4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 பிப்ரவரி, 2023

கண்ணாமூச்சிக் காலங்கள் - கவிஞர் மாலதி இராமலிங்கம்.

 

கண்ணாமூச்சிக் காலங்கள்

 

பள்ளிக்குச் சென்றிடும் பருவமதிலே ஆடிடுவோம்!

துள்ளி விளையாடும் பெதும்பைகள் கூடிடுவோம்!

கண்கள் பொத்தி கண்ணாமூச்சியாடித் தேடிடுவோம்!

எண்கள் சொல்லி ஒருவரை தேடுவோம் !

 

துளியூண்டு சந்தின்றித் துணியைக் கட்டுவோம்!

களிப்போடு மற்றவர்கள் மறைந்துக் கொள்வோம்!

எண்ணிக்கை முடிந்தவுடன் ஒருத்தி தேடுவாள்!

வெண்ணிலவு இல்லாத வானமாக அவளிருப்பாள்!

 

ஒளிந்துக் கொண்ட அனைவரும் பரபரப்பில்!

போளிக்குள் பூரணமாய் ஒவ்வொரு இடத்தில்!

கண்டுகொண்டு விடுவாளோ நெஞ்சம் திக்கிக்கென!

வண்டாகத் தேடுபவளிடம் மாட்டிக் கொள்வோமென!

 

மூச்சு விடுகின்ற ஓசையும் கேட்காது

பேச்சு சப்தமோ யாருக்கும் அறியாது

எல்லோரும் காத்திருந்து கவனித்து இருப்போம்!

வெல்லாதுப் போகுமோ என்று பதைப்போம்!

 

இடங்களைத் தேர்ந்தெடுப்பாள் யூகித்து அவளும்!

மடமடவென ஒவ்வொரு மறைவானப் பகுதியிலும்!

காட்டிக் கொடுத்தும் உதவிடுவார் அப்போது!

மாட்டி விடுவார்கள் யாரேனும் தப்பாது!

 

பற்றிக் கொண்டே கூப்பாடுடன் அனழத்திடுவாள்!

வெற்றி பெற்றேன் என்றவளும் உரைத்திடுவாள்!

சூழ்ந்துக் கொள்வோம் மறைவிலிருந்து வெளியேறி!

ஏழ்கடல் ஓசையோடு மகிழ்வோடு விளையாடி!

 

 

கவிஞர் மாலதி இராமலிங்கம்.