6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஏப்ரல், 2026

ஜனநாயக திருவிழா - முனைவர் பீ. பெரியசாமி

 

ஜனநாயக திருவிழா

முனைவர் பீ. பெரியசாமி

1.     வாக்குறுதி (தேர்தல் நேரம்)

தேனொழுகப் பேசித் தெருவெல்லாம் வாக்குறுதி

வானத்துக் காரியம் வல்லவராய்க் - கூனிப்

பணிந்துமே நின்றார் பதவியேற்ற பின்பு

துணிந்துமே போனார் தொலைவு.

 

2.     இலவச அரசியல்

இலவசப் பண்டங்கள் ஈந்துமே மக்களை

நலமிலாப் பாதையில் நாட்டி - வலையமைத்து

வாக்குகளைப் பெற்றுமே வாழ்வார் அரசியலார்

நாடே நலியும் நலிந்து.

 

3.     கட்சி மாறுதல்

நேற்றுமொரு கொள்கை நிலைகொண்டார் இன்றுமொரு

மாற்றுக் கட்சிக்கே மாறி - போற்றிப்

புகழ்வார் பழையாரைப் பொல்லார் எனச்சொல்லி

அகழ்வார் அரசியல் அறம்.

 

4.     மேடைப் பேச்சு

மேடை முழக்கம் மிகையாய் ஒலிக்குமே

கோடை இடியாய்க் குமுறியே - நாடி

நலம்செய்ய மாட்டார் நயவஞ்சக் காரர்

வலஞ்செய்யும் பொய்யே வலிது.

 

5.     ஊழல் நிலை

மக்களின் வரிப்பணம் மாளிகை ஆகுமே

மிக்கப் பெரும்புள்ளி வீடுகட்கு - எக்காலும்

ஏழை எளியோர் இளைத்தே கிடக்கையிலே

வாழும் ஊழல் வளம்.

 

6.     சமூக ஊடக அரசியல் (IT Wing)

வலைத்தளத்தில் மோதுவார் வன்பகை கொண்டே

நிலைத்தநல் உண்மை நலிய - பொய்மைதனை

மெய்யெனவே காட்டி மிதப்பார் அறிவிலார்

ஐயமே நாட்டின் அரசு.

 

7.     உண்மைக் குடிமகன்

நேர்மை வழியில் நிலைகொண்டு நிற்போர்க்கு

யார்வருவார் என்றே ஏக்கமே - ஓர்மையில்லாப்

புல்லர் புகுந்துமே பொய்சொல்லும் இவ்வேளை

நல்லார் எவரோ நயந்து?

 

8.     வாரிசு அரசியல்

தந்தை வழிவந்தார் தம்பிகள் பின்வந்தார்

விந்தையாய் வாரிசு வேரூன்ற - அந்தோ

உழைப்பார் ஓரமாய் ஒதுங்கியே நிற்கப்

பிழைப்பார் புகழாரப் பேர்.

 

9.     பணநாயகத் தேர்தல்

பணமே பிரதானப் பங்காற்றும் தேர்தலில்

குணமே குழிதோண்டிப் புதைக்க - பிணமாய்ச்

சமூகமே வீழ்ந்துமே சாகக் கிடக்குதே

நமதுரிமை ஏனோ நலிந்து?

 

10.   விழிப்புணர்வுத் தேவை

விழிப்பாய் இருப்பதே வீட்டிற்கும் நாட்டிற்கும்

அழிப்பாய் அமையும் அழுக்காறு - ஒழித்தே

அறிவால் அரசு அமைப்பதே மேலாம்

நெறியால் உயரும் நிலம்.

 

 

கருத்துகள் இல்லை: