7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

கண்ணனுக்கு ஒரு பாட்டு! - சுரேஜமீ (மஸ்கட்)

 

கண்ணனுக்கு ஒரு பாட்டு!

 

என்ன சொல்லி அழைப்பேன் – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

விண்ணை அளந்த மன்னா – வாயில்

மண்ணை உண்ட வண்ணா!

 

என்ன சொல்லி அழைப்பேன்? – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

 

காணும் இயற்கையடா – நீ

கதிரின் பிரிகையடா

நாணும் மங்கையடா – நீ

நாணல் தென்றலடா!

 

என்ன சொல்லி அழைப்பேன்? – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

 

விரியும் வானமடா – நீ

வீணை நாதமடா

புரியும் கீதமடா – நீ

புகழின் உச்சமடா

 

என்ன சொல்லி அழைப்பேன்? – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

 

சோலைப் பூக்களடா – நீ

சுகந்த வீச்சுமடா

மாலை மயக்கமடா – நீ

மதியின் இருளுமடா

 

என்ன சொல்லி அழைப்பேன்? – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

 

மனத்தில் குழம்புகிறாய் – நீ

மாறி எழுச்சிகொண்டே

அனைத்தும் ஆளுகிறாய் – நீ

 அன்புத் தோழனடா!

 

என்ன சொல்லி அழைப்பேன்? – உன்னை

என்ன சொல்லி அழைப்பேன்?

 

எங்கும் வளம்பெறச்செய் – நீ

ஏழை நலம்பெறச்செய்

பொங்கும் சனாதனமாய் – நீ

புவனம் தழைத்திடச்செய்!

 

கண்ண னென்றழைப்பேன் – என்றன்

காவல் துணையுனையே

கண்ண னென்றழைப்பேன் – நானே

கண்ண னென்றழைப்பேன்!

- சுரேஜமீ (மஸ்கட்)

 

கருத்துகள் இல்லை: