4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 பிப்ரவரி, 2023

சேயெனுள் சோதி யாகி செகத்தினை ஆளு வாயே! - -சுரேஜமீ (மஸ்கட்)

 

சேயெனுள் சோதி யாகி செகத்தினை ஆளு வாயே!

 

 

உன்னிடம் என்ன கேட்டேன் உன்னுள்ளே என்னைக் கேட்டேன்

என்னுள்ளே உன்னைக் கேட்டேன்! எதுவுமே நீயென் றாக!

என்னுள்ளம் ஓதும் நாமம் இறையுனைப் போற்ற நாளும்

நின்னுள்ளக் கருணை கேட்டேன் நினக்கது புரியா தேனோ?

 

தேனிலே சுவையா னானோ தென்றலாய்க் காற்றா னோனே

வானிலே விரிந்து கோளாய் வளர்கதிர் மதியா னோனே

ஊனிலே உயிரா  யாகி உலகிலே உருவா னோனே

ஏனெனைப் படைத்தா யோ நீ ? ஏற்றதைச் செய்வாய் தானே?

 

தானெனும் இருளும் நீக்கித் தரணியில் ஒளியைக் கூட்டி

ஞானமாம் வேத மூட்டி நாளுமென் சிந்தை காத்துத்

தானமும் தனமும் செல்வம் தவத்துடன் வேள்வி நாதம்

கானமும் போற்றி யென்றன் காலத்தைக் கடத்து நீயே!

 

நீயெனை விட்டால் ஐய நிலத்தினில் வேலை ஏது?

நாயினும் கீழோ னென்னை நல்லவரோடு ணைத்து

தாயெனப் பரிந்து நல்ல தந்தையு மானாய் அன்றோ

சேயெனுள் சோதி யாகி செகத்தினை ஆளு வாயே!

 

-சுரேஜமீ (மஸ்கட்)


Muscat