4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

மட்டக்களப்பின் தெய்வமாடற் சடங்குகளில் பால்நிலை சார் தாக்கங்களும் , இடையீடும் : ஒரு பெண்ணிய மானுடவியற் பார்வை - ச.சசிதரன், கலாநிதி. ச.சிறிகாந்தன்

 

மட்டக்களப்பின் தெய்வமாடற் சடங்குகளில் பால்நிலை சார் தாக்கங்களும் , இடையீடும் : ஒரு பெண்ணிய மானுடவியற் பார்வை

ச.சசிதரன்

          முதுநிலை விரிவுரையாளர்

            சமூகவிஞ்ஞானத்துறை

            கிழக்குப் பல்கலைக்கழகம்,

            இலங்கை

         

          கலாநிதி. ச.சிறிகாந்தன்

          முதுநிலை விரிவுரையாளர்& தலைவர்

            சமூகவியல்துறை,

            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

            இலங்கை

அறிமுகம்

மனித வாழ்வியலின் தவிர்க்கவே இயலாத ஓர் அனுபவமாக அல்லது கருத்துருவமாகத் திகழ்கிறது சமயம்: அது ஓர் அடிப்படையான சமூக நிறுவனமாக மட்டுமன்றி , சமூக ஒருங்கிசைவு , சமூகக் கட்டுப்பாடு , சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பிரதான சமூகமூலகமாகவும் தொழிற்படுகிறது. சமயச் சார்பின்மையாதல் (Secularisation) பற்றி விரிவாகப் பேசப்படுகின்ற இன்றைய காலச்சூழலிலும் கூட சமயம் , வாழ்வு , சடங்குகளின் வலிபாகம் இவற்றிலிருந்து முற்றிலும் புறம்மொதுங்க முடியாதவனாகவே நவீன மனிதனும் காணப்படுகிறான். (Anthony Widens 1996;11-16) ஆனால், அதேவேளை “உலகிலுள்ள அனைத்து மதங்களும் பால்நிலைப்படுத்தப்பட்டுள்ளன” (Gendered Religion) என்கிற பெண்ணிய மானுடவியலாளர்கள் வாதிடுகின்றனர்.சமயத் தளத்திலும் பெண்கள் தெய்வமாக்கப்படும் அதே சமயம் - அதே சமய நிறுவனத்தினுள் சாமான்யப்பெண்களை ஒடுக்குகின்ற இரண்டாம் பட்சமாகக் கருதுகின்ற அவளுக்கான வழிபாட்டு உரிமைகளை மறுதலிக்கின்ற மத நடைமுறைகளையும் இன்றைக்கும் பெண்நிலை வாதிகள் பரவலாகக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். உலகளாவிய நிலையில் சமூககட்டமைப்பினுள் பெண்களின் அந்தஸ்து வேறுபட்டதாகவே உள்ளது. அத்துடன் மிகப்பிரதானமான கூறுகள் பால்நிலை அசமத்துவத்தின் வேறுபாடுகளாக இயல்பாகவே மதங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளன. பண்பாட்டு இழைகளும் வரலாற்று படிநிலைகளும் சமய நியமங்களுடன் இணைந்து சமூகத்தளத்தில் பெண்களை இரண்டாம் தரமாக்குவதில் அதிகளவு பங்களிப்பு செய்கின்றன. உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் வெவ்வேறு தாக்கங்களுடன் பால்நிலை அசமத்துவமானது பரவலுற்று காணப்படுவதை அவதானிக்கலாம்.இத்தகைய வேறுபாடுகள் பிரதானமாக பண்பாட்டு இழைகள், வரலாற்று விருத்திகள் , புவியியல் அமைவிடம் மற்றும் சமய நியமங்களுடன் இவற்றுடன் தொடர்புபட்டுள்ளன. குறிப்பாக இதிலும் சமய தளத்தினுள் வரும் அம்சங்கள் புறக்கணிக்க இயலாத வகிபாகத்தினை பண்பாட்டு வாழ்வியலின் வெவ்வேறு வெளிகளில் பிரியோகிக்கின்றன. இந்த சமய நியமங்கள் அல்லது மதக்கட்டுப்பாடுகள் பெண்களின் சுயாதீன வெளியின் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றது. மற்றுமொரு ஆய்வறிவாளரின் அவதானத்தின் படி சமகாலத்தில் இனத்துவம் அல்லது சாதி முதலான காரணிகளுக்கு பதிலாக சமூக புவியியல் அம்சங்கள் இந்த விடயத்தில் முக்கியத்துவம் பெறுவதாக கணிப்பிடப்படுகிறது.சமயப் பிரமாண நூல்களின் வியாக்கியானங்களை எடுத்து நோக்கினால் அதிலே குறிப்பிடப்படும் சமூதாயப் பெண்களின் அந்தஸ்து தாழ்ந்ததாகவே உள்ளது. மானிடவியல் ரீதியில் சமயத்தின் வகிபாகமும் குறுக்கீடும் காலம் இடம் சார்ந்து வேறுபட்டதாக உள்ளது. இதன்படி மதங்களுக்கும் பால்நிலைக்குமான தொடர்பு நேர்நிலையாக இல்லாமல் எதிர்மறையாக இருந்து வந்திருப்பதோடு மதங்களின் இத்தகைய செல்வாக்கு பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான சமூதாய ஒழுங்கமைப்பு கோலங்களாகவும் வெளிப்பட்டுள்ளன.

