4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

பக்தி இலக்கியங்கள் சுட்டும் இறையுணர்வில் அறம்

 



முனைவர் ஏ.யோகசித்ரா,

உதவிப் பேராசிரியை, தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி,

வாலாஜாபேட்டை  632513,

இராணிப்பேட்டை மாவட்டம்

கைப்பேசி : 9487106429

eyogapr2015@gmail.com

 

 

 

 



ஆய்வுச்சுருக்கம்

பக்தி இலக்கியங்கள் தெய்வநல அன்பை வெளிப்படுத்தும் போக்கின. இலக்கியப் படைப்பாற்றலின் வெவ்வேறான சூழல்களுக்கு ஏற்ப பக்திநுண்கூறுகள் விதந்து காணப்படுகின்றன. அனைத்துயிர்க்கும் அன்புருவாகிய கடவுளிடமே அருட்செல்வர்கள் தம்மை அடைக்கலமாக ஒப்படைத்து விடுவதால் கடவுளின் குறிப்பிலேயே, கடவுளின் இயக்கத்திலேயே தாம் இயங்குவதாக உணர்கின்றனர். மக்களின் மனத்தைப் பக்குவப்படுத்திச் சமைப்பதால் தெய்வநலத் தொடர்புடன் கூடியதைச் சமயம் என்றனர். சமயம் என்பது உலகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதே எனலாம். பக்தியின் வளர்ச்சிக்கு அருளாளர்களின் பங்களிப்பும் வாழ்வில் அறமும் போற்றப்படுவதே தலையாய குறிக்கோளாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஒன்றியஅனுபவத்தால் பக்திப் பாடல்களில் இறையுணர்வினை ஆழங்கண்டு, இன்பப்பரவசத்தை ஏற்படுத்தியமை நோக்கத்தக்கது. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் அறங்களைப் பக்தி இலக்கியங்கள் வழியாகத் துய்த்து இன்புறலாம். அருளாளர்களின் அருள்திறத்தால் செம்மைசால் உலகினில் பக்திநெறி அறநெறியாக வாழ்வியல் மெய்ம்மை தத்துவமாக என்றுமே மிளிரும் என்பது நிதர்சனமாகும்.

 

கலைச்சொற்கள்

பக்தி இலக்கியம், இறையுணர்வு, வாழ்வியல், அறம், இயற்கை, திருவாசகம், திருநாவுக்கரசர், திருவருட்பா, மாணிக்கவாசகர், திருச்சதகம், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், சுந்தரர்

 

முன்னுரை

பக்தி இலக்கியங்கள் தெய்வநலஅன்பை வெளிப்படுத்தும் போக்கின. இலக்கியப் படைப்பாற்றலின் வெவ்வேறான சூழல்களுக்கு ஏற்ப பக்தி நுண்கூறுகள் விதந்து காணப்படுகின்றன. அனைத்துயிர்க்கும் அன்புருவாகிய கடவுளிடமே அருட்செல்வர்கள் தம்மை அடைக்கலமாக ஒப்படைத்து விடுவதால் கடவுளின் குறிப்பிலேயே, கடவுளின் இயக்கத்திலேயே தாம் இயங்குவதாக உணர்கின்றனர். இத்தகு நிலையில் பக்தி இலக்கியங்கள் வழி புலனாகும் இறையுணர்வு அறக்கருத்துக்களை விதந்து காணும் நோக்கினை ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

பக்தி குழைவில் அறம்

 இறைவன் தம்மைக் குருந்த மரத்து நிழலில் குருவடியாக வந்து ஆட்கொண்டபோதே மாணிக்கவாசகர் தம் ஆவியையும், உடலையும், உடைமை எல்லாவற்றையும் கொள்ளை கொண்டுவிட்டானாம். அந்நிலையில் இடையூறு ஒரு சிறிதுமின்றித் தம்வசமிழந்து நிற்கிறாராம்நன்று புரிவதும் தீமை புரிவதும் இறைவன் பொறுப்பிலுள்ள நிலையினைத் திருவாசகம் குழைந்தபத்தில்,

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே யனையாய் என்னை யாட்கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே      

நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே ( குழைந்தபத்து - 7 )

என இயம்பிச் செல்லுதலால் உணரலாம். இத்தகைய தற்சுதந்தரமற்ற பாங்கினைத் திருநாவுக்கரசர்,

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே (திருநாவுக்கரசர் 6.95:3)

எனக்கூறுவதும்வள்ளற்பெருமான் திருவருட்பாவிலே,

 பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்

பணிகின்றேன் பதியே நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்

குழைகின்றேன் குறித்த ஊனை

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால்

உறங்குகின்றேன் உறங்கா தென்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே (தற்சுதந்திரமின்மை-4)

என இயம்பிச் செல்வதும் பக்திமையின் நுண்மையைப் புலப்படுத்துவன.

 

அறநெறியால் மேம்பட்டு நிற்றல்

 சான்றோர்கள் பழித்தனவற்றை விலக்கியும், விதித்தனவற்றை முறைப்படியேற்றும் ஒழுகின்ற சீலமும், உள்ளொளி பெருக்குதற்குரிய பாங்கினில் கைக்கொள்கின்ற நோன்பும், ஐம்புலனடக்கத்தால் இறைவனை யொன்றியுணரும் யோகநிலைச் செறிவும் இவற்றையெல்லாம் தெரிந்துணர்தற்குரிய ஞானமும் தம்மிடம் இல்லாமல் காலமெல்லாம் அமைந்து நின்றதாகக் கூறுகிறார் மாணிக்கவாசகர். இறைவனாகிய சூத்திரதாரியிடம் தாம் தோற்பாவைக் கூத்திலே இயங்கும் தோற்பாவையே போல் தற்சுதந்திரமின்றி இருந்தபோது உலகியல் மாயையும் காட்டி,  அதனின்று  விடுபடும்  வழியையும் தமக்குக் காட்டினான் என்பார்.

 அந்நிலையில் இறைவன் தமக்குப் பிறப்பிறப்பில்லாப் பெருநெறியையும் காட்டியருளினான் என்று கூறுவார். ஞானத்திருமேனி காட்டியருளிய ஆண்டவனைத் தாம் எப்போது கூடிப் பேரின்பந் துய்ப்பது என்ற ஏக்கத்தில் ஓர் இருப்புக் கொள்ளாமல் துடிதுடித்து நிற்பார். இத்தகைய மாணிக்கவாசகர் நிலையைச்,

சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்

தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று  விழுந்து கிடப்பேனை

மாலுங் காட்டி வாரா உலக நெறியேறக்

கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே (ஆனந்தமாலை - 3)

என இயம்பும் தன்மையால் அறியலாம்.

பிறிதோரிடத்தில் உலகிலேயே தாம் நாடகப்பாத்திரமேற்றுச் சிவனடியார் போல் நடிப்பதாகவும், போதிய கடமையாற்றாமல் சிவப்பேறு பெற விரைந்து அவாவி நிற்பதாகவும், தம்மை உடைமையாகக் கொண்ட ஆண்டவனிடம் இடையறாத அன்பு கொண்டு நெஞ்சுருகி நிற்க வேண்டுவதாகவும், மணிவாசகர் குறித்திடுகிறார். இந்தப் பத்திப் பெருநிலையானது இடையறா அன்புஎன்பதனை மையமிட்டுச் செல்கிறது. இதனை,

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே

வீடகத் தே புகுத்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையுறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே (திருச்சதகம் :11)

இறைவனிடம் பேரன்பு கொண்ட காரணத்தால் அடியவர்கள் எந்தத் துன்பத்திற்கும் கொடிய வினைகளுக்கும் பழமையாய் வரும் வினைத்தொடர்பிற்கும் சிறிதும் அஞ்சாமல் நிற்பார்கள். அன்பானது அடியவர்கள்  திறத்தேயுண்டாகும்  இத்தகைய  அஞ்சாமையினை அப்பரடிகள்,

அல்லல் என்செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைச் சொந்தந்தான் என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு

எல்லை யில்லாதோர் அன்புபூண் டேனுக்கே (திருநாவுக்கரசர் 5:1.4)

எனும் தன்மையால் அறியலாம். பல்லவ மன்னன் தன்னை அவனிடம் வருமாறு அழைத்தபோதுபக்தியுறைப்பில் விளைந்த அஞ்சாமையினால்,

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை

தாமார்க்குங் குடில்லாத் தன்மை யான

சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம் மலர்ச்சே வடியினையே குறுகி னோமே’ (திருநாவுக்கரசர் 6-98-1)

எனச் சுட்டும் பான்மை ஒப்புநோக்கத்தக்கது.

 

இயற்கையின்பத்தில் பக்திநிலை

இயற்கையின்பத்தில் பக்திநோக்காக அறம் மேலோங்குவதைப் பல நிலைகளில் அறிந்து இன்புறலாம். திருஞானசம்பந்தர் பாடல்களில் இயற்கை வனப்புடன் கூடிய அழகனுபவம் நிரம்பி நிற்பதைக் காணலாம்.  பலாக்கிளைகள் தோறும் மந்திகள் ஏறிப் பலாப்பழங்களை விண்டு உண்கின்றன. உண்ணும்போது பழச்சுளைகள் கீழே விழ அவற்றைக் கீழிருக்கும் ஆண் குரங்குகள் மகிழ்வுடன் எடுத்து உண்டு இன்புறுகின்றன. இத்தகைய  அன்புக்காட்சியைக்  கண்டு பாடும் சம்பந்தர் அங்குள்ள மதிசூடியைப் பெருமானை மனமார வாழ்த்திப் பாடியுள்ள தன்மை அறியத்தக்கது.

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப்பொடியணிந்த நம்பானம்மை

ஆட்லவுந் தானுடைய அம்மா னிடம்போலும் அந்தண்சாரல்

கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட

கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே

(திருஞானசம்பந்தர் 2 : 71 : 2)

என வரும் தன்மையால் அறியலாம்.

 திருநாவுக்கரசரும் பக்தியுரைப்பில் இயற்கை இன்பத்தினைச் சில இடங்களில் சுட்டுவதை ஒப்புநோக்கி இன்புறலாம். சமணர்களுடைய ஆதிக்கங் காரணமாகப் பல்லவமன்னன்  மகேந்திரவர்மன்  திருநாவுக்கரசரை  நீற்றறையிலிட்டு  வருத்தியபோதுதிருவருட்சிந்தனையால் அந்த துன்பத்தினின்றும் மீண்டார். ஐம்பொறிகளுக்கும் துன்பம் விளைந்த நீற்றறையானது ஐம்புலன்களுக்கும் இன்பமளிக்கக்கூடிய இயற்கையின்பச் சூழலாக மாறியது. இதனை,

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை யிணையடி நீழலே (திருநாவுக்கரசர் 5:90:1)

எனப்பாடியருளிய நிலை மனங்கொளத்தக்கதாகும்.

 

பக்திநிலை – மறவாமைப் பண்பில் அறம்

சமயநெறியில் ஒழுகுபவர்கள் இந்த உலகியல் காரணமாக இறைவன் திருவருளையும் தம் கடமையையும் அடிக்கடி மறக்கின்ற வாய்ப்பு நிகழலாம். எனவே இறைவனை வேண்டி வரம் கேட்கின்றபோதும்  மறவாமையை மறக்காமல் அடியவர்கள் கேட்டு நிற்பர்.

என்புதிர்ந்து அன்பேயுருவமான காரைக்காலம்மையார் உமையுடன் கூடிய சிவபிரானிடம்  வரங்கேட்கின்றபோது,

இறவாத வின்ப வன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டிநான் மகிழ்ந்துபாடி

அறவா நீ யாடும் போதுன் அடியின்கீழ் இருக்க வென்றார்

(காரைக்காலம்மையார் புராணம்-60)

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூரில் அமர்ந்தருளும் பாடலீசுவரரிடம் முறையிடுகையில், தாம் புழுவாய்ப் பிறக்கக்கூடிய ஊழமைந்தாலும் இறைவன் திருவடியை மறவாதிருக்கக்கூடிய நல்வாய்ப்பினைத் தந்தருள வேண்டுகிறார்.

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பாதிரிப் புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே” (திருநாவுக்கரசர்  4:94:8)

இவ்வாறாக பக்திநிலைகளில் பண்புநலன்கள் புலனாகின்றன.அருளாளர்களின் உள்கிடக்கை மெய்ப்பிக்கப்பட்டமை ஓர்தற்குரியது. பல்லவ மன்னன் தன்னை அவனிடம் வருமாறு அழைத்தபோதுபக்தியுறைப்பில் விளைந்த அஞ்சாமையினால்,

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை

தாமார்க்குங் குடில்லாத் தன்மை யான

சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம் மலர்ச்சே வடியினையே குறுகி னோமே’ (திருநாவுக்கரசர் 6-98-1)

எனச் சுட்டும் பான்மை ஒப்புநோக்கத்தக்கது.

 

பக்திநிலை – மறவாமைப் பண்பில் அறம்

சமயநெறியில் ஒழுகுபவர்கள் இந்த உலகியல் காரணமாக இறைவன் திருவருளையும் தம் கடமையையும் அடிக்கடி மறக்கின்ற வாய்ப்பு நிகழலாம். எனவே இறைவனை வேண்டி வரம் கேட்கின்றபோதும்  மறவாமையை மறக்காமல்  அடியவர்கள் கேட்டு நிற்பர். என்புதிர்ந்து அன்பேயுருவமான காரைக்காலம்மையார் உமையுடன் கூடிய சிவபிரானிடம்  வரங்கேட்கின்றபோது,

இறவாத வின்ப வன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டிநான் மகிழ்ந்துபாடி

அறவா நீ யாடும் போதுன் அடியின்கீழ் இருக்க வென்றார்

(காரைக்காலம்மையார் புராணம்-60)

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூரில் அமர்ந்தருளும் பாடலீசுவரரிடம் முறையிடுகையில், தாம் புழுவாய்ப் பிறக்கக்கூடிய ஊழமைந்தாலும் இறைவன் திருவடியை மறவாதிருக்கக்கூடிய நல்வாய்ப்பினைத் தந்தருள வேண்டுகிறார்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பாதிரிப் புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே” (திருநாவுக்கரசர்  4:94:8)

இவ்வாறாக பக்திநிலைகளில் பண்புநலன்கள் புலனாகின்றன. அருளாளர்களின்  உள்ளக்கிடக்கை  மெய்ப்பிக்கப்பட்டமை  ஓர்தற்குரியது.

 

வாழ்வியல் அறத்தை வலியுறுத்தல்

வாழ்க்கையில் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நிலையாமையை தன்மையுடையவை என்பதனைப் பௌத்தர்களும், சமணர்களும் அறக்கோட்பாட்டில் உணர்த்தி வந்தனர். எனினும் சைவ சமயச் சான்றோர்களும் மக்கள் வாழ்க்கையின் பயனைப் பாடல்கள் வழி வலியுறுத்தியுள்ளனர்.  உலகத்தவர்களை நோக்கிச் சுந்தரர்,

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்மை

பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்

தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்

கீழ் மேலுற நின்றான்திருக் கேதாரமே னீரே (சுந்தரர் 7:78:1)

உலகீர்! பசிநோயை உண்டாக்குகின்ற இந்த ஊனுடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய். இது மண்ணாய் மறைந்து ஒழிவதே மெய். ஆதலின் இல்லாதொழிய வேண்டுவது பிறவியாகிய கடலே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பொருட்டு, நீவிர் காலந்தாழ்த்தாமல் விரைந்து நல்லறம் புரியுங்கள். திருமாலும் பிரமனும் தம்மைத் தேடுமாறு பரஞ்சோதியாக நின்ற இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கேதாரம் நினைந்து போற்றுங்கள்!” என்பது சாலத்தகும்.

 

 

 திருக்கழுமலப் பதிகத்தில், வாழ்வாங்கு வாழும் நெறியை,                       

மண்ணில்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணினல் லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணினல் லாளோடும் பெருந்தகை யிருந்ததே (திருஞானசம்பந்தர் 3:24:1)

 

தொகுப்புரை

மக்களின் மனத்தை பக்குவப்படுத்திச் சமைப்பதால் தெய்வநலத் தொடர்புடன் கூடியதைச் சமயம் என்றனர். சமயம் என்பது உலகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதே எனலாம். பக்தியின் வளர்ச்சிக்கு அருளாளர்களின் பங்களிப்பும் வாழ்வில் அறமும் போற்றப்படுவதே தலையாய குறிக்கோளாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஒன்றிய அனுபவத்தால் பக்திப் பாடல்களில் இறையுணர்வினை ஆழங்கண்டு, இன்பப் பரவசத்தை ஏற்படுத்தியமை நோக்கத்தக்கது. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் அறங்களைப் பக்தி இலக்கியங்கள் வழியாகத் துய்த்து இன்புறலாம். அருளாளர்களின் அருள்திறத்தால் செம்மைசால் உலகினில் பக்திநெறி அறநெறியாக வாழ்வியல் மெய்ம்மை தத்துவமாக என்றுமே மிளிரும் என்பது நிதர்சனமாகும்.

 

துணைநூற்பட்டியல்

1.     திருஞானசம்பந்தர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள், 1996. 
2.     திருநாவுக்கரசர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள், 1995.
3.     சுந்தரர், தேவாரம்,  ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1965. 
4.     சேக்கிழார், பெரியபுராணம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1970. 
5.           திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா, ஆறாம் திருமுறை, மூ.ப. 2004, சிந்தாமணி பிரிண்டர்ஸ், மயிலாடுதுறை - வடலூர் - 607 303.
6.     இராமசுப்பிரமணியன் வ.த. (உரை), திருவாசகம், திருமகள் நிலையம், சென்னை, பதி.2006.
7.     கதிரேசச் செட்டியார்  மு(உரை), திருச்சதகம், பெருமாய் நிலையம், பதி.2012.