4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 மார்ச், 2023

பின் - நவீனத்துவம் அல்லது நவீனப் பின்னியம் (Post – modernism) ஒரு சமூக நோக்கு - சந்திரசேகரன் சசிதரன்

 

பின் - நவீனத்துவம் அல்லது நவீனப் பின்னியம் (Post – modernism) ஒரு சமூக நோக்கு

சந்திரசேகரன் சசிதரன்

சிரேஸ்ட வரிவுரையாளர்

சமுக விஞ்ஞானங்கள் துறை

கிழக்குப் பலகலைக் கழகம்

இலங்கை.

முன்னடைவு

பின் நவீனத்துவம் பற்றிய பார்வைகளும், பதிவுகளும் குவிந்து கிடக்கின்றன் குறிப்பாக சமூகவியல் தளத்தில் இக் கோட்பாடு பற்றிய பகுப்பாய்வுகளும் மதிப்பீடுகளும் முடிந்த பாடாகயில்லை எவ்வாறாயினும் பின் நவீனத்துவமானது எமக்கு தனித்துவமான விமர்சன பார்வையை வழங்கி இருக்கிறது என்பதனை மறுப்பதற்கு இல்லை. எனவே சமூக வரலாறு, கலை இலக்கியம், பாலுறவு, குடும்ப அமைப்பு, சமூக அதிகாரம், சமூக நிறுவனங்கள் இவற்றை மரபான கண்ணோட்டத்தில் இருந்து வித்தியாசமாக நோக்குவதற்கு பார்வைத்தளமாக பின்நவீனத்துவம் விளங்குகிறது. Post என்பதற்கு பிந்தியது , பின்னைய நிலை, ஒன்றை அடுத்து முன்வைக்கப்படுவது என்று பல அர்த்தப்பாடுகள் காணப்படுகின்றன. Post – modernism தமிழிலே பின் நவீனத்துவம் என்பதை விட “ நவீனப்பின்னியம்” அல்லது நவீனத்துவத்துக்கு பிந்திய வாதம் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமாக அமைவதோடு அர்த்தச் செறிவு குன்றாமலும் இருக்கும் என்று ஈழத்தின் நன்கு அறியப்பட்ட பெண்ணிய ஆய்வாளரான செல்வி.திருச்சந்திரன் கூறுவது இங்கு அவதானிக்கப்படுகிறது. இதன் பிரகாரம், பின் நவீனத்துவ கோட்பாடு, அதன் வரலாறு, அது முன்வைத்து பேசுகின்ற பிரதான வாதங்கள் மிகச்சுருக்கமாக பிரசீலிப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

அறிமுகம்

கடந்த பல தசாப்தங்களாக கோட்பாடு, கலைகள், விஞ்ஞானங்கள் என்பவற்றை ஆட்சிப்படுத்தி, சமூகவியல் தழுவிய சிந்தனைகள் “உலுக்கி எடுக்கும்” ஒரு கட்டளைப் படிம மாற்றீடாக (Paradigm Shift)  பின் - நவீனத்துவம் கருத்துரைக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டின் எண்பதுகளின் மத்தியிலிருந்து கல்வியல் சார் ஆய்வுத்துறையின் ஒரு புலப்பார்வைக்கான சாளரமாகச் செல்வாக்கு பெற்ற இப் பின் நவீனத்துவக் கோட்பாடு, அடிப்படையில் சிக்கல் தன்மை வாய்ந்த சிந்தனைப் போக்காகும். அது பிரத்தியேகமான நீண்ட, பல்படித்தன விவாதங்களுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு வகையான கருத்துக்களின் கூட்டாகவும் உள்ளது. கலை , கட்டடக்கலை , இசை , திரைப்படத்துறை , சமூகவியல் , இலக்கியம் , தொடர்பாடற்துறை , நாகரிகப் போக்குகள் , செல்நெறிகள் , அதனோடு இணைந்த கருத்தியல் தாக்கங்களையும் இதனோடு இணைந்துள்ளமையை அவதானிக்கலாம். பின்-நவீனத்துவம் என்பது, (Post – Modernism) வரலாற்றின் எந்தக் கட்டத்தில், எத்தகைய சமூகப் பின்புலங்களின் நிலைகளின் கீழ் ஒரு கோட்பாட்டியற் சிந்தனையாக கருக்கொள்ள ஆரம்பித்தது என்பதைத் தெளிவுபடப் பகுத்து, ஆய்வு செய்து, தெரிவிக்க இயலாத காரணத்தால், அதனை சமூக வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் இருத்துவதும், வகை குறிப்பதும் சிரமசாத்தியமாக இருக்கிறது. எவ்வாறாயினும் நவீனத்துவம் (Modernism) என்கிற சிந்தனை முறையினை / இயக்கத்தினை ஒரு “சரளமாகக்” கொண்டு பின் நவீனத்துவம் பற்றிச் சிந்திப்பது எளிதான முறையாக அமையலாம்.

நவீனத்துவம் அதன் சமூகப் பின்புலமும்

                இருபதாம் நூற்றாண்டின் முற்கூறுகள், கைத்தொழில் மயப்புரட்சியின் சமூக, பொருளாதார, பண்பாட்டு விளைவுகளின் துலாம்பரமான காலகட்டமாக அமைந்திருந்தது. தொழிற்சாலை (Factory System) முறைமையையும், நகரமயமாக்கலும் (Urbanization),  பாரம்பரிய தொடர்பாடல் முறையின் இடத்தை வெகுசனத் தொடர்பாடல் ஊடகங்கள் பிடித்துக் கொண்டமையாலும் சமூக அசைவியத்தினாலும் (Social Mobility)  கலை, இல்கிய வடிவங்களிலும் கணிசமான மாற்றங்கள் ஏற்படலாயின. எனவே, அவற்றை விமர்சிக்கும் பார்வையிலும், பாங்கிலும் மாற்றம் கொள்ள வேண்டிய இந்தப் பின்புலத்தில், மேலைத்தேய கலைகள் பற்றிய, அழகியல் தளத்தின்றே “நவீனத்துவத்தின்” வெளிப்பாடும், கருத்தியல் உருவாக்கமும் கருக்கொள்வதனை அவதானிக்கலாம்.

பார்வைப் புலக்கலைகள் (Visual Arts) இசை, இலக்கியம், நாடகம் என்பவற்றுடன் தொடர்புற்றதனால், “ நவீனத்துவம்” பரந்தளவில் ஒழுக்கம், சீர்மை என்பவற்றினை கலை வடிவங்களில் தேடிய ஓர் அழகியல் வாதம் தழுவிய சிந்தனை முறைமையாகவே முத்திரையிடப்பட்டது. அது கலைகள் பற்றின ஆதி விக்டோறியா காலத்துத் தராதரங்களை நிராகரித்தது. கலைகளின் உருவாக்கம், அவற்றின் அளிக்கை முறை, அவற்றை நுகரும் தன்மை, கருத்துக்கள் என்பவற்றையும் நவீனத்துவவாதம் விமர்சித்தவாறு, புதிய சிந்தனைகளை முன்வைக்கத் தொடங்கியது.இத்தகைய கலை/அழகியல்தளம் சார்ந்து ஒரு புதிய அலை எழுந்த காலகட்டமாக கி.பி. 1910-1930 வரையிலுமான ஆண்டுகள் குறிக்கப்படுகின்றன. இக்காலப் பரப்பினை "அதி உயர் நவீனத்துவ காலகட்டமாக" (Period of High Modernism) பின் வந்த ஆய்வறிவாளர் குறிப்பிடுவர். இக்காலகட்டத்தில் நவீனத்துவ இலக்கியத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கவிதை, புனைகதை என்பன எவ்வாறு இருக்க வேண்டும். எவற்றை, எந்தப் பாங்கில் சொல்ல வேண்டும் என்பன பற்றி மீள்வரையறை செய்தனர். அவர்களுள் Woolf, Joyee, Eliot, Stevens, Kafka, Proust முதலானோர் குறிப்பிடத்தக்கோர். இவர்களே இருபதாம் நூற்றாண்டு நவீனத்துவவாதத்தின் பிதாமகர்களாகக் கருதப்படுகின்றனர்.

இலக்கிய நோக்கில் நவீனத்துவத்தின் குணாம்சங்கள்

எனவே நாம் தெரிவித்தவாறு, நவீனத்துவத்தின் ஆரம்பகாலக் கோட்பாட்டுச் சட்டகமும் (Framework of theory), அதன் கருத்தியற் சாரமும் கலை, இலக்கியத் தளத்தையே அடி நிலையாகக் கொண்டுள்ளன. அதன் வழி, நவீனத்துவம் உட்கொண்டிருந்த குணாம்சங்களாகப் பின்வருவன அமையும்.

1.             குறித்ததோர் எழுத்தாக்கமானது, அதனை வாசிப்போர் மனதில் கருத்தூன்றியதாய் அமைதல் வேண்டும். / உணர்வுத் தாக்கம் ஏற்படுத்தவும் வேண்டும். இப்பண்பு காட்சி வழிப்பட்ட கலைகள் சார்ந்தும் வலியுறுத்தப்பட்டது.

2.             கதை சொல்பவர் / படைப்பாளியின் பார்வைக் கோணத்தினின்றும் புறவயமாக விலகிச் சென்று, திட்பமான அபிப்பிராயங்களையும், தெளிவான ஆசார நிலைகளையும் அழுத்தமான முறையில் கவனித்தல். எடுத்துக்காட்டு Faulkner இன் பல்படித்தான எடுத்துரைப்புக் கதைகள் (Mulitiply - Narrated Stories)

3.             இனங்காண முடியாத, வேறுபடுத்தி அறிய முடியாத வடிவப்பண்பு, புனைகதை ஆவணம் போலவும், கவிதை, உரைநடை போலவும் தோற்றுதலைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டு : T.S.எலியட்டின் (T.S.Eliot) கவிதைகைள் "ஆவணத்தன்மை" பெற்றுக் காணப்படல்.

4.             துண்டாடப்பட்ட எழுத்து வடிவங்களிலும் (Fragmented forms)  தொடர்ச்சித் தன்மையற்ற எடுத்துரைப்பு வடிவங்களிலும் (Discontinuous Narratives) அவ்வாறே எழுந்தமாறான / வெவ்வேறு விடயங்களை மையப்படுத்திய எழுத்துப் போக்குகளை அழுத்தம் செய்தல்.

5.             பிரதிபலிப்பு சார்ந்த, நாட்டம் மிக்க தன்மை / கலையுற்பத்திப் பணி தொடர்பான பிரதிபலிப்பு ரீதியான சுயபிரக்ஞை மிகுந்த நாட்டம். இங்கு, ஒரு கலைப்படைப்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது/நுகரப்படுகின்றது என்பது பற்றி படைப்பாளியிடத்திலும் தன்னுணர்வு காணப்படும்.

6.             விரிவானதும், எடுப்பானதுமான முறைசார் அழகியல் (Elaborate formal Aestheties) நிராகரிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆகக்குறைந்தளவிலான வடிவங்களும், மிகையான அழகியல் கோட்பாடுகளும் நிராகரிக்கப்படுகின்றன.

7.             “உயர்வு”,“தாழ்வு” என்பன போன்ற தராதர வேறுபாடுகளும் மறுக்கப்படுகின்றன. இத்துடன் சனரஞ்சகப் பண்பாட்டம்சங்களும், அவை தொடர்பான விநியோகிப்பு (Supply), நுகர்வு (Consumption) என்பனவும் நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு கலை, இலக்கியத்தளம் சார்ந்த, நவீனத்துவத்தின் குணாம்சங்கள் அல்லது கலை பற்றிய அதன் சித்தாந்த முன்வைப்புக்கள், பின்வந்த காலப் பகுதியில் பின்-நவீனத்துவச் சிந்தனைகளுக்கு ஒரு நுழைவாயிலைத் திறந்துவிட்டன.

நவீனத்துவமும், பின் நவீனத்துவமும் - கருத்தியல் வேறுபாடுகள்

நவீனத்துவம் போலவே, பின்-நவீனத்துவமும் முன் சொன்ன குணாம்ச வலியுறுத்தல்களை இன்னும் இறுக்கமான வகையில் பின்பற்ற முற்படுகின்றது. கலைகள் என்பவற்றுக்கும் அப்பால், சமூக தோற்றப்பாட்டியல் விடயங்களிலும், இனத்துவம் முதலான மனித குலப்பிரிவினைகள் சார்ந்தும் பேதங்கள் கற்பிக்கப்படுவதனை பின் நவீனத்துவம் நிராகரிக்கிறது. நவீன கலையும், அதன் வழியான சிந்தனையும் மனிதர் மத்தியில் சுய விழிப்புணர்வுக்குச் சார்பாகவே பின்-நவீனத்துவமும் இயங்கியுள்ளது. எனினும் கட்டவிழ்ப்புச் செய்தல் (Deconstruction) துண்டாடலும், தொடர்ச்சி அற்றதன்மை (விசேடமாக எடுத்துரைப்பு வடிவங்களில்), கட்டமைப்பு மீறல், மையப்பகுதி நீக்கம் முதலான விடயங்கள் சார்ந்த பின்-தவீனத்துவமானது, நவீனத்துவ சிந்தனைகளினின்றும் வேறுபட்டே காணப்படுகின்றது. நவீனத்துவமானது வரலாறு மனிதரின் அகவயத்தன்மை பற்றிய துண்டாடப்பட்ட ஓர் அபிப்பிராயத்தை முன் வைக்கவே முற்படுகின்றது. (எடுத்துக்காட்டு : Woolf இன்  “To the Lighthouse"  ஆனால் மறுபுறம் துண்டாடல் பற்றிய அபிப்பிராயத்தை துன்பியல் தன்மையுடனேயே அது நோக்குகிறது. நவீன வாதிகள் (Modernist) நவீன வாழ்க்கையில் இழக்கப்பட்ட ஐக்கியம், ஒருங்கிசைவு, அர்த்தப்பாடு என்பவற்றை நவீன கலைப் பணிகளோடு மீன எய்திக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். ஏனைய மானுட நிறுவனங்கள் செய்ய முடியாத ஒன்றை கலைகள் செய்கின்றன என்ற ரீதியில் அவர்கள் கலை சார்ந்த விடயங்களுக்கு ஒரு முதன்மையை வழங்குகின்றனர்.

கலை பற்றிய பின்-நவீனத்துவப் பார்வை

நவீனத்துவச் சிந்தனை போலன்றி, பின்-நவீனத்துவமானது துண்டாடலின் தன்மைகள் குறித்து வருத்தம் கொள்வதற்குப் பதிலாக மகிழ்ச்சி கொள்கின்றது. அதனுடைய கருத்துக்கள் சமூக தோற்றப்பாடுகளின் மீதான எதிர்மறை உணர்வைப் பிரதிபலிக்கின்றன. "உலகம் என்பது அர்த்தமற்றது. எனவே கலையானது உலகுக்கு ஓர் அர்த்தப் பாட்டினை வழங்கும் என்று எதிர்பார்த்து, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்" என்பதான நவீனத்துவத்தின் குரலாக உள்ளது.

பிரெடெரிக் ஜேம்சனின் (Freedric Jameson) கருத்துப்படி, இவ்விரு சிந்தனைப் புலங்களுமே முதலாளித்துவ படிநிலைகளைத் தொடர்ந்து மகிழ்த்து வளர்ந்த பண்பாட்டு அமைப்பாக்கங்களாக உள்ளன. இந்த இடத்தில் ஜேம்சன் குறிப்பிடும் முதலாளித்துவப் படிநிலைகள் மூன்று வகையான காலகட்டங்களாகப் பகுத்து நோக்கப்படலாம்.

1.     பதினெட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பா உட்பட சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் செல்வாக்கு நிலவியது. இம் முதலாங்கட்ட காலம் பிரத்தியேகமான தொழில்நுட்ப அபிவிருத்தியுடன் தொடர்புபட்டது. நீராவி இயந்திரக் கண்டறிகையும் (Time - Space), காலம் வெளி சார்ந்து ஏற்பட்ட விரைந்த தொழில் நுட்பமயமாக்கமும், யதார்த்தவாத அழகியலும் (Realism)என்றவாறு இதற்கு நாம் எடுத்துக்காட்டுகளை முன்வைக்கலாம்.

2.     இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பாக இரண்டாவது உலகப் பெரும் போர்க்காலம் வரையிலும் நவீனத்துவமானது, தனியுரிமை முதலாளித்துவத்தினால் தனது குணாம்சங்களைப் பெற்றுக் கொண்டது. இதனோடு மின்னியல் மற்றும் உள்ளக இயந்திர நுட்பங்களின் வளர்ச்சியையும் இணைத்துக் கொள்ளலாம்.

3.     தற்போது நாம் இருக்கும் காலகட்டம் பல்தேசிய நுகர்வுவாத முதலாளித்துவத்தின் செல்வாக்கால் குழப்பட்ட நிலைமை (பண்ட உற்பத்திக்குப் பதிலாக பண்டங்களின் சந்தைப்படுத்தல் / விற்பனை / நுகர்வு என்பனவே அழுத்தம் செய்யப்படுகின்றன.) பின் நவீனத்துவம் இக்கட்டத்தில் அணுவியல், இலத்திரனியல் தொழில்நுட்பங்களோடும் இடைத்தொடர்பு கொண்டமைகின்றது.

நவீனம் எனப்படுகின்ற பிரக்ஞைபூர்வமான காலப்பகுதி எப்போது ஆரம்பமானது 'நவீனத்தன்மை’ (Modernity), 'நவீனத்தன்மை அல்லாதது' (Non -Modernity)என்பனவற்றை எவ்வாறு பிரிப்புச் செய்வது என்பன தொடர்பில் ஆய்வறிவாளர்களின் விவாதம் நிகழ்ந்தபடி உள்ளது. வரலாற்றாசிரியர்களின் நோக்கில், நவீனத்தன்மை மிக்க காலகட்டம், அறிவொளிக் கால யுகத்திலேயே ஆரம்பித்துவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. அறிவொளி யுகத்தின் சிந்தனைகள் எவ்விதமான நவீனத்துவக் கருத்தியலுக்கு வழிகோலின என்பது பற்றி ஒரு சுருக்கமான பகுப்பாய்வினை மேற்கொண்ட JanPlax பின்வரும் கருத்துக்களை எடுத்து விளக்கியுள்ளார்.

1.     ஒரு ஸ்திரமான, ஒருங்கிசைவான, புரிந்துகொள்ளத்தக்க “சுயம்” (Self) ஒன்று உள்ளது. அது விழிப்புணர்வு மிக்கது பகுத்தறிவானது: சுயாதீனமானது; சர்வவியாபகமானது. அதனில் பௌதீக நிலைமைகளோ, வேறுபாடுகளோ குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தாது.

2.     அச் 'சுயம்’ தன்னையே அறிந்துகொண்டது. அவ்வாறே தர்க்கம், பகுத்தறிவு என்பவற்றுக்கு சூழவுள்ள உலகினையும் புரிந்து கொள்கிறது.

3.     புறவயம் சார்ந்த தர்க்கவியலின் ஊடாக, உற்பத்தி ஆக்கப்பட்ட அறிவு முறையானது. விஞ்ஞானத்தால் ஏற்பட்டது. ஏனெனில் உலகப் பொதுமையான உண்மைகளை விஞ்ஞானம் மட்டுமே எடுத்துரைக்க முடியும். (விஞ்ஞானம், தனிநபர் அந்தஸ்தையோ / புரிந்து கொள்பவர் அந்தஸ்தையோ கருத்தில் கொள்வதில்லை)

4.     விஞ்ஞானத்தினால் உற்பத்தி ஆக்கப்படும் அறிவு "உண்மையானது"; நிலைபேறானது.

5.     விஞ்ஞானத்தினால் உற்பத்தி ஆக்கப்பட்ட அறிவும், உண்மையும் எப்போதும் முன்னேற்றத்துக்கும், பூரணத்திற்கும் வழிகோலும். (விஞ்ஞான அறிவை மனிதகுல அழிவிற்குப் பிரயோகிப்பதில் விஞ்ஞானம் பொறுப்பாக மாட்டாது) எல்லா மானுட நிறுவனங்களையும், நடைமுறைகளையும் விஞ்ஞானத்தினால் பகுப்பாய்வு செய்ய முடியும்.

6.     எது உண்மை என்பதற்குத் தர்க்கவியலே ,றுதித் தீர்ப்பாளன். எனவே, எது சரியானது, எது நல்லது, எது சட்டபூர்வமானது, அறநெறியானது என்பதற்கும் அதுவே உரைகல், தர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுக்கு அமைவான கீழ்ப்படிவினைக் கொண்டுள்ளதே சுதந்திரமாகும்.

7.     தர்க்கத்தால் ஆட்சிப்படுத்தப்படும் உலகில் “உண்மை” எப்போதும் ஒரே வகையானதாகவே இருக்கும். அவ்வாறே "நல்லது", "சரியானது", "அழகு" என்பனவும் ஒரே தன்மையானதாக இருக்கும். எனவே எது “உண்மை" எது "சரி" என்பதற்கிடையில் முரண்பாடு இருக்க முடியாது. அதன்வழி, சமூகரீதியில், எல்லா வகையிலும் பயனுள்ள அறிவுக்கு விஞ்ஞானமே 'கட்டளைக்கல்லாக' (Pardigm) உள்ளது. நடுநிலையானதும், புறவயமானதுமான விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகள் ஏனைய விடய ஆர்வங்களால் உந்தப்படக் கூடாது. (பணம், வலு போன்றவை)

8.     மொழி அல்லது கருத்து வெளிப்பாட்டு முறைமை, அறிவை உற்பத்தி செய்து பரப்பும் மொழிவடிவம் என்பன தர்க்க ரீதியானதாக இருக்க வேண்டும். மொழியின் தர்க்கபூர்வத் தன்மைக்கு அது திறந்த தன்மையைக் கொண்டிருத்தல் அவசியம்.

காணப்படும் பொருள்களுக்கும், அவற்றை விபரிக்கும் வார்த்தைக்கும் இடையில் புறவயமான தொடர்பிருக்க வேண்டும். மேலே விபரித்த கருத்துக்களே மனிதநேய அடிப்படைச் சிந்தனைகளாக உள்ளன. இன்னொரு மட்டத்திலான பார்வையில் அவற்றைப் பரிசீலிக்கும் போது, நவீனத்துவவாதத்தின் அடிப்படைகளாகவும் இவை உள்ளன. 'நவீனம்' என்பது அடிப்படையில் 'ஒழுங்கு' (Order) பற்றியது. பகுத்தறிவு (Rationality), பகுத்தறிவுமயவாக்கம் (Rationolializatin) என்பவற்றிலும் அது சிரத்தை கொண்டது. இத்தகைய ஒருங்கிசைவான அறிவு விசாரணையினின்றும் அது ஒரு தெளிந்த அறிவைக் கொண்டு வருகிறது. எத்துணை அளவு பகுத்தறிவை உபயோகிக்க முடிகிறதோ, அத்துணை அளவு சமூக ஒழுங்கைப் பேண முடியும் என்பதாக நவீனத்துவம் உத்தேசிக்கிறது. இதனூடாக ஒழுங்கு, ஒழுங்கின்மை தொடர்பாக கரிசனையும், அவற்றை மையப்படுத்திய சொல்லாடல்களும் (Discourse) நவீன சமூகத்தில் முதன்மை பெறுகின்றன.

லியோடார்ட் (Francois Lyotard)என்னும் பின்-நவீனத்துவவாத ஆய்வறிவாளர் சமூகங்களின் ஸ்திரப்பாட்டினை நிலை நிறுத்தும் முயற்சியை 'முழுமைத்துவம்' (Totality), முழுமையாக்கும் முயற்சி (Totalize System) என்பவற்றுக்கு சமப்படுத்தி நோக்கியுள்ளார். இதே எண்ணக்கருவை, டெரிடாவும் (Derrida)  ஒழுங்குப்பாட்டின் பூரணத்துவம் என்ற கருத்தில் பயன்படுத்தியுள்ளார். முழுமைத்தன்மை, ஸ்திரத்தன்மை, ஒழுங்கு என்பன நவீன சமூகத்தின் பெருங்கதையாடலாக (Mass Narrative) பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒரு கலாசாரமானது, தன்னைப் பற்றியும், தனது நடைமுறைகள், நம்பிக்கைகள் பற்றியும் சொல்லுகின்ற கதையாடல்களாகக் கருதப்படுகின்றன.

அறிவொளிக்கால யுகத்தின் சிந்தனை போல் அல்லாமல், பின்-நவீனத்துவம் மொழிக் கட்டமைப்பை வித்தியாசமாகப் பார்க்கிறது. அதனது கருத்தில் சுட்டிக் காட்டப்படுவோர் (Signifiers) மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகின்றனர். எனவே ஸ்திரமான, நிலைபேறான யதார்த்தம் அங்கு காணப்படுகிறது. இதன்படி பின் நவீனத்துவ சமூகங்களில் ஆழ்நிலை உள்பொருளின்றி, வெறும் மேற்பரப்பு (Surface) மட்டுமே காணப்படும். வேறு வகையிற் கூறின், பின்-நவீனத்துவ சமூகங்களில் ‘மூலங்கள்’ (Originals) என்று எதுவும் இல்லை. பிரதிகள் / நகல்கள் (Copies) மட்டுமே காணப்படும். எடுத்துக்காட்டாக, ஓர் ஓவியம், சிற்பம் என்பதற்கு ஆயிரக்கணக்கான பிரதிகள் காணப்படினும், அவற்றின் மூலங்களுக்குத்தான் பெறுமதி இருக்கலாம்.

பின் நவீனத்துவம் பேசும் அறிவு

கவனக்குவிப்பு என்ற வகையில் பின்-நவீனத்துவத்தின் பார்வை அறிவு, சமூக ஒழுங்கமைப்பு என்பன மீதும் படிந்துள்ளது. நவீன சமூகங்களில் 'அறிவு' எனப்படுவது 'விஞ்ஞானத்திற்கு' சமமாக்கப்பட்டுள்ளது. அது, கதையாடலினின்றும் பிரிப்புச் செய்யப்படுகின்றது. விஞ்ஞானம் நல்லது, தர்க்கமானது, ஏற்புடையது எனவும், கதையாடல் தீயது, தர்க்கமற்றது எனவும் பிரித்துப் பார்க்கிறது. பின்-நவீனத்துவ சமூகங்களில், அறிவானது செயற்பாட்டியல் சார்ந்தது. இங்கு அறிவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலன்றி, அதனை பயன்பாட்டு நோக்கிலேயே பெற்றுக் கொள்கின்றனர். சரூப் (Sarup) என்பார் சுட்டுவது போல, இன்றைய கல்விக் கொள்கையானது. பயிற்சி, செயற்திறன் என்பனவற்றிலேயே கவனம் கொள்கின்றது. மாறாக, கல்வியில் பொதுநிலைப்பட்ட பரந்த, மானுட இலட்சியங்கள் புறந்தள்ளப்படுகின்றன

இன்றைய பின்-நவீனத்துவ சமூகங்களில் அறிவு ஆனது பகிரப்படும் ஒன்றாகக் காணப்படுகிறது. அத்துடன் சேமிக்கப்படுவதாயும், வெவ்வேறு வழிமுறைளில் ஒழுங்கமைக்கப்படுவதாயும் உள்ளது. அறிவின் உற்பத்தியிலும் நுகர்விலும் இலத்திரனியல், கணனித் தொழில்நுட்பம் ஆட்சிப்படுத்துகின்றமையை அவதானிக்கின்றோம். கணனியில் சேமிக்க முடியாத / மீள ஒழுங்குபடுத்த இயலாத எதுவும் அறிவன்று” எனும் நிலைமை உருவாகியுள்ளது. இத்தகைய படிமமாற்றீட்டின்படி 'அறிவு' (Knowledge) என்பதற்கு எதிர்ப்பதம் அறிவின்மை  (Ignorance)  என்பதன்று. பதிலாக வெறும் சந்தடி (Noice) என்பதாகக் கூறப்படுகிறது.

லியாடார்டின் கருத்தில், பின் நவீனத்துவ சமூகத்துக்குள்ள முக்கியபிரச்சினையாக அமைவது எது அறிவென்று எவர் தீர்மானிப்பது, அறிவையும், சந்தடியையும் எவ்வகையில் பிரித்தறிவது என்பது பற்றிய பிரச்சினையே. அறிவு எனப்படுவது ஒரு வகையான மொழி விளையாட்டினை (Language Game)முன்வைப்பதாக லியோடார்ட் கருதுகிறார். இதுபற்றி மிகச் சிறந்த எண்ணக்கரு விளக்கம் சார் கட்டுரையினை சருப்பும் (Sarup) வரைந்திருக்கிறார்.

பின்-நவீனத்துவம் பற்றிய கருத்து நிலைகளும், விமர்சிப்பும்

இதுவரையிலும் நவீனத்துவவாதத்தை ஒரு சாளரமாய்க் கொண்டு, பின்- நவீனத்துவத்தின் கோட்பாடு அடிப்படைகளைப் புரிதலுக்குட்படுத்தும் எமது முயற்சியில் அது பற்றி எழுந்திருக்கும் கேள்விகள், விமர்சனங்களை அறிய முற்படுவது, அதனை மேலும் ஆழமான புரிதலுக்கு எடுத்துச் செல்லும். பின்-நவீனத்துவத்தின் அரசியற் சார்பு பற்றியும் அநேக கேள்விகள் உள்ளன. பிரதானமாக இக் கோட்பாட்டியக்கம் சமூக நிறுவனங்கள் / நியமங்கள் மீதான துண்டாடலை நோக்கியதா, அதற்கான உள்ளார்ந்த ஏற்பாட்டு ரீதியானதா, சமூகக் கட்டொருமைப்பாட்டைக் குலைத்து ஸ்திரமின்மையினை வியாபகப்படுத்தும் நோக்கிலானதா.... அல்லது 'கொஞ்சம் நன்மை', 'கொஞ்சம் தீமை' கலந்தது என்பதா... என்பன போன்ற கேள்விகளை இங்கு சுட்டலாம்.

இக்கேள்விகளை முன்வைத்து, பின்-நவீனத்துவம் பற்றிய விமர்சனங்களும் பரவலாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சிலர் நவீனத்துவத்திற்கு முந்திய யுகத்திற்கு (Pre-Modern Era)  மீளவும் திரும்ப வேண்டும் என்கின்றனர். இவர்களின் சிந்தனை பழமைவாய்ந்த அரசியல், சமய, தத்துவக் குழுக்களுடன் தொடர்புபட்டதாகும். இந்த இடத்தில், சமய அடிப்படைவாதம் (Religious Funda Mentalism) என்பதை. பின்-நவீனத்துவத்தின் பக்க விளைவாகக் கருதும் ஒரு விமர்சனப் பார்வை பற்றியும் குறிப்பிடலாம். (எடுத்துக்காட்டாக சல்மான் ரு~;டியின் நூல், குறிப்பிட்ட சமயச் சார்பான பெருங்கதையாடலை, மீள்கட்டவிழ்ப்புச் செய்ய முற்பட்டதனால் அது பெருஞ் சர்ச்சைக்கு உள்ளானமை.)

பின்-நவீனத்துவம் துண்டாடலையும், பல்வகைப்பாடுகளையும் அழுத்தம் செய்வதானது, தாராளவாத, தீவிர சிந்தனைப் போக்காளருக்கு ஒரு கவர்ச்சியை வழங்குகிறது. பெண்நிலைவாதக் கோட்பாடுகளும் இத்தகைய கவர்ச்சி நிலையைப் பெற்று, இன்னுமொரு மட்டத்துக்கு வரலாற்றையும், சமூக நிறுவன இயங்கியலையும் மீள் கட்டவிழ்ப்பு நிலைமைக்கு உட்படுத்தி வருகின்றன.

                வேறொரு மட்டத்தில் நோக்கின், பின் - நவீனத்துவம் ஆனது, உலகளாவிய நுகர்வுக் கலாசாரத்துக்கு சில மாற்றீடுகளை முன்வைப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இன்று தனிநபர் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில், 'அறிவு' ஆட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் பண்டங்கள் போலவே அறிவையும் சமத்துவ நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. 'மாற்றீடு' என்கிற சிந்தனை எந்த வகையான நடவடிக்கை அல்லது சமூக முரண்பாடு சார்ந்ததாக உள்ளது. அவசியமான வகையில் உள்ளூர்மயமானது, பகுதியளவானது, மட்டுப்படுத்தப்பட்டது என்பவற்றில் அச்சிந்தனைகள் கவனஞ் செலுத்த வேண்டும்" என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ,தன்வழி, அரசியல், உள்ளூர் நிலைமைகளை நெகிழ்ச்சித் தன்மையுடனும், எதிர்வுகூற முடியாத நிலை நின்றும் கோட்பாட்டாக்கம் செய்வதற்கான வழிமுறையினைப் பின்-நவீனத்துவம் முன் வைக்கிறது எனலாம். எனவே, அதனது சுலோகம் “உலகலாவிய சிந்தனை, உள்ளூர்மய நடவடிக்கை” (Think Globally : Act Locally) என்பதாகவும் கொள்ளப்படலாம்.

முடிவுரை

‘நவீனம்’ (Modem) நவீனத்துவம் (Modermity), நவீனத்துவவாதம் (Modernism)  என்னும் எண்ணக்கருக்களையும், அவற்றின் சமூகப் பின்புல, வரலாற்று நிலைமைகளையும் ஒரு 'பார்வைப் பலகணியாக கொண்டு ,துவரையிலும் நாம் புரிந்துகொள்ள முயற்சித்த, பின்-நவீனத்துவம் எனப்படுகின்ற கோட்பாட்டு அடிப்படைகள் ஓர் ஆரம்ப மட்டத்திலான சிந்தனைகளே ஆகும். இன்று பின்-நவீனத்துவத்திற்கும் பின்னரான கருத்தியல் தளங்களை நோக்கி மேற்குலகம் விரைகிறது. தென், தென்கிழக்காசியப் பிராந்தியங்களில் ,த்தகைய மேற்குலகின் வாத, விவாதங்களும், கருத்து நிலைகளும் எவ்வகையில் உள்வாங்கப்படுதல் வேண்டும் என்பது பற்றியும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. பூகோளமயமாதலின் மிக நுட்பமான, தந்திரோபாய மட்டத்திலான நவகாலனித்துவ ஆதிக்கங்களின் வடிவமாக மேலைப்புலம் சார்ந்த 'கருத்துக்களும்' எம்மையும், எமது சிந்தனைகளையும் தாக்கும் சமகாலத்தில் பின்-நவீனத்துவத்தை எமது சமூக வாழ்வியலின் அடிநிலைகுலையாமல் எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பது தொடர்பிலும் சமூக விஞ்ஞான நிலை நின்று சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

உசாத்துணை

1.     The Blackwell Dictionary of 20th Contury Sociae thought' (Ed) William     Outhwaite and Tom Bottomore

2.     Oxford Dictionary of Sociology - Gordan Marshall (Ed), Oxford university Press,1998.

3.     A Dictionary of Cultural and Critical Theory - Michael Payre (ed) – 1996, Blackwell Publishers. P.P.233-235

4.     Arran E.Gare - Post Modernism and the Environmental Crisis , Routledge , 1995.

5.     Norris, Christopher (Ed) - What's Wrong with post modernism

6.     Fukmyama, Francis - The End of History and the last man, penguin Books, 1992.

7.     Lyotard, Jean Francois - The Post Modern Condition - A Report on Knowledge. The Anniversity of Minnesota Press ,1993.

8.     Levi Strauss , Claude - Tristes Tropiques , Pocket Book Edition , 1977 .