6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 டிசம்பர், 2025

வறுமை - முனைவர் பீ. பெரியசாமி

 

வறுமை

1. பசியின் கொடுமை

வயிற்றுத் தீயினால் வாடுதே உள்ளம்

அயர்வு தரும்பசி ஆதி - துயரம்

உடுத்தத் துணியின்றி ஊரார் நகைக்கப்

படுத்துமே பாழ்வறுமைப் பண்பு.

2. உறவினர் விலகல்

செல்வம் இருக்கும் வரைக்கும் உறவினர்கள்

வெல்லம் எனமொய்க்கும் வேளையிதே - இல்லையெனில்

எட்டிப் போய்நின்று ஏளனம் செய்வாரே

கெட்ட வறுமையின் கேடு.

3. மானம் அழிதல்

குலமானம் காக்கின்ற கொள்கை மறந்தே

நலமான வாழ்வும் நலிந்து - நிலைகெட்டு

இரக்கத் தூண்டும் இழிந்த வறுமை

பரக்கச் செய்யுமே பாழ்.

 

 

 

4. கல்வி தடைபடல்

ஏட்டைத் தொடநினைக்கும் ஏழைச் சிறுவனுக்குக்

கோட்டைத் தடுக்குமே கோரப்பசி - ஓட்டைச்

சுவர்வழிப் பார்க்கும் சுடரொளி வாழ்வை

எரிக்குமே ஏழ்மை இருள்.

5. உறக்கம் தொலைதல்

பாயின்றித் தரையில் படுத்தே கிடக்கின்ற

சேயின் பசியறியாச் செல்வந்தர் - போயினரே

நித்திரை இன்றி நிலைகுலைந்து வாடுமே

சித்திரப் பாவை உடல்.

6. சொல்லொணாத் துயரம்

சொல்லத் தெரியாது மெல்லவே கொன்றிடும்

அல்லல் வறுமையின் ஆற்றாமை - மெல்லவே

எலும்பைத் துளைக்கும் எரிகின்ற தீயாய்

வருத்துமே வாழ்வைத் தின்று.

7. விருந்தோம்பல் இயலாமை

விருந்தினர் வந்தால் விழிநீர் பெருகும்

அருந்த உணவின்றி அஞ்சி - பெருந்தவம்

செய்தும் பலனின்றிச் சிந்தை கலங்குமே

நொந்து வறுமையின் நோய்.

8. உழைப்பின் பயனின்மை

முதுகு வளையவே மூட்டை சுமந்தும்

மதுகரம் சேராத மாண்பு - அதுவும்

வறுமைப் பேயினால் வாழ்வு சிதைந்து

வெறுமையாய்ப் போன விதி.

9. நற்பண்புகள் நலிதல்

ஈதல் இசைபட வாழ்தல் இயலாது

தீது புகுந்து சிதைக்குமே - காதல்

அன்பு அறமெல்லாம் அற்றே ஒழியுமே

வன்பு வறுமை வரின்.

10. இறைவனிடம் முறையீடு

படைத்தவன் எங்கே பதுங்கிக் கிடந்தான்?

புடைக்கும் பசியால் புலம்ப - தடையின்றி

ஆளும் வறுமையால் ஆவி துடிக்கிறதே

வாழும் வழியொன்றும் வாய்.

கருத்துகள் இல்லை: