4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சித்தர் பாடல்களில் சைவ சித்தாந்தம் - பொ.கௌசல்யாதேவி & க.முருகேசன்

 

சித்தர் பாடல்களில் சைவ சித்தாந்தம்

பொ.கௌசல்யாதேவி   &    .முருகேசன்

முனைவர் பட்ட ஆய்வாளர் &  தமிழ்த்துறை தலைவர்

தமிழ்த்துறை,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்- 641029.

ஆய்வுச்சுருக்கம்

            நம்முடைய பாரதநாடு பழம்பெரும் நாடு. புண்ணிய பூமி. எத்தனையோ ஞானிகள், யோகிகள், அறிஞர்கள், மகான்கள், பக்தர்கள், சித்தர்கள் தோன்றிய புனித பூமி. அவர்களெல்லாம்யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்கிற மிகவுயர்ந்த கோட்பாட்டிலே நிலைநின்று நல்வழி காட்டியவர்கள். சித்தர்களின் பாடல்கள் இலைமறை காய்போல் நின்று மெய்யியல் செய்திகளையும், மருத்துவக் குறிப்புகளையும் விளக்குவன. பதினெண் சித்தர்கள் என்று வரையறை செய்யப் பெற்றாலும், எண்ணற்ற சித்தர்கள் உண்டு. அவர்கள் சிவத்துடன் ஒன்றிய சீவன் முத்தர்கள். கால எல்லை அற்றவர்கள் சித்தர்களின் சீவசமாதி நிலை கொண்ட திருத்தலங்களே அருளொளி வீச்சில் விஞ்சி நிற்கின்றன. சிவபெருமானே முழுமுதற்பொருள். இறை, உயிர், தளை மூன்றும் அநாதி. உயிர் பாசத்தை நீக்கி பதியைப் பற்ற வேண்டும். அதற்குப் பற்றுக்கோடு ஐந்தெழுத்து. உலகப் பற்றை நீக்க வேண்டும். நிலை பெற்ற கடவுளைக் காண திருவைந்தெழுத்தைப் பயன்படுத்த வேண்டும். ”தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே ! ” என்ற வள்ளற் பெருமான் வாக்கிற்கிணங்க தன்னையறிந்து அதன்பின்னர் தன் தலைவனை அறிந்து மேலான பேரின்ப வீட்டு நிலையை எய்த வேண்டும். மௌனம் அதற்கு உபாயமாகும்.   மோனம் என்பது ஞானவரம்பு” – ஔவையார். ஞானமாகிய உள்ளொளி பெற்று உய்தல் உயிர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். உடலை அழியாமல் காக்க முடியும் என்றும் பல ஊழிக்காலம் வாழ முடியும் என்றும் நம்பிக்கை கொண்டவர்கள் சித்தர்கள் . வேதாந்தநெறியே சித்தர்நெறி என்றும் கூறுவர். உள்ஒளி காணல், உள்ளே தசநாதம் கேட்டல், கடவுளுடன் இரண்டறக் கலத்தலாகிய அத்துவிதம் முதலியன சித்தர்களின் தனிச்சிறப்புக்களாகும். சித்தர் பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துக்களைக் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள் : சித்தர்கள், பாடல்கள், உயிர், சித்தி , நெறி, ஒளி

முன்னுரை

            சித்தர்பாடல்கள் தோத்திரம், சாத்திரம், சிற்றிலக்கிய வகைகளில் அடங்காமல் தனித்தன்மையுடன் திகழ்வன. மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களில் வரிசையிலும் வரவில்லை. இவர்கள் அறிவால் யாவும் உணர்ந்த பெரியோர்கள், சாதி சமயம், மூடப்பழக்க வழக்கம், ஆண், பெண் வேற்றுமை, அனைத்தும் நீங்கியவர்கள். யோகத்தால் அனைத்தையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். பெரிதும் சிவசக்தி ஆகிய சைவசமயம் போற்றியர்கள். யோகநெறியில் தனிமுத்திரை பதித்தவர்கள். கடவுள் வழிபாட்டில் புரட்சியை உண்டு பண்ணியவர்கள். காயகல்ப மருந்துண்டு யோகத்தில் சித்தி பெறலாம் என்பவர்கள். உடலை அழியாமல் காக்க முடியும் என்றும் பல ஊழிக்காலம் வாழ முடியும் என்றும் நம்பிக்கை கொண்டவர்கள். வேதாந்தநெறியே சித்தர்நெறி என்றும் கூறுவர். உள்ஒளி காணல், உள்ளே தசநாதம் கேட்டல், கடவுளுடன் இரண்டறக் கலத்தலாகிய அத்துவிதம் முதலியன சித்தர்களின் தனிச்சிறப்புக்களாகும். இக்கட்டுரையின்கண் சித்தர் பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கண்ணுரலாம்.

சித்தர் என்பவர் யார் ?

            சித்தர் என்ற சொல்லுக்குசித்தி பெற்றவர்என்பது பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் மூலம் எட்டு பெருஞ்சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர். சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். சிவோகம்பாவனையில் நின்று இறை ஆனந்த நிலையை வசப்படுத்திச் சாவை வென்று சதாகாலமும் சிவத்தோடு ஒன்றி வாழ்வது சித்தர்களின் செயல். காலத்துக்கு உட்பட்டவர்கள் பக்தர்கள், காலத்தை வென்றவர்கள் சித்தர்கள் வேளை வரும்போது இறப்பவர்கள் பக்தர்கள், விரும்பும்வரை மரணத்தைத் தள்ளிப்போடும் ஆற்றல் பெற்றவர்கள் சித்தர்கள். உடலையும், உயிரையும் பாரமாகக் கருதுபவர்கள் பக்தர்கள். ஆனால் அவைகளை நலம்செய்யும் கருவிகளாகக் கொண்டவர்கள் சித்தர்கள்.

            உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

          திடம்பட மெய்ஞானம் தேரவும் மாட்டார்

என்ற திருமூலரின் பாடல் சித்தர்களின் அணுகுமுறையைத் தெளிவுபடுத்தும்.

நவநாத சித்தர்கள்

            சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கஜேந்திரநாதர், கோரக்கநாதர், இவர்கள் ஒன்பதின்மரும் ஒன்பது கோடிச் சித்தர்களுக்குச் சமமானவவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதாவது வான்வழியாகக் கடந்து செல்லும் போது இனியகானம் ஒன்று மிதந்து செல்வதைப் போன்ற இனிய உணர்ச்சியை சிலர் அடைவர். சித்தர் நெறிகளில் ஒரு தகுதியை அடைந்தவர்களாலேயே இதனை உணர முடியும். தற்காலத்தில் கூட திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்கெவனசித்தர்ஒருவரின் ஒளிக்காட்சியினை நவீன புகைப்படக் கருவியின் மூலம் படம் பிடித்து ஒளிபரப்பிக்காட்டினர். இப்பொழுதும் சுவாமிமலை முதலான புண்ணியத்தலங்களில் சித்தர்கள் வாழ்கின்றனர். சித்தர் நெறியில் மேலான தகுதி பெற்றவர்க்கே நாதர் என்ற சிறப்புப் பெயர் வாய்க்கப் பெறுகின்றது. அந்த வகையில் அருணகிரிநாதர் மாபெரும் சித்தர் ஆவார்.

நந்திகள் நால்வர்

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்று

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே                                  -திருமந்திரம்

நாயன்மார்கள் அனைவரும் பக்தர்களே ! ஆனால் திருமூலரோ ஒரு சித்தர். திருமந்திரமே அதன் காரணம்.

திருமூலர் பாடலில் சைவசித்தாந்தம்:

            திருமந்திரம் பாயிரத்தில் திருமூலர் சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள் என்கிறார்.

            ஒன்று அவன்தானே, இரண்டு அவன் இன்னருள்

          நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து

          வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உடம்பர்ச்

          சென்றனன், தான் இருந் தான் உணர்ந்து எட்டு” (1)

            எண்ணலங்காரமாகப் பாடப்பெற்ற இந்த முதற்பாடலின் கருத்து

o   ஒன்று             - சிவபெருமான் ஒருவனே கடவுள்

o   இரண்டு         - அவனருளும் அவனும்

o   மூன்று                        - அரன், அரி, அயன் மும்மூர்த்திகளுள்ளும் நிலை   

பெற்றிருக்கின்றான்.

o   நான்கு            -அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு  
                       
உறுதிப்பொருள் தானே உணர்ந்து உலகிற்கு
                       
உணர்த்தினான்.

o   ஐந்து   - ஐம்பொறிகளையும் இயல்பாகவே வென்றவன்,

o   ஆறு               - ஆறு ஆதாரங்களாகவும், அந்த  ஆதாரங்களுக்குரிய   

தேவதைகளாளகவும், ஆறு அத்துவாக்களாகவும் விரிந்து நிற்பவன்.

o   ஏழு     -ஆறு ஆதாரங்களுக்கு மேற்பட்ட ஏழாவது ஆகிய  
           
துவாத சாந்தப் பெருவெளியில் விளங்குபன்

o   எட்டு  -மண், புனல், அனல், கால், வெளி, சூரியன்,    
           
சந்திரன், ஆன்மா என்னும் அட்டமூர்த்தியாக  
           
உணரப் பெற்று, அவற்றுள் கலந்து இருப்பவன்.

முப்பொருள் உண்மையும், அவற்றின் இயல்பும்:

          பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றில்

          பதியினைப் போல், பசு பாசம் அனாதி

          பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்,

          பதி அணுகில், பசு பாசம் நிலாவே

            இறை, உயிர், தளை என்று சொல்லப் பெறுகின்ற மூன்று பொருள்களுள், இறைவனைப்போலவே, உயிர்களும், உயிர்க்குத் தடையாய் இருக்கும் பாசப் பொருள்களும் என்றும் அநாதியே உள்ளனவாகும். உயிர்களும், பாசப் பொருள்களும் இறைவனைச் சென்று அடையும் திறனுடையனவல்ல. எனவே அவை இறைவனை அணுகமாட்டா, இறைவன் பக்குவம் வாய்ந்த ஆன்மாவுக்கு அருளும்பொழுது, பாசப்பொருள்கள் அந்த ஆன்மாவைப் பந்திக்க மாட்டாமல் விலகிவிடும் என்பதாகும்.

சிவவாக்கியர்:

          சிவன் பெயரை வாக்கினால்சிவசிவஎன்று கூறியபடி பிறந்ததால்சிவவாக்கியர்என்பர். “சிவாயமேஎன்ற தொடரைத் தம்பாடலின் இறுதிச் சீராகப் பல பாடல்களில் பாடியுள்ளார். சமூகப் புரட்சிக்கும், கடவுகள் பற்றிய சிந்தனையில் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவா். “சொல்லுவேன் சிவவாக்கியம்என்று தம் முதற்பாடலில் விளம்புகின்றார்.

அஞ்செழுத்து உண்மை :

          ஆன அஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்

          ஆன அஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்

          ஆன அஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்

          ஆன அஞ்சு எழுத்துளே அடங்கலாவது உற்றதே                     -சிவவாக்கியர் 3

நமசிவாயஅல்லதுசிவாயநமஎன்னும் சைவமந்திரத்தை விளக்குகிறார். அண்டமாகிய இந்த உலகம், அகண்டமாகிய இந்தப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஐந்தெழுத்துக்களின் உள்ளே அடங்கியன ஆகும். எல்லாவற்றுக்கும் ஆதியாகிய நான்முகன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் இம்மந்திரத்தில் அடங்கியுள்ளனர். ++ம் என்னும் ஓங்காரத்தின் விரிவும் பயனும் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன. ஐந்தெழுத்தில் எல்லாம் அடங்கியுள்ளன என்கிறார்.

சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துதேவர் ஆகலாம்

சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்

சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துகொண்ட வான்பொருள்

சிவாயம்அஞ செழுத்திலே தெளிந்துகொள்ளும் உண்மையே

-சிவவாக்கியர் 203.

சிவாயம்என எங்கு வந்தாலும் அதுசிவாயநமஎனும் ஐந்தெழுத்து மந்திரமே எனக்கொள்க. ”சிவாயநமஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை பலமுறை விதிப்படி ஓதுவதால் தெளிவாக தேவர் ஆக முடியும் வானுலகத்தையும் ஆளமுடியம் அந்த மந்திரத்தில் தெளிவடையக் கூடிய பெரிய பொருள் ஒன்றுள்ளது. இதனை ஓதி அனுபவிப்பவர்கள் உண்மை என உணர்வர்.

நான்கு மார்க்கத்திற்கும் பயன்:

          தெளிந்தநற் சரியை தன்னில் சென்றுசாலோகம் பெறும்

          தெளிந்தநற் கிரியை பூசை சேரலாஞ் சாமீபமே

          தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகும் சாரூபம்

          தெளிந்த ஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே    -சிவவாக்கியர் 447.

சரியை, கிரியை, யோகம், ஞானம் இவற்றை தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், யோகமார்க்கம், ஞானமார்க்கம் என்பர். சரியையின் பயன் சாலோகம் பெறுதல், கிரியையின் பயன் சாமீபம் பெறுதல், யோகத்தின் பயன் சாரூபம் பெறுதல், ஞானத்தின் பயன் சாயுச்சியம் பெறுதல், இப்படி நான்கு மார்க்கத்திற்கும் சைவ சித்தார்ந்தப் பயன் கூறினார்.

ஞானத்தை உள்நாடி அறிக :

          ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள் !

          ஞானமான சோதியை நாடியுள் அறிகிலர்

          ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்தபின்

          ஞானமற்றது இல்லைவேறு நாமுரைத்தது உண்மையே -சிவவாக்கியர் 468.

            யோக ஞானத்தால் ஞானநூல்களைத் தேடியறிந்து சொல்லிய பெருமக்களே !  ஞானமாகிய சோதியை உள்நாடியில் பலர் அறியவில்லை. ஞானமாய் நின்ற அந்த நாதனை அறிந்தபின் ஞானம் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அதுதான் உண்மையென்றும் கூறுகின்றார். இதுபிரக்ஞானம் பிரம்மம்என்ற ரிக்வேத மகாவாக்கியத்தை விளக்குகின்றது என்பர். வேதாந்தத் தெளிவே சித்தாந்தம் ஆதலால் மேலான ஞானம் என்பது சித்தாந்த முடிவேயாகும். உள்முகத்தியானமே மேலானது, உயர்வானது. மனத்தை ஒருமுகப்படுத்தாது வெளியே தேடுவதில் பயனில்லை என்றும் கூறுகின்றார்.

கடுவெளிச்சித்தர் :-

            தீவிரமாகப் பரந்த வெற்றிடத்தையே தியானம் செய்து சித்தர் ஆனவர் என்பதால் இப்பெயர் காரணப் பெயராக வந்தது. இவர் பாடல் நிறைந்த நீதியைக் கூறுகின்றது. இவர் பாடலில் பலவோ ஓரிரு அடிகளோ மக்கள் நடுவே காலம்காலமாக நிலைத்து வருவன. இவர் பாடல் இசை நயங்கொண்ட ஆனந்தக் களிப்பு  பாபஞ்செய்யாதிரு மனமேஎன்ற பல்லவியுடன் தொடங்குகிறது.

நிலையாமை :-

          நீர்மேற் குமுழியிக் காயம்-இது

          நில்லாது போய்விடும் நீயறி மாயம்

          பார்மீதில் மெத்தவும் நேயம்சற்றும்

          பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”-கண்ணி 4.

 உடம்பின் நிலையாமை அறிந்து பற்றற்றிருப்பாயாக என்கிறார்.

          நந்தவனத்திலோ ராண்டிஅவன்

          நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

          கொண்டு வந்தானொரு தோண்டிமெத்தக்

          கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” – கண்ணி 5

            கடவுள் அவரவர் வினைக்கு ஏற்ப 24 ஆன்மத் தத்துவங்களைக் கொண்டு ஓர் உடல் கொடுக்கின்றான். அதனை நல்வழியில் பயன்படுத்தாமல், கெட்ட வழிகளில் கூத்தாடிக் கூத்தாடிக் தோண்டியை உடைப்பது போல் பெற்ற உடலை இழந்து ஆன்மா கடைத்தேறாமல் போனது என்று குறிப்பிடுகின்றார்.

o   நந்தவனம்பிரபஞ்சம், ஆண்டிபத்தன்

o   நாலாறு – 24 தத்துவங்களுடன் கூடிய உடல்

o   குயவன்படைப்புக் கடவுள், தோண்டிஉடம்பு.

பாம்பாட்டிச்சித்தர் :-

            தன்னையறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார்

          தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்

          பின்னையொரு கடவுளைப் பேண நினையார்

          பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே”- 95

            தன்னை அறியாதவர் பிறரிடம் தன்னைப் பற்றிப் புகழ்ந்து காட்டுவார். தன்னை அறிந்தவன் தன்னைப் புகழாமல் மறைத்துக் கொள்வார். அவர்கள் தங்கள் உடலில் காணும் கடவுள் தவிர வேறு ஒன்றைப் பேணி வழிபட நினைப்பதில்லை. பேரொளியையே பேணுவார்கள் என்று தன் ஆன்மாவின் நிலையறிந்தவர்கள் உயர்ந்த உள்ளொளி பெற்றவர்கள் என்று விளக்குகின்றார்.

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்:-

            திருமூலர் மரபில் வரு மௌனகுருவின் வழியினர். ஆதலின் சித்தர் கூட்டதைப் போற்றும் வேதாந்த சித்தாந்த சமரசமென்னும் வேறுபாடில்லாத நல்ல நிலைபெற்ற மூதறிவாம் மெய்யுணர்வினையுடைய சித்தர் தம் சீரிய திருக்கூட்டமேஎன்று சித்தர்கண மரபினைப் போற்றுகின்றார்.

ஆன்மாவின் அநாதிகேவல நிலைப்பாடு:-

            காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற

          கண்ணிலாக்  குழவியைப்போற்

          கட்டுண்டிருந்த எமை வெளியில் வில்லலாங்

          காப்பிட்டதற் கிசைந்த

          பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்

          பெலக்கவினை யமுதமூட்டிப்

          பெரிய புவனத்தினிடை போக்குவர வுறுகின்ற

          பெரியவிளையாட் டமைத்திட்டு

          ஏரிட்ட தன்சுருதி மொழிதப்பில்  நமனைவிட்

          டிடருற உருக்கி இடர்தீர்த்

          திரவு பகலில்லாத பேரின்ப வீட்டினில்

          இசைந்து துயில் கொண்மின் என்று

          சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே

          சித்தாந்த முத்தி முதலே

          சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே           சின்மயானந்த குருவே         -  6

            புற இருளானது பொறிநுகர் புலன்களாகிய பொருள்களை மறைத்துக் கொண்டு நிற்கும் . அதவிருளாகிய பழமலம் (ஆணவமலம்) தானுண்டெனக் காட்டாததோடு தான் புல்லியிருக்கின்ற (பொருந்தியிருக்கின்ற) உயிர்தானொரு பொருள் வேறெனக் காணவும் ஒட்டாது தன்னுள் அடங்கி நிற்கும். இந்நிலையில் ஆருயிர்கட்கு இயல்பாயுள்ள அன்பு, அறிவு, ஆற்றல்கள் சிறிதும் விளங்கவொட்டாது தடுத்து நிற்கும் அம்மலச்சார்பால் அவை விளங்குவனல்ல. இவை விளங்காதிருப்பதே உயிர்தன்னை உணராதிருப்பதாம்.

இவ்வுண்மை வருமாறு :-

          ஒரு பொருளுங் காட்டா திருள்உருவங்காட்டும்

           இரு பொருளுங் காட்டா திது                                         திருவருட்பயன் 23

          இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்,

          பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு                                  தமிழ்மறை 5

          ஏகமாய்த் தங்கால எல்லையனின் மீளும்

          எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட

          மோகமாய்ச் செம்பினுரு களிம்பேய்ந்து நீத்த

          மூலமல மாயறிவு முழுதினையும் மறைக்கும்

          பாகமாம் வகைநின்று  திரோதாயி சத்தி

          பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து

          நாகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள்

          நணுகும் வகை கருணைமிக நயக்குந்தானே     - சிவப்பிரகாசம் 20

பூ மன்னு …..

          மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்

          தான் அடக்கும் காட்டத் தகுதியும் போல்ஞானத்தின்

          கண்ணை மறைத்த கடியதொழில் ஆணவத்தால்

          எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும்         -   போற்றிப்பறொடை       

            மாமணியை நாகமும், நெருப்பை விறகும் அடக்கி வைத்திருக்கும் தன்மைபோல ஞானத்தை ஆணவம் மறைத்துக் கொண்டுள்ளது. அதனை உணர்ந்து நீக்க வேண்டும்.

தன்னைத்தான் படிக்கும் கலையே சித்தவித்தை :-

            பொன்வெள்ளி செய்கிறவன் பெரியோன் அல்ல

            புகழான அட்ட சித்தி பெரியோன் அல்ல

            முன்நின்ற வயித்தியனும் பெரியோன் அல்ல

            மூச்சடக்கி யெழும்பினவன் பெரியோன் அல்ல

            சின்னமுள்ள குழியிருப்போன் பெரியோன் அல்ல

            தன்னிலையை அறிந்தவனே பெரியோன் ஆவான்

            தனையறியான் வகைகெட்ட சண்டிமாடே          - சுப்பிரமணியர் சுத்தஞானம் 98

முடிவுரை :-

            சித்தர்கள் பாடல்களில் ஏராளமான சிவஞானச் செய்திகள் உள்ளன. இவர்கள் பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் போலவும், நாத்திகப்பாடல்கள் போலவும் காணப்படுகின்றன. ஆயினும் சமூகத்தின் இழிவுகளைப் பாடியுள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டும். சடங்குகளால் இறைவனை அடையமுடியாது என்பது இவர்களின் கொள்கையாக அமைந்துள்ளது. அகப்பூசை ஒன்று மட்டுமே தூய்மையானது என்பது இவர்தம் கோட்பாடு.

            மனமது செம்மையானால்           மந்திரம் செபிக்க வேண்டாம்

          மனமது செம்மையானால்   வாயுவை உயர்த்த  வேண்டாம்

          மனமது செம்மையானால்   வாசியை நிறுத்த வேண்டாம்

          மனமது செம்மையானால்   மந்திரம் செம்மையாமே    அகத்தியர் ஞானம் 2

உள்முகமாகக் கடவுளை நாட வேண்டும், அதுவே உயர்ந்தது, மேலானது வேடத்தால் பயனில்லை. உலகப் பற்றை அறுத்து நின்றால் வீடுபேறு பெறலாம், நுட்பமான சிவாயநமமந்திரத்தை ஓதினால் உள்ளமே தீர்த்தமாகும். நான்கு வேதம் ஓதி அறிய முடியாத ஞானத்தை, நான்கு சாமம் யோகம் செய்தால் அறியலாம். பலமுறை பயிற்சி செய்து பழக வேண்டியது மௌனம் என்பர். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் காட்டிய வழி நின்று வாழ்வில் வளம் பெறலாம் என்பது திண்ணம்.

துணைநூற்பட்டியல் :

1)    சித்தர் பாடல்கள் மூலமும் உரையும் உரையாசியர், முனைவர் .அறிவொளி, வர்த்தமானன் பதிப்பகம்.

2)    திருமுறைகளில் சைவசித்தாந்தம், திருவாவடுதுறை ஆதீன வெளியீடு.

3)    தாயுமான சுவாமிகள் பாடல்கள் மூலமும் உரையும் , வடிவேலு முதலியார், பூம்புகார் பதிப்பகம், 2011

4)   திருமூலர் திருமந்திரம் மூலமும்- விளக்க உரையும் , ஞா.மாணிக்கவாசகன், 2006.