4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

ஆற்றுப்படை நூல்களில் விருந்தோம்பல்


முனைவர் பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத்தலைவர்

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளாப்பாக்கம் – 632 521.

அழைக்க : 9345315385

மின்னஞ்சல் : periyaswamydeva@gmail.com


ஆய்வுச்சுருக்கம்

பண்டைத் தமிழர்கள் செல்வர்வறியவர் போன்று எவராயிருப்பினும் அவரவர்  தகுதிக்கேற்ப  கிடைத்ததைக் கொண்டு தம்மை நாடி வந்தவர்களுக்கு  எவ்வாறு உணவிட்டு  விருந்துபசரித்துள்ளனர்  என்பதைச்  சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களைக்கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சிறுபாணாற்றுப்படையும் பெரும்பாணாற்றுப்படையும் களங்களாகக்  கொண்டு இவ்வாய்வுக்கட்டுரையானது சங்ககால மக்களின் விருந்தோம்பல் பண்பை ஆய்கிறது. இதன்வழி, ஐந்திணை நிலங்களில் வசித்த பல்வேறு வகையான மக்களும் விருந்தாக வந்தவர்களுக்குத் தங்கள் உணவுகளைக் கொடுத்து உபசரித்த விருந்தோம்பல் பண்பினை அறியமுடிகிறது. இன்றைய நிலையைப் பார்ப்போமேயானால் நகரத்தில் வாழ்பவர்களும்  கிராமப்புற  மக்களும் தங்களிடம் உள்ளவற்றை எதுவாக இருந்தாலும் பகிர்ந்து உண்டு வாழும் சூழலைப் பார்க்க முடிகிறது. விருந்தினரை உபசரிக்கும் பாங்கும் அவர்களைவிட யாராலும் மிஞ்சிவிடாத வகையில் செயல்படுகின்றனர் என்பதன் மூலம் நம் பண்பாடு மாற்றம் பெறவில்லை என்பது அனைவராலும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

கலைச்சொற்கள்

சங்க இலக்கியம், விருந்தோம்பல், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பரிசிலர், அந்தணர், வேளாளர், வேடுவர், ஆயர், உழவர்எயிற்றியர், வலைஞர்திரையர்

 

முன்னுரை

பண்டைத் தமிழர்கள் செல்வர்வறியவர் போன்று எவராயிருப்பினும் அவரவர்  தகுதிக்கேற்ப  கிடைத்ததைக்  கொண்டு தம்மை நாடி வந்தவர்களுக்கு எவ்வாறு உணவிட்டு  விருந்துபசரித்துள்ளனர்  என்பதைச்  சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களைக்கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பக்க அளவை கருத்தில் கொண்டு சிறுபாணாற்றுப்படையும் பெரும்பாணாற்றுப்படையும் களங்களாகக்  கொண்டு இவ்வாய்வுக்கட்டுரையானது சங்ககால மக்களின் விருந்தோம்பல் பண்பை ஆய்கிறது.

 

பெண்டிரும் விருந்தோம்பல் பண்பும்

இல்வாழ்க்கை என்பது துன்பம் அடைந்தவர்களுக்கு ஒன்றை உதவும் அறவாழ்க்கையாக இருத்தல் வேண்டும் என்று கலித்தொகை வலியுறுத்துகிறது.

"ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்குதவுதல்"(கலி.133)

இல்லறத்தில் கணவனும் மனைவியும் இணைந்து ஆற்றவேண்டிய அறம் விருந்தோம்பல் ஆகும்இல்லற கடமைகளுள் மிக முக்கியமான ஒரு பண்பாக விருந்தோம்பலைச் சங்கத்தமிழர்கள் கருதினர். ஆய்மகள் வரகரிசியால் செய்யப்பட்ட சோற்றை விருந்தினருக்குக் கொடுத்தாள்எனும் செய்தியை,

"ஆய் மகளட்ட அம்புளி மிதவை” (புறம் 215)

என்ற பாடலடியால் அறியலாம். அரசர்கள் தம்மை நாடி வந்த விருந்தினர்களுக்கு ஊன்சோற்றை  வாரிவாரி வழங்கினர் என்ற செய்தியை,

"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்

அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுணி" (மேலது. 113)

எனவரும் புறப்பாடலடிகள் மன்னரின் விருந்தோம்பல் முறையை அறிவுறுத்துகிறது.

 

பரிசிலரை உண்பிக்கும் சிறப்பு

வானத்தில் விண்மீன்களின் நடுவில் விளங்கும் திங்களைப்போல் இனிய மகிழ்ச்சியை உண்டாக்கும் அறிஞர்வயவர்அரிவையர் ஆகிய கூட்டத்தின் நடுவே வீற்றிருப்பவன் நல்லியக்கோடன். பரிசில் வேண்டும் வறியவருக்கு மெல்லிய ஆடையையும்களிப்பைத்தரும் கள்ளையும், வீமனின் மடை நூல் நெறியில் தப்பாதபடி சமைத்த பல்வேறு உணவையும்பொன்னாலான உண்கலத்தில்நீ விரும்பி உண்ணும் சுவையறிந்து  விருப்பத்துடன் தானே அண்மையில் நின்று உண்ணச்செய்வான் என்பதை,

"காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்

பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கிக்

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன் பேணி

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி” (சிறுபாண்.236-240)

என்ற வரிகளால் அறியலாம்.

குரங்கானதுமடப்பம் கொண்ட மகளிரின் பற்களைப் போன்ற முத்தைவாளினது வாய் போற் பொருந்திய கிளிஞ்சலின் வயிற்றில் இட்டு மூடி உப்பு வணிகரின் பிள்ளைகளுடன் விளையாடும் இத்தகு வளம் கொண்ட பாண்டிய நாட்டின் தெருக்கள் தமிழ்மணம் கமழும்அம்மதுரை தரும் பரிசிலும் சிறியதாகும்.

மகாஅர் அன்ன மந்தி, மடவோர்

நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்

வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி” (மேலது.  56 – 60)

என்ற வரிகள் இச்செய்தியை விளக்குகின்றன.

எயிற்பட்டினம் கடற்கரைப்பகுதி. அவ்வழியாகச் சென்றால் களிப்பு மிக்க கள்ளின் தெளிவைப் பரதவர் உங்களுக்குப் பருகத்தருவர். அத்துடன் உலர்ந்த குழல் மீன் ஆட்டிறைச்சியையும் உண்டு மகிழலாம். இதனை,

"வறற்குழற் சூட்டின் வயின் வயின் பெறுகுவிர்" மேலது.163)

என்ற வரி அழகாக எடுத்துக்காட்டுகின்றது.

பவழம் போன்ற அவரைக்கொடி முல்லை நிலத்துக்கு உரியது. காயா மயில் கழுத்தைப்போல் மலரும். காந்தள் கைபோல் மலரும் வழிகளில் இந்திர கோபப்பூச்சி இருக்கும். இத்தகு காட்டை நீவிர் அடைந்தால்ஆயஎயின் குலப்பெண்டிர் சமைத்த புளிங்கறிச் சோற்றையும்ஆமானின் இறைச்சியையும் உண்ணத்தருவர் என்பதை,

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

……………………………………..

ஆமான் சூட்டின தமைவரப் பெறுகுவீர்” (மேலது. 175-177)

என்ற வரிகளால் அறியலாம்.

            வளம் நிறைந்த மருதநிலத்தில் உள்ளது நல்லியக்கோடனின் ஆமூர்சான்றோரையும் அரிய காவலையும் உடைய ஊர் இதுநீவிர் அவ்வழியே சென்றால் தொடியணிந்த கையை உடையவர் தன் மக்களால் உம்மை முறையாகத் தடுத்து அரிசிச்சோற்றை நண்டின் கலவையுடன் தருவர்நீவிர் பெறுவீர் இதை

"அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு

கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (மேலது. 194-195)

எனக் குறிப்பிட்டுள்ளார் நத்தத்தனார்.


அந்தணர் விருந்தோம்பல்

பார்ப்பார் என்று அழைக்கப்படுகின்ற அந்தணர்கள் இல்லத்தில் தோன்றிய பார்ப்பார்களையே  கடியலூர்  உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்கல்வியில் சிறந்து விளங்கும் இவர்கள் புலால் இல்லத்திற்குச் சென்றால் எவ்வாறு விருந்தோம்பல் செய்வார்கள் உண்ணமாட்டார்கள் காய்கறிகளையே உண்டனர் என்பதையும்

மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறு மீன்புரையும் கற்பின், நறுநுதல்

வளைக்கை மகடூஉ வயினறிந்து அட்ட,

சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்,

சேதாநறுமோர் வெண்ணையின், மாதுளத்து

உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து,

கஞ்சகம் நறுமுறி அளைஇ பைந்துணர்

நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின், வகைப்படப் பெறுகுவிர் (பெரும்பா.301-310)

என்ற வரிகளில் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது. பார்ப்பார் வாழ்கின்ற இடத்திற்குச் சென்றால் அருந்ததியைப் போன்ற கற்பில் முதலியவற்றைப் பெறுவீர்கள். இராஜ அன்னம் என்று அழைக்கப்படும் நெற்சோறு கிடைக்கும் மாதுளம் பிஞ்சைப் பிளந்துமிளகுப் பொடியும்கறிவேப்பிலையும் கலந்து பசும் வெண்ணெய்யிலேயே வேக வைத்து எடுத்த பொரியல் கிடைக்கும் நல்ல வடுமாங்காய் கிடைக்கும்இன்னும் பலவகையான சாதங்களும் கிடைக்கும் என்று பாணன் கூறுகிறான்.

இதன்மூலம் அக்காலத்தில் பார்ப்பனர் வீட்டில் வகைவகையான உணவுகள் சமைக்கப்பட்டதோடுதமது இல்லத்திற்கு எத்தகையோர் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரித்து உணவளித்து மகிழும் உயரிய பண்பாட்டையும் கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

 

வேளாளர் விருந்தோம்பல்

சொந்த நிலங்களில் உழுது விளைவித்து வாழும் உழவர் வீடுகளில் சமைக்கப்படும் உணவு வகைகள் குறித்தும் பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிறதுஅவர்கள் சமைத்த உணவை பிறருக்குக் கொடுப்பதிலும் எத்தகைய மகிழ்ச்சி கண்டார்கள் என்பதையும் காணும் பொழுது வேளாண் மக்களின் விருந்தோம்பல் பண்பாட்டை அறியமுடிகிறது.

தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்,

தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்,

வீழ்இல் தாழைக் குழவித்தீம் நீர்க்

கவைமுலை வாழைக் கூனி வெண்பழம்

திரள்அறைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்

தீம்பலதாரம் முனையிற் சேம்பின்

முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர் (மேலது..355-362)

என்ற பாடலில் வேளாளர் வீடுகளில் சுவையான களைகள் நிறைந்த பெரிய பலாப்பழம்இன்சுவை இளநீர்யானைக் கொம்புகள் போன்று வளைந்த குழையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள்பனை நுங்கு போன்றவை விருந்தாக வருபவர்களுக்கு கிடைக்கும் என்பதையும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வழி அறியமுடிகிறது.

 

வேடர்கள் விருந்தோம்பல்

காடுகளில் வேட்டையாடி வாழும் வேடர்கள் உணவுப் பழக்கம் குறிப்பிடத்தக்கது.

கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின்,

களர் வளர் சந்தின் காழ் கண்டன்ன

சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி,

ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்து, வயின்தொறும் பெறுகுவிர் (மேலது. 129-133)

வேடர்களின் உணவு மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெற்சோறாகும். அச்சோறு களர் நிலத்திலே வளர்ந்திருக்கும் ஈச்சமரத்தின் விதையைப் போலக் கொழுத்துக் காணப்படும். அச்சோற்றை நாய்களால் பிடித்துக் கொண்டு வரப்பட்ட உடும்பு பொரியலுடன் ஒன்று சேர்த்து உண்பர். இவ்வுணவையே விருந்தினருக்கும் வேண்டும் அளவு கொடுப்பர்.

 

ஆயர் விருந்தோம்பல்

முல்லை நிலங்களில் வசிக்கும் ஆயர்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவே இருந்தனர். அவர்களுடைய உணவு புன்செய் நிலங்களில் விளைந்த தானியங்கள். நண்டுக்குஞ்சுகளைப் போலக்  காணப்படும் தினைச் சோறும்பாலும் அவர்களின் முதன்மை உணவாகும்இவ்வுணவையே விருந்தினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,

மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,

இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன

பசுந்தினை மூரல், பாலொடும் பெறுகுவிர் (மேலது. 166-168)

என்ற வரிகளால் நன்கு அறியலாம்.

களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர் (பெரும்பாடாக.88) குடில்களின் முற்றங்களிலே பெண் யானைகள் (பிடிக்கணம்நிற்றாற்போலக் குதிர்கள் (வரகுநெல் முதலிய தானியங்கள் கொட்டி வைக்கும் கூடுகள்நிற்கும் மற்றும் அங்கு யானையின் காலைப் போன்ற வரகு திரிகை மரங்கள் நிற்கும்.

நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன

குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி

புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன

அவரை வான்புழுக்கு அட்ழ பயில்வுற்று

இன் சுவை  முரல் பெறுகுவீர் (மேலது.  93-97)

நீண்ட காம்பில் கொத்தாகப் பூக்கும் பூளைப்பூ அந்தச் சிறு பூளைப் பூவை யொத்து  குறுகிய  தாளினையுடைய  வரகின் பருக்கையாகிய சோற்றை நல்ல நிறத்தையுடைய கொத்தாகப் பூக்கும் வேங்கைப் பூவைக் கண்டால் போலும் அவரை விதைகளின் பருப்பைப் புழுங்கும்படி வேகவைத்துத் துழுாவி கலந்த இனிய சுவை யுடைத்தாகிய  சோற்றைப் பெறுவீர் என்பதன் வாயிலாக இடையர்கள் நெல் மற்றும் வரகு போன்ற தானியங்களைப் பயிர் செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் விரும்பி உண்ணும் உணவாக அதிகம் சமைக்கப்படும் உணவாகவும் வரகு இருந்துள்ளதை அரியமுடிகிறது.

 

உழவர்களின் விருந்தோம்பல்

பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப,

வையும் துரும்பும் நீக்கி, பைது அற,

குட காற்று எறிந்த தப்பை வடபால்

செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்

தண் பணை தழிஇய தளரா இருக்கை (மேலது.  238-242)

கடாவிட்டு பிணை அடித்து போனபின் குற்றம் யாதும் இல்லாதபடி வைக்கோலையும் கூளத்தையும் அங்கிருந்து அகற்றுவர். அவை உலர்ந்த பின்னர் மேல்காற்று வீசும்போது கையில் தூவித்தூற்றின நெல்பொலி வடதிசையில் உள்ள மேருமலையினும் சிறப்புடையதாகத் தோன்றும். அத்தகைய குளிர்ந்த மருதநிலம் சூழ்ந்த வறுமை காணாக் குடியிருப்புகளைக் கொண்டதாகும்.

தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை

மல்லல் போர் ஊர் முடியின் மடியா

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனை வாழ்  அளகின் வாட்டொடும் பெறுகுவீர் (மேலது. 253-256)

ஏனைய நாட்டினர்க்கு இயல்பாகிய பழைய வறுமையைப் பசி இன்னதென்று அறியாத தளர்ச்சியில்லாக் குடியிருப்பினை உடைய வளம் மிக்க பெரிய ஊரின் கண்ணே தங்குவீராயின் தொழில் செய்யாது சோம்பியிருத்தல் அறியாத உழவர்கள் தம் உழைப்பால் கொண்டு வந்த வெள்ளிய நெற்சோற்றை  மனையின்கன்  வாழும்  கோழிப்பெடையினால் சமைத்த பொரியலோடு பெருகுவீர்உழுவுத் தொழிலை மையமாக் கொண்டாடிட நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியம் சான்றாக அமைகிறதுமருதநில மக்கள் வறுமையை அறியாதவர்களாக இருந்துள்ளனர் நெல்லின் விளைவு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்துள்ளதை  அறியமுடிகிறதுஅங்கு வாழும் உழவர்கள் தங்களை நாடிவரும் விருந்தினர்களுக்கு வெள்ளிய  நெற்சோற்றை கோழி அடித்து விருந்து படைத்துள்ளதை அறிய முடிகிறது.

 

எயிற்றியர் விருந்தோம்பல்

            எயிற்றியர்களும் நல்ல விருந்தோம்பல் பண்புடையவர்களாக இருந்தனர்வேடர் குலப்பெண்கள் எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற வெண்மையான புல்லரிசியைத் தேடிச் சேகரிப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற விளாமரத்தின் அடியிலே அகழ்ந்திருக்கின்ற உரலிலே அந்த நெல்லை இடுவார்கள். பின்பு சிறிய வைரம் பாய்ந்த உலக்கையால் அவற்றை இடிப்பார்கள். அதன்பிறகு நெல்லைச் சலித்து எடுத்து ஆழமான கிணற்றிலே கொஞ்சமாக ஊறி இருக்கின்ற உவர் நீரை முகந்து பானையிலே ஊற்றி உலை வைப்பார்கள். குத்தி எடுத்த புல்லரிசியை உலையில் இட்டு அடுப்பு அணையாதபடி சமைத்து அச்சோற்றை உப்புக்கண்டத்தின் துணைகொண்டு உண்பார்கள். வந்த விருந்தினர்களுக்கு உணவாகக் கொடுத்து உபசரிப்பார்கள்.

நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்,

பார்வையாத்த பறைதாள் விளவின்,

நீழல் முன்றில் நிலவுரல் பெய்து,

குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடும் கிணற்று

வல்லூற்று உவரி தோண்டித், தொல்லை

முரவுவாய்க் குழிசி அடுப்பேற்றி

ஆறாது அட்ட வாடூன் புழுக்கல் (மேலது.94-100)

என்ற பாடல் வரிகள் எயிற்றியர்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துரைக்கிறது.

 

வலைஞர்களின் விருந்தோம்பல் பண்பு

புலவு நுனைப் பகழியும் சிலையுமான

செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்

மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி

கோடை நீடினும் குறைபடல் அறியாத்

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடு முடி வலைஞர் குடிவயின் சேப்பின்  (மேலது. 69-74)

புன்னை மாத்தின் நிழலில்  இளையாரும்  முதியோரும்  சுற்றத்துடன் நிறைந்திருப்பா பலால்  நாறும் முனையினையுடைய அம்பினையும்வில்லினையும் போலச் சிவந்த வாயினைக் கொண்ட கயல்களுடன் பசிய இறால் மீன்கள் பிறழுகின்ற கரிய பெரிய ஆழமான குளங்கள் அங்கே உண்டுஅவற்றில் தம் பிள்ளைகளுடன் துழாவி மீனைப் பிடிப்பர்கோடைக்காலம் நீடித்தாலும்குளங்களில் உள்ள நீர் வற்றுதல் இல்லை என்பதைக் காட்டுவர். தம் தலைக்கு மேலே கூம்பிய கைகள் மூழ்கா நிற்கும் அவ்வளவு நீர்வளம் நிறைந்த குளங்களைக் கரையிலிருந்து அவர்கள் காவல் செய்வார்கள்வளைந்த முடிகளை உடைய அம்மீன் பிடியயோர்தம் குடியிருப்பிலே தங்குவீராயின்,

அவையா அரசி அம்களித் துழவை

மல வாய்ப் பிழாவில் புரை ஆற்றி

பாம்பு உறை பற்றின் குரும்பி ஏய்க்கும்

பூப்புற நல் அடை அளைஇ தேம்பட

எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி

வல் வாய்ச் சடியின் வழைச்ச அற வளைந்த

வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்  (மேலது.  275-82.)

குறையாத கோழியல் அரிசியை அழகிய களியாகத் துழாவிச் செய்த கூழை அகன்ற வாயையுடைய தட்டில் ஊற்றி உலரும்படி ஆற்றுவர். பின்னா பாம்புகள் தங்கும் பற்றிக்கண் எடுக்கப்பெற்ற புற்றாஞ்சோறு போன்று பொலிவு பெற்ற புரத்தையடைய நல்ல நெல்முளையை இடித்து அதனுடன் சேரக் கலந்து இனிமை பெறுதல் பொருட்டு இரண்டு பகலும்இரண்டு இரவும் வைத்துக் காத்திருப்பர்பின் அதனை வலிய வாயினையுடைய சட்டியிலே இட்டு வெந்நீரில் வேக வைத்து நெய்யரியாலே வடிகட்டி அதனைத் தம் விரல்களாலே அலைத்துப் பிழிவர் அங்ஙனம் பிழியப்பட்ட நல்ல கிள்ளினைப் பச்சை மீனைச் சுட்ட சூட்டோடு பசியால் நீவிர் தளர்ச்சியுற்ற போது பெறுவீர்வலைஞர் வாழும் பகுதியில் எக்காலங்களிலும் நீர் வற்றாத குளங்கள் காணப்பட்டுள்ளதை அறிய முடிகிறதுஅக்குளங்களில் உள்ள மீன்களைப் பிடித்துத் தங்களை நாடி வருபவர்களுக்குச்  சமைத்துக்  கொடுத்துள்ளனர்புளித்த உணவுகளும் கல்லும் வருபவர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.

 

திரையனின் விருந்தோம்பல்

கொடு வாள் கதுவிய வடுசூழ் நோன் கை

வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை

அரி செத்து உணங்கிய பெருங் செந்நெல்லின்

தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்

அருங் கடித் தீம் சுவை அமுதொடு பிறவும்

விருப்புடை மரபின் சுரப்புடை அடிசில்

மீன் புத் தன்ன வான்கலம் பரப்பி

மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து

ஆனா விரும்பின் தான் நின்று ஊட்டி (மேலது. 471-479)

அரிவாளைக் கொண்டு எப்பொழுதும் பயன்படுத்துவதால் வடு ஏற்பட்ட வலியக் கையை உடைய சமையல் வல்லோன் ஆக்கிய இறைச்சிகளில் கொழுவிய பல தசைகளும் நெல்லரியின் ஈரம் நன்கு உலரவிட்டுப் பின் அரிசிகளில் ஆராய்ந்தெடுத்த செந்நெல்லரிசி யாலாகிய திரண்ட சோறும் காவல் வைத்துப் போற்றிய இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளம் பிறவும்கண்டோர் விரும்பும்படி மூடிவைத்த அடிசில்களை வானமீன்கள் இரவின்கண் மலர்ந்தாற் போன்று வெள்ளிக்கலங்களைப் பரப்பி உங்கள் ஒவ்வொருவரையும்  தாய்மகவினைப்  பார்ப்பதுபோல் பார்த்து உண்ணச் செய்வார் என்பதன் வாயிலாக ஒரு நாட்டை ஆளும் மன்னர்கள் தம் நாட்டில் உள்ள குடிமக்களைத் தன் குழந்தைகளைப் போலப் பாவித்து வருவது அவர்களின்  தேவைகளைப் பூர்த்தி செய்வது இவைகளின் வாயிலாக நம் நாட்டு மக்களின்  பண்பாடுகள் காக்கப்பட்டு வருவதை அறியமுடிகிறது. செல்வ வளம் படைத்தவர்களிலிருந்து வறுமையில் வாழ்பவர்கள் வரை தன்னை நாடிவரும்  விருந்தினரை தெய்வத்திற்குச் செய்வதைப் போல் உபசரித்துள்ளனர். 

 

முடிவுரை

மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து (குறள். இல்லறவியல். 90)

என்ற திருவள்ளுவர் கூற்றிற்கிணங்க குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை ஆகிய நிலங்களில் வசித்த பல்வேறு வகையான மக்களும் விருந்தாக வந்தவர்களுக்குத் தங்கள் உணவுகளைக் கொடுத்து உபசரித்த விருந்தோம்பல் பண்பினை சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை வழி அறியமுடிகிறது. இன்றைய நிலையைப் பார்ப்போமேயானால் நகரத்தில் வாழ்பவர்களும் கிராமப்புற மக்களும் தங்களிடம் உள்ளவற்றை எதுவாக இருந்தாலும் பகிர்ந்து உண்டு வாழும் சூழலைப் பார்க்க முடிகிறது. விருந்தினரை உபசரிக்கும் பாங்கும் அவர்களைவிட யாராலும் மிஞ்சிவிடாத வகையில் செயல்படுகின்றனர் என்பதன் மூலம் நம் பண்பாடு மாற்றம் பெறவில்லை என்பது அனைவராலும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

துணைநூற்பட்டியல்

1.  சரவணமுத்து  இரா., (உரை), கலித்தொகை, சாரதா பதிப்பகம், சென்னை. பதி.2016
2.     இராமசுப்பிரமணியம் வ. . (உரை), புறநானூறு, திருமகள் நிலையம், சென்னை. பதி.2008.
3.     புஸ்பராஜ் பொன்., (உரை), சிறுபாணாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2018.
4.     கதிர் முருகு, (உரை), பெரும்பாணாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2009.
5.     சிற்பி பாலசுப்பிரமணியம், (உரை) திருக்குறள், தாமரை ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை. பதி.2014.