7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 2 நவம்பர், 2026

இலங்கையில் சுற்றுலா வளர்ச்சியும் ஆன்மீகச் சுற்றுலா இடங்களும் - ஓர் ஆய்வு - திருமதி. சுதர்சினி சதீஸ்கரன் (இலங்கை)

 

இலங்கையில் சுற்றுலா வளர்ச்சியும் ஆன்மீகச் சுற்றுலா இடங்களும் - ஓர் ஆய்வு

திருமதி. சுதர்சினி சதீஸ்கரன்,

முதுதத்துவமாணி ஆய்வாளர்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

sutharshini192@gmail.com

 

Prof. Dr. S. Kesavan,

Retired Professor in Hindu Civilization,

Eastern University, Sri Lanka.

ஆய்வுச் சுருக்கம்

சுற்றுலா என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. குறிப்பாக ஆரம்ப கால மனிதன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான். இதன் காரணமாகக் காடுமேடெல்லாம் சுற்றித்திரிந்து தனக்கான உணவைத் தேடி அலைந்து திரிந்தான். அவ்வாறு சுற்றித் திரிந்தவன் காலப்போக்கில் இயற்கையை ரசித்தல், பொழுதுபோக்கு என்னும் அடிப்படையில் பயணம் மேற்கொள்ள முற்பட்டான். அதுவே பிற்காலத்தில் சுற்றுலா என மாற்றம் பெற்றது. அவ்வகையில் சுற்றுலா என்பது சுற்றித் திரிதல் அல்லது வலம் வருதல் எனும் பொருளைக் கொண்டு காணப்படுகின்றது.

மனிதனால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாப் பயணமானது பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பல வகைகளாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இன்பச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, வியாபாரச் சுற்றுலா, கப்பல் சுற்றுலா, கடற்கரைச் சுற்றுலா, மரபுரிமைச் சுற்றுலா, விண்வெளிச் சுற்றுலா எனப் பல இன்னோரன்ன சுற்றுலா வகைகளைக் குறிப்பிடலாம்.

இலங்கை வரலாற்று, பண்பாட்டு மற்றும் சமய மரபுகள் நிறைந்த இடமாகும். இங்கு அமைந்துள்ள இந்து ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் ஆன்மீக கலாசாரம், வரலாறு மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மையங்களாகவும் திகழ்கின்றன. ஆண்டுதோறும் இத்தலங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலர் வருகை தருவதால் இவை ஆன்மீகச் சுற்றுலாவின் முக்கிய தலங்களாகக் கருதப்படுகின்றன.

ஆய்வு அறிமுகம்

சுற்றுலாத்துறை தற்காலத்தில் மக்களிடையே சிறப்படைந்து வரும் ஒரு துறையாகக் கொள்ளப்படுகின்றது. இத்துறை நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றது. நாடுகள் தமக்கிடையே சமநிலைகளைப் பேணிப் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. அந்நாடுகளில் இலங்கை நாடும் சுற்றுலாத்துறையில் சிறப்பிடம் பெற்று வருகின்றது. இவற்றோடு உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துறையாகவும் இன்றுவரை வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு முக்கிய காரணம் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் பண்பாட்டினையும் கொண்டுள்ளமையேயாகும்.

சுற்றுலா (Tourism) என்பதற்குப் பொதுவாகத் தமது வழக்கமான இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களைக் கண்டு களிக்கப் பயணித்தல் எனக் குறிப்பிடப்படுகின்றது. இதே போன்று உலக சுற்றுலா அமைப்பு சுற்றுலாவுக்கான விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகின்றது:

"வழக்கமான சுற்றுச் சூழலை விட்டு வேற்று இடத்திற்கு ஓய்வு, அலுவல், மற்றும் வேறு பல நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளும் பயணமாகும். இப்பயணம் ஒரு வருட காலக்கட்டத்திற்குள் அமைய வேண்டும். அப்பயணத்தின் மூலம் பயணியானவர் பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெறக் கூடாது."

சுற்றுலா என்பது ஒரு புராதன நிகழ்வாகும். மனிதன் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல விரும்பினான். தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பசியைப் போக்கு பொருட்டு உணவு தேடியும் காடு மேடெல்லாம் அலைந்தான். இதன் பின்னரான பிற்கால மனிதன் திரைகடலோடித் திரவியம் தேடினான் என அறியப்படுகின்றது. அதே போன்று இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனும் அன்று தொடங்கிய தமது பயணத்தை இன்றும் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொண்டு வருவதை அவதானிக்கலாம்.

மனிதன் இன்பம், இறைத் தேடல், பொழுது போக்கு, அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெறும் நோக்கில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றான் என்பதை அறியமுடிகின்றது. பயணங்களின் வரலாற்றைப் பாகுபடுத்தி நோக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பண்டைய காலம், இடைக்காலம், தற்காலம் என்று மூன்றாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. கி.பி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் பண்டைய காலமாகவும், 12-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இடைக்காலம் என்றும் கூறப்படுகின்றது. அதற்குப் பின் வந்த காலம், குறிப்பாக இன்றைய காலம் வரை தற்காலம் என்றும் பாகுபடுத்தியுள்ளனர்.

சுற்றுலாவின் நோக்கம், தன்மை, இடம், பயன்பாடு என்பவற்றின் அடிப்படையில் சுற்றுலா பல வகையாகப் பிரித்து நோக்கப்படுவதைக் காணலாம். உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலா, தனிநபர், குழுச் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சமூகச் சுற்றுலா, தொழில் சுற்றுலா, ஓய்வுச் சுற்றுலா, அரசியல் சுற்றுலா, இன்பச் சுற்றுலா என வகைப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவற்றில் பண்பாட்டுச் சுற்றுலா இன்று உலகின் பல நாடுகளிலும் இனம், மொழி, மதம் என்பவை கடந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை பல்லின கலாசாரங்களைக் கொண்ட நாடாகக் காணப்படுகின்றது. ஆன்மீகம் தொடர்பான சுற்றுலாவினை மேற்கொள்வதற்கான சிறப்பான சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றன. பல்லின அம்சங்களைக் கொண்டிருந்தாலும் இந்து சமய கலாசாரத்திற்கும் தனிச்சிறப்புண்டு. இச்சுற்றுலா மேற்கொள்ளப்படுவதால் நாட்டினுடைய பண்பாட்டுக் கூறுகள், கலைகள், சமயம் என்பனவற்றைப் பேண வழிவகை செய்கின்றது.

ஆன்மீகச் சுற்றுலா விளக்கம்

சுற்றுலாவின் வகைகளைப் பொதுவாக நாடு, நகர், தனிநபர், குழு என்று பகுத்து நோக்க முடிகின்றது. அத்துடன் கல்வி, பண்பாடு, கலாசாரம், ஆன்மீகம், தொல்லியல், மருத்துவம், பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, ஓய்வு, இன்பம், பருவகாலம், தொழில், சூழலியல், விடுமுறை என சுற்றுலாவைப் பல்நிலைகளில் வகைப்படுத்த முடிகின்றது. ஆன்மீகச் சுற்றுலா என்பது "புனித தலங்களுக்குச் செல்லல், சமயத்தோடு தொடர்புடைய இடங்களுக்குச் செல்லல், சமயத் தலைவர்கள் பிறந்த இடம், வாழுமிடம், மறைந்த இடம் முதலான இடங்களுக்குச் சென்று வரும் சுற்றுலாவாக" இவ்வான்மீகச் சுற்றுலா அமைகின்றது. பண்டைக்காலத்தில் மக்கள் ஆன்மீகத்திற்காகக் கோயில், குளங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று வந்தனர். அத்துடன் புண்ணிய இடங்களுக்குச் செல்லும் வழக்கம் எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

சுற்றுலாவின் வகைகளைப் பல்நிலைப்படுத்த முடிகின்றது. அவ்வாறு பல்நிலைப்படுத்தலில் ஒன்றாகக் கொள்ளப்படும் சுற்றுலா வகைகளில் ஒன்று ஆன்மீகச் சுற்றுலாவாகும். இவ்வகைச் சுற்றுலா சமய வழிபாட்டை முன்னிலைப்படுத்திச் செல்லக்கூடியதாக அமைகின்றது. சமயம் சார்ந்த பயணம் இவ்வுலகில் இன்றியமையாததாய் உள்ளமையை அறியமுடிகின்றது. அவ்வகையில் ஆன்மீகச் சுற்றுலாவின் விளக்கமாவது:

 "உலகெங்கிலும் உள்ள புனித தலங்களைக் கண்டு தரிசிக்கும் நோக்குடனும் சமய நம்பிக்கையின் அடிப்படையிலும் மனிதர்கள் பயணம் செய்வது ஆன்மீகச் சுற்றுலாவாகும்." (லட்சுமி கார்மேகம், எஸ். கேசவன், 2022, பக். 61)

ஆன்மீகச் சுற்றுலா என்பதற்குப் பொதுவான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தாங்கள் விரும்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு விரும்பிச் செல்லும் பயணமே ஆன்மீகச் சுற்றுலா எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஒவ்வொரு ஆலயமாகச் சென்று இறைவனைத் தரிசித்தல், மூர்த்தி, தல, தீர்த்த, அடியார் வழிபாடுகள் செய்தல் என்பனவாகும்.

ஆன்மீகச் சுற்றுலா அறிவு, நம்பிக்கைகள், கலை, ஒழுக்கநெறிகள், பழக்கவழக்கங்கள், சட்டம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டது. இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னுடைய நற்குணங்களை இழந்து போர்க்குணங்கள், சுயநலம், நேர்மையற்றவனாக மாறிவிட்டான். இச்சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும், மனிதனைப் பண்பட்டவனாக மாற்றவும் மனிதனுடைய மனதில் சில மாற்றங்களைக் கொண்டுவருதல் வேண்டும். இதற்கு ஆன்மீகம் மற்றும் யாத்திரிகச் சுற்றுலாக்களை மனிதர்கள் மத்தியில் கொண்டுவருதல் வேண்டும். அனைத்து மதங்களின் மிக முக்கிய நோக்கமாக இருப்பது ஆன்மீக நலனை ஏற்படுத்துவதாகும்.

சுற்றுலா என்பது பொதுவாக ஓர் ஆன்மீக, கலாசாரக் கட்டமைப்பில் உருவானதாகும். இச்சுற்றுலாவில் குறிப்பாகக் குழுச் சுற்றுலாக்கள் மறைமுகமாக ஆன்மீகக் கூறுகளின் அடிப்படையில் நாட்டிற்கு நன்மையைத் தேடித் தருகின்றன. அவ்வகையில் ஆன்மீகமும் சுற்றுலாவும் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு ஒன்றுக்கொன்று நன்மை பயந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் மாறுபட்ட ஆன்மீகக் கலாசாரங்கள் நிலைத்து நிற்பதற்கும், பல இடங்களில் பரவுவதற்கும் இச்சுற்றுலாப் பயணங்கள் பெரிதும் காரணமாக அமைவதை அவதானிக்கலாம்.

மதங்களை முக்கியத்துவப்படுத்தும் இடங்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாக உள்ளது. அப்புனித இடங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவானது ஒரு வருடத்தில் குறிப்பிட்ட காலங்களில் உயர்ந்து காணப்படும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளக் காரணம் மன அமைதியை உண்டாக்கும் என்னும் நம்பிக்கையிலாகும். அத்துடன் அவர்கள் வணங்கும் கடவுளர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும், மரணத்திற்கு முன் தங்களுடைய பாவங்களைப் போக்கித் தூய்மைப்படுத்திக் கொள்ளவும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இலங்கையில் சுற்றுலா

இலங்கையில் சுற்றுலாத்துறையானது 1970-ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து வளர்ந்து வரும் ஒரு துறையாகக் காணப்படுகின்றது. 1960-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் சுற்றுலாத்துறையில் 3 சதவீதமான வருமானமே பெறப்பட்டது. எனினும் காலப்போக்கில், குறிப்பாக 1980 காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகமானது. அவ்வகையில் 3 சதவீதமாக இருந்த வீழ்ச்சியிலிருந்து 36 சதவீதமாக வளர்ச்சி பெறலாயிற்று. இவ்வளர்ச்சி நீடிக்கவில்லை என்றே கூறலாம்; காரணம் உள்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராகும். இதனால் சுற்றுலாத்துறை 2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. தனது உள்நாட்டு வருமானத்தை அளித்ததில் 50 சதவீதமான வருமானம் சுற்றுலா விடுதிகள் மூலமாகப் பெறப்பட்டது.

சுற்றுலாத்துறை இலங்கையில் பொருளாதார ரீதியில் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் நான்காவது துறையாகக் காணப்படுகின்றது. இதனை 1984-ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கைக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்திருக்கின்றனர். இந்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கான அந்நியச் செலாவணி அதிகரிக்கின்றது. குறிப்பாக இலங்கைக்கு 2012-ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,76,340 ஆகவும், வீதத்தில் 17.5 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது. இதனை Sri Lanka Tourism Development Authority, 2012 குறிப்பிட்டுள்ளது (வர்ணகுலசிங்கம். க, 2019).

இலங்கைக்கு முதலாம் உலகப் போரின் பின்னர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது (வர்ணகுலசிங்கம். க, 2019). குறிப்பாக 1960 தொடக்கம் 1970-ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை தரும் தன்மையில் சீரற்ற தன்மை காணப்பட்டதாக அறியமுடிகின்றது. அதன்பின்னர் 1970-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 1982-ஆம் ஆண்டு தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் சுற்றுலாத் துறையில் அதிகரிப்பு ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.

சில ஆண்டு காலப்பகுதியில், குறிப்பாக 1995-ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தளவிலேயே காணப்பட்டதேயாகும் (வர்ணகுலசிங்கம். க, 2019). அதன்பின்னர் 2002-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் காரணமாக மேலும் சுற்றுலாத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் வளர்ச்சி கண்ட இத்துறை இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக வீழ்ச்சி நிலையை அடைந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர் இலங்கையில் சுற்றுலா

உள்நாட்டுப் போர் முடிவுற்ற காலப்பகுதியிலிருந்து இலங்கையின் சுற்றுலாத் துறையில் அதிகரிப்பு ஏற்பட்டதுடன் இன்று வரை சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக 2017-ஆம் ஆண்டு தொடக்கம் 2021 வரையான காலப்பகுதி வரை 43.2 சதவீதத்திற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது வீழ்ச்சி நிலையை அடைந்தாலும் சில வருடங்களில் வருகையானது அதிகரித்த வண்ணமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் 2017 மற்றும் 2018 வருடங்களில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை பற்றிப் பின்வரும் அட்டவணை புலப்படுத்தி நிற்கின்றது. (தகவல்: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வருடாந்த அறிக்கை – 2020)

கொரோனா தொற்றின் பின்னரான சுற்றுலா வளர்ச்சி

உலகில் ஏற்பட்ட வைரஸ் காரணமாக அநேகமான நாடுகளில் சுற்றுலாத்துறை பெருமளவில் வீழ்ச்சி நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வைரஸின் தொற்று காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களாக ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களே ஆகும். இப்பிராந்தியங்களில் சுற்றுலாத்துறைப் பயணிகளின் வருகையானது அதியுயர் வீழ்ச்சி நிலையைப் பெற்றுள்ளது; குறிப்பாக 84% வீதமாக வீழ்ச்சி பெற்றது. அதே போன்று மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா 75% வீதமாகவும், ஐரோப்பாவில் 70% வீதமாகவும் சுற்றுலா வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை பதியப்பெற்றுள்ளது. இவற்றோடு மிகக்குறைந்த வீழ்ச்சியாக அமெரிக்க நாடுகளில் குறிப்பாக 69% வீதமாகப் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் (இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வருடாந்த அறிக்கை – 2020).

இலங்கையில் வைரஸ் காரணமாக ஒன்பது மாதங்களாக சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்குப் பயணத்தடை விதித்திருந்தமையே காரணமாகும். அதன்பின்னர் பயணத்தடை விலகியதனால் மீண்டும் சுற்றுலாத்துறையில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதியிலிருந்து விசேட செயற்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைக்குத் தொடர் வாடகை விமானங்கள் மூலம் 393 உக்ரைன் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனைப் பின்வரும் அட்டவணை மூலம் அறியமுடிகின்றது.

 மாதம்

 2019

 2020

 மாற்றம் (%)

 ஜனவரி

 244,239

 228,434

 (6.5)

 பெப்ரவரி

 252,033

 207,507

 (17.7)

 மார்ச்

 244,328

 71,370

 (70.8)

 ஏப்ரல்

 166,975

 0

 -

 மே

 37,802

 0

 -

 ஜூன்

 63,072

 0

 -

 ஜூலை

 115,701

 0

 -

 ஆகஸ்ட்

 143,587

 0

 -

 செப்டம்பர்

 108,575

 0

 -

 அக்டோபர்

 118,743

 0

 -

 நவம்பர்

 176,984

 0

 -

 டிசம்பர்

 241,663

 393

 (99.8)

 மொத்தம்

 1,913,702

 507,704

 (73.5)

(ஆதாரம்: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வருடாந்த அறிக்கை – 2020)

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. காரணம் கொரோனா வைரஸ் தாக்கமும், அரசியல் ரீதியான குழப்பங்களும் ஆகும். எனினும் அச்சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு புத்துயிர் அளிக்கும் வகையில் இலங்கை பரந்த மூலோபாயத் திட்டத்துடன் முன்னோக்கிய குறிக்கோள் மற்றும் சிந்தனையின் அடிப்படையில் தன்னுடைய முன்னெடுப்புகளை முனைப்புடன் செயல்பட்டுத் தங்கு தடையின்றி இலங்கை சுற்றுலாத்துறை முன்னோக்கிச் செல்கின்றது.

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி மிக அதிகளவில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதி மாதமாகிய அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது (வீரகேசரி, 5 நவம்பர், 2023, 7.01 பி.ப, சுவாமிநாதன் சர்மா). இவ்வருகையை அடிப்படையாக வைத்து இலங்கை சுற்றுலாத்துறையானது மாதத்தில் 1,47,789-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான இலக்குடன் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்குள் 50,395 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 2022-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பாக அவதானிக்கின்ற போது இங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.06 மில்லியன் வரை அதிகரித்துள்ளமையை அறியமுடிகின்றது.

இங்கு வருகை தந்திருந்த பயணிகளின் மொத்த வருகையானது வீதத்தில் 24 சதவீதமாக இருந்தது. இவ்வருகையானது கூடுதலாக இந்திய நாட்டbracket-டமிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக 12,261 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் முதலாவதாக இந்தியப் பயணிகளே உள்ளனர். ரஷ்யா 4,554 பயணிகளுடன் இரண்டாவதாகவும், மூன்றாவது 4,008 பயணிகளுடன் பிரிட்டனும் காணப்படுகின்றன. இவற்றில் சீனாவும் ஜெர்மனியும் முறையே 3,269, 3,180 எனும் தொகையின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தினைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஆஸ்திரேலியா, மாலைத்தீவு, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் முதலான நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டின் முற்பகுதியில், குறிப்பாக மார்ச் மாதமளவில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தின் 10 நாட்களில் மாத்திரம் 67,114 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் அறிக்கை தெரிவித்துள்ளது (S TV தமிழ் இலங்கை NEWS, 2024.03.14, 7.27 பி.ப). அத்துடன் ரஷ்யாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனடிப்படையில் ரஷ்யாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 9,783 ஆக உள்ளது. இவற்றோடு இந்தியாவில் இருந்து 9,735 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 301 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2,18,350 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி முதலான நாடுகளில் இருந்து அதிகமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நாடுகளில் இந்தியா நாட்டிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேல்வரும் அட்டவணை மூலமாக அறிந்து கொள்ளமுடிகின்றது. அவ்வகையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2025 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான குறிப்புகளை வழங்குகின்றது.

 மாதம்

 2018 (பயணிகள்)

 2024 (பயணிகள்)

 2025 (பயணிகள்)

 வளர்ச்சி (%)

 ஜனவரி

 238,924

 208,253

 252,761

 21.4

 பெப்ரவரி

 235,618

 218,350

 240,217

 10.0

 மார்ச்

 233,382

 209,181

 37,768

 -

 ஏப்ரல்

 180,429

 148,867

 -

 -

 மே

 129,466

 112,128

 120,120

 35.7

 ஜூன்

 146,828

 113,470

 116,469

 -

 ஜூலை

 217,829

 187,810

 145,188

 -

 ஆகஸ்ட்

 200,359

 164,609

 -

 -

 செப்டம்பர்

 149,087

 122,140

 -

 -

 அக்டோபர்

 153,123

 135,907

 -

 -

 நவம்பர்

 195,582

 184,158

 -

 -

 டிசம்பர்

 253,169

 248,592

 -

 -

 மொத்தம்

 2,333,796

 2,053,465

 2,320,000

 -

(ஆதாரம்: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை – மாதாந்த அறிக்கை)

எனவே 2024-ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பாக ஜனவரி முதல் டிசம்பர் 31-ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்திருந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2,053,465 ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் 2025-ஆம் ஆண்டு எந்தெந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பது தொடர்பாக மேல்வரும் அட்டவணை விளக்கப்படம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, குறிப்பாக ஜனவரி மாதம் 1-ஆம் திகதி முதல் டிசம்பர் 26-ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் இருபத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்ததாக அறியமுடிகின்றது. இது தொடர்பான அறிக்கையினை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றோடு இக்காலப்பகுதியில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 நாடுகள்

 சுற்றுலாப் பயணிகள் தொகை

 இந்தியா

 5,19,810

 பிரான்ஸ்

 17,353

 ரஷ்யா

 1,78,743

 ஐக்கிய இராச்சியம்

 2,07,510

 சீனா

 1,35,452

 ஜெர்மனி

 1,43,999

 ஆஸ்திரேலியா

 15,611

(ஆதாரம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்)

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருப்பது சுற்றுலாத்துறையேயாகும். குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இத்துறை ஆற்றுகின்றது. அத்துடன் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. இலங்கை சிறப்பானதொரு சுற்றுலாத் தலமாக மிளிரக் காரணம் இங்குள்ள அழகிய கடற்கரைகள் (பாசிக்குடா, அறுகம்பை), வன விலங்குகள் (யால, குமண), பழங்காலக் கல்வெட்டுகள், தேயிலைத் தோட்டங்கள், புராதன வரலாற்றுடன் தொடர்புடைய இடங்கள் (பொலன்னறுவை, சிகிரியா), இந்து, பௌத்த கோயில்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள் எனப் பலதரப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இங்கு காணப்படுகின்றன. வெளிநாட்டவர் மட்டுமன்றி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் ஒரே இடமாகவும் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் இலங்கைத் திருநாடு மிளிர்கின்றது.

இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா அறிமுகம்

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற நாடாகக் காணப்படுகின்றது. இங்கு சமூக, சமய மற்றும் மொழி ரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் சுற்றுலாத்துறை இவற்றை இணைப்பதாக அமைகின்றது; குறிப்பாக ஆன்மீகச் சுற்றுலா அமைகின்றது. மேற்கூறியது போன்று சமூக, சமய வேறுபாடுகள் பார்க்காமல் ஒற்றுமை என்னும் உணர்வை ஏற்படுத்துவது இவ்வான்மீகச் சுற்றுலாவாகும். இதனால் இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதோடு அதனுடன் இணைந்து ஆன்மீகச் சுற்றுலாவும் வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கைத் தீவானது கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருப்பதுடன் கலாசார முக்கோண வலையங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரதான சுற்றுலா வலையங்களாகக் கொழும்பு நகரம், கொழும்பு பெருநகரம், தெற்குக் கரை, கிழக்குக் கரை, மத்திய மலைநாடு, வரலாற்று நகரம், வட பிரதேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கலாசார முக்கோண வலையங்கள் பல பண்டைய ராஜ்யங்கள், கம்பீரமான தொட்டிகள், குளங்கள், மறைக்கப்பட்ட பாறைக் குகைகள் மற்றும் பழங்காலப் புனித கோயில்களின் இடிபாடுகள் மற்றும் கிட்டத்தட்ட நம்பமுடியாத பழங்காலக் கட்டடக்கலை, பொறியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

இலங்கையின் ஆன்மீகச் சுற்றுலாவில் வெளிநாட்டவர்

உள்நாட்டவர் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டு ஆன்மீகச் சுற்றுலாவை வளர்ச்சியடையச் செய்வதை அவதானிக்க முடிகின்றது. இவ்வகையில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நோக்கங்களில் இலங்கையில் நடைபெறும் சமய கலாசார நிகழ்வுகளை ரசிப்பதற்காகவும் வருகை தருகின்றனர். எனினும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சமய கலாசார நிகழ்வுகளை ரசிப்பதற்காக வருபவர்களின் வீதம் குறைவாகவே உள்ளது. இயற்கையை ரசித்தலும் அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக 2017-ஆம் ஆண்டு தொடக்கம் 2019-ஆம் ஆண்டு வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 8 சதவீதமாக அதிகரித்திருந்தது. அவற்றுடன் கல்விக்காக வருகை தந்தவர்களின் வருகை வீதம் 0.32 ஆக அதிகரித்திருந்தது. மாநாடுகள், உறவினர்களைச் சந்தித்தல், நண்பர்களைச் சந்தித்தல், கூட்டங்கள், சமய கலாசார நிகழ்வுகள் தொடர்பான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது வீழ்ச்சி நிலையில் காணப்பட்டுள்ளது.

 நோக்கம்

 2017 (%)

 2018 (%)

 2019 (%)

 இயற்கையை ரசித்தல் / விடுமுறை

 82.4

 81.7

 83.2

 வர்த்தகம்

 3.3

 4.0

 3.65

 உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்தல்

 11.3

 10.8

 10.48

 மாநாடுகள் / கூட்டங்கள்

 1.3

 1.7

 0.99

 சமய கலாசார நிகழ்வுகள்

 0

 0.1

 0.3

 சுகாதாரம்

 0.5

 0.9

 0.59

 விளையாட்டு

 0.8

 0.6

 0.72

 நிறுவன ரீதியானது

 0.3

 0.1

 0.01

 கல்வி

 0.1

 0.1

 0.32

 ஏனையவை

 0

 0

 0.01

மொத்தம்

 100

 100

 100

(ஆதாரம்: இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை அறிக்கை – 2019)

இலங்கைக்கான ஆன்மீகப் பயணம் வெளிநாட்டவரால் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இலங்கைக்குக் கடல்வழியாக இந்திய சுற்றுலாப் பயணிகள் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக கடந்த மாதம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இவ்வான்மீகச் சுற்றுலாப் பயணத்தை மன்னார் திருக்கேதீஸ்வரம், காங்கேசன்துறை நகுலேஸ்வரம், திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இப்பயணங்கள் மே அல்லது ஜூன் மாதமளவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ([newsuthayam.com/article/](https://www.google.com/search?q=https%3A%2F%2Fnewsuthayam.com%2Farticle%2F) 2024/03/24, 6.42 pm). இவற்றினூடாக வெளிநாட்டவர்களாலும் இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் இந்திய சினிமா நடிகரான ரஜினிகாந்த் அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இவருடைய வருகையானது சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். இப்பயணமானது ராமாயணப் பாதை மற்றும் இலங்கையிலுள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் எனவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகின்றது (தினகரன், E-Paper, 2023 மே 30, "ரஜினியின் இலங்கைச் சுற்றுலா, ஆன்மீகத்துறையை மேம்படுத்தும்").

இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்ளும் பொது இடங்கள்

இலங்கை நாட்டில் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுக்காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையால் பொருளாதாரத்துறையிலும் மற்றும் ஏனைய துறைகளும் வளர்ச்சியடைகின்ற நிலை காணப்படுகின்றது. இவற்றில் ஆன்மீகச் சுற்றுலா இலங்கையில் வளர்ச்சியடைவதைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆன்மீகச் சுற்றுலாவானது உள்நாட்டவர்களாலும், வெளிநாட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைவதற்குப் பிரதான காரணமாக இலங்கை நாடு கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளமையாகும். இவற்றோடு மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பதும் இங்கு ஆன்மீகம் வளர்ச்சியடைவதற்குக் காரணமாக அமைகின்றன.

இங்கு காணப்படுகின்ற கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான சிறந்த இடங்களாக அமைகின்றன. இதனால் இங்கு வாழும் மக்கள் அவ்விடங்களுக்குச் சுற்றுலா மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இலங்கையில் காணப்படும் இவ்விடங்கள் எவ்வாறு ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை விரிவாக நோக்கலாம்.

பொலன்னறுவை

இலங்கையில் பொலன்னறுவை மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வதற்குச் சிறந்த இடமாகவும், இலங்கை சுற்றுலாத் தலங்களின் வரிசையில் இரண்டாவது இடமாகவும் கொள்ளப்படுகின்றது.

இங்கு காணப்படும் இடிபாடுகள் பொலன்னறுவையின் பழைய நகர வாழ்க்கையைப் பற்றி கற்பனை செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இடிபாடுகள் நன்கு பாதுகாக்கப்பட்டுப் பழங்காலப் பொக்கிஷங்களைக் கொண்டு காணப்படுகின்றன. இவ்விடத்தில் கோயில்கள், ஸ்தூபிகள் மற்றும் சிலைகள் என்பனவற்றோடு வரலாறு தொடர்பான கட்டடங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்றையும் சித்தரிக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் கலாசாரப் பொருட்களையும் அதிகம் கொண்டுள்ளது. இதனால் இலங்கையில் ஆன்மீகம் மற்றும் மதப் பின்னணிகள் மற்றும் நாகரிகங்கள் என்பவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அனுராதபுரம்

அனுராதபுரம் 'புனித நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். அனுராதபுரம் அதன் தொல்பொருள் தலங்கள், கலாசாரம், உணவு வகைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு சின்னமான வரலாற்றுச் சூழலில் நன்கு அறியப்பட்டதாகும்.

கி.மு 4-ஆம் நூற்றாண்டில் புனித நகரமான அனுராதபுரம் நிறுவப்பட்டது. இது 1982 முதல் யுனெஸ்கோவின் (UNESCO) உலகப் பாரம்பரியத் தலமாக உள்ளது. தேரவாத பௌத்தத்தின் நீண்டகால மையப்பகுதியாகும்.

இலங்கையின் புராதன தலைநகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தில் போதி மரம் காணப்படுகின்றது. இம்மரத்தடியில் புத்த பகவான் ஞானோதயம் அடைந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இம்மரத்தை 'அறிவொளி மரம்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

அனுராதபுரத்தில் போதி மரத்தைத் தவிர மேலும் பல கோயில்கள் மற்றும் புனித தலங்கள் காணப்படுகின்றன. சமய ரீதியான வழிபாட்டிற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இவ்விடங்கள் உறுதுணையாக அமைகின்றன.

இலங்கையின் தொழில்நுட்ப வல்லுநர்களும் கைவினைஞர்களும் பண்டைய நாகரிகத்தில் தனித்துவமான மூச்சடைக்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பௌத்தம் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. செங்கற்களால் கட்டப்பட்ட மற்றும் கற்களால் செதுக்கப்பட்ட இந்தச் சிற்பப் படைப்புகள் இன்னும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

தம்புள்ளை

இந்த நம்பமுடியாத தேசத்தின் வளமான கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் பற்றி மேலும் அறிய வேண்டுமென்றால் தம்புள்ளைக் குகைக் கோயிலுக்குச் செல்வது அவசியமாகும். இது 150-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கொண்டுள்ள குகையாகும்.

இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். கோயில் உட்புறங்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகள் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஒரு கருப்புப் பாறை மலையில் கட்டப்பட்ட இந்தக் கோயில், சோர்வுற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியையும் வழங்குகிறது. இது பௌத்த தலம் மற்றும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாகும். அதன் தனித்துவமான இடம் இலங்கையின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் கலாசார நினைவுச் சின்னங்களுக்குச் சான்றாகவும் இது உள்ளது.

ஹபரண

இலங்கையின் கலாசார முக்கோணத்தின் நடுவில் அமைந்துள்ள சிறிய குக்கிராமமாக ஹபரண காணப்படுகின்றது. நாட்டின் பண்டைய நகரங்களை ஆராய்வதற்கான ஒரு அருமையான தொடக்க இடமாகவும் இவ்விடம் அமைகிறது. இந்த நகரம் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையமாகவும் செயல்படுவதோடு மட்டுமன்றிப் பசுமையான காடுகளால் சூழப்பட்டதாகவும் காணப்படுகின்றது.

கவுடுல்ல, ஹுருலு சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் மின்னேரியா உள்ளிட்ட பல தேசியப் பூங்காக்கள் இந்நகரத்திற்கு அருகில் உள்ளன. அவை அவற்றின் மகத்தான யானை மக்கள் தொகைக்கு நன்கு அறியப்பட்டவை. உதாரணமாக வறட்சிக் காலத்தில் மின்னேரியாவில் ஆண்டுதோறும் யானைகள் கூடும்போது பூங்காவின் நீர்த்தேக்கத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் ஒன்றுகூடுகின்றன.

களனி ராஜ மகா விகாரை

பௌத்தர்களின் புனித ஆலயமாக விளங்குகிறது. இவ்விகாரை பௌத்த மதத்தினரின் அற்புதப் படைப்பாகும். களனி ஆற்றங்கரையோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் வரலாறு தொடர்பான அற்புதப் படைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ருவன்வெலிசாய புனித தலம்

உலகெங்கிலுமுள்ள அநேகமான பௌத்தர்களால் போற்றப்படும் புனித தலமாக உள்ளது. இத்தூபியை துட்டகைமுனு மன்னர் கட்டினார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

உலகில் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் பிரமிக்கத்தக்க ஒன்றாகக் கொள்ளப்படுவதுடன் கவர்ச்சியானதாகவும் காணப்படுவதுடன் சிறந்த கட்டடக்கலை அமைப்பையும் கொண்டுள்ளதுடன், இக்கட்டடம் கட்டுவதற்கு 33 ஆண்டுகள் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள், தூபிகள் மற்றும் புனித விகாரைகள் என்பன இலங்கையின் ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை அறியமுடிகின்றது.

பாடசாலைகளால் மேற்கொள்ளப்படும் கல்விச் சுற்றுலாக்கள் மூலமாக ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைகின்றது. குறிப்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் கல்விச் சுற்றுலாக்கள் பெரும்பாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களையும், நினைவுச் சின்னங்களையும், பௌத்த விகாரைகளையும் பார்வையிடச் செல்வதாகவே அமைகின்றது. பொதுவாகத் தமிழ் மாணவர்கள் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் இலங்கையில் காணப்படும் பௌத்த விகாரைகள், நினைவிடங்கள் என்பனவற்றைப் பார்வையிட அதிகம் வருகின்றனர். இதன் மூலமாக ஏனைய கலாசாரம் தொடர்பாக அறிவதுடன் ஆன்மீக ரீதியான வளர்ச்சிக்கும் இலங்கையில் இக்கல்விச் சுற்றுலா பெரிதும் துணையாக அமைகின்றது.

ஆய்வுச் சுற்றுலா மேற்கொள்பவர்கள் வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயங்களைப் பார்வையிடச் செல்கின்றனர். இதன் காரணமாகவும் இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலாவின் வளர்ச்சி அதிகமாக ஏற்படுகின்றது.

இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியானது பெருவளர்ச்சியடைந்து வருகின்றமையைக் காணமுடிகின்றது. குறிப்பாக இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்வதற்கு ஆலயங்கள் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள், இடிபாடுகள் என்பன காணப்படுகின்றன. இந்து, பௌத்த மதங்களைச் சார்ந்தவையாக இவ்விடங்கள் காணப்படுகின்றன. இதனால் மதங்களின் வளர்ச்சியும் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக ஆராய்கின்ற போது இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலாவானது வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது.

இலங்கையில் காணப்படும் இந்து ஆன்மீகச் சுற்றுலாத் தலங்கள்

இலங்கை வரலாற்று கலாசார முக்கோண வலைய அமைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது; குறிப்பாக 5 கலாசாரத் தலங்கள் காணப்படுகின்றன. கொழும்பு தலைநகர் தொடக்கம் வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ள தலைநகரங்கள் கலாசார முக்கோணத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் கலாசாரப் புனித இடங்களாகப் பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, சிகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய புராதன வரலாற்று இடங்களாகக் கொள்ளப்படுகின்றன. இத்தலங்கள் புராதன வரலாற்று இடங்களாகக் காணப்பட்டாலும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான சிறந்த இடங்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் காணப்படும் இந்து சமயம் தொடர்பான பழமை வாய்ந்த ஆலயங்கள் சிறந்த ஆன்மீகச் சுற்றுலாத் தலங்களாக அமைவதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணக் கோயில்கள்

இலங்கையின் வட பிரதேசம் தனித்துவம் வாய்ந்த சமய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இலங்கையின் வரலாற்று சாராம்சங்களின் பூர்வீகத்தையும் கொண்டமைந்துள்ளது. உள்நாட்டுப் போரின் தாக்கங்கள் இடம்பெற்றிருந்தாலும் இன்றும் பன்முகத்தன்மை உடையதாக மிளிர்கின்றது. ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடமாக உள்ளது. வடபகுதி இந்து சமயம் சார் ஆலயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், நல்லூர் கந்தசுவாமி கோயில், நகுலேஸ்வரம், மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் முதலான இந்து சமயம் சார் தலங்கள் இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களாக உள்ளன.

