6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

முருகன் வரலாறு (புதுக்கவிதை வடிவில்) - முனைவர் பீ. பெரியசாமி

 

முருகன் வரலாறு

(புதுக்கவிதை வடிவில்)

 

காப்பு:

ஞானத் தமிழ் வேண்டி

வாக்கினில் வந்து அமர்வாய்...

என் வார்த்தை எனும்

வேலினைச் செதுக்குவாய்!

ஈசன் மகனே...

முத்தமிழ்க் கோவே...

உன் சரிதம் எழுத

உன் அருள் மை தந்து உதவுவாய்!

 

கற்பனைத் தேரில் நான் ஏறவில்லை,

உன் கருணைத் தேரில் ஏறி வருகிறேன்...

வரலாற்றுப் பக்கங்களில்

நான் மையினை ஊற்றவில்லை,

உன் வேல் தந்த ஒளியை ஊற்றுகிறேன்!

 

தினைப்புனத்துக் காதலையும்

திருச்செந்தூர் வீரத்தையும்

சரவணப் பொய்கையின் தூய்மையையும்  

நான் பிழையின்றிப் பாட...

என் நாவினில் நடமிடுவாய்!

 

கவிதை என்னும் காவடியைச் சுமக்கிறேன்,

அதில் பக்தி எனும் கனியை நிரப்பிக் கொடுப்பாய்...

ஆறு முகங்களின் ஆசியுடன்

அடியேன் தொடங்கும் இந்த முருக காவியம்  

உன் அருள் மழையில் நனைந்து

அகிலமெங்கும் மணம் பரப்பட்டும்!

 

ஓம் சரவணபவ!

 

மெய்ஞ்ஞானப் பிரகாசம்

மூலப் பொருளின் முளைப்பாய்

முன்வந்து நிற்கும் முழுமுதற் குருவே!

ஏட்டுக் கல்வியில் தொலைந்த என்னை

உன் 'வேல்' கொண்டு மீட்டெடுக்க வா!

 

ஆறாதாரச் சக்கரங்களின் ஊடே

ஆறுமுகமாய் நீ ஒளிரும் போது,

புலன்களின் சத்தம் அடங்கிப் போய்

புறப்படுதே ஒரு மௌனப் பேரொலி!

 

தகப்பன் சாமி நீ...

"ஓம்" எனும் பிரணவத் தழலில்

என் 'யான்' எனும் செருக்கைச் சுட்டெரித்து,

நீறு பூசிய நெற்றியில்  

அங்கே ஞானக்கனலை ஏற்றி வைத்தாய்!

 

குண்டலினி மயில் ஏறிக் குதித்து வரும்

உன் திருவருள் வேகம்...

மாயையின் திரையைக் கிழித்து,

என்னைச் சும்மா இருக்கச் சொல்லும்

சித்தாந்த வித்தை!

 

சரவணப் பொய்கையின் நீர்த்துளிகளாய்

என் சிந்தனையைத் துாய்மை செய்து,

சரண் புகுந்த சீடனுக்கு

முப்பொருள் விளக்கம் தரும்

முத்தமிழ்க் குருவே...

 

உன் மௌனமே உபதேசம்!

உன் வேலே விவேகம்!

உன் திருவடியே

நான் கண்ட முடிவில்லா முக்தி!

 

ஆறெழுத்து ஆசான்

மூச்சுக் காற்றில் கலந்துவிட்ட

ஒரு மந்திர இசை நீ!

உச்சரிக்கும் போதே

என் உள்மனக் காயங்களுக்கு

மருந்தாகும் 'சரவணபவ'.

 

'' - எனத் தொடங்குகையில்

சலனங்கள் அற்றுப் போகிறது...

'' - வில் என் ராகத்

துவேஷங்கள் எரிகிறது!

'' - வில் வழிகிறது

வற்றாத உனது பேரருள்...

'' - வில் அடங்குகிறது

வல்லமை பேசும் என் அகந்தை!

'' - வில் பறந்து போகிறது

பழ வினை தந்த பாரங்கள்...

'' - வில் முடிகிறது

பிறவிப் பெருங்கடலின் நீளம்!

 

இந்த ஆறெழுத்து...

வெறும் எழுத்துக்களின் கோர்வையல்ல,

இருளில் தவிக்கும் சீடனுக்கு

இறைவன் காட்டும் ஒளிப்பாதை!

 

பாடப்புத்தகங்கள் சொல்லாத ரகசியத்தை

உன் ஆறெழுத்து உபதேசம் சொல்கிறது...

"சரண் அடைந்துவிடு" என்பதே

நீ என் மௌனத்தில் வரைந்த

மகத்தான சூத்திரம்!  

 

அக்னிப் பிரசவம்

யுகயுகமாய்த் தவம் செய்த

இயற்கையின் ஏக்கம் தீர்க்க,

ஈசனின் நெற்றிக்கண் திறந்து கொண்டது

ஒரு நட்சத்திரப் பிரசவத்திற்காக!

 

தீப்பொறிகள் ஆறாய்...

திசை எங்கும் தெறிக்க,

தாங்க முடியாமல் தவித்த

வாயுவும் அக்னியும்

கங்கை மடியில்

அந்த ஒளிப் பிழம்பைக் கொடுத்தனர்!

 

சரவணப் பொய்கையின்

நாணல் புதர்களுக்குள்...

ஆறு பொறிகளும்

ஆறு குழந்தைகளாய் உருமாற,

அங்கே மலர்ந்தது  

ஒரு விந்தையான விடியல்!

 

கார்த்திகைப் பெண்கள்

பாலூட்டி வளர்த்த அறுவர் உடலை...

அன்னை பார்வதி

அணைத்துக் கொண்ட நொடியில்,

ஆறு முகமும் பன்னிரு கரமுமாய்

உருவானது ஒரு மகா சக்தி!

 

அவன் பிறந்தது...

அசுரர்களை அழிக்க மட்டுமல்ல,

அறிவற்ற இருளில் கிடந்த

ஆத்மாக்களுக்கு ஞான வெளிச்சம் காட்ட!

 

வானவில்லின் வர்ணங்களாய் ஆறு முகங்கள்

ஆனால் அன்பின் ஒற்றைப் புள்ளியில்

உதித்தவன் அவன்...

என் அழகுத் தமிழ்க் கடவுள்!     

 

மகா வளர்ப்பு

விண்ணிலிருந்து விழுந்த நெருப்புத் துளிகளை

மண்ணில் தாங்கியது நாணல் காடு!

அங்கே...

சரவணப் பொய்கையின்

நீர்த்துளிகள் தாலாட்டுப் பாட,

மலர்ந்தது ஒரு ஆறுமுக அதிசயம்!

 

ஈசனின் வாரிசுதான்...

இருப்பினும்,

கார்த்திகைப் பெண்களின்

அன்புப் பால் குடித்துத் தான்

அவன் வீரத்தை செதுக்கிக் கொண்டான்!

 

ஆறு தாய்கள்...

ஆறு மடிகளில் அசைந்தாலும்,

அவன் தேடியது

ஒரு தாயுமானவளின் அரவணைப்பை!

 

அன்னை பார்வதி

ஓடிவந்து அள்ளி அணைக்க...

ஆறு விம்பங்களும்

ஒரே பிம்பமாய் உருகி நின்றது

ஒரு காதல் இரசாயனமாய்!

 

விதி எழுதிய

அசுரக் கதையை

முடிக்கப் பிறந்தவனை,

பாசம் எனும் மையினால்

பக்குவமாய் வளர்த்தது

இந்த நிலம்!

 

யாவற்றுக்கும் அப்பால்

நின்ற பேரொளி...

ஒரு பெண்ணின்

ஸ்பரிசத்திற்காக குழந்தையாய்

அழுதபோது தான்

தெய்வீகம் மனிதத் தன்மையால்

முழுமை பெற்றது!  

 

போர்க்களப் புனிதன்

அவன் கையில் எடுத்தது

இரத்தம் குடிக்கும் வாள் அல்ல...

இருளைத் துளைக்கும் ஞானச் சுடர்!

 

கடல் நடுவே நின்ற

சூரபத்மன் எனும் அகந்தை

ஆயிரம் உருவங்கள் எடுத்து

அச்சுறுத்திய போது...

அவன் புன்னகையாலேயே

யுக்திகளைச் சிதைத்தான்!

 

யானையாய்,

சிங்கமாய் மாறி நின்ற மாயையை

ஒரு ஒற்றை வேலால்

உடைத்தெறிந்தான்...

அங்கே மரணங்கள் நிகழவில்லை,

மாறாக மாற்றங்கள் நிகழ்ந்தன!

 

மரம் என நின்ற அசுரனை

இரு பாதியாய் பிளந்தான்...

கோபத்தினால் அல்ல,

அவனைத் தன்னோடு

அணைத்துக் கொள்ள!

 

ஒரு பாதி மயிலாகி

அவன் வாகனமானது...

மறு பாதி சேவலாகி

அவன் வெற்றிக் கொடியானது!

 

இது வெறும் போர் அல்ல...

வெல்ல முடியாத ஒருவன்

தனக்குத் தானே

நிகழ்த்திக் கொண்ட

மனச் சுத்திகரிப்பு!

 

எதிரியையும் தன்னோடு

சேர்த்துக் கொள்ளும்

இவனது போர் அறம் தான்...

காலம் கடந்தும்

நம்மை அவன் பாதம்

பணிய வைக்கிறது!  

 

 

இந்திரனின் பரிசு

யுத்தக் களத்தின்

புழுதி அடங்கி

வெற்றிச் சங்கு முழங்கிய வேளை...

தேவர்களின் பயம் நீக்கி

வானை மீட்டெடுத்த மாபெரும் வீரன்!

 

கடமை முடிந்ததும்

காடு திரும்ப நினைக்கவில்லை அவன்...

தேவேந்திரனின் நன்றிக் கடனாய்

தேவசேனை எனும் 'தெய்வயானை'

அவன் கரம்பிடிக்கக் காத்திருந்தாள்!

 

இது வெறும் திருமணமல்ல...

அசுர இருளை அழித்த பின்

வானுலகம் கண்ட

மகா ஒளிச்சேர்க்கை!

 

திருப்பரங்குன்றத்துப் பாறைகளில்

தேவர்கள் மலர் தூவ...

ஈசனும் உமையாளும் முகம் மலர...

ஞானக் குழந்தை  

இங்கே இல்லறத்தின் தலைவனானான்!

 

அவள் - கற்பின் இலக்கணம்!

இவன் - வீரத்தின் அடையாளம்!

அழகன் முருகனின் வலப்பக்கத்து ஆசனத்தில்...

ஆதி அந்தமில்லாத் தலைவனுக்கு

அவள் சூட்டினாள் மங்கல மாலை!

 

கையில் வேலேந்தியவன்

காதல் கொண்டு கைத்தலம் பற்ற...

விண்ணுலகம் கண்டது

ஒரு சாந்தமான சரித்திரம்! 

 

சிறை உடைத்த செவ்வேள்

அவன் எறிந்த வேல்

உயிர்களைப் பறிக்கப் போகவில்லை...

உயிர்களைச் சுற்றியிருந்த

ஆணவச் சங்கிலிகளை அறுக்கப் போனது!

 

யுகங்களாய்த் தொடர்ந்த

அசுரர்களின் இருண்ட மனசாட்சிக்கு

மரணத்தால்

ஒரு விடுதலைப் பத்திரம் எழுதினான்

அந்தப் பாலன்.

 

சினம் கொண்டு வந்தவனைச்

சிதைக்க நினைக்காமல்,

சிந்தனையைச் சீர்படுத்தி...

பகைவனையும்

தன் பக்கபலமாக மாற்றிக் கொண்டான்!

