முனைவர் பீ. பெரியசாமி
அடியே சரசு நாம் பாட்டுக்கு இங்க கத்திக்கிட்டு இருக்கேன் நீ கொஞ்சமும் சட்ட செய்வதாக தெரியலியே.
நல்லா பேசுற மனுஷன் கிட்ட பேசலாம். கத்துகிட்டு இருக்குற மனுஷன் கிட்ட என்னத்த சொல்ல.
ஓ… ! உனக்கு அவ்வளவு ஆயிடுச்சோ…
ஆமா … ! எத்தனை நாளைக்கு என்னையும் நான் கட்டுப்படுத்தி வச்சுக்கிட்டு உன்னோட வாழறது.
அதுக்கு…. உங்க அப்பா வூட்டுக்கு போறியோ?
அப்பன் வீட்டுக்கு எல்லாம் போறது அந்த காலம். எனக்கென்ன படிப்பில்லையா? தனியா வாழ்ந்து காட்ட தெம்பு இல்லையா? நான் எதுக்கு என் அப்பன் வீட்டுக்கு போகணும்?
அப்போ எங்க போக போற? எதுக்கு துணிமணிகளை இவ்வளவு வேகமா எடுத்து வச்சிக்கிட்டு இருக்க?
நான் எதுனா ஹாஸ்டலுக்கு போய் தங்கி ஏதாவது ஒரு வேலையை பார்த்து பொழைக்கப் போறேன். இதுநாள் வர உன்னோட நான் பட்டதெல்லாம் போதும்.
ம்…. போ…. போ… தனியா போயி பொழைப்பு நடத்திக்கிற அளவு உனக்கு தைரியம் வந்துடுச்சு….
வேற நீ செய்வதற்கு எல்லாம் காலமெல்லாம் அடங்கி போயிட்டே இருப்பேன்னு நினைச்சு புட்டியோ…!
அப்படி என்னடி ஆத்தா ஊர் உலகத்துல இல்லாதத நான் உனக்கு செஞ்சு புட்டேன்…
நீ என்னத்த செஞ்ச. எதையுமே தான் செய்யலையே… எதை கேட்டாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுற… பொழுது போனா போதும் அந்த சாக்கடையை வாயில ஊத்திக்கிட்டு வந்து போற வரவங்க கிட்ட வம்ப இழுக்குற ஊரெல்லாம் வேடிக்கை பாக்குது. எனக்கு மானமே போகுது.
ஏன்டி ஊர்ல எவனுமே குடிக்கறது இல்லையா என்ன? ஆம்பள நான் அப்படி இப்படித்தான் இருப்பேன். அதெல்லாம் நீ தான் அனுசரிச்சு போகனும். அவ தான் பொம்பள… இது கூட தெரியாத நீ எல்லாம் என்னடி பொம்பள…?
ஆமாய்யா ஆம்பளனா குடிக்கனும், கூத்தியா வச்சுக்கனும், ஊர் மேயனும், வம்பு இழுக்கனும், பொம்பளைன்னா நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் வரனும், இது நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம். அப்படிப்பட்ட பொம்பள நான் இல்ல நான் உன்னை திருத்த உன் கூட வாழ பெரும்பாடு பட்டுட்டேன். நீயும் திருந்துறா போல தோணல என்ன விட்டுடு நான் போறேன்.
நீ போயிட்டா இந்த ஊர்ல என்னை யாருடி மதிப்பா? பொண்டாட்டி வச்சி பிழைக்க வக்கில்லாதவன்னு பேசமாட்டானுங்களா..?
பேசட்டுமே நல்லா பேசட்டும். அப்படியாவது உனக்கு மான ரோஷம் வந்து இந்த குடி எல்லாம் விட்டுவிட்டு ஒழுங்கா திருந்து வாழறையானு பாப்போம்.
நான் என்னடி செய்ய டாஸ்மார்க் கடை பக்கம் போனா… தன்னால கால் கடைக்கு கூட்டிட்டு போடுது.
அப்போ அந்த கடை இருக்கிற தெருவுல போகாத…
நீ வேற விவரம் தெரியாதவளா இருக்க ஊர்ல எந்த தெருவிலடி கடையில்லாமல் இருக்கு. மளிகை கடை இல்லாத தெரு கூட இருக்கும். டாஸ்மார்க் இல்லாத இடமே இல்லடி.
இதெல்லாம் பொழப்புக்கு ஆகாது நீ திருந்துற மனுஷனா எனக்கு தோனல நான் கிளம்புறேன்.
கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு. நமக்குன்னு சொல்லிக்க ஒரு புள்ள குட்டி தான் இருக்கா. இப்படியே இருந்தா எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்க. நீ வேற தனியா போட்டா பெருமாளுக்கு ஏதோ கோளாறு அதான் அவன் பொண்டாட்டி அவனை விட்டுட்டு போயிடானு பேசி அசிங்கப் படுத்துவாங்கடி சரசு. எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம். என்ன விட்டு போயிடாதடி.
ஓ… இதெல்லாம் தொரைக்கு இப்பதான் நினைவுக்கு வருதோ… இத்தனை நாள் என்னை கோமாவுலயா இருந்த..? நல்லா வாய்பூரா சாராய நாத்தம் அடிச்சா உன் கூட யார் படுப்பா..? புள்ளையை பெத்துப்பா ..? கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுபுட்டு விழுந்து கிடந்தா எப்படி புள்ள பொறக்கும்..? நான்தான் தனியா புள்ள பெத்துக்கணும் எதுனா ஆஸ்பத்திரிக்கு கீஸ்பத்திரிக்கு போய்… நீ அதுக்கு ஒன்னும் சரிப்பட்டு வர மாதிரி தெரியல எனக்கு.
என்னடி இப்படி பேசுற..?
வேற எப்படி பேச சொல்லுற..? ஒரு நாளைக்காவது நிதானமா வீட்டுக்கு வந்து இருக்கியா நீ?
நீ என்ன மன்னிச்சிடு சரசு. இந்த குடி இப்படியெல்லாம் நம்ம குடியை கெடுக்கும்னு தெரியாமலேயே குடிச்சுட்டு இருந்துட்டேன். இனி உன் மேல சத்தியமா குடிக்க மாட்டேன். என்ன நம்பு… இந்த ஒரு முறை நீ போறத நிறுத்திப்புட்டு உள்ள போயி வேலைய பாரு…..
இந்த பாருய்யா… இந்த ஒரு முறை தான் பார்ப்பேன். இதுக்கு மேலயும் குடிச்சிட்டு வந்தனா சொல்லாம கொள்ளாம போயிட்டே இருப்பேன் தெரிஞ்சுக்க.
சரி சரசு நான் இனி குடிக்கவே மாட்டேன்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக