வேலையில்லா பட்டதாரி
1.
கல்விக்கடன் சுமை
கற்ற கல்வி
கண்ணீரில் வாடுதே
பெற்ற கடன்
பேயாய் மிரட்டுதே
- நற்றவமாய்
வேலை தேடி வீதி
அலைகின்றேன்
நாளை
விடியும் நனி.
2.
சமூகப் பார்வை
பட்டங்கள் ஏந்திப்
பகலெல்லாம் அலைந்தும்
ஒட்டவில்லை
வேலை ஒருகாலும்
- சுற்றத்தார்
ஏளனப் பேச்சால்
இதயமே புண்ணாகிக்
காலம்
கழிகிறதே காண்.
3.
நேர்காணல் ஏமாற்றம்
ஆயிரம் நேர்காணல்
ஆவலாய்ச் சென்றும்
வாய்க்கவில்லை
நல்லதொரு வாய்ப்பே
- போயின
செருப்பின்
வாரோடு தேய்ந்தன கால்கள்
விருப்பம் நிறைவேறா வீண்.
4.
பெற்றோரின் ஏக்கம்
தந்தை உழைக்கத்
தளர்ந்து போனார்
சிந்தை வாடிச்
சிலையாகிப் போனார்
- மைந்தன்
பணிபெற்றுப்
பார்புகழப் பார்ப்பார் எனவாடிப்
பிணிபெற்று
நின்றார் பிரிந்து.
5.
தகுதிக்கு மீறிய வேலை
பொறியியல் கற்றும்
பொதிசுமக்கச் சென்றேன்
அறிவைத் தொலைத்து
அழுதேன்
- நெறிகெட்ட
உலகில் பிழைக்க
உழைப்பதே மேலென்று
விலகி
நின்றேன் வீணாய்த் தவித்து.
6.
கனவு கலைந்தது
மாட மாளிகை
வாழ்வென்று எண்ணினேன்
கோடி கனவுகள்
கண்டேனே
- ஓடி
இளைத்த பின்னே
இஃதுணர்ந்தேன் மண்ணில்
பிழைப்பதே
பெரும் போராட்டம்.
7.
ஊக்கமது கைவிடேல்
முடங்கிக் கிடந்தால்
முன்னேற லாகா
தொடர்ந்து முயன்றால்
துலங்கும்
- இடர்நீக்கி
வெற்றி வசப்படும்
வேகமாய் உழைத்தால்
கற்றுத்
தெளிந்தனை நீ.
8.
அரசுத் தேர்வு
இரவும் பகலும்
இமைமூடா தேகி
உரமேற்றித்
தேர்வு எழுதி
- வரவுக்காகக்
காத்துக் கிடக்கின்றேன்
கண்ணுறக்கம் இன்றி
நாத்தழும்பு
ஏறும் வரை.
9.
வறுமையின் கொடுமை
பசியின் கொடுமை
பகலெல்லாம் வாட்ட
விதிவிலக்காய்
வேலை கிடைக்க
- கதியாக
நூலகமே தஞ்சம்
எனநின்று வாடுகிறேன்
பாலகன்
நானே பரிந்து.
10.
நம்பிக்கை ஒளி
இன்றைய துன்பம்
நாளைப் பனிபோலச்
சென்று மறையும்
சினமேற்க
- நன்றுதவழ்
நம்பிக்கை கொண்டால்
நலிவு அகன்றிடும்
வெற்றி உனதே
விழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக