6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 5 டிசம்பர், 2025

முருக வெறியாட்டும் கேரள தெய்யமும் - முனைவர் பீ. பெரியசாமி

 

முருக வெறியாட்டும் கேரள தெய்யமும்

Muruga Veriyattu and Kerala Theyyam

முனைவர் பீ. பெரியசாமி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி, திருவண்ணாமலை- 632317,

மின்னஞ்சல்:periyaswamydeva@gmail.com,

https://orcid.org/0000-0002-7395-9699.

 

Dr. B. Periyaswamy

Assistant Professor, Department of Tamil

Dr. MGR Chockalingam Arts College

Arni, Thiruvannmalai – 632317, Tamil Nadu, India

MAIL ID: periyaswamydeva@gmail.com

https://orcid.org/0000-0002-7395-9699.

 

ஆய்வுச்சுருக்கம்

முருகன் என்பவன் தமிழர் பண்பாட்டின் வாயிலாக உருவான தத்துவக் கடவுள். முருகன் காதலுக்கும் போருக்குமானவன். குறிஞ்சி நிலத் தலைவன். தமிழரின் தலைசிறந்த தெய்வம். வெறியாட்டு எனும் மரபு வழிபாட்டிற்கு உரியவன். ஆதித்தமிழரால் வழிபட்டு வந்தவன். சங்க இலக்கியங்களின் வழி அறியப்படக் கூடியவன். ஆட்டை பலியாகக் கொண்டவன். பிற்காலத்தில் இந்துத்துவாவின் வருகையால் சைவனாக்கப்பட்டவன். வள்ளியின் கணவன். இவனைக் கேரளத்தில் தெய்யம் நடத்தியும், ஆந்திராவில் எக்கேடம் நடத்தியும், கருநாடகத்தில் கோலா நடத்தியும், இலங்கையில் கூத்து நடத்தியும் வழிபட்டு வருகின்றனர். இவை அனைத்தும் வெறியாட்டின் திரிந்த வழிபாட்டு முறையே என்பது இவ்வாய்வின் வழி அறியப்பட்டது.

Abstract

Murugan is a philosophical deity who emerged through the unique culture of the Tamils. He is the god of both love and war, and the Lord of the Kurinji (mountainous) landscape. He is the preeminent deity of the Tamils, associated with the traditional ritual worship known as Veriyattu, and was worshipped by the ancient Tamils. His nature and history are traced through Sangam literature. Originally a deity who accepted goat sacrifices, he was later Saivized (integrated into the Shaivite tradition) following the advent of Hindutva influence. He is the husband of Valli. Today, he is worshipped through Theyyam in Kerala, Ekkedam in Andhra Pradesh, Kola in Karnataka, and Koothu in Sri Lanka. This research concludes that all these practices are evolved variations of the original Veriyattu worship.

முக்கியச்சொற்கள்

முருகன், வெறியாட்டு, தெய்யம், வழிபாடு, தமிழ்க் கடவுள்

Keywords

Murugan, Veriyattu, Theyyam, worship, Tamil God

முன்னுரை

முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.

வெறியாட்டு

வேலன் என்பவன் முருகனுக்கு வெறியாட்டு நடத்திய மரபினன். இவர்கள் இன்றும் கேரளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதை, வேலன் வழிபாட்டு மரபினராக விளங்கும் வேலன் சாதியினர் இன்று கேரளத்தில் தான் உள்ளனர். (தமிழகப் பழங்குடிகள், .19) என்ற பக்தவத்சல பாரதியின் கூற்றுவழி அறிய முடிகின்றது.

 முருகன் ஆர் அணங்குஎன்றலின், அது செத்து, 

ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,

பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்

பண்டையின் சிறக்க என் மகட்குஎனப் பரைஇ,

கூடு கொள் இன் இயம் கறங்கக் களன் இழைத்து,

ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 

வெண்போழ் கடம்பொடு சூடி, இன் சீர்

ஐது அமை பாணி இரீஇக், கை பெயராச்

செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்

வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்

பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்   (அகம்.98)

தலைவி ஒருத்தி தலைவனைப் பிரிந்து வருந்தி இருக்க, அதனை அறியாது முதுபெண்டிர் முருகனால் இவளுக்கு நோய் உண்டாயிற்று என்று கூறியதை நம்பி, ஓவியம் போன்ற, சிறந்த தொழில் திறத்தால் புனையப்பட்ட நல்ல மனையில் பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்பெறும் சிறந்த அழகானது முன்பு போல் சிறப்புறட்டும் என் மகளுக்கு எனத் தெய்வத்தைத் தொழுது போற்றி ஒன்றாய்ச் சேர்ந்த பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, வெறியாடும் களத்தை அமைத்து ஆடுவதற்கேற்ற அழகுசெய்த அகன்ற பெரிய பந்தலில்வெண்மையான பனந்தோட்டினைக் கடம்பமலருடன் சூடி, கேட்பதற்கினிய‌ பாட்டினை மெலிதாக அமைந்த‌ தாள‌த்தோடே கூட்டி, கையுயர்த்திக் கூப்பி முருகக்கடவுளின் பெரும் புகழினை ஏற்றிப்புகழ்ந்து, வேலன், வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்ல‌வ‌னாலே ஆட்டப்ப‌டுகின்ற‌ பொறி அமைக்கப்பட்ட பாவையைப் போல ஆடுவதை விரும்பினர் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கின்றது. இது, சங்ககால மக்களின் முருகன் குறித்த வழிபாட்டு மரபாக இருந்துள்ளது என்பதை நம்மால் அறிய முடிகின்றது.

தெய்யம்

தெய்யம் என்பது தெய்வம் ஏறிய ஆட்டமாகும். இது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதியிலிருந்து வைகாசி மாதம் வரை நீண்டிருக்கும் 7 மாத காலம். அக்டோபர் முதல் மே மாதம் வரை கேரளத்தில் நடத்தப்படுகின்றது. இதனை, தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு நடனக் கலையாகும். கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒரு நடன வகை. தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப்படும் வேண்டுதலாக இதனை ஆடுவர். (அறிவோம் கேரளத்தை, .182)  இந்த ஆட்டக்கலை "தெய்யாட்டம்" எனவும் தெய்யத்தின் வேடத்தை "தெய்யக்கோலம்" என்றும் வழங்குகிறார்கள். தெய்வம் என்ற சொல்லில் இருந்தே தெய்யம் என்பது பிறந்திருக்கிறது. இறைவனே ஆடுகின்ற தெய்வீக நடனமாக இது கொள்ளப்படுகின்றது.

தெய்யம் ஆடும் முறை

தெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் பச்சைப் பனை ஓலைகளை ஆடையாக உடுத்தியும், பித்தளை ஆபரணங்களை உடலெங்கும் அணிந்து கொண்டும், அச்சமூட்டும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொண்டும், மிகப்பெரிய தலைக்கவசங்களைப் பொருத்திக் கொண்டும் ஆடுவர். தெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் தெய்வமே தம்மை ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் ஆடுவர். ஆட்டத்தின் போது ஒரு அசரீரியாக, அருள்வாக்காக தெய்வம் பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாகவும், தெய்வம் ஆசி வழங்குவதாகவும் தெரிவிப்பார்கள்.

தெய்யத்தின் தோற்றம்

கேரளத்தில் தெய்யம் என்பது கடவுள் நேரடியாக வந்து வரம் தரும் ஆட்டமாக, கலையாகப் பார்க்கப்படுகின்றது. இதனை,

தெய்யம் என்னும் பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான பயத்தை உண்டாக்கி அதன்பின் அந்த தோற்றத்தை கையெழுத்து கும்பிடும் பக்தியையும் உண்டாக்கும் அபூர்வ வழிபாட்டு நடனக்கலையின் வடிவத்தை நிகழ்த்துபவர் முதலில் தான் ஏற்றுக்கொள்ள போகும் தெய்வத்தின் சிறப்புகளைப் பற்றி, சக்தியை பற்றி, அந்த தெய்வம் சம்பந்தப்பட்ட கதைகளைப் பற்றி பாடி, அந்த தெய்வம் தன் உடலில் புகுந்து தனக்கு அருள் புரிய வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்து பாடுவார். இந்த சந்தர்ப்பத்தில் அதிக ஒப்பனையோ, குறிப்பிட்ட ஆடை அலங்காரங்களோ இருக்காது. ஒரு சிகப்பு நிற துணியை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டிருப்பார். இதனை தோட்டம்பாட்டு என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் அதிக அலங்காரம் இல்லாமல் சிறிது நேரம் நடனமாடியும் காண்பிப்பார். இதனை வேலனாட்டம் என்கிறார்கள். (கேரளத்து கோவில் கலைகள், பக். 38 -39)

இக்கலை வெறியாட்டோடு தொடர்புடையது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இன்றும் இக்கலையை வேலனாட்டம் என்று வழங்கப்படுகின்றது என்பது கவனிக்க வேண்டிதாக அமைகின்றது.

தெய்யம் நிகழ்த்துவோர்

தெய்யம் எனும் இக்கலையை நிகழ்த்துவார் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களே ஆவர். அதிலும் குறிப்பாக வேலன் சமூகத்தினர் நடத்தி வருகின்றனர் என்பதை, இந்த தெய்யத்தை நிகழ்த்துபவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த இவர்களின் பெரும்பாலோர் வேலன், வண்ணான், மலையன், மயிலன், புலையன், வெட்டுவன், கொப்பலான் பிரிவை சார்ந்தவர்கள்.  (கேரளத்து கோவில் கலைகள்,.40) என்ற கமலநாதன் கூற்றின்வழி அறிய முடிகின்றது. இந்த வேலன் சமூகத்தினரே வெறியாட்டு நிகழ்த்தினர் எனச் சங்க இலக்கியம் கூறுகின்றது. இதனை, தெய்யத்தின் துவக்க புள்ளிகள் வரலாற்றின் அடர்ந்த பனி மூட்டத்தில் மறைந்து விட்டன. ஆனால் அதன் சில கூறுகள் சங்க காலங்களில் காணக் கிடைக்கின்றது. குறிஞ்சி நிலத்தில் மக்களின் பிணியையும், துயரத்தையும் போக்க மலை தெய்வமான முருகன், ஒருவர் உடலில் இறங்கி ஆடும் ஆட்டத்தை வேலன் வெறியாட்டம் என்ற பெயரோடு அக்காலத்தில் அறியப்பட்டிருந்தது. (தெய்யம்மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்) என்பதிலிருந்து தெய்யத்தின் துவக்கம் வேலன் வெறியாட்டே என்பதை அறிய முடிகின்றது.

தெய்யம் ஆசீர்வதித்தல்வெறாட்டில் வேலன் ஆசீர்வதித்தல்

வேலன் வெறியாட்டிலும் தெய்யத்திலும் மக்களை ஆசீர்வாதம் செய்தான் அதனால் மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டனர் என்பதை, ஒரு தாய் தன் மகள் காதல் நோயினால் வாடி துன்புற்ற போது ஏதோ துர்தேவதைகளின் தாக்கத்தினால் அவள் அவ்வாறு இருக்கிறார் என்று கருதி வேலன் என்னும் இனத்தைச் சார்ந்த ஒருவனைக் கூப்பிட்டு அவளது நோயைத் தீர்த்து வைக்குமாறு கூறிய போது, அந்த வேலன் தனது உடம்பில் சில அலங்காரங்களைச் செய்து கொண்டு வீட்டின் முன்பு கோலமிட்டு ஒரு ஆட்டையும் பலியாக கொடுத்து முருகனை நினைத்து பாடி வேலன் வெறியாட்டம் எனும் நடனம் ஆடி இறுதியில் அந்த பெண்ணை  ஆசீர்வதித்த போது அவளின் நோய் நீங்குதாக கூறப்படுகிறது. (கேரளத்து கோவில் கலைகள், பக். 41 -42)

பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு

சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி

வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய (குறுந்.362)

பல நிறங்களையுடைய,  சிலவகையான  சோற்றையுடைய பலியோடு,  சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இத்தலைவியினது மணமுள்ள நெற்றியைத் தடவி,  முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயானால் இவளது நோய் நீக்குமா எனத் தோழி கேட்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது. மேலும்,

வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்

செந்நெல் வான்பொரி சிதறி யன்ன. (குறுந்.53)

வேலன் (வெறியாட்டு நடத்துபவன்) அழகாக அமைத்த வெறியாட்டு நடைபெறும் இடத்தில் செந்நெல்லின் வெண்ணிறமான பொரி சிதறி கிடந்தது என்கிறது குறுந்தொகை.

இதேபோல், ஆட்டத்தின் முடிவில் பக்தர்களுக்கு மஞ்சள் பொடியும் அரிசியும் கலந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கிறார் தெய்யம் நிகழ்த்தியவர். இந்த தெய்யக் கலை வடிவம், சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப் படையுடன் நெருங்கிய தொடர்புடையது என்கிறார் முனைவர் கே கே என் குரூப் என்னும் ஆராய்ச்சியாளர். அதில் வேலன் என்னும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது . (கேரளத்து கோவில் கலைகள், .41) மேற்கூறிய தகவலின்படி ஆய்ந்து நோக்கின் சங்ககால வெறியாடலே பிற்கால தெய்யம் எனும் கலையாக கேரளத்தில் நிலைபெற்றுள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

சங்க காலத்தில் இது நிகழ்ந்த இடம் எரிமலை என்று கூறப்பட்டுள்ளது. தற்சமயம் அந்த இடம் கேரளத்தில் கண்ணூர் எனும் மாவட்டத்தில் இருக்கிறது அங்குள்ள பையலூர் எனும் ஊர் தெய்யம் ஆட்டத்திற்கு மிகவும் பிரசித்தம் ஏராளமான நடன கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள்.  இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தம் மிகவும் விசேஷமானது. மலையாளத்தில் பையன் என்றால் சிறுவன் என்று அர்த்தம். இங்கே அது முருகப்பெருமானைக் குறிக்கிறது என்றும் ஊர் என்பது இடத்தை குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். (கேரளத்து கோவில் கலைகள்,.42)

என்று கமலநாதன் கூறுவதன்வழி முருகன் கோயின் கொண்ட இடமாதலாலே அவ்வூர் பையலூர் எனப் பெயர்ப்பெற்றது என்பதையும் இது முருக வழிபாட்டின் நீட்சியே தெய்யம் என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.

தெய்யம் சங்க மரபோடு தொடர்புடையது என்பதை, வட மலபாரின் நிலப்பகுதிக்கு குலத்தநாடு என்று பெயர் இது பரம்பரையான நாட்டு பண்பாட்டிற்கும் கலைகளுக்கும் பெயர் பெற்றது தெய்யாட்டம் (தேவராட்டம்) என்ற ஆட்டம் இங்கே ஆடப்படுகிறது சங்ககாலத்து சடங்கு மரபுகளை இவ்வாட்டம் தன்வயப்படுத்தி உள்ளது. (பொத்தன் தெய்யம், .21) என இராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், தெய்யம் எனும் கலையில் கடவுள் ஏறிய கலைஞன் மக்களுக்கு அருளாசி வழங்குவது போல வெறியாட்டில் முருகன் வேலன் மீதேறி அருள் வழங்குகினான் என்பதை, கூத்தாட்டுக்கள் நிகழும் பொழுது முருகன் வழிபடுகின்ற ஒருவரில் வெளிப்படுவான். அவன் எவரிலேனும் இவ்வாறு வெளிப்பட்டுத் தான் கூறிய வேண்டியவற்றைக் கூறுவான். தமிழ் நாட்டிலும் ஈழத்து வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் இவ்வாறு தெய்வங்கள் வெளிப்பட்டுத் தோன்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் இருக்கின்றது. (தமிழர் சால்பு, .81) என்று வித்யானந்தன் கூறுவதிலிருந்து வேலனின் வெறியாட்டும் தெய்யம் கலையும் ஒன்றே என்பதை அறிய முடிகின்றது.

வெறியாட்டும் தென் இந்திய கலைகளும்

பண்டைய வேலன் வெறியாட்டு என்பது தமிழகத்தில் மட்டுமல்லாது தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் இது வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. இதனை,

பண்டைய வேலன் வெறியாட்டு மரபின் தொடர்ச்சியினைத் தமிழக மரபிலிருந்து காண்பது ஒருநிலை என்றாலும், பழந்தமிழகத்தில் இத்தொல் மரபானது, அன்றைய அகண்ட தமிழகமாக விளங்கிய ஆதித் தென்னிந்தியாவின் பல இடங்களில் பரவியிருந்த்து போன்று இன்றும் அவ்விடங்களில் காணமுடிகின்றது மறுநிலையில் கவனிக்க வேண்டியுள்ளது. சங்ககால இனக்குழு சமூகத்தில் காணப்பட்ட வேலன் வெறியாட்டானது இன்று கேரளத்தில்தெய்யாட்டம்எனவும், ஆந்திரத்தில்எக்கேடம்எனவும், தென் கருநாடகத்தில்கோலாஎனவும் வழங்கப் பெறுகிறது. தெய்வமேறி ஆடும் இந்த வெறியாட்டு வடிவங்கள் யாவும் தொன்றுதொட்டு வரும் ஆதி வெறியாட்டின் தொடர்ச்சியாகவே அமைகின்றன. (பாணர் இனவரைவியல், .220)

என்பதிலிருந்து கேரளாவில் தெய்யம்(தெய்யாட்டம்) எனவும், ஆந்திராவில் எக்கேடம் எனவும் கருநாடகத்தில் கோலா எனவும் வெறியாட்டு அழைக்கப்படுவதை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

முடிவுரை

வேலனே வெறியாட்டும், தெய்யமும் நடத்தக் கூடியவன். இரண்டிலும் மக்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இரண்டிலும் பலியிடும் வழக்கம் உள்ளது. இரண்டும் தெய்வம் மனிதன் மீதேறிய ஆடல். இரண்டிலும் முருகன் பேசப்படுகின்றான். இது இங்கு மட்டுமல்லாமல் தென்னியந்தியாவின் பிற மாநிலங்களிலும் இலங்கையிலும் வழக்கத்தில் உள்ளது. எனவே தெய்யம் என்பது வெறியாட்டோடு தொடர்புடையது. அதோபோல், எக்கேடம், கோலா, இலங்கையின் கூத்தாட்டு போன்றவை வெறியாட்டின் திரிந்த வடிவங்களேயாகும். தமிழரின் ஆதிக்குடிகளின் வழிபாடான வெறியாட்டு என்பது அவர்கள் வாழ்ந்த வாழுகின்ற இடங்களில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு மரபாக வழிபட்டு வருகின்றனர் என்பதே இவ்வாய்வின் முடிவாகும்.

துணைநூற்பட்டியல்

1.    இராமச்சந்திரன். நா.(பதி.), பொத்தன் தெய்யம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2011.

2.    கமலநாதன், கேரளத்து கோவில் கலைகள், சாரு பிரபா பப்ளிகேஷன், சென்னை 2006.

3.    செயபால். இரா., (உரை), அகநானூறு மூலமும் உரையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.

4.    நாகராசன். வி (உரை)., குறுந்தொகை மூலமும் உரையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.

5.    பக்தவத்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், அடையாளம் வெளியீடு, திருச்சி, 2007.

6.    பக்தவத்சலபாரதி, பாணர் இனவரைவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,2012.

7.    ரகுராமன், தெய்யம்மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் (https://solvanam.com/2023/04/23/)

8.    வித்யானந்தன். சு., தமிழர் சால்பு, குமரன் புத்தக இல்லம், சென்னை,2014.

9.    வையவன், அறிவோம் கேரளத்தை, ஐக்கியா பிரசுரம், சென்னை, 1999.

References

1.      Ramachandran, N. (Editor), Pothan Theyyam, New Century Book House, Chennai, 2011.

2.      Kamalanathan, Keralathu Kovil Kalaigal (Temple Arts of Kerala), Charu Prabha Publication, Chennai, 2006.

3.      Jayapal, R. (Commentary), Agananuru: Original Text and Commentary, New Century Book House, Chennai, 2007.

4.      Nagarajan, V. (Commentary), Kurunthogai: Original Text and Commentary, New Century Book House, Chennai, 2007.

5.      Bhakthavatsala Bharathi, Tamizhaga Pazhangudigal (Tribes of Tamil Nadu), Adayalam Publications, Trichy, 2007.

6.      Bhakthavatsala Bharathi, Paanar Inavaraiviyal (Ethnography of the Paanars), International Institute of Tamil Studies, Chennai, 2012.

7.      Raghuraman, Theyyam – Manithan Kadavulaga Marum Aattam (Theyyam – The Dance Where Man Becomes God), Solvanam.com, April 23, 2023.

8.      Vidhyanandan, S., Tamizhar Salbu (The Culture of Tamils), Kumaran Book House, Chennai, 2014.

9.      Vaiyavan, Arivom Keralathai (Let Us Know Kerala), Aikkiya Publications, Chennai, 1999.

கருத்துகள் இல்லை: