7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2026

கவிதை கதம்பம் - முனைவர் பீ. பெரியசாமி


எல்லோரும் இருக்கிறார்கள்

இங்கும் அங்கும்

செல்கிறார்கள்

எனக்கு மட்டும் யாருமில்லை

நீ இல்லாத

நிர்வாண உலகினில்...


ஒவ்வொரு சிரிப்பும்

ஓராயிரம் உணர்வுகள்

உன்னில் கரைந்தேன்

உறவை மறந்தேன்

உலகமே இருளானது

உன் திருமண நாளில்...


பயிர்க் கடன்கள்

பருவத்தே உயர்கின்றது

பயிரிட்டவன் உயிரோ

காலமெல்லாம் கரைகிறது...


நீ, நான், நிழல்

எல்லாம் சரி

வயிற்றுக்குச் சோறு...


அட! அவர்கள் அப்படித்தான்

ஐந்தாண்டுக்கு ஒரு முறை

அதையெல்லாம் சட்டை செய்யாதே.


விடியும் முன்பே

அறுந்துப் போனது

குடிகார காதலன்

கட்டிய தாலி...


கல்வி அனைத்தையும் தரும்

ஆம்..

அது வறுமையின் வலிகளையும் தரும்...

அதைப் போக்கும் வழியையும் தரும்.


நீண்ட நேர உரையாடல்

அப்புறம் என்ன?

ஒன்னுமில்லை...

அவ்வளவுதான் வாழ்க்கை.


எதையெதையோ கேட்டார்கள்

எதையும் கேட்கவில்லை

அம்மாவின் இறப்புச் செய்தியின்போது

மகன்...


எல்லாம் சிறிது காலம்

அந்த எல்லாம்

எதற்கான எல்லாம்

எவற்கான எல்லாம்

எல்லாம் எல்லாமாகவே

இருந்து போகட்டும்


என் பாட்டன்

வாங்கிய இரண்டு ஏக்கர்

என் அப்பன்

வாங்கிய மூன்று ஏக்கர்

நான் வாங்கிய பட்டம்


வாழ்க்கை போதும்

எனும் போது

பொறு என்கிறது

கிளிகளின் ஓசை

அற்புதம் என்றதும்

ஆரம்பமாகிறது அடுத்தக்கட்டம்.

கருத்துகள் இல்லை: