4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

நாய்க்கனேரி மலைவாழ் மக்களின் சடங்கு முறைகள் - முனைவர் நா.குமாரி

 

நாய்க்கனேரி மலைவாழ் மக்களின் சடங்கு  முறைகள்

 

முனைவர் நா.குமாரி

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

அக்சிலியம் கல்லூரி

வேலூர்-6.

நாய்க்கனேரி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு அடுத்து அமைந்துள்ளது நாயக்கனேரி மலை. இம்மலை மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.  இந்த ஊராட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் காமனூர் தட்டு பனங்காட்டேரி, பெரியூர்,புது ஏரியூர், சீக்கஜெணென,முள்ளு கொள்ளை , மேலூர் ,புதுக்காட்டு கொள்ளை, மேற்கொள்ளை, மேல் சோளக் கொல்லை, நடுவூர், பள்ளக் கொல்லை, மேடு நாயக்கனேரி, காசாங் குட்டை, முல்லை போன்ற 15 சிற்றூர்களை உள்ளடக்கியதாகும்.

திறவுச் சொற்கள்

பூப்பு, தோட்டி, தொட்டில் தூரி, பாடு கிளப்புதல், குராப்,

இடம் பெயர்தல் - ஆம்பூர் போர்

இரு வாரிசுரிமை சச்சரவுகள் காரணமாக 1749 - 54 ல் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போரின் பகுதியாக நடைபெற்றது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும். இந்தப் போரை முசாபர் ஜங்க் ,பிரென்ச் ஆதரவுடன் சந்தா சாகிப் தலைமையில் தொடங்கினார். இப்போருக்கு படையில் சேர்வதற்கான பணி நடைபெற்றது.போரில் சேர விருப்பமில்லாத மக்கள் வனவாசம் புகுந்தனர். ஆம்பூருக்கு தெற்கே அமைந்துள்ள மலையில் தஞ்சம் அடைந்தனர்.அங்குள்ள ஏரிக்கரையோரம் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர். இங்கு குடியேறிய மக்கள் மலையாளி கவுண்டர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சடங்குகளை வைத்து இவர் என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்று யூகிக்கலாம். சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன. இவ்வாறு சடங்குகள் வேறுபடுவதற்கு காரணம் அவரவர் கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும். அவ்வகையில்,  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாய்க்கனேரி மலைவாழ் மக்கள் மேற்கொள்ளும் வாழ்வியல் சடங்குகளை இங்கு காண்போம்,

சடங்குகள் விளக்கம்

 ஒவ்வொரு நாட்டுப்புற மக்களின் உண்மை வாழ்க்கையும், மரபையும், பண்பாட்டையும் விளக்குவனவாக சடங்குகள் அமைகின்றன. பொதுவாக மனித வாழ்வில் ஏற்படும் பழக்கங்கள் அடிப்படையில் தான் சடங்குகள் அமைக்கின்றன. சடங்கு என்பது நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும். புனித பொருட்களின் முன்னால் மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறும் ஒழுக்க விதிகளே சடங்குகள் என்கிறார் சு.சக்திவேல்.

வாழ்வியல் சடங்குகள்

மனிதர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடித்து வருவதன் மூலம் வாழ்வில் வளமும் நலமும் பெறலாம் என்று நம்புகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப்படுகின்ற சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படும்.  இந்த சடங்குகள் மூலம் அந்தந்த இன குழுக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அறிய முடியும். நாய்க்கனேரி மக்களின் வாழ்வியல் சடங்குகளான பிறப்புச் சடங்கு,   பூப்புச்சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு என நான்கு சடங்குகள் எவ்வாறு நிகழ்த்துகின்றனர் என்பதை காணலாம்.

பிறப்பு சடங்கு

குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுள் செயல் என்று நம்புகின்ற இந்த இன மக்கள் குழந்தை பிறக்கின்ற போதும் குழந்தை வளர்ந்த போதும் அதற்கான சில சடங்குகளையும் செய்கின்றனர்.  குழந்தை பிறப்பதற்கு அறிவியல் முறையில் காரணம் கண்டறிய இயலாத பழங்குடியினர் அவற்றைக்  காக்க சடங்குகளின் துணையை நாடினர்.(ஞானசேகரன், 2000 )

நாய்க்கனேரி மலைவாழ் மக்களின் திருமணமான பெண்கள் தன் கணவன் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்கின்றனர். காது குத்துதல் போன்ற சடங்குகளும் இவர்களிடத்தில் இல்லை. இவர்கள் இனத்திலேயே வயது நிறைந்த அனுபவம் உடைய பெண்கள் பிரசவம் பார்ப்பதால் இவர்கள் மருத்துவமனை செல்வதும் இல்லை.மேலும் இன்று வரை இவர்கள் இனத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவம் தான். மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை செய்து இதுவரை எவரும் குழந்தை பெற்றுக் கொண்டது இல்லை. பெரும்பாலும் இவர்கள் மருத்துவமனைக்கே செல்வதில்லை.

பூப்புச் சடங்கு 

' பூப்பு' என்ற சொல் பூத்தல் என்ற பொருளில் இளம்பெண் தாய்மைப் பருவத்தை அடைந்ததற்கான உடலில் ஏற்படும் மாற்றத்தினைக் குறிப்பதற்கு இச்சடங்குகளை நிகழ்த்துகின்றனர்.வயது அடிப்படைக் குழுக்களை கொண்ட சமுதாயங்களில் இளைய குழந்தைகளைப் பருவ வயதை அடையும் பொழுது அவற்றிற்கு ஏற்ப சடங்கினைச்  செய்வர்.(பக்தவச்சல பாரதி, 2003,538).பொதுவாக ஒரு பெண்ணிற்கு பிறப்புச்  சடங்கு, காதணி விழா போன்றவற்றை விட , முதலில் பூப்புச் சடங்கையே புனிதமாகக்  கருதுவர். இந்தியாவில் வகிக்கும் அனைத்து பழங்குடிகளும் பூப்புச் சடங்கினை நடத்தி வருகின்றனர். நாய்க்கனேரி மலைவாழ் மக்களும் பூப்புச் சடங்கினைச்  செய்கின்றனர்.

பழங்குடி சமூகங்களிலும் பூப்பெய்தல் சடங்குகளைக் கொண்டாடும் வழக்கம் தொன்றுத் தொட்டு இருந்து வருகின்றது. பூப்பெய்தல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அர்ஜென்டினாவில் புயெல்சி 0, துயெல்சி 0 ஆகிய கலை நிகழ்ச்சிகளாக இப்பொழுதும் நடத்தப்பட்டு வருகின்றன. (சக்திவேல், 2000 , 33) கிழக்கு பிரேசில் பழங்குடியினர் புல்னியே 0 என்ற பெயரில் பூப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவர்.

திருமணச் சடங்குகள்

மனித சமுதாயத்தில் திருமணம் ஓர் இன்றியமையாத நிகழ்வாகும். குடும்பம் என்ற நிறுவனம் அமைய திருமணம் எனும் நிகழ்வு தேவைப்படுகின்றது. இச்சடங்கு ஒவ்வொரு இனத்திற்கு இனம் வேறுபடுகின்றது. உலகம் தழுவிய நிலையில் தந்தை வழி சமுதாயங்களில் திருமணம் என்பது பெண் எடுத்ததை குறிக்கும். தாய் வழி சமுதாயத்தில் இதற்கு மாறாக மணமகன் பெறுதலைக் குறிக்கும் என்பார்.(பக்தவத்சல பாரதி, 2002,62) லெவிஸ்ட்ரால், திருமணம் என்பது ஒரு தொடர் வரிசையிலான பொருளாதாரப் பரிவர்த்தனையை ஆரம்பித்து வைக்கிறது என்பர். இம்மலைவாழ் மக்களின் திருமணமோ  பொருளாதாரம் பரிவர்த்தனையைப் பிரதிபலிக்காமல் உறவு முறைகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

திருமண உறவுகள்

ஏங்கெல்ஸ், திருமணத்தைச் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பகுக்கிறார்.1. குழுமண முறை, 2. இணை மண முறை, 3. ஒருதார மண முறை என்று மூன்று வகையாகப் பகுக்கின்றார்.

மணஉறவுகள் தமிழ் சமுதாயத்தில் பின்பற்றப்படும் மண உறவு முறைகளையே இம்மலைவாழ் மக்களும் பின்பற்றுகிறார்கள். இவர்களிடத்தில் கால் வழி, குலம், கோத்திரம் என்ற பிரிவுகள் இல்லை. தாய்மாமன் மகளையும், தந்தையின் சகோதரிகளின் மகளையுமே திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

இம்மண முறை' இருவழி மணம்'  என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு யாரையாவது ஒருவகை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுவது விரும்பத்தக்க மணமுறை என்பர் லெவிஸ்ட்ராஸ்( பக்தவச்சல பாரதி,2002,34)

காதல் திருமணம்

நாய்க்கனேரி மலைவாழ் மக்கள் காதல் திருமணத்தை அங்கீகரிப்பது இல்லை. இருந்தாலும் ஆணும் பெண்ணும் காதல் வயப்பட்டு தவறுகள் செய்ய நேர்ந்தால் தன் தவறுகளை அவர்கள் ஒத்துக் கொண்டு 'நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ எங்களுக்கு சம்மதம். எங்களை சேர்த்து வாழ வையுங்கள்' என்று பஞ்சாயத்தில் முறையிட்டால் அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை வழங்கி அவர்களை சேர்த்து வைக்கின்றனர்.

இறப்புச் சடங்குகள்

இயற்கையின் நியதிப்படி மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் என்றாவது ஒரு நாள் இவ்வுலக வாழ்வினை துறந்து இறப்பு என்ற இறுதி நிலையை பெற்றே ஆக வேண்டும் என்பது காலதேவனின் கட்டளையாகும். பிறப்பு முதல் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து இன்ப நிகழ்வுகளுக்கும் பெருமகிழ்ச்சி அடையும் மனிதன் தன்னுடன் வாழ்ந்த ஒருவர் இறக்கின்ற போது அச்சம் கொள்கின்றான். பந்த பாசத்தின் காரணமாக பேரிழப்பிற்கும் அவரால் தனது குடும்பத்திற்கு எவ்விதத் தீமைகளும் நேராமல் இருப்பதற்காகவும், இறப்பு தொடர்பான பலவித சடங்குகள் செய்யப்படுகிறது.

இம்மக்கள் கைக்குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும், சிறுவர்களுக்கு, திருமணமானவர்க்கு ஒரு மாதிரியாகவும் இறப்பு சடங்குகளைச் செய்வர்.

கைக்குழந்தை சிறப்புச் சடங்குகள்

இம்மக்கள் குழந்தை இறந்துவிட்டால் குழந்தைக்கு பவுடர் அடித்து பொட்டு வைத்து பாயில் கிடத்துவர். உறவினர்களுக்கு செய்தியினை தோட்டின் மூலம் சொல்லி அனுப்பி, எந்தவித மேளம் சத்தம் இல்லாமல் அமைதியாக எடுத்துச் சென்று புதைப்பர். ஏனென்றால் மந்திரவாதிகள் இக்குழந்தையின் மண்டை ஓட்டை எடுத்துச் சென்று மந்திரத்திற்கு பயன்படுத்தினால் குடும்பத்திற்கு ஆபத்து என்ற நம்பிக்கையின் காரணமாக யாருக்கும் தெரியாமல் புதைப்பர்.

சிறுவர் இறப்புச் சடங்குகள்

சிறுவர்கள் இரண்டு வயது முதல் 12 வயது வரை உள்ளவர். இறந்துவிட்டால் குழந்தைகளைக் குளிப்பாட்டி புதுத்துணி அணிய வைப்பர். உறவினர் அனைவருக்கும் சொல்லி அனுப்பி அவர்கள் வந்தவுடன் சுடுகாட்டிற்கு தூக்கி செல்வர். பாடை கட்டி தூக்கி செல்ல மாட்டார்கள். பிணத்தின் மீது மஞ்சள்  தண்ணீரைத் தெளித்து மூங்கில் குச்சி ஒன்றிணை வெட்டி அதில் ஒரு போர்வையினைக் கொண்டு தூரி செய்து இறந்த குழந்தையை எடுத்துச் செல்வர். இதற்கு' தொட்டில் தூரி'என்று அழைக்கின்றனர்.

திருமணமானவர் இறப்புச் சடங்குகள் 

வயதான ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டால் அவரை குளிப்பாட்டாமல் அதிக நேரம் வைத்திருக்காமல் மஞ்சள் நீரை வேப்பிலையால் தெளித்து பின்பு பாடைக்கட்டி தூக்கி சென்று புதைத்து விட்டு வந்து விடுவார்கள். நோய்வாய்ப்படாமல் ஒருவர் இறந்து விட்டால் அந்த உடலை குளிப்பாட்டி புது ஆடைகளை அணியச் செய்து உறவினர்களுக்கு செய்தியினை அனுப்புவர். உறவினர்கள் வந்தவுடன் தூக்கிச் சென்று புதைத்து விடுவார்கள்.

இறந்தோர் வழிபாடு

தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் ஆவி, அலைந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறந்து மூன்று மாதத்திற்கு பிறகு அவர்களது ஆவியைக் குறி வைத்து அழைக்கின்றனர். இதற்கு' பாடு கிளப்புதல்' என்று பெயர். 'பதி வைத்தல்' என்றும் அழைக்கின்றனர்.

குறி சொல்பவர்களிடம் இறந்தவரின் ஆவி வந்து பேசுவதைக் கேட்கின்றனர். இதற்கு' குராப் ' (வாக்கு) கேட்டல் என்றும் பெயர் உண்டு.

'ஏன் செத்தாய்?'  என்று கேள்வி தொடங்குகிறது. தான் இறந்த மொத்த விபரங்களையும் இறந்தவரின் ஆவி சொல்லும். நாங்கள் அழைத்தால் வருவாயா ? என்று கேட்கின்றனர்.

' வருகிறேன் ' என்று விடை சொன்னால் 'எப்படி நம்புவது'? என்று கேட்கிறார்கள்.

 இந்த உரையாடலின் போது பூக்களைப் பரப்பி வைக்கின்றனர். வருவதாக இருந்தால் இரண்டு பூக்களும், வரவில்லை என்றால் ஒரு பூவும் எடுத்துத்  தர வேண்டும்.

பொதுமக்கள் நினைக்கின்ற பொருளை எடுத்து தந்தால்தான் குறி சொல்பவர் கூறுவது உண்மை என்று நம்பப்படுகிறது. ஒரு சிறிய பந்தல் போடப்படுகிறது அதற்குக் 'கட்டிப்பந்தல் ' என்று பெயர். பந்தலின் கீழ் ஒரு மொந்தையை( மண்சட்டி) மஞ்சள் பூக்களால் அலங்கரித்து நூல் சுற்றப்படுகிறது. மொந்தையைச் சுற்றி வட்டமான துணிக்கட்டி வைக்கின்றனர். எலுமிச்சைப் பழங்களைப்  படைக்கின்றனர். மொந்தையில் பால் ஊற்றுகின்றனர். பந்தலின் மேலே இருந்து நூல் ஒன்றைக் கட்டி, அதன் நுனி பகுதியை மொந்தையின் வாய்ப்பகுதிக்கு நேராகத்  தொங்க விடுகின்றனர்.

தற்கொலை செய்து கொண்டு இறந்தவரின் ஆவி அந்த நூல் வழியாக இறங்கி மொந்தைக்குள் வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கைச் செய்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டு இறந்தவரின் ஆவி எந்த பொருளாக உருமாறுவதற்குச் சொன்னதோ, அந்த பொருள் இருக்கிறதா,? என்று பூசாரி, கத்தியைக் கொண்டு அம்மொந்தையை அவிழ்த்துப் பார்ப்பார். அதில் முடியாகவோ (மயிர்) எறும்பாகவோ, ஈயாகவோ இருக்குமாம்.

பின்னர் ஒரு பச்சைப் பந்தல் போடப்படுகிறது. பாலாற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட அழகான கல் ஒன்றுக்கு மஞ்சள் பூசி வழிபாட்டுக்கு உரியதாக மாற்றுகிறார்கள்.  தற்கொலை செய்து கொண்டு இறந்தவர் பச்சை மரங்கள் இடையே தெய்வமாகிவிட்டார் என்ற நம்பிக்கையில்' செடிகள் சாமி' என்று அழைக்கப்படுகிறார்.

பெரும் பொங்கலின் போது ஆடுவெட்டி வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

முடிவுரை

நாய்க்கனேரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் சடங்குகளான பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு என நான்கு முக்கிய சடங்குகளைச் செய்கின்றனர். பொதுவாகவே சடங்கு என்பது ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை அடைவதற்காகவும், பெறுவதற்காகவும் நிகழ்த்தப்படுகின்ற ஒரு நிகழ்வே ஆகும். 

துணைநூற் பட்டியல்

1.ஆறு இராமநாதன், நாட்டுப்புறவியல் கோட்பாட்டு பார்வைகள், பாவை பதிப்பகம். சென்னை.2002

2. பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் ,நவம்பர் 1990

3.சு சக்திவேல், நாட்டுப்புறவியல் வகைப்பாடு, மீனாட்சி பதிப்பகம், சென்னை.1998.

தகவலாளர் பட்டியல்

1.பெரியசாமி வயது 58, கல்வித் தகுதி இல்லை.

2.முருகன், வயது 40 , பத்தாம் வகுப்பு.

3.செவ்வந்தி, வயது 56 , ஐந்தாம் வகுப்பு.