4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

காஞ்சியும் குறளும் கூறும் இல்லறம்(ஆய்வுக்கட்டுரை) - பேரா. த. யோகலட்சுமி,

பேரா. . யோகலட்சுமி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

டி.எல்.ஆர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம்  632521.

Cell: 9384763948

 

காஞ்சியும் குறளும் கூறும் இல்லறம்

ஆய்வுச்சுருக்கம்

அறம் என்பது நீதி, கடமை, தரும்ம் எனப் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் ஆகும். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனக் கூறப்படுகிறது. அறவாழ்வில் இல்வாழ்வும் சிறந்த ஒன்றாக விளங்குவதோடு கணவனும் மனைவியும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். அதிலும்மனைவியின் செயல் சிறந்த்தாக அமைவதோடு, மனைமாட்சி உடையவளாக இருக்க வேண்டும். பெண் சுற்றத்தாரிடையே அடக்கமும் அன்பும் கொண்டவளாகவும் தன் கணவன் சொற்கேட்டு இருந்தால் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். இல்லறத்தில் வாழக்கூடிய பெண் கற்புநெறி கொண்டவளாகவும், மாட்சிமை உடையவளாகவும் இருந்தலோடு, பழிபாவங்களுக்கு அஞ்சி நாணம் உடையவளாக விளங்க வேண்டும். அத்தகைய பெண்ணிற்கு குடும்ப வாழ்வில் சிறப்பை தருவது சிறந்த பிள்ளைப்பேறாகும். அதோடு மட்டுமல்லாமல் சுற்றத்தாரையும் பேணி, வரும் விருந்தினர்களுக்கும் இரப்பவர்க்கும் தன்னால் இயன்றதைத் கொடுத்து வாழ வேண்டும். சிற்றின்பத்திலேயே ஆணும் இல்லாமல் வாழ்தலே சிறந்த இல்லறம் ஆகும். இவ்வாறாக இல்லறவாழ்வில் ஈடுபடும் கணவன் மனைவியின் ஒழுக்க நெறிகளை இக்கட்டுரையானது விளக்குகிறது.

முக்கியச்சொற்கள்

நீதிஇலக்கியம், முதுமொழிக்காஞ்சி, திருக்குறள், இல்லறம், கணவன் மனைவி உறவு, சுற்றம்தழுவல், அருளுடமை, பகுத்துண்டு வாழ்தல், சிற்றின்பம்

முன்னுரை

அறம் என்பது நீதி, கடமை, தரும்ம் எனப் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் ஆகும். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனக் கூறப்படுகிறது. அறவாழ்வில் இல்வாழ்வும் சிறந்த ஒன்றாக விளங்குவதோடு கணவனும் மனைவியும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். அதிலும்மனைவியின் செயல் சிறந்த்தாக அமைவதோடு, மனைமாட்சி உடையவளாக இருக்க வேண்டும். பெண் சுற்றத்தாரிடையே அடக்கமும் அன்பும் கொண்டவளாகவும் தன் கணவன் சொற்கேட்டு இருந்தால் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.  இத்தகைய இல்வாழ்வில் பெண்ணின் சிறப்புகளை முதுமொழிகாஞ்சியும் திருக்குறளும் உணர்த்தும் விதமே ஆய்வுக்களமாக்கப்பட்டுள்ளது.

மனைவியின் மாண்புகள்

குடும்ப அமைப்பில் முக்கியத்துவம் பெற்றவள் பெண்ணே ஆவாள். “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்என்பார் கவிமணி. கணவனும் மனைவியும் கருத்தொற்றுமை உடையவராய் வாழ்வதோடு மட்டுமன்றி இரப்பவர்களுக்கு உணவும், துறவிகளுக்கு வேண்டியதையும் கொடுத்து பிறன்தாரம் நோக்காது, பொய்மை நீக்கி, உயிர்க்கொலை தவிர்த்து, தன்னிடம் உள்ளதைப் பிறர்வாழ வழங்கி, எஞ்சியதைத் தான் உண்டு வாழ்வதே சிறந்த இல்வாழ்க்கைக்கு உரிய இயல்புகளை அறநெறிச்சாரம் கூறுகின்றது.

பிச்சையும் ஐயமும் இட்டு பிறன்தாரம்

நிச்சலும் நோக்காது பொய்ஒரீஇநிச்சலும்

கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே

இல்வாழ்க்கை என்னும் இயல்பு (அறநெறிச்சாரம்)

கடல் சூழ்ந்த இந்த நில உலகத்தில் உள்ள அனைவரின் உள்ளும் தன் கணவன் இயல்பை அறிந்து நடந்துக் கொள்ளாதவள் சிறந்த மனைவியாக மாட்டாள்.

ஆர்கலி உலகத்துமக்கட்கு எல்லாம்

நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம்அல்லள்(முதுமொழிகாஞ்சி, அல்லபத்து – 1)

என்னும் பாடலானது மனையாகாதாளின் சிறப்பினைக் கூறுகிறது.

மனைவியானவள் இல்லறத்துக்குத் தகுந்த நற்குண செய்கைகள் உடையவளாகிக் கணவனின் வறவுக்கேற்பச் செலவு செய்பவளே சிறந்த மனைவி என்பதை,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டாள்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (குறள்.51)

எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். மாட்சிமையின் இயல்பினைச் சிறுபஞ்சமூலம்,

பேணடக்கம் பேணாப் பெருந்தகை பீடுடைமை (சிறுபஞ்சமூலம் – 45)

என விளக்கிக் காட்டுகிறது.

பெண்பாற்புலவரான ஔவையாரும் மனைவியின் சிறப்புகளைக் கூறுகிறார். அதாவது இல்வாழ்வில் பெண் அறிந்தும் அறியாதவர் போல் அடங்கியிருக்கும் குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய குணமே அவளுக்கு சிறந்த ஆபரணமாகும்.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று (கொன்றை வேந்தன் – 3.)

நாணம் உடையவராய் இருத்தல்

 நாணுதல் என்ற சொல் வெட்கத்தைக் குறிப்பதாகும். பெண்களுக்குரிய நற்பண்புகளுள் ஒன்றாக்க் கூறப்பெறுகிறது. செய்யக்கூடாத செயல்களையும் செய்துவிட்டாள் சான்றோர் எய்தும் நிலையே நாணுடைமை. இப்பண்பானது அனைவருக்கும் உரியதல்ல. மக்களுள் சிறந்தவர்களுக்கே வாய்க்கப் பெறும். இத்தகைய நாணுடைமையைத் தொல்காப்பியர்,

உயிரினும் சிறந்தன்று நானே  (தொல் (பொருள்) களவியல் – 111)

என நாணத்தின் சிறப்பை விளக்குகிறார்.

ஒருவன் அழகுடையவனாக விளங்குதலைக் காட்டிலும் பழிபாவங்களுக்கு அஞ்சி நடத்தலே சிறந்தது என்பதை,

நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று (முதுமொழிக்காஞ்சி, சிறந்த பத்து-6)

என்று முதுமொழிக்காஞ்சி நாணத்தின் சிறப்பினை பறைச்சாற்றுகின்றது.

அத்தகைய நாணத்தின் சிறப்பறிந்து அதனை விடாது ஒழுகுபவர். நாணம் சிறக்க வேண்டி உயிரையும் விடுவர். உயிர் நீங்கினாலும் வெட்கத்தை நீக்கமாட்டார். இதனை,

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்

நாண்துறவார் நாண்ஆள் வார். (குறள்.1017)

எனத் திருக்குறள் கூறுகின்றது.

மக்கட்பேறு

இன்றைய வாழ்வியல் சிந்தனைகளில் கடமைப் பற்றிய உணர்வுகள் மிகுதியாக இல்லை. உரிமை பற்றிய எண்ணங்களே மிகுதியாக உள்ளன. தமக்குரிய அனைத்தையும் பெற்றுவிட வேண்டுமென மக்கள் துடிக்கின்றனர். ஆனால், கடமைப் பற்றிப் பெரும்பாலும் சிந்திப்பதே இல்லை. சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது தம் கடன் அல்லது கடமை எது என்பதை மட்டும் நினைத்தனரே ஒழிய உரிமை பற்றிச்சிந்தித்த்தே இல்லை.தாயின் தலையாய கடமை குழந்தைகளைப் பெற்று பாதுகாத்தல் என்பதை,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே (புறநானூறு (312)

எனும் புறநானூற்றுப் பாடல்வழி அறியமுடிகிறது.

ஒருபெண்தன்னை இவ்வுலகத்திற்குத் தாய் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எல்லையில்லாத இன்பம் பெறுகின்றாள். அழகிய மழலைச் செல்வம் இல்லையென்றால் பெரும் செல்வமுடையவராக இருந்தாலும் வாழ்ந்தும் வாழாத்தன்மையைப் பெற்றுவிடுகின்றாள். கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் குழந்தைப் பேற்றைவிட அடையக்கூடிய பிறபேறு வேறுஇல்லை.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

மக்கள் பேற்றின் பெறும்பேறு இல்லை (முதுமொழிக்காஞ்சி, இல்லைபத்து-1)

ஒருவன் அடையகூடியவற்றுள் அறிய வேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பெறுவதைவிடச் சிறந்த்தொன்று இருப்பதாக யாம் அறியவில்லை என்றுபிள்ளைப்பேற்றை பற்றி வள்ளுவரும்கூறுகின்றார்.

பெறுபவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற (குறள். 61)

இவ்வாறாகப் பெற்றெடுக்கக் கூடிய புதல்வர்கள் பெற்றவர்களுக்கு புகழினைச் சேர்ப்பதே சிறந்த்தாக கருதப்படுகிறது.அத்தகைய புதல்வர்கள் எவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும் என்று திருவள்ளுவரும்,

ஈன்ற பொழுதீற் பெரிதுவக்குந்  தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்டதாய்(குறள் – 69)

என்னும் குறள் மூலம் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் விதத்தினை விவரிக்கிறார்.

சுற்றந்தழுவல்

சுற்றந்தழுவல் என்பது சுற்றத்தாரை எப்பொழுதும் தன்னை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தல் ஆகும். அத்தகைய சுற்றத்தை பெண்ணானவள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அன்புடைய தொடர்பே சுற்றமும் சிறந்த நட்பும் என கூடலூர்கிழார் கூறுகிறார்.

ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று(முதுமொழிக்காஞ்சி, அல்லபத்து-3)

இதனையே வள்ளுவரும் எடுத்துரைக்கிறார்.

அன்பு நிங்காத சுற்றம்இலையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்” (குறள்-522)

சுற்றத்தாரை பேணிப்பாதுகாப்பதில் ஆணுக்கும் கடமை உண்டு. தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் ஒரே தன்மையாக்க் காத்து பழுத்த மரம்போலப் பயன் நுகர தான் வருந்தி உழைத்து வாழ்வது நல்ல ஆண்மகனுக்கு உரிய கடமையாகும் என நாலடியார் வலியுத்துகின்றது.

நிழல் மரம்போல் நேரொப் பத்தாங்கிப் பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே” (நாலடியார் – (202))

சுற்றத்தாரும் தன்னைச் சார்ந்தவர்களை நன்மை, தீமைகளில் வந்து சூழ்ந்து இருப்பது சிறந்தது  என கொன்றை வேந்தனும் சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்  (கொன்றை வேந்தன் (30)) என சுற்றத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

அருளுடைமை

ஒருவன் பெறக்கூடிய செல்வங்களுள் எல்லாம் தலையாயது அருட்செல்வமாகும். ஏனெனில் பிறச் செல்வங்கள் இழிந்த குணமுடையோரிடத்தும் இருப்பதால் பிற செல்வங்களுக்கு இல்லாத பெருமையுடையது ஆகும். பல வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் மேன்மை உடையதாகும். அருள் என்பது கருணை என்னும் உடையதாகும். அருள் என்பது கருணை என்னும் பெயரிலே அறியப்படுகிறது. பல கோயில்களைக்ட்டி தெய்வத்திடம் அருள் வேண்டி காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம் மழை வேண்டி காத்திருக்கும் உழவர்கள், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் உயர்வு, தாழ்வு இன்றி உதவும் உள்ளம் படைத்தவர்க்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் இவற்றினை அருள் என்னும் பெயராலே அறியப்படுகிறது.

 உலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் சிறந்த குடியில் பிறந்தமையை அவனுக்குள்ள அருள் இயல்பினாலே அறிந்து கொள்வர்.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப (முதுமொழிக்காஞ்சி, அறிவுப்பத்து-1)

செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் உயிர்களிடம் அருள் கொண்டிருக்கும் செல்வம் பொருளால் வரும் செல்வங்கள் கீழோரிடத்தும் உண்டு என்பதை வள்ளுவர் குறள் வழி உணரலாம்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள” (திருக்குறள்-241)

பகுத்துண்டு வாழ்தல்

பகுத்துண்டு வாழ்தலாவது தன்னைச் சேர்ந்தோர்க்கு இல்லை என இரப்பார்க்கும் தம்மால் இயன்றதைக் கொடுத்து வாழ்தலே ஆகும். மற்றவர்  சுமையைத் தாம் ஏற்க விரும்புபவர்க்குத் தம்மிடம் உள்ள உணவைப் பகுத்துத் தந்து தாமும் உண்ணுதல் எளிதாகும்.

பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது (முதுமொழிக்காஞ்சி, எளிய பத்து-9)

தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத்தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (திருக்குறள் – 322)

விருந்தினை வரவேற்று உபசரிக்கும் கூற்றுக்கள் சிலவற்றை சிலப்பதிகாரம் கூறுகிறது. அதாவது சாவகர்க்கும் கொடுத்தல். பார்ப்பனரைப் பேணுதல், துறவிகளை எதிர்கொள்ளுதல், மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினை உடைய விருந்தினரை எதிர்கொள்ளுதல் போன்றவையாகும்.

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்கட கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும்” (சிலம்பு. கொலைக்கலக்காதை. 71-73)

சிற்றின்பத் துன்பம்

ஒரு பெண்ணின் மேல் ஏற்படும் ஆசையினால் இல்வாழ்வில் சிற்றின்பத்திலேயே மூழ்கி இருந்தல் எந்தப் பயனும் இல்லை. அதனால் பழியும் துன்பமும் மட்டுமே உண்டாகும். காமம் மிக்கும் பெண்டிரைச் சேரின் கடமையின்று தவறநேரும், முயற்சிகெடும், எடுத்த செயல் நிறைவேறாது, எனவே பழியேற்படும்.

பெண்டிர் வெய்யோர்க்குப் படுபழி எளிது” (முதுமொழிக்காஞ்சி, எளிய பத்து-8)

இதனையே திருவள்ளுவரும்,

தந்நலம் பாரிப்பார் தேரியார் தலைசெருக்குப்

புன்னலம் பாரிப்பார் தோள்” (திருக்குறள்-916)

எனும் குறள் மூலம் எடுத்துரைக்கிறார்.

காமத்தீ பெரும் படுகுழியில் தள்ளிவிடும் சிலர் தெளிந்து அதில் விழுகின்றனர் எனவே இன்பத்தை விட்டு விலகி இருந்தாலே புகழ் நன்மை வந்தடையும்,

குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி

ஒளிப்பினும் காமம் சுடும்” (நாலடியார் (90))

தொகுப்புரை

இல்லறத்தில் வாழக்கூடிய பெண் கற்புநெறி கொண்டவளாகவும், மாட்சிமை உடையவளாகவும் இருந்தலோடு, பழிபாவங்களுக்கு அஞ்சி நாணம் உடையவளாக விளங்க வேண்டும். அத்தகைய பெண்ணிற்கு குடும்ப வாழ்வில் சிறப்பை தருவது சிறந்த பிள்ளைப்பேறாகும். அதோடு மட்டுமல்லாமல் சுற்றத்தாரையும் பேணி, வரும் விருந்தினர்களுக்கும் இரப்பவர்க்கும் தன்னால் இயன்றதைத் கொடுத்து வாழ வேண்டும். சிற்றின்பத்திலேயே ஆணும் இல்லாமல் வாழ்தலே சிறந்த இல்லறம் ஆகும். இவ்வாறாக இல்லறவாழ்வில் ஈடுபடும் கணவன் மனைவியின் ஒழுக்க நெறிகளை இக்கட்டுரையானது விளக்குகியது.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

1.      சிறுபஞ்சமூலம், கழக வெளியீடு, திருநெல்வேலி, 1936.

2.     சுப்புரெட்டியார், ந.திருக்குறள் தெளிவு, சுரா புக்ஸ் (பிரைnவேட் லிமிடெட்), 2001.

3.     இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம் (பொருளதிகாரம்), கழக வெளியீடு, சென்னை.பதி.1967.

4.     குருநாதன் (.), புறநானூறு, வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி.2003.

5.     கதிர் முருகு (உரை), அறநெறிச்சாரம், சாரதா பதிப்பகம், பதி.2013.

6.     புலியூர்க் கேசிகன்(உரை), நாலடியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை,2013.

7.     வேங்கடசாமி நாட்டார். .மு. (உரை), கொன்றைவேந்தன், சாரதா பதிப்பகம், சென்னை. 2007.

8.     மாணிக்கவாசகன். ஞா (.),சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை. பதி.2012.

9.     கௌமாரீஸ்வரி. எஸ்(உரை), முதுமொழிக்காஞ்சி, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2017.

 Click to Download