 

மரம் என உறைந்து நின்ற

சூரனின் மௌனத்தைச் சிதறடித்து,

அவனை இரண்டாய் பிளந்தபோது...

வெளியேறியது ரத்தமல்ல,

ஆயிரம் காலத்து அகந்தை!

 

ஒரு பாதி மயில்...

மறு பாதி சேவல்...

எதிரியும் ஈசனின் மகனுக்கு

இப்போது தோழன்!

கொல்வது என்பது

மனித அறம்,

வென்று மீட்டெடுப்பது தான்

முருகன் காட்டிய ஞான அறம்!

 

சிறைப்பட்ட தேவர்களை மட்டுமல்ல,

தவறு செய்த அசுரர்களையும்

தன் நிழலில் அமர வைத்து

அவன் தந்தது

ஒரு பேரண்டத்தின் விடுதலை!  

 

வேடுவச்சித் தவம்

நாட்டுப்புறப் பாடலின் நடுவே

முளைத்த ஒரு காதல் காவியம் நீ!

அரண்மனையில் பிறந்தும்

தினைப்புனத்தில் காத்திருந்தாய்...

ஒரு வேடன் வருவான் என்று!

 

கிளி விரட்ட

நீ வீசிய கவண்கல்

பட்டுத் தெறித்தது...

அங்கே ஆறுமுகம் கொண்ட

அழகனின் ஆணவம்!

 

வயதான கிழவனாய் வந்து

உன் வாலிபத்தைக் கேலி செய்தான்...

யானை மிரட்டலில் பயந்து

நீ அவன் மார்பில் சாய்ந்த போது,

தினை மாவில் கலந்தது

தேவலோகத்தின் தேவாமிர்தம்!

 

இது அதிகாரத்தின் அணிவகுப்பு அல்ல...

எளிமையின் முன்னே

இறைவன் மண்டியிட்ட

அன்பின் அரங்கேற்றம்!

 

தெய்வயானை - அவனது கடமை,

வள்ளி - அவனது கற்பனை!

வேடுவக் குலத்து மகளின்

வேர்வையில் நனைந்து போனான்

வேலெடுத்த வித்தகன்!

 

வள்ளிக் கொடியைத் தழுவிய

அந்தப் பழநி மலைக் காற்று,

இன்றும் சொல்லும் ஒரு பாடம்:

"சாத்திரங்கள் கடந்தும்

சத்தியமான அன்பிற்கு

வசப்படுவான் முருகன்!"     

 

இரு துருவங்களின் ஊடல்

ஒரே சிம்மாசனத்தில்

இரண்டு துருவங்கள்...

நடுவில் அகப்பட்டுத் தவிக்கிறது

ஞான வேல்!

 

"யானை பலத்தோடு

இந்திரன் மகளாய் வந்தேன் நான்"

என்கிறாள் தெய்வயானை.

"தினைப்புனத்தில் தேனையும் மாவையும் தந்து

அவன் மனதை வென்றேன்"

என்கிறாள் வள்ளி.

 

ஒருபுறம்...

வேத மந்திரங்களும் ஆகம முறைகளும்

காவல் காக்கும் கம்பீரம்!

மறுபுறம்...

நாட்டுப்புறப் பாடல்களும் காட்டு மல்லிகையின்

வாசமும் வீசும் சுதந்திரம்!

 

"நீ முறைப்படி வந்த அரசி"

 என்கிறாள் ஒருத்தி.

"நீ அவன் உயிர்ப்பில் கலந்த உறசி"

என்கிறாள் இன்னொருத்தி.

 

வள்ளியின் காதலில்

முருகன் வேடன் ஆனான்...

தெய்வயானையின் கடமையில்

அவன் தேவசேனாதிபதி ஆனான்!

 

இருவருக்கும் இடையில்

மௌனமாய் அமர்ந்திருக்கும்

ஆறுமுகனிடம் கேட்டால் சொல்கிறான்:

"ஒருத்தி என் உழைப்பு,

இன்னொருத்தி என் ஓய்வு...

யாருடைய பூசலில் நான் தோற்றாலும்  

அது காதலுக்குக் கிடைக்கும் வெற்றி!"    

 

குறிஞ்சிப் பந்தல்

வேதங்கள் ஓதி

நடந்த வைபவமல்ல இது...

வேடுவக் குலத்தின்

வியர்வை வாசத்தில்

முடிந்துவைக்கப்பட்ட மூச்சுமுடிச்சு!

 

அகிலத்தின் தலைவன்

ஒரு அனாதையாய் வேடமிட்டு,

கிழவனாய் வந்து

கைகூப்பி நின்றது

அவள் அழகிற்காக மட்டுமல்ல...

அவளது அதிதீவிர பக்திக்காக!

 

வள்ளி - அவள் ஒரு காட்டுக்கொடி!

அந்தக் கொடி படர

ஒரு ஞான விருட்சம்

தானாகவே இறங்கி வந்தது...

தெய்வீகம் இங்கே தான்

எளிமையின் முன்னே மண்டியிட்டது!

 

தேனைத் தினைமாவோடு பிசைந்து

அவள் ஊட்டியபோது...

முருகன் உண்டது

வெறும் உணவை அல்ல,

சமூக அடுக்குகளைத்

தகர்த்தெறிந்த சமத்துவக் காதலை!

 

யானை மிரட்டலில்

அவன் மார்பில் சாய்ந்தவள்,

அவன் தேவன் என அறிந்ததும்

விலகி நிற்கவில்லை...

"என்னையாண்டவனே"

என உரிமையோடு உயிரில் கலந்தாள்!

 

சாதி, மதம், குலப் பெருமை அனைத்தையும்

நீறு பூசி அழித்து,

தினைப்புனத்துப் பாறையில்

நடந்த இந்தத் திருமணம்  

காலம் நமக்குச் சொல்லும்

ஆகச்சிறந்த காதல் வேதம்!  

 

ஆறு முகவரி... ஒரு தத்துவம்

1. திருப்பரங்குன்றம் (ஆரம்பம்)

பரம்பொருள் இங்கே தான்

பருவப் பெண்ணை மணக்கிறான்...

இல்லறத்தின் வாசலில்

இறைவனைச் சந்திக்கும்

முதல் படி இது!

 

2. திருச்செந்தூர் (போர்க்களம்)

கடலலைகள் பாடம் சொல்ல,

அலைமோதும் மனசிற்கு

அமைதி தரும் களம்...

அகந்தை எனும் அசுரனை

அறுத்து எறியும் வெற்றி முனை!

 

3. பழநி (துறவு)

கோவணமும் தண்டமும்...

"யாதுமற்ற இடத்தில்தான்

யாவும் கிடைக்கும்"

என உலகிற்குச் சொல்லும்

ஒரு மௌனப் புரட்சி!

 

4. சுவாமிமலை (ஞானம்)

தந்தைக்கே பாடம் சொன்ன

தத்துவ மேடை!

குருவைத் தேடி அலையும் மனதிற்கு

உனக்குள்ளேயே ஒரு குரு

என உணர்த்தும் மகா ரகசியம்!

 

5. திருத்தணி (சாந்தி)

யுத்தமும் முடிந்தாயிற்று,

உபதேசமும் முடிந்தாயிற்று...

இனி சினம் தணிந்து

சிறு புன்னகையோடு

அருள் புரியும் அமைதிப் பூங்கா!

 

6. பழமுதிர்சோலை (முதிர்ச்சி)

கனிகள் உதிரும் காட்டில்

சுட்ட பழம் தேடியவனின் அறியாமை

சுட்டெரிக்கப்படுகிறது...

வாழ்க்கைச் சுழற்சியின்

கடைசிப் பாடம்  

இங்கே பக்குவமாகிறது!   

 

தமிழின் முகவரி

எல்லா மொழிகளிலும்

கடவுள் இருக்கலாம்...

ஆனால்,

தமிழ் என்றே பெயர்கொண்ட

ஒரே கடவுள் நீ!

 

குன்றுகள் இருக்கும் இடமெல்லாம்

குடியிருப்பவன் அல்ல நீ...

நீ குடியிருக்கும் இடமெல்லாம்

குளிர்ச்சியான குன்றுகளாகிறது!

 

உன் 'வேல்'  

அது ஒரு வன்முறைச் சின்னமல்ல;

குழப்பமான உலகிற்கு

அறிவின் கூர்மையைக் காட்டும்

ஒரு திசைக்காட்டி!

அழகு என்றால்

அது வெறும் புறத்தோற்றமல்ல...

ஆணவம் அழியும்

இடத்தில் ஆரம்பமாகும் ஆத்ம தரிசனம்

என்பதே உன் அழகு!

 

தந்தைக்கு உபதேசித்தவன்

அதனால் நீ வெறும் மகனல்ல,

முன்னோடி!

தாய் தந்த ஞானவேல் ஏந்தியவன்

அதனால் நீ

வெறும் வீரன் அல்ல,

சக்தி வடிவம்!

 

மயிலின் தோகையாய் விரிந்திருக்கும்

இந்த பிரபஞ்சத்தை,

தன் கைக்குள் இருக்கும்

சின்னஞ்சிறு ஞானப் பழத்தோடு

ஒப்பிட்டுப் பார்த்த

மகா தத்துவவாதி நீ!

 

உன்னை வணங்குவது என்பது

யாரோ ஒரு தெய்வத்தைத் தொழுவதல்ல...

நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும்

அந்த ஆறாம் அறிவை

தட்டியெழுப்பித் தழுவிக் கொள்வது!   

 

தைப்பூசம்: ஒளியின் உதயம்

மண்ணில் இருள் சூழ்ந்தபோது...

விண்ணிலிருந்து இறங்கி வந்த

ஒரு மகா சக்தி - வேல்!

தை மாதத்து முழுநிலவு

அவன் திருமுகத்தின்

ஒளியைச் சூடி புன்னகைக்கும்

பொன்னாள் இது.

 

அன்னை தந்த ஞான வேல்...

அது வெறும் ஆயுதமல்ல,

நம் ஆன்மாவைச் சுற்றியிருக்கும்

மும்மலங்களை வேரறுக்கும் ஓர் அதிர்வலை!

 

பக்தியின் உச்சத்தில்

காவடி தூக்கும் மனிதர்கள்...

சுமப்பது மரக்கட்டைகளை அல்ல,

தம் வாழ்நாள் சுமைகளை

உன் பாதத்தில் இறக்கி வைக்க

அவர்கள் மேற்கொள்ளும்

ஒரு ஆன்மீக யாத்திரை!

 

அலகு குத்தி ஆடும் ஆட்டத்தில்

வலி மறைந்து போகிறது...

உடல் கடந்த ஒரு பேரின்ப நிலையில்

உயிர்கள் உன்னோடு கலக்கின்றன!

 

பழநி மலையின்

படிக்கட்டுகளில்

சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும்

"அரோகரா" முழக்கத்தில்

அமுதமாகிப் போகிறது!

 

தைப்பூசம் ஒரு நாள் கொண்டாட்டமல்ல...

அறியாமை எனும் சூரனை அழித்து,

அறிவெனும் ஒளியை நெஞ்சுக்குள்

ஏற்றிக் கொள்ளும் ஒரு புதிய விடியல்! 

 

ஆடி கிருத்திகை: அன்பின் அர்ச்சனை

ஆடி மாதத்துக் காற்று

குளிர்ச்சியைக் கொண்டுவரும் முன்னே...

உன் திருவருள் நெஞ்சங்களில்

வெப்பத்தைத் தணிக்கிறது!

 

ஆறு பொறிகளாய் உதித்த உன்னை

ஆறு நிலவொளிகளாய்

அள்ளி அணைத்து அன்பூட்டி வளர்த்தாரே...

அந்த கார்த்திகைப் பெண்களின்

தவம் கனிந்த நன்னாள் இது!

 

ஈசனின் மகனாக இருந்தாலும்

வளர்த்த அன்னையரின் பெயரால்

'கார்த்திகேயன்' என்று நீ அழைக்கப்படுவதில்தான்

எத்தனை பெரிய சமத்துவம்!

 

பன்னிரு கைகளும் பயத்தைத் துடைக்க...

ஆறு முகங்களும் ஆறுதல் சொல்ல...

ஆடி மாதத்துக் கிருத்திகையில்

ஆயிரம் கைகள் ஏந்துகின்றன

உனக்கான புஷ்பக் காவடிகளை!

 

செவ்வரளிப் பூக்களின் சிவப்பில்

உன் செந்நிறக் கோலம்...

மஞ்சள் பூசிய முகங்களில்

உன் மங்கலப் பிரகாசம்...

அரோகரா முழக்கத்தில்

அகிலமே அதிர்கிறது!

 

கார்த்திகைப் பெண்களுக்கு

வரம் கொடுத்த வள்ளலே...

இந்த நாளில்

உன்னைத் துதித்தால் விதிகள் மாறும்...

வினைகள் தீரும்...

மனக்குகையில் உன் மகா ஒளி சேரும்!    

 

வைகாசி விசாகம்: ஞானச் சூரியன்

கோடையில் தகிக்கும் பூமிக்கு

குளிர்ச்சி தர வந்த

மகா மழையல்ல நீ...

இருளில் தவித்த

ஆன்மாக்களுக்கு திசை காட்ட வந்த

ஞானச் சூரியன்!

 

வைகாசிப் பௌர்ணமி

வானில் முழுமை பெற...

ஈசனின் ஆறாம் அறிவாய்

ஆறு பொறிகளிலிருந்து உருவான

உயிர்ப்பின் சங்கமம் நீ!

 

விசாக நட்சத்திரம்

உன் வருகையால்

விஸ்வரூபம் எடுத்தது...

அசுர பயம் கொண்டோர்க்கு

அது அபய நட்சத்திரமானது!

 

புத்தர் ஒளியைப் பெற்றதும்

இந்த விசாகத்தில்தான்...

நீ ஒளியாய் உதித்ததும்

இந்த விசாகத்தில்தான்!

அறிவின் தேடலுக்கு

அர்த்தம் கற்பித்த ஆதித் திருநாள்.

பன்னிரு கைகளும்

பன்னிரு திசைகளிலும்

அன்பைப் பொழிய...

மயில் வாகனத்தில்

நீ மனக்குகையில் நுழையும்

அதிசயத் திருவிழா!

 

பாலும் தேனும்

உன் திருமேனியில் நனைய...

பக்தியின் மணம்

எங்கள் சுவாசத்தில் நிறைய...

வைகாசி விசாகத்தில்

வந்துதித்த என் தமிழ் அமுதே...

உன் பிறப்பே

எங்கள் வாழ்வின் விடுதலை!  

 

குறிஞ்சி நிலக் கோமகன்

வரலாற்றின் ஆதிப் பக்கங்களில்

ஓலைச் சுவடிகளுக்கு முன்பே

மலையக மக்களின்

மூச்சுக் காற்றில் முளைத்தவன் நீ!

 

சேயோன் மேய மைவரை உலகம்

எனத் தொல்காப்பியம்

உன் எல்லை வகுக்க...

குறிஞ்சி நிலத்து வேட்டுவர்கள்

தினைமாவும் தேனும் படைத்து

உன் வேலன் ஆட்டத்தில் மெய்மறந்தனர்!

 

'முருகு' என்றால் அழகு...

நீ வெறும் உருவச் சிலையல்ல,

அருவியின் ஓசை,

காந்தள் மலரின் வாசம்,

வேங்கைப் பூவின் மஞ்சள் நிறம்  

என இயற்கையின் ஒட்டுமொத்தப் பிரகாசம்!

 

கடுவன் இளவெயினனார்

பரிபாடலில் உன்னைப் பாட...

