4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

குறுந்தொகையில் பொருளாதாரச் சிந்தனை


முனைவர் மு. ஸ்ரீதேவி,

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

அக்சிலியம் கல்லூரி,

காட்பாடி, வேலூர் - 6.

devibalavellore@gmail.com


 

ஆய்வுச்சுருக்கம்

                சங்கத் தொகைநூல்கள் எட்டும் நாகரிகம் (Civilization), பண்பாடு (Culture), கலாச்சாரம் (Culture) என்ற நிலைகளில் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. இச்சமூகம் பொருள் தேடி நெடுந்தூரம் சென்றனர் என்றும், தன் மனைவியை நெடுநாட்கள் பிரிந்திருந்தனர் என்றும் பாலைத்திணைப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. ஏனைய நான்கு திணைகளிலும் பொருள் குறித்த பயன்பாட்டுச் சிந்தனைகளைக் காணமுடிகிறது. எனவே சங்ககாலத் தொகைநூல் சமூகத்தின் பொருளாதாரச் சிந்தனையை மையமிட்டு அமைகிறது என்பதை குறுந்தொகைவழி இக்கட்டுரை ஆராய்கிறது.

 

கலைச்சொற்கள்

            நாகரிகம்                 -               Civilization                           

பண்பாடு                -               Culture

                கலாச்சாரம்           -               Culture

                செல்வம்                 -               Wealth

                நீர்வேட்கை          -               Thirst of Water

                மதிப்பு                    -               Respect

 

பொருள்

         பொருள் என்பது இடத்திற்கு ஏற்ப அர்த்தப்படும். இங்கே பொருள் என்பதுசெல்வம்’ (Wealth) என்ற பொருண்மையில்கையாளப்படுகிறது. ‘பொருளற்றவர்களையும் பொருளாகச் செய்யும் பொருள்எந்தக்காலத்திலும் மனிதவாழ்வில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

 

பொருளின்சிறப்பு

                      அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

            இவ்வுலகம் இல்லாகி யாங்கு(குறள் - 247)

பொருளின் சிறப்பை குறுந்தொகை பலபாடல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உணர்த்துகிறது. சான்றாக, தோழி கூற்றாக வரும் குறிஞ்சித் திணைப் பாடலைக் காணலாம்.

                         நில்லாமையே நிலையிற் றாகலின்

            நல்இசை வேட்ட நயனுடைய நெஞ்சின்

            கடப்பாட் டாளனுடைப் பொருள் போலத்” (குறிஞ்சி.143)

இப்பாடலில் நல்லபுகழை விரும்புகின்றவரின் செல்வம் அறத்தின் பொருட்டுச் சிறுகச்சிறுகக் குறையும். அதுபோல தலைவன் வரவால் உன் பசலையும் குறைந்து அற்றுப்போகும் என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள். இதன்வழி நிலையாமையே நிலையானது என்பதை உணர்ந்த தலைவன் நிலைக்கும் படியான நல்லபுகழை விரும்பியே பொருள்தேடச் சென்றுள்ளான் என்றும், பொருளின் சிறப்பு அதன் தேவையைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்தும் பொருட்டும்கடப்பாட்டாளனுடைப் பொருள்என்ற வரியைத் தோழி பயன்படுத்தியுள்ளாள் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

 

பொருளின்மதிப்பு

                நெருக்கடியான சூழ்நிலையில் எந்த ஒன்று அந்தநேரத்துத் தேவையைப் பூர்த்திசெய்கிறதோ அதுவே அந்த நேரத்தின் மதிப்புமிக்கப் பொருளாகும். அத்தன்மையில் களவுக்காலத்தில் தலைவியைக் கூடியிருந்த போது உன்னைவிடப் பெறுதற்கு அரியபொருள் ஒன்று இவ்வுலகிலே எங்கும் இல்லை என்றான் தலைவன். இவ்வார்த்தையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள் தலைவி.

                கற்புவாழ்வில் தலைவன் பொருளுக்காப் பிரியக் கருதியதைத் தோழி தலைவிக்கு அறிவிக்கிறாள். சற்றும் இதை எதிர்பாராத தலைவி,

                         அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

            பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்

            உரவோர் உரவோர் ஆக

            மடவம்ஆக மடந்தை நாமே” (பாலை – 20)

என்று கூறுகின்றாள். அன்பும் அருளும் துணையுமே அகவாழ்வின் ஆதாரம். இவற்றைப் புறக்கணித்து, பொருளைப் பெரிதென நினைத்துப் பிரியத்துணிந்ததுமின்றி அதைச் சொல்லவும் செய்த தலைவன் மிக்க அறிவுடையவன். அவன் பிரிவைத் தாங்காத நாம் அறிவற்றவர்தாம் என்று ஏமாற்றமும் வெகுளியும் தோன்ற வருந்திக் கூறுகிறாள்.

                நீர்வேட்கை (Thirst of Water) கொண்டவனிடம்தண்ணீரா, உணவா என்று கேட்டால் அவன் தண்ணீரைத்தான் தேர்வுச் செய்வான். அத்தன்மையில் ,

மனித தேவைகளைப் பூர்த்தி  செய்கிற பொருளுக்கும் அவற்றோடு தொடர்புடைய கருத்திற்கும் இடையே உள்ள உறவை அறியும்போதுமதிப்பு’ (Respect) என்ற தத்துவப் பிரச்சினை தோன்றுகிறது” (நா.வா.பக்.66)

என்று நா.வானமாமலை அவர்களின் கருத்து மேற்கண்ட பாடலுக்கானத் தத்துவ விளக்கமாக அமைகிறது.

                அன்பான வாழ்வை பயனுடைய இன்பவாழ்வாக அதாவது, அறவாழ்வாக மாற்ற முயற்சிக்கும் சூழலில், அந்த நேரத்தில் தலைவனுக்குத் தலைவியை விட பொருள் மதிப்புடையதாகிறது.

 

பொருளாதாரத்தேடல்சிந்தனை

                ஒன்றன் தேவையே அதனைத் தேடத் தூண்டுகிறது. மனதைக் குடையும் எந்தச் செயலையும் செய்து முடித்த பின்னரே மனமானது நிறைவடைகிறது. இது மனித இயற்கை. பொருள்கருதிப் பிரிந்தான் தலைவன். இதனை அறிந்த தலைவி வருந்துகிறாள். தேற்றும் பொறுப்புடைய தோழி,  தலைவன் முன்புகூறியதை நினைவுப்படுத்துகிறாள்.

                         உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்

            இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவுஎனச்

            சொல்லிய வன்னம் தெளியக் காட்டிச்

            சென்றனர் வாழி தோழி” (பாலை – 283)

                முன்னோர் தேடியச் சொத்துக்களை வைத்துக்கொண்டு, சோம்பேறியாகக் குந்தித்தின்று, இளமையைக் கழித்துவிட்டால், முதுமையில் வறுமை வயப்படுவோம். உடல்தளர்ந்து தடியூன்றும் நிலையில் இரந்துண்ணும் இழிவு ஏற்படும். இத்தகையவாழ்வு இருளைவிடக் கொடியது. ஆகவே முன்னோர் தேடியச் சொத்துகளைப் பாதுகாத்து வைத்து, இளமை கழியுமுன்னே உழைத்து, செல்வங்களைச் சேர்த்து, இரப்பவர்க்குக் கொடுத்துத்தானும் உண்ண வேண்டும். இதுவே பயனுள்ள வாழ்வு என்று முன்பு அவர் சொன்னபடி இன்று பொருள்தேடிச் சென்றுள்ளார். தனது உயர்ந்தக் குறிக்கோளை முன்வைத்து கொடிய பாலைவழியே பிரிந்துச் சென்றுள்ள அவரை நாம் வாழ்த்த வேண்டும் என்று தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள். இப்பாடலில் தலைவனின் கூற்றாக வரும் முதல்இரண்டுவரிகளில் எட்டுத்தொகைச் சமூகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை அறியமுடிகிறது.  மற்றுமொருசான்று,

                         ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்எனச்

                        செய்வினை மைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு

            அம்மா அரிவையும் வருமோ

            எம்மை உய்தியோ உரைத்திசின் நெஞ்சே” (பாலை – 63)

                ஈந்தும் துய்த்தலும் வாழ்வதே வாழ்வின் பயனாகும். அத்தகு அகவாழ்வுதான் இல்லறவாழ்வாகும். இத்தகு இல்லறவாழ்வுதான் பயனுள்ள இன்பவாழ்வாகும். பொருளற்றவர் இந்தப் பயனுள்ள இன்ப வாழ்வை வாழமுடியாது என்று நெஞ்சம் அறிவுறுத்துவதாய் உப்பூரிக்குடிக்கிழார் அறிவுறுத்துகிறார். இப்பாடல்களின் மூலம் அறம் நிறைந்த பல்வேறு கோட்பாடுகளை, நியதிகளை, அகவாழ்விலும் புறவாழ்விலும் வாழ்நாள் நெறிமுறைகளாகப் பின்பற்றி வாழ்ந்த சங்கத்தமிழர் பண்பட்ட ஒரு சமூகத்தை நிறுவ முயன்று வெற்றியும் கண்டுள்ளனர்.

 

தொகுப்புரை

                பொருளின்சிறப்பு, மதிப்பு, தேவை போன்றவற்றை நன்கு அறிந்தவர்கள் பண்டைத்தமிழர் என்பதை இக்கட்டுரைவழி அறியமுடிகிறது. பொருளாதாரத் தேடல் மற்றும் பயன்பாடு என்றநிலையில் குறுந்தொகைச் சமூகத்தில் பொருளாதாரச் சிந்தனை அகவாழ்வுஅறவாழ்வு இன்பவாழ்வுஇல்லறவாழ்வு ஆகியவற்றை மையமிட்டு அமைந்திருக்கிறது என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியப்படுகிறது.

 

துணைநூற்பட்டியல்

 

1.             சங்க இலக்கியப் பதிப்புரைகள், பாரதி புத்தகாலயம்.

2.             குறுந்தொகை (மூலமும்உ ரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். பதி.2004.

3.             குறுந்தொகை, நா.வானமாமலை.

 4.            குறுந்தொகைமூலமும்தெளிவுரையும், முல்லைப்பதிப்பகம்.