அடுத்து தெய்வமாடல் சடங்கினுள் பெண்களின் அந்தஸ்தை நோக்கினால் வரலாற்று ரீதியாக சைபீரியா , கொரியா, தென்ஆசிய நாடுகளில் பெண்களின் இருப்பும் பங்கேற்பும் அவதானிக்ககூடிதாக உள்ளது. அந்தவகையில் ஆய்வுப்பிரதேசத்திலும் நீண்டகாலமாக இந்த சடங்கில் பங்கேற்று வருவதை காணலாம். வெகுசன பண்பாடு வெகுசனகலை ஆண் மையக்கருத்தியல் ஆணாதிக்க சடங்குகள் இவற்றையும் மீறி ஆய்வுப்பிரதேசத்தில் பெண்களின் தெய்மாடல் சடங்கு நிலவுவதற்கு தந்தையாதிக்கத்தை ஒரு முக்கிய காரணமாக காட்டலாம். குறிப்பாக ஆண்களின் ஆட்டமுறைமைக்கும், பெண்களின் ஆட்டமுறைமைக்கும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன அதன்படி ஒரு வகையான பெண்இயல்பு முறைமை சார்ந்த சடங்கியல் வெளிப்பாடு என்று நாம் அழைக்கலாம். எவ்வாறாயினும், பெண்களாக இருந்து தெய்வமாடுவோர் ஆலய நிர்வாகம் சார்ந்த சில விடயங்களில் நாம் இரண்டாம் பட்ச அனுபவங்களுக்கு உள்ளாகுவதாக உணர்கின்றனர். அவர்களது உணர்வு சார்ந்த ஸ்திரப்பாடான அடையாளம் இழக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர் எவ்வாறாயினும் இது பற்றிய விரிவான ஆய்வுகள் எதிர்காலத்தில் மேலும் முன்னெடுக்கப்படவேண்டிய அவசியப்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் சமய வாழ்வில் ஒரு பகுதியாக விளங்குவது சடங்குகள் சடங்குகளை மானிடவியலாளர்கள் சமய வாழ்க்கையின் இருதயபாகமாகவே கருதுவர்.மனித வாழ்க்கையானது குறிப்பிட்ட கால ஓட்டத்துடன் மிகுந்த நெருங்கிய பிணைப்புக் கொண்ட தன்மையில் பிறப்பு - இறப்பு – மீண்டும் பிறப்புக்கும் , இறப்புக்கும் இடையில் இளமை – பருவமுறுதல் - விவாகம் - பிள்ளைப்பேறு – பேறுகாலத்தனிமை – முதுமை என்னும் ரீதியில் வெவ்வேறு பட்ட நிலை மாற்றங்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. இத்தகைய நிலைமாற்றங்கள் மனிதனை மகிழ்ச்சி இழப்பு , அதிர்ச்சி, துயரம், விரக்தி, தனிமை முதலான வெவ்வேறு உணர்ச்சிக்கனங்களுக்கும் ஆட்படுத்துகின்றன. இத்தகைய உணர்ச்சிச் சுழல்களைச் சமப்படுத்தும் நோக்கிலேயே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். (Malinowski,1928) எவ்வாறாயினும் இத்தகைய சடங்குகள் தன்னியல்பாகவே தந்தையாதிக்க, ஆணாதிக்க நியமங்களையும் , நோக்குகளையும் , குணாம்சங்களையும் பிரதிபலிப்பவையாகப் புலப்படுத்துவதுமான மட்டக்களப்புப் பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் புலப்படுத்துவதுமான வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக பிரதான கோயிற்சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகின்ற தெய்வமாடற் சடங்கில் பிரதிபலிக்கப்படுகின்ற பால்நிலை வேறுபாட்டு அம்சங்களை சமூக-மானிடவியற் பார்வையில் நுணுக்கமாகக் பரிசீலிப்பதே இக் கட்டுரையின் மைய நோக்கமாகும்.

1.1தெய்வமாடற் சடங்கு – ஓர் அறிமுகம்

“Shaman” என்னும் சொல்லுக்கு அமானுஷ்ய உலகோடு , தெய்வீக விடயங்களைத் தொடர்பு படுத்துபவர் அதிபௌதீக சக்தி வாய்ந்தவர் விசேடித்த சமய,சடங்கியல் பயிற்சி மிக்கவர், நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கவர், தீர்க்கதரிசி , மக்கள் மயப்படுத்தப்பட்ட உள்ளுர் சமயத்தலைவர் என்றவாறு பல்வேறுகருத்து நிலைகள் உண்டு இதன்படி, “Shamanism”  என்பது, பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.

“Shamanism is deeply rooted to additional virtual system of interacting with the spirit world through altered states of consciousness and directing their role and spiritual energies”

நனவிலி மனத்தின் நினைவுகளின் தன்மைகளை மாற்றம் செய்யும் வகையிலான ஆன்மிகச் சக்திகள் திசைவழிப்படுத்தும் வரிபாகத்துடன் கூடிய ஆன்மிக அல்லது அதிபௌதீக உலகுடன் இடையூடாடவல்ல மரபார்ந்த ஒரு சடங்கு முறைமையே தெய்வமாடல் ஆகும். இங்கே , மனித உடல் தெய்வங்களின் “ மீடியமாக” (Medium) கருதப்படுவதை அவதானிக்கலாம்.முதன் முதலில் இவ்வெண்ணக்கருவை ஆய்வுலகில் அறிமுகப்படுத்தியவராக நிக்கோலால்விட்சென் (NicolaesWitsen) என்பார் கருதப்படுகிறார். (“No ordenoost Tataryen” 1692) வேட்டையாடல் மற்றும் சேகரித்தல் யுகத்திலேயே பின்வரும் பிராந்தியங்களில் இச்சடங்கானது பயின்று வந்திருப்பதாக அறியப்படுகிறது.

           வடக்கு ஐரோப்பா

           ஆபிரிக்கா

           வடக்கு ஆசியா

           துருக்கி மற்றும் மங்கோலியா

           டங்கேசிய சமயோடிக் மொழிபேசிய பழங்குடிகள்

           ரஷ்யா

           தூர கிழக்காசியா

           தென் , தென்கிழக்காசியா

இச் சடங்கு பற்றிய பொதுவான நம்பிக்கைகளாக பின்வரும் அம்சங்களைச் சுட்டலாம்:

தெய்வமாடலின் பண்புகள்:

1.            தெய்வமாடுவோருக்கு ஆவியுலகத்துடன் இடைவினை புரியும் ஆற்றல்கள்.

2.            அவர்களது சில தீர்க்கதரிசினங்களை உரைப்பதற்கு துணை புரிகின்றன.

3.  கட்புலனாகாத ஆவிகளையும் தெய்வங்களையும் தரிசிக்கும் ஆற்றல் தெய்வமாடுவோருக்கு மட்டுமே உண்டு.

4.     அவர்கள் இயற்கை உலகுக்குள் நுழைந்து எவராலும் குணப்படுத்த இயலாத வியாதிகளையும் குணப்படுத்தி விடுவர்.

5.            அவர்களுக்கு வருங்காலத்தில் நிகழ்வுகளை பற்றி முன்கூட்டியே எடுத்துரைக்கும் ஆற்றலுண்டு.(ஆய்வுப் பிரதேசத்தில் இது கட்டுக்கூறுதல் எனப்படும்.)

6.         தெய்வமாடுதல் என்பது பயபக்தியோடும் , எளிதில் விளக்க புதிர்த்தன்மையுடனும் தொடர்புபட்டது.

1.2.1 உலகளாவிய நிலையில் தெய்வமாடலில் பால்நிலையின் இடையீடு: வடக்கு சைபீரிய மற்றும் வடக்கு ஐரோப்பிய நிலைப்பட்டு நிகழ்த்தப்பட்ட இச் சடங்குகளை மானிடவியல் ரீதியில் விரிவாக ஆய்வு செய்தவர்கள் , வேட்டையாடல் யுகம் முதலாக தெய்வமாடும் கலை அல்லது சடங்கென்பது பால்நிலைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்ததாக கருத்துரைப்பார். (Tedlock 2005, 247). நவீன யுக ரஷ்யாவின் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றில், ஆண் தெய்வமாடுவோருக்கான முதன்மைப்பாடே வழங்கப்பட்டு வந்துள்ளமைக்குச் சான்றுகளுண்டு (Deselincourt,2003-49-20) இவ்வாறே ஏனைய வெவ்வேறு பிராந்தியங்களிலும் கூட , தெய்வமாடும் பெண்கள் , தெய்வமாடும் ஆண்களிலும் சற்று தாழ்வுபட்ட சமூக அங்கீகாரம் அல்லது அந்தஸ்தை பெற்று வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக , பல பழங்குடி வடஅமெரிக்கா பண்பாடுகளிலும் இத்தகைய தெய்வ ஆட்டம் , ஆன்மிக நடைமுறை அல்லது இவை அனைத்தினதும் கூட்டான ஆன்மிகப் பரிணாமம் (Spiritual Dimension) என்பது நிறுவனமையப்படுத்தப்பட்ட பால்நிலைப் பேதங்களை பாரபட்சங்களுடனேயே அடையாளப்படுத்தவும் படுகின்றன.(Basigal upo,A.M.2007.P.33) – பார்க்க விரிவான விளக்கத்துக்கு (S.E.Holimon,2001)  .தெய்வமாடும் ஆண்களிடமும் தன்னியல்பாத் தம்மைப் பற்றிய தன்முனைப்பான அபிப்பிராயம் நிலவுதல் கண்கூடு ஆர்டிக் வட்டகையில் பெண்கள் தெய்வமாடற் சடங்கில் பங்குபற்றுதல் தடுக்கப்பட்டுள்ளது.இதற்கு அப்பழங்குடி இனத்தலைவர்கள் பெண்களின் “ மாதவிடாய் காலத்தை” காரணமாகக் கற்பித்து பெண் இயல்பாகவே தீட்டு மிக்கவர் என்பதனால் அவளினால் தெய்வ உலகத்துடன் அன்றேல் அமானுஷ்ய உலகத்துடன் தொடர்புபடுகின்ற சக்தி இயல்பாகவே அற்றுப்போய் விட்டது என்று வாதிடுகின்றமை அவதானத்துக்குரியது. (Lang, S, 1998:184-155).

இங்கே, பெண் உடலின் இயல்பூக்கம், தாய்மைப் மாற்றுக்கான இயற்கைப் பிரபஞ்சத்தின் தயார்ப்படுத்தல் , இவை பற்றிய பௌதீக , மருத்துவ விஞ்ஞான அணுகுமுறைகள் புறமொதுக்கப்பட்டு , தந்தையாதிக்;க பிற்போக்குக் கண்ணோட்டமே மேவி நிற்றலைக் கவனிக்கலாம்.

மட்டக்களப்பு சடங்குகளில் பெண்களின் வகிபாகம்:

மட்டக்களப்பு வாய்ப்பாடாகவே “மானிடவியலின் சொர்க்கம்” என்று அழைக்கப்படும் ஒரு பிராந்தியம் , கிழக்கிலங்கையில் பாரம்பரியமாகவே குமுக்கன் ஆறு தொடக்கம் - மன்னம்பிட்டி வரையிலான பரந்த பிரதேசமே அன்று மட்டக்களப்பாக அறியப்பட்டது. என்னும் இனவாத அரசியற் காரணிகளினால் , அறுபதுகளின் நடுப்பகுதியில் , அம்பாறை மாவட்டமானது எல்லைப் பரப்பு புவியியல் ரீதியில் சுருங்கி விட்டது.(த.கோபாலசிங்கம்,2001) மட்டக்களப்பின் சமயநிலை தனித்துவமானது: சிறு தெய்வங்களை முதன்மையாகக் கொண்டது. ஆகமம் சாராத , சிறுமரபுசார் பண்பாட்டு வட்டத்தின் செல்வாக்கிற்குட்பட்டது.இதனால் தான் எமைல் டேர்க்கமின் (Emile Durhemin) ஆய்வுக்கிணங்க , மட்டக்களப்பின் மாற்றங்களை அதிகம் சந்திக்காத புராதன வடிவிலான பழங்குடிப் பண்பாடுகளின் குணாம்சம் நிறைந்த நம்பிக்கை மரபுகளின் வழியே ஒரு புதிய சமய , சடங்கு , பண்பாட்டு , தரிசனம் எமக்குக் கிடைக்கப்பெறும் ஆனால் , துரதிஷ்டவசமாக புலமைத்துவ நிலையில் அத்தகைய ஆய்வுகள் முறையாக இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.

பற்றிஷியா லோரன்ஸ் புன்னைச்சோலைக் காளி கோயில் பற்றில் ஒரு விரிவான மானிடவியல் ஆய்வைத் தந்துள்ளார் பேராசிரியர் சண்முகலிங்கரும் இதே தலம் பற்றிய காடசிப்புல ஆவணப்படுத்தலை வழங்கியுள்ளார். வ.மகேஸ்வரலிங்கம் , மட்டக்களப்பின் சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் பற்றிப் பருமட்டாக ஆய்ந்துள்ளார். சி.மௌனகுரு, சி.சீவாரத்தினம், வ. இன்பமோகன், க.தங்கேஸ்வரி, எப்.எக்ஸ்.சீ.நடராசா, வீ.சி.மோகன், இ.சுகந்தி, கு.ரவிச்சந்திரன், து.கௌரீஸ்வரன், ச.சசிதரன், சி.தில்லைநாதன், கோபாலசிங்கம் முதலானோர் ஒரு சில ஆய்வுக்கட்டுரைகளை வரைந்துள்ளனர்.

1.2.2 தெய்வமாடலில் பெண்களின் வகிபாகம்

மட்டக்களப்பு பிராந்தியமானது மானிடவியல் ரீதியில் “தாய்வழிச் சமூகம்” என்று கருதப்படத்தக்கது. (Matrilineal Society)  இங்கே , திருமணம் , திருமண உறவுகள் விவாகத்தின் பின்னரான வாழ்விடம் யாவும் பெண்ணைச் சார்ந்தே இடம்பெறுவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பின்பற்றப்படும் சமூக வழக்காறாக உள்ளது. (Social System) எனினும் , இதன் பொருள் தந்தையாதிக்கத்தின் செல்வாக்கு , அதன் தாக்கம் இங்கு இல்லை என்பது பொருளாகாது.மட்டக்களப்புச் சமய வெளியினுள் பெண்களின் வகிபாகம் பற்றி ஒரு பருமட்டான கள ஆய்வை மேற்கொண்ட செல்வி திருசந்திரனின் கூற்று உற்று நோக்கத்தக்கது. “தாய்வழிச்சமூகம் என்று அறியப்பட்ட போதிலும், மட்டக்களப்புச் சமயநிலையில் ஆணாதிக்கப் பிடிகளும், தளைகளும் புலப்படாமலும் இல்லை, மாறாகப் பெண்கள் பாரம்பரியமாகவே தென்படுகின்றனர். நேர்த்திக் கடன் வைத்தல், தேசிக்காய் விளக்குப் போடுதல், அடி அழித்தல், விரதம் அனுஷ்டித்தல், மறுதாலி கட்டுதல், மடிப்பிச்சை எடுத்தல், பாவை நோன்பு அம்மன் வழிபாடு, பாற்குடம் எடுத்தல் என்று பெண்களின் பக்தி பரவச ஈடுபாடு விரிந்து செல்கிறது. எவ்வாறாயினும் , பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது , மந்திர ஏடுகளைத் தீண்டுதல் தகாது , அது சாமிக்குற்றம் ஆகி விடும் என்கிற அடிப்படையற்ற நம்பிக்கை , ஐதீகங்களை ஆண்பூசாரிகள் இன்னும் வலியுறுத்தி வருகின்றமை பெண்களின் மதநிலைப்பட்ட உரிமைகள் பற்றிய ஒரு மறுமதிப்பீடு அவசியமாகிறது. இத்தகைய ஆணாதிக்க பார்வைகள் , நியமங்கள் , கருத்துருவாக்கங்களின் செல்வாக்கானது , தெய்வமாடற் சடங்கோடு  தொடர்புபட்ட சம்பிரதாயங்களிலும் ஓரளவு பிரதிபலிப்பதனை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.

1.3 ஆய்வின் முறையியல்

இது அடிப்படையில் தரரீதியான ஆய்வு – பெண்ணிய ஆய்வு சார் நடைமுறைகள் சுருக்கமாகப் பின்பற்றப்பட்டுள்ளன. 2021 ஆனி தொடக்கம் புரட்டாசி ஈறாக சுமார் மூன்று மாத காலம் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. ஆய்வுப் பிரதேசங்களாக பாரம்பரிய, ஆகமம் சாராத கோயில்கள் அமைந்து விளங்கும் புன்னைச்சோலை, தாமரைக்கேணி, ஆரயம்பதி, ஏறாவூர், தளவாய், சித்தாண்டி, சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை முதலான கிராமங்கள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஆய்வின் இலக்கினை எய்தும் பொருட்டு தெய்வமாடலில் ஈடுபடும் சுமார் 16 பெண்கள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர், நோக்க மாதிரி முறை நுட்பம் இதன் பொருட்டு பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முழுமை கருதி உள்ளூர்ப் பூசாரிமார் கோயில் நிர்வாகத்தினர் சமயப் பிரமுகர்கள், கிராமத்தலைவர்கள், பெண் அடியார்கள், பல்கலக்கழகப் பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்களுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. நேர்காணல் பங்குபற்றி அவதானித்தல் தொலைபேசி நேர்காணல் எடுத்துரைப்பு முறை ஆகியன ஆய்வின் பிரதான தரவு சேகரிப்புக் கருவிகளாக அமைந்திருந்தன.

1.4 ஆய்வின் பெறுபேறுகள்

1.4.1 தெய்வமாடலில் பெண்களின் நிலை மட்டக்களப்பில் ஆண்களைப் போலவே பெண்களும் இச் சடங்கில் தொன்று தொட்டு ஈடுபட்டு வருவதாகவே வாய்மொழித் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இது தொடர்பான எழுத்தாவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. கோராவெளி (இரான் பிரதேச செயலகப் பிரிவு) கண்ணகை அம்மன் கோயில் பாரம்பரியமாகத் தெய்வமாடிய ஒரு பெண் ( கோமனேஸ்வரி அம்மா , 84) தனது 12 ஆவது வயதில் பெற்றோருடன் சடங்கிற்குச் சென்ற போது (1941)  தன்னால் என்னவென்றே விபரிக்க இயலாத “உரு” வந்து தெய்வமாடி , கட்டுச் சொன்னதாகவும் , ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டு , ஊரில் அழிவு ஏற்படலாம் என்று வாக்குரைத்ததாகவும் , அதன் படியே வாக்குரைத்த மூன்று மாதங்களில் அடைமழையும் , வெள்ள அனர்த்தமும் இடம் பெற்றதாகவும் நேர்காணலின் போது தெரிவித்தார்.

ஆயினும் , தான் தொடர்ந்து தெய்வமாடுவதைப் பாட்டனார் தாயின் தகப்பனார் அனுமதிக்கவில்லை என்றும் அதையும் மீறித் தெய்வமாடிய போது தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியமை, அக்காலத்திலே ஒரு வகையான ஆணாதிக்க மனோபாவம் நிலவியுள்ளமை புலனாகிறது.

1.4.2 சில பொதுவான அவதானங்கள்

இச் சடங்கில் பெண்கள் சிறுபான்மை அளவுக்கே இன்று பங்குபெறுகின்றனர். இந்த நிலையிலும் அவர்கள் சில வகையான பாரபட்ச அனுபவங்களை எதிர்கொள்கின்றனர். அவற்றை தொகுத்துக் காண்பது நலம்.

(அ) வலிமையும் , முதன்மையும் மிக்க ஆண் தெய்வங்களின் முன் நிலையில்  “பெண் தெய்வங்கள்” ஆட அனுமதிக்காத கட்டுப்பாடு  வகை சமூக ஏற்பாடு நீண்டகாலமாக உள்ளது. ( எடுத்துக்காட்டு: வதனமார் , ஆஞ்சநேயர் , வீரபத்திரர் , பெரிய தம்பிரான், நாகதம்பிரான் , நரசிங்கர் முதலானவை)

(ஆ) சடங்கு ஒழுங்கலும் , தயார்ப்படுத்தலிலும் , மந்திர உட்சாடனம் , வரிசை கூறுதல் , கட்டுக்கூறுதல் என்பவற்றிலும் பெண்களை விட , தெய்வமாடும் ஆண்களே முதன்மைப்படுத்தப்படும் போக்கு.

(இ) பெருமளவுக்கு இங்கு கருவளத்துக்குரிய தெய்வமான “பிரத்தியங்கரா தேவிக்கே” பெண்கள் மிகப்பெரும்பாலும் தெய்வமாடி : வாக்குக்கூறுகின்ற போக்குப் புலனாகிறது. இந் நிலைமை எம்மை பெண்கள் உற்பத்தி இல்லாமல் மறு உற்பத்திக்குரியவளாக ஆணாதிக்கக் கருத்தியலின் தொடர்ச்சி என்கிற விசாரணையைத் தூண்டுகிறது.

(ஈ) வன்மை , ஆவேசம் , ஆக்கரோ~த்துடன் ஆண்களுக்கு நிகராகத் தெய்வமாடும் பெண்களை பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினர் சக ஆண் தெய்வாதிகள் எதிர்மறையாக விமர்சிக்கும் ஒரு நிலையும் காணப்படுகிறது.                                                     

(உ) கோயிலில் , கோயிலின் இந்த பகுதிகளில் தெய்மாடும் சடங்கு இடம்பெறும் சந்தர்பங்களில் “ஆண்தெய்வாதிகளைச்” சூழவே அதிகளவு பக்தர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

(ஊ) இரவிரலாக இச் சடங்கு இடம்பெறும் நிலையில் சில பெண் தெய்வாதிகள் , தமது இருப்பிடம் , பாலியல்பு , இயற்கை உபாதை தீர்த்தல் , துயில் இவை சார்ந்த சில மட்டுப்பாடுகளையும் , அசௌகர்யங்களையும் எதிர் கொள்வதாக முறையிடுகின்றனர்.

முடிவுரை:

ஒட்டுமொத்தமாக வகுத்தும் , தொகுத்தும்; நோக்குமிடத்து பின்வரும் முடிவுகளை முன்வைக்கலாம்:

1.            சமயம் சடங்கு இவை சார்ந்த தளங்களும் கருத்தியல்களும் ஆய்வுப் பிரதேசத்தினுள் இன்று வரையிலும் பால்நிலை சார் வேறுபாடுகளுடனேயே பிரதிபலிக்கப்படுகின்றன.

2.            தெய்வமாடும் சடங்கின் அகப்,புற நோக்கங்கள் , விளபேறுகள் புனிதமானவையாகக் கருத்தில் கொண்டாலும் , சடங்கிச் செயன்முறைகளை உற்று அவதானித்தல் மிக நுண்மையான ஆணாதிக்க விழுமியங்களை அவதானிக்க முடிகிறது.

3.            பெண் தெய்வாதிகளின் சமூக அடையாளம் பண்பாட்டு அடையாளம் என்பன ஆண்களை விட ஒருபடி தாழ்வானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளமை.

4.            தெய்வமாடல் உயரிய , தெய்வீக நிலைப்பட்ட செயற்பாடு எனினும் அது பெண்ணுக்கு வழங்கப்பட்ட மிகத் தற்காலிகமான சலுகையே அல்லாமல் இதனால் பெண்ணின் மத சுதந்திரம் எய்தப்பட்டதாகவோ , மதத் தளங்களில் நீண்ட காலமாக நிலவி வரும். ஆணாதிக்கப் பிடிகள் முடிவுறுத்தப்பட்டதாகவோ கருத முடியாது.

5.            பெண்களுக்கும் - ஆண்களுக்குமான பால்நிலை அடிப்படையிலான சமூகப் பாரபட்சம் , ஓரங்கட்டல் , நுண்பாக அரசியல் , மேலாதிக்க அனுபவங்களின் மற்றுமொரு இடையீடம் , இடைவினையும் , கருத்தேற்றமும் தெய்வமாடல் சடங்கிலும் பிரதிபலிப்பதை இந்த ஆரம்பநிலை ஆய்வு தெரிவுபடுத்தி நிற்கிறது.          

எனவே , ஏனைய சமூக நிறுவனங்களைப் போலவே , சமயம் என்கிற நிறுவனமும் பிரக்ஞை பூர்வமாக தந்தையாதிக்க , ஆணாதிக்க நியமனங்கள் , வரையறைகள் , மனோபாவங்களையே மறுபடி ஸ்தாபித்தும் , போஷித்தும் வருகின்றது. சமயத்தின் ஒரு பெரும்பாகமாயுள்ள சடங்கிலும் இதனையே இலக்காகக் கொண்டுள்ளன.

முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் கண்டறிதல்களை மீள நோக்குமிடத்து , பெண்களின் பங்குபற்றல் தொடர்பில் சற்றுப் பெருமிதம் கொள்ளும் அதேகணத்தல் , மத நிறுவனமானது ,கணத்தில்  மிகவும் தந்திரோபாயமான முறையில் பெண்களும் பங்கேற்கின்றனர் என்னும் மாயையை ஒரு புறம் கட்டமைத்து – மறு புறத்தில் மிக நுணுக்கமாகவும் , தந்திரமாகவும் கட்புலனாகாமலும் பெண்களை ஓரங்கட்டுகிற , பாரபட்ச அனுபவங்களுக்கும் உள்ளாகும் வகையிலேயே இத் தெய்வமாடற சடங்கினைக் கட்டமைத்து நிகழ்த்தி வருகின்றமை நன்கு புலனாகிறது.

எனவே சீமோன் டீ பூவர் கூறுவது போன்று பெண்ணுக்காக வழங்கப்படுவதாக கூறப்படு;ம் அனைத்து உரிமை , “வெளி” (Space) யின் கூறுகளையும் மிக அவதானமாக மீள் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.

சமயத்தன்மை சார்ந்த இந்தவகையில் பால்நிலைச் சமத்துவத்திற்கான பாதையும் மிக நீண்டதாகவே உள்ளது என்று கூறுவதில் தவறில்லை.   

உசாத்துணை :

1.   Bliege Bird,R & Smith, E.A.(2005) Signaling theory, Strategic interaction, and Symbolic Capital, Sage Publication, London,

2.   Hopkins,P.(2009).Men, Women, Personalities and emotion: doing feminist geographies of religion, ACME : An International Journal for critical Geographers,8 (1), 1- 17.

3.   Inglehart , R., Norris,P(2003). Rising tide: Gender equality and cultural change around the world . Cambridge, Cambridge University Press.

4.   Turner,V.(1979).Frame, flow and  reflection : Ritual and Drama as Public Liminality.Japanese Journal of Religious Studies, 6(4), 465 – 499.