இலங்கையில் 'கோயில்களின் நகரம்' என அறியப்படுவது இந்த யாழ்ப்பாணப் பிரதேசமாகும். அற்புத தேசமாகவும், ஆன்மீகத் தேடலுக்கான மிகப் பிரபலமான இடமாகவும் கொள்ளப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் நல்லூர் கோயில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. நல்லூர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் காணப்படும் முக்கிய இடமாக நாகதீப விகாரையும் ஒன்றாகும். புராணத்துடன் தொடர்புடைய ஆலயமாகும். இவ்வாலயத்தில் தியானப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர்

இலங்கையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களுள் முக்கியமானது நல்லூர் முருகன் கோயிலாகும். வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தலைநகரான நல்லூர் எனுமிடத்தில் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளது.

இவ்வாலயம் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சத்தில் வந்த அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனான புவனேபாகு என்பவனால் கட்டப்பட்டதாக வரலாற்று நூலான 'கைலாய மாலை' எனும் நூல் குறிப்பிட்டு நிற்கின்றது. எனினும் இவ்வாலயம் கட்டப்பட்டதற்கான பல சான்றுகள் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாலயம் இலங்கையின் வடபகுதியில் மூவின மக்களாலும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வழிபடும் ஆன்மீகத் தலமாக உள்ளதை அறியமுடிகின்றது.

நகுலேஸ்வரம்

இலங்கையின் வடபகுதியின் கீரிமலை எனுமிடத்தில் நகுலேஸ்வரம் அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் பழம்பெரும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பஞ்சேஸ்வர ஆலயங்களுள் முதன்மையான ஆலயமாகக் காணப்படுவதுடன் சிவனினால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தத்தைக் கொண்டும் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளது. இராவணனால் கட்டப்பட்ட ஆலயம் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாலயம் புராண இதிகாச காலத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்றது. அவ்வகையில் இங்கு அமையப்பெற்றுள்ள தீர்த்தம் தொடர்பாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. குறிப்பாகப் பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரும் பொழுது அதன் துளிகள் இத்தலத்தில் விழுந்ததாகப் புராணக் கதைகள் கூறுவதை அவதானிக்கலாம். அத்துடன் அன்னை பார்வதி தேவிக்காகப் பரமசிவன் தீர்த்தம் அமைத்தார் எனப் பௌத்த நூலான மகாவம்சம் குறிப்பிடுவதாக அறியப்படுகின்றது.

மகாபாரதத்துடனும் தொடர்புடையதாகவும் அறியப்படுகின்றது; அதாவது அர்ச்சுனன் இத்தலத்தில் தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றார் எனவும் கூறப்படுகின்றது. இவற்றுடன் நகுல எனும் முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி தனது கீரி முகம் நீங்கப் பெற்றார் என வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.

கீரிமலை நகுலேஸ்வரம் இந்தியாவில் காணப்படும் காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு நிகரான ஆலயமாகவும் போற்றப்படுகின்றது. இவ்வாலயம் வந்து இத்தலத்தை வழிபட்டுத் தீர்த்தத்தில் நீராடிச் சென்றால் பலன் பெறமுடியும் என்று கூறப்படுகின்றது. இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையினரான பௌத்த மதத்தினரும் இவ்வாலயம் வந்து செல்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தில் அதிகமான சைவ மக்களால் தங்களுடைய பித்ருக்கடன்களை இங்குள்ள தீர்த்தத்தில் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. ஒட்டுமொத்தமாக ஆராய்கின்ற போது நகுலேஸ்வரம் சிறந்த ஆன்மீகத் தலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்கேதீஸ்வரம்

இவ்வாலயம் இலங்கையின் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாந்தை எனும் மாதோட்ட நகரில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் காணப்படும் பழமை வாய்ந்த ஈஸ்வரங்களுள் திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும். ஆன்மீகச் சுற்றுலாத் தலங்களில் சிறப்பான தலமாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

ஆதிகாலத்தில் கேதுவினால் பூசிக்கப்பட்டமையினால் கேதீஸ்வரம் எனும் பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. திருக்கேதீஸ்வரம் சமயகுரவர் நால்வரில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். இதனால் இவ்வாலயம் சிறப்புக்குரியதாகக் காணப்படுகின்றது.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு இந்தியாவில் இருந்து அநேகமான பயணிகள் வருகை தருவதை அறியக்கூடியதாக அமைகின்றது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் ஊடாக, அதாவது கடல் வழியாக வருகின்றனர்.

பாலாவிக் கரையில் கௌரியம்பாளுடன் திருக்கேதீஸ்வர நாதர் வீற்றிருக்கின்றார். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக வன்னிமரம் காணப்படுகின்றது.

சிவனொளிபாத மலை

இலங்கையில் காணப்படும் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களுள் சிவனொளிபாத மலையும் ஒன்றாகும். இங்கு நான்கு சமயத்தவர்களும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் இடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் வாழும் பௌத்தர்கள் சிவனொளிபாதமலையைத் தங்கள் கடவுளான புத்தரின் பாதம் பதிந்துள்ள புனிதமான இடம் என்று கருதுகின்றனர். இம்மலையைப் பௌத்தர்கள் 'ஸ்ரீபாத' என்றும் அழைப்பதைக் காணலாம். அதே போன்று இந்துக்கள் தங்களது சிவன் உறைந்துள்ள இடம் என்று கருதி 'சிவனொளிபாத மலை' என்றும் அழைக்கின்றனர். கிறிஸ்தவர்கள் 'ஆதாம்ஸ் பீக்' (Adam's Peak) என்றும், முஸ்லிம் இனத்தவர்கள் 'பாவாத் மலை' என்றும் அழைக்கின்றனர்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் அமைந்துள்ள மலையாகும். இம்மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமுடையதாக அமைந்திருக்கின்றது. அத்துடன் இம்மலை உச்சி 1.8 மீட்டர் அளவிலான பாறையைக் கொண்டு காணப்படுகின்றது. இப்பாறையானது பௌத்த மக்களால் கௌதம புத்தரின் காலடிச் சுவடு எனப் போற்றப்படுகின்றது. இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானின் காலடிச் சுவடு என்று நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆதாம் என்னும் கடவுளின் பாதச் சுவடு என நம்பிக்கை கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

யாத்திரிகர்கள் இங்கு அநேகமான இடங்களில் இருந்தும் வருகை தருகின்றனர். இங்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலையில் உதிக்கும் சூரிய உதயத்தைக் காணவே அதிகம் பயணிக்கின்றனர். இவ்வாறு அனைவராலும் புனிதத் தலமாகப் போற்றப்படும் சிவனொளிபாத மலையானது நான்கு மதத்தினரின் ஒற்றுமைச் சின்னமாகவும், ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கான சிறந்த ஆன்மீகத் தலமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்காமம்

இலங்கையில் புனித ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் சிறந்த தலமாகக் கதிர்காமம் காணப்படுகின்றது. இலங்கையின் நான்கு பக்கங்களிலிருந்தும் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக இலங்கை மட்டுமன்றி இந்தியா முதலான நாடுகளிலிருந்தும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்காமத்தில் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் நாட்களில் தாமிரத்தில் அல்லது தங்கத்தினால் எழுதப்பட்ட பரம ரகசியம் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த எந்திரம் வெள்ளைத்துணியால் மூடிய பேழை ஒன்று யானை மீது வைத்து உலா வருகின்றனர். இக்காட்சியைக் காண்பதற்கு அநேகமான யாத்திரிகர்கள் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஆன்மீகத்துடனும் வரலாற்றுடன் தொடர்புடைய வகையிலும் பல்வேறு தலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற போது ஆன்மீக உணர்வு ஏற்படுவதுடன் ஏனைய மதக் கலாசாரங்களை மதிக்கும் பண்பும் வளர்கின்றது. காரணம் இலங்கை பல்லினக் கட்டமைப்பில் உள்ளமையினால் ஏனைய மதக் கலாசாரங்களை மதிப்பதற்கான இடமாக அமைகின்றது.

பொன்னம்பலவாணேஸ்வரம்

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் இலங்கையின் மேல் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள பழம்பெரும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு மூலவராகச் சிவன் வீற்றிருக்கின்றார். இவ்வாலயம் விஜயநகரக் கட்டடக்கலை அமைப்பை ஒத்ததாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் எனுமிடத்தில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் எனப்படும் முதலியாரால் இக்கோயில் கட்டப்பட்டதாக அறியமுடிகின்றது. அதன்பின்னர் அவரது மகனான சர். பொன். இராமநாதன் தனது தந்தையாரால் கட்டப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய கோயிலை 1907-ஆம் ஆண்டளவில் ஆரம்பித்து 1912-ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாலயமானது கருங்கல்லால் கட்டப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் விஜயநகரக் கட்டடக்கலை தழுவி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள், சிற்பங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இக்கோயில் அமைப்பதற்கென்று கற்பாறைகள் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அத்தோடு இங்கு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் இருந்து செதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்கூரைக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி தடிமனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கோயிலில் தற்போது காணப்படும் இராஜகோபுரம் 1965-ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது. எனினும் இக்கோபுரம் கருங்கற்களால் கட்டப்படவில்லை; சீமெந்தினால் கட்டியுள்ளதாக அறிய முடிகின்றது. இக்கோபுரமானது ஐந்து மாடிகளைக் கொண்டதாகவும், 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளதோடு இதற்கு வர்ணம் தீட்டப்படாமல் கருங்கற்களால் செதுக்கிய கட்டடம் போன்று அமைக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்திற்கு மூவின மக்களும் வருகை தருகின்றனர். இதனால் இவ்வாலயம் சிறந்ததொரு ஆன்மீகத் தலமாக இலங்கையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவுரை

இலங்கைத் தீவு போர் முதலான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் சுற்றுலாத்துறை பெருவளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதற்கு ஒரு உந்து சக்தியாகச் சுற்றுலாத்துறை பங்கு வகித்துள்ளமையை அவதானிக்கலாம். அவ்வாறே சுற்றுலாத்துறையில் குறிப்பாக ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளமையைக் காணலாம். இதற்குக் காரணம் இலங்கை நாடு பல்லின மக்கள் வாழுமிடமாகும். இதனால் இங்கு பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் கலாசார நினைவுச் சின்னங்கள், வழிபாட்டிடங்கள் என இன்னோரன்ன பல இடங்கள் காணப்படுகின்றன. இவை ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைவதற்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. எனவே ஒட்டுமொத்தமாக ஆராய்கின்றபோது இலங்கையில் ஆன்மீகச் சுற்றுலா வளர்ச்சியடைந்து வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

உசாத்துணைகள்

1.    [https://www.kanthakottai.org](https://www.google.com/search?q=https://www.kanthakottai.org)

2.    [https://www.kamakoti.org/tamil/tirumurai244.html](https://www.google.com/search?q=https://www.kamakoti.org/tamil/tirumurai244.html)

3.    இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வருடாந்த அறிக்கை – 2020.

4.    வர்ணகுலசிங்கம், க. (2014), சூழலியல் சார் சுற்றுலா, கிழக்குப் பல்கலைக்கழகம்.

5.    லட்சுமி கார்மேகம், எஸ். கேசவன் (2022), "ஆன்மீகச் சுற்றுலாவின் மதுரை ஆறுகளும் படைக்கோயில்களும்", முதலாவது சர்வதேச இந்து மாநாடு – 2022.

6.    இலங்கைக்கான சுற்றுலா தொடர்பான தேசிய கொள்கை (2021).

7.    [https://www.newsuthayam.com/article/2024/03/24](https://www.google.com/search?q=https://www.newsuthayam.com/article/2024/03/24)

8.    பத்திரிகை: தினகரன் (E-Paper), 2023 மே 30, "ரஜினியின் இலங்கைச் சுற்றுலா, ஆன்மீகத்துறையை மேம்படுத்தும்".

 

கருத்துகள் இல்லை: