4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 மார்ச், 2023

சந்தனச்சேறு - செல்வி சிவோகா சிவலிங்கம்

 

 

சந்தனச்சேறு



ஸ்ரீராம பிரான் உண்டாக்கிய செல்வம்,

என்றும் வற்றாத நீர்வளம்,

அதனில் ஆண்டு தோறும் தவறாத

ஆடி அமாவாசை தீர்த்தம்,

அங்கு அமிர்தமாய்க் கிடைக்கும்

“சந்தனச்சேறு”

 

அசையாத நீர்ப்பரப்பில்

தெரியும் கோபுரத்தின் நிழல்,

கரையில் அடர்ந்து வளர்ந்து

கிளை பரப்பி

வரிசையாய் நிற்கும் மரங்கள்,

குட்டையாகவும் நெட்டையாகவும்

வளர்ந்த புல் இனங்கள்

 

படர்ந்து நிறைந்த தாமரைக் கொடிகள்,

எங்கும் பூத்துக் கிடக்கும்

வெண்தாமரைகள், செங்குவளைகள்,

நீர்ப்பரப்பை மறைத்து மிதக்கும்

ஆகாயத் தாமரையின்  ஊதாநிறப் பூக்கள்

 

படிமுறையில் அமைந்த

பாசி படிந்த குளக்கட்டு,

அதன் வழியாக

வியூகம் அமைத்து வரும்

சிறிதும் பெரிதுமான மீன் இனங்கள்

 

நீர்த்துளிகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும்

இருக்கும் தாமரை இலைகள்,

அவற்றின் மேலே

மெல்ல நடந்து, கரையில் வாழும்

பூச்சிகளையும் புற்களையும்

மீன் குஞ்சுகளையும் உலர்ந்து உதிர்ந்த

இலைகளையும் இரையாய்த்

தேடிவரும் நீர்வாழ்ப் பறவைகள்

 

நிசப்தம் குடிகொண்ட வேளையில் கேட்கும்

அங்கு தஞ்சமாய் வாழும்

ஜந்துகளின் ஆர்ப்பரிப்பு,

பாய்ந்து குதித்து குளித்து விளையாடி

மகிழும் பள்ளிச் சிறார்கள்

 

இவை அத்தனையும் ஒன்றாய்ச் சேர்ந்து

அழகு சேர்க்கும்,

எங்கும் கிடைக்காத மனநிம்மதியை

அளித்திடும் மாமாங்கன் அவன்

தீர்த்தக் குளத்தை!.                                                                                                                               

                                   செல்வி சிவோகா சிவலிங்கம்

                                  மட்டக்களப்பு, இலங்கை.