7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

நூலகம் - முனைவர் பீ. பெரியசாமி

1. அறிவின் நுழைவாயில்

சுவர்களால் ஆன கட்டிடம் அல்ல இது,

சுதந்திரச் சிந்தனையின் திறவுகோல்!

வகுப்பறை காட்டும் வழியின் தொடக்கம்,

வானளவு விரிக்கும் அறிவின் வாசல்!

2. வற்றாத ஜீவநதி

ஆசிரியர் தெளிக்கும் துளிநீர்ப் பயிர்,

ஆயிரம் நூல்களில் ஆலமரமாகும்!

கல்விப் புலத்தில் பாயும் இந்நதி,

காலம் முழுதும் அறிவைப் பெருக்கும்!

3. இருள் அகற்றும் சுடர்

அறியாமை என்னும் இருளை விரட்டி,

ஆராய்ச்சி என்னும் சுடரை ஏற்றும்!

தேடிப் படிக்கும் மாணவன் நெஞ்சில்,

தேசிய உயர்வுக்கான விதையை விதைக்கும்!

4. காலத்தின் பாலம்

நேற்றைய அறிஞரின் சிந்தனைச் சுவடும்,

நாளை உருவாகும் புதிய ஆய்வும்,

சந்திக்கும் புள்ளி தான் நூலகம் — இங்கு

சங்கமிக்கும் மனித குலத்தின் வரலாறு!

5. அமைதியின் மகத்துவம்

சத்தமில்லாத அமைதியின் நடுவே,

சகாப்தங்கள் பேசும் அதிசய அரங்கம்!

பக்கத்தைப் புரட்டும் ஒலியினில் இங்கே,

புதியதோர் உலகம் பிறந்திடும் தினமும்!

6. தகவல் கடலில் வழிகாட்டி

தகவல்கள் வெள்ளமாய் மூழ்கடிக்கும் வேளையில்,

தங்கச் சுடராய் வழிகாட்டும் நூலகர்!

போலிச் செய்தியின் முகமூடி அகற்றி,

உண்மைத் தரவின் ஒளி தருவார்!

7. சமத்துவத்தின் சரணாலயம்

ஏழை பணக்காரன் பேதங்கள் இல்லை,

எல்லோர்க்கும் இங்கே அறிவுச் சமத்துவம்!

விலைமதிப்பில்லா ஏடுகளின் கதவுகள்,

விரும்பி வரும் அனைவருக்கும் திறந்திருக்கும்!

8. ஆய்வின் ஊற்றுக்கண்

பட்டங்கள் பெறுவது கல்வியின் தொடக்கம்,

கண்டுபிடிப்புகளே உயர்கல்வி இலக்கு!

ஆராய்ச்சிப் பாதைக்கு வெளிச்சம் காட்டும்,

ஆதி அந்தமில்லா அறிவின் கலங்கரை விளக்கம்!

9. ஏடுகளிலிருந்து எண்ணிமம் வரை

ஓலைச்சுவடியில் தொடங்கிய பயணம்,

இன்று டிஜிட்டல் திரையிலும் தொடருது!

வடிவங்கள் மாறினும் நூலகத்தின் சேவை,

மானூடச் சமூகத்தின் மூச்சாய் விளங்குது!

10. சிறை உடைக்கும் சிந்தனை

ஒரு நூலகக் கதவுகள் திறக்கின்ற போது,

ஒரு சிறைச்சாலை மூடப்பட்டுப் போகும்!

வாசிப்பைச் சுவாசமாய் ஏந்திடும் இளமை,

நாளை உலகை ஆளும் வல்லமை பெறும்!

கருத்துகள் இல்லை: