4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

ஸ்ரீ மகா மகோபாத்யாய உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதர் - பணிவும் பராட்டும் பெற்ற பதிப்பாளுமை (ஆய்வுக்கட்டுரை) - மைத்திரிஅன்பு

ஸ்ரீ மகா மகோபாத்யாய உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதர் - பணிவும் பராட்டும் பெற்ற பதிப்பாளுமை

 

____________________________________________________________________

மைத்திரிஅன்பு

தலைவர், தமிழ் மாடம் அறக்கட்டளை,

செய்யாறு

              

               19 ஆம்  நூற்றாண்டின் இடைப்பகுதியில் - தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்த இருபெரும் ஆளுமைகளுள் முதலானவர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர்

ஸ்ரீ மகா மகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர். இவர்கள் இருவருமே, தற்காலத் தமிழ் மொழிக்குப் புதிய ஒளியைப் பாய்ச்சப் போராடியவர்கள்.

 

        உத்தமதானபுரம், ஸ்ரீ வேங்கடராமனாகத் தொன்றி (19.02.1885), அவர்தம் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையால், சாமிநாதய்யராக பரிணமிக்கத் தொடங்கி பின்னர் உ.வே.சா என்னும் மூன்றெழுத்தால், தமிழ்கமெங்கும் தமிழ்த்தாத்தாவாக அறியப்பட்டவர்/அழைக்கப்பட்டவர், டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்.  அன்றைய சூழலில் - வாழ்வுக்கும், இருப்புக்குமான போராட்டத்தில் உ.வே.சா. அவர் தந்தைக்குத் தெரிந்த சமஸ்கிருதத்தையும், சங்கீதத்தையும் விரும்பாமல்/நம்பாமல் தமிழ் படிக்கவிழைந்தார். அப்போதிருந்தே உ.வே.சாவிற்குப் புதிய தேடலையும், அதிலொரு அறிய செயலையும் செய்திட வேண்டும் என்ற எண்ணமிருந்தமையால், அவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தம்பிள்ளையிடம் சீடனாகச் சேர்ந்த காலம் முதலே, மிகுந்த விழிப்புணர்வோடும்; தமிழ் மிதான தேடலோடும் இயங்கத் தொடங்கியுள்ளார். அதன் பலனாகத்தான், அவர் மூலம் நமக்கும், நம் தமிழிலக்கியத்திற்கும் இன்று பல அறிய நூல்கள் செம்பதிப்புகளாகக் கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் உ.வே.சாவின் பதிப்புப் பணியும், அதிலவர் தொட்ட உச்சமும் குறிப்பிடத்தகனவாகும்.

 

உ.வே.சா பிறப்பும் – படிப்பும்

 

        சோழவள நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, பாபநாசம் புகைவண்டி நிலையத்துக்கருகேயுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.02.1885 அன்று வேங்கட சுப்பையருக்கும், சரஸ்வதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே.சாமிநாதையர். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில் சாமா எனப் பெற்றோர்கள் அழைத்து வந்ததையே, இவருடைய ஆசிரியர் சாமிநாதன் எனத் திருத்தி அமைத்தார். பின்னர் அதுவே அவருடைய பெயராயிற்று.  உ.வே.சா, தனது தொடக்க கல்வியை, அவர் தந்தையிடமும் அப்போதிருந்த சில திண்ணைப் பள்ளிக்கூடத்து, ஆசிரியர்களிடமும் கற்றார். அக்காலகட்டத்தில் ஒருசில நூல்களே பதிப்பிக்கப் பெற்று, அதனை ஒருசிலரே கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று, மற்றவர்களுக்கும் தெளிவாகப் பாடம் சொல்லும் திறமைமிக்கப் புலவர் பெருமக்கள்  அங்கங்கே சிலர் இருந்தனர். அவர்களுள்  அரியலூர்ச் சடகோபையங்கார்; செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலிய ஆளுமைகள் குறிப்பிடத்தக்கன. அவர்களிடம் தான் உ.வே.சா தனது முதற்கட்ட நூற்கல்வியைப் பயின்றார்.

        அதைத்தொடர்ந்து, சங்கீத்த்தின் மீதிருந்த ஆர்வத்தாலும், சங்கீதமே அன்றை முக்கிய வஸ்துக்களுள் ஒன்றாக இருந்ததாலும் ஸ்ரீ  வேங்கட சுப்பையருக்கு எப்படியாவது ஐயரை பெரிய சங்கீத வித்துவானாக்கிவிட வேண்டுமென்ற எண்ணமும் ஆசையும் மேலோங்கியிருந்தது.  ஆனால் உ.வே.சாவுக்கோ தமிழ் மீதும், தமிழ் நூல்கள் மீதுமான தேடல் அதிகமாக இருக்கப்போய், அதை தெரிந்தறிந்த, அவர் தந்தை இவரை தமிழ் துறையிலேயே ஈடுபடச் செய்தார். அதற்காக, அவரும்  எங்கெல்லாம் தமிழ்பாடங்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் இருக்கின்றார்களோ, அந்தந்த ஊருக்கெல்லாம் குடிபெயர்ந்து, தன் மகன், தங்குதடையின்றி தமிழ்க்கல்வி பயில அறிய வாப்புகளை  ஏற்படுத்தித் தந்தார். அப்போது திருவாவடுதுறை சைவஆதீனத்திலேயே, பெருங் கவிஞராகவும் சிறந்த புலவராகவும் திகழ்ந்தவர்,  திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் அன்றைக்குப் பரவியிருந்தது. அப்போது அவர் பல மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தியும் ஐயரின் தந்தை ஸ்ரீ  வேங்கட சுப்பையர் காதில் விழ்ந்தது, உடனே நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அதன் விளைவாக ஏப்ரல், 1879  இல் உ.வே.சாமிநாதய்யர் மாயூரத்தில் இருந்த, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவனாகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினேழு (17). அன்று முதல் அந்தத் தமிழாளுமை மறையும் வரை (01.02.1876) ஐயர், தலங்கள் தோறும் சென்று (1870 களில் தொடங்கி) தம் குருநாதரின் உடலுறைந்து அவர் கற்ற கல்வி, தமிழறிவு பண்னெடுங்காலமாய்ச் காலத்தால் புதையுண்டு கிடந்த பழந்தமிழ் ஏடுகளைக் கண்டெடுத்து - உலகிற்கு அளிக்கக் கொடுத்த பெரும் பயிற்சியாக அமைந்தது. அதேபோல், ஐயர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து பலவகையான  தமிழ் நூல்களைக் கற்றுத்தேர்ந்தார்.  அப்படியே சுந்தரம்பிள்ளை அவ்வப்போது இயற்றும் நூல்களை எழுதுவது;  திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவது;  அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் ,வடமொழி வாணரிடத்திலும்,  சங்கீத வித்துவான்களிடத்திலும்  நெருங்கிப் பழகுவது _என  இவருக்குக் கிடைத்த அனுபவம் உ.வே.சாவை - வாழும் காலத்தில் அனைத்து அம்சங்களையும் உடுருவியவராக இருக்கச் செய்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

 

உ.வே.சாவின் இளமை – ஆளுமை

 

        மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் சீடனாக சேர்ந்த நாளிலிருந்தே எந்தப் பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான நிகழ்ச்சியானாலும் கூர்ந்து நோக்கும்/உணரும் இயல்பும், அதனை அப்படியே வெளிப்படுத்தும் அறிவாளுமையும் உ.வே.சாவிடம் இருந்தது.  இந்த  அனுபத்தினால் தான். உ.வே.சா தான் கண்ட/கேட்ட எதையும் அப்படியே  மனதில் பதியச் செய்ய தொடங்குகிறார். அப்படி உ.வே.சா ஒரு காலட்டத்தில் தன் மனதில் பதியம் போட்ட விஷயங்கள் எல்லாம், பிற்காலத்தில் அவர் ஆதீனத்துடன் ஏற்பட்டிருந்தத் தொடர்போடும், பல்வேறு விதமான மக்களைப் பார்ப்பதற்கானச் சூழலோடும் சேர்ந்து – உ.வே.சாவை ஒரு பல்நூற்றறிவாளியாகக் காட்டியது. அதோடு, பெரும் புலவர்களிடையே உ.வே.சாவுக்கு ஏற்பட்ட தொடர்பும்; பல கலைஞர்களுடன் உ.வே.சாவிற்கிருந்த  நட்பும்,  உ.வே.சாவை பல்துறையறிவுலகிற்கு இட்டுச் சென்றது. அதேபோல், மீனாட்சி சுந்தரம்பிள்ளையின்  மறைவுக்குப்பின் (1876) திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பும்  ஐயருக்கு முழுமையாகக் கிடைத்தது. அதற்கு முன் இருந்த ஆதீனத் தொடர்பைக்காட்டிலும் அதற்கு பிறகு கிடைத்த தொடர்பு, ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக(ர்)ரிடம் இவர் பாடம் கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் பணியையும் உ.வே.ச மேற்கொண்டார். இதனால் ஏற்கனவே இவருக்கிருந்த தமிழறிவு, உரம் பெறத் தொடங்கின. அதன் விளைவாகவே இவரிடமிருந்து புதுப்புது பதிப்பாதாரங்கள் நமக்கு கிடைத்தன.

 

உ.வே.சாவின் ஆசிரியர் பணி

 

        அக்காலத்தில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தியாகராசச் செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்து வந்தார். அவரும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் படித்தவர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில் உ.வேசாவை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதல் ஐயர் அவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார். இதுவே ஐயரின் தமிழ்ப் பணிக்கு முதற்படி எனலாம்.

 

        நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும் ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை உ.வே.சா சிறப்பாகப் பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில் கவர்ந்தார். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது. ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்துவந்தது.  பெரும்பாலான பாடங்களை அப்போது ஆங்கிலேயர்களே கற்பித்து வந்தார்கள். அதனாலும் அப்பாடங்களுக்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு அப்போதைக்கில்லை. அதேபோல் தமிழாசிரியர்களுக்குக் கிடைத்த சம்பளமும் மிகக்குறைவே. (கல்லூரிச் சேவகனுக்கு அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் அன்றைய தமிழாசிரியர்களே என்பது நினைவில் கொள்ளத்தக்கது) இத்தகைய நிலையில் உ.வே.சா மாணவர்களின் உள்ளத்தைப் பிணித்ததோடு, மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆங்கிலம் சிறிதும் அறியாதவரானாலும்; வயதில் சிறியவராக இருந்தாலும் உ.வே.சாவின் புலமையும், பண்பும் மாணவர்களிடத்திலும்; ஒருசில ஆசிரியர்களிடத்திலும் இவரைச் சிறப்புக்குறியவராகக் காட்டியது.

 

உ.வே.சாவின் ஆசிரியர் பணியாளுகைகள்

 

        பதிப்புப்பணியில் முழுநேரமும் ஆர்வங்காட்டிய ஐயருக்கு 1903 ஆம் ஆண்டில் சென்னையில் வேலை கிடைத்தது. அஃது அவருக்கும் அவர் வளர்ச்சிக்கும் பெருத்துணையாக அமைந்தது. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த பூண்டி, அரங்கநாத முதலியார் உ.வே.சாமிநாதய்யரின் தமிழார்வத்தைப் பார்த்து, மகிழ்ந்து/வியந்து அவரை தம் கல்லூரியில் சேர்த்தார். அதன் பின்னரே உ.வே.சா 1903 இல் ஐங்குறு நூலையும்; 1904 இல் பதிற்றுப்பத்தையும் 1918 இல் பரிபாடலையும் பதிப்பித்து வெளியிடுகிறார். அப்படி உ.வே.சா, 1903 ஆம் ஆண்டு கும்பகோணம், கல்லூரியிலிருந்து, சென்னைக் கல்லூரிக்கு மாற்றமான போதும் சரி; பின்னர் அந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற போதும்(1919) சரி; அவர் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தாரே அன்றி மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்து ஓய்வுபெறவில்லை. உண்மையில் சொல்லவதானால் அதற்கு பிறகுதான் அவரது பயிற்றுப்பணி பலமடங்கு பெருகியுள்ளது. இவர் கல்லூரியில் பணியாற்றிய போதே, பலர் இவர் வீட்டுக்கு வந்து, சில சந்தேகங்களை கேட்டுச் செல்ல இவர் அனுமதித்திருந்தார். (இத்தகை அனுமதிப்புகள் அக்கால ஆசிரியர்களிடை அறிதான ஒன்றாக இருந்துள்ளது) மகாபாரதப் பதிப்பாசிரியராகிய மகா மகோபாத்யாய ம. வீ. இராமாநுஜாசாரியார்,   திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர் இவ்வகைகளில் பாடம் கேட்டவர்கள். இவர்களில் சிலர் உ.வே.சா சொன்ன ஆராய்ச்சி முறைமையைக் கற்றுத் தாமே நூல்களைப் வெளியிட்டவர்கள் ஆவர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,  இ.வை.அனந்தராமையர் , விசுவநாத ஐயர் முதலியோர் இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். அதேபோல் உ.வே.சா ஏடு தேடி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்ட நூல்களைத் தேடிப்படித்து, அதன் முறைமையையும் அதன் பொருளாளுமையையும் அறிந்த சிலர் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

       

        1924 முதல் 1927 வரை, உ.வே.சா ராஜா அண்ணாமலை செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு நில்லாமல், தம்முடைய அனுபவங்களை எளிய/இனிய உரைநடையில் எழுதத் தொடங்கினார். அது முதலே மாதந்தோறும் ஐயரின் கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. அப்பொழுதும், தம்முடைய ஆசிரியராக இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நினைவலைகளை ஒரு வரலாறாக, தான் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தோடு உ.வே.சா, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, செய்திகளாகத் தொகுத்து, அவற்றைக் கொண்டு மிக விரிவாக அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை இரண்டு பாகங்களாக எழுதி முடித்தார். அதோடு மட்டுமல்லாமல் உ.வே.சா தன் வாழ்நாளில் எந்தெந்த ஆளுமைகளோடு தனக்கு பழகும் வாய்ப்பு கிட்டியதோ அவர்களையெல்லாம் நினைவு கூறும் விதமாகவும்/அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகவும் பல்வேறு பத்திரிகைகளில் உரைநடையாக எழுதி வந்துள்ளார்.

 

உ.வே.சாவின்  பதிப்புப் பணி

 

        உ.வே.சா பதிப்புப் பணிக்கு வந்தற்கான சூழல், கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருந்த, சேலம் இராமசாமி முதலியார் கேட்ட கேள்வியிலிருந்தேத் தொடங்குகிறது.

 

        உ.வே.சா இளமையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய போது,  கும்பகோணம் மாவட்ட வழக்கறிஞராக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரிடம் பழக்கம் ஏற்பட்டது.  அந்தப் பழக்கமே ஐயர் பிறந்ததன் பயனைத் தமிழுலகத்துக்குக் காட்ட காரணமாக அமைந்தது எனலாம். ஏனெனில் இராமசாமி  முதலியார் ஐய்யரிடம் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே (இராமசாமி முதலியார் ஐயரிடன் சீவக சிந்தாமணியைப் பாடங்கேட்க விரும்பி, ஒரு நாள ஒரு பழைய புத்தகத்தை எடுத்துவந்தார். அதிலிரிந்தப் பிழைகளை எடுத்துக்காட்டிய, ஐயரிடம் முதலியார், தாங்களே ஏன் இப்பிழைகளைத் திருத்தக் கூடாது என கேட்க, அதன் பிறகே ஐயர் பல நூல்களை தேடிப் படித்து சிந்தாமணியை பதிப்பிக்க முனைகிறார) சீவக சிந்தாமணியைப் பற்றிய தேடலுக்குள் உ.வே.சா ஈடுபடலானார். அதற்கு முன்பு பாடமாகக் கூட ஐயர் சிந்தாமணியை கேட்டதில்லை; அந்த நூலைப் பார்த்தது கூட இல்லை. ஆயினும் இராமசாமியின் கேள்விக்கு தைரியமாகப் ஏட்டுச் சுவடியை கையில் வைத்துக்கொண்டு பாடம் சொல்ல முணைந்தார். அதற்கு பிறகே உ.வே.சா சிந்தாமணியில் ஆழ்ந்தார். தான் அதுவரை கற்ற புத்தகங்கள் அனைத்தையும் ஒன்று திறட்டி, தான் அறியதா பலதகவல்களை முதலில் சேகரித்தார். அப்போது அஃது ஜைனசமய நூலாக இருந்தது தெரியவந்தது. அதில் தன் புரிதலுக்கு எட்டாத செய்திகளை எல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு தெரிந்துக்கொண்டார். சிந்தாமணிக்கு நச்சினாக்கினியர் எழுதிய உரையைப் படித்தார். அவருடைய உரைப்போக்கும், அதற்கு அவர் காட்டியிருந்த மேற்கோளும் ஐயரை வேறொரு புதிய ஆய்வுலகிற்குள் இட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவகவே உ.வே.சா, சிந்தாமணியைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1887 இல் சிந்தாமணியை வெளியிட்டார். அதன் மூலம் உ.வே.சாமிநாதய்யர் பலராலும் கண்டுகொள்ளபட்டதோடு, பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டும் பெற்றார். அவர் வெளியிட்ட பதிப்பும் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுமுதலே ஐயர் பழைய நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடலானார். அதைத் தொடர்ந்தே ஐயர் பல தமிழிலக்கிய (சங்க இலக்கிய) நூல்களை பதிப்பிக்கத்தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 1888 ஆம் ஆண்டு பத்துப்பாட்டையும்; சிலப்பதிகாரத்தையும்; புறநானாறூரையும் – 1898 இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய நூலகள் யாவும், பல ஓலைச் சுவடிப் பிரதிகளை முறையாக ஆராய்ந்து, திருத்தமானதற்குப் பிறகே வெளிவரலாயின. இவ்வாறு நூல் வெளியீட்டு பணியில், முழுநேரம் ஆர்வங்காட்டிய ஐயருக்கு சென்னையில் பணிமாற்றம் கிடைத்தது இன்னும் அவரது பதிப்புப்பணி சூடுபிடிக்கக் காரணமானது.

 

        உ.வே.சா இப்பதிப்பிக்கும் பணியினை யாருடனும் இணையாமல் தாமெ தனக்கென ஒரு வழியை அமைத்துக்கொண்டு செயல்பட்டார். அப்போதைக்கு அவருக்கிருந்த ஒருசிறு நண்பர் குழாமையும் அவர், அவருடைய பணிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அவருக்கிருந்தத் தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து, வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை. அதனால் தான் அவர்தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பதிப்புக்காக ஒதிக்கித்தந்து விட்டு, தன் வாழ்வின் இரண்டாம் பகுதியை, படைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டுத்தியிருக்கிறார். அப்படி அவர் சுயமாகப் படைக்கத் தொடங்கிய -  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவர் இலக்கியப் பணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  உண்மையில் அவர் சுயமாக எழுதிய, சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள் யாவும், அவர் ஒவ்வொருசொல்லாய், தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட, ஏராளமானோர் அணுகி - அனுபவிக்க வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

        இன்றும் பதிப்பாசிரியர் உ.வே.சா பதிப்பித்த நூல் என்றால், எல்லா தமிழ் புலவர்களும், ஆசிரியர்களும் அதனைப் போற்றிப் பாதுகாக்கும்  நிலை இருந்துவருகிறது. குறிப்பாக இவர் பதிப்புகளில் முகவுரைவும், ஆசிரியர் வரலாற்றுப் பகுதியும், அதைத் தொடர்ந்த நூல் குறிப்புகளும் மிக முக்கிய கவனத்தைத் தமிழ் வாசிப்பாளர்களுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்த்தக்கது. அதேபோல், இவர் பதிப்பித்த நூல்கள் அனைத்திலுமே அடிக்குறிப்புகளாக பல்வேறு விதமான/ நூலுக்குத் தேவையான செய்திகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இஃது உ.வே.சாவிற்கு சிறுவயது முதலே இருந்துவரும் பரந்துபட்ட அறிவுப்பசியின் ஆதாரமாகும். மேலும், உ.வே.சா சிந்தாமணியை முதல் முதலில் படிக்கும் போது, அதில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டவாறு, அவர் நூலைப் படிப்பவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அதனால் தான் அவர் பதிப்பித்த நூல்களிளெல்லாம், அவரால் கண்டெடுக்கப்பட்ட சொற்களுக்கும்; பொருளாளுகைக்கும் தக்க விளக்கத்தினை நூலின் பின்பகுதியில் அகராதியாக வெளியிட்டுள்ளார். அதனால் இவர் பதிப்பித்த நூல்களை எந்த ஆசிரியரின் உதவியுமின்றி நாம் படிக்கமுடிகிறது. இந்த வகையில் மேல்நாட்டாருக்கு நிகராக, ஆங்கிலமே தெரியாத போதும் உ.வே.சா, தமிழ் பண்டிதராக பல அறிய பதிப்புச் சாதனைகளை, ஆங்கிலேயரே வியக்கும் வண்ணம் சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

       ஓலையில் முடங்கி, உலகிற்குப் புலப்படாமற் கிடந்த இலக்கிய இலக்கண நூல்கள் பலவற்றை அச்சியற்றி அழகிய/பிழையற்ற ஆராய்ச்சிப் பதிப்புகளாக – உ.வே.சா வெளியிட்ட பதிப்புகள் அனைத்தும் முற்கால இலக்கிய பதிப்புகள்; இடைக்கால இலக்கிய பதிப்புகள்; பிற்கால உரைநடை நூல்கள்; அவரே சுயமாகப் படைத்தளித்த நூல்கள் என நான்கு பிரிவுகளாக பின்னிணைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. (பின்னிணைப்பில் காண்க.)

 

உ.வே.சாவின் பண்பாளுகைகள்

 

·         தன்னடக்கம் ;

அறிய பல படைப்புகளை அளித்த உ.வெ.சா இறுதிவரை மிக்க                        அடக்கத்துடனும், ஆரவாரமின்றியும், அமைதியுடனும், நிதானமுடனும் செயலாற்றினார் என்பது நாம் அறியத்தக்கதொரு சிறப்பாகும்.

 

·         புதுமை நோக்கு ;

.வே.சா ஒருநூலைப் பதிப்பிக்க மேற்கொண்டவிடன் அதனை எவ்வாறெல்லம் புதிதாகப் பதிப்பிக்கலாம் என்பதிலேயே நாட்டம் கொண்டார். அதற்காகப் புதிய புதிய துறைகளில் ஆராய்ந்து தகவல்களைச் சேகரிக்க ஈடுபட்டார். இவ்வகையில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம், போன்ற பல சமயக் கருத்துகளையும் ஆழ்ந்துணர்ந்தே பதிப்பில் ஈடுபட்டார். ஆங்கிலம் அதிகம் அறியாதவராயினும், ஆங்கிலம் அறிந்தவர்களை அணுகி, அவர் கூறும் புதிய கருத்துகளைச் சேர்த்துக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. இவ்வகையில் அவ்வபோது உதவியவர்களையும் அவர் வாழ்நாள் முழுவதும் நினைவு கொண்டார். எவர் உதவியையும் அவர் மறந்ததில்லை.

 

·         தனிச்சிறப்புகள் ;

ஐயர் பதிப்புகளில் அவருடைய விரிவான முகவுரைகளும்; தனித்தனி அகராதிகளும்; விளக்கங்களும்; ஒப்பீட்டுப் பகுதிகளும்; குறிப்புரைகளும்; சுவடிகள் பற்றிய விவரங்களும் தனித்தன்மை உடையன. இவை எவருக்கும் எக்காலத்தும் பயன்மிகத் தருவன. தமிழ் நூலைப் பலரும் வாங்கிப் படிக்க வேண்டுமென்றே மிகக் குறைந்த விலையில் அவற்றை ஐயர் அச்சிட்டு வெளியிட்டது மற்றொரு சிறப்பாகும். தாம் 44 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட தக்கயாகப் பரணி (552 பக்கங்கள்) நூலுக்கு விலை ரூ.4.00 என்றும்; தாம் 37 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட 1132 பக்கங்கள் கொண்ட பெருங்கதை நூலுக்கு ரூ. 7.50 என்றும் வழங்கியது, இவர்தம் தமிழுணர்வைக் காட்டுகிறது. இவ்வாறே பிற பதிப்புகளையும் இவர் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உ.வே.சாவிற்கு கிடைத்த பட்டங்களும் பதவிகளும்

 

·         1906  ஆம் ஆண்டில் மகா மகோபாத்தியாயர் (பெரும் பேராசான்) என்னும் சிறப்புப் பெயருடன் ஆயிரம் வெண்பொற் காசுகளும் அளிக்கப்பெற்றார்.

 

·         'பாரத தர்ம மகா மண்டலத்தார்' அவையினர் இவருக்கு 'திராவிட வித்யா பூஷணம்' (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டத்தையும்;  காஞ்சி காமகோடிபீடத் தலைவர் அவர்கள்,  தக்க்ஷிண கலாநிதி ' (தெற்கத்திய கலைச் செல்வன்) என்னும்  பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச்செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்  ஐயாயிரம் வெண்பொற் காசுகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.

 

·         ஐயவர்களின் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி மார்ச் 21,  1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம்/'டாக்டர்' (இலக்கியப் பேரறிஞர்)  அளித்தது. இப்பட்டத்தைப் பெற்ற ஐயரவர்கள் தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழுக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.

 

·         இந்திய அரசு தற்போது - பிப்ரவரி, 2006 ஆம் ஆண்டு இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டு இவருக்கு சிறப்பு செய்தது.

 

 

உ.வே.சாவிற்கு கிடைத்த நல்மதிப்பீடு

               ஐயரவர்கள் தேடித் தொகுத்து வைத்திருக்கும் அரிய நூல்களைத் திருத்திய முறையில் பதிப்பிடுவதானால், சிறந்த தமிழறிஞர்களுக்குப் பல தலைமுறைக் காலம் உளங்கவர்ந்த வேலை இருந்து கொண்டே இருக்கும்என்கிறார்  

                                           _பேராசிரியர் சு.வையாபுரிப்பிள்ளை.

               ஆங்கிலக் கல்வி இல்லாதவராயினும் இவர் (உ.வே.சா) நூல்களை அச்சிட்ட முறை ஆங்கிலம்  கற்றவர்க்கெல்லாம் வியப்பை விளைவிக்கும் என்கிறார்.

                                    _பேராசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

        உ.வே.சாவின் பதிப்புப் பணியை முன்வைத்து, அவர் பிறந்த காலச்சூழல், அவர்தம் தனித்தன்மைமிக்க செயல்பாடுகளை விளக்கும், இலங்கைத் திறனாய்வாளர், கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா பாடவிமர்சன நோக்கு என்ற தனது நூலில் – தமிழ்ப் புலமை, தமிழ்ப் பிரக்ஞை பற்றிய எழுதுகையில், முக்கியத்துவம் பெறும், வீ.கனசபைப் பிள்ளை; மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை; ஆகியோர் பிறந்த 1885 ஆம் ஆண்டிலேயே உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதரும் பிறந்தார் என்பது ஒரு சுவாரசியமான வரலாற்றொற்றுமை என்கிறார். மேலும், உ.வே.சா காலமாவதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி, அவர் புகழின் சாரம்சத்தை,

        முன் இவன்அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்

   இவன்பெருமை மொழிய லாமோ?

 

_என்றும்;

      பொதியமலைப் பிரந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதிஅறிவாய் அவர் நெஞ்சின் வாழ்தறிவாய்

இறப்பின்றித் துலங்கு வாயே!

 

_என்றும் – துல்லியமாய் எடுத்துக்கூறிச் சென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

        உ.வே.சாவைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள கி.வா.ஜ; உ.வே.சா, திலகர்; தாகூர் போன்ற தேசிய தலைவர்களின் பாராட்டுக்கு உள்ளானதைக் குறிப்பிடுகிறார். அதேபோல், 1937 இல் சென்னையில், நடைபெற்ற பாரதீய சாகித்ய பரிஷத் மாநாட்டில், உ.வே.சாவின் வரவேற்புரையை, மொழிபெயர்க்கக் காந்தியடிகள், தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியிலிருந்து தமிழ்ப் பயிலவேண்டுமென்ற ஆசை எனக்குண்டாகிறது; பல வேலைகளை உடைய எனக்கு அந்தச் சந்தர்ப்பம் எப்பொழுது கிடைக்கப் போகிறது? (செம்மொழிக் கேவை., ப.65) என்று கூறியதைக் குறிப்பிட்டுள்ளார்.

 

        தமிழை மட்டுமே - செவ்வனேக் கற்றுத்தேர்ந்திருந்த உ.வே.சா பல்வேறு ஆங்கிலேயரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், உ.வே.சாவை கடைசிவரை சந்திராத ஜி.யூ.போப், தனது கடிதத்தில்;

 

          தாங்கள் அனுப்பிய புறநானூற்றை மூன்றாந்தடவையாக இப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அவற்றிலுள்ள பல அறிய பகுதிகளை ஏற்கனவே இங்கிலீஷில் மொழிபெயர்த்து விட்டேன். மணிமேகலையையும் முழுவதும் ஊன்றிப் படித்து, மொழிபெயர்த்து ஆயிற்று.  தங்களுடன் பலமணிநேரம் உட்கார்ந்து நேரில் தமிழைப் பற்றிப்பேச விரும்புகின்றேன். தங்களைத் தான், நான் என்றும் என் தமிழ்க்குருவாக கொண்டுள்ளேன்.(செம்மொழிக் கோவை., ப.65)

 

_ என்று குறிப்பிட்டது உ.வே.சா வாழ்க்கைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

        உ.வே.சா தனது வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் திட்டமிட்டு, எதுகுறித்தும், எந்தவித தயக்கமுமின்றி – இடையராது இயங்கி, அவர் சாதித்தப் பணிகள் மகத்தானவை; மலைப்பூட்டுபவை. எனினும் தன் பணிக்குறித்து, அவருக்கிருந்த கருத்தாக்கம் மிகச் சாதாரணமானதாக இருந்தது, அவருக்கிருந்த மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தியது எனலாம்.

 

நிறைவுரை

 

        உ.வே.சா தான் மறையும் (28.04.1948) வரை, பதிப்பித்த சங்க இலக்கிய நூல்களே பிற்காலத்தில், திராவிட இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது (அ.சதீஷ்., தான் கலந்த தமிழ்., புத்தகம் பேசுது, சிறப்பு மலர்., ப.27., 2009) என்று கூறும் ஆய்வாளார்களின் கருத்து கவனிக்கத்தக்கது. அதேநேரம் திராவிட இயக்கப் பின்புலத்தில் இயங்கி வரும் இன்றைய ஆய்வுலகம் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தற்காகவே உ.வே.சாவை விமர்ச்சிக்கும் போக்கும் நிலவுகிறது. ஆனாலும், ஆதி தமிழர்களின் வாழ்வடையாளங்களாக விளங்கும், சங்க இலக்கியங்களை உ.வே.சா தன் தமிழார்வமிகுதியாலும்; அறிவுப்புலத்திறத்தாளும் பதிப்பித்த முயற்சி எந்நாளும் அவருக்கென்று, ஒரு தமிழ்தளப்பரப்பில் தனிஇடத்தைப் பெற்றுத்தந்திருப்பது மறுக்க/மறைக்க இயலாத ஒன்றாகும்.

 

 

 

 

பின்னிணைப்பு  - உ.வே.சா பதிப்ப்பித்த நூல்கள்

  

1.        பத்துப்பாட்டு           -      1889

2.  புறநானூறு            -      1894

3.        ஐங்குறுநூறு    -      1903  

4.        பதிற்றுப்பத்து          -      1904

5.        பரிபாடல்             -      1918            சங்க இலக்கியம்

6.        பத்துப்பாட்டு மூலம்    -      1931

7.        புறநானூறு மூலம்     -      1936

8.        பெருங்கதை மூலம்    -      1936  

9.        குறுந்தொகை          -      1937

 

 

10.     சீவக சிந்தாமணி      -      1887

11.     சிலப்பதிகாரம்         -      1892

12.     மணிமேகலை         -      1898            காவிய நூல்கள்

13.     பெருங்கதை           -      1924

14.     உதயகுமார காவியம்  -      1935

 

 

 

15.     திருக்குடந்தைப் புராணம்                          -      1883

16.     திருப்பெருந்துறைப் புராணம்                       -      1892

17.     வீரவனப் புராணம்                                 -      1903

18.     சூரைமாநகரப் புராணம்                            -      1904

19.     திருவாரூர்த் தியாகராச லீலை                     -      1905

20.     திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்    -      1906          புராண நூல்கள்

21.     தனீயூர்ப் புராணம்                                 -      1907

22.     மண்ணிப்படிக்கரைப் புராணம்                      -      1907

23.     திருக்காளத்திப் புராணம்                           -      1912

24.     விளத்தொட்டிப் புராணம்                           -      1934

25.     ஆற்றூர்ப் புராணம்                                -      1935

26.     தணிகாசலப் புராணம்                              -      1939

27.     வில்லைப் புராணம்                                -      1940

 

 

28.     புறப்பொருள் வெண்பாமாலை               -      1895

29.     நன்னூல் – மயிலைநாதர் உரை              -      1925

30.     நன்னூல் – சங்கர நமச்சிவாயர் உரை        -      1928           இலக்கண நூல்கள்

31.     தமிழ் நெறி விளக்கம்                      -      1937

32.     சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு     -      1932

33.     குமரமுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு    -      1939

 

 

 

34.     தண்டபாணி விருத்தம்                      -      1891

35.     திருத்தணிகைத் திருவிருத்தம்               -      1904           விருத்த நூல்கள்

 

36.     திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா       -      1937

37.     சிவசிவ வெண்பா                           -      1938           வெண்பாக்கள்

38.     திருக்குற்றாலச் சிலேடை வெண்பா          -      1940

 

39.     திருக்காளத்திநாதர் இட்ட காமியமாலை      -      1938           மாலை நூல்கள்

40.     மகரநெடுங்குழைக்காதர் பாமாலை           -      1939

 

41.     திருமயிலைத் திரிபந்தாதி                   -      1930

42.     சங்கரநயினார் கோயில் அந்தாதி             -      1934           அந்தாதி நூல்கள்

43.     திருமயிலை யமக அந்தாதி                 -      1936

 

44.     மதுரை சொக்கநாதர் மும்மணிக்கோவை     -      1932          மும்மணிக் கோவைகள்

45.     வலிவல மும்மணிக்கோவை                -      1932

இரட்டை மணிமாலைகள் :

 

46.     நீலி இரட்டை மணிமாலை                         -      1874

47.     பழனி இரட்டை மணிமாலை                       -      1932

48.     களக்காட்டுச் சத்திய வாகீசர் இரட்டை மணிமாலை -      1932

 

49.     சீகாழிக் கோவை             -      1903

50.     திருவாவடுதுறைக் கோவை   -      1903

51.     பழமலைக் கோவை          -      1935

52.     கலைசைக் கோவை          -      1935          பிரபந்தங்கள்

53.     சிராமலைக் கோவை          -      1937

54.     திருவாரூர்க் கோவை         -      1937

 

55.     திருப்பூவணநாதர் உலா       -      1904

56.     திருகாளத்திநாதர் உலா       -      1904

57.     தேவை உலா                 -      1925

58.     திருவாரூர் உலா             -      1905

59.     மதுரை சொக்கநாதர் உலா    -      1931           உலா நூல்கள்

60.     கடம்பர் கோயில் உலா       -      1932

61.     சங்கரலிங்க உலா            -      1933

62.     திரு இலஞ்சி முருகன் உலா  -      1935

63.     திருக்கழுக்குன்ற உலா        -      1938

64.     கச்சிஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது    -      1888

65.     தமிழ் விடுதூது                            -      1930

66.     பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது           -      1932          துதூ நூல்கள்

67.     மான் விடுதூது                             -      1936

68.     அழகர் கிள்ளைவிடு தூது                   -      1938

69.     புகயிலை விடுதூது                         -      1939

 

70.     பழனி பிள்ளைத்தமிழ்                      -      1932 – பிள்ளைத்தமிழ் நூல்.

71.     திருமலையாண்டவர் குறவஞ்சி              -      1938 - குறவஞ்சி நூல்.

72.     திருப்பாதிரிப் புலியீர்க் கலம்பகம்            -      1908 – கலம்பக நூல்.

 

73.     தக்கயாகப் பரணி                           -      1930         பரணி நூலகள்

74.     பாசவதைப் பரணி                          -      1933

 

75.     மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு -      1910

76.     கபாலீசுவரர் பஞ்சரத்தினம்                         -      1940

77.     வேணுவனலிங்க விலாசச் சிறப்பு                   -      1878

 

உரைநடை நூல்கள் :

 

78.     மத்தியார்ச்சுன மான்மியம்           -      1885

79.     புத்த சரிதம்                         -      1898

80.     மணிமேகலைக் கதைச்சுருக்கம்      -      1898

81.     உதயணன் கதைச்சுருக்கம்           -      1924

82.     சங்கத் தமிழும் பிற்காலத்தமிழும்    -      1928

83.     ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம்   -      1933

84.     ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் இரண்டு பாகம்  -      1934

85.     நான் கண்டதும் கேட்டதும்                  -      1936

86.     திருநீலகண்ட நாயனார் சரித்திரம்           -      1936

87.     புதியதும் பழையதும்                       -      1939

88.     நல்லுரைக்கோவை-1                        -      1937

89.     நல்லுரைக்கோவை-2                        -      1937

90.     நல்லுரைக்கோவை-3                        -      1938

91.     நல்லுரைக்கோவை-4                        -      1939

92.     திருவள்ளுவரும் திருக்குறளும்             -      1936

93.     கணம் கிருஷ்ணையர்                       -      1936

94.     கோபால கிருஷ்ண பாரதியார்               -      1936

95.     மகா வைத்தியநாதயர்                      -      1936

96.     இயற்கை நாயனார் சிரித்திரக் கீர்த்தனை     -      1936

97.     செவ்வைச் சூடுவார் பாகவதம்               -      1941

98.     நினைவு மஞ்சரி 1                         -      1942

99.     நினைவு மஞ்சரி 2                         -      1946

100.  வித்துவான் தியாகராச செட்டியார்           -      1946

101.  என் சரித்திரம்                             -      1950.  

 

பார்வை நூல்கள்

 

1.        டாக்டர் உ.வே.சா., என் சரித்திரம்., டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்., சென்னை -90., 2008

2.        கார்த்திகேசு சிவத்தம்பி., தமிழ்நூற் பதிப்புப்பணியில் உ.வே.சா பாடவிமர்சனவியல் நோக்கு.,                        குமரன் பதிப்பகம்., சென்னை., 2007.

3.        புத்தகம் பேசுது சிறப்பு மலர்., தமிழ்ப்பதிப்புல்கம்., பாரதி புத்தகாலயம்., 1800 – 2009.

4.        தினமணி செம்மொழிக் கோவை., செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர்., 2010.

5.        மயிலை சீனிவேங்கடசாமி., 19 ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியம்., சாரதா பதிப்பகம்., சென்னை., 2003.

6.        எஸ். வையாபுரிப்பிள்ளை., தமிழ்ச்சுடர் மணிகள்., பாரி நிலையம், சென்னை, 1959.

 

 

-----------------------------------------------

 

 

 

 

Click to Download