6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

சைவ சமயத்தில் உளவிழிப்புணர்வு பற்றிய செய்திகள் (Mindfulness) - பா. ஜேசினி மதுஷிகா

 

சைவ சமயத்தில் உளவிழிப்புணர்வு பற்றிய செய்திகள் (Mindfulness)

பா. ஜேசினி மதுஷிகா BA (Hons), Hindu Civilization Spl.

மனித வாழ்வின் உண்மையான நோக்கம் மனிதன் எவ்வளவு பொருள் ஈட்டி எவ்வளவு வசதியாக வாழ்கின்றான் என்பதில் இல்லை. மனிதன் எவ்வளவு தேக ஆரோக்கியத்துடனும், மன உறுதியுடனும் வாழ்கின்றான் என்பதே. தன்னிடமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒருவன் இழந்த பின்பும் அவன் மன உறுதியுடனும் தேக ஆரோக்கியத்துடனும் உறுதியாக வாழ்வானாயின் அவனது நிலை மேன்மேலும் உயருமே தவிரத் தாழ்வடையாது.

ஆயினும் மனிதனானவன் தனக்குப் பிரச்சினை ஏற்படும் பொழுது அப்பிரச்சினைக்கான தீர்வினைத் தேடாமல் நடந்ததையே நினைத்துத் தன்னை வருத்திக் கொண்டு வேதனையில் வாடுவதைக் காண முடிகின்றது. பிரச்சினைக்குரிய தீர்வு காண இயலாது தன் நிலையை மழுங்கச் செய்வது நிலையற்ற மனம். அது தன் நிலையை உணரவிடாமல் தடுக்கின்றது. இதனால் மன உளைச்சலுக்கு மனிதன் உள்ளாக்கப்படுகின்றான்.

இம்மனத்தை எவ்வாறு கட்டுப்படுத்த இயலும் என்பதை அறிந்த நம் முன்னோர் பக்தி அடிப்படையில் ஓர் உணர்வு நிலையாதலால் அது மனித மனங்களுடன் நேரடித் தொடர்பு உடையதாகத் விளங்குகின்றது என்பதனால் சைவ வழிபாட்டோடு இவ்வுளவிழிப்புணர்வு முறையினை உள்ளடக் கினர். அந்த வகையில் சைவ சமயத்தில் உளவிழிப்புணர்வு பற்றிய செய்திகள் (Mindfulness) எவ்வாறு கூறப்பட்டுள்ளது, உளவிழிப்புணர்வை அடைவதற்கான வழிகள் யாவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உளவிழிப்புணர்வு (Mindfulness) என்பது நம்மைப் பற்றியும், நம்மில் ஏற்படும் உணர்ச்சிகள், சிந்தனைகள், நம்மைச் சுற்றியுள்ளவற்றின் எண்ணங்கள் போன்றவற்றைத் திட்டமிட்ட முறையில் கவனிக்கும் வழியாகும். இம்முறையானது எம்மைச் சுற்றி நடப்பவற்றை எவ்விதத் தீர்ப்பும் இடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுத் தருகின்ற நுட்ப முறையாகவும் இது காணப்படுகின்றது. மனச்சோர்வு, மனப்பதற்றம் அதிகம் உள்ளவர்கள் அல்லது நடந்து முடிந்தவற்றையே அல்லது நடக்க இருப்பதைப் பற்றியோ அதிகம் கவலைப்படுவார்கள். இவர்கள் தற்போதைய தருணத்தில் அதிகம் கவனம் செலுத்த மாட்டார்கள். உளவிழிப்புணர்வு (Mindfulness) என்பது மனத்தினைத் தற்போதைய தருணத்திற்கு ஒருமைப்படுத்த முயற்சி செய்வதால் மனம் அமைதி அடையும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

மனதிலே பிரச்சினை உள்ளவர்களுக்குக் கவலை, பயம், எதிர்மறை எண்ணங்கள் இயல்பாகவே தோன்றும். அவற்றைக்கட்டுப்படுத்த எத்தனிக்காமல் அதனைத் தன் போக்கில் போகவிட்டு மனத்தினைத் தற்போதைய நிலையில் கவனம் செலுத்த இவ்வுளவிழிப்புணர்வு (Mindfulness) உதவி செய்கின்றது.

அண்மைக்காலங்களில் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் உளச் சிகிச்சைகளில் ஒன்றாகத்தான் இந்த உளவிழிப்புணர்வு (Mindfulness) காணப்படுகின்றது. இச் சிகிச்சை முறையினை எல்லா உளவைத்தியர்களும், உளவளத்துணையாளர்களும், உளவியலாளர்களும் தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். மனப்பதற்றம், அதிகக் கவலை உள்ளவர்களுக்கும் (Depression), போதைப் பொருட்களுக்கு அதிக அடிமையானவர்களுக்கும், கல்வி சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

உளவிழிப்புணர்வு (Mindfulness) எனும் சூட்சுமத்தை முன்னமே அறிந்த நம் முன்னோர் அதை ஆன்மீகத்திற்குள் அடக்கி அதற்கான தீர்வினை வழங்கினர். மனதினைக்கட்டுப்படுத்த இறைவனிடம் முழுமையாக ஈடுபடுத்தி, சிவபெருமானை உணர்வதன் மூலம் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றனர். தியானம், மந்திரங்கள், பாடல்கள் மற்றும் திருமுறைகள் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு, தன்னலமற்ற நிலையை அடைந்து, இறைவனோடு ஒன்றிப்போகும் அனுபவத்தைப் பெறுவதே சைவ சமயத்தின் உளவிழிப்புணர்வாகக் காணப்பட்டது. தற்காலத்தில் மனநோயாளி என அடையாளங்காணப்பட்டு வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெறும் நபர், அன்று தனக்குத் தேவையான உளவிழிப்புணர்வு முறைகளை வழிபாடு, அனுட்டானங்கள் மூலம் தன்னை அறியாமலேயே பெற்றுக்கொண்டான்.

சைவ சமயத்தில் உளவிழிப்புணர்வை அடைவதற்கான வழிகள் யாவை என நோக்கின்:

1. தியானம்: மனதை அமைதிப்படுத்தி இறைச் சிந்தனையில் ஈடுபடுத்தி மனதின் எல்லைகளைத் தாண்டி இறை அனுபவத்தைப் பெறலாம். தற்போதைய தருணத்தில் கவனத்தைச் செலுத்தும் போது தியானத்தை மேற்கொள்பவர் கேட்கின்ற சத்தங்கள், நுகர்கின்ற வாசனைகள், உணர்கின்ற சூழல் வெப்பம், காற்றின் தன்மை என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். கவனம் செலுத்திய பின் "இப்பொழுது நான் தியானத்திற்காக அமர்ந்துள்ளேன், எனது சுவாசத்தை நான் செய்யும் காரியத்தில் ஒருமுகப்படுத்தப் போகின்றேன்" என்று கவனம் செலுத்த வேண்டும். இதனையே “Being Mode” என்கிறோம். இறந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திக்காமல் தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதைக் குறிக்கின்றது. இதனாலேயே சைவ ஆலயங்களில் தியான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இராவணன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதால் பல காவியங்களில் அவர் தியானம் செய்து இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இராவணன் மேலது நீறுஎன்று குறிப்பிட்டு இராவணன் சிவபக்தன் என்று உணர்த்தியுள்ளார். புராண இதிகாச காலங்களிலேயே நிலைதடுமாறும் மனதை, ஒருநிலைப்படுத்த தியானம் மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு இராவணன் சிறந்த உதாரணமாகும்.

2. மந்திரங்கள்: ஓம் நமசிவாயபோன்ற சைவ மந்திரங்களை ஓதுவதன் மூலம் மனதின் கவனத்தை இறைவனிடம் ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சக்தியை வளர்த்தல். மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது சிந்தனையில் குவியப்படுத்த முடியும். உதாரணமாக:- நாவுக்கரசர் பாடிய குனித்த புருவமும்...” (நான்காம் திருமுறை).

3. பக்திப் பாடல்கள்: சைவ நாயன்மார்களின் பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் இறைவனை மையமாகக் கொண்ட ஆழ்ந்த பக்தியையும், தன்னலமற்ற அன்பையும் வலியுறுத்துகின்றன. இப்பாடல்கள், மனதை ஒருமுகப்படுத்தி இறைச் சிந்தனையில் ஆழ்ந்து சோர்வின்றி வாழும் வழிகளை எடுத்துரைக்கின்றன. நாயன்மார்கள் தங்கள் பாடல்களின் வழியாக இறைவனைப் பற்றிச் சிந்திக்கவும், அவரைத் தியானிக்கவும் கற்பிக்கின்றார்கள். இது மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறையாகும்.

நாயன்மார்கள் பக்தி மற்றும் அன்பு வழியில் இறைவனை அணுகுவதைப் பற்றிப் பாடுகிறார்கள். இது அகத்தூய்மையையும், அமைதியையும் வளர்க்கின்றது. இறைச் சிந்தனை, இறை பக்தியின் ஒரு வடிவம். இறைச் சிந்தனையில் ஒன்றி இருப்பது தற்போதைய சூழலில் முழுமையாக மனதைச் செலுத்துவதோடு, இறைவனோடு இணைக்கும் அனுபவத்தைத் தருகிறது. இதனாலேயே ஆலயங்களில் பக்திப் பாடல்கள் பாடப்படுகின்றது. இதைக் கேட்கும் பக்த அடியார்களின் மனம் ஒருநிலைப்படுத்தப்படுகின்றது.

4. ஆன்மீக நூல்களைப் படித்தல்: பன்னிரு திருமுறை, பதினான்கு சாத்திரங்கள், சிவபுராணம் போன்ற சைவ சமய நூல்களில் உள்ள தத்துவங்களையும், நெறிமுறைகளையும் அறிந்து சித்தாந்த அறிவைப் பெறுவதன் மூலம் உளவிழிப்புணர்வை அடையலாம். இதனாலேயே அக்காலத்தில் அரண்மனைகளில், குருகுலத்தில் குருக்களால் மாணவர்களுக்கு இவை போதிக்கப்பட்டன. அரச வம்சத்தவர் இவற்றை முறையாகக் கற்றதனாலேயே நிறைந்த அறிவோடும், தெளிந்த மனத்தோடும் அரசாட்சி செய்ய அரச கடமைகளை ஆற்ற முடிந்தது.

5. சிவ வழிபாட்டில் ஈடுபடுதல்: சிவ வழிபாட்டில் சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யும் போது நமது கவனம் அந்தப் பொருட்களின் மீதும், சிவனின் மீதும் இருக்கும். அப்போது எமது மனம் ஒருநிலைப்படுத்தப்படும். மேலும் கொடிமரத்தை வணங்கி, நந்தி பகவானை வணங்கி, பின் மூலவரான சிவனை வணங்கும் போது முழு கவனமும் சிவன் மேல் இருக்கும். மனம் ஒரு இடத்தில் ஒருநிலைப்படுத்தப்படும் போது மனதில் உள்ள கவலைகள் மற்றும் குழப்பங்கள் குறையும்; மன அமைதியும், தெளிவும் ஏற்படும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு கிடைக்கும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும்என்ற கூற்றின்படி எமது உடலையும் மனத்தையும் சிறப்பாக ஏதும் குறையின்றி வைத்திருப்பின் எமது இலக்குகளை நாம் விரைவில் அடையலாம். உடம்பே கோயில் ஊண் அமிர்தம்என்றபடி கோயிலாக உடலை வைத்து மனமாகிய கர்ப்பகிரகத்தில் இறைவனை நிலைநிறுத்தி உத்தமமான வாழ்க்கை வாழ்வதே மனித குலத்தின் நோக்கமாக அமைய வேண்டும்.

திருமூலர் திருமந்திரத்தில்:

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே

எமது உடம்பை இழுக்கென எண்ணுவதைத் தவிர்த்து எங்கும் நிறைந்த பரம்பொருள் என்னுள்ளேயும் நிறைந்துள்ளார் எனக் கூறியுள்ளார். மனதைத் தெய்வம் வாழும் இடமாக்க எமது முன்னோர் காட்டிய வழிதான் சைவ சமயம். சைவ சமயத்தில் உள்ள வழிபாட்டு முறை, அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், தியானம், திருமுறை ஓதுதல் முதலியன வெறும் வேடிக்கை செயல்பாடுகள் அல்ல. ஒவ்வொரு விடயமும் அறிவியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்களாகும். இவற்றினை ஆழமாக உற்றுநோக்கும் போது சைவத்தின் மகிமையை அறியலாம்.

இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகள் முதல் பெரியோர் வரை உளநோய்களால் அதிகக் கவலைக்கு (Depression) உள்ளாகின்றனர். காரணம் நவீனமயப்படுத்தப்படல், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) போன்றவற்றின் தாக்கம் மனிதனைச் சிந்திக்க, தனது நிலையை உணரவிடாமல் தடுக்கின்றது. அறிவியல் வளர்ந்தாலும் அறிவியலின் ஆணிவேர் சைவ சமயத்திலேயே ஆரம்பமாகியது. சைவ சமயத்தின் போதனைகளை முறையாகக் கைக்கொள்வோமாயின் மனிதராகப் பிறப்பெடுத்த நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ முடியும். நாளைய தலைமுறையினரும் உளநோய்களுக்கு உள்ளாகாது சிறந்த தேக ஆரோக்கியம் பெற்றவர்களாக வாழ்வர்.

உசாத்துணைகள்:

1.   கைலாசபதி. க., (1999), “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்”, (3ஆம் பதிப்பு), குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.

2.   ராமசுப்பிரமணியம். வ. த., (1998), “பன்னிரு திருமுறைகள்”, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

3.   ரகுபரன். க., பிரசாந்தன். ஸ்ரீ., (2014), “மூவர் தமிழும் சைவநெறியும்”, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

கருத்துகள் இல்லை: