4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

இலக்கியங்கள் காட்டும் மருத்துவம்



.அக்ஸிலியாமேரி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

அக்சிலியம் கல்லூரி, வேலூர்.

கைப்பேசி: 9952582342

மின்னஞ்சல்: amalauxi1288@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

சங்ககால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இருந்த பொழுதினும் நோயினையும், நோயினை அறியும் தன்மையையும் பெற்றிருந்தனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. அளவுக்குமீறிய உணவு நஞ்சு என்பதையும், உண்ட உணவு செரித்த பின்னரே உண்ண வேண்டுமென்பதையும் விளக்குகிறது. மேலும், காயம்பட்ட புண்ணுக்குப் பஞ்சுவைத்தல், சோதனைக்குழாய் மூலம் கருவுற்ற செய்தி, மாற்று அறுவைசிகிச்சை மற்றும் கண்தானத்திற்கு வித்திட்ட செய்தி, பரிணாமவளர்ச்சி குறித்து திருவாசகம் கூறும் செய்திகள் இடம்பெற்று இருப்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

 

கலைச்சொற்கள்

1.             யாக்கைஉடல்

2.             கடவுள்ஒருமீன்சாலினி- கடவுட் கற்புடைய அருந்ததி

3.             ஊன் - தசை

4.             அறுவர்- கார்த்திகை மகளிர்

5.             நீலப்பைஞ்சுனைநீலப்பூக்கள்

6.             நிறைவயின் - கற்புடைமையின்

7.             கதுவாய் - வடு

8.             துதிநதி

9.             நிவந்துஉயர்ந்து

10.          தன்னைமார்- தமையன்மார்

 

முன்னுரை

நோயற்றவாழ் வேகுறைவற்ற செல்வம்என்பது பழமொழி. மனிதன் நீண்ட நாட்கள் வாழவேண்டுமெனில் நோயின்றி வாழ்தல் வேண்டும். அதற்கு அவன் உடல்பலமும், உள்ள பலமும் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு தொமில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் நோய் வந்தால் முதலில் நடுவது மருத்துவரையே. அறிவியல் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே தமிழர்கள் மருத்துவ அறிவினைப் பெற்ற இருந்தனர் என்பதை இலக்கியங்கள்வழி அறியமுடிகிறது.

 

மருத்துவம்

சங்ககால மக்கள் இயற்கையை அதிகமாக விரும்பி இயற்கையோடு இயைந்து வாழ்ந்து இருக்கின்றனர். இருப்பினும் காலச்சூழல், உணவுப்பொருட்கள், வீரியம்மிக்க உயிரினங்களின் தீண்டல், எதிர்பாராத விபத்து போன்ற நேரங்களில் மருத்துவம் தேவைப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நோயையும், நோயின் தன்மையையும் நன்குஅறிந்து மருத்துவம் செய்தனர் என்பதை,

             ஊரும் அயலும் சேரியோரும்

      நோய் மருகு அறிநரும” (தொல். பொருள். 492)

என்ற தொல்காப்பிய நூற்பாவின் வழி அறிய முடிகிறது.

உணவு உண்ணும் முறை

அளவுக்குமீறினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழிக்கு ஏற்ப நம்முன்னோர் உணவு உண்ணும் முறையினையும் நன்கு அறிந்திருந்தனர். அளவுக்குமீறிய உணவானது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தனர். ஒரு நாளைக்கு ஒருவேளை உண்பவர் யோகி. இரண்டு வேளை உண்பவர் போகி, மூன்று வேளை உண்பவர் நோயாளி, நான்கு வேளை உண்பவர் மரணத்தை நோக்கி வேகமாய்ப் பயணிப்பவர் என்பதை,

             ஒருபோது யோகியேயொண்டளிர்க்கைமாதே

      இருபோபோகியேயென்பதிரிபோது

      ரோகியேநான்குபோதுண்பானுடல்விட்டுப்

      போகியேயென்றுபுகல்” (நீதிவெண்பா. 9)

எனும் பாடல் மூலம் உணவு உண்ணும் முறையை நீதி வெண்பா சுட்டி காட்டுவதை அறிய முடிகிறது.

வானுலகையும் இவ்வுலகையும் நன்கு உணர்ந்தவர்கள் விரதங்களால் உயர்ந்த கொள்கைகளைக் கடைப் பிடிப்போர் இளையாத உடலையுடையோராய் இருந்தனர் என்பதை

             இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து

வானமும் நிலனும் தாம்முழுது உணரும்

சான்ற கொள்கைச் சாயா யாக்கை” (மதுரைக்காஞ்சி . 478 -480)

உடலினை பேணிக்காத்தனர் என்பதை மதுரைக்காஞ்சி பாடல் வரிகள் தெளிவாக்குகின்றன.

 

திருக்குறளில் மருத்துவம்

திருக்குறளில் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைப் படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றை சமப்படுத்த இயற்கை தரும் காய்கனிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர் என்பதை

                மருந்தாகித்  தப்பமரத்  தற்றல் (குறள். 217)

திருவள்ளுவர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

உண்ட உணவு செரித்த பின்னரே உண்ண வேண்டுமெனத் தமிழ் மருந்து கூறுகிறது. முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பதை,

             மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

      அற்றது போற்றி உணின்” (குறள் .942)

பொய்யாமொழிப்புலவர் குறள் மூலம் எடுத்து கூறுகின்றார். திருக்குறளை ஒரு மருத்துவ நூல் என்று குறிப்பிடுவது மிகப்பொருத்தமான ஒன்று. நோய்கள் என்பதனுள் உடலியல் சார்ந்தாகவும், உளவியல் சார்ந்தாகவும் அமைகிறது. மருத்துவ அறிவியல் மூலம் ஆராய்ந்தப் பின்னரே புறநலனும், அகநலனும் சார்ந்ததேயாகும் என்று கூறுகின்றனர். கருத்தாலும், புதுமையாலும் எக்காலத்திற்கும் பொருந்தி அமைவதாக திருக்குறள் இருக்கின்றது.

 

சங்க இலக்கியங்களில் மருத்துவம்

காயம்பட்ட புண்ணுக்கு பஞ்சு வைத்துக் கட்டும் மருத்துவ வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை,

                        உழக்கிக் குருதி ஒட்டி

            கதுவாய் போகியது திவாய் எஃகமொடு

            பஞ்சியும் களையாப் புண்ணர்

            அஞ்சு தகவுஉடையர் இவள் தன்னைமாரே” (புறம். 353)

புறநானூறு பாடல்வழி அறிய முடிகிறது.

 

சோதனைக் குழாய் மருத்துவம்

மருத்துவ அறிவியல் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒரு பெண்ணின் கருவை மற்றொரு பெண்தாங்கி அவ்வுயிரை வளர்த்து உலகிற்கு அளிக்கின்றாள். ஆனால் அறிவியல் அறிவு வளராத கால கட்டத்திலும்கூட கருவை மற்றொரு பெண் சுமந்துப் பெற்றெடுத்தல் பற்றி பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

            தடவுநிமிர் முத்தீப்பேணிய மன்எச்சில்

      வடவயின் விளங்கு ஆல்உறை எழுமகளிருள்

      கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய

      அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்

      மறுஆறு கற்பின் மாதவர் மனைவியர்

      நிறைவயின் வழாஅது நிற்சூலினரே

      நிவற்து ஓங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப்

      பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்  (பரிப்பாடல் : 5(42 -49))

சிவபெருமானும் உமாதேவியும் கூடி இன்புற்றதால் உண்டாகிய கருவினை அழிப்பதற்கு சிவபெருமானிடம் இந்திரன் வேண்டினான். சிவபெருமானே அக்கருவை சிதைத்து இந்திரன் கையில் கொடுத்தார். இந்திரனிடம் இருந்து அக்கருவை முனிவர்கள் எழுவரும் பெற்று வேள்வித் தீயிலிட்டு பின் அதனைக் கார்த்திகை மகளிர் அறுவரும் உண்டு கருவுற்றனர்

 

புராணங்களில்அறுவைமருத்துவம்

பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் இக்கால கண் தானத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கண்ணப்ப நாயனார் புராணத்தில் காளத்திநாதரின்   கண்களில் குருதி வழிவதைக் கண்ட கண்ணப்பர்பச் சிலையைப் பிழிந்து ஊற்றினார். ஊற்றிய பின்னரும் குருதி வடிவதைக் கண்ட கண்ணப்பர் ஓர் உறுப்பிற்கு வரும் நோயைத் தீர்ப்பது இன்னொரு உறுப்பாகும் என்று உணர்ந்தனர். இதனை,

            உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு

      ஊன் எனும் உரைமுன் கண்டார் 

(திருத்தொண்டர்புராணம், இலைமலிந்தசருக்கம், முதற்காண்டம்)

பின்னர் கண்ணப்பர் தமது வலக்கண்ணைக் கூர்மையான அம்பினால் தோண்டி ஈசனின் வலக்கண்ணில் அப்பினார் என்பதை,

            மதர்த்தெழும் உள்ளத்தோடு

      மகிழ்ந்து முன்னிருந்து தம்கண்

      முதல்சரம் அடுத்து வாங்கி

      முதல்வர் தம் கண்ணில் அப்ப

(திருத்தொண்டர்புராணம், இலைமலிந்தசருக்கம், முதற்காண்டம்) 

எனும் வரிகளானது இன்றைய மருத்துவ உலகில் சாத்தியமாகும் உறுப்பு மாற்று சிகிச்சையினைப் பெரியபுராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கம்பராமயணம் உடலில் தோன்றும் கட்டியினை அறுத்து தீயகுருதியினை வெளியேற்றி வேறொரு மருந்தினால் துன்பம் தீர்த்தல் வேண்டும் என்பதனை,

            உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி

      சுடல் உறச்சுட்டு வேறோர் மருந்தினால் துயரம்தீர்வர்

(கம்பராமாயணம், பாலக்காண்டம். பா. 141)

இவ்வரிகள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

பரிணாம வளர்ச்சி

திருவாசகத்தில் பல்வகை அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக் விடக்கின்றன. பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

            புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்;

      பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

      கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

      வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

      செல்லஅ நின்ற வித்தாவர சங்கமத்துள்

      எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான்” (திருவாசகம். பா. வரி 26-31)

இறைவன் புல்லாகியும், பல வகையான பூண்டுகளாகியும், புழுவாகியும், மரமாகியும், பல விலங்குகளாகியும், மனிதர்களாகியும், பேய்களாகியும், பூதங்களாகியும், வலிய அரசுரர்கள், முனிவர்கள், தேவர்களாகியும் பிறந்து பரிணாம வளர்ச்சியைப் பெற்றார் என்பதை மேற்கண்ட பாடலின் மூலம் அறிய முடிகிறது.

            மானுடப் பிறப்பினுள் மாதாஉதரத்து ஈனமில்

      கிருமி செருவினில் பிழைத்தும்” (திருவாசகம். 225)

எனத்தொடங்கும் பாடலடிகள் தமிழர்கள் கருவியல் அறிவை பெற்ற இருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது.

 

முடிவுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அறிவியல் முறையில் மருத்துவம் பெற்று இருந்தனர். அறிவியலினின்று மனிதனைப் பிரித்தறிதல் இயலாது. அவனின் செயல்பாடுகள் அனைத்திலும் அறிவியல் சிந்தனைகள் அமைந்துள்ளது. மொழிக்கும், மனித சிந்தனைக்கும் உள்ளவலுவான தொடர்பு இன்று பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருகின்றது.  தமிழ் முதல் மொழியாய் தோன்றி இன்று இலக்கிய, இலக்கண சிறப்புடன் விளங்கி அறிவியலையும் ஒருபாகமாய்க் கொண்டிருந்தது என்பதை கட்டுரை வயிலாக அறிந்துக் கொள்ள முடிகிறது.

 

துணை நூற்பட்டியல்   

  1. சேக்கிழார், பெரியபுராணம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1970. 
  2. சிற்பி பாலசுப்பிரமணியம், (உரை) திருக்குறள், தாமரை ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை. பதி.2014.
  3.  இராமசுப்ரமணியன் வ.த. (உரை), திருவாசகம், திருமகள் நிலையம், சென்னை, பதி.2006.
  4.  குருநாதன் (.),புறநானூறு மூலமும் உரையும், வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி. 2003.
  5. பொ.வெ.சோமசுந்தரனார் (உரை), மதுரைக்காஞ்சி, கழக வெளியீடு,பதி.1956.
  6.  புலியூர்க்கேசிகன் (உரை), பரிபாடல், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,பதி.2010.
  7.  கதிர் முருகு(உரை), நீதி வெண்பா, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2007.
  8. இராமசுப்ரமணியம்  வ.த., (உரை),  கம்பராமாயணம், திருமகள் நிலையம், கதி. 2005.