூறுகின்றார்.

      தொல்காப்பியத்தில் திணைத் தலைமை தெய்வமாகக் கொற்றவையைக் குறிப்பிடவில்லை என்றாலும் தம் புறத்திணையியல் வெட்சித்திணையியல் வெட்சித்திணைப் பகுதியில் புறநடைத் துறையாகக் கொற்றவை நிலை என்ற துறையினைக் காணமுடிகின்றது.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே(தொல்.பொரு.புறத்:4)

  என்பதாகும்.

        திணைக்குடிகளின் கொற்றவை வழிபாட்டை நோக்குங்கால் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வெற்றிவெல் போர்க் கொற்றவையை எயினர்கள் வணங்கியுள்ளனர். இத்தெய்வம் பழையோள் என்று போற்றப்படக்கூடிய தொல்த்தாய் தெய்வமாகும். இத்தெய்வம் அணங்கு என்று அடையாளப்படுத்தப்படுகிறது.  சங்கப்பாடல்கள் கூறும் சூர், அணங்கு முதலிய வருத்தம் மற்றும் அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களுக்குரிய நம்பிக்கைகளே பின் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றுள்ளன. பழந்தமிழர் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலிய இயற்கை ஆற்றலால் அறியமுடிகிறது

        காடுகிழார், காடுகிழவோள், கானமர்ச்செல்வி எனப் பண்டைத் திணைக்குடிகளின் தாய்த்தெய்வத்தை அடையாளப்படுத்தினர். இனக்குழு மக்களின் வேட்டையில் வெற்றி தருபவளாக இத்தெய்வம் இருந்துள்ளதை அறியமுடிகிறது. இத்தெய்வமே பின் கொற்றவை என்னும் வடிவத்தைப் பெற்றுள்ளது. இனக்குழு மக்களின் வேட்டையில் வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாக இருந்துள்ளாள். காடுகிழார் உணவு சேகரிக்கும் காலத்தில் பயிர்தொழில் தெய்வமாகவும், வேட்டையாடும் காலத்தில் வெற்றியின் தெய்வமாகவும் இருந்த பின் இத்தெய்வமே குறிஞ்சி நிலத் தாய்த்தெய்வமாக விளங்கியுள்ளது.

            இத்தாய்த்தெய்வம் கொற்றவை என்றும் வளர்ச்சி அடைகிறது. முல்லை நிலத்தில் மேய்ச்சல் வாழ்க்கையும் வன்புலங்களில் பயிர்த்தொழிலும் தொடங்கின. மாடுகள் செல்வ வளமாகப் போற்றப்பட்டன. மாடுகளைக் கவர்ந்து முல்லை நிலத்தின் போரானது வெட்சிக்குப் புறனாகக் கொற்றவை நிலையை தொல்காப்பியம் கூறுவதால் இது முல்லை நிலமக்களின் தெய்வ வழிபாட்டுக் காலத்தின் நிலையாகும். முல்லைநிலமும் குறிஞ்சி நிலமும் தம்முள் திரிந்து பாலையாகிய நிலம் உருவானபோது அப்பாலை நிலத்தின் தெய்வமாக கொற்றவை நிலைப்பெற்றாள். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை என்பது தற்காலம் வரை தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. கொற்றவை தமிழகத்தின் பழம்பெரும் தாய்த்தெய்வம் என்பது பற்றி நா.வானமாமலை (1996.76) அவர்கள் கூறும்போது, காடுகிழாள் என்ற மறுபெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நிலமக்கள் வேட்டைத்தொழிலில் இருந்து புராதனப் பயிர்த்தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத்தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் காடுகிழாளும் தோன்றினாள் என்கிறார்.

               எனவே கொற்றவை தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடக்கமாகவும்,  அச்சம், துன்பம் தரக்கூடிய தெய்வமாகவும், வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவும் விளங்கியுள்ளாள். பண்டைத் திணைக்குடிகளின் அகப்புற வாழ்க்கையின் வழிபாட்டுத் தெய்வமாகவும் மிகத் தொன்மையானத் தெய்வமாகவும் கொற்றவை விளங்கியதை அறிய முடிகிறது.

வெறியாட்டு

              சங்க காலத்தில் வெறியாட்டு ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. ‘வேல் என்னும் ஆயுதத்தைக் கொண்டு ஆடுபவன் ‘வேலன்என்றழைக்கப்பட்டான். பண்டைத் திணைக்குடிகளின் ஆயுதங்களில் ‘வேல்ஆயுதம் இன்றியமையாததாக இருந்தது. வேலன் பற்றிய குறிப்புகள் வெறியாட்டு நிகழ்வின் மூலம் விளக்கப்படுகிறது. திணைக்குடிகளின் தெய்வவழிபாட்டில் முருகன் தனித்தன்மை பெற்றவனாக இருக்கிறான். முருகனல்லாத பிற திணைக்குடித் தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் தனித்துக் கூறப்படவில்லை. பண்டைக்காலத்தில் முருகனை வழிபட்டவர்கள் தம் வேண்டுதல்களை முன் வைத்து வழிபாடு செய்தனர். திணைக்குடிகள் மிகுதியாக காதல், குழந்தைப்பேறு ஆகியவற்றிற்காக முருகனை வழிபட்டனர். முருகன் இளமையான அழகுடையவன். சினம் மிகுதி உடையவன். போர்க்குணம் உடையவன் என்பதை இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது.

                  பண்டைத் தமிழ் மக்களின் வழிபாட்டுச் சடங்குகளில் முக்கியமானதும் சிறப்புக் கூறுகள் கொண்டதுமான வெறியாட்டு முருகனுக்கும் நிகழ்த்தப்பட்டது என்று சு.வித்யானந்தன் கூறுகின்றார்.(1985)  முருகனை வேலன் என்றும், அவன் காடுகளிலும், சோலைகளிலும், ஆற்றிடைக் குகையிலும், ஆறு, குளம் போன்றவற்றிலும் நாற்சந்தி மூலைகளிலும் முச்சந்திகளிலும் குடிகொண்டிருக்கிறான். வேலன் என்ற ஆண் மீதும் குறமகளான பெண்மீதும் ஏறி வருவது வெறியாட்டு. இவர்கள் மீது ஏறும் தெய்வம் அல்ல, இது காலங்காலமாய் நம்பப்பட்டு வந்த தெய்வம் என்று அ.கா.பெருமாள் கூறுகின்றார்.(2011. 6)

மறிக்குரல் அறுத்து தினைப் பிரப்பு இரீ,

செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்க

தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா

வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தீ

பேஉய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல்     (குறுந். 263)

தாய் முலை பெறா மறி கொலைப்படுத்தல்     (அகம். 292)

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்

கடவுள் ஆயினும் ஆக

மடவை மன்ற வாழிய முருகே            (நற். 34)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுந்து(திரு.முருக.218)

சில் பலி செய்து, பல் பிரப்பு இரீஇ     (திரு.முருக.234)

என்பன சான்றுகளாக அமைகின்றன. வெறியாட்டின் போது குரவைக்கூத்து ஆடுவதும் வழக்கமாகும். மேலும், தெய்வம் தோன்றுவதற்குக் கோணம் முதலியன வரைந்து அரிசி, நெல் முதலியன பரப்பும் வழக்கமும் பண்டைத்தமிழர்களிடம் இருந்தது. இப்பரப்பிய நெல்லின்கண் வேலனது உருவம் தெரிந்தது என்றும் கூறப்படுகிறது. தினை, அரிசி முதலியவற்றைப் பல பகுதிகளாகக் கூடையிலோ அல்லது முறத்திலோ பலியாக இட்டு வைத்தனர் என் வெறியாடலின் சிறப்பு கூறப்படுகிறது.

கட்டுவிச்சி 

     சங்க இலக்கியங்களில் வேலனாகிய ஆண் பூசாரியைப் போன்றே கட்டுவிச்சி என்னும் பெண் பூசாரியும் காணப்படுகிறாள். கட்டுவிச்சியைப் பெண் பூசாரி என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. கட்டுவிச்சி  கழங்கு, நெல் முதலியவற்றை முறத்தில் வைத்து எண்ணிப் பார்த்துக் குறி கூறுபவள். ஆகையால் இவள் ‘கட்டுவிச்சிஎன்றழைக்கப்படுகிறாள். இப்பெண் குறிஞ்சி நிலப்பெண் ஆவாள். இவள் கட்டுப்பார்த்துக் குறிசொல்லும் போது தான் வழிபடும் தெய்வங்களை அழைத்துப் பாடுவதால் ‘அகவன்மகள்என்றழைக்கப்படுகிறாள். இப்பெண் முதுமைப் பருவத்தை உடையவள். இவளது தலைமுடி வெண்மையாக நரைத்திருக்கும். சங்கு மணிகளால் ஆன மாலையிணை அணிந்திருப்பாள். கையில் சிறுகோல் வைத்திருப்பாள். தான் குறி சொல்வதற்கு முன் தன் கையில் இருக்கக்கூடிய கோலை ஆட்டி தெய்வத்தை வழிபடுவாள். தான் வழிபடும் தெய்வத்தை அழைத்தும் அத்தெய்வம் இருக்குமிடமாகிய மலையையும் பாடும் இயல்புடையவள். 

     மனிதன் தோன்றிய காலந்தொட்டு மனித மனத்தில் நம்பிக்கைகள் மிக ஆழமாக வேரூன்றிக் கூட்டு நனவிலியாக சமூகத்தை வழிநடத்தும் காரணியாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியம் கட்டியம் கூறுகிறது. நம்பிக்கைச் செயல்பாடுகளாக குறி சொல்லும் நடைமுறைகளாக விரிச்சி, கட்டு, கழங்கு, வெறியாட்டு, கன்னம் என்ற பெயர்களில் சமயம் சார்ந்த சடங்கு நிகழ்வுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளமையைச் சங்கப்பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.  (ஓ.முத்தையா.2011. 142;)

              சங்ககாலத்தில் முருகனான வேலன் காடுகளிலும் சோலைகளிலும் ஆற்றிடைக் குகைகளிலும், ஆறு, குளம் ஆகியவற்றிலும் நான்கு பக்கங்களிலுள்ள மூலைகளிலும் மூன்று சந்திகளிலும் இருப்பான். வேலன் என்ற ஆண் மீதும் குறமகளான கட்டுவிச்சி என்ற பெண் மீதும் ஏறும் தெய்வ நம்பிக்கைகள் காலங்காலமாக நம்பப்பட்டு வந்துள்ளன.  ‘நம்புஎன்ற சொல்லிற்கு விரும்பு விருப்பம் பற்று ஆசை நம்பிக்கைகொள் எதிர்பார் என்று அகராதியில் பொருள் கூறுகிறது. தொல்காப்பியத்தில் நம்பு என்ற சொல் விருப்பம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

         மனிதனால் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடியது நம்பிக்கையாகும். மனிதனின் மன உருவாக்கத்தில் நம்பிக்கைகள் தோன்றுகின்றன். மனித  சமூகத்தின்   நம்பிக்கை  சார்ந்த செயல்பாடுகளில் குறி சொல்லுதல்  குறி கேட்டல்,  குறி  அறிதல் போன்றவையும் அவை சார்ந்த செயல்பாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறி என்பதற்கு குறிப்பு, குறிப்பால், குறிப்பாய் உணர்த்துதல் என்றும்இ ‘எதிர்கால நிகழ்ச்சியை அல்லது காணாத பொருளின் இருப்பை ஓர் அடையாளத்தின்  அடிப்படையில் கூறும்  அறிவிப்பு  என்றும்  களம் அமைத்து தெய்வ அருள்  வரப்பெற்று ஆவேசமுற்று  உரையாடி, நாடி  வருவோருக்கு  நல்வாக்குச் சொல்லி நம்பிக்கை ஊட்டும் சடங்குச் செயல்பாடுஎன்றும் ‘மீவியல் சக்திகளின் துணையால் மக்களின் நோய்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லி எதிர்கால நிகழ்வுகளையும் குறிப்பாகச் சொல்லுதல்என்றும் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. மேற்கூற்றுகளின்  வழி ‘தெய்வ அருளால் சமூக தனிமனிதச் சிக்கல்களுக்கும் நோய்களுக்கும் எதிர்ப் பார்ப்புகளுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்வு சொல்லி, மனித வாழ்க்கையின் தொடர் செயல்பாடுகளுக்கும் உந்து சக்தியாக விளங்கும் சமூகச் சடங்குச் செயல்பாடே குறி சொல்லுதல்  என விளங்கிக்  கொள்ளலாம்.    (ஓ.முத்தையா.2011. 145)

            சங்ககாலம் முதலே குறி சொல்லுதலும், குறி கேட்டலும் மக்களிடையே பெரும்பான்மையாக் காணப்படுகிறது. தற்காலம் வரை இவ்வழக்கம் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. எனவே குறி சொல்லுதல் என்பது மரபு வழிபட்டதாக அமைகிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் பறவைகளைக் கண்டு குறி அறிந்தனர். இக்குறிப்பறிதலை பறவையைக் குறிக்கும் சொல்லாகிய ‘புள்என்னும் சொல்லால் குறித்தனர். பின் குறிகளை ‘நிமித்தம்என்ற பொதுப்பெயரால் வழங்கினர். குறி என்பதற்கு நிமித்தம் என்று அகராதி கூறுகின்றது. ‘நிமித்தம்என்பதற்கு சகுனம் என்று அகராதிப் பொருள் கூறப்படுகிறது.

மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்

நன்மை தீமை அச்சஞ்சார்தல் என்று

அன்னபிறவும் அவற்றொடு தொகை

முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி(தொல்.பொருள்.புறத்.36)என்றும்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்(தொல்.பொருள்.புறத்.47)

என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது.

            தொல்காப்பியம் குறிப்பிடும் மன்னு நிமித்தம், மொழிப்பொருள், தெய்வம் என்ற மூன்றும் முக்கியமானவை. மன்னு நிமித்தம் வழிவழி வந்த புள் நிமித்தம் ஆகும். மொழிப்பொருள், என்பது விரிச்சி என்னும் நற்சொல் தெய்வம் என்பது வேலன் கட்டு, கழங்கு, வெறியாட்டு என்னும் கடவுள் தன்மையுடையன என்று உரைக்கூறுவர் உரையாசிரியர்கள். சங்ககால மக்கள் நாள், புள், விலங்கு, மரம், நற்சொல் கட்டு, கழங்கு, வெறியாட்டு போன்றவற்றால் நிமித்தங்களைக் கணித்தனர். இவ்வகையான நிமித்தங்கள் அகப்புற வாழ்வியல் இரண்டிலும் காணப்பட்டன. புற வாழ்க்கையில் பெரும்பான்மையாக போர் நிமித்தம் பார்த்தல் பெரும் வழக்கமாக காணப்பட்டது. போருக்குச் செல்லும் மறவர்கள் உன்னமரத்தை நன்நிமித்தமாகக் கண்டுள்ளனர். இம்மரம் தளிர்த்து பசுமையாகச் செழித்திருந்தால் தொடுக்கும் போர் வெற்றியடையும் என்று நம்பினர்.

        அக இலக்கியங்களில் தலைவன்  தலைவியைப்  பிரியும் காலத்து நீண்ட நாட்கள் பிரிந்து வாழும் தலைவியின் பொருட்டு  நிமித்தங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. அவ்வாறு நிமித்தம் பார்க்கும்  வழக்கமாக  தலைவிக்கு குறமகள் குறி சொல்லல் நடைபெறும். தலைவிக்குக் குறி சொல்லும் குறப்பெண் கைக்குறி, மெய்க்குறி அறிகுறி ஆகிய முக்குறிகளையும் அறிந்து உரைக்கின்றாள்.

கூடலிழைத்தல்

               பண்டைத்திணைக்குடிகளின் நிமித்தம் பார்த்தலில் கூடலிழைத்தல் என்னும் வழக்கம் காணப்பட்டது. தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நிமித்தம் அறிய தரையில் சுழிக்கும் சுழிக்குறி கூடலிழைத்தல் என்பதாகும். இது கண்களை மூடிக்கொண்டு வட்டம் போட்டுப் பார்ப்பது. ஓர் இடத்தில் வட்டமிடத் தொடங்கி அது முடியும்போது போடத்தொடங்கிய இடத்தோடு பொருந்தியிருந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. சுவரிலும் மணலிலும் மகளிர் இதனைச் செய்து பார்ப்பதுண்டு என்பதற்குச் சான்றாக அகநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

மறுதல் உள்ளமொடு குறுக தோற்றிய

செய்குறி ஆழ்வைகறோ றெண்ணி

எழுதுசுவர் நனைந்த அழுதுவார் மழைக்கண் (அகம். 351)என்பது சான்றாகும்.

     குறி கூறுதலானது சொல்லும் முறையாலும் நம்பகத் தன்மையாலும் சமூக நடத்தைகளுக்கேற்பவும் பண்பாட்டுத் தாக்கத்திற்கேற்பவும் பல்வேறு வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறிய முடிகிறது. முத்துக்குறி பார்த்தல் என்பதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது. முத்துக்குறி பார்த்தல் என்பது சோழிகள் விழும் தன்மையின் அடிப்படையில் குறி சொல்வதாகும். குறி கூறுவோர் கையில் பன்னிரண்டு சோழிகளை வைத்து மூன்றுமுறை நன்றாகக் குலுக்கிப் போடுகின்றனர். இதில் ஒவ்வொருமுறையும் மேல்நோக்கி வரும் சோழிகளை மட்டும் பிரித்தெடுத்து எண்ணிக் கொள்கின்றனர். இவ்வாறு மூன்றுமுறை குலுக்கிப்போட்டு எண்ணியவற்றிலிருந்து பன்னிரண்டைக் கழித்து மீதமுள்ள எண்ணிற்குப் பலன் கூறுகின்றனர்.(ஓ.முத்தையா.2011. 147-148)

அகவன் மகள்

            அகவிப்பாடும் குரல்வளமும் குறிப்பறியும் திறனும் கொண்டு தொன்மைச் சமூகத்தின் உளவியல் மருத்துவராக இருந்துள்ளனர். அகவன் அகவிப்பாடும் ஆடவர் ஆண் என்றும் இசையோடு பாடும் பெண் அகவன் மகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சங்க காலத்தில் வேலன், அகவுநர், அகலவன், கட்டுவிச்சி அகவிக் கட்டுரைத்த அகவன் மகளிர், முதுவாய்ப்பாணன் ஆகியோர் ஊர்முது வேலனாக ஊர் முதுபெண்டிராக இருந்தும் நாடோடிகளாகத் திரிந்தும் கட்டு கழங்கு வெறியாட்டுச் சடங்குகளின் வழி குறிசொல்லியும் சடங்கியல் நிகழ்த்துனர்களாக இருந்து நற்சொல் கூறியும் வந்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

அகவன் மகளே அகவன் மகளே

பாடுக பாட்டே பாடுக பாட்டே அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே      (குறுந்.23)

             மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில் தலைவியானவள் தலைவன் பால் கொண்ட காதல் காரணமாக உடல்மாற்றம் ஏற்பட்டதால் கட்டுவிச்சியை அழைத்து குறிகேட்டல் செய்தியைக் கூறுகிறது. குறிகூறும் கட்டுவிச்சியை தோழி அகவன் மகளே என்று விளிப்பதை உணரமுடிகிறது. அகவன் மகள் அகவிப்பாடும் பண்பினையும் காணமுடிகிறது. அகவன் மகள் வெண்மையான நீண்ட கூந்தலினைக் கொண்டு நரைமுது பெண்டிராகக் கழுத்தில் முத்துமாலை அணிந்து கையில் சிறுகோலினை உடையவளாகக் காணப்படுகிறாள்.

அறுவை தோயும் ஒரு பெருங்குடுமிச்

சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவதறியும் முதுவாய் வேல            (அகம். 195)

என்று அகநானூறு கூறுகின்றது.

     தமிழ்ச் சமூகத்தின் அறுபடாத படிமலர்ச்சியை மிகவும் நுட்பமான நோக்கினால் பாணர் மரபின் முன் தொடர்ச்சியானது தொல்குடிகளிடம் செல்வாக்கு செலுத்திய மூதறிவாளனிடமிருந்தே தொடங்குவதை அறியலாம். அவர்களே முன் அறியும் திறன், தீர்க்கமாக உரைத்தல், தெய்வமேறி நிற்கும் தன்மை, மந்திர ஆற்றல், குறிசொல்லுதல்இ நிமித்தம் கணித்தல் சமூகத்தை வழிநடத்துதல் போன்ற பண்புகளைக் கொண்ட முதுவாய் மனிதர்கள் தொல்பழங்குடிப் பாணமரபின் தோற்றத்தைக் காட்டுபவர்கள் ஆவார்கள். முதுவாய்வேலன், முதுவாய்ப் பெண்டிர், முதுவாய்ப்பல்லி போன்ற சொல்லாட்சிகள் இதனை மெய்ப்பிக்கும் கருத்துக்களாகும். பாண்மரபினரை முதுவாய்ப்பாணன், முதுவாய் இரவல் என்றழைக்கும் வழக்குகள் புறநானூற்றில் பயின்று வருகின்றன .       (பக்தவத்சல பாரதி:2010. 509)

முடிவுரை

         எனவே நம்பிக்கைகள் பொருட்டு முதுமை மக்கள் தெளிந்த அறிவோடு வழிநடத்தி வந்த வாழ்வியல் நிலை இங்குக் கூறப்படுகிறது. இதற்கு சடங்குகள் கருவியாக அமைந்துள்ளன. சடங்கியல் நிகழ்வை நிகழ்த்தும் கட்டுவிச்சி வேலன் அகலவன் என்போர் சங்ககாலத்தில் சமூகத்திற்கு முக்கிய பங்கினை வகுத்துள்ளனர் என்பதை இவ்வாய்வின் வழி அறியலாகுகிறது.

பார்வை நூல்கள்

1. சாமிநாதையர். உ.வே. (உ.ஆ). 1955. குறுந்தொகை. சென்னை. திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்.

2. ...................1949. ஐங்குறுநூறு. சென்னை: திருநெல்வேலி,  தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்,

3. சுப்பிரமணியன்.ச.வே. 2010. சங்க இலக்கியம். (மூலமும்தெளிவுரையும்)  தொகுதி-2, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.     

4. செயபால். இரா. (உ.ஆ). 2004. அகநானூறு.  சென்னை: நீயு செஞ்சுரி

5. சோமசுந்தரனார். (உ.ஆ). 1965. கலித்தொகை. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்.

6. தட்ணாமூர்த்தி. அ. (உ.ஆ).2004.ஐங்குறுநூறு. சென்னை: நீயு செஞ்சுரி பதிப்பகம்.

7. துறைசாமிப் பிள்ளை. ஓளவை. (உ.ஆ). 2004. ஐங்குறுநூறு.(மூலமும் தெளிவுரையும்) சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய   சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்,

8. நச்சினார்க்கினியர். (உ.ஆ). 2007. கலித்தொகை. சென்னை. திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்.  

9. நாகராசன்.வி. (உ.ஆ). 2007. குறுந்தொகை. சென்னை: நீயு செஞ்சுரி பதிப்பகம்.

10. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.(உ.ஆ). 1952. நற்றிணை. சென்னை. திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்,

11.இராகவையங்கார். இர. 1983. குறுந்தொகை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

 12.இராமையா பிள்ளை. நா. 1999. நற்றிணை. சென்னை: வர்த்தமான்  பதிப்பகம்.

13.துரைசாமிப்பிள்ளை.ஒளவை. (மூலமும் உரையும்). 2004. ஐங்குறுநூறு. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்பு கழகம்,

 14.இளம்பூரனர். (உ.ஆ). 1974 தொல்காப்பியம். பொருளதிகாரம். சென்னை:    கழகவெளியீடு

 15.நச்சினார்க்கினியர்.(உ,ஆ)1983. தொல்காப்பியம் . பொருளதிகாரம். சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  லிமிடெட்.;

 16.............................(2005). தமிழ் மக்கள் வரலாறு. சென்னை:தமிழ்க் கூடம்.

 17.இராசமாணிக்கம். மா. 2013. தமிழர் திருமணத்தில் தாலி. சென்னை:  நாம் தமிழர் பதிப்பகம்,

18.இராமகிருஷ்ணன். ஆ. 1982. அகத்திணை மாந்தர். மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.

 19.கைலாசபதி.க. 1966. பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும். சென்னை:                                                                             பாரி நிலையம்.

 20.கோசம்பி.டி.டி. (மூ.ஆ). 1989. எஸ். ஆர். என்.சத்யா (மொ.ஆ), பண்டைய  இந்தியா அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு,        சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

 21.சண்முகம் பிள்ளை.மு. 1996. சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும்.  சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

 22 ............(1997). சங்கத் தமிழர் வாழ்வியல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி   நிறுவனம்.

 23.சாமி. பி.எல். 1975. தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு. சென்னை: நீயு செஞ்சுரி பதிப்பகம்.