4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

சுற்றுப்புறச் சூழலியல் நோக்கில் முல்லைப்பாட்டு (ஆய்வுக்கட்டுரை) - முனைவர் மு. ஸ்ரீதேவி

சுற்றுப்புறச் சூழலியல் நோக்கில் முல்லைப்பாட்டு

முனைவர் மு. ஸ்ரீதேவி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

அக்சிலியம் கல்லூரி,

காட்பாடி, வேலூர் - 6

E.Mail: devibalavellore@gmail.com

 9790027440

ஆய்வுச்சுருக்கம்

                இலக்கியத்தை உளவியல், சமயம், சமுதாயம், அறிவியல், நுண்கலைகள் எனப் பிறதுறைக் கொள்கைகள் கோட்பாடுகளுடன் ஒப்பிடலாம்என்பது எச்.எம். ரிமார்க்கின் கருத்து (Renewellx &Austinwarren, 1985, P. 47) ஆகும். சுற்றுச்சூழலியல் என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். சூழலில் மனிதா;களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது. சூழலியல் என்பது சுற்றுச் சூழலியலினதும், உயிரியலினதும் ஒரு பகுதியாகும். மனிதர்கள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது சூழலியல் எனத் தவறாகக் கொள்ளப்படுக்கின்றது. சுற்றுச் சூழலியல் என்பது மிகவும் பரந்த ஒரு கற்கைத் துறையாகும். இது மனிதருக்கும், சூழலுக்குமான இடைத்தொடர்பு ஆகும். இதில் இயற்கைச்சூழல், கட்டியமைக்கப்பட்ட சூழல், சமூகச் சூழல் அனைத்தும் ஆராயப்படுகின்றன. செவ்வியல் இலக்கியமான முல்லைப்பாட்டினை சுற்றுப்புறச் சூழலியல் நோக்கில் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கலைச்சொற்கள்

1.             உயிரி                                     -               Organism

2.             காற்றடுக்கு                            -               Atmosphere

3.             நீரடுக்கு                                 -               Hydrosphere

4.             புவியடுக்கு                            -               Lithosphere

5.             ஊட்ட உறவு                         -               Tropic relationship

6.             சூழல் மண்டலம்                   -               Echo system

7.             சூழல் மாதிரி                         -               Eco – logical Patterns

 

சுற்றுப்புறச் சூழலியல்

                உயிரிகள் தத்தமக்குள்ளும் புறச்சூழலோடு கொண்டிருக்கும் உறவுகள் பற்றிய அறிவியலே சுற்றுப்புறச் சூழலியல்எனப்படுகிறது. உயிரி’ (Organism) என்பது ஒவ்வொரு இனத்தையும் குறிப்பதோடு அவற்றின் செயல் மற்றும் வாழ்க்கையைச் சுட்டுகிறதுஎனவும்,‘சூழல்என்பது அவற்றைச் சூழ்ந்திருக்கும் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை உள்ளடக்கியது (Principles of Ecology, P.5) எனவும்வரையறை செய்யப்படுகிறது.

                சுற்றுப்புறச் சூழல் என்பது காற்றடுக்கு (atmosphere), நீரடுக்கு (hydrosphere), புவியடுக்கு (lithosphere) ஆகியவற்றையும், உயிர்ப்பொருள் திரள்களையும் உள்ளடக்கியதாகும். இக்கூறுகள் ஒன்றையொன்று சார்ந்து (tropic relationship) ஊட்ட உறவாக அமைவதனைச் சூழல் மண்டலம் (echo – system) என்பர். (மேலது, ப.6). சார்லஸ் எல்ட்டன் என்பவர் இவ்வூட்ட உறவினையும், ஊட்டச் செயலையும் பிரமிடு வரைபடமாகக் காட்டுகிறார். இக்கருத்தமைவு வழி முல்லைப்பாட்டு நோக்கப்படுகிறது.

 

முல்லைப்பாட்டு

                பத்துப்பாட்டுள் ஒன்றான இம்முல்லைப்பாட்டு நப்பூதனாரால் இயற்றப்பட்டது. வினை காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனையும், அவன் வருகைக்காக ஆற்றியிருக்கும் தலைவியையும் பற்றியதாக இப்பாட்டு அமைகின்றது. இதனை நச்சினார்க்கினியர் தமது உரையில் குறிப்பிடுகின்றார். (பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப. 272)

                முல்லைநிலப் பின்னணியும், தலைமகள் தனிமையும், அவள் ஆற்றியிருத்தலும், தலைமகன் உள்ள பாசறையும், அவனது நிலையும் நினைப்பும் அவனது வெற்றியும் உறக்கமும், தலைமகளின் தனிமை இருப்பும், முல்லைக்காட்டு மாளிகையும் தலைவன் மீண்டுவரலும், நாட்டின் மழைக்காலச் சிறப்பும் ஒன்றின் ஒன்றாய் நப்பூதனாரால் குறிப்பிடப்படுகிறது. தலைமக்கள்நிலையும் நினைப்பும் முல்லைப்பாட்டில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பாட்டில் இயற்கை

                நூற்றி மூன்று அடிகளை உடைய முல்லைப்பாட்டு இயற்கைப்பாட்டாகும். காடும் காடு சார்ந்த இடப் பின்னணியில் அந்நிலப்பரப்பிற்கு உயிர் செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் சூழ தலைமக்கள் நிலையினைப் புலவர் சுட்டுகிறார். முல்லைத்திணை எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் முதல், கரு, உரிப் பொருள்களின் வழி முல்லைப்பாட்டாகிறது.

                பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை’ (முல். 6) ஆகிய மழைக்காலத்து மாலையில் தலைவன் குறித்த கார்காலம் வந்ததை எண்ணியும், தலைவன் வாராமையை எண்ணியும் வருந்துகிறாள் தலைவி. இது முல்லைப்பாட்டின் தொடக்கமாகும்.

                காசாஞ்செடிகள் நீலமலர்களைப் பூக்கவும், கொன்றை மரங்கள் பொன் போல மலரவும், காந்தள் அழகிய கைபோல விரியவும், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரசுங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவும், கார்காலத்து முற்றும் காயை உடைய வள்ளிக்காடு பின்னே போகவும் முல்லை நிலத்தில் தலைவன் தேரில் மீண்டு வருகிறான் (முல்லை. 89 - 100) என்பது முல்லைப்பாட்டின் இறுதிக்காட்சியாகும்.

                இவ்வாறு தொடக்கமும் முடிவும் முல்லைத்திணைக்குரிய காட்டுச் சூழலாகவும் காலச்சூழலாகவும் அமைவது எண்ணற்குரியது ஆகும். முல்லைப்பாட்டு, முல்லைத்திணை என்ற சூழலியல் மாதிரியைப் (Eco-logical Patterns) பின்புலமாக்கி அமைகின்றது.

முல்லை நிலமும் சூழல் அடுக்கும்

                தலைமக்கள் பிரிவினையும் ஆற்றியிருத்தலையும் சுட்டவரும் படைப்பாளி, பெரும் பெயலையும், சிறுபுன் மாலையையும் காட்டுவார். (முல். 6). பின்னர் தாயரைத் தேடும் பசலைக் கன்றினைக் காட்டுவார் (முல். 12). இச்சூழலில் தலைவி ஆற்றியிருக்கும் பண்பைக் கவிஞர் குறிப்பிடுகின்றார்.

                தலைவன், காட்டாறு பாய்கின்ற கானகத்திடையே சேண் நாறுகின்ற பிடவம் முதலியவற்றின் பசிய தூறுகளை அளித்துப் பாசறை அமைக்கின்றான். (முல். 24-28) இவ்வாறு முல்லைநிலக்காட்டுச் சூழலும், முல்லைத்திணைக்குரிய பொழுதுகளும் சூழல் அடுக்காகின்றது.

 

முல்லைப்பாட்டில் உயிரிப்பொருள் திரள்

                உயிரிப்பொருள் திரள் என்பது சூழல் அடுக்கில் வாழும் தாவரம், விலங்கினங்கள், பறவையினங்கள் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றது. இவ்வுயிர்ப்பொருள் திரளில் ஒரு செல் உயிரியான அமீபா முதல் புல் உள்ளிட்ட தாவர வகைகள், செடிகள், கொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன.

                முல்லைப்பாட்டில் காசாஞ்செடிகள் நீலமலரும், கொன்றை மரங்களின் பொன்மலரும், காந்தள் மலரும், தோன்றியின் செந்நிறமலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. வரகங் கொல்லைகளில் இளமான்கள் தாவியோடுகின்றன (முல். 93-99). பிறிதோரிடத்தில் தலைவி இருக்கும் எழுநிலை மாடம், பெரிய மரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் சூழ, காட்டுக் கோழிகள் தம் பேடையுடனும் குஞ்சுகளுடனும் முல்லைக்கொடிகள் பிணைந்து படர்ந்த மாந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளியினங்கள் செய்யும் ஓசையின்றி வேற்றொலி இன்றி எழிலுடன் விளங்கும் சூழலில் உள்ளது என்பர். (முல்லைப்பாட்டு உரை, பக். 62-63)

                இயற்கைப் பின்புலம் இருத்தலாகிய உரிப்பொருளை வலியுறுத்துகிறது. தலைமகனின் வேட்கையை மலர (93), கால (94), அவிழப் (95), பூப்ப (96), உகள (99), கானம் நந்திய பெருவழி (97) இவையெல்லாம் மிகுவிக்கும் என்பர். (பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப. 285). இவ்வாறு முல்லைநில முதற்பொருளும், கருப்பொருளும் முல்லைப்பாட்டில் பின்புலமாவது, சுற்றுப்புறச் சூழலியல் வழி நோக்கும் போது உயிர்ப்பொருள் திரளாக அமைவது அறியப்படுகின்றது.

முல்லைப்பாட்டில் சூழ்நிலைப் பிரமிடுகள்

                சார்துலஸ் எல்ட்டனின் சூழ்நிலைப் பிரமிடுகள் போல முல்லைப்பாட்டில் இடம் பெறும் இயற்கைப் புனைவுகளைக் கொண்டு சூழ்நிலைப் பிரமிடுகளைக் காண முடியும். சூழ்நிலைப் பிரமிடுகள் எண்ணிக்கை அடிப்படையிலும், சக்தி அடிப்படையிலும், உயிர்ப்பொருள் திரள் அடிப்படையிலும் அமைக்கப்படுகின்றன. இந்த வரைவில் முல்லைப்பாட்டில் இடம் பெறும் முதல், கருப்பொருள்களை உள்ளடக்கியதாகப் பிரமிடை அமைக்கலாம்.

                முல்லைப்பாட்டில் சூழ்நிலைப் பாகுபாடு காண முற்பட்டால், பெய்கின்ற மழையும், தலைவியின் ஏழடுக்கு மாடம் உள்ள கானகச் சூழலும், தலைவன் மாடி வீடு அமைக்கும் கானகச் சூழலும் முதல் அடுக்கில் அமைகின்றன. அங்குள்ள மானும், பிற விலங்கினங்களும் இரண்டாம் அடுக்கில் அமைய ஆற்றியிருக்கும் தலைவியும், வினைமேற் கொண்ட தலைவனும் மூன்றாம் அடுக்கில் அமைகின்றனர். இவ்வாறான பிரமிடின் அமைப்புகள் சுற்றுப்புறச் சூழலியலின் பிரமிடுகளோடு ஒப்பிடத் தகுந்தவையாகும். சூழ்நிலைப் பிரமிடுகளைப் போலன்றி முல்லைப்பாட்டின் வழியான பிரமிடின் உச்சி நிறைவு செய்யப்படுகிறது.

                இன்னே வருகுவர்’ (முல். 16), ‘நெஞ்சாற்றுப்படுத்த நிறைவு புலம்பொடு, நீடு நினைந்து தேற்றியும்’ (முல். 81-82),‘காடு பிறக்குஒழியத் துணை பரி துரக்குஞ் செலவினர்’ (முல். 101-102) என்ற தொடர்கள் தலைமக்களின் விழைவினை - அன்புணர்ச்சியைக் காட்டுகின்றன. இவ்வன்புணர்ச்சி பிரமிடின் உச்சியாகின்றது. இதன் மூலம் முல்லைப்பாட்டில் இடம் பெறும் சூழ்நிலைப் பிரமிடை அறிய முடிகின்றது.

தொகுப்புரை

                முல்லைப்பாட்டின் மூலம் இயற்கைச் சூழலையும், சுற்றுப்புறச் சூழலையும், சுற்றுப்புறச் சூழல் அடுக்கையும், உயிர்ப்பொருள் திரளையும், சூழ்நிலைப் பிரமிடுகளையும் அறியப்படுகின்றது. ஒவ்வொரு இனத்தின் செயல், வாழ்க்கையைக் குறிப்பிடுவது சுற்றுப்புறச்சூழலாகும். சுற்றுப்புறத்தின் அமைப்பு, வாழ்க்கை, செயல்பாடு ஆகியவற்றை முல்லைப்பாட்டின் இயற்கை வருணனைகள் மூலம் புலவர் சுட்டிக்காட்டியிருப்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகின்றது.

துணைநூற்பட்டியல்

1.        Renewellex & Austinwarren, Principles of Ecology, 1985.

2.        P.S Varma & K. Agarwalv, Principles of Ecology, 1985.

3.        உ.வே.சாமிநாதய்யர் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்.

4.        மறைமலையடிகள், முல்லைப்பாட்டு உரை.

 

Click to Download