நக்கீரர் 'திருமுருகாற்றுப்படை' மூலம்

புதியதொரு வழிகாட்டியாய்

உன்னைத் தமிழ்ப் படுத்தினார்!

 

அரண்மனைச் சடங்குகளை விட,

குன்றக்குரவைப் பாடல்களிலும்

யானை மீது நீ வரும்

கானகத்து வீதியுலாவிலும் தான்

சங்கத் தமிழ்

இன்னும் உயிர்ப்புடன் வாழ்கிறது!

 

அன்று நீ 'சேயோன்' - செந்நிறக் கதிரவன்!

இன்று நீ 'முருகன்' - அறிவின் நாயகன்!

காலம் மாறினாலும்...

தமிழின் முதல் சொல்லாக

இன்றும் ஒலிக்கிறது

உன் வீரக் கழல் ஓசை!     

 

அள்ள அள்ளக் குறையாத அருள்

யாரிடம் கேட்பது என்று

நீ குழம்பும் போது...

கேட்காமலேயே

உனக்குக் கிடைக்கும் வரம் தான் அவன் அருள்!

 

அது மலையிலிருந்து விழும்

அருவியைப் போன்றது...

நீ பாத்திரம் ஏந்தினால் தீர்த்தம்,

உடல் நனைந்தால் புண்ணியம்,

மனம் கரைந்தால் முக்தி!

 

கையில் இருக்கும் 'வேல்'

பகைவர்களை அழிக்க மட்டுமல்ல...

உன் பயத்தைப் பிளந்து

அங்கே துணிவை விதைக்கவே

அவன் அருளை ஆயுதமாக்குகிறான்.

 

வினைப் பயன்கள் எனும்

கடுமையான வெயிலில்

 நீ வாடும் போது...

ஆறு முகங்களின் நிழல்

உன் மீது விழும்

அதுவே அவன் காட்டும்

அருட்பெருஞ்ஜோதி!

 

அவன் அருள் கிடைப்பதற்கு

ஆயிரம் மந்திரங்கள் தேவையில்லை...

நெஞ்சார ஒருமுறை "முருகா"

என அழைத்தால் போதும்,

உன் கண்ணீர்த் துளியை

அவன் பன்னீராக மாற்றிவிடுவான்!

 

குறை உள்ளவர்க்கு அவன் நிறைவு,

தனிமையில் இருப்பவர்க்கு அவன் துணை,

அறியாமையில் இருப்பவர்க்கு அவன் ஞானம்...

மொத்தத்தில் - அவன் அருள் என்பது

நீ தேடும் கடவுள் அல்ல,

உன்னைத் தேடி வரும் கடவுள்!  

 

ஞானப் பெருங்கடல்

மலையடிவாரத்தில் அல்ல,

என் மனதின் அடிவாரத்தில்

அமர்ந்திருக்கிறது ஒரு பேரமைதி!

 

ஆறாம் அறிவின் உச்சியில்

ஆறு முகங்கள் வேண்டியதில்லை...

அவன் காட்டிய ஒற்றை விரல் போதும்,

பிரணவத்தின் பொருள் விளங்க!

 

புத்தகச் சுமையைத் தள்ளியவன்,

புன்னகையாலேயே போதிக்கிறான்...

"யானெனது" எனும் அகந்தையை

தன் வாகனத்தின் காலடியில்

அடக்கி வைக்கச் சொல்கிறான்!

 

வேல் என்பது வெறும் ஆயுதமல்ல...

அது கூர்மையான பகுத்தறிவு!

வினைகளை அறுக்கும்

வித்தை தெரிந்த அந்தச் சிறுவன்

என் ஆதி குரு!

 

மொழி கடந்து, மௌனம் பூண்டு

அவன் பாதம் சரணடைந்தால்...

அறியாமை எனும் இருள் விலகி,

நெஞ்சுக்குள் உதிக்கிறது

ஒரு செந்தூர்ச் சூரியன்!

கருத்துகள் இல